விநோதரசமஞ்சரி/12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது

விநோத ரச மஞ்சரி

தொகு

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

தொகு

பல வளங்களும் நிறைந்த சொர்க்கம் போன்ற உறையூரிலே நீதிதவறாமற் செங்கோல் செலுத்தி வாழ்ந்திருந்த குலோத்துங்க சோழராஜனுடைய பிதா, நிரியாண தசையிற் புத்திரனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்விக்க யத்தனித்து, புண்ணிய நதி தீர்த்தங்களைக் கொண்டு மங்களஸ்நானஞ் செய்வித்து, விலையுயர்ந்த பீதாம்பரமுடுத்து, மகரகுண்டலம் முதலாகிய சர்வாபரணங்களும் பரிமள புஷ்பமாலைகளுந் தரித்து, சிங்காசனத்தில் ஏற்றுவித்து, சந்திரவட்டக்குடை கவிக்க, கவரி வீச, மங்கலச்சங்கம் முதலிய பற்பல வாத்தியம் முழங்க, வேதப்பிராமணர் ஆசி கூற, மகா சம்பிரமத்துடனே நவரத்தின மகுடஞ்சூட்டி, ராஜ முத்திரை மோதிரத்தை அவன் விரலில் அணிந்து, செங்கோலைக் கையிற் கொடுத்து, அரசர் அமைச்சர் முதலானவர்களுக்கும், ‘இவனிட்ட கட்டளைப்படி அனைவரும் நடக்கவேண்டும்,’ என்று ஆக்கியாபித்தான். அவர்களெல்லாம் பட்டத்தரசனாகிய குலோத்துங்க சோழனுக்குப் பாதகாணிக்கை வைத்து உபசரித்தார்கள். அவர்கள் யாவருக்கும் முன்னே ஒட்டக்கூத்தர் அவனுக்கு க்ஷேமமுண்டாக ஒரு கவி பாடவேண்டும் என்று,

ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும்
நீடுங் குடையைத் தரித்தபிரான்-”

-எனக் கொஞ்சங் குறைய இரண்டடி வரையிற் பாடினது அறிந்து, அவ்வரசன், ‘நமக்கு இவர் கல்வி கற்பித்த ஆசிரியராகையால், நம்மைத் துதிசெய்வது தகாது,’ என்று நினைத்து அதற்குமேல்,

இந்த நீணிலத்தில்
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயென்னைச் சொல்லுவரே.

-என மற்றிரண்டடியும் தானே பாடி அப்பாடலைப் பூர்த்திசெய்துவிட்டு, பிராமணர்களுக்கு அன்னதானம் முதலிய சோடசமகாதானமும், மன்னர் மந்திரிமார் முதலானவர்களுக்கு நாடு நகரம் யானை குதிரை வரிசைகளும், கவிபாடிய புலவர்களுக்குச் சொர்ணம் வஸ்திரம் பூஷணம் முதலிய பரிசும் தன் கையாற்கொடுத்து, அவர்களை உபசரித்தான்.

பிறகு அவன் தந்தை அவனை அந்தப்புரத்திற்கு அழைத்துப்போய், அரசு நடத்த வேண்டிய முறையைக் குறித்துச் சொல்லவேண்டிய பாரதூரமான புத்திமதிகளைச் சாஸ்திரியமாகவும் லோகாசாரமாகவுஞ் சொல்லி, அனந்தரம் தன் சம்ஸ்தான வித்துவானாகிய ஒட்டக்கூத்தரையும் பக்கத்திற் வைத்துக்கொண்டு, புதல்வனைப் பார்த்து, ‘அப்பா, குலோத்துங்கா! இப்பொழுது உனக்கு மகுடாபிஷேகஞ் செய்விதத்து போல விவாகமுஞ் செய்வித்து அவ்விவாக மகோற்சவத்தைக் கண்களிக்கப் பார்க்கிறதற்கு நான் தவஞ்செய்யாமற் போனேன்! ஆயினும், உனக்கொன்று சொல்லுகிறேன், கேள்: எனக்குப் பிற்காலம் நீ வெறெந்த வழியிலும் பிரவேசிக்க வேண்டா; நமது சூரிய குலத்திற்கும் சந்திர குலத்திற்குமே தொன்றுதொட்டுச் சம்பந்தம் நடந்து வருகிறது. அந்த முறைமையைக் கைவிடாதே, ‘பழங்கால் தூர்த்துப் புதுக்கால் வெட்டவேண்டா,’ பாண்டியன் மகளையே மணஞ் செய்துகொள்,’ என்று வற்புறுத்தி, ஒட்டக்கூத்தரை நோக்கி, ‘என் மனோரதத்தை நிறைவேற்றுவது உமது தலைமேல் வீழ்ந்த பாரம்,’ என்று சொல்லித் தன்மகனை அவர் கையில் ஒப்புவித்துப் பிறகு, ‘அதவா புத்திர சந்நிதௌ’ என்றபடி, தன் புத்திரன் தொடைமேல் தலையை வைத்துச் சயனித்த வண்ணமாய்ப் பிராணவியோகமானான்.

ஒட்டக்கூத்தர் அவ்வரசனுக்குச் செய்யவேண்டிய தகன சஞ்சயனாதி உரிமைக்கருமம் அனைத்தும் குலோத்துங்க சோழனைக்கொண்டு உலோபமில்லாமல் கிரமமாக நடத்திச் சிலநாள் கழிந்தபின்பு அவனுக்குப் பெண்பேசப் போக யத்தனித்து, ‘நாள் செய்வது நல்லார் செய்யார்,’ என்பதனால், தாம் நோக்கிப் போகுந் திசைக்குச் சூலம் யோகினி முதலிய தோஷமில்லாததாக ஒரு நன்னாட் குறித்து, அந்நாளில் நினைத்துப் போகுங் காரியம் அனுகூலிப்பதற்கு முற்குறியாக நல்ல சகுனமாகும்படி அனுக்கிரகஞ் செய்யவேண்டுமென்று தமது இஷ்டதெய்வத்தைப் பிரார்த்தித்து, சோழநாட்டிலிருந்து பாண்டிய தேசத்திற்குப் பிரயாணமாக முதல் முதல் அடியெடுத்து வைத்தார். வைத்தவுடனே வாயசம் வலமாயிற்று; அவர், ‘வாயசம் வலமானால் ஆயுசு விர்த்தியாகும்,’ என்றெண்ணி, அப்புறம் நடக்கையில் வலியன் இடமாயிற்று. அதைப்பார்த்து,

வால்நீண்ட கரிக்குருவி வலமிருந்தே யிடஞ்சென்றால்
கால்நடையாய்ப் போனவர்கள் கனகதண்டி யேறுவரே

- என்பதை நினைத்து, ‘உத்தமந்தான்!’ என்று அதற்கப்பாற் சிறிது தூரஞ் சென்றார். அங்கே காடை கட்டிற்று; அதைக்குறித்து, ‘காடை கட்டினாற் பாடை கட்டும்,’ என்பதை யோசித்துப் பிரமைகொண்டிருக்கையில், உடனே கட்டுக் காடை இடமாயிற்று. அது நோக்கிக் ‘கட்டுக்காடை இடமானாற் குட்டிச்சுவரும் பொன்னாகும் அல்லவா?’ என்று மகிழ்ச்சி கூர்ந்து பத்தடி நடந்தார். அப்பொழுது செம்போத்து வலமாயிற்று. அவர், ‘செம்போத்து வலமானால், சம்பத்துண்டாம்,’ என்று மனம் பூரித்து, அதைத் தாண்டிப் போகையில், கருடன் கட்டியது கண்டு, ‘இஃதென்னை!’ என்று சற்றுநேரம் அவ்விடத்திலேயே திகைப்பூண்டு மிதித்தவர் போலத் திகைத்து நின்று, ‘கட்டோடே போனாற் கனத்தோடே வரலாம்,’ என்பது ஞாபகத்திற்கு வந்தமையால், மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, சிறிது தூரம் போகையில், முன்பு கட்டின கருடன் இடமாயிற்று; அவர் ‘கட்டி இடமானால், வெட்டி அரசாளலாம்,’ என்றும், ‘வெண்டலைக் கருடன் சென்றிடமானால், எவர் கையிற் பொருளுந் தன்கையிற் சேரும்,’ என்றும், பெரியோர்கள் சொல்லுகிறார்களே! அதனாற் குறைவு வாராதென்று கருதி விரைந்து செல்லுகையில், விச்சுளி வலமாயிற்று. அதைப்பற்றி, ‘விச்சுளி வலமானால், நிச்சயம் வாழ்வுண்டாம்,’ என்றுநினைத்துப் பிரதமத்தில் நாம் பிரார்த்தித்த வண்ணம் வலியன், விச்சுளி, செம்போத்து மூன்றும் சௌவியம்(வலம்) ஆகவும், கருடன், கட்டுக்காடை இரண்டும் அசௌவியம் (இடம்) ஆகவும் செல்லக்காணும்படி நமக்கு இந்தப் பஞ்ச சகுனமும் ஆனமையால், நினைத்த காரியம் இனித்தடையின்றி முடியுமென்பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை,’ என்று இடைவழியிலுள்ள காடு மலை நாடு நகர் ஆறு குளம் ஏரி மடுவெல்லாங் கடந்து, குடை, கொடி, யானை, சேனைகளுடனே நான்மாடக்கூடல் என்னும் மதுரைக்குச் சமீபமாய்ப் போகும் பொழுது, பாண்டியன், யாரோ பகையரசன் மதுரைமேற் படையெடுத்து வருகிறான்,’என்று தக்ஷணம் போர்க்கோலங் கொண்டு போய் எதிர்த்து நிர்மூலமாக்கும்படி தன் சதுரங்க பலமும் பிரயாணசன்னத்தமாகப் பேரிகை அறைவித்தான். அந்த அடியிலே வில் கட்கம் சூலம் பாசம் முசலம் சக்கரம் தோமரம் முதலிய ஆயுத பாணிகளாய், முடிகளோடு முடிகள் கழல்களோடு கழல்கள் நெருங்க, தேர்கள் யானைகள் குதிரைகள் மேலும் பாதசாரிகளாயும், நால்வகைப் படை வீரரும் பெருவெள்ளம் போல எங்கெங்கும் வந்து நிறைந்து எக்காளம், பேய்க்காளம், கொம்பு, பம்பை, தவுண்டை, துந்துபி முதலிய வாத்தியம் முழங்க யுத்தத்திற்கு ஆரம்பித்தார்கள். அதற்குள்ளே வேவுகாரர் போய் விசாரித்துப் போர்க்குரிய சின்னங்கள் இல்லாமை கண்டு, ‘ஒட்டக்கூத்தர் வருகிறார்!’ என்று தெரிந்து வந்து செய்தி அறிவிக்க, அரசன் சந்தோஷப்பட்டு, மந்திரியை அனுப்பி அழைத்து வந்து அவருக்கு விடுதி விட்டுப் போஜன தாம்பூலாதிகளுங் கிருதர்த்தியமாய் நடப்பிக்கச் சொன்னான்.

அப்படியே அவர் அவ்விடத்திற் சேர்ந்து, இரண்டொரு நாள் சுகித்திருந்து, சமயமறிந்து பாண்டியன் சமுகத்தை அணுகி, மரியாதையோடு ராஜதரிசனஞ் செய்தார். அரசன் வித்துவ சிரேஷ்டராகிய ஒட்டக்கூத்தருக்கு ஆசனங் கொடுக்கச்சொல்லி உபசரித்து, ‘வந்த காரியம் என்ன?’ என, இவர், ‘கம்புக்குக் களைவெட்டினதும் தம்பிக்குப் பெண்கொண்டது’மாக, ‘ராஜசேகரரே’ எங்கள் ராஜாதிராஜராகிய குலோத்துங்க சோழ மகாராஜாவின் பிதாவானவர், தமது தேகாவசானத்தில் நம்முடனே சுபச்செய்தியொன்று சொல்லியிருந்தார். அதை உங்களுக்கு அறிவிக்கவும், உங்களைத் தரிசிக்கவும் வந்தோம்,’ என்றுசொல்லிப் பின்பு அக்கருத்தை வெளியிட்டார்.

பாண்டியன் அதிசயித்து...

தொகு

பாண்டியன் அதிசயித்துக் குறுநகை செய்து, ‘புலவர் பெருமானே, உங்கள் அரசனாகிய சோழன் பாண்டியகுலத்துப் பெண்ணைக் கொள்ளுத்தக்க பாத்திரனா? எங்களிலும் அவனுக்குள்ள ஏற்றமென்ன? சொல்லும்,’ என, ஒட்டக்கூத்தர், ‘சோழராஜாக்கள் ஏறும் மல்லகதி முதலிய ஐங்கதிகளையுடைய கோரம் என்று பெயர்பெற்ற பஞ்சகல்யாணியாகிய பட்டவர்த்தனப் புரவிக்குப் பாண்டியர் ஏறும் கனவட்டம் என்ற அஸ்வம் சமானமாகுமா? மாரிக்காலத்திலன்றிக் கோடைக் காலத்திலும் கடல்போல எங்கும் பரவிப்பெருகிப் பாய்ந்து பொன்கொழித்து அலையெறிகின்ற அகண்ட காவிரி யாற்றுக்கு வையையாற்றையோ நிகராகச் சொல்லுவது? சிவனது திருவுளத்துக்கு உவப்பாகச் சோழர்கள் அணியும் ஆத்திமாலைக்கு வேப்பமாலை நிகராகுமா? உலகத்தைச் சூழ்ந்து கவிந்து சகலாத்துமாக்களுடைய கட்புலனையும் மறைக்கின்ற அந்தகாரத்தைப் போக்கும் சூரியனுக்கு, அச்சூரியன்முன் ஒளி மழுங்கிப்போகின்ற சந்திரன் ஒப்பாகுமா? அதுபோல, மகா பிரசித்தமான சூரியகுலத்திற்குச் சந்திரகுலம் ஒப்பாகுமா? நிகரற்ற வீரமுடையவர்களுக்குள் அதிவீரனானவன் சோழனோ, பாண்டியரோ? வெற்றிபெற்ற சோழனது புலிக்கொடிக்குப் பாண்டியரது மீனக்கொடியோ இணையாவது? பொன்மாரி பெய்த மகிமை தங்கிய உறையூருக்குக் கொற்கைப் பதியோ உவமையாவது? பதின்மர் பாடப்பெற்ற திருவரங்க முதலாகிய பற்பல விஷ்ணு ஸ்தலங்களையும், ஜம்புகேஸ்வரம் முதலிய அனேக சிவ ஸ்தலங்களையும் தன்னகத்திற்கொண்டு, எக்காலத்தும் க்ஷாமென்பது அணுக இடங்கொடாமற் ஜீவாதாரமாகிய நெல் முதலிய விளைவு குன்றாத வளப்பம் மிகுந்த சோழநாட்டுக்குப் பாண்டிநாடு சரியாமோ?’ என்னும் பொருளை உள்ளமைத்து, அவ்வழியாற் சோழனுடைய பெருமை தோன்றும்படி,

கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானே! கூறுவதுங் காவிரிக்கு வையையோ அம்மானே!
ஆருக்கு வேம்புநிக ராகுமோ அம்மானே! ஆதித்த னுக்குநிகர் அம்புலியோ அம்மானே!
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே! வெற்றிப்பு லிக்கொடிக்கு மீனமோ அம்மானே!
ஊருக்கு றந்தைநிகர் கொற்கையோ அம்மானே! ஒக்குமோ சோணாட்டைப் பாண்டிநா டம்மானே!

-என்றொரு பாடலைச் சொன்னார்.

அதுகேட்டு அங்கிருந்த பாண்டியன் சம்ஸ்தான வித்துவானாகிய புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தரை நோக்கி, ‘முனி சிரேஷ்டராகிய அகஸ்தியர் திராவிட பாஷையைப் பிரவசனஞ் செய்தது தென்னாட்டிலுள்ள பொதியமலையிலிருந்தோ, சோழநாட்டிலுள்ள நேரிமலையிலிருந்தோ? சோமசுந்தரக் கடவுள் ஒப்புச் சொல்லுதற்கரிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தது மதுரையிலோ, உறையூரிலோ? ஸ்ரீமகாலக்ஷ்மி சமேதனாகிய நெடுமால் மீனாய் அவதரித்த தன்றிப் புலியாய் அவதரிக்கவில்லையே! ஆதலால், மீனக்கொடிதானே சிறந்தது? புலிக்கொடிக்கு என்ன சிறப்பிக்கின்றது? தேவர்கள், முனிவர்கள், சென்னி மேலேறும் பொன்னடியை உடைய சிவபெருமானது ஜடாமகுடத்தின்மேல் ஏறியிருக்கப் பெற்றுது சூரியனோ? சந்திரன் தானே? அதனால் மேம்பட்டது சந்திரகுலமோ, சூரியகுலமோ? சமணர்களை வெல்லும் பொருட்டுத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதிகமெழுதியிட்ட ஏடானது எதிரேறிக் கரை செர்ந்தது காவிரியிலோ? வையையிற்றானே? அதுபற்றி வையை யாறல்லவோ மாட்சிமைப்பட்டது? பேயணுகாமல் அதற்குப் பெரும்பகையாய்த் தோன்றி அதை விலக்குவது சோழரது ஆத்திமாலையோ? பாண்டியர் அணியும் வேப்பமாலை தானே? மதுரையை அழிக்கப் பொங்கிவந்த சமுத்திரமும் அஞ்சிவந்து பணிந்தது சோழர்காலையோ? பாண்டியர் காலைத்தானே?’ என்னுங் கருத்தை அடக்கி,

ஒருமுனிவன் நேரியிலோ வுரைதெளித்த தம்மானே! ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே!
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே! சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே!
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே! கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே!
பரவைபணிந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே! பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே!

-என்ற பாடலைச் சொல்லி அவர் சொன்னதைக் கண்டிக்க, ஒட்டக்கூத்தர், ‘இவனார், கொன்றை மாலைபோலக் குறுக்கே விழுந்து, தாம் பேசினதற்கெல்லாம் பிரதிகூலமாகப் பேசத்தலைப்பட்டான்! இப்படி விளையுமென்பதற்குத்தானோ வருகிற வழியிலே கருடனும் காடையுங் கட்டின!’ என்று சிந்தித்துச் சித்தங்கலங்கியிருந்தார்.

அவரப்படியிருக்க, பாண்டியராஜன் தன் தந்தைவழி தாய்வழியிலுள்ள பந்து வர்க்கத்திற் பெரியோர் சிறியோர் அனைவரையும் வரவழைத்து, ஒட்டக்கூத்தர் சோழராஜனுக்குப் பெண்பேச வந்த செய்தியை அவர்களுக்குத் தெரிவித்து, ‘இந்த விஷயம் சுற்றத்தாருக்கு அசம்மதமாகச் செய்யத்தக்கது அல்லவே? ஆகையால் அவனுக்குக் கொடுக்கலாமா கொடுக்கலாகாதா? உங்கள் அபிப்பிராயமென்ன? இது ஆயிரங்காலத்துப் பயிர் ஆகையாலும், பெண்ணைப் பெற்றுப் பத்துவயதுக்குமேல் வைத்திருப்பது பாவமென்பதனாலும், செவ்வையாய்த் தீர்க்காலோசனை பண்ணித் தனித்தனி அவரவர் அபீஷ்டத்தை ஒளியாமல் வெளியிடவேண்டும்,’ என்று உசாவினான். அவ்வண்ணமே தங்களுக்குள் கலந்து பேசி அவர்களிற் சிலர், ‘அரசர்க்குரிய கல்வி செல்வம் முதலியவைகளுள் சோழனைக் குறித்து என்ன குறை சொல்லுகிறது? யோசிக்குமிடத்தில் அவன் கல்வியிற் சாமானியனா? செல்வத்தில்தான் குபேரனுக்குக் குறைந்தவனா?’ என்றார்கள். சிலர், ‘ஐம்பதாறு தேசத்தரசர்களுடைய படங்களுள் சோழனுடைய படத்தை எடுத்து, அதில் எழுதப்பட்டிருகின்ற அவனது உருவத்தை ஒருவர்க் கொருவர் காட்டி, ‘சோழன் அழகிலேதானென்ன மன்மதனுக்குத் தாழ்ந்தவனோ? பாருங்கள்! அவன் வட்டமாய் ஒளிபெற்றுப் பூரணசந்திரன் போலப் பரந்த முகமும், தாமரைத்தளம் போலும் அழகாகக் கருணை சுரந்த கண்களும், மதனகோதண்டம் போல வளைந்து கறுத்த புருவமும், பவளம்போலச் சிவந்த வாயும், விஜயலக்ஷ்மியின் அரங்க மணிமண்டபம் பொல விசாலமாய் எடுத்த மார்பும், நெடிய மேருமலை போலப் பெருமிதமான நடையுமுடையவனல்லனோ?’ என்றார்கள். அதைக்கேட்ட சிலர், ‘கைந்நிறைந்த பொன்னில்லாவிட்டாலும், கண்ணிறைந்த கணவனிருக்க வேண்டும்,’ என்பதனால், நீங்கள் அழகைச் சொல்ல வந்தது சரிதான்; ஆயினும் இரண்டு கண்ணுமில்லாத பிறவிக்குருடனாகிய திருதாட்டிர மகாராஜனுக்குப் பெண்கொடுத்தானே காந்தார தேசாதிபதி அவன் அழகைப் பொருள் செய்யாமற் போனதென்னை? என்றார்கள். சிலர், ‘அழகிருந்தென்ன பண்ணும்? அதிர்ஷ்டமிருந்துண்ணும்’ என்பதனால், அவன் அதிர்ஷ்டத்தையே முக்கியமாய் நினைத்தவனாக வேண்டும்,’ என்றார்கள். சிலர், ‘அதுவும் பெரிதன்று, ராஜபுருஷர்களுக்கு ஆண்மையே பிரதானம்,’ என்றார்கள். சிலர், ‘அப்படியென்றால், பாஞ்சாலன் மகனாகிய ஆணும் பெண்ணுமல்லாத சிகண்டிக்கும் ஒருவன் பெண்கொடுத்தானே! அவன் அச்சிகண்டியினிடத்தில் என்ன சூரத்துவத்தைக் கண்டான்!’ என்றார்கள். சிலர், ‘எதைப் பாராவிட்டாலும் ‘பாத்திர மறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு,’ என்பதனால், குலங்கோத்திரம் மாத்திரம் தக்கதா தகாததாவென்று அவசியம் பார்க்கவேண்டும்,’ என்றார்கள். சிலர், ‘இது நியாயந்தான்! ஆயினும், சோழனுடைய குலங்கோத்திரத்தைக் குறித்து விசாரிக்கிறது, கரும்பு கசக்கிறதோ! திதிக்கிறதோ என்று கேட்கிறது போல இருக்கிறது; அது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்ததுதானே!’ என்றார்கள். சிலர் அப்படியென்றாற் ‘பழம்நழுவிப் பாலிலே விழுந்தது போலத்தான்! அதற்கு ஆக்ஷேபமென்ன? சம்பிரமமாய்க் கொடுக்கலாமே!’ என்றார்கள். இப்படியெல்லாஞ் சொன்னமையால், அவரவர் அபிமதத்தை அறிந்து கொண்டு, வசிட்டர் வாக்கினாற் பிரமரிஷியாவது போலப் பந்து ஜனங்களின் இஷ்டப்படியே பாண்டியன் தவஞ்செய்து பெற்ற தன் அருமைத்திருமகளைச் சோழனுக்குக் கொடுக்கச் சம்மதித்துப் புரோகிதர் முன்னிலையிற் பொருத்த நிமித்தம் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணி, விவாகத்திற்கு நாள் வைத்து முகூர்த்தப் பத்திரிகை எழுதிக் கொடுத்து, ‘இந்தப் பத்திரிகையில் நிருணயித்த தினத்தில் உங்கள் ராஜா இவ்விடத்திற்கு வந்து சுகமாய்க் கலியாணம் பண்ணிக்கொண்டு போகலாம்,’ என்று சொன்னான்.

அப்பொழுது அந்தச் சபையிருந்தவர்களெல்லாம் ‘பூர்வம் திருப்பாற்கடலில் அவதரித்த ஸ்ரீமகாலக்ஷ்மியைத் தேவர் கூட்டமெல்லாம் எனக்கெனக்கென்று இச்சித்தது போல, நம் வேந்தர் மகளை எத்தனையோ ராஜாக்கள் தனித்தனி இச்சித்துத் திருமணம் முடிப்பதற்கு நாளிது வரையில் பகீரதப் பிரயத்தனம் பண்ணி வந்தார்களே! பண்ணியும் என்ன பிரயோஜனமாயிற்று? சோழனுக்கென்று கங்கணப் பிராப்தமிருந்தபடியினாலே, காற்றும் மழையுமாய் அதிசுலபத்தில் விவாகங் கூடிவிட்டது! எப்பொழுதும், ‘ஒருவனுக்குத் தாரம் மற்றவனுக்குத் தாய்,’ என்பது சத்தியமல்லவா?’ என்று சொல்லிச் சந்தோஷப்பட்டார்கள்.

ஒட்டக்கூத்தர் பாண்டியன் எழுதிக்கொடுத்த முகூர்த்தப் பத்திரிகையை வாங்கிவந்து சோழன் கையிற் கொடுத்துப் பாண்டியன் சபையில் நடந்த சமாசாரங்களையெல்லாம் சொன்னார். அவன் அந்த முகூர்த்தப் பத்திரிகையைப் பார்வையிட்டு மனங்களித்துத் தான் விவாகத்திற்குப் போய் மீண்டு வருமளவும் தனக்குப் பிரதிநிதியாய்ச் சர்வாதிகாரம் செலுத்தும்படி ஒட்டக்கூத்தரைப் பட்டத்தில் வைத்துவிட்டு, மந்திரி பிரதானிமார்களுடனும், தன் சுற்றத்தாருடனும் நால்வகைச் சேனைகளுடனும் மதுரைக்குப் போனபொழுது, பாண்டியன் எதிர்கொண்டு உபசரித்து, வாழை கமுகுகள் நாட்டி, முத்துமாலை புஷ்பமாலை தூக்கிப் படங்கள் கண்ணாடிகள் நிறைந்து, இந்திர விமானம் போலச் சோடிக்கப்பட்ட அழகிய மணப்பந்தலிலே உன்னதமாகிய மாணிக்கமேடையில் நவரத்தினக் கோலமிட்டுப் பூரண கலசங்கள் வைத்துத் தீபங்கள் ஏற்றி முளைப்பாலிகை அமைத்து, நடுவே மரகத பீடமிட்டு, திவ்விய தீர்த்தங்களால் ஸ்நானம் பண்ணுவித்து, விலையுயர்ந்த ஆடையாபரணங்களையும் கந்த சுகந்த புஷ்பாதிகளையும் கொண்டு அலங்கரித்து, மணக்கோலஞ்செய்வித்து, அழைத்துவந்து மாப்பிள்ளையையும் அவன் வலப்புறத்திற் பெண்ணையும் மேற்படி பீடத்தின்மேல் இருக்கவைத்து, மங்களவாத்திய முழங்க ஹோமம் வளர்த்தி, வேதப்பிராமணர்கள் மந்திரவாக்கியங்களைச் சொல்லி ஆசீர்வதிக்க, சாஸ்திரோக்தமாகப் பாண்டியன் தன் மகள் கையை எடுத்துச் சோழன் கைம்மேல் வைத்துத் தாரை வார்த்துத் தத்தம் பண்ணிக் கன்னிகாதானமாய்க் கொடுக்க, சோழன் அக்கினி சாக்ஷி அருந்ததி சாக்ஷியாக அவளை பாணிக்கிரகணம் பண்ணினான். மற்றக்கிரியைகளெல்லாம் விதிப்பிரகாரம் சம்பூரணமாய் நடக்க, ஆறு மாதபரியந்தம் தானம் தருமம் விருந்து ஆடல் பாடல் முதலான சகல விபவத்துடன் சம்பிரமமாய்க் கலியாணம் நடந்தது.

பிறகு பாண்டியன், பெண்ணுக்கு உசிதமான வஸ்திர பூஷணங்களையும், பொற்பெட்டி, பொற்றட்டு, பொற்கட்டில் பொற்றொட்டில் பொற்குடம் முதலானவைகளையும் யானை குதிரை கரடி பல்லக்குகள் சீமை பூமிகள் மற்றும் அனேகம் பொருள்களுடனே தோழிமார் தாதிமார்களையும் சீதனங் கொடுத்து, அந்தப்படியே தன் சம்ஸ்தான வித்துவானாகிய புகழேந்தியாரையும் சீதனமாகக் கொடுத்தான். சோழன் ஒட்டக்கூத்தர் பெயருக்கு ஜாபிதா எழுதி அச்சாபிதாவில் மேற்படி சீதனத்தட்டு முட்டு முதலானவைகளை விவரமாகச் செப்பி, யாவும் வரப்பார்த்துக் கொள்ளும்படி அனுப்பினான்.

ஜாபிதாவைக் கொண்டுவந்து கொடுத்த மாத்திரத்தில் ஒட்டக்கூத்தர் எல்லாச் சாமான்களும் ஜாபிதாவின்படி தம்மிடத்தில் வந்து சேரப்பார்த்து ஒப்புவித்துக் கொண்டு, அததை வைக்க வேண்டிய ஸ்தானங்களில் வைப்பித்துப் பின்பு ஒரு வித்துவானும் சீதனப்பொருளாய் வந்திருக்கிறார் என்று சொல்லக்கேட்டு, அவரை வரவழைத்துப் பார்க்குமிடத்தில் தாம் பெண்பேசப் போனபொழுது தம் கட்சிக்கு எதிர்க்கட்சியாய்ப் பேசின புகழேந்திப் புலவராய் இருக்கக்கண்டு, ‘நல்லதாகட்டும்! இறுமாப்புடைய இவன் நமது வலையில் தெய்வகதியாய் எளிதில் வந்து சிக்கினான்! இவனுடைய கொட்டத்தை அடக்கவேண்டுமேயல்லாமல், இவன் எவ்வளவாகத் துக்கித்தாலும் இனி விடலாகாது! ‘எலியழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடுமா!’ என்று நினைத்து, அவரை வித்துவசிரேஷ்டரென்று மதியாமலும், சிறிதாவது அவரிடத்தில் இரக்கமில்லாமலும் சிறைச்சாலையில் வைப்பித்து, நாளொன்றுக்கு ஆழாக்கு அரிசியும், உழக்கு உப்புங் கொடுக்கும்படி உத்தரவு செய்தார். புகழேந்தியாருக்கு இங்ஙனம் சங்கடம் நேரிட்டதனால், அவர், ‘இது கர்மானுசாரம்!’ என்றெண்ணி, அச்சிறைச்சாலையில் பக்கத்து மார்க்கத்தில் தண்ணீர்க்குப் போகிற ஸ்திரீகளைச் சாளரத்தின் வழியாய்ப் பார்த்து, அவர்கள் காதுக்கு இனிமையாகவும், சுலபத்திற் பொருள் தெரியும்படியாகவும், பாரதசரித்திரத்தைச் சுருக்கி இக்காலத்திற் தெருக்களிற் சில எளிய ஜனங்கள் உடுக்கை தட்டிப்பாடி ஜீவனஞ்செய்துகொண்டிருக்கின்ற அல்லியரசி மாலையீடு, பவளக்கொடி மாலையீடு, புரந்தரன் களவு மாலை என்னும் செம்பாகமான பாடல்களைப் பாட, அவைகளை அவர்கள் கேட்டுச் சந்தோஷப்பட்டுத் தங்கள் தங்கள் வீட்டிலிருந்து அரிசி காய்கறி புளி மிளகாய் முதலானவைகளுங் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவைகளிற் புகழேந்தியார் தாம் சமைத்துண்டு மீந்தவைகளைச் சிறைச்சாலைக் காவற் சேவகருக்குக் கொடுப்பார். அதனால், அச்சேவகர்கள் அவர்மேல் அதிக பக்ஷம் வைத்து, அவரை மரியாதையாய் நடத்தி வந்தார்கள்.

இப்படியிருக்கையில், சோழன். . .

தொகு

இப்படியிருக்கையில் சோழன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு உறையூரில் வந்து சேர்ந்து, சுகமாய் வாழுநாளில், அடுத்த தைப்பொங்கலுக்கு மறுநாட் சாயங்காலம் அவன் மிக்க ஆடம்பரத்துடனே வீதியில் யானைமேற் பவனி வந்தான். சிறைச்சாலை தளத்தின்மேல் நின்று புகழேந்தியார் அவ்வேடிக்கையைப் பார்த்த பொழுது, சோழன் அவரைத் தன் அருகிலிருக்கும் ஒட்டக்கூத்தருக்குக் காட்டி, ‘இதோ! மேன்மாடத்தில் நிற்கின்றாரே புகழேந்தியார் என்பவர் இவர் தமிழில் மகாசமர்த்தரல்லவா?’ என்றான்; அதற்கு ஒட்டக்கூத்தர், ‘வேங்கைப் புலிக்குமுன் மான்நிற்குமா? எரிகின்ற சுடுநெருப்புக்குமுன் சாரமற்று உலர்ந்த வெட்டுக்காடு நிற்குமா? கடற் சுறாவுக்குமுன் மற்ற சிறுமீன்கள் நிற்குமா? சூரியோதயத்திற் பனி நிற்குமா? அப்படிக் கல்வியில் எனக்குமுன் இவன் நிற்கமாட்டுவானா?’ என்னுங் கருத்துத் தோன்ற அவரை இகழ்ந்து,

மானிற் குமோவந்த வாளரி வேங்கைமுன்? வற்றிச்செத்த
கானிற்கு மோவவ் வெரியுந் தழன்முன்? கனைகடலின்
மீனிற்கு மோவந்த வெங்கட் சுறவமுன்? வீசுபனி
தானிற்கு மோவந்த கதிரோ னுதயத்தில்? தார்மன்னனே!

-என்று ஒரு பாடலைச் சொல்ல, அதுகேட்டுப் புகழேந்தியார், ‘இவன் அவ்வளவு சமர்த்தனா!’ என்று சிரித்து, ராஜாவைப் பார்த்து, ‘இந்தப் பாடலை வெட்டிப் பாடவோ, ஒட்டிப் பாடவோ?’ என்று கேட்க, அவன், ‘வெட்டிப் பாடவேண்டா, ஒட்டியே பாடும்,’ என்ன, அவர், ‘அந்த மான் முதலானவைகள் அவரே; புலி முதலானவைகள் நானே,’ எனப் பொருள்படும்படி,

மானவன் நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்த
கானவன் நானவ் வெரியுந் தழலுங் கனைகடலின்
மீனவன் நானந்த வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவன் கானக் கதிரோ னுதயமுந் தார்மன்னவனே!

-என்று அப்பாடலையே ஒட்டிப் பாடினார். பாடியும், அரசன் ஒட்டக்கூத்தரிடத்தில் வைத்த தாக்ஷணியத்தாற் புகழேந்தியாரைச் சிறை மீட்க வேண்டும் என்பதை நினையாமற் போனான்.

அதற்குச் சிலகாலத்திற்குமுன் ஒரு வித்துவான் சோழன்மேல் பாட்டுப்பாடி வர, அரசன் அப்பாடலை வியந்து அவனுக்கு உசிதமான வெகுமதி செய்து, கொடி குடை எக்காளம் முதலிய விருதுகளுங் கொடுக்கக் கண்டு ஒட்டக்கூத்தர் பொறாமை கொண்டு, சோழனைப் பார்த்து, ‘கிழக்குத் தெற்கு மேற்கு வடக்கென்னும் நான்கும், இவற்றிற்கு இடையிலுள்ள கோணம் நான்கும், மேல் கீழிரண்டுமாகிய தசதிசைகளும் பதறிப் பயந்து நடுங்கிப்போக, நட்சத்திரங்களெல்லாம் பலபலவென்று உதிர்ந்து சிதறப் பகிரண்டத்தின் முகடு வரைக்கும் நீண்ட மந்தரகிரியாகிய மத்தைக்கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்து, தேவர்களுக்கு அமிர்தங் கொடுத்த ஸ்ரீமகா விஷ்ணுவின் அமிசமாகி அவதரித்துப் பூமண்டலமுழுதும் அரசாளப் பெற்ற மானாபரணனாகிய ராசசேகரா, பரமசிவன் பரிவு கூர்ந்து கொடுத்தருளிய முத்துப்பந்தலில் வசிக்கின்ற திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாடிய பாடலுக்கும், சூரபதுமன் முதலான அசுரர்களைக் கடிந்த சக்தி வேலைத் தாங்கிய முருகக் கடவுள் பாடிய பாடலுக்கும், பொதிய மலையில் எழுந்தருளியிருக்கும் முனி சிரேஷ்டராகிய அகஸ்தியர் பாடிய பாடலுக்கும், கொத்துக் கொத்தாயிருக்கின்ற சடையினையுடைய சிவபெருமான் பாடிய பாடலுக்கும், பதுமபீடத்தில் வீற்றிருக்கும் பிரமதேவன் பாடிய பாடலுக்குமே குடை, கொடி, காளம் முதலிய பல விருதுகளுங் கொடுக்கலாமேயல்லது இந்த அற்பமாகிய தமிழ்ப் பாடலுக்கெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும்?’ என்னும் பொருள் தோன்ற,

பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போ யுலையப் பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடைநீள்
மத்துக்கொண் டுமதிக்குந் திரையாழி நெடுமால் வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா!
முத்துப்பந் தரினிற்குங் குருளைக்குஞ் சினவேல் முருகற்கும் பொதியக்கோ முனிவர்க்குஞ் சடிலக்
கொத்தற்கும் பதுமக்கொந் தயனுக்கு மலதிக் கூழைத்தண் டமிழுக்கேன் கொடியுங்கா ளமுமே?

-என்ற பாடலைச் சொல்லித் தடுத்து, அன்று முதலாகக் கவிபாடி வருபவர்களையெல்லாம் பிடித்துச் சிறைச்சாலையில் அடைப்பித்து, தேவி கொலுவிருக்கின்ற நவராத்திரி காலத்திற் சிறைக்கூடத்திலிருந்து வெளிப்படுத்தி, அவர்களை இருவர் இருவராகக் குடுமியோடு குடுமி முடிபோட்டு இறங்கி நிற்கத் தேவிக்கு முன்பாக நிறுத்தி, பிடாரிக்குச் சோடிக்கடா வெட்டுவது போலச் சற்றும் இரக்கமில்லாமல் அவர்கள் தலைகளைப் பதைக்கப் பதைக்க வெட்டி வழக்கமாய்ப் பலிசெலுத்தி வருவதுண்டு. அதுபற்றி அந்த ஒட்டக்கூத்தரையும் ஒருவன் பாடும் பாட்டில் ஏதாவது குற்றம் கண்டவுடன் அவன் தலையில் நறுக்கென்று குட்டுவதுபற்றிப் பிள்ளைப் பாண்டியனையும், வாது செய்யும்பொழுது எதிரி தோற்றால் அவனது காதில் மாட்டிய துறட்டைப் பிடித்திழுத்துக் காதை ஒட்ட அறுப்பதுபற்றி வில்லிபுத்தூர்ஆழ்வாரையுங் குறித்து,

குட்டுவதற்குப் பிள்ளைப்பாண் டியனோ வில்லை குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே!

-என்று பிற்காலத்தார் பாடியுமிருக்கின்றனர். அது நிற்க. மேற் சொல்லிய வழக்கப்படி அவர் அக்காலத்திலும் செய்ய எத்தனித்துப் புலவர்களில் அனேகரைப் பிடித்துச் சிறைச்சாலையில் அடைத்துவைத்தார். அச்செய்தி சிறைச்சாலையிலிருக்கும் புகழேந்திப்புலவர் அறிந்து, ‘ஐயையோ! சண்டாளன்! பாவமென்பதும் பழியென்பதும் பாராமல் தன்னைப்போன்ற புலவர்களை வெட்ட மனந்துணிந்தானே! இடை என்னவென்று சொல்லுகிறது!’ என்று விசனப்பட்டுப் பிறகு அவர்களையெல்லாம் கொலைக்குத் தப்புவிக்க வேண்டுமென்று, அவர்களில் நல்ல புத்திமான்களாகிய குயவனொருவன், அம்பட்டனொருவன், கருமனொருவன், வேளாளனொருவன், வண்ணானொருவன் ஆக ஐந்துபெயரைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குச் சிறையிருப்பிலே தானே சம்பிரதாயத்துடனே இலக்கிய இலக்கணங்கள் பயிற்றுவித்து அதிக சமர்த்தர்களாகும்படி செய்தார்.

அவர்களையும் அவரிடத்தில் முறையாகக் கல்விகற்று மிக்க திறமுடையவர்களாயிருக்கையில் நவராத்திரி சமீபத்தது. சோழராஜன் ஆகாச முட்டப் பச்சைப் பந்தல் போட்டுக் கமுகு வாழை முதலியவைகளைக் கொண்டு அலங்கரித்துத் திருவிளக்கேற்றித் தேவியைக் கலசத்தில் ஆவாகனம் பண்ணி ஒன்பதுநாள் கொலுநிறுத்திப் பூசித்துவந்து, பத்தாநாளாகிய விஜயதசமியன்று உத்வாசனம் பண்ணுவதற்குப் பலிகொடுக்க யத்தனித்தான். அத்தருணத்தில் அந்தத்தேவி சந்நிதிக்கு முன்னே இரு பக்கத்திலும் இரண்டு நாற்காலி கொண்டுவந்து போடப்பட்டன. அவற்றுள் ஒன்றின்மேல் அரசனும், மற்றதன்மேல் ஒட்டக்கூத்தரும் கத்தியை உருவிக் கையிற் பிடித்த வண்ணமாய் எதிரெதிர் உட்கார்ந்தார்கள். ஒட்டக்கூத்தர் சிறைச்சாலைக் காவலதிகாரியை நோக்கி, ‘அங்குள்ள படித்த கடாக்களைக் பிடித்துக்கொண்டு வா,’ என்று சொல்ல, அவன் விசனப்பட்டுக்கொண்டே சிறைச்சாலைக்குப் போய்க் கதவைத் திறந்து, அதற்குள் அடைக்கப்பட்டவர்களை ‘வெளியே வாருங்கள்!’ என்றான். நூறுபெயர் வரையில், ‘இன்றைக்கு நமக்கு முடிவு சம்பவித்தது! இதற்கென்ன உபாயஞ்செய்கிறது!’ என்று கர்ப்பங்கலங்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டே வெளிப்பட்டார்கள். புகழேந்தியார், ‘இவர்களிற் பெரும்பான்மையர் சொற்பக் கல்வியுடையவர்களாயிருப்பதனால் அந்தக் காலாந்தகன் கேட்குங் கடினமான கேள்விக்கு உத்தரஞ் சொல்லத் தெரியாமல் விழிப்பார்களே! அதுகண்டு அவன் அநியாயமாய்ப் பதைக்கத் துடிக்க வெட்டியெறிவானே!’ என்று நினைத்து, அப்படிப்பட்டவர்களைப் பின்னே நிறுத்திச் சந்தேக விபரீதமறக் கல்விபயின்ற ஐவரையும் ஒருவர் பின் ஒருவராய் ஒட்டக்கூத்தருக்கு முன்னே போகும்படி திட்டப்படுத்தி அனுப்பினார்.

அவரால் அனுப்பப்பட்டவர்களிற் குயவன் பிரதமத்திற் போய் நின்றான். அப்பொழுது ஒட்டக்கூத்தர் தம்மைப் பெரிய மதயானையாகவும், அவனை ஒரு சிறிய முயற்குட்டியாகவும் பாவித்துக் கொண்டு, அவன் முகத்தைப்பார்த்து, ‘மோனை எதுகை முதலிய தொடையும், தொடை விகற்பமமுடைய வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பாவும், தாழிசை, துறை, விருத்தம் என்ற இனமுமாகிய யாப்பினையுள்ளிட்ட இயல், இசை, நாடகம் என மூவகைப்பட்ட தமிழாகிய மும்மதங்களைப் பொழிகின்ற இந்தக் கவியானைக்கு முன் அச்சமில்லாமல் வந்து எதிரத்து நிற்கின்ற நீ ஆரடா?’ என்பதற்கு,

மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி
ஆனை முன்வந் தெதிர்த்தவ னாரடா?

- என்றார். அதற்குக்குயவன், ‘நான் கூனையுங் குடத்தையுங் குண்டுசட்டியையும் பானையையும் பண்ணுகின்ற குசப்பையல்,’ எனவும், சிலேடையால், ‘தற்புகழ்ச்சியாக யானையென்று சொல்லுகின்ற உன்னுடைய மதத்தை அடக்குகின்ற அங்குசப்பையல்,’ எனவும் சொல்லுவதற்கு,

கூனை யுங்குட முங்குண்டு சட்டியும்
பானை யும்பணு மங்குசப் பையல்யான்!

-என்றான். அதுகேட்டு ஒட்டக்கூத்தர், ‘ஏது! இவன் நமக்கு வைரியாயேற்பட்டானே!’ என்று எண்ணி, நீதியில்லாமல் தலையை வெட்டலாகாதே! அதனால், அவனை ஒருபக்கத்திற் சும்மா நிறுத்தி வைத்து, ‘மற்றொருவனை அழை,’ என்று சிறைக்கூடக் காவல் அதிகாரிக்குச் சொல்லப் புகழேந்திப் புலவர் அம்பட்டனைப் ‘போ,’ என்ன, அவன், ‘இந்தக் கொலைபாதகன் நம்மை என்ன இமிசை செய்வானோ!’ என்று நடுங்கிக்கொண்டே வந்து நின்றான்.

அவனுக்கு ஒரு கண் பொட்டையாய் இருக்கக்கண்டு, ஒட்டக்கூத்தர் அலட்சியமாக ‘அடா, பொட்டைக்கண்ணா, என்னைக் கண்டவுடனே வல்லூறென்னும் பறவையைக் கண்ட கொக்குப்போலக் கைகால் உதறலெடுக்க மன விசாரத்துடனே இங்கே வந்து நின்ற நீ யார்?’ என்பதற்கு,

விண்பட்ட கொக்குவல் லூறுகண் டென்ன விலவிலக்கும்
புண்பட்ட நெஞ்சொடு மிங்குநின் றாய்பொட்டை யாய்புகல்வாய்,

-என்று பாதிப்பாடலைச் சொல்லி, ‘இதற்கு உத்தரமாக மற்றப் பாதிப்பாட்டையுஞ் சொல்! நீ கவி பாடுந் திறத்தைப் பார்ப்போம்!’ என்றார். அதற்கு அம்பட்டன், ‘இவன் நம்மை என்ன செய்தாலுஞ் செய்யட்டும்!’ ‘தலைக்கு மிஞ்சின ஆக்கினையும், கோவணத்துக்கு மிஞ்சின தரித்தரமுமில்லை!’ என்று தைரியங்கொண்டு, ‘எனக்குக் கண்ணும் பொட்டை; நான் ஜாதியிலும் அம்பட்டன்; ஆனாலும், பாவாணர்களுக்கு முன்னே சிறிதும் சங்கையின்றிச் செம்பாகமான பற்பல சந்தங்களையுடைய தமிழ்ப்பாடல்களை யாவருந் திடுக்கிடச் செய்கின்ற நீரும் திடுக்கிடும்படி பாடுவேன்!’ என்பதற்கு,

கண்பொட்டை யாயினும் அம்பட்ட னான்கவி வாணர்முன்னே
பண்பட்ட செந்தமிழ் நீயுந் திடுக்கிடப் பாடுவனே

-என்றான். அதுகேட்டு, ‘ஒட்டக்கூத்தர், ‘இவன் அம்பட்டக் கிறுக்கைக் காண்பிக்கிறான்!’ என்று நினைத்து, அவனை மறுபக்கத்தில் நிறுத்தி, வெறொருவனை அழைக்கச் சொன்னார். சிறைக்கூடத்திலுள்ள புகழேந்தியார் சொற்படி சேவகர்கள் கருமானைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

ஒட்டக்கூத்தர் அவனை, முன்பு குயவனையும் அம்பட்டனையுங் கேட்டதுபோலக் கவிசொல்லிக் கேள்வி கேளாமல் வாய்மொழியாகவே, ‘நீ யார் மகன்? உன் பெயரென்ன? நீ பெற்ற மகிமை எப்படிப்பட்டது? உன் குலமேது? சொல்!’ என்றும், ‘தப்புப் பாடலாமா?’ என்றுங் கேட்டார். அதற்கு அவன், ‘நான் செல்லப்பாசாரி குமாரன்; என்பெயர் திருவேங்கடாசாரி; நான் செகத்குருவாயிருக்கிறவன்; என் குலம் மனு மய சிற்பி துவஷ்ட விஸ்வ என்னும் ஐந்திற் கருமார குலம்; நான் குற்றமறப் பாடுகிற பாட்டைக் குறித்து ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்பதாக வாய்க்கெளிதாக நீர் குற்றங்கூற வந்தீர்; இப்படி என் கவியைச் சுட்டி வீண்குற்றங் கூறுகிறவர்களை நான் சும்மா விடமாட்டேன்! குறட்டைக் கொண்டு பதினாறு பல்லையும் பிடுங்கிப் பருந்தாட்டமாட்டிப் பகையாளிகள் பார்த்துச் சிரிக்கும்படி அவர்கள் கண்ணுக்கெதிரே இரவும் பகலும் ஓய்வில்லாமற் கவியாகிய இருப்பாணிகளைக் கொண்டு வாயிற்கடாவுனேன்!’ என்ற கருத்துத் தோன்ற,

செல்வன் புதல்வன் திருவேங் கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டிப் பகைவர்முன்னே
அல்லும் பகலு மடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே.

-என்ற பாடலைச் சொன்னான். அதுகேட்டு, ஒட்டக்கூத்தர் ‘தன்னைப் புகழாத கம்மாளனில்லை,’ என்பார்கள். அதற்கேற்றபடி இவன் தன்னைப் புகழ்ந்து பேசுகிறான்!’ என்றெண்ணி, அவனை, ‘அப்படி நில்,’ என்று நிறுத்தி, ‘பின்னொருவனைக் கொண்டுவா,’ என்றார். என்றமாத்திரத்தில் வேளாளன் வந்து நின்றான்.

அவனை நோக்கி, ஒட்டக்கூத்தர், ‘பிரபல கவிஞர்களாகிய எங்களுக்கு முன்னே, புன்கவிஞர்களாகிய நீங்களும் வித்துவான்களென்று வெளிப்பட்டு, ‘ஞானியாடுந் திருக்கூத்தோடே நானுமாடுகிறேன்,’ என்பதாகக் கவிபாடுகிறீர்களே! இஃதென்னை வெட்கக் கேடு!’ என்றார். அதற்கு வேளாளன், ‘இந்தப் பஞ்சாதசகோடி பூமண்டலத்தையும் ஒருகுடை நீழலில் அடக்கு ஏகாதிபத்தியமாய் அரசாளுகின்ற சக்கரேஸ்வரனைக் கண்டு, மற்ற ஐம்பத்தாறு தேசத்தரசர்கள், ‘நாமெவ்வளவு பூமிக்குடையவர்கள்! இவனுக்கெதிர்த் தட்டாகக் ‘கடா இடுக்கில் புல் தின்னுகின்றது’ போல ஆளுகை செய்வது தகுதியல்லவே!’ என்று தத்தம் தேசங்களைக் கைவிட்டுக் கடலிலே போய் விழுந்து மாண்டு போனார்களா? ஒரு தடாகத்திலுள்ள புஷ்பங்களுக்குள் மிகச் சிறந்ததாயும் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு வாசஸ்தானமாயுமிருக்கின்ற தாமரை புஷ்பிக்கக்கண்டு, அதனருகிலிருக்கும் அற்பமாகிய கொட்டியும் புஷ்பிக்காமலிருக்கின்றதா? அப்படி எழுவகைத் தீவுகளையும் பரிபாலனம்பண்ணுகின்ற சோழ மகாராஜாவே, கவி சிரேஷ்டராகிய ஒட்டக்கூத்தரே, நீங்கள் சொல்திட்பமும் பொருள் நுட்பமும் உடையதாகப் பாடுகின்ற பாடலைக்கண்டு, என்போலும் சொற்பமாகிய கவிகளைப் பாடுகின்ற புலவர்களெல்லாம் பயந்து, பாடாமல் ஓடி ஒளித்துப் போவார்களோ? சொல்லுங்கள்!’ என்னுங் கருத்தை அமைத்து,

கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில, பூதலமேழ்
காக்கின்ற மன்ன! கவியொட்டக் கூத்த!நுங் கட்டுரையாம்
பாக்கண் டொளிப்பர்க ளோதமிழ் பாடிய பாவலரே?

-என்ற பாடலைச் சொல்லிப் பின்னுந் தனக்குள், ‘சோழனுக்கு இவன் வித்தியாகுருவாயிருப்பது பற்றி இவனை மிகவும்பெருமைப்படுத்தி, அவன் தன் சிங்காதனத்திற்கு மேலாக உயர்ந்த ஆசனத்தில் வைத்து இவனுடைய பாதத்தைத் தலைமேலே தாங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால், ‘குப்பையில் முளைத்த கொடி கூரைமேல் ஏறினது போல’ இவன் தன்னை அதிக சிலாக்கியப்பட்டவனாக நினைத்துக்கொண்டு கர்வித்து, ‘அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும்,’ என்பதாக, நம்மையெல்லாம் பொருள்செய்யாமல் கிரமத் தாழ்வாக நடத்துகிறான்!’ என்றெண்ணி, ஒட்டக்கூத்தரை நோக்கி, ‘உலகத்தில் எப்படிப் பட்டவர்களுக்கும் தம் குற்றம் தெரிகிறதேயில்லை; அதைக் குறித்து அரசரானவர் முன்பு தம்மிடத்திலுள்ள குற்றத்தைக்கண்டு களைய வேண்டும். அப்படிச் செய்தால், அவரைச் சிறிதேனும் குற்றமென்பது அணுகாது. அவர் எப்பொழுதும் நீதிமானாயிருப்பாரென்று சாஸ்திரமுஞ் சொல்லுகின்றதே! அதை நீங்கள் ஆராய்ந்தறியவில்லையோ?’ என்றான்.

அப்பொழுது அவர் கடுங்கோபங்கொண்டு, பின் விளைவதை உணராமல், ‘அடா, நீ எங்களுக்குச் சட்டக்கல்வி ஓத வந்தாயோ? நீ சொல்லுகிறதை யோசிக்குமிடத்தில், ‘முண்டையைப் பிடித்த கண்டமாலை,முருங்கையையும் கூடப் பிடித்தது’ போல, நாங்களும் தப்புப் பாட்டுப் பாடியிருக்கிறதாக அல்லவோ காணப்படுகின்றது! நல்லது! எங்கள் பாட்டில் நீ கண்ட வழுவென்ன, சொல்!’ என்று உருக்கிக் கேட்டார். வேளாளன், ‘அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி,’ என்பதனால், இவன் குற்றத்தை இவனுக்கு எடுத்துக்காட்டினால்தான் இவன் கொட்டம் அடங்கும்; அல்லாவிட்டால், அடங்கமாட்டாது,’ என்று நினைத்து, ‘ஐயா, நீர் முன்பு சோழ மகாராஜாவின் மேற்பாடிய அண்டத்துப் பரணி என்னும் பிரபந்தத்தில் இந்தப் பிரமாண்டத்தையே நகரமாகவும், பூமியைச்சுற்றியிருக்கின்ற சக்கரவாளகிரியையே மதிலாகவும், அதற்கு உட்புறத்திலிருக்கின்ற சப்த சமுத்திரங்களையே அகழாகவும், பூமி மத்தியிலுள்ள மகாமேருவையே கோட்டைக் கொடிக்கம்பமாகவும், ரூபகப் படுத்தி வருணித்திருக்கிறீரே! அகழானது புறத்திலிருந்தலல்லவோ கோட்டைக்கு உறுதி? அகத்திலிருக்கிறதாகச் சொல்லப்பட்டிருக்கிறதே! அதனால் என்ன பயன்? இது சரிதானா? சொல்லவேண்டுமானால், அண்டத்திற்கு அப்புறத்திலுள்ள பெரும்புறக்கடலைச்சொல்லலாமே! கம்பர் இராமாயணத்தில் நகரவருணனையில்,

நேமிமால் வரைமதி லாக நீள்புறப்
பாமமா கடல்கிடங் காகப் பன்மணி
வாமமா ளிகைமலை யாக மன்னற்குப்
பூமியு மயோத்திமா நகரம் போலுமே

-என்ற செய்யுளிற் பெரும்புறக்கடலை அகழாகச் சொன்னதையாவது பார்க்கவில்லையா? அல்லது கேட்கவுமில்லையா?’ என்றான்.

அந்தமட்டில் அக்கினிதேவனுக்கு. . .

தொகு

அந்தமட்டில் அக்கினிதேவனுக்கு அபிஷேகம் பண்ணினது போல, ஒட்டக்கூத்தர் முகங்கருகி, அவரைப் பிடித்திருந்த அகங்காரமாகிய துஷ்டப்பேய் விட்டுத் தொலைந்தது, அப்புறம் அவர், ‘மற்றவர்களை அழைத்துக் கேட்டால் அவர்கள் ஏதேது சொல்வார்களோ!’ என்ற அச்சத்தினால் நாவெழாமல் வாய் பூட்டப்பட்டது போல, ஒன்றும் பேசாமற் சும்மாஇருந்து, பிறகு, ‘இவர்களை நாம் சிறைப்படுத்தினது சனியனை விலைக்கு வாங்கினது போலிருக்கிறது!’ என்றும், ‘நமதுபெயரைக் கேட்டவர்களெல்லாம் இடியோசை கேட்ட சர்ப்பம் போல நடுங்குவார்களே! அப்படியிருக்க, இவர்களுக்கு இந்தத் தைரியமும் இவ்வளவு வல்லமையும் ஆராலே உண்டாயின? அந்தப் புகழேந்தி என்பவனாலேதான்; அவன் இப்படிப்பட்ட அற்ப மனிதர்களைக் கொண்டு, நம்மை அவமானப்படுத்தினானல்லவா? ஆகையால், அவனை அவன் உயிர்விடுமளவும் சிறைவிடச் செய்யவொண்ணாது, இவர்களையெல்லாம் வீணாகச் சிறைப்படுத்தி வைப்பதனால் நமக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை,’ என்று தமக்குள்ளே நிச்சயித்து, அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் இனித் தடையில்லாமல் சுகமாய் உங்கள் தேசத்துக்குப் போகலாம்’ என்று புகழேந்தியார் ஒருவர் தவிர இதரர்களை அனுப்பிவிட்டார். அவர்களனைவரும், ‘இதுவரையில் நம்மைப் பிடித்திருந்த பாழ்ஞ்சனியானது புண்ணியாத்துமாவாகிய புகழேந்திப் புலவராலே இன்றோடே நிவாரணமாயிற்று! நமக்காகச் சகாயப்பட்ட அவருக்கு வந்த விபத்து பகவானுடைய அனுக்கிரகத்தாற் சூரியனைக் கண்ட பனிபோலச் சீக்கிரம் நிவர்த்தியாக வேண்டும்!’ என்று கடவுளை ஸ்துதி பண்ணிக்கொண்டு போனார்கள்.

புகழேந்திப்புலவர் யாதப்பிரகாரம் கிரகசாரம் போதாமையாற் சிறையிருப்பிலேயே இருந்தார். வெகுநாள் சென்றும் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசனுக்கும் புத்தி பிறக்கவில்லை. இப்படியிருக்கையில், அதை அரசனுடைய தேவி அறிந்து, ‘நம்முடைய பிதாவின் சம்ஸ்தான வித்துவானை ஒட்டக்கூத்தர் சிறைப்படுத்தியிருக்கின்றார்! அவருடைய அபிமதப்படி நம் மகாராஜாவும் நெடுநாளாகியும் அவரைச் சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யாமலிருக்கின்றார்! இதென்ன கோரம்! கேள்வி முறையில்லையா?’ என மன வருத்தப்பட்டுக்கொண்டிருந்து, ஒருநாள் சயனக்கிருகத்திற்கு ராஜாவரும் குறிப்பறிந்து, ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்,’ என்று வீட்டு வாயிற்கதவைச் சாத்தித் தாழ்பூட்டி, அரசனை உள்ளேபிரவேசிக்கவொட்டாமல் தடைசெய்தாள். அது கண்டு குலோத்துங்கன்,

களப வண்டலிடு கனக கொங்கைமிசை
      நிலவெ ழுந்துகனல் சொரியுமென்
றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும்
      அரிவை மீர்!கடைகள் திறமினோ!

-என்றும்,

சூதள வளவெனு மிளமுலை
      துடியள வளவெனு நுண்ணிடை
காதள வளவெனு மதர்விழிக்
      கடலமுத தனையவர்1 திறமினோ!

-என்றும் கலிங்கத்துப்பரணியில் சொல்லிய வண்ணம் ‘கடைதிறக்க வேண்டும்,’ என்று பற்பல விதத்திலும் இதஞ் சொல்லியும் திறவாததனால் தொன்றுதொட்டு அரசர்களுக்கும் ராஜமகிஷிக்கும் ஊடல் நிகழும் பொழுதெல்லாம் அவர்கள் புலவர்களைக்கொண்டு தணிப்பிக்கின்ற சம்பிரதாயப்படி ஒட்டக்கூத்தரை அழைத்துத் தன் பத்தினியின் ஊடலைத் தணித்துக் கதவைத்திறப்பிக்கும்படி அனுப்பினான். அவர் போய்,

மாதர்க் கிதங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு
நாதர்க்கு நீதியோ டாசாரங் கல்வி நயந்தவர்க்குக்
கோதற்ற வாசகம் பொய்க்குப்பொய் கோளுக்குக் கோளறிவில்
ஆதற்கி ரட்டிப் பறிவுடை யோர்செய்யு மாண்மைகளே!

-என்பதனால், இதமாய்ப் பேசவேண்டுமென்று நினையாமல், ‘தாமரைமலரில் வசிக்கின்ற தேனைப்போல இனிக்கும் நயவசனத்தையுடைய இலக்குமி போல்வாய்! நீ கதவைத் திறந்துவிடு; திறவாதிருந்தாலோ, கோடையிடி இடித்தது போலப் பகைவர் நெஞ்சம் துணுக்குறும்படி புறங்கொடாமற் போர்செய்து வெல்கின்ற சுத்தவீரனும், உன் பிராணநாதனுமாகிய சோழராஜனென்னும் சூரியகுலத்தரசன் வாசல் தேடி வந்தால், அப்பொழுது சூரியனைக் காணாமல் முகுளித்த தாமரை அச்சூரியன் உதயமாகக்கண்ட மாத்திரத்தில் தன்னியல்பாய் விகசிக்கிறது போல உனக்கொருவர் இதஞ்சொல்லாமலே தனக்குத் தானே விரல்களாகிய இதழ்களையுடைய உன் கையாகிய தாமரையானது திறந்துவிடப் போகின்றது! அதைக்குறித்து நானினியுன்னைப் பிரார்த்திக்க வேண்டிய நிமித்தமென்னை?’ என்கிற கருத்தைக் கொண்டு,

நானே யினியுன்னை வேண்டுவ தில்லை; நளினமலர்த்
தேனே! கபாடந் திறந்திடு வாய்;திற வாவிடிலோ,
வானே றனைய விரவிகு லாதிபன் வாசல்வந்தால்
தானே திறக்குநின் கையித ழாகிய தாமரையே!

- என்று மிகவும் கடுமையான ஒரு பாடலைச் சொன்ன மாத்திரத்தில், அஃது, ‘அசுணப்பறவையின் செவியிலே பறையறைந்தது’ போலக் கர்ணகடூரமாயிருந்தது கண்டு, அவள் அதிக கோபங்கொண்டு, ‘ஊதுகிற சங்கு ஊதினால் விடிகிற பொழுது விடிகிறது,’ என்பதாக எண்ணி, ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்,’ என்று மற்றொரு தாழ்ப்பாள் போட்டாள்.

அதையறிந்து ஒட்டக்கூத்தர், ‘இராணிக்குப் புகழேந்தியினிமித்தம் நம்மிடத்தில் வெறுப்புண்டாகி இப்படிச் செய்தமையால், ‘அன்பற்ற மாமியாருக்குக் கும்பிட்டாலுங் குற்றந்தான்’ என்பதாக, இனி நாம் என்ன சொன்னாலும் இதம் பிறக்கமாட்டாது,’ என்று அவ்விடத்தைவிட்டுச் சுவரினிடத்தில் விசையாய் வந்து தாக்கின பந்தானது அங்கிருந்து அதைத்துத்திரும்பினது போலப் பேசாமல் திரும்பிச் சோழனிடத்திற்கு வந்து, ‘எழுதுகிற எழுத்தாணி குளறுகிறது கண்டு கூர் மழுங்கத் தீட்டுமளவில் அஃது இரட்டைக்கூர் பட்டாற்போல, நான் பாடின பாட்டைக்கேட்டு, ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்,’என்பதாகப் பின்னுமொரு தாழ்ப்பாள் போடச் சம்பவித்தது’ என்று சொல்லக் குலோத்துங்கன், ‘நம்முடைய மனைவிக்கு ஊடல் நிகழ்ந்ததற்குக் காரணம் யாதொன்றும் தெரியவில்லையே! அவளுக்கு நாமென்ன குறை செய்தோம்! அவளிஷ்டப்படிக்கெல்லாம் நடத்தித்தானே வருகிறோம்! நமக்காகதவர் ஆரேனும் அவளுக்குத் துர்ப்போதனை செய்தாரென்று நினைப்போமானால், அப்படிப்பட்டவர் இங்கொருவருமில்லையே! அல்லது ஜன்மாந்திரத்தின் கர்மானுபவத்திலேதான் அவள் மனம் பேதித்ததோ! இஃதென்னை தவக்குறை! அபூர்வமாக ஒருவேளை நம்மிடத்தில் அவளுக்கு ஊடல் நிகழ்வது சகஜமே! அஃது ஆச்சரியமன்று! ஒட்டக்கூத்தர் அவளுக்கு என்ன கொடுமை செய்தார்?’ என்று தனக்குள்ளே பல விதத்திலும் தீர்க்காலோசனை பண்ணிப் பார்க்கும்பொழுது, ‘புகழேந்திப் புலவரை ஒட்டக்கூத்தர் சிறைப்படுத்தினமையால் அவர்மேல் அசூயையும், நாம் அவர் கருத்துக்கிணங்கி நின்று சிறை மீட்டமையால் நம்மேல் வெறுப்பும் விளைந்தன,’ என்று தெளிந்து, அந்த க்ஷணமே புகழேந்திப் புலவரைச் சிறைநீக்கி, ‘ஐயா, நீர் சென்று இராக்கினி கோபத்தை ஆற்றி, அவளைச் சமாதானப் படுத்தும்,’ என்று ஏவினான்.

அவர் அந்தப்புரத்துக்குப் போய்த் தமது வரவை அரசிக்கு அறிவிக்க, அவள் அவருக்குத் தன் உயிர்த்தோழியைக் கொண்டு ஆசனங்கொடுக்கச் சொல்லி மரியாதை செய்வித்தாள். அவர் அப்பொழுது ராஜமகிஷிக்குச் சீற்றமாறி மனவருத்தந் தணியும் பொருட்டு, மிகக் குளிர்ச்சியும் மிருதுவும் மதுரமும் நயமுமாய்த் தோன்றும்படி, ‘இரு பிளவாகப் பகிர்ந்த மெல்லிய ஒரு நூலின் பிளவுபோன்று நுண்ணிதாகிய சிற்றிடையையும், பொற்குழைகளை ஏந்திய செவியைத் தொடுகின்ற இணை விழிகளையுமுடைய தெய்வப்பெண் போல்வாய், ‘வானத்திற் பெய்யும் மழையினது வண்மை ஒரு கூறாம்! இவனது கைவண்மையோ அதற்கிரு கூறாம்,’ என்று யாவரும் அதிசயிக்கத்தக்க மிக்க வள்ளற்றன்மையும், அபிமானமாகிய ஆபரணத்தையுமுடைய சோழ மகாராஜா உன்னுடைய வாசலைத் தேடிவந்தால், அவர்மேல் என்ன குற்றமிருந்தாலும், அதையெல்லாம் பாராட்டுவது பெருமையா? அவரை வாயிலுக்குள் பிரவேசிக்க வொட்டாமல் தடுப்பது தர்மமா? உன்னைப் போலும் உயர் குடியிற் பிறந்த கற்புக்கணிகலமாகிய உத்தம ஸ்திரீகள் தம்முயிர்போலச் சிறந்த கணவர்கள் செய்த ஒருபிழை இருபிழைகளை க்ஷமிக்காமல், வன்மம் சாதிப்பார்களோ? தண்ணீருமல்லவோ மூன்று பிழை பொறுக்கின்றது.[1] நீ இவ்வொரு பிழை பொறுக்கலாகாதா? ‘குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை, என்று சொல்லப்படுகின்றதே! ஆதலால், இதைக் குறித்துச் சீற்றம் செய்யலாமா? ‘தீராக்கோபம் போராய் முடியாதா?’ இஃதென்னை, உனக்குத் தெரியாதோ? கடல் கொதித்தால் விளாவு நீரெங்கே? உன் சித்தமிரங்கி நீ கொண்ட கோபத்தை நீயே தணித்துக் கொள்ளவேண்டும்!’ என்னும் கருத்தை உள்ளமைத்து,

இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை ஏந்தியபொற்
குழையொன் றிரண்டு விழியணங் கே!கொண்ட கோபந்தணி!
மழையொன் றிரண்டுகை மானா பரணனின் வாயில்வந்தாற்
பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே?

-என்ற பாடலைச் சொன்ன மாத்திரத்தில், படம் விரித்தாடுகின்ற பாம்பின்மேல் மாந்திரிகன் திருநீற்றை மந்திரித்துப் போட்டவுடனே அது படமொடுங்கி உக்கிரமாறினது போல ராஜமகிஷியின் கோபமானது தணிந்து சாந்தமாயிற்று. சோழமகாராஜன் அஃதறிந்து ‘படைமுகத்திலும் அறிமுகம் வேண்டும்,’ என்பதற்கிசையப் புகழேந்திப் புலவர் தன் தந்தையாரின் சம்ஸ்தானது வித்துவானென்கின்ற தாட்சணியத்தாலல்லவோ ராக்கினிக்கு நீங்காத ஊடல் நீங்கியது’ என்று அப்புலவர்மேல் மிகவும் சந்தோஷப்பட்டு அன்று முதல் ஒரு குறையுமில்லாமல் அவரைப் பரிபாலித்து வந்தான்.

12. ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது முற்றும்.

தொகு

பார்க்க:

தொகு

விநோதரசமஞ்சரி

11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது

13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது

  1. தண்ணீர் மூன்று பிழை பொறுத்தலாவது, குளத்திலாவது கிணற்றிலாவது விழுந்து அமிழ்ந்தவரை அந்நீர் மூன்றுமுறை மேலே கிளம்பச் செய்தலாம்.