விநோதரசமஞ்சரி/14.காளமேகப்புலவர் சரித்திரம்

விநோத ரச மஞ்சரி

தொகு

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

தொகு

திருக்குடைந்தையிற் பிறந்து வளர்ந்த வடமனாகிய பிராமணனொருவன், ஸ்ரீரங்கத்திற் பெருமாள் கோயிற் சுயம்பாகியாகிப் பரிசாரகம் செய்து கொண்டிருக்கையில், திருவானைக்காவிலுள்ள சம்புகேசுவரர் கோவில் தாசி ஒருத்தி, மோகனாங்கி என்னும் பெயருடையவள், அதிக அழகும் ஆடல் பாடல்களில் திறமுமுடையவளாய் இருந்ததனால், இவன் அவளுடைய மோகவலையிற் சிக்கித் தனக்கவள் இணங்கும்பொருட்டுப் பெருமாள் பிரசாதம் முதலானவைகளும் அவளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்து, அவளோடு சம்பந்தப்பட்டிருந்தான்.

அப்படியிருக்குமளவில், மார்கழி மாதத்திற் சம்புகேசுரர் சந்நிதியில், மேற்படி தாசிக்குத் திருவெம்பாவை பாடும் முறை வந்த பொழுது, ‘உன்கையிற் பிள்ளை’ என்னும் பாட்டுப் பாடுகையில், அதில் ‘எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க!’ என்ற தொடரை அவள் வாயினாற் சொல்லைத் தலை குனிந்து கொண்டதைப் பார்த்து, அவளுடனே கூடவிருந்த மற்றத் தாசிகளெல்லாம் புன்சிரிப்புச் சிரித்துத் தங்களுக்குள்ளே, ‘இவள் சிவன் கோவில் தாசியாயிருந்தும், பெருமாள் கோயிற் சுயம்பாகியுடனே சம்பந்தப்படுகிறாளே! இஃதென்னை! படிக்கிறது திருவாசகம்; இடிக்கிறது சிவன்கோவில்,’ என்பதாக வாயினாற் பேசுகிறதொன்று நடக்கிறதொன்றாயிருக்கிறதே!’ என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள்.

அஃது அவளுக்கு மார்பில் தைத்து முதுகில் உருவினது போல வருத்தத்தை விளைவித்ததனால், அன்றிரவு அவ்வைஷ்ணவன் வருந்தருணத்தில் தெருக்கதவைச் சார்த்தி, ‘உள்ளே வர வேண்டா,’ என்று தடுக்க, அவன் வாயிலுக்கு வெளியில் நின்றபடி, ‘என்ன நிமித்தத்தால் இன்றைக்கு என்னைத் தடைசெய்கிறாய்?’ என, மோகனாங்கி ‘நீர் விஷ்ணு அடியார் நான் சிவனடியாள், ஆகையால், உம் சம்பந்தம் எனக்குத் தகாது’ என, அவன், ‘அந்தாமரை அன்னமே நின்னை யானகன்று ஆற்றுவனோ!’ என்றபடி, உன்னை நான் ஒரு பொழுதாயினும் விட்டுப்பிரிந்து சகிப்பேனோ! சகிக்க மாட்டேன்! ஆதலால், உன் தலை வாயிலிலேயே நான்றுகொண்டு என் பிராணனை விட்டு விடுகின்றேன்!’ என்றான். அவள், ‘இஃதேது! பழிவந்து சம்பவிக்கிறதாயிருக்கிறதே! என்று நினைத்து, ‘நல்லது! நான் வேண்டுமென்பது உமக்கு ஆவசியகமாயிருந்தால், நீர் சிவதீக்ஷை பண்ணிக்கொண்டு சைவரானால், உம்மிஷ்டப்படி நடக்கிறேன்!’ என்று சொல்ல, அவன் காம்பபேய் கொண்டவனாகையால், ‘பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? என்ற விதமாய் அவளுறவைக் கைவிட மாட்டாமல், ‘நீ சொன்னவண்ணம் சைவத்தை அனுசரிக்கிறேன்’ என்று ஸ்ரீரங்கத்தைவிட்டுச் சம்புகேசுவரத்திற்கு வந்து, சிவதீக்ஷை பண்ணிக்கொண்டு, அகிலாண்டவல்லி கோயிற் பரிசாரகனாகி, தனக்கு அவ்விடத்தில் கிடைக்கும்படி வரும்படிகளில் அவளுக்குச் சிறிது கொடுத்து, மிகுந்ததைத் தன் ஜீவனத்திற்கு வைத்து அனுபவித்துக் கொண்டு வந்தான்.

அந்நாளிற் சம்புகேசுவரத்தில் ஒரு சிவப்பிராமணன் தனக்கு வித்தையிற் பூரண பாண்டித்தியம் உண்டாக வேண்டும் என்ற நியமத்துடனே திரிபுரை சக்கரம் ஸ்தாபித்து, அதில் அத்தேவதைக்குரிய மந்திர பீஜாக்ஷரத்தைப் பிரணவ நமக சகிதமாய் வரைந்து, உருச்செபித்து, நெடுநாளாக உபாசித்துக் கொண்டிருந்தான். ஓரிராத்திரி நடுச்சாமத்தில், அகிலாண்டநாயகி, அழகான ஒரு சிறு பெண்போல வடிவெடுத்து, வெள்ளை வஸ்திரம் உடுத்து, வாய்நிறையத் தாம்பூலம் தரித்துக்கொண்டு, உபாசகன் கண்ணுக்கெதிரே சென்று, ‘உன் வாயைத்திற,’ என்று அந்தத் தாம்பூலத்தை உமிழப் போமளவில், அவன் நிர்ப்பாகியனாகையால், அவளை மகாதேவி என்று அறியாமல், ‘ஆரடி எச்சில் தம்பலத்தை என் வாயிலே துப்ப வருகிறாய்! உனக்குப் பைத்தியம் பிடித்ததோ? அப்புறம் எட்டி நில்லடி!’ என்று கடிந்துரைத்தான்.

அம்மட்டில் அகிலாண்டநாயகி அவனைவிட்டுத் திரும்பி வருகையில், மோகனாங்கி அன்றிராத்திரி கோவிற் குடவரிசைக்கு வந்திருந்ததறிந்து, பரிசாரகன் அவளுடனே ‘நீவீட்டுக்குப் போம்பொழுது என்னைவந்து அழை; நாமிருவரும் கூடிப்போவோம்,’ என்று அங்கொரு மண்டபத்திற் படுத்திருக்க, மோகனாங்கி குடவரிசையான பின்பு, பரிசாரகனைத் தேடிக்காணாமல், தான் மாத்திரம் வீட்டுக்குப் போய்விட்டாள்; ஸ்தானிகர் முதலானவர்களும் கோவிற்குச்சுப் போட்டுக்கொண்டு, தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குப் போனார்கள்; பரிசாரகன் விழித்துக்கொண்டு மோகனாங்கியைக் காணாமையாலும், கோவிற்கதவு பூட்டப்படிருந்ததனால் தான் வெளிப்படக் கூடாமையாலும், இருந்த ஸ்தானத்திலேயே நித்திரை பிடியாமல் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அவனை மேற்சொல்லிய தேவி பார்த்து வாயைத் திறக்கச் சொல்லி தன் வாயிலிருந்த பாக்குத் தம்பலத்தை உமிழ்ந்து, ‘இதைத் தின்றுவிடு,’ என்ன, அவன் மோகனாங்கி என்று நினைத்து, ‘இவளிஷ்டப்படி நடவாமற்போனால் இவளுக்குக் கோபமூளும், பிறகு நம் முகத்தைப் பார்க்கமாட்டாள், என்பதனாலும் தான் பூர்வ ஜன்மத்திற் செய்த புண்ணியத்தாலும் தடுக்காமல் உட்கொண்டான். அம்மை அவனுக்கு அன்று முதற் காளமேகமானது அமோகமாய் மழைபொழிவது போலத் தமிழில் ‘ஆசு’ முதலாகச் சொல்லப்படும் நால்வகைக் கவிகளும் ஆசுவதாட்டியமாய்ப் பாடும்சக்தி உண்டாகவும், அந்நாற்கவிகளிலும் யாராயினும் ஒருவர் எந்தச் சொல்லாவது, பொருளாவது, அடியாவது, தொடையாவது எடுத்துக்கொடுத்து, ‘இன்ன அலங்காரத்தில் இப்படித் தொடங்கி, இப்படி முடிக்கவேண்டும்,’ என்ற மாத்திரத்தில் மயங்கி இடர்ப்படாமல் அப்படியே விரைந்து பாடுகின்ற ஆசுகவித்திறம் விசேஷமாகச் சித்திக்கவும், அக்காரணத்தாற் காளமேகக்கவி என்னும் பெயர் உலகப் பிரசித்தமாக வாய்க்கவும் அனுக்கிரகித்து மறைந்து போனாள்.

அவள்போன அக்கணத்திலேயே. . .

தொகு

அவள்போன அக்கணத்திலேயே அவனுக்குக் கடல்மடை திறந்தாற்போலக் கவி பாடத்தக்க பிரபலமான வாக்குண்டாயிற்று. அதனால் அவன், ‘இப்பொழுது நமக்குப் பிரசன்னமானவள் அகிலாண்டவல்லிதான்!’என்று உணர்ந்து, அந்த மகாதேவியை ஸ்தௌத்தியம் பண்ணி, முதல் முதல் திருவானைக்கா உலா என்னும் ஒரு பிரபந்தம் பாடிப் பின்பு, சோழநாடு பாண்டிநாடு சேரநாடு முதலான பல நாடுகளுக்கும் போய், அங்கங்குள்ள பிரதானமாகிய தெய்வ ஸ்தலங்களைத் தரிசித்து, அந்தந்த மூர்த்திகள் மேல் ஸ்துதியாகவும், நிந்தா ஸ்துதியாகவும், மற்றும் அனேக விதமாகவும் பற்பல பாடல்கள் பாடிவரும்பொழுது, சுதை, கல், மரம், உலோகம் முதலானவைகள் சிற்பியினால் உருப்படுத்தப்பட்டபின், அவ்வவற்றிற்குரிய இயற்பெயர் மாறி வெவ்வேறு சிறப்புப் பெயர் உண்டானாற் போல, அகிலாண்டேஸ்வரி வரப்பிரசாதத்தால் முன்புள்ள பரிசாரகனென்னும் பெயர் மாறி, யாவரும் காளமேகப் புலவர் என்று சொல்லும்படி மேன்மையாகிய பெயர் எத்திசையிலும் வழங்கத் தலைப்பட்டது.

அக்காலத்திற் அவர் தரிசித்த ஸ்தலங்களிற் பாடிய பாடல்களிற்சில வருமாறு:

திருச்செங்காட்டில் உத்திராபதீசரைத் தரிசித்து எப்பொழுதும் ஒழுக்கத்துடனே நாட்டின் நடுவில் வாழ்ந்திருக்கும் நாதனாரே, நீரிப்பொழுது இந்தச் செங்காட்டில் வந்து ஒளிந்துகொண்டிருந்தால், முன்பு யமனையும் மன்மதனையும் சிறுத்தொண்டர் பிள்ளையையும் கொலைசெய்த பழியானது உம்மைவிட்டு நீங்கிப் போய்விடுமா? என்னுங் கருத்தமைத்து, நிந்தா ஸ்துதியாகப் பாடிய,

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரும்
பாலனையுங் கொன்ற பழிபோமோ - சீலமுடன்
நாட்டிலே வாழ்ந்திருக்கு நாதரே! நீர்திருச்செங்
காட்டிலே வந்திருந்தக் கால்?

-என்பதும், வைகாசி மாதத்திற் காஞ்சீபுரத்தில் வரதராஜர் கருடோற்சவங் கண்டு சேவிக்குமளவில், சுவர்ண கசிதமாகிய கருடனுடைய தேஜஸையும் அந்த வாகனத்தின் எழுந்தருளும் பெருமாளது திவ்விய மங்கள விக்கிரக விலக்ஷணத்தையும், அவ்வுற்சவ வைபவத்தையும் வியந்து நிந்தா ஸ்துதியாகப் பாடிய,

பெருமாளும் நல்ல பெருமாள், அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்திற் சும்மா விராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்!

-என்பதும், மற்றும் அப்பெருமாள் குதிரைநம்பிரான்மேல் எழுந்தருளும் பரிவேட்டை உற்சவம் சேவிக்கும் பொழுது, பரமாத்துமா ஜீவாத்துமாக்களுக்குள்ள நவவித சம்பந்தங்களில் ஒன்றாகிய பாரத்துரு பாரியா சம்பந்தத்தை உலகத்தாருக்கு வெளியிட வேண்டுமென்று கருதிப் புலவர் பெருமானானவர், தம்மையொரு பெண்ணாகப் பாவித்து, அப்பெண் சான்றோர் வணங்குகின்ற தேவர்களுக்கெல்லாம் முதன்மையாகிய தேவனும், அத்திகிரி என்னும் ஊரினையுடையவனுமாகிய வரதப்பெருமான் புரவிமேலேறித் திருவீதியெழுந்தருளி வரக்கண்டு மால்கொண்டு தன் அரையிலுடுத்த கலைசோர்ந்து காலின்கண் விழுந்ததென்று இரங்குவதாகப் பொருள் அமைத்துப் பாடிய,

எட்டொருமா வெண்காணி மீதே யிருந்தகலை
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே - சிட்டர்தொழுந்
தேவாதி தேவன் திருவத்தி யூருடையான்
மாவேறி வீதிவரக் கண்டு.

-என்பதும், ஏகாம்பர நாதரைத் தரிசிக்கையில், அங்குள்ள சிவப்பிராமணர்கள் அவரை அலட்சியமாக எண்ணி ‘இவன் கவி பாடுந்திறத்தை அறிவோம்!’ என்று இந்த ஸ்தலத்தில் ஆறு அற்புதமிருக்கின்றன; அவைகளை ஒரு வெண்பாவிற் பாடி முடித்துத்தர வேண்டும்’ என, அவர், ‘அவையெவை?’என, அவர்கள், ‘குமரக்கோட்டக்கீரை, செவ்விலிமேட்டுப் பாகற்காய், பருத்திக்குள நீர், செப்பு வாசற் காற்று, கம்பத்தடியிற்றவம், கருமாறிப் பாய்ச்சல் என்னும் இவைகளே! என்று சொல்ல, அவர், “முன்னே ‘அப்பா’ என்பதும், பின்னே ‘யார்க்குமினிது’ என்பதும், சேர்த்து, நீங்கள் இப்பொழுது சொன்னபடி சொல்லுங்கள் வெண்பாவாய் முடிந்திருக்கிறது’’ என, அவர்கள் அப்படியே சொல்லிப் பார்த்து அதிசயித்த,

அப்பா குமரகோட் டக்கீரை செவ்விலிமேட்
டுப்பாகற் காய்ப்பருத் திக்குளநீர் - செப்புவா
சற்காற்றுக் கம்பத் தடியிற் றவங்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது.

-என்பதும், பின்னும் அவர்கள், ‘முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் இவ்வெட்டிலக்கமும் வரும்படி இந்த ஏகாம்பர நாதர்மேல் ஒரு வெண்பாப் பாடவேண்டும்’ என்ன, அப்படியே அத்தொகைகள் வரத்தக்கதாக, அவர், ‘என்வாக்கே தடியூன்றிப் பிருங்கிரிஷி போல மூன்று காலால் நடவாததற்குமுன், மயிர் நரையாததற்கு முன், யமனைக்கண்டு உயிர் நடுங்காததற்குமுன், விக்கலெழ இருமாததற்குமுன், பெரிய மசான பூமிக்குப் போகாததற்குமுன், கச்சிப்பதியில் ஒரு மாமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கின்றவரை இளமைப்பருவமுள்ள இப்பொழுதே ஸ்துதி செய்,’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

முக்காலுக் கேகா முன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது.

-என்பதும்,

தில்லையிற் சிவபெருமானுடைய பிக்ஷாடன உற்சவம் தரிசிக்கையில், அவ்வுற்சவத்தில் முழக்கும் காளம் முதலிய வாத்தியவோசையிற் கேட்டு, சுவாமிக்கு முன்னே அலங்கரித்துச் செலுத்திவரும் யானை முதலியவைகளையும், சுவாமி முடிமேற் கவிக்கின்ற குடையும், பிடிக்கின்ற கொடியும் அசைகின்ற சாமரமுமாகிய ராஜாங்கத்திற்குரிய மற்றச் சின்னங்களையும் பார்த்து, ‘விஷசர்ப்பத்தை ஆபரணமாகப் பூண்ட தில்லை நாயகரே! தேவரீர் பிச்சையெடுத்துண்ணப் புறப்பட்டும், உமக்கு இந்த ஆடம்பரமெல்லாம் ஏன்? ‘பிச்சைக்காரனுக்கேது கொட்டு முழக்கு?’ என்ற பழமொழியும் கேட்டதில்லையே?’ என்னும் கருத்தமையப் பாடிய,

நச்சரவம் பூண்டதில்லை நாதரே! தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளமேன்? குஞ்சரமேன்? கார்க்கடல்போ லேமுழங்கு
மேளமேன்? ராசாங்க மேன்?

-என்பதும், மற்றும், ‘தென்புலியூரில் வசிக்கின்ற ஐயனே, நீ இப்படி ஏழையாயிருந்தால், ‘ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்,’ என்ற பழமொழிப்படி, உன் இளக்காரத்தைக் கண்டு கொண்ட பெண்டாட்டியானவள், வலாற்காரமாய்த் தாண்டித் தலைமேலேறாளா? ஒருவன் செருப்பாற் புடைக்கானா? ஒருவன் வாயிலே வந்தபடி ஏசானா? ஒருவன் வில்முறிய மண்டைமேல் போடானா? என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

தாண்டி யொருத்தி தலையின்மே லேறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ? - மீண்டொருவன்
வையானோ? வின்முறிய மாட்டானோ? தென்புலியூர்
ஐயாநீ யேழையா னால்.

என்பதும்,

பின்னும், ‘மேகமண்டலத்தை அளாவிய சோலை சூழ்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற அம்பலவாணரே! கல்லால் எறிந்த சாக்கிய நாயனாரும், வில்லால் மண்டை பிளக்கச் சாடிய விஜயனும், செருப்பாற் புடைத்த கண்ணப்பநாயனாரும், முதுகில் தழும்பெழப் பிரம்பாலடித்த பாண்டியனுமாகிய இவர்களெல்லாரொம் நல்லவர்களென்று திருவுளமிரங்கி இவர்களுக்குக் கிருபை பாலித்தும், உம்மை நிந்தையொன்றுஞ் சொல்லாமற் புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சித்த மன்மதனைக் கொலைசெய்ததும் ஏன்ன நிமித்தத்தால்? சொல்ல வேண்டும்,’ என்னுங் கருத்தை அடக்கிப் பாடிய,

செல்லாரும் பொழில்சூழும் புலியூரம் பலவாண தேவ னாரே!
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலுங் கடிந்து சாடும்
எல்லாரும் நல்லவரென் றிரங்கியருள் ஈந்ததென்ன? இகழ்ச்சி யொன்றும்
சொல்லாமல் மலரைக்கொண் டெறிந்தவனைக் கொன்றதென்ன? சொல்லு வீரே!

-என்பதும்,

நடேசரைத் தரிசிக்கையில், ‘திருவோடு கையிலேந்துகின்ற அம்பலவாணரானவர், தில்லைக் கோவிந்தன் என்னும் ஆயர் தலைவனிருக்க, மற்றும் பல ஆயர்கள் இரவும் பகலும் மாறாமற்காத்திருக்கத் தில்லை வனத்திற் புகுந்து ஆட்டைக் களவெடுத்தது என்னவுபாயம்? எனவும், ‘தில்லைக் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலங்கொண்டிருக்கவும், மற்றும் பல தேவர்கள் இரவும் பகலும் அகலாது நடன தரிசனத்திற்குக் காத்திருக்கவும், திருச்சிற்றம்பலவாணரானவர், தில்லையம்பலத்திற் பிரவேசித்து, நடனஞ் செய்வதற்குத் திருவடியைத் தூக்கியது என்ன உபாயம்?’ எனவும் சிலேடையாகப் பொருளமைத்துப் பாடிய,

கொங்குலவுந் தென்றில்லை கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கக் - கெங்கையிலே
ஓடெடுத்த அம்பலவ ரோங்குதில்லை யுட்புகுந்தே
ஆடெடுத்த தென்னவுபா யம்?

-என்பதும் அன்றியும்,

தில்லைப்பதியில் வாழும் சிவபிரானே! ஊர்களிலுள்ள ஆட்டுக்குச் சாதாரணமாக நாலு காலிருக்கின்றன; உன்னுடைய ஆட்டுக்கு மாத்திரம் இரண்டேகால் இருக்கின்றன; இரண்டு காலிருந்தாலும், இவ்வாட்டின்மேல் வெகு காலமாகக் கண் வைத்திருக்கின்ற அந்தப் புலியானது, இந்த ஆட்டை விட்டுப் போமோ? சொல்,’ என்னுங் கருத்தை அமைத்துப் பாடிய,

நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகால் ஐயாநின்
ஆட்டுக் கிரண்டுகால் ஆனாலும் - நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனேஇவ் வாட்டைவிட்டுப்
போமோசொல் லாயப் புலி?

-என்பதும்,

தில்லை மூவாயிரவிற் சிலர். . .

தொகு

தில்லை மூவாயிரவரிற் சிலர், ‘நடேசர் கையிலேந்திய மானானது அவர் திருமுகத்திற்கு நேராகத் தன்முகத்தையும், முன்னங்கால்களையும் மேலே தூக்கி நிற்பதற்குக் காரணம் கற்பித்து ஒரு வெண்பாவாய்ப் பாடவேண்டும்,’ என்ன, அவர், ‘அன்னப்பறவைகள் வயல்களில் சஞ்சரித்துத் தாமரை மலர்களில் தங்குகின்ற தில்லைப்பதியில் எழுந்தருளியுள்ள நடேசனது கைக்கமலத்திலிருக்கும் மான் கன்றானது, அவ்விறைவனது பொன்போலும் ஜடா மகுடத்தில் அணிந்த அறுகம்புல்லை மேய்ந்து, அங்குள்ள கங்கா ஜலத்தைக் குடிக்கும்படி தன் மனத்தில் இச்சையானது அதிகரிக்க, அங்ஙனம் தாவிப் பாய்கின்றது,’ என்னுங் கருத்தை அமைத்துப் பாடிய,

பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்னெஞ் சுவகையுறத் தாவுமே - அன்னங்கள்
செங்கமலத் துற்றுலவுந் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்றமான் கன்று.

-என்பதும்,

மற்றுமவர்கள், இத்தலத்திலுள்ள ஞானசபை, கனகசபை, நர்த்தசபை, ஆனந்தக்கூபம், திருமூலட்டானம்,, பேரம்பலம், பஞ்சாவரணம், நாற்கோபுரம், பொற்கம்பம், மண்டபம், சிவகங்கை இவைகளை ஒரு வெண்பாவாக அமைக்க வேண்டும்’ என்ன, புலவர் சிகாமணியானவர், ‘நான் வேறே அமைக்கவும் வேண்டுமோ? இப்போது சொன்னவைகளைச் சொன்ன முறைப்படி நீங்களே சீர் தளை வகுத்து இசைத்துப் பார்த்தால் வெண்பாவாய் முடிந்திருக்கலாம்,’ என்ன, இவர்கள் அவர் சொற்படி செய்து அவ்வாறே அமைந்திருக்கக் கண்ட,

ஞான சபைக னகசபை நர்த்தசபை
ஆனந்தக் கூபந் திருமூலட் - டானம்பே
ரம்பலம் பஞ்சா வரணநாற் கோபுரம்பொற்
கம்பமண் டபஞ்சிவங் கை.

-என்பதும், சிவகாமவல்லியைத் தரிசித்தபொழுது, ‘மாட்டுக்கோன் தங்கையானவள் வடமதுரையை விட்டுத் தில்லைவனத்திற்கு வந்து ஆட்டுக்கோனொருவனுக்குப் பெண்டாகி வாழ்க்கைப்பட்டு, வெளிப்பட்டோடுகின்ற குட்டிகளைப் பட்டிக்குள் மறித்துக் கொண்டு வந்து விடுவதற்கு ஒரு பிள்ளையும் பெற்றுச் சிற்றிடையாகிவிட்டாள், என் செவியே, நீ இந்தச் செய்தியைக் கேள்விப்படவில்லையோ? என் கண்ணே நீயாயினும் இதைப் பார்ப்பாயாக,’ என்னுங் கருத்தையமைத்துப் பாடிய,

மாட்டுக்கோன் றங்கை மதுரைவிட்டுத் தில்லைவனத்
தாட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் கேட்டிலையோ?
குட்டி மறிக்கவொரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டுமணிச் சிற்றிடைச்சி காண்.

-என்பதும்,

திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீசரைத் தரிசிக்குமளவில், ‘பெருமை தங்கிய திருக்கழுக்குன்றத்தில் வசிக்கும் சிவனாரே, நீர் ஆதி தொடங்கி வெகு காலமாக அவலமான அல்லற்பிழைப்பே பிழைத்துவிட்டீர்! பகைவராகிய முப்புரத்தாரை நேரிற் கண்டவிடத்தில் வில்லைக் கையிற்பிடித்து அம்பினால் எய்து வீழ்த்தமாட்டாமல், உம்முடைய வீரம் கூத்தாடிச் சிலம்பம்போல வியர்த்தமாம்படி பல்லை இளித்துக் கொண்டீரே! இவ்வளவுதானா உமது படைத்திறம்?’ என்னும் பொருளை அமைத்துப் பாடிய,

தெருமுட்டப் பாளை சிதறவளர் பூகத்
தருமுட்டச் செய்வாளை தாவும் - திருமுட்டத்
தூரிலே கண்டே னொருபுதுமை பன்றிக்கு
மாரிலே கொம்பான வாறு.

- என்பதும்,

மற்றும், திருமுட்டமென்ற பதியிலெழுந்தருளிய பூவராக மூர்த்தியே, இடக்கரத்திற் பாஞ்சசன்னியத்தை ஏந்திய பெருமானே,உனது தாமரை போன்ற திருவடியை நாங்கள் மர்க்கட நியாயமாக ஆசிரயிக்கத் திறமையின்றி அனாதி தொட்டிது பரியந்தம் அஞ்ஞானத்தில் அமிழ்ந்து கிடந்தோம்; ஆதலால், எமக்கு வரக்கடவதாகிய கிலேசமெல்லாம் உனது நிரேதுக கிருபையினால் மார்ச்சால நியாயமாக ஒழித்தாளும்படிக்கு நீ எம்மெதிரே வருவாயாக!’ என்னும் பொருளை அமைத்துப்பாடிய,

முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தைக்
கிட்டத்துப் பின்றிக் கிடந்தோமே -தொட்ட
மருங்கிலே சங்கெடுத்த மாலே! எமக்கு
வருங்கிலே சங்கெடுக்க வா.

-என்பதும்,

திருவாலங்குடியில், தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கையில், ‘வடவிருக்ஷத்தின் அடியில் வசிப்பவனை- அமிர்த மர்த்தனஞ்செய்த காலத்தில் சுராசுரர்கள் அஞ்சியோடும்படி பாற்கடலில் தோன்றிய ஆலகாலமென்னும் விஷத்தை அவர்கள் உச்சீவிக்கும் பொருட்டு அமுதுசெய்தருளினவனை- ஆர் தாம் விஷபானம் பண்ணமாட்டானென்று வாய் கூசாமற் சொல்லுவார்? அந்தக் கொடு விஷத்தை அவன் பாணம் பண்ணாமல் நமக்கென்ன!’ என்று உபேக்ஷத்திருப்பானாகில், உலகத்தாரெல்லாம் ஒருமிக்க மண்ணின்மேல் மாண்டுபோக மாட்டார்களா?’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

ஆலங் குடியானை யாலால முண்டானை
ஆலங் குடியானென் றார்சொன்னார்? -ஆலம்
குடியானே யாயிற் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரா மண்மீதி லே?

-என்பதும்,

மாயூரத்தில் சுவாமி தரிசனஞ் செய்கையில், ‘தம் அன்பர்கள் விரும்பினவைகளையெல்லாம் வரையாது கொடுக்கும் உதாரகுணமுடையவரென்று சொல்லப்படும் மாயூரநாதருக்கு எத்தனைக் காலம் கைகொண்ட மட்டும் வாரிவாரி இறைத்தாலும் மாளாத இருப்பாக, மலையளவான வெள்ளியும், மலையளவான பொன்னுமிருக்கவும், மேலும் தெளிந்த அறிவினையுடைய உமாதேவியானவள் எப்பொழுதும் பக்கத்தில் வந்து, ‘உமக்கொரு குறைவுமில்லை; பயப்படவேண்டா, பயப்படவேண்டா,’ என்று கையமைத்து அபயதானம் பண்ணிக்கொண்டிருக்கவும் அவர் ஏன் விஷத்தையுண்டார்? ‘நமக்கு எவ்வளவு பொருள் இருந்தாலும், ‘நின்று தின்றால் குன்றும் மாளும்’ என்பது பற்றியோ? அல்லது, ‘நமது சொத்தெல்லாம் நம்மட்டிலன்றி வல்லார் கொள்ளையாய்ப் போய்விடுகிறதே?’ என்பது பற்றியோ என்று நினைப்போமென்றால், அப்படியெல்லாமல்ல; தம்மை நோக்கி முறையிட்ட தேவர்களை ரக்ஷிக்கும்பொருட்டே விஷபானம் பண்ணினார்,’ என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,

வள்ள லெனும்பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் - தெள்ளுமையாள்
அஞ்சலஞ்ச லென்றுதின மண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார்?

-என்பதும்,

வைத்தீசுரன் கோவிலிற் சுவாமி தரிசனஞ் செய்கையில், ‘ இந்தப் புள்ளிருக்கு வேளூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, முன்னாளில் மன்மதனை எரித்த அக்கினி உன் கண்ணிலிருக்கின்றது; தாருகாவனத்து ரிஷிகள் உன்னைக் கொல்லவிடுத்த அக்கினி உன்கையில் இருக்கின்றது; திரிபுரத்தைத் தகித்த அக்கினி உன் புன்னகையிலிருக்கின்றது; உனக்கு ‘அழலாடி’ என வழங்குங் காரணப்பெயருக்கேற்றபடி உன் திருமேனி முழுதும் அக்கினி சூழ்ந்திருக்கின்றது; இவ்வாறு அக்கினி மயமாயிருக்கின்ற உன்னை இந்தத் தையற்கலையுடுத்த பெண்ணனானவள் அச்சமின்றிச் சேர்ந்து எப்படித்தன் கலையுடன் தானும் வேகாமலிருக்கின்றாள்? இவளுக்கு அக்கினி ஸ்தம்ப வித்தை ஏதாவது தெரிந்திருக்கிறதோ? அதனால், அவ்வக்கினியை உஷ்ணிக்கவொட்டாமல் அடக்கி வைத்திருக்கின்றாளோ? எனக்குத் தெரியச் சொல்வாயாக,’ என்னுங்கருத்தை அமைத்துப் பாடிய,

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்புன் சிரிப்பிலே - தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வேளூரா! உன்னையிந்தத்
தையலாள் எப்படிச்சேர்ந் தாள்?

-என்பதும்,

திருவாரூரில் ஒரு விசேஷகாலத்திற் கோவிலுக்குப் போனபொழுது, அத்தருணத்திற் குருக்கள்மார் தியாகருக்கு வச்சிரபந்தம் சமர்ப்பித்துச் சாத்துபடி பண்ணிக்கொண்டிருந்ததனாற் சுவாமியைத் தரிசிப்பதற்குச் சற்று அவகாசப்பட்டது கண்டு, அவர், ‘அன்னப் பறவைகள் வசிக்கும் வயல்கள் சூழ்ந்த திருவாரூரில் வாழும் தியாகேசருக்கு, முற்காலத்தில் ஒப்பற்ற சிறுத்தொண்டர் புத்திரனைக்கொன்றும், மனுநீதி கண்ட சோழருடைய பிள்ளையைக் கொன்றும், பராக்கிரமமுடைய மன்மதனைக் கொன்றும், வைரமானது விட்டுப்போகாமல் இன்னமிருக்குமோ? என்ற மாத்திரத்தில் அந்த வச்சிரமாலை படீரென்று அறுந்து விழுந்தது. அஃதறிந்து, அவர்கள், ‘இவர் மகாத்துமா!’ என்று உள்நடுங்கி வந்து உபசரிக்க, இரண்டு துண்டாய் அறுந்து விழுந்த அவ்வச்சிரமாலை மறுபடி ஒன்றாய்ப் பொருந்திப் பிறந்தது போலாகும்படி, முன்பு, ‘இன்னம் வயிரமிருக்குமோ?’ என்று பாடினதைப் பின்பு ‘இன்னம் வயிரமிருக்குமே’ என்று திருப்பியமைத்துப் பாடிய,

அன்ன வயல்சூழு மாரூர்த் தியாகனார்க்
கின்னம் வயிர மிருக்குமே - முன்னமொரு
தொண்டர்மக னைக்கொன்றுஞ் சோழர்மக னைக்கொன்றும்
சண்டம தனைக்கொன்றுந் தான்.

-என்றும்,

மற்றும், திருவாரூரிற் பிரமோற்சவ தரிசனஞ்செய்கையில், ‘செம்மையாகிய கமலைப்பதியில் வாழ்கின்ற தியாகேசனாரே!, உம் மைத்துனரானவர் தமக்கு ஒரு மாடாயினுமில்லாதிருந்தும், ‘காரடமல்ல கண்கட்டு வித்தையுமல்ல,’ யதார்த்தமாகவே பூமி முழுவதும் உழுதுபயிர்செய்து உண்டு சுகித்திருக்கின்றார், உமக்கு ஒரு வெள்ளைமாடிருந்தும், உழுது உண்ணத் திறமையில்லாமல் விஷத்தையுண்டீர்; அன்றியும், நீர் பெற்ற பிள்ளைகளின் தாய்க்கும் ஜீவனார்த்தத்திற்கு இரண்டுபடி நெல்லுக்கு வழியில்லாமற் பிச்சையெடுத்தீர்; உமது பண்டோலம் இவ்வளவிலிருக்க, இப்பொழுது உமக்கு உற்சவக்கொண்டாட்டமும் உண்டாயிற்றோ!’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

ஒருமாடு மில்லாமல் மைத்துனனார் புவிமுழுது முழுதே யுண்டார்
நரைமாடொன் றுமக்கிருந்தும் உழுதுண்ண மாட்டாமல் நஞ்சை யுண்டீர்
இருநாழி நெல்லுக்கா இரண்டுபிள்ளைக் குந்தாய்க்கும் இரந்தீர், இன்று
திருநாளு மாயிற்றோ செங்கமலைப் பதிவாழுந் தியாக னாரே!

-என்பதும்,

பின்னும், வீதியில் தியாகராஜர் எழுந்தருளி நடனஞ் செய்யக்கண்டு தரிசிக்கையில், ‘திருமேனி முழுதும் புஷ்ப மணமும் புழுகு மணமும் வீசுகிற தியாகேசருக்குக் கையிலே பணமிருந்தால், அஃது அவரைச் சும்மா இருக்கவொட்டுமா? ‘பணமென்ன செய்யும்? பத்துவகை செய்யும்’ என்றபடி, அந்தப் பணக்கொழுப்பு மூலையிலிருந்தவரை முற்றத்திலிழுத்துவிட்டு ஆட்டிப்படைத்தால், அவரென்ன செய்வார்? நாணமின்றித் திருவாரூர் வீதியிலே பகிரங்கமாய் வந்துநின்று தம்முடைய இஷ்டர்களெல்லாம் பார்த்து நகைக்கத் தலைவிரி கோலமாகக் குதித்துக் கூத்தாட மாட்டாரா?’ என்னுங் கருத்தையமைத்துப் பாடிய,

ஆடாரோ பின்னையவ ரன்பரெலாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதாம் - தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசுந் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்?

-என்பதும்,

மேலும், ‘சுவாமி, உமக்கு உண்கிற சோறு வெல்லமாய் விட்டதனால், ஊருலகுமறியப் பிச்சைச் சோற்றுக்காக எங்கெங்கும் ஓடி உழன்று திரிந்தீர்! உம்மைப்பற்றி விசாரித்துப் பார்க்குமிடத்தில், நீர் நிலையாயிருப்பதற்குச் சுவாதீனபட்டதாக ஓரூராயினுமில்லை; இப்பொழுதிருக்கின்ற ஊரும் ஒற்றியாயிருக்கின்றது; அன்றியும், உமது இயற்கையான ஊரும்பேரும் உருவமும் இப்படிப்பட்டவைகளென்று யாவராலும், அறியப்படாதவைகளாயிருக்கின்றன; அங்ஙனமாயினும், ‘தரித்திரப் பட்டி மகன் தனபாலச் செட்டி’ என்று பெயர் பெற்றது போலத் தியாகராஜர் என்று பெரிய பெயர் ஒன்று மாத்திரம் வைத்துக்கொண்டீர், இனி நீர் ஆரூரிலிருப்பீர்? இங்குமங்குஞ் சும்மா அலையாமல், பொது ஸ்தானத்திற் போய்விடும்,’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

பாரூ ரறியப் பலிக்குழன் றீர்பற்றிப் பார்க்கிலுமக்
கோரூரு மில்லை, இருக்கவென் றாலுள்ள வூருமொற்றி,
பேரூ ரறியா, தியாகரென் றேபெரும் பேருங்கொண்டீர்
ஆரூரி லேயிருப் பீர்,இனிப் போய்விடும் அம்பலத்தே.

என்பதும்,

திருவண்ணாமலையில்...

தொகு

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரைத் தரிச்சிக்கையில், ‘கறி சமைத்த சட்டியில் பாதி உறுப்பிருக்க, அச்சட்டியிலிட்டு அள்ளிய அகப்பையில் பாதி உறுப்பிருக்க, எதிரே போட்ட இலையில் பரிமாறினபடி பாதி உறுப்பிருக்கப் பிராமண வேடங்கொண்டு வந்து நடித்த சோணேசரானவர், அந்நாளிற் சீராளா! என்றழைத்தபொழுது, அப்பிள்ளை கலகலவென்று சிரித்த வண்ணமாக எழுந்தெதிரே ஓடிவந்தது என்ன அற்புதம்? என் மனமே, நீ சொல்!’ என்னுங்கருத்தை அமைத்துப் பாடிய,

சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டவிலை யிற்பாதி யிட்டிருக்கத் - திட்டமுடன்
ஆடிவந்த சோணேசா வென்றழைத்த போதுபிள்ளை
ஓடிவந்த தென்னோ வுரை.

-என்பதும், மற்றும்,

உண்ணாமுலை நாயகி கோவில் ஸ்தானிகனாகிய சம்பந்தாண்டான் என்பவன், மயிர்வினைஞனிடத்தில் தன் தலைமழுங்க முண்டிதமாகச் சௌளம் பண்ணிக்கொள்ளும் சமயத்தில் காளமேகப் புலவரைக் கண்டு மரியாதை இல்லாமல் வித்தியாகர்வத்தினால், ‘இந்த ஸ்தலத்தின் பெயரும், என்பெயரும், நான் செய்வித்துக்கொள்ளும் சௌளகர்மமும் ஒரு வெண்பாவில் வரும்படி, ‘மன்’ என்றெடுத்து ‘மலுக்கு’ என்று முடியவேண்டும்,’ என்று சொன்னான். சொன்ன மாத்திரத்தில், அவன் தன்னை ஒரு பொருளாக மதித்துப் பாடச் சொன்னமையால், அவனைப் பரிகசிப்பதே தகுதி என்று நினைத்து, அவன் சௌளனம் பண்ணிக்கொள்வதற்கு நிமித்தமும் கற்பித்துப் பாடிய,

மன்னு மருணகிரி வாழிசம்பந் தாண்டாற்குப்
பன்னு தலைச்சௌளம் பண்ணுவதேன் - மின்னின்
இளைத்தவிடை மாத ரிவன்குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு.

-என்பதும்,

ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தார்க்கும் சம்புகேசுரத்தார்க்கும் சமயத்துவேஷமுண்டாகி, இரு திறத்தாரும் கலகப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்களைச் சமாதானப்படுத்தும் பொருட்டுக் காளமேகப் புலவர், ஸ்ரீரங்கத்தாரும் திருவானைக்காவாரும், ‘எங்கள் மதம் உயர்ந்தது; உங்கள் மதம் தாழ்ந்தது,’ என்று ஓயாமல் யானை சேனைகளைக்கொண்டு ஆயுதச்சண்டை செய்வார் போல, வியர்த்தமாய் வாக்குச் சண்டை செய்வானேன்? சைவம் வைஷ்ணவமாகிய இவ்விரு சமயக் கொள்கையும் ‘ஏகமேவா பரப்பிரமம்,’ என்னும் அத்வைதம் போலன்றி, ஆத்துமா பரமாத்துமா இரண்டுமுண்டு என்றும், அவ்விரண்டும் ஒன்றற்கொன்று சமத்துவமுடையன அல்லவென்றும், அவ்விரண்டனுள் பரமாத்துமா ஆண்டானென்றும் ஜீவாத்துமா அடிமையென்றுஞ் சொல்லப்படும் விசிஷ்டாத்வைதமாய்க் கரதலாமலகம் போல விளங்கிநிற்கையால் இஃதென்னை ஆச்சரியம்! இந்த விவரம் தெரியாதா? இதுபற்றி இனி ஒருவரோடொருவர் ஆரவாரங்கள் பேசவேண்டா,’ என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,

சீரங்கத் தாருந் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன்? - ஓரங்கள்
வேண்டா,இ தென்ன? விவரந் தெரியாதா
ஆண்டானுந் தாதனுமா னால்?

-என்பதும்,

மதுரையிற் சுவாமி தரிசனம் செய்கையில், அங்குள்ள சிவப்பிராமணர்கள் அவரைப்பார்த்துச் சோமசுந்தரக் கடவுள் சந்நிதிக்கெதிரே கட்டிய கூட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போலக் கூவுகின்ற கிளியைச் சுட்டிக்காட்டி, ‘கின்னரி வாசிக்குங் கிளி’ என்பது ஈற்றடியாக வர, அதற்கேற்ப ஈற்றயலடியைத் திரித்து இந்தச் சொக்கநாதர் விஷயத்தில் ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் புலவர், ‘அக்காலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி என்னும் இம்மூவரும் பாடிய தேவாரப் பாடல்களைத் திருவுளமுவந்தருளினான் என்று சொல்லும் பான்மையையுடைய பரமசிவன், நான்மாடக்கூடலில் அறுபத்து நான்கு திருவிளையாடலைச் செய்தான் என்றும், தனது பரம சாமர்த்தியத்தை விளக்கிக் காட்டிய நரியாகிய பரிக்கு மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, இடபகதியாகிய ஐவகை நடையினைக் கற்பித்தான் என்றும், கிளியானது கின்னரி வாசியா நின்றது,’ என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,

ஆடல்புரிந் தானென்னும் அந்நாளிலே மூவர்
பாடலுவந் தானென்ற பான்மையான் - கூடலிலே
நன்னரிவா சிக்கு நடைபயிற்றி னானென்றும்
கின்னரிவா சிக்குங் கிளி.

-என்பதும், மற்றும்

‘பெண்களே, நீங்கள் இவ்வதிசயத்தைப் பார்த்தீர்களா? இம்மதுரையில் எழுந்தருளிய கடம்பவன நாதரானவர் எப்பொழுதும் பெண்ணைத் தலைமேலே சுமந்து திரிகின்ற பைத்தியம் பிடித்தவர்; அன்றியும், எட்டுத் திக்குக்கும் சிலாக்கியமாயிருக்கின்ற தங்கைமேலே நெருப்பை வாரியிட்டார்; அக்காளை நிறுத்தி அவள்மேலேறினார்; ஆதலால், பித்தர்க்குத் தங்குணம் நூலினும் செம்மையென்பது மெய்ப்பட்டிருக்கின்றது,’ என்னுங் கருத்தை அமைத்துப் பாடிய,

கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை யேறினா ராம்.

-என்பதும்,

அங்கயற்கண்ணம்மையைத் தரிசிக்கும்பொழுது, ‘இந்த உலகத்தில் நான் நல்லபுதுமையொன்று கண்டேன்! அதைச் சொல்லவா? சொல்லவா? சொல்லவா? சொன்னாற் பெண் பாவமாகிறதே! ஆணுக்கவக்கேடு செய்தாலும், பெண்ணுக்குப் பிழைசொல்லலாகாதே, ஆதலால் அடக்கவேண்டும் அல்லவோ? எப்படிச் சொல்லுகிறதென்றால், மலிந்தாற் கடைக்கு வரும் என்பதனாலும், ‘அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது’ என்பதனாலும், அடக்குவதனாற் பயனில்லை, சொல்லத்தான் வேண்டும்; அஃதென்னையெனில், ‘செல்வம் நிறைந்த மதுரைப்பதியிலுள்ள மீனாக்ஷியானவள், ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது’ என்பதையும் எண்ணாமல், பேதைமைக் குணத்தால், பாண்டியனிடத்திற் குதிரை விற்கவந்தவனைச் சேர்ந்து, விக்கினேச்சுரனென்னும் யானைக்கன்றைப் பெற்றாள்,’ என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,

நல்ல தொருபுதுமை நானிலத் திற்கண்டேன்
சொல்லவா சொல்லவா சொல்லவா? - செல்வ
மதுரைவிக்கி னேசுரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவற் கூடி.

-என்பதும்,

ஒருகாலத்தில் தமக்கு வியாதி கண்டு அது மணிமந்திர ஔஷதங்களால் நிவர்த்தியாகாமையால், வைத்தீசுவரன் கோவில் மண்ணையெடுத்து, ‘இது வினைதீர்த்தான் மருந்து!’ என்று உட்கொண்டவுடனே பரிகாரமாகுமென்பதை உணர்ந்து, அத்தலத்திற்கு வந்து, அவ்வாறு செய்து சொஸ்தமடைந்த பொழுது, காளமேகப்புலவர், ‘தொண்டர்களுக்குப் பகுத்திட்டு அவர்களுடன் தாமுமொருவராயிருந்து விருந்துண்டருளிய புள்ளிருக்கு வேளூரில் வசிக்கும் எமது நாதரானவர், உலகத்திற் பிரபல வைத்தியராயேற்பட்டிருந்து, எவர்க்கும் கண்ட வியாதிகளையெல்லாம் நாள்தோறும் தப்பாமல் தீர்த்து வருகின்றார், பார்த்தீர்களா! அதற்காக அவர் கொடுக்கும் மருந்தை ஆராய்ந்து பார்த்தால், அஃதென்னை கட்டுச்சரக்கா, காட்டுச்சரக்கா? கடைச்சரக்கா? அது ஒன்றுமன்று; சுத்த மண்தான்; ஆனாலும், அவருக்குக் கைவாசியுண்டு போலக் காண்கிறது?’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாமிருந்து
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ - தொண்டர்
விருந்தைப்பாத் துண்டருளும் வேளூரெந் நாதர்
மருந்தைப்பார்த் தாற்சுத்த மண்.

-என்பதும்,

திருநாகை என்னும் ஸ்தலத்திற் சிவதரிசனஞ் செய்யப்போனவிடத்தில், திறமான சங்கதப் பயிற்சியும் சாரீர வளமுமில்லாத ஒரு தேவடியாள் தம்புரு மீட்டிக் குரலெடுத்துப் பாடக் கேட்டபொழுது, அதிகர்ணகடூரமாய்ச் சகிக்கக்கூடாமலிருந்த நிமித்தம் தமக்கு வெறுப்புண்டாகி, யாவரும் வாழ்த்தாநின்ற நாகைப்பதியிலிருக்கும் அழகுள்ள, தேவடியாளானவள், தன் பாழ்த்த குரலை எடுத்துப் பாடினாள்; பாடக்கேட்டவுடன், நேற்றுக் கழுதையைக் காணாமல் ஊரெங்குந்தேடி அலைந்துகொண்டிருந்த வண்ணானானவன், ‘என் கழுதையைக் கண்டேன்!’ என்று சந்தோஷித்தோடே கட்டியிழுத்துப் போம்படி வைக்கோற்பழுதையைக் கையிலெடுத்துக்கொண்டு சீக்கிரமாக ஓடிவந்தான் பார்!’ என்னுங் கருத்தையமைத்துப் பாடிய,

வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டே னென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார்.

-என்பதும்,

திருவிடைமருதூர் என்ற ஸ்தலத்தில் சிவதரிசனம் செய்யுமளவில், ‘குளிர்ச்சி தங்கிய தேன் பொருந்திய சோலை சூழ்ந்த மருதூரிலெழுந்தருளியிருப்பவரே! அந்த நாளிற் கண்ணப்ப நாயனார் தமது வாயில் வைத்துத் தின்று சுவை பார்த்தூட்டிய மானிறைச்சி முதலிய கறியும், சிறுத்தொண்ட நாயனார் அன்பிற் பாகமாகச் சமைத்திட்ட பிள்ளைக்கறியும், உமக்குப் போதாவோ? உமது வயிறென்ன சானோ, சமுத்திரமோ? நீர் பன்றிக்குட்டியையும் ஏதுக்கு நெருப்பிலிட்டுத் தீர்த்தீர்? சொல்லுவீராக,’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

கண்ண னிடுங்கறியுங் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாவோ? - தண்ணிய
மட்டையையுஞ் சோலை மருதீச ரே!பன்றிக்
குட்டியையேன் தீத்தீர் குறித்து@.

[@.பன்றிக்குட்டி என்பது, இங்கு வராகவுருவெடுத்த திருமாலின் மகனாகிய மன்மதனைக் குறித்தது. மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த கதையைக் குறித்தார் காளமேகப்புலவர்.] -என்பதும்,

திருத்துருத்தி என்னும் ஸ்தலத்தில் சுவாமியைத் தரிசிக்கையில் அவ்விடத்திலுள்ள குருக்கள்மார், ‘எங்கள் பரமசிவனுடைய ஆபரணத்தை விசேஷித்து ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ என்ன, இவர், ‘மலர்க்காவின் இடங்களிலும் வயலிடங்களிலும் முத்துகளார்ந்த திருத்துருத்தி என்கின்ற பெரிய நகரத்தில் வசிக்கும் பொய்ம்மையில்லாத சத்திய ஸ்வரூபராகிய சிவபிரானானவர் தமது திருமேனியில் அணியும் பூஷணமோ, பிரசண்ட மாருதத்தையும் பக்ஷணம் பண்ணும்; பாற்கடலைக் கடையும் கயிறுமாகும்; திருமாலுண்ட பூமியையும் தன் தலையிலேந்தி வாழாநிற்கும்’ என்னும் கருத்தை யமைத்துப் பாடிய,

காலயிலும் வேலை கடையக் கயிறாகும்
மாலயிலும் பூமுடித்து வாழுமே சோலைநெறி
செய்யிலா ரம்பயிலுஞ் சேந்துருத்தி மாநகர்வாழ்
பொய்யிலா மெய்யரிடும் பூண்.

-என்பதும்,

மற்றும் சிலர், புங்கங்...

தொகு

மற்றும் சிலர், ‘புங்கங்கொம் பங்கிங்கொன்பது- புளியங்கொம் பங்கிங்கொன்பது - வெட்டி நறுக்கிய வெள்வேலங் கொம்பிங்கிங்கொன்பது - என்னும் இவைகளை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடவேண்டும்,’ என இவர் ‘எங்கள் மடத்துக்கு எரி கரும்பு கொள்வது’ என்பதை முதலில் எழுவாயாகச் சேர்த்து நீங்கள் சொன்னவாறே சொல்லிப் பாருங்கள், வெண்பாவாய் முடிந்திருக்கின்றது,’ என்ன அவர்கள் அப்படிச் சொல்லிக்கண்ட,

எங்கள் மடத்துக் கெரிகரும்பு கொள்வதுபுங்
கங்கொம்பங் கிங்கொன் பதுபுளி -யங்கொம்பங்
கிங்கொன் பதுவெட் டிநறுக் கியவென்வே
லங்கொம்பங் கிங்கொன் பது.

-என்பதும்,

சதுர்த்தி புண்ணியகாலத்தில் விக்கினேச்சுரர் மூஷிக வாகனாரூடராய் வீதியில் எழுந்தருளி வரக்கண்டு தரிசிக்கையில், ‘கன்னமுத முதலிய மும்மதங்களையுடைய வலிமை மிகுந்த பெரிய மலைபோலும் யானையை அற்பஜந்துவாகிய ஓர் எலியானது இழுத்துக்கொண்டு போகின்றதே! ஐயோ! இதைக்குறித்துக் கேள்வி முறை இல்லையே! சிவனுடைய மழுவும், விஷ்ணுவினது சக்கரமும், பிரமனது தண்டமும் எங்கே போயின? அவைகளை ஆர் பறித்துக் கொண்டு போனார்கள்? என்னுங் கருத்தமைத்துப் பாடிய,

முப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ - வாய்ப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தே.

-என்பதும்,

சஷ்டியிற் சுப்பிரமணியானவர் தமது வலப்பக்கத்திற் சிவபெருமானும், அவர் பக்கத்தில் உமாதேவியும், இடப்பக்கத்தில் திருமாலும், அவர் பக்கத்தில் விநாயகமூர்த்தியும், வரிசையாய் வரும்படி, மகா சம்பிரமத்துடனே வீதியில் எழுந்தருளக் கண்டு தரிசித்தபொழுது, ‘தகப்பன், இரந்துண்டு ஜீவிப்பவன்; தன்னைப் பெற்ற தாய், மலைநீலி; தாயுடன் பிறந்த மாமன், உறியிலுள்ள வெண்ணெய் திருடி; சப்பைக் காலையுடைய அண்ணன், பெருவயிறன், இச்செய்தி பறைசாற்றியது போல லோகப் பிரசித்தமாயிருக்க, இந்த ஆறுமுகம் கடவுளுக்கு இவ்விடத்தில் இஃதென்னை பெருமை! என்னும் பொருளையமைத்துப் பாடிய,

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன், ஆறுமுகத் தானுக்கிங்
கென்ன பெருமை யிது!

-என்பதும்,

ஒரு சிவஸ்தலத்திற் சுவாமி வீதிபுறப்பாடாகி வரக்கண்டு தரிசிக்கும் பொழுது, அவ்விடத்திற் சிலர், ‘இந்தப் புறப்பாட்டைக் குறித்து ஒன்பது ஜாதிப்பெயர் வருவதாக ஒரு கலித்துறை பாடவேண்டும்,’ என, இவர், சரஸ்வதி நாயகன் வாழ்த்துதல் செய்ய, இடபம் சுமக்க, வைரவ மூர்த்தியும் சுப்பிரமணியக் கடவுளும் இந்திராணி கணவனும் போற்றுதல் செய்ய, பாற்கடலிற் பள்ளிகொள்ளும் திருமால் யாவர்க்கும் முன்னே செல்ல, திதிப்பாகிய வளைத்த கருப்பு வில்லையுடைய காமதேவன் தாழ்ந்து வணங்க, பெருமை தங்கிய மான் தோலை உடுத்து, ஜடாமகுடதாரியாகிய எங்கும் தட்டாத சிவபெருமான் விதிபுறப்பாடாய் எழுந்தருளியது அதிக விநோதமாயிருக்கிறது!’ என்னும் கருத்தையமைத்து, மேற்படியார் சொன்னவண்ணம் அவ்வொன்பது ஜாதிப் பெயரும் வரும்படி சிலேடையாகப் பாடிய,

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன் யெட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்செல்லத் தீங்கரும்பின்
கோணியன்# றாழக் கருமான் துகிலினைக் கொண்டுடுத்து
வேணிய னாகிய தட்டான்% புறப்பட்ட வேடிக்கையே!

[#கோணியன்-சணற்பையன்;]

-என்பதும்,

ஓரூரிற் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய விகடராமையன் என்னும் மாத்துவ பிராமணனொருவன், அப்பொழுதே விழுந்து சாகிறதாய் மிகவும் மெலிந்து திடுக்கென்று திடுக்கென்று தெனாலிராமன் வளர்த்த குதிரைபோல இருக்கின்ற ஒரு நாட்டுத் தட்டைப்% பிடித்து, அதன் முதுகிற் சமுக்காளச் சேணம் வைத்து, ‘வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற்புரி கடிவாளம்,’ என்ற பழமொழிப்படி கயிற்றுக் கடிவாளம் போட்டு, அக்கடிவாளத்தை இடக்கையிற் பிடித்து, வலக்கையிற் புளியமளார் கொண்டு அடித்து, இரண்டு கால்களினாலும் வயிற்றிலிடித்து நடத்த நடவாதது கண்டு, தன் அதிகாரத்தின் கீழிருக்கின்றவர்களைப் பார்த்து ‘இதை நடத்திக் கொண்டு போங்கள்,’ என்று உத்தரவு செய்ய, அவர்களிற் சிலர் முன்புறத்தில் வந்து கடிவாளத்தைத் தொட்டிழுக்க, சிலர் பின்புறத்திலிருந்து நெட்டித்தள்ள, அப்படியும் அது விசையாய்நடவாமல், மெள்ளமெள்ள அடிமேலடிவைத்து நடப்பதைக் காளமேகப்புலவர் பார்த்து, எப்பொழுதும் வாயோயாமல் வேதாத்திய்யனம் பண்ணுகின்ற விகடராமையன் என்பவன் ஏறிச் செல்லும் குதிரையானது, கடிவாளத்தைத் தொட்டு முன்பக்கத்திற் மூன்றுபெயர் வலித்துக்கொண்டு போக, பின்பக்கத்திலிருந்து இரண்டுபெயர் கையினால் நெட்டித்தள்ள, அந்த மட்டில் ஒரு மாதத்திற்குக் காதவழிக்குக் குறையாமல் விரைந்து போகின்றது!’ எனப் பரிகாசமாகப் பொருளமைத்துப் பாடிய, [%தட்டு-மட்டக்குதிரை]

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போங் காத வழி.

-என்பதும்,

சித்திரை மாதத்தில் ஓரூருக்குப் பிரயாணம் பண்ணிப் போகையில் வழி நடுவிலுள்ள திருச்செங்கோட்டுச் சத்திரத்தில் ஒருநாளிராத் தங்கியிருக்கும் பொழுது, காற்று வீசாமல் தமக்கு அதிக வெப்பமாயிருந்தது கண்டு காளமேகப் புலவர், ‘பத்தசிரோமணியாகிய சிறுத்தொண்டரே! நீர் நமக்காக அரிந்து கறி சமைத்த பிள்ளையை நம்முடனே கூட உண்ணுதற்கு அழைத்து வாரும்,’ என்று சொல்லி, அப்பிள்ளையின் வரவை எதிர்பார்த்திருந்த சிவபெருமானுடைய திருச்செங்கோடென்ற இந்த ஸ்தலத்தில் இஃதென்னை ஆச்சரியம்! காசி கங்கையைக் கமண்டலத்தில் முகந்து கையிலேந்திய அகஸ்திய முனிவனுடைய பொதியமலையிலிருந்து உண்டாகும் தென்றற் காற்றை, ஒற்றைக் கொம்பினை ஏந்திய விநாயகமூர்த்தியின் பிதாவாகிய பரமசிவன் பூஷணமாகப் பூண்ட சர்ப்பந்தான் இப்பொழுது உணவாக உட்கொண்டு விட்டதோ! எப்பொழுதும் இயங்குகின்ற காரணத்தாற் சதாகதி என்று பெயர்பெற்ற காற்று இயங்காததென்ன மாயம்?’ என்னும் கருத்தையமைத்துப் பாடிய,

அம்பேந்து கையா னவன்பதியி லைம்மா$வைக்
கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ - அன்பா!
அரிந்த மகவை யழைஎன்று சொல்லி
இருந்தவன்றன் செங்கோட்டி லே.

[$.ஐம்மா=கால்; இங்குக் காற்று எனும் பொருளில் வந்தது.$]

-என்பதுமாக, இந்தப்படிக் காளமேகப்புலவர் நவநவமாகக் கருத்தமைத்துக் கவிபாடி ஸ்தலதரிசனஞ் செய்து வருகையில், திருமலைராயன் பட்டணத்திற் கல்வியில் மிகச் சிறந்தவர்களென்று அவ்வரசன் வியந்து கொடுத்த தண்டிகைப் பரிசுபெற்ற புலவர் அறுபத்துநால்வரும், அவர்களுக்குத் தலைவனுமாகிய அதிமதுரகவி என்பவனும், தமிழில் தங்களுக்குச் சமானம் ஒருவருமில்லையென்று அகங்கரித்து, உலகத்திலுள்ள மற்றப் புலவர்களையெல்லாம் மதியாமற் பலவாறாக நிந்தித்து அவமானப்படுத்தி வருகிறார்களென்றும், அதற்குத் திருமலைராயனும் உடன்பட்டிருக்கிறானென்றும் கேள்விப்பட்டு, ‘வித்துவான்களாயிருப்பவர்கள் ஆராயினுமென்ன? அப்படிப்பட்டவர்களை அவமதிக்கலாமா? அவர்களை இகழ்ந்தது நம்மை இகழ்ந்ததல்லவா? பூர்வம் ஒட்டக்கூத்தரென்பவர் ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாததுலகளவு,’ என்றெண்ணாமல், தாமே வித்தையில் அதிகவல்லவரென்று மமதை கொண்டு நெஞ்சிரக்கமின்றிப் புலவர்களைச் சிரச்சேதம் பண்ணி வந்தது கண்டு, அக்காலத்தில் புகழேந்திப் புலவரானவர், அவருக்குத் தக்கபடி கர்வப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் புண்ணியந் தேடிக்கொண்டார்; அந்தப்படி இந்தக்காலத்தில் திருமலைராயன் சம்ஸ்தானத்திலிருக்கும் வித்துவான்கள், நான் நானென்று இறுமாப்புற்று ‘நக்குகிற நாய் செக்கென்றும் சிவலிங்கமென்றும் அறியாதது போல’ நல்லார் பொல்லார் என்று அறியாமலும், ‘அடுக்கும் அருமை உடைக்கும் நாய்க்குத் தெரியாதது போல’ப் பாடிய அருமை தெரியாமலும், பிரசண்ட கவிகளையெல்லாம் பழித்துக்கொண்டிருக்கிறார்கள்; இவர்களுடைய அகந்தையை நாம் போய் அவசியம் அழிக்க வேண்டும்,’ என்ற பிரதிக்கினையுடனே ஒரு நாள் அவ்விடத்திற்குப் போக யத்தனப்படுகின்ற சமயத்தில் அவரை மோகனாங்கி என்னும் தாசி கண்டு, ’திருமலை ராயன் பட்டணத்துத் துறைமுகத்தில் விசேஷமாய் முத்துக் குளிக்கிறதாகவும், அம்முத்து மற்றத் துறைகளில் குளிக்கப்படுகிற முத்துகளினும் மிகச் சிறந்ததாகவும், திருமலைராயனே அந்த வியாபாரஞ் செய்வதாகவும் சொல்லுகிறார்கள்; ஆகையால், அங்கேபோய்த் திரும்பி வரும்பொழுது மறவாமல் எனக்கு மார்பிலணியுங் கச்சுக்கு முத்து வாங்கிவரவேண்டும்,’ என்றாள். அது கேட்டு, ‘நல்லது! அப்படியே ஆகட்டும்!’ என்று சொல்லி, அவளிடத்திற் செலவுபெற்றுக் கொண்டு புறப்பட்டு, அப்பட்டணத்துக் கடைவீதியில் வந்தார்.

இவருக்கெதிரே, மேற்சொல்லிய அதிமதுரகவி என்பவன் தனக்குப் பின்னும் முன்னும் இருபக்கங்களிலும் அறுபத்து நாலு தண்டிகைப் புலவர்களும் வரிசை வரிசையாக நெருங்கிச் சூழ்ந்துவர, அவர்கள் நடுவில் நீலமலை ஒன்று, உரல்போலப் பருத்த கால்களும், பனைபோல நீண்ட துதிக்கையும், ஆலவட்டம் போலப் பரந்த செவிகளும் பிறைபோல வளைந்த கொம்புகளும், மலைச்சிகரம் போல உன்னதமாகிய மஸ்தகமும், சாமரைபோல அசைகின்ற வாலும், முளைத்து எழுந்து நடப்பது போல நடக்கின்ற மதயானைமேல், நவரத்தினமாகிய தவிசிட்டு ஏறி, துஜம் சத்திரம் சாமர முதலிய விருதுகள் பிடிக்க, கட்டியங்கூற, அதிக ஆடம்பரத்துடனே ராஜ சமூகத்தை நாடிவருவது கண்டு, தாம் அப்பால் விலகிப் போகாமல் அப்புலவர்கள் ஏறிவரும் தண்டிகைக் கணைகளின் மத்தியில் வந்து நிற்க, அதுகண்டு கட்டியக்காரன், தண்டிகைக் கணைக்குட்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாயினும் அவர்கள் தங்கள் வாயினால் அதிமதுரகவி என்பவனுக்குரிய விருதைச்சொல்வது நெடுநாளைய வழக்கமாயிருப்பதனால் அவன் வழக்கப்படி இவர் மார்பிலே தன் கையிலிருந்த மான்தோற் பட்டையால் தட்டி, ‘அதிமதுர கவிராய சிங்கம் பராக்கென்று சொல்,’ என்றான். இவர், ‘இழவுக்கு வந்தவர்களையெல்லாந் தாலியறுக்கச் சொன்னால் அறுப்பார்களா? அது போலத் தெருவிலே போகிறவர் வருகிறவர்களையெல்லாம் இவன் பெருமையைச் சொல்லச்சொன்னாற் சொல்வார்களா? ஆயினும், இவன் பெற்ற பெருமைதானென்னை? துடைப்பக்கட்டைக்குப் பட்டுக்குச்சுக் கட்டியது போல, ‘அதிமதுர கவிராய சிங்கம்’ என்று பெயர்வைத்துக்கொண்டு விருது கூறி வருகிறானே! ‘இவன் பாடும் பாட்டென்னை, அத்தனை மதுரமானதா? தன்னைச் சிங்கமென்று சொல்வதைப்பற்றிக் கொஞ்சமாவது இவனுக்கு மனங்கூசவில்லையே! இவன் எத்தனை வித்துவான்களை ஜயித்தான்? இவையெல்லாம் வீண் புகழ்ச்சிதானே! இப்படிப்பட்டவன் வெட்கித் தலையிறக்கங்கொள்ளும்படி இவனைப் பரிகசிப்பதே யுக்தம்!’ என்று நினைத்துக் கட்டியங்கூறுவோனை நோக்கி, ‘அதிமதுரம் அதிமதுரமென்று உலகமெல்லாம் அறியும்படி பறைசாற்றினது போலப் பலமுறையும் எடுத்துச் சொல்லி இவனை மதுரந் தோன்ற ஸ்துதி செய்கின்றையே! இவனிடத்திலுள்ள புதுமை என்னை? இப்படிச் சொல்வதைப் பார்க்கிலும் காட்டிலுண்டாகிய சரக்கு, காரமில்லாத சரக்கு, தனியே பிரயோகிக்காமல் வேறு சரக்குகளுடனே கூட்டிப் பிரயோகிக்கப்படும் சரக்காகிய மலைக்குன்றிமணி வேரை உலகத்தார் தொன்றுதொட்டு அதிமதுரமென்று வழங்குவது சகஜமாதலால், நீ அதைக்குறித்துச் சொல்,’ என்னுங் கருத்தை அமைத்து,

அதிமதுர மென்றே யகில மறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமையென்ன?
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு.

-என்றொரு பாடலைச் சொல்லி ஏளனம் பண்ணினார்.

அஃது அதிமதுரகவி என்பவனைத் தூக்கிப்போட்டாற் போலிருந்ததனால், அவன் ஆச்சரியப்பட்டு, ‘சிறிதாவது பயமில்லாமல் இவ்வளவு தைரியத்துடனே பகிரங்கமாக நம்மைப் பரிகசிக்கின்றானே! இவனார்?’ என்று அறியும்படி தான் ராஜசமூகத்திற்குப் போய்ச்சேர்ந்த மாத்திரத்திற் சேர்வைக்காரனொருவனை அழைத்து, ‘இன்னவிடத்தில் ஒரு பிராமணனிருக்கிறான், அவனுடைய பெயரென்ன, அவன் எங்கிருப்பவன் என்பதை விசாரித்து வா,’ எனச் சொன்னான். சேர்வைக்காரன் நேரிலே விசாரித்தபொழுது காளமேகப்புலவர், ‘என் பேர் ஊர் முதலானவைகளை வாய்ச் சொல்லாகச் சொன்னால் நான் சொன்னபடி நீ போய்ச்சொல்வது பிரயாசம், விவரமாய் ஏட்டில் என் கைப்பட எழுதிக் கொடுக்கிறேன்,’ என்பதாகச் சொல்லி,

தூதைந்து நாழிகையி லாறுநா ழிகைதனிற் சொற்சந்த மாலைசொல்லத்
    துகளிலா வந்தாதி யேழுநா ழிகைதனிற் றொகைபட விரித்துரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற் பரணியொரு நாள்முழுதுமே
    பாரகா வியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடிகட்டினேன்!
சீதஞ்செ யுந்திங்கண் மரபினா னீடுபுகழ் செய்யதிரு மலைராயன்முன்
    சீறுமா றாகவே தாறுமா றுகள்சொல் திருட்டுக் கவிப்புலவரைக்
காதங் கருத்துச் சவுக்கிட் டடித்துக் கதுப்பிற் புடைத்துவெற்றிக்
    கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு கவிகாள மேகநானே.

-எனத் தாம் ஆசுகவி பாடுந் திறத்தைச் சிறப்பித்தும் தமது பெயரை வெளிப்படையாகச் செப்பியும், திருமலைராயன் சம்ஸ்தானத்து வித்துவான்கள் செய்யும் அக்கிரமத்தைக் குறிப்பித்து அவர்களை இகழ்ந்தும் ஒரு சீட்டுக்கவி எழுதி, அதைச் சுருட்டிச் செந்திரிகம் போட்டு, ‘இதைக் கொண்டுபோய்க் கொடு’ என்று கொடுத்தனுப்பினார்.

அதிமதுர கவிராமன் முதலானவர்கள் அதை வாங்கி வாசித்து, ‘இதை எழுதினவன் காளமேகம் என்பவனா? பாம்புக்குப் பல்லிலும், தேளுக்கு வாலிலும் ஏகதேசமாக விஷமிருக்குமென்பார்கள்; இவனுக்கு உடல்முழுதும் விஷமயமாயிருக்கிறது; ஆதலால், இவன் பொல்லாத துஷ்டனென்றும், அகங்காரமே கால் கை முதலிய உறுப்புகளாய் உருவெடுத்து வந்தவனென்றும், கண்டவர்கள் மேலெல்லாம் வம்புந் தும்புமாக வசைபாடுகிறவனென்றும், இவனுடைய சமாசாரம் முன்னமே நமக்குக் கேள்விதானே! அப்படியிருக்க இப்பொழுது நம்மையும் அவர்களைப்போல இலேசாக நினைத்துக்கொண்டு கொஞ்சமாவது மதிப்பில்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாந் தூஷித்துச் சீட்டுக்கவி எழுதினான் பார்த்தையா! இப்படிப்பட்டவனைச் சும்மா விடப்போமோ? ‘கொட்டினாற் றேள்; கொட்டாவிட்டாற் பிள்ளைப் பூச்சி,’ அல்லவா? ஆதலால், இவனைச் சிலிர்க்கச் சிலிர்க்க வலித்து மானபங்கப்படுத்தித் தக்க சிக்ஷை செய்வித்தாலொழிய, இவன் அடங்கமாட்டான்,’ என்று தங்கள் அரசனுடனும் ஆலோசித்து, நாலு பெயர் சேவகர்களை விடுத்து, ‘அந்தக் காளமேகமென்பவன் எங்கேயாவது ஓடியொளித்தும் போகப்போகிறான்! இந்த நொடிக்குள்ளே கைப்பிடியாகப் பிடித்து வந்து ஒப்பிக்க வேண்டும்!’ என்ன, அந்நால்வரும் போய்ப் பெரும்புலிகள் போல அவரைச் சுற்றிக்கொண்டு, ‘நீ சும்மா வருகிறையா, உன்னைப் பிடித்துக் கட்டிக்கொண்டு போக வேண்டுமா?’ என்றார்கள். புலவர், ‘நீங்களார்? என்னை எங்கே அழைக்கிறீர்கள்?’ என்ன, அவர்கள், ‘நாங்கள் திருமலைராயன் சேவர்கள்’ அவரிடத்திற்குத்தான் உன்னை அழைக்கிறோம்,’ என்ன, இவர், ‘அங்கு ஏதுக்காக வரச்சொல்லுகிறீர்கள்?’ என்ன, சேவகர், ‘நீ எங்கள் ராஜசம்ஸ்தானத்து வித்துவான்களைத் தூஷித்தையே! அதற்காகத்தான்,’ என்ன, இவர், ‘பின்னையொன்றுஞ் செய்யவில்லையே! இதற்குத்தானா பிடிக்கிறதுங் கட்டுகிறதும்? என்னைத் தொடவேண்டா; தூர நில்லுங்கள், நானே வருகிறேன்,’ என்று கடையில் எலுமிச்சம்பழமொன்று வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு ராஜசமுகத்தை நோக்கி வரும்போது இதற்குள் அவ்விடத்தில் அதிமதுரகவி என்பவன் அறுபத்து நாலு கண்டிகைக் காரரையும் பார்த்துக் ‘காளமேகமென்பவன் இவ்விடத்திற்கு வந்தால், அவன் அரசனருகிற் கிட்டிச் செல்லாதபடி நீங்களெல்லோரும் நெருங்கி உட்கார்ந்து உங்களாசனத்தை விட்டெழுந்திராமலிருங்கள்,’ என்று திட்டஞ்செய்து, பின்பு ராஜாவை நோக்கி, ‘அந்த வம்பனை நீங்கள் வாவென்றழையாமலும், அவனுக்கு ஆசனங் கொடாமலும், சன்மானஞ் செய்யாமலுமிருக்க வேண்டும்,’ என்று சொல்லி எச்சரிக்கையாயிருந்தான்.

அப்படியிருக்கையிற் புலவர் பெருமான். . .

தொகு

அப்படியிருக்கையிற் புலவர் பெருமான் வந்து பார்த்து, ‘நாம் உட்பிரவேசிக்கக் கூடாமல் இங்கே ஏதோ மித்திரபேதம் நடந்திருக்கிறது!’ என்று கிரகித்துக்கொண்டு, தம் உட்செல்லாமல் ஆஸ்தான வாசலண்டையிலிருந்தபடியே ‘இதற்கேற்ற உபாயமொன்று செய்ய வேண்டும்,’ என்று ஒரு சுலோகம் சொல்லி, அரசனை ஆசீர்வதித்து, அந்த எலுமிச்சம்பழத்தை அவனுக்கெதிரே நீட்டினான். பிராமணர்கள் ஆசீர்வாதம் பண்ணி அக்ஷதையாவது புஷ்பமாவது மற்றேதாவது கொடுக்க வந்தால், வாங்காமலிருப்பது விதியல்லவே! அதுபற்றி அவன் தன்கையை நீட்டினான். நீட்டிய கையில் இந்த எலுமிச்சம்பழம் போய்ச் சேரவேண்டுமே! அதனால், யாரும் விலகி வழிவிட்டார்கள்; காளமேகப் புலவர் தாராளமாக அச்சபை நடுவே சென்று அதை வேந்தன் கையிற்கொடுக்க அவன் வேண்டா என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டதன்றி, அவருக்கு ஆசனங்கொடுக்கவும், ‘உட்காரும்’ என்று சொல்லவுமில்லை. அது தெரிந்து ஜம்புகேசுரத்தின் திசையை நோக்கி மானசிகமாக ஸ்ரீஅகிலாண்டவல்லி விமானத்தைத் தரிசித்துச் சாரதையை தியானித்து,

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனத்துவைத்த தாய்.

-என்பதை முதற்கொண்ட முப்பது வெண்பாவிற் ‘சரசுவதிமாலை’ என ஒரு பிரபந்தம் பாடினார். பாடிய மாத்திரத்தில் வாணி கடாக்ஷத்தால் திருமலைராயனிருந்த ஆசனம் ஒருபுறத்தில் வளர்ந்து இடங்கொடுக்க, அதில் இவர் அவனுடன் சமான ஸ்கந்தமாக வீற்றிருந்தார்.

இவ்விதமாக ராஜசிங்காதனம் வள்ந்து இடங்கொடுக்க, இவர் அதன்மேலேறி உட்கார்ந்த தருணத்தில் அவர்களெல்லாம், ‘இஃதென்னை, மந்திரமோ! மாயமோ! அல்லது கண்கட்டு வித்தையோ!’ என்று பிரமிப்புடனே பார்க்கையில், புலவர் பெருமான் அந்தப் புலவர்களை,, ‘என்னை வைத்த கண் வாங்காமல் ஊடுருவிப் பார்க்கிறீர்களே! நீங்களார்? தெரியச் சொல்லவேண்டும்,’ என்று கேட்க, அவர்கள், ‘நாங்கள் இந்தச் சமஸ்தானத்திலிருக்கும் கவிராஜர்கள்,’ என்று உத்தரஞ்சொல்ல, இவர், ‘கவிராஜர்’ என்பதற்குக் குரக்கரசர் என இடக்கராகப் பொருள்கொண்டு குலுக்கென்று நகைத்து,, அவர்களை உல்லங்கனம் பண்ணும்படி, ‘ஓ!ஓ! புவியரசர் புகழப்படும் புலவர்களே!, நீங்கள் ஆரென்று உங்களைக் கேட்டால், கவிராஜர்கள் என்கிறீர்களே! கவிராஜர்களாயிருந்தால், உங்கள் ஜாதி சுவாபப்படி வாலிருக்க வேண்டுமே! அஃதெங்கே? வாலில்லாமையால், நீங்கள் வாலில்லாத குரங்குகளென்றல்லவோ சொல்லப்படுவீர்கள்? அப்படித்தானென்று ஒப்புக்கொண்டாலும், நீண்டு வளர்ந்து வலிபெற்ற நகமிருக்க வேண்டுமே! அஃதெங்கே? அல்லாமலும், நாலு காலிருக்க வேண்டுமே! அவை எங்கே? காலாகக் கையைப் பாவித்துக்கொள்ளலாமென்றாலும், பீளையிருக்க வேண்டுமே! அஃதெங்கே? சொல்லுங்கள்,’ என்னுங்கருத்தினை உள்ளமைத்து,

வாலெங்கே நீண்டெழுந்த வல்லுகிரெங் கேநாலு
காலெங்கே யூன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராய ரென்றிருந்தக் கால்.

-என்றொரு வெண்பாப் பாடினார். இதிற் குரங்குகளென்று இழித்துரைத்தாலும், அவர்களைப் போலத் தாமும் புலவராகையால் அந்தச் சுஜாதியபிமானம் போகாமற் ‘புவிராயர் போற்றும் புலவர்காள்!’ என்று சிறப்பித்தார்.

அதையவர்கள் அவ்விதமாக நினையாமல், ‘இவன் எட்டிக் குடுமியைப் பிடித்த இறங்கிக் காலைப் பிடிக்கிறவன் போல, இந்தப் பாட்டிலே நம்மையெல்லாங் குரங்குகளென்று பிரத்தியக்ஷத்திலேயே நிந்தித்து, அதனோடுகூடக் கொஞ்சம் முகஸ்துதியாகப் ‘புவிராயர் போற்றும் புலவர்காள்,’ என்றான்; முன்பு, சீட்டுக்கவியிலும் தூஷித்திருக்கிறான், இவனுடைய நெஞ்சுத் துணிவுதான் என்னை?’ என்று சிந்தித்துப் பிறகு இவரை நோக்கி, ‘இந்தச் சம்ஸ்தானத்தில் வெகுகாலமாய்ப் பெயர் பெற்றிருக்கின்ற எங்களை இன்று வந்து முளைத்த நீ ஆரென்று கேட்கிறையே! நீ யார்? சொல்,’ என்று கேட்டார்கள். இவர், ‘நாம் காளமேகம் என அறியீர்களா?’ என்ன, அவர்கள், ‘நீ காளமேகமா? நல்லது, காளமேகமென்பது கறுத்த மேகமாதலாற் பொழிய வேண்டுமே?’ என்ன, இவர், ‘பொழியத்தான் வந்தது,’ என்ன, அவர்கள், ‘எப்படிப் பொழிய வந்தது?’ என்னப் புலவர் சிரோமணி, ‘கழியினிடத்திற் செல்லுங் கடல் நீரானது உப்பு மயமாயிருப்பதென்று அதை ஒழித்து, சாஸ்திரமாகிய கடலில் அதன் சாரமாகிய நீரை முகந்து, அருவியாறு வழிந்தோடுகின்ற தமிழ் பிறந்த பொதியமலையிற் காலூன்றி, கடுமையாகிய கவிகளை ப் பாடுகின்ற புலவர்கள் மனத்தின்கண்ணே பயஞ்சனிக்க இடித்து, அவர்கள் காதுகள் செவிடுபடக் குமுறி, கண் கூச மின்னி, கவியாகிய மழை பொழியும்படி காளமேகமானது புறப்பட்டது,’ என்னுங் கருத்தை அமைத்து,

கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வான்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கிமின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே.

-என்றொரு பாடல்பாடக்கேட்டு, அதிமதுரகவி என்பவன் அதிக ஆச்சரியங்கொண்டு, இவரை முன்னிட்டு, ‘வெள்ளைக் கவிபாடித் திரிகின்ற காளமேகமே! மூச்சுவிடுவதற்கு முன்னே முந்நூறு அல்லது நானூறு பாடல் பாடப் போகாதா? மூச்சுவிட்டாச்சுதென்றால், ஐந்நூறு பாடல்வரையிலும் ஆகாதா? இதற்கித்தனை பேச்சென்ன? சும்மா ஆடம்பரமாக உன்னுடைய கள்ளக்கவிக் கடையைப் பரப்ப வேண்டா; அந்த மட்டிலே அதைக்கட்டு,’ என்னுங் கருத்துத் தோன்ற,

மூச்சுவிடு முன்னமே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லைந்நூறு மாகாவோ - பேச்சென்ன?
வெள்ளைக் கவிகாள மேகமே! உன்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு.

-என்றொரு பாடலைச் சொல்லி, அவன் தன் பெருமையை வெளியிட்டுக் கவி சிரேஷ்டராகிய இவரை இழிவு செய்தபொழுது, இவர், ‘நீ மூச்சுவிடுவதற்கு முன்னே முந்நூறு நானூறு பாடல் வரையிலும், ஆச்சென்றால் ஐந்நூறு பாடல் வரையிலும் பாடுகிறதாகச் சொன்னையே! இஃதோராச்சரியமா? நான் சொல்வதைக் கேள், வாயைத் திறவாததற்கு முன்னே எழுநூறு எண்ணூறு பாட்டளவிலும், ஒருமுறை வாயைத்திறந்து மூடினால் ஆயிரம் பாட்டளவிலும் ஆகாவா? பாடுகிறதற்கு ஒருநிமித்தமுமில்லாத காலத்திற் சும்மாவிருந்தா லிருப்பேன்; ஆவசியகமுண்டாய்ப் பாட ஏற்பட்டேனானால், யானைத்துதிக்கை போலப் பெரிய தாரைகளாக வருஷிக்கும் மேகம் நான் என்று நினை பிள்ளாய்,’ என்னும் கருத்தையமைத்து,

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாவா? - சும்மா
இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
பெருங்காள மேகம் பிளாய்!

-என்பதாக ஒரு கவிபாடித் தமது வல்லமையைக் குறிப்பித்தார்.

அதை அதிமதுரகவி கேட்டு, ‘தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன்!’ என்பவனைப் போல, வெகு சாமர்த்தியமாகப் பேசுகிறானே! இவன் சொல்வது மெய்யாயிருக்குமா! அஃதேது! ‘ஆரத்தான் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும்,’ என்பது போல, இன்னுஞ் சற்று நேரத்திற்குள்ளே பொய் மெய் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரிய வருகிறது!’ என்று நினைத்துக் காளமேகப் புலவரை நோக்கிக் ‘கூரம்பாயினும் வீரியம் பேசேல்,’ என்பதை அறியாமல், ‘நீ இவ்வளவு வீரம் பேசுகிறையே! அரிகண்டம் பாடு, பார்ப்போம்!’ என்றான். இவர் ‘அரிகண்டமாவது என்னை?’ என, அவன், ‘கழுத்திற் கத்தி கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்குஞ் சமிசைக்கு இணங்கப் பாடுவதுதான்; அப்படிப் பாடுமிடத்தில் ஏதாவது தவறினால், அந்தக் கத்தியினாலேயே வெட்டுண்ண வேண்டி வரும்,’ என்ன, அதற்கு இவர் கைகொட்டிச் சிரித்து, ‘இது தானா அரிகண்டம் என்பது! இத்தனை சுலபமானதை ஒரு விஷயமாகத் தேடிச் சொல்லவந்தாயே! இதிலென்ன அருமையிருக்கிறது! இது நிற்க. யமகண்டம் பாடுகிறதல்லவோ மகா பிரயாசம்? அதைக் குறித்துப் பேசுவதுதான் கௌரவம்,’ என்று சொல்ல, அவன், ‘யமகண்டம் என்றும் ஒன்றிருக்கிறதா? அஃது எப்படிப்பட்டது?’ என்ன, இவர், ‘பூமியிற் பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழமாகச் சதுரத்திற்குச் சதுரம் ஒரு பெரிய குழிவெட்டி, அதன் நான்கு மூலையிலும் பதினாறடி இரும்புக் கம்பங்கள் நாட்டி, கம்பத்தின்மேல் நாலுபக்கத்திலும் இரும்பினால் நாலு சட்டமும், நடுவே ஒரு சட்டமும் போட்டு, நடுச்சட்டத்தில் உறிகட்டி, குழிக்குள் பருத்த புளியங்கட்டைகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பு மூட்டி, அது கனன்றெழுந்து சுவாலித்து எரிந்துகொண்டிருக்க, அந்நெருப்பில் ஆளுயரமான நெருப்புக் கொப்பறை நிறைய எண்ணெய் விட்டு அதில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணிகளை நிரப்பி, அவை நன்றாய்க் காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க, நான்கு யானைகளைப் பாகர்கள் மதமேற்றிக் கொண்டுவந்து, கம்பத்திற்கு ஒவ்வொன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைத்திருக்க, பின்புறத்தில் வளையம் வைத்து, வளையத்திற் சங்கிலி கோத்து, நயத்த எழுகினாற் கூர்மையாகச் சமைத்துப் பளபளவென்று மின்னும்படி சாணை பிடித்த எட்டுக்கத்திகளைக் கழுத்தில் நாலும் அரையில் நாலுமாகக்கட்டிக்கொண்டு, கத்திகளின் புறத்திலுள்ள சங்கிலிகளை மேற்படி யானைகளின் துதிக்கையிற் கொடுத்து வைத்து, தான் கொப்பறைக்கு நேராகத் தொங்குகின்ற உறி நடுவில் ஏறியிருந்து, எவரெவர் என்னென்ன சமிசை கொடுத்தாலும் அவைகளை நொடியிலே தானே தடையின்றிக் குறித்த கருத்தின்படி இசைத்துப் பாடவேண்டும்; அவ்வாறு பாடும்பொழுது, எவ்வளவாவது வழுவுமானாற் சமிசை கொடுத்தவர்கள் யானை மேலிருக்கும் பாகர்களுக்குக் கண் சைகை காட்ட, அவர்கள் யானைகள் மஸ்தகத்தில் அங்குசத்தாற் குத்தி அதட்ட, அவை தமது தும்பிக்கையிற் கொடுக்கப்பட்டிருக்குஞ் சங்கிலிகளை விசையாயிழுக்க, இழுத்தவுடனே புலவர் கழுத்தும் அரையும் கத்திகளாற் கண்டிக்கப்பட்டுத் தலையொரு துண்டமும், அரைமுதல் காலளவும் ஒரு துண்டமுமாகி, அந்த எண்ணெய்க் கொப்பறையில் விழுந்து மாண்டு போகிறது; இப்படிப்பட்டது தான் யமகண்டம்,’ என்றார்.

காளமேகப் புலவர் இவ்வண்ணஞ் சொல்லக் கேட்ட மாத்திரத்தில், அதிமதுரகவி மனந்திடுக்குற்று, ‘அடா அப்பா! யமகண்டமென்பது இப்படிப்பட்ட கோரமானதா! இஃது உள்ளபடி யமகண்டத்திற்கு ஒப்பாயிருப்பதனாலேதான் இதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டதாகக் காண்கிறது! இவ்வாறு செய்ய ஆராலேயாகும்? அசாத்தியம்! அசாத்தியம்!’ என்று தனக்குள்ளே எண்ணி அதிசயித்துப் பின்பு புலவர் பெருமானைப் பார்த்து, ‘நீ சொன்ன யமகண்டம் தகுதியானதுதான்! ஆயினும், சும்மா வாயினாலே டம்பமாகச் சொல்வதனால் என்ன பிரயோசனம்? ‘மாடு திருப்பினவனல்லவோ அருச்சுனன்?’ அதுபோல, சொன்னபடி செய்வதன்றோ கௌரவம்? ஆகையால், செய் பார்ப்போம்!’ என்றான். இவர், ‘சபாசு! ‘ஆடவிட்டு நாடகம் பார்க்கிறது’ போல, என்னைச் செய்யச்சொல்லிப் பார்க்கிறதென்னை? நீ முதல்முதல் இந்த விஷயத்தையெடுத்துப் பேசினதனாலும், வெகுநாளாக யாவருமறிய நடுத்தெருவிலே ‘அதிமதுரகவிராய சிங்கம் பராக்’கென்று விருது கூறிக் கொண்டு வருகிறபடியினாலும், செய்ய வேண்டிய கடமை உன்னுடையதே; அப்படியிருக்கக் ‘குரங்கு குட்டிக்கையைத் தோய்க்கிறது போல’ என்மேலே சார்த்தி, என்னைத் தூண்டிவிட்டு ‘நீ தப்பித்துக்கொள்ளப் பார்ப்பது சரியோ? இது, ‘விருதுகூறிவந்து செடியில்நுழைகிறது போலாகுமல்லவோ?’ என்றார்.

அத்தருணத்தில் அதிமதுரகவியும், அறுபத்துநாலு தண்டிகைப்புலவரும் திருமலைராயன் முன்னிலையில் ஒருசேரக்கூடி, ‘இவன் எதிரிகளை மதியாத துன்மார்க்கனாயிருக்கிறபடியினாலே, தந்திரமாக இவனையே அந்த யமகண்டத்தில் மாட்டி, இவனுடைய கொழுப்பை அடக்கவேண்டும்!’ என்று தங்களுக்குள் ஆலோசித்துக்கொண்டு, ‘அப்படிச் செய்யவேண்டுமென்று எங்களுக்கு ஆவசியகமில்லை, நீயே உன்னை அதீத சமர்த்தனென்று பெருமைப்படுத்தியும், எங்களை இழித்தும் சீட்டுக்கவி பாடியனுப்பினதனாலும், நாங்கள் சுளுவாக அரிகண்டம் பாடச்சொன்னால், ‘கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தது போல’ அதை விலக்கி, உன் வாயாலேயே யமகண்டம் பாடுகிறதைக் குறித்துப் பேசினதனாலும், நீதான் அந்தப்படிச் செய்யவேண்டும்!’ என்றார்கள்.

அவர்கள் அப்படிச் சொல்லக்கேட்டுப் புலவர் சிகாமணியானவர், ‘கல்வித்திறமும் கவிசாதுரியமுமில்லாத இவர்களை யமகண்டம் பாடச் சொல்லுகிறது, வீரமில்லாத பேடியைப் போருக்கழைக்கிறது போல அல்லாமல், வேறன்று; அதனால், நாமே அதைச் செய்துகாட்டி இவர்கள் இறுமாப்பை அடக்கவேண்டும்!’ என்று நிச்சயித்துக்கொண்டு, ‘நீங்கள் வருத்தப்பட வேண்டா, தலைகீழாகக் கரணம் போட்டாலும் இஃது உங்களால் ஆகத்தக்கதன்று; நானே செய்கிறேன், பாருங்கள்!’ என்று உடன்பட்டார். அவர் உடன்பட்ட மாத்திரத்தில் அவர்கள், ‘இனித் தாமதிக்கலாகாது,’ என்று யமகண்டத்தைக் குறித்து அவர் சொன்னபடி ஏவலாளர்களைக் கொண்டு ராஜாவின் சபாமண்டபத்திற்கு நேரிலே குழிவெட்டித் தழல் மூட்டி, எண்ணெய்க்கொப்பறை வைத்துக் குழிக்கு நாற்றிசையிலும் இரும்புக்கம்பம் நாட்டிக் கம்பத்தின்மேற் சட்டம் போட்டு, நடுச்சட்டத்திற் கொப்பறைக்கு மேலே உறி கட்டிப் பாகர்களால் யானைகளை மதமேற்றிக் கொண்டுவந்து கம்பத்திற்கு ஒவ்வொன்றாக நிறுத்தும்படி செய்தார்கள். புலவர் பெருமான் கழுத்திற்கும் அரைக்கும் கத்தி கட்டிக்கொண்டு, கத்திகளின் பின்னுள்ள வளையங்களிற் கோத்திருக்குஞ் சங்கிலிகளை யானைகளின் கையிற் கொடுத்துவிட்டுத் தாம் உறியின் மேலேறி முகமலர்ச்சியுடனே மண்டலித்திருந்து, திருமலைராயனுடைய அனுமதி பெற்றுக்கொண்டு, அதிமதுரகவி முதலானவர்களை நோக்கி, ‘இனி நீங்கள் காலதாமதஞ் செய்யாமல் உங்கிளிஷ்டப்படிக்குக் கொடுக்கவேண்டிய சமிசைகளைத் தடையின்றித் தாராளமாகக் கொடுக்கலாம்’ என்ன அவர்கள் இவருடைய தைரியத்தையும், முகவிலாசத்தையும் உறியேறிப் பயமின்றிக் கம்பீரமாக வீற்றிருப்பதையும் கண்டு, ‘அம்மம்ம! இவனுடைய தைரியந்தான் எப்படிப்பட்டது!’ என்று ஆச்சரியப்பட்டு, ‘நாமிதை முற்ற முடியப் பார்க்கவேண்டும்!’ என்று யாவரும் சமீபத்தில் வந்திருந்து, அவரவர் வெவ்வேறே மிகவும் அருமையாக ஆராய்ந்து தேடியெடுத்துத் தங்களிஷ்டப்படிக்கெல்லாம் நாநா விதமான சமிசைகள் கொடுக்க, அவைகள் எல்லாவற்றையும் அகிலாண்ட நாயகி அனுக்கிரகத்தாற் பொருள் செய்யாமலும், எவ்வளவேனும் இடர்ப்படாமலும் அநாயாசமாக அவர்கள் கொண்ட கருத்துக்கிணங்கும்படி சித்திரவிசித்திரமாய் நல்ல நயந்தோன்ற அதற்குத் தக்க அலங்காரங்களும் அமைத்து விரைவாகப் பாடினார்.

அதிமதுரகவியும், அறுபத்துநாலு. . .

தொகு

அதிமதுரகவியும், அறுபத்து நாலு தண்டிகைப் புலவர்களும்
தனித்தனி கொடுத்த சமிசைகளும்
காளமேகப் புலவர் பாடிய பாடல்களும்!

பிரதமத்தில் அதிமதுரகவி, ‘திருமாலவதாரம் பத்தும் ஒரு வெண்பாவிற் அடக்கிப் பாடவேண்டும்’ என்ன, புலவர் பெருமான், ‘இதற்கு ஒரு வெண்பாவும் வேண்டுமோ! நான் பாதி வெண்பாவிற் பாடுவேன்! என்று பாடிய செய்யுள்:

மெத்ததிரு வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சன்ம மியம்பவா? - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா.
(01)

இதன்பொருள்: தேவரும் முனிவரும் யாவரும் மெச்சுகின்ற திருவேங்கடத்தில் வீற்றிராநின்ற பெருமானே! அடியேன் அபீஷ்டப்படி பாதி வெண்பாவில், உனது திருவவதாரம் பத்தும் இசைத்துக் கூறும்பொருட்டு நீ என்முன் எழுந்தருளக்கடவாய்,’ என்று முற்பாதியில் திருவேங்கடமுடையானைப் பிரார்த்தித்துத் தாம் பிரார்த்தித்த வண்ணம் பெருமாள் கடாக்ஷ விசேஷத்தால் அப்பத்தவதார மூர்த்திகளும் தமக்குப் பிரசன்னமாகக் கண்டு, பிற்பாதியில், ‘மச்சா, கூர்மா, வராகா, நரசிங்கா, வாமனா, பரசுராமா, ரகுராமா, பலராமா, கிருஷ்ணா, கற்கி என்று அவ்வவர் திருநாமங்களைத் தனித்தனியே குறித்து அழைத்தார் என்பதாம். இச்செய்யுளுக்கு மெச்சுகின்ற திருவேங்கடத்தானே, பாதி வெண்பாவில் என்னிஷ்டப்படி, மச்சா, கூர்மா, வராகா, நரசிங்கா, வாமனா, பரசுராமா, தசரதராமா, பலராமா, கிருஷ்ணா, கற்கியென்று உன் திருவவதாரத்தைச் சொல்லும்படி வா,’ என்று பொருள் கூறுவாருமுண்டு.

அறுபத்துநாலு புலவர்களில் ஒருவர், ‘இராசிகளின் பெயரும் முறையும் தொகையும் அடைமொழியில்லாமல் ஒருவெண்பாவில் அமைத்துப் பாடவேண்டும்,’ என்ன, முதலிற் ‘பகருங்கால்’ எனவும், இறுதியில், ‘வசையறுமி ராசி வளம்’ எனவும் சேர்த்துக்கொண்டு அவ்வாறே பாடிய செய்யுள்,

பகருங்கான் மேடம் இடபமிது னங்கர்க்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
னுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்
வசையறுமி ராசி வளம்.
(02)

-என்பதாம்.

ஒருவர், ‘மும்மூர்த்திகள் பெயர், அவர்கள் தின்னுங் கறி, உண்ணும் உணவு, ஏந்தும் ஆயுதம், பூணும் பூஷணம், ஏறும் வாகனம், வசிக்குமிடங்களை ஒரு வெண்பாவில் பாடவேண்டும்,’ என்ன, அப்படியே பாடிய செய்யுள்:

சிறுவன் அளைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் - பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி.
(03)

-இதன் பொருள்: பிரமன் சிவன் விஷ்ணு என்னும் மூவர்க்கும், பயறு-பிள்ளை-வெண்ணெய், கறி; செந்நெல்-விஷம்-பூமி, உணவு; தண்டம்-மான்-சக்கரம், ஆயுதம்; உபவீதம்-சர்ப்பம்-கௌஸ்துவம், பூஷணம்; அன்னம்-ரிஷபம்-கருடன், வாகனம்; தாமரை-கைலை-பாற்கடல், வசிக்குமிடம் என்பதாம்.

ஒருவர், ‘ஈயேறி மலை குலுங்கினதாக ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ என்ன, ‘மலை மாத்திரமா? உலகமுழுதும் குலுங்கியதாகப் பாடுகிறேன்!’ என்று பாடிய செய்யுள்:

வாரணங்க ளெட்டும் மகமேரு வுங்கடலும்
தாரணியு நின்று சலித்தனவால் - நாரணனைப்
பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயி லீமொய்த்த போது.
(04)

இதன்பொருள்: ஸ்ரீமந்நாராயணன் கண்ணபிரானாய் அவதரித்திருக்கையில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் திருடினானென்று அவனை நல்லிசை வாய்ந்த சொல்லினையுடைய அசோதைப் பிராட்டி பருத்த மத்துக்கொண்டு அடித்த புண்ணில் ஈயானது மொய்த்தபொழுது, அருவருப்புண்டாகி, அவன் அருமைத் திருமேனி அசைய, சதாகாலமும் திருவுதரத்திற்குள் அசையாது வைத்து அவனாற் பாதுகாக்கப்படும் உலகமும், அதிலுள்ள அஷ்டதிக்கு யானைகளும், மகாமேருவும், சப்தசாகரங்களும் அசைந்தன என்பதாம்.

ஒருவர், ‘குடத்திலே கங்கையடங்கும்’ என்பதாகப் பாடவேண்டும்,’ என்ன, அவ்வாறே பாடிய செய்யுள்:

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த விறைவர் சடாம
குடத்திலே கங்கையடங் கும்.
(05)

இதன்பொருள்: கங்காந்தியானது, அகன்ற வானத்திற்குள்ளும் அடங்காமல், மகாமேரு முதலாகிய மலைகளுக்குள்ளும் அடங்காமல், பூமிக்குள்ளும் அடங்காமல், எங்கும் சம்பூரணமாகப் பொங்கிப் பெருகி வந்தாலும், உமாதேவியை இடப்பாகத்தில் வைத்தருளிய பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் அடங்கி நிற்கும் என்பதாம்.

ஒருவர், ‘ஒன்றுமுதற் பதினெட்டெண்களை முறையே அடைசொல் இல்லாமல் ஒருவெண்பாவில் அடக்கிப் பாட வேண்டும்,’ என்ன, அப்படியே அடக்கிப் பாடிய செய்யுள்:

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்று - பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
னாறுபதி னேழ்பதி னெட்டு.
(06)

ஒருவர், ‘முதற்சங்கத்தின் தொகையும், இடைச்சங்கத்தின் தொகையும், கடைச்சங்கத்தின் தொகையும் ஒரு வெண்பாவில் அடக்கி, அம்மூன்று சங்கத்தார்க்கும், அறுபத்து நாலு திருவிளையாடலுக்கும் கர்த்தன் மதுரையிற்சொக்கன் என்பது பயனிலையாய் ஈற்றடியில் வரும்படி முடிக்க வேண்டும்,’ என்ன, அவ்வண்ணமே முடித்த செய்யுள்:

நூலாநா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்
பாலாநா னூற்றூநாற் பத்தொன்பான் - மேலாநாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்குங்
கர்த்தன் மதுரையிற்சொக் கன்.
(07)

ஒருவர், ‘கடல்நடுவிற் செந்தூள் எழும்பினதாகப் பாடவேண்டும்,’ என்ன, அப்படியே கருத்துக் கற்பித்துப் பாடிய செய்யுள்:

சுத்தபாற் கடலி னடுவினிற் றூளி தோன்றிய வதிசய மதுகேள்!
மத்தகக் கரியை யுரித்தவன் மீது மதன்பொரு தமித்திடு மாற்றம்
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் விழுந்துநொந் தயர்ந்தழு தேங்கிக்
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள், எழுந்தது கலவையின் செந்தூள்.
(08)

இதன்பொருள்: மலினமில்லாத் திருப்பாற்கடலின் நடுவிற் செந்தூளெழும்பிய அதிசத்தைச் சொல்லுகிறேன் கேள்: தாருகா வனத்து முனிவர்கள் விடுத்த மஸ்தகத்தையுடைய யானையின் தோலை விரித்துப் போர்த்த சிவசூரன்மேற் படையெடுத்துப் போர்செய்து மன்மதனாகிய பிள்ளை இறந்த செய்தியை அவருடைய தாயாகிய சாதுரியமுடைய ஸ்ரீமகா லக்ஷ்மி செவியிற் செவ்வனே கேட்டு, அக்கணமே அவள் கீழே விழுந்து மனம் நொந்து அழுது, மலர் போன்ற தன் இருகைகளையும் உயர எடுத்து மார்பில் தாக்கும்படி அடித்துக்கொண்டாள்; அதனால், அம்மார்பில் அப்பியிருந்த குங்குமக் கலவைச் செந்தூளானது எழுந்து பரந்தது என்பதாம். [சுத்தப் பாற்கடலென்பது, சுத்த பாற்கடலெனச் செய்யுள் விகாரமாயிற்று.]

பிறவாநெறி காட்டியார் என்னும் பெயருடையவர், ‘பெருங்காற்று மழை காட்டும் பெருநட்புப் பகைகாட்டும்’ என்று ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ என அங்ஙனமே அவரைக் கடிந்து பாடிய செய்யுள்:

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமிசை நிலையிட்டீர் - நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும்.
(09)

இதன்பொருள்: ‘பிறவாநெறி காட்டியார்’ என்று யாவராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்படும் பிரபலமான பெயர் பெற்றவர் நீர்தாமோ? எமக்கு இப்படிப்பட்ட சமிசை கொடுக்கத் தலைப்பட்டவர் நீர்தாமோ? ஏதுக்காக நீரிந்த விங்களஞ்செய்ய ஏற்பட்டீர்? அந்தமட்டிற் போதும்! விட்டுவிடும்! ‘கடுங்காற்று மழைகாட்டும், கடுநட்புப் பகை காட்டும்,’ என்பதாம்.

ஒருவர், ‘ஆமணக்குக்கும் யானைக்கும் உவமை தோன்ற ஒரு பாடற்பாட வேண்டும்,’ என்ன, அங்ஙனமே சிலேஷித்துப் பாடிய செய்யுள்:

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் - எத்திசைக்கும்
தேமணக்குஞ் சோலை திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.
(10)

இதன்பொருள்: எந்தத் திசைகளிலும் இனிமையாகப் பரிமளிக்கின்ற மலர்ச்சோலை சூழ்ந்த திருமலைராயனுடைய வெற்பகத்தில் ஆமணக்கு முத்துடைத்தாயிருக்கும்; கொம்பசையா நிற்கும்; நெரிகின்ற தண்டேந்தி வளரும்; காய்கள் கொத்துக்கொத்தாயிருக்கும்; நேர்மையாகிய குலைகள் சாந்ந்திருக்கும். ஆதலாலும், யானை தன்னகத்தில் முத்திருக்கும்; கொம்பினை அசைக்கும்; வலிபெற்ற இருப்புலக்கையைத் துதிக்கையில் ஏந்தி வரும்; மஸ்தகத்திற் பாகன் அங்குசத்தாற் குத்தும் குத்துடைத்தாயிருக்கும்; பகைவர் கூட்டத்தைப் பிரித்தோட்டும். ஆதலாலும், இவ்விரண்டும் ஒன்றனையொன்று ஒக்கும் என்பதாம்.

ஒருவர், ‘வைக்கோலுக்கும் யானைக்கும் ஒப்புமை தோன்றப் பாடவேண்டும்,’ என்ன, அவ்வாறே சிலேஷித்துப் பாடிய செய்யுள்:

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
(11)

இதன்பொருள்: சிறப்புப் பொருந்திய அழகிய சிவந்த மேனியையுடைய திருமலைராயனது வெற்பகத்தில் வைக்கோல் உழவர்களாற் கற்றை கற்றையாக வாரியெடுத்துக் களத்தில் அடிக்கப்படும்; பிறகு அங்கிருந்து கொண்டுவந்து கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும்; அன்றியும் போர் போடப்பட்டுச் சிறந்து பொலிந்திருக்கும்; ஆதலாலும், யானை பகைஞர்களை வாரி யுத்தகளத்தில் அடிக்கும்; யுத்தத்தில் வெற்றி சிறந்து பொலிவு பெற்றிருக்கும்; பின்பு திரும்பிவந்து கோட்டைக்குட் பிரவேசிக்கும்; ஆதலாலும், இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஒப்பாகும் என்பதாம்.

ஒருவர், ‘பாம்புக்கும் எள்ளுக்கும் ஒப்பிட்டுப் பாடவேண்டும்,’ என்ன, சிலேஷித்துப் பாடிய செய்யுள்:

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது.
(12)

இதன்பொருள்: பாம்பு படமெடுத்தாடிக் குடத்திற்குள் அடைந்திருக்கும்; ஆடும்பொழுதே சீத்கார பூத்காரம் பண்ணும்; பெட்டிக்குள் அல்லது மேற்படி குடத்துக்குள் இட்டு மூடித்திறந்தால், தலையை நீட்டிக்காட்டும்; கடித்தவுடனே விஷமானது மண்டையில் ஓடிப் பற்றிப் பரபரவென்று நமையுண்டாகும்; அதற்குப் பிளவாகிய நாக்குமிருக்கும்; ஆதலாலும், செக்காடி அதன் சாரமாகிய தைலம் குடத்திற் சேர்க்கப்படும்; செக்காடும்போதே இரைச்சலிடும்; குடத்திற் பெய்து மூடிவைத்து நுரையடங்கின பின்பு திறந்துபார்த்தால், அத்தைலம் பார்த்தவர்களுடைய முகச்சாயையைத் தனக்குள்ளே காட்டும்; அஃது உச்சியில் வார்க்கப்படுமானால், பரவியோடி மண்டையிற் பற்றிப் பரபரென ஊரலெடுக்கும்; பிண்ணாக்குமுண்டாயிருக்கும்; ஆதலாலும், இவ்விரண்டும் ஒன்றினையொன்று ஒக்குமென்று சொல்லுக என்பதாம்.

[இதில் திலதமும் அதன் தைலமும் ஒற்றுமைபற்றி அபேதமாகச் சொல்லப்பட்டன.]

ஒருவர், ‘பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் உவமை கற்பித்துப் பாடவேண்டும்,’ என்ன சிலேஷித்துப் பாடிய செய்யுள்:

பெரியவிட மேசேரும், பித்தர்முடி யேறும்,
அரியுண்ணும், உப்புமே லாடும் - எரிகுணமாம்
தேம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்புமெலு மிச்சம் பழம்.
(13)

இதன்பொருள்: தேனைச் சொரிகின்ற சோலை சூழ்ந்த திருமலைராயனுடைய வெற்பகத்தில், பாம்பு மிக்க விஷம் பொருந்தியிருக்கும்; பரமசிவனுடைய திருமுடிமேலேறிக் குடை கவித்தாற்போலப் படம் விரித்திருக்கும்;; காற்றை உட்கொள்ளும்; அதனால், உடலுப்பும்; மேலெழுந்தாடா நிற்கும், கோபித்துச் சீறுங்குணமுடையதாம். ஆதலாலும், எலுமிச்சம்பழம் ராஜசமுக முதலாய பெரிய இடங்களில் உபசாரார்த்தமாய்ப் போய்ச்சேரும்; பித்தங்கொண்டவர்களுக்கு அப்பித்தம் இறங்க அவர்கள் தலையிற் சாறுபிழிந்து ஏற்றப்படும்; ஊறுகாய்க்காகக் கருவியால் அரியப்படும்; மேலே உப்பிட்டுக் குலுக்கப்படும், இரணத்தில் அதன் சாரம்பட்டால், எரிகின்ற குணமுடையதாம். ஆதலாலும், இவ்விரண்டும் தமக்குள் ஒன்றோடொன்று ஒப்பாகும் என்பதாம்.

ஒருவர், ‘மலைக்கும் சந்திரனுக்கும் உவமானமாகச் சிலேஷித்துப் பாடவேண்டும்,’ என்னப் பாடிய செய்யுள்:

நிலவாய் விளங்குதலான் நீள்வான் படிந்து
சிலபோ துலாவுதலாற் சென்று - தலைமேல்
உதித்து வரலா லுயர்மா மலையை
மதிக்குநிக ராக வழுத்து.
(14)

- இதன்பொருள்: மலை பூமியின்கண் விளங்குதலாலும், மேகங்கள் சிலகாலம் தன்னிடத்தில் வந்து படிந்து உலாவப் படுதலாலும், சிகரங்கள் மேலே தோன்றி வருதலாலும், சந்திரன் நிலவினையுடைத்தாய்ப் பிரகாசிப்பதனாலும், நீண்ட வானத்தின்கட் படிந்து சிலபொழுது உலாவுதலாலும், அஸ்தமித்து மறுபடி தலைமேல் உதித்து வருதலாலும் ஒன்றையொன்று ஒத்ததாகச் சொல்லலாம்.

ஒருவர், ‘தேங்காய்க்கும் நாய்க்கும் சமத்துவங் கற்பித்துச் சிலேஷித்துப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே!
தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயு நாயுந் தெரி.
(15)

இதன்பொருள்: தீமையென்பது நாடுதலில்லாத திருமலைராயனுடைய வெற்பகத்தில், தேங்காயானது நாரேயன்றி ஓடுமுடைத்தாயிருக்கும்; உடைத்துப் பார்த்தால், அதுனுட்புறம் வெளுத்திருக்கும்; ஒரு குலைக்குப் பத்துப் பதினைந்துக்கு மேற்பட்டிருக்குமன்றி, அது தாங்குமோ தாங்காதோவென்று அஞ்சிக் குறைந்திராது; ஆதலாலும், நாய் சிலநேரம் இங்கும் அங்கும் ஓடித்திரியும்; சிலநேரம் இருந்தவிடத்திலேயே இருக்கும்; அதன் உள் வாயோ, வெளுத்திருக்கும்; ஆரேனும் புதியவர் வரக்கண்டால், அவரை உற்றுப் பார்க்கும்; பார்த்துப் பின்பு குரைக்க ஆரம்பிக்கும்; அப்படிக் குரைப்பதில் வெட்கப்படாது; ஆதலாலும் இவ்விரண்டும் ஒக்கும், என்று அறிவாயாக,’ என்பதாம். [சேடியே! என்பது தோழியே என்று பொருள்தரும் மகடூஉ முன்னிலையாம்.]

ஒருவர், ‘மீனுக்கும் பேனுக்கும் உவமையாகச் சிலேஷித்துப் பாடவேண்டும்,’ என்னப் பாடிய செய்யுள்:

மன்னீரிலே பிறக்கும் மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையாற் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரியா மே.
(16)

இதன்பொருள்: மீன் பெருமைதங்கிய நீரினிடத்தில் உற்பத்தியாகும்; உற்பத்தியான பின்பு அந்நீர்த் திரையிலேயே மேய்ந்து கொண்டிருக்கும்; அப்படி மேயுமிடத்தில் ஏதாவது அரவம்கண்டால், கண்டவுடன் பின்புறத்தில் குத்துவது போல நீந்திக்கொண்டே போகும் பெருமையுடைத்தாம்; ஆதலாலும், பேன் ஈரிலிருந்து மிகுதியாகப் பிறக்கும்; உரம் பெற்ற தலையினிடத்தில் மேயும்; பின்பு பல்லைக் கடித்துக்கொண்டு பெண்களால் ஈச்சென்று குத்தப்படும்; ஆதலாலும் இவ்விரண்டும் சரியொத்தவை என்பதாம். [‘ஈச்சு’ என்பது, ஒலிக்குறிப்பு.]

ஒருவர் ஆட்டக்...

தொகு

ஒருவர், ‘ஆட்டக்குதிரைக்கும், காவிரியாற்றுக்கும் ஒப்புமை கற்பித்துச் சிலேஷையாகப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னவரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியாத
தேடுபுக ழாளன் திருமலைரா யன்வரையில்
ஆடுபரி காவிரியா றாம்.
(17)

இதன்பொருள்: தேசமெல்லாம் அறியத் தேடிய புகழினையுடைய திருமலைராயனது வெற்பகத்தில் ஆட்டக்குதிரை விசைகொண்டு ஓடாநிற்கும்; சுத்தமான சுழியுள்ளதாயிருக்கும்; விரோதிகளை முறியடிக்கும்; காண்பவருக்கு விருப்பமுண்டாகத் தலைவளைத்து நடக்கும்; ஆதலாலும், காவிரியாறு நீர் பெருகியோடும்; ஓடும்பொழுது அந்நீர் சுழித்தலையுடைத்தாயிருக்கும்; தன்னிலே தோய்ந்தவர்களைப் பாவனமாக்கும் பாரிசுத்தமுள்ளதாம்; நெருங்கிய மலர்களை அலைத்துச் சாடும்; குதிரை வடிவுவாய்ந்த அலைகளை மடக்கியெறியும்; ஆதலாலும், இவ்விரண்டும் தம்மில் ஒப்பாம் என்பதாம்.

ஒருவர், ‘கீரைப்பாத்திக்கும் ஏறுகுதிரைக்கும் ஒப்பமைத்துச் சிலேஷையாகப் பாடவேண்டும்,’ எனப்பாடிய செய்யுள்:

கட்டி யடிக்கையாற் கான்மாரிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திருப்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே.
(18)

இதன்பொருள்: கீரைப்பாத்தி, நிலங்கொத்திக் கட்டிகளை மண்வெட்டியால் அடித்துடைத்தலாலும், ஒரு வாய்க்காலிலிருந்து மறுவாய்க்காலினால் நீர் மாறிப் பாய்தலாலும், சதுரஞ்சதுரமாக வெட்டித் தடுத்தலாலும், நேரே போய்க் கடைமடையில் முட்ட அது கண்டு அங்கிருந்து பக்கமடையில் திருப்பிமாறத் திரும்புதலாலும்; ஏறு குதிரை, கட்டிக் கொட்படிக்கப்θ படுதலாலும், கால் மாறிமாறி எழும்பிப் பாய்தலாலும், தன்மேலேறிய வீரன் சத்துருக்களை வெட்டி மறிக்கத்தக்க மேன்மையுடைத்தாம் ஆதலாலும், போகவேண்டய இடமுழுதும் போய் மீளத்திரும்புதலாலும் இவ்விரண்டும் ஒன்றனையொன்று ஒப்பாகும் என்பதாம்.

θ.[கொட்படித்தல்- குதிரையைத் திருப்பும்பொழுது அஃது உடனே திரும்பப் பழகுதற்குக் கழுத்திற் கயிறுகட்டிச் சாட்டைகொண்டு சுற்றிச் சுற்றி அடித்தல்]

ஒருவர், ‘ஆட்டுக்கும் குதிரைக்கும் சிலேஷையாகப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

கொம்பிலையே தீனிதின்னுங் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவியி னன்னடைய தாதலால் - உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம்.
(19)

இதன்பொருள்: தேவர்களும் தேடிவருகின்ற இரம்மியமான சோலைசூழ்ந்த திருமலைராயன் வெற்பகத்தில் ஆடு, கொம்புகளில் இருக்கின்ற தழைகளை இரையாகத் தின்னுதலாலும், பணத்துக்குக் கொண்டு அதன் பின்பு வெட்டப்படுதலானும், பூமியில் ஆயர்களுக்கு நல்ல செல்வமாயிருத்தலாலும், குதிரை, கொம்பில்லாதிருப்பதனாலும், தீனி தின்னுதலாலும், போர் செய்யும் வீரன் அதன்மேலேறியிருந்து பகைஞரை வெட்டுதலாலும், சரகதி மயூரகதியாகிய நல்ல நடையினையுடையதாலும், இவ்விரண்டும் ஒன்றனையொன்று ஒக்கும் என்பதாம்.

ஒருவர், ‘துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும் சமத்துவம் கற்பித்துப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

ஆணி வரையுறலா லானகுறிப் போதலால்
தோணக் கருமருந்து தோய்த்திடலால் - நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள்.
(20)

இதன்பொருள்: நெடிய பூமியில் தன் பேரைச்சொல்லி ஸ்துதி செய்யாத பகைஞருக்கு உதவிசெய்யாத திருமலைராயனுடைய வெற்பகத்தில், துப்பாக்கி தன்னிடத்திற் சலாகையைக் கொண்டிருப்பதனாலும், சுடுவோன் குறித்த குறிதவறாததனாலும், குறையாமற் கறுத்த மருந்திடப்படுதலாலும்; ஓலைச்சுருள், எழுத்தாணி கொண்டு எழுதப்படுதலாலும், தன் கண்ணெழுதிய விஷயக் குறிப்பைப் பிறருக்குத் தெரிவித்தலாலும்,மைபூசப் படுதலாலும் இவ்விரண்டும் சமானமாகும் என்பதாம்.

[Ẓ தோன்ற என்பது, தோணவென மருவியது]

ஒருவர், ‘வானவில்லுக்கும், விஷ்ணுவுக்கும், வெற்றிலைக்கும் முப்பொருட்சிலேடையாக ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

நீரி லுளதால் நிறம்பச்சை யாற்றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை.
(21)

இதன்பொருள்: வானவில், நீர்கொண்ட மேகத்தில் தோன்றியிருப்பதானலும், பச்சைநிறம் உண்டாதலாலும், அழகுடைத்தாதலாலும், மழைக்குறிகளில் ஒன்றாய்ப் பூமியிற் கோடையென்னும் பகையைத் தீர்ப்பதனாலும், மனிதர்களுடைய பலவகைப்பட்ட தொழில்களையும் மாற்றுதலினாலும்; விஷ்ணு, மகாப் பிரளயத்தின் மத்தியில் தங்குவதனாலும், சாமளவர்ணமாயிருப்பதனாலும், இலக்குமியையுடையதனாலும், உலகத்தில் தேவர்கள் முனிவர்களுடைய பகையை ஒழிக்கும் பான்மையினாலும், தன்னை ஆசரியத்த மநுக்களின் சஞ்சித ஆகாமிய பிராப்த கருமங்களை நிவர்த்திப்பதனாலும்; வெற்றிலை, நீர்க்கால்களிலிருப்பதனாலும், பச்சென்ற நிறமுடையதனாலும், மங்களகரமாதலாலும், ஒருவரை யொருவர் பகைத்திருந்தால் அப்பகையை நிவர்த்திக்கின்ற தன்மையினாலும், மக்களது தந்தரோகத்தைத் தீர்ப்பதனாலும் இம்மூன்றும் ஒப்புமை உடையன் என்பதாம்.

ஒருவர், ‘பூசணிக்காய்க்கும் ஈசனுக்கும் ஒப்பமைத்துப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக்
கொடியு மொருபக்கங் கொண்டு - வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசணிக்கா யீசனெனப் போற்று.
(22)

இதன்பொருள்: பூசணிக்காய், அடியிற் காம்பு சேர்ந்திருப்பதனாலும், உடல் வெளுத்து ஒரு பக்கத்திற் கொடியையுங்கொண்டு அழகினையுடைய வெண்சுண்ணத்தை மேற்புறத்தில் பூண்டு, வளைவாகிய தழும்பு பெற்றிருப்பதனாலும்; ஈசன், அடியில் ரிஷபம் சேர்ந்திருப்பதனாலும், விபூதி தூளனத்தால் திருமேனி விளர்த்து, பார்வதியையும் ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு, அழகுடைய சர்ப்பாபரணத்தைப் பூண்டு, உமையவளுடைய வளைத்தழும்பு பெற்றிருப்பதனாலுலும் ஒப்பென்று சொல்லுக என்பதாம்.

ஒருவர், ‘ஐந்து டுகரம் வரக் கும்பேசர் விஷயமாகப்பாடவேண்டும்,’ என, நிரனிறைப்பொருள்கோளாகப் பாடிய செய்யுள்:

ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக்
கொடுப்ப ரணிவர் குழைக்கு.
(23)

இதன்பொருள்: இளமரங்கள் அடர்ந்த சோலை சூழ்ந்த திருக்குடந்தைக்கு இறைவராகிய கும்பேசர், ஓ, கா, மா, வீ, தோ என்னும் இவ்வைந்து எழுத்தும் தனித்தனி பொருந்த அவை, ‘ஓடு, காடு, மாடு, வீடு, தோடு என்றாதலால், அவற்றுள் முறையே ஒன்றை அழகாகக் கையில் எடுப்பர்; ஒன்றில் நடனஞ்செய்வார்; ஒன்றன்மேல் ஏறுவர்; ஒன்றைத் தம் அன்பர்க்குக் கொடுப்பர்; ஒன்றைச் செவியில் அணிவர் என்பதாம். [தோடு- காதில் அணியும் நகை]

ஒருவர், ‘பச்சை வடம், பாகு, சேலை, சோமன்’ என்னும் இந்நான்கு வஸ்திரபேதமும் வரும்படி ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்வதுவும்
ஏய குருந்திற்கொண் டேறியதும் - தூய
இடப்பாகன் சென்னியின்மே லேறியதும் பச்சை
வடம்@பாகு சோலைசோ மன்$.
(24)

இதன்பொருள்: நெடுமால் மகாபிரளயத்தில் திருக்கண் வளர்ந்தருளியதும் (பச்சைவடம்), தாமரையாசனத்தையுடைய இலக்குமியின் சொல்லும் (பாகு), கண்ணபிரான் கோபிகளை நாணச்செய்யும் பொருட்டுக் கவர்ந்துகொண்டுபோய்க் குருந்தமரத்திலேறி ஒளித்து வைத்திருந்ததும் (சேலை), மலைமகளை இடப்பக்கத்திலுடைய சிவபெருமானது திருமுடியில் ஏறி இருப்பதும் (சோமன்), முறையே பச்சைவடம், பாகு, சேலை, சோமன் என்பனவாம்.

[@பச்சைவடம்- ஆலிலை; $சோமன்- சந்திரன்.]

ஒருவர், பொன்னாவரையிலை, காய், பூ என்று பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

உடுத்ததுவும் மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கிலையைப் - படுத்ததுவும்
அந்நா ளெடுத்ததுவு மன்பி னிரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ.
(25)

இதன்பொருள்: ஸ்ரீமகாவிஷ்ணுவானவர், ஆடையாக உடுத்ததும் (பொன்), கிருஷ்ணாவதாரத்தில் மேய்த்ததும் (ஆ), இந்திரன் கல்மழை பொழிவித்ததினிமித்தம் குடையாக எடுத்ததும் (வரை), சயனத்திற்கிசையப் படுத்ததும் (இலை), அக்காலத்திற் கன்றுகொண்டெறிந்ததும் (காய்), அன்பினல் பலிச்சக்கரவர்த்தியிடத்தில் இரந்ததும் (பூ), முறையே பொன்னாவரை, இலை, காய், பூ. [பொன்-பீதாம்பரம், ஆ-பசு, வரை-மலை, இலை-ஆலிலை, காய்-விளங்காய், பூ-பூமி.]

கச்சிக்காவலர் என்னும் ஒருவர், ‘செங்கழுநீர்க்கிழங்கு என்று பாடவேண்டும்,’ எனப்பாடிய செய்யுள்:

வாதமண ரேறியதும் மாயன் றுயின்றதுவும்
ஆதிதடுத் தாட்கொண்ட வவ்வுருவும் -சீதரனார்
தாள்கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா!
கேள்செங் கழுநீர்க் கிழங்கு.
(26)

இதன்பொருள்: சாந்த குணத்தையுடைய கச்சிக்காவலனே! கேட்கக் கடவாய், சம்பந்தமூர்த்திகளுடனே வாது செய்த சமணர்களேறியதும் (செங்கழு), நாராயணன் பள்ளி கொண்டதும் (நீர்), பரமசிவன் சுந்தரமூர்த்திகளைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு எடுத்த உருவும் (கிழம்), விஷ்ணுவானவர் திருவடியால் அளந்ததுவுங் (கு) முறையே செங்கழுநீர்க்கிழங்கு என்பதாம். [கு-பூமி, நீர்க்கிழங்கு-இயல்பின் விகாரம்.]

ஒருவர், ‘நா, நீ, நூ, நே என்று பாடவேண்டும்,’ என்னப் பாடிய செய்யுள்:

அரையின் முடியி லணிமார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவை - புரையறவே
மானார் விழியீர்! மலரெணவெற் றீறாகும்
ஆனாலாம் நாநீநூ நே.
(27)

இதன்பொருள்: ம், ல், ர், ண் என்னும் இந்நான்கு ஒற்றும் நா, நீ, நூ, நே என்னும் இந்நான்கிற்கும் தலைதடுமாற்றமாய் இறுதியாக, நாண், நீர், நூல், நேம் என வருமாயின், உமாதேவி இடப்பாகத்தில் எழுந்தருளிய சிவபிரானது அரையிலும், முடியிலும், மார்பிலும், கழுத்திலும் முறையே சேர்க்கப்படுவனவாகும். [நேம்- விஷம்; ‘மானார் விழியீர்’ என்பது, மகடூஉ முன்னிலை.]

ஒருவர், ‘கணபதிக்கும் முருகனுக்கும் சிவனுக்கும் சிலேடையாக ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

சென்னிமுக மாறுளதாற் சேர்தருமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கொடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும்
எண்ணரனு நேராவ ரே.
(28)

இதன்பொருள்: விநாயகன், முகம் மாறுபட்டிருப்பதனாலும், முன்னே தொங்குகின்ற துதிக்கையினாலும், ஒரு கொம்பினை உடையனாயிருப்பதனாலும், வெல்லத்தின்கண் ஆவிர்ப்பவித்தலினாலும்; முருகன், ஆறுமுகத்துடனிருப்பதனாலும், நெருங்கிய பன்னிரண்டு கைகளினாலும் இந்தப் பூமியில் ஒப்பற்ற திருச்செங்கோட்டிருப்பதினாலும், நிலைபெற்ற சரவணப் பொய்கையில் அவதரித்தலினாலும்; சிவன், திருமுடியிற் கங்கையிருப்பதனாலும், முன்னே சேர்ந்திருக்கின்ற நான்கு கைகளினாலும், இவ்வுலகத்திற் கயிலைமலையிலிருப்பதனாலும், நெற்றிக்கண்ணைப் பொருந்துதலாலும் இம்மூவரும் தமக்குள் தம்முள் ஒருவரை ஒருவர் ஒப்பாவர். [ ‘சென்னிமுகம்’ என்பது இருபெயரொட்டு.]

ஒருவர், ‘தை மாசி பங்குநி மாதம்’ என்று பாடவேண்டும்,’ எனப்பாடிய செய்யுள்:

பாணற்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
நாணு வுரித்ததுவுஞ் சக்கரத்தோன் - ஊணதுவு
எம்மானை யெய்துவது மீசனிடத் துஞ்சிரத்தும்
தைம்மாசி பங்குநிமா தம்.
(29)

இதன்பொருள்: தையற்காரனுக்குச் செய்யென்று சொல்வதும் (தை), ஜலத்தை மறைத்தக்கொண்டிருப்பதுவும் (மாசு), சிவன் அடர்த்து உரித்ததும் (இபம்), விஷ்ணுவுக்கு உணவாயிருப்பதும் (கு), எங்கள் தலைவனைச் சேர்வதும் (நீ), பரமசிவன் இடப்பாகத்தில் வைத்ததும் (மாது) முடியில் தரித்ததும் (அம்) முறையே தை மாசி பங்குநிமாதம். [இபம்-யானை, நீ-நீத்தல், துறவு, முதனிலைத் தொழிற்பெயர். ‘நீ’ என்பது, ‘நி’ எனக் குறுக்கலாயிற்று. அம்-கங்கை.]

ஒருவன், ‘செருப்பென்றெடுத்து விளக்குமறு என்று முடிக்கவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே.
(30)

இதன்பொருள்: யுத்தகளத்திற் போய்ப்புகுந்து வீரர் கூட்டத்தைக் கலக்கிச் சிதறவடிக்கின்ற வேலாயுதத்தை ஏந்திய குறிஞ்சித் தலைவனாகிய முருகக் கடவுளை யான் ஆலிங்கனஞ் செய்ய, வாசனை பொருந்திக் குளிர்ச்சி தங்கிய தேனைச் சொரிகின்ற அழகிய தாமரைமலரின்மேல் வீற்றிருக்கின்ற வண்டுதான் வழிகாட்டா நிற்கும். [இக்கருத்து, ஒரு பெண் முருகவேளைத் தழுவக்கருதி வண்டைத் தூதுவிடக் குறித்ததாக அமைக்கப்பட்டது.]

ஒருவர், ‘பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சமானந் தோன்றப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாதே - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.
(31)

இதன்பொருள்: மிகுதியாகப் பூந்தேன் பாய்கின்ற சோலை சூழ்ந்த திருமலைராயனுடைய வெற்பகத்தில் பாம்பு விஷமுடைத்தாயிருக்கும்; காயசித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போலப் பருவமறிந்து தோலுரிக்கும்; கடவுள் முடியின் மேலிருக்கும்; கொடிய கோபத்தினாலே அதன் பற்பட்டால் இறந்த உயிர் திரும்பமாட்டாது; ஆதலாலும், வாழைப்பழம், நைந்திருக்கும்; தோலுரிக்கப்படும்; கடவுள் திருமுடிமேல் பஞ்சாமிர்தத்தோடு கூட்டி அபிஷேகிக்கப்படும்; கறியாகவாவது, மற்றெவ்வகையாகவாவது புசிப்பவர்களுடைய பல்லினிடத்திற்பட்டால் பின்பு திரும்பமாட்டாது; ஆதலாலும், இவ்விரண்டும் ஒப்பாம்.

ஒருவர், ‘கண்ணாடிக்கும், அரசனுக்கும் ஒப்பமைத்துப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

யாவர்க்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் - ஏவும்
எதிரியைத்தன் னுள்ளாக்கி யேற்ற ரசத்தால்
சதிருறலா லாடியர சாம்.
(32)

இதன்பொருள்: கண்ணாடி, எல்லார்க்கும் விருப்பத்தை உண்டாக்கி, எல்லார்க்கும் அவரவரைப் போலப் பாவனையாய் முகத்தழுக்கு நீங்கத் திருத்தமாகப் பார்க்கப்படுதலாலும், எதிர்ப்பட்டவரது சாயையைத் தனக்குள்ளே கொள்ளத்தக்கதாக ரசம் பூசப்பட்டுச் சதிர் பெற்றிருப்பதனாலும்; அரசன், தன்கோலின்கீழ் வாழ்வார் யாவருக்குஞ் சந்தோஷமாகிய செய்கையைச் செய்து யாவருக்கும் அவரவர் நிலைமைக்கேற்பத் தன்னைப் பாவித்துத் தீமையகலப் பார்ப்பதனாலும், தன்மேற் போருக்கு வருகின்ற பகைஞனைச் சாமோபாயத்தால் தன் வசப்படுத்திச் சிங்கார முதலிய நவரசத்தைக் கொண்டு மகிமை பெற்றிருப்பதனாலும் ஒப்பாம்.

ஒருவர் சிவனைக்குறித்து

தொகு

ஒருவர், ‘சிவனைக் குறித்து, ‘நீறாவாய் நெருப்பாவாய் கூறாவாய் கொளுந்துவாய், நட்டமாவாய், நஞ்சாவாய்,’என்று ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப்பாடிய செய்யுள்:

நீறாவாய் நெற்றி நெருப்பாவா யங்கமிரு
கூறாவாய் மேனி கொளுந்துவாய் - மாறாத
நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பா யினி.
(33)

இதன்பொருள்: நெற்றியின்கண் திருநீறுடையவனாயிருப்பாய், அங்கம் அக்கினி மயமாயிருப்பாய், திருமேனி இரண்டு கூறாயிருப்பாய், அன்றியும் எரிந்துகொண்டிருப்பாய், எக்காலமும் ஒழியாத திருநடம் உடையவனாயிருப்பாய், நஞ்சை உணவாகக் கொள்ளுவாய், (உனது குணாதிசயம் பகிர்முகத்தில் இப்படியிருப்பினும், அந்தர்முகத்திலுள்ள கிருபையினால்) நாய்போன்ற அடியேனை இஷ்டமாக ரக்ஷித்தல் வேண்டும்.

ஒருவர், ‘அடிப்பது மத்தாலேயழ என்பதை ஈற்றடியாகக் கொண்டு அயலடியும் அதுபோலத் திரித்து ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

வண்ணங் கரியனென்றும் வாய்வேத நாறியென்றும்
கண்ணனிவ னென்றுங் கருதாமல் - மண்ணை
அடிப்பதுமத் தாலே யளந்தானே யாய்ச்சி
அடிப்பதுமத் தாலே யழ!
(34)

இதன்பொருள்: உலகமுழுவதும் திருவடித் தாமரையினால் அளந்த பரமவிராட்டுவை, ‘இவன் கார்போலுங் கரிய நிறத்தையுடையவன்,’ என்றும், ‘சகலவேதங்களும் பரிமளிக்கின்ற திருவாயினையுடையவன்,’ என்றும், ‘யாவர் கண்ணினிடத்திலுமிருப்பவன்,’ என்றும் நினையாமல், அசோதைப் பிராட்டியானவள் மத்தினாலேயா அழும்படி அடிக்கிறது? (அவன் முகவுல்லாசமாம்படி பூவும் புனலும் பெய்து பூசிக்க வேண்டுமல்லாவோ?)

ஒருவர், ‘திருமலைராயனுடைய வாளைக்குறித்துப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவா ளிவாளவா ளாம்.
(35)

இது பொருள் விளங்கிக் கிடக்கின்றது.

ஒருவர், ‘சிவபெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும், விநாயகருக்கும், விஷ்ணுவுக்கும், சிவனடியாருக்கும் தனித்தனி ஆறுதலையுண்டென்று ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானவே - சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலை பித்தனார் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்.
(36)

இதன்பொருள்: பரமசிவனுக்குத் திருமுடியிற் கங்கையும், சுப்பிரமணியருக்கு ஆறு சிரசும், விநாயகருக்கு மாறு சிரசும், விஷ்ணுவுக்குப் பிரளயமாகிற உறைவிடமும், சிவனுடைய திருவடியைத் துதி செய்பவர்களுக்கு மனவருத்தந் தணிதலுமுண்டென்று நீ காண்பாயாக.

ஒருவர், ‘சிவனை முக்கண்ணனென்பதற்கு வேறு காரணந் தோன்ற ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே - தொக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையுமித னாலென் றறி.
(37)

இதன்பொருள்: சான்றோர் சிவபெருமானைச் சோம சூரியாக்கினி என்னும் மூன்று கண்ணுடையோனென்று பிரசித்தமாகச் சொல்வார்கள்; அப்படிச் சொல்வது எதனாலெனில், அச்சிவனுக்கு இயற்கையாயுள்ளது அரைக்கண் மாத்திரமே; அதனோடு வாமபாகத்தில் அர்த்தநாரியாய் எழுந்தருளிய உமாதேவியின் கண்ணொன்றரையும், அக்காலத்தில் ஊண்படைத்த கண்ணப்ப நாயனாரென்னும் வேடன் தன் முகத்தினின்றும் களைந்து சார்த்திய கண்ணொன்றுஞ் சேர்ந்து மூன்றாயிருக்கின்ற இவ்விதக் காரணத்தினாலேதானென்று அறிக.

ஒருவர், ‘கஞ்சி குடியென்று சிலேஷையாக ஏகாம்பர நாதர் மேல் ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ என ‘அதற்கு மேலும் விசேஷமாகப் பாடுவோம்,’ என்று பாடிய செய்யுள்:

நேற்றிரா வந்தொருவ னித்திரையிற் கைபிடித்தான்
வேற்றூரா னென்று விடாயென்றேன் - ஆற்றியே
கஞ்சிகுடி என்றான், களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து. (38)

இதன்பொருள்: கொடிபோலும் இடையினையுடைய சேடிகளே! நேற்றிராத்திரி நித்திரை செய்யுஞ்சமயத்தில் ஒருவன்வந்து என் கையைப் பிடித்தான்; நான் அவன் அயலூரானென்று ஐயமுற்றுப் ‘பிடித்த, கையை விடு,’ என்பதற்கு விடாயென்றேன்; அவன் என்னைத் தணியச் செய்து, அதற்கு உத்தரமாக, ‘நீ விடாய் கொண்டிருப்பதனால், அது குடி என்பதுபோலக் ’கஞ்சி குடி’ என்றான்; என்றவுடன் காஞ்சிப்பதியில் வசிக்கும் ஏகாம்பரநாதனென்று நான் தெளிந்து, இப்பொழுது என்னைச் சேர்ந்து சுகித்துப்போ’ என்பது குறிப்பாகத் தோன்றும்படி ‘களித்தின்று போ, என்று சொன்னேன் என்றோ, அல்லது மற்றியாது காரணத்தினாலோ, உடனே மாயமாய் மறைந்துபோய்விட்டான்; இஃதென்னை ஆச்சரியம்!

மேலும், ஒருவர், ‘கத்திக்கும் பாலுக்கும் சிலேஷித்துப் பாடவேண்டும்,’ என்ன, ‘இந்தக் கேள்விக்கும் ஒரு பாடற்பாட வேண்டுமா?’ என்று வாய்மொழியாகச் சொன்ன உத்தரம்:

காய்த்துத் தேய்த்துக் கடை (39)

இதன்பொருள்: கத்தியை உலையிற் காய்ச்சித் துவையல் செய்து கடைச்சற்பிடி,’ என்றும், பாலை அடுப்பிற் காய்ச்சிப் பிரை குத்தித் தோய்த்து மத்தினாற் கடை,’ என்றும் கூறியவாறு.

ஒருவர், ‘என்னை யிடுக்கடி, பாயைச் சுருட்டடி ஏகடியம்பலத்தே’ என்பதைக் கட்டளைக் கலித்துறையாகப் பாடவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

தடக்கட லிற்பள்ளி கொள்வோம்! அதனைநற் சங்கரனார்
அடற்புலிக் குட்டிக் களித்தனராம்! அதுகேட்டு நெஞ்சில்
நடுக்கம்வந் துற்றது கைகா லெழா நளினத்தி! என்னை
இடுக்கடி, பாயைச் சுருட்டடி ஏகடி யம்பலத்தே.
(40)

சங்கரனார் வியாக்கிரபாத முனிவரின் மைந்தரான உபமன்னியுவிற்குப் பாற்கடலை அருந்த அனுக்கிரகம் செய்தனர் என்பது புராணக்கதை. இது திருமால் இலக்குமிக்குக் கட்டளையிட்டதாகப் பாடப்பட்டது. (நளினத்தி-இலக்குமியே, இடுக்கு- நெருக்கம்).

ஒருவர், கரி என்று எடுத்து, உமி என்று முடிக்கவேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

கரிக்காய் பொரித்தாள்கன் னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உபுக்காண் சிச்சீ உமி.
(41)

ஒருவர், கொட்டைப் பாக்கு என்றெடுத்துக் களிப்பாக்கு என்று முடிக்க வேண்டும்,’ எனப் பாடிய செய்யுள்:

கொட்டைப்பாக் கும்மொருகண் கூடையைப்பாக் கும்மடியில்
பிட்டைப்பார்க் கும்பாகம் பெண்பார்க்கும் - முட்டநெஞ்சே!
ஆரணனு நாரணனு மாதிமறை யுந்தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு.
(42)

(ஆரணன்= பிரமன்; களிப்பாக்கு= களிப்பதற்கு)

ஒருவர், ‘சிட்டுக்குருவிக்கும், சிவனுக்கும் சிலேஷித்துப் பாடவேண்டும்,’ என்ன, ‘இதற்கு ஒரு பாடலா!’ என்று வாய்மொழியாகச் சொன்ன உத்தரம்:

பிறப்பிறப் பிலே (43)

இதன்பொருள்: ‘சிட்டுக்குருவிக்குப் பிறப்பு இறப்பிலே,’ என்றும், ‘சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை,’ என்றும் கூறியவாறு.

இவ்வாறு அவர்கள் கொடுத்த சமிசைகளுக்கெல்லாங் காளமேகப் புலவர் யமகண்டத்தின் உறிமேலிருந்தபடி அகிலாண்ட நாயகி அநுக்கிரகத்தாற் பெரும்பான்மை பாடல்களாகவும், சிறுபான்மை வாய்மொழியாகவும் உத்தரஞ் சொன்னதேயன்றிச் சிறிதாவது தவறியதென்று நினைக்கவும், அதுபற்றி அவர்கள் உபத்திரவப்படுத்த எத்தனிக்கவும் இடங்கொடாமற் சாதித்துப் பின்பு உறியைவிட்டிறங்கினார். அவ்வதிசயத்தைப் பிரத்தியட்சமாகக் கண்டும், திருமலைராயனாவது, அதிமதுர கவியாவது, அறுபத்து நாலு தண்டிகைப் புலவர்களாவது, ‘இவர் சாரதா விக்கிரமாக அவதரித்த மகாத்துமா,’ என்று நினையாமலும், சன்மானம் பண்ணாமலும், பொறாமையை மேற்கொண்டு அவரை உபேட்சித்தனர். அதனாற் புலவர் சிரோமணியாகிய காளமேகக்கவிக்கு மனமெரிந்து, சகிக்கக்கூடாமல், மண்மாரி பொழிந்து திருமலைராயன் பட்டணம் அழியும்படி வசை பாடிய செய்யுள்:

கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்.
(44)

செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா! அரனே! அரைநொடியில் - வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற்றியோர்
மண்மாரி யாவழிய வாட்டு.
(45)

பின்பு புலவர்பெருமானானவர்

தொகு

பின்பு புலவர் பெருமானானவர், ‘மதியாதார் வாசலை மிதியாதிருப்பது கோடி,’ என்பதை நினைத்து, ‘இனித் திருமலைராயன் பட்டணத்தைத் திரும்பியும் பார்க்கலாகாது!’ என்ற வைராக்கியத்தினால், முத்து வாங்கி வரும்படி மோகனாங்கி சொன்ன சொல்லையும் பொருள் செய்யாமல், அந்தக்ஷணமே அவ்விடத்தினின்றும் நீங்கி, முன்போலவே ஸ்தல யாத்திரை பண்ணிக்கொண்டு போகையில், கும்பகோணத்தில் சமாராதனையில் சாப்பிடும்போது, தமக்கெதிரில் இருந்துண்ணுஞ் சோழியப்பிராமணன் ஒருவன் குடுமி அவிழ்ந்து இலையில் விழுந்தது; அவன் அதை எடுத்து உதறினான்; அப்போது எச்சிற் சாதம் காளமேகப்புலவர் இலையில் விழ, அதுகண்டு வெகுண்டு பாடிய செய்யுள்:

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!

நாகைப்பட்டினம் காத்தான் வருணகுலாதித்தன் சத்திரத்திற் காளமேகப்புலவர் போஜனஞ் செய்து போம்படி பசியுடன் வெகுநாழிகை பரியந்தங் காத்திருந்து சாப்பிட்டபோது நிந்தித்துப் பாடி, காத்தான் வேண்டுகோளுக் கிணங்கி அதையே துதியாகப் பாடியது:

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் - குற்றி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி யெழும்.

நிந்தையாக
இதன்பொருள்: சத்திக்கின்ற கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்திலிருக்கும் காதான் வருணகுலாதித்தன் சத்திரத்தில் உண்ண வருகிறவர்களுக்குச் சூரியாஸ்தமன காலத்தில் (பொழுதுபோனபோது) சமைக்க அரிசி வந்து சேரும்; அதைக் குற்றி சுத்திசெய்து, சமையல் செய்யுமுன் சனசத்தம் அடங்கியுறங்கும். (நடுராத்திரியாகும்). அப்படிச் சமைத்த சோற்றில் ஓர் அகப்பைச் சாதம் கொண்டுவந்து உண்போர் இலையில் பரிமாறுவதற்கு முன்னம் சுக்கிரோதயமாம், (பொழுதுவிடியும்) என்றபடி.
துதியாக
இதன்பொருள்: க்ஷாமா காலத்தில் அரிசி வந்துகொண்டே இருக்கும்; அதனைச் சுத்திசெய்து சமைக்கச் சமைக்க ஊரிலுள்ளார் உண்டு திருப்தியடைவர்; சமைத்து இலையிலிடப்படும் ஓர் அகப்பை அன்னத்தைக் கண்டமாத்திரத்திற் சுக்கிரனும் இதன் வெண்மைக்குமுன் தனது பிரகாசம் என்னவென்று கேட்க ஓடிப்போவான் என்றபடி.

ஒருநாள் ஒருத்தியின் பிள்ளை காளமேகப்புலவரைக் கண்டு பயந்து, அழுதுகொண்டு தாய்க்குச் சொல்ல, அவள் ‘அட கொடுப்பான்!’ என்று வைததற்குப் பொறாது, அவர் பாடிய வகையால் அப்பிள்ளை இறந்துபோக, அவள்புருஷன் வேண்டுகோளுக்கிரங்கி, மறுபடி அந்தப்பிள்ளை பிழைக்கும்படி பாடிய செய்யுள்:

என்னைக் கொடுத்தா லிரக்கமுனக் குண்டாமோ
வன்னக் கமலமுக வல்லியே! - துன்னுமதைக்
காட்டானைக் கோட்டுமுலைக் காரிகையே! நீபயந்தமே
கோட்டானைத் தானே கொடு.

ஒருகால் ஸ்ரீரங்கத்து வைணவர், ‘பெருமாள் உலகத்தை உண்டபோது சிவபிரான் எங்கேயிருந்தார்?’ என்றதற்குச் சொல்லிய செய்யுள்:

அருந்தினான் அண்டமெலாம் அன்றுமா லீசன்
இருந்தபடி யேதென் றியம்பப் - பொருந்திய
பருங்கவளம் யானைகொளப் பாகனதன் மீதே
இருந்தபடி யீசனிருந் தான்.

மேற்படி வைணவர், விநாயகருக்கு நாமமிட்டுப் ‘பரம விஷ்ணுவே என்று இப்பிள்ளையார் நாமம் போட்டுக்கொண்டார்!’ என்றபோது பாடிய செய்யுள்:

தந்தை பிறந்திறவாத் தன்மையினாற் றன்மாமன்
வந்து பிறந்திறக்கும் வண்மையினால் - முந்தொருநாள்
வீணுக்கு வேளை யெரித்தான் மகன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண்.

ஓரூரிலே திருக்கலியாண மகோத்ஸவங்கண்டருளி வதூவரர்களுக்கு மங்களம் உண்டாகும்படி சேஷையிட்டபோது, ‘சிவபெருமானும் விஷ்ணு பகவானுங் காக்க!’ என்று ஆசீர்வதித்த சிலேடை வெண்பா:

சாரங்க பாணியாஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிராளர் - பாரெங்கும்
ஏந்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண்.

சிவபரமாக
இதன்பொருள்: மானேந்திய கரத்தையுடையவரும், பஞ்சாக்ஷர சொரூபியும், முன்னொரு காலத்திற் பிரமன் சிரசொன்றைக் கிள்ளியெறிந்தபோது தம் நகங்களையே வாளாகக் கொண்டவரும், உலகமெல்லாம் போற்றும் உமாதேவியை அகத்திலுடையவரும் ஆகிய சிவபிரானும்,
விஷ்ணுபரமாக
சாரங்கம் என்னும் வில்லைக் கையிற் பிடித்திருப்பவரும், அழகிய சக்கராயுதந் தரித்தவரும், கம்சனுடைய அங்கத்தை வெட்டிய கூரிய வாளையுடையவரும், உலகெல்லாம் போற்றும் நீலமேனியரும் ஆகிய விட்டுணு மூர்த்தியும் உங்களை எப்போதும் அருள்மிகுந்து காத்திடுவர்.

பின்பு திருவாரூரில் வந்துசேர்ந்து, சிலநாள் வசித்திருக்கையில் ஒருநாள் தியாகரைத் தரிசிக்கும்படி கோயிலுக்குப் போன வேறொரு வித்துவான் சுவாமிமேல் சிலேஷையாக ஒரு பாடற்பாட வேண்டுமென்று நினைத்து,

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம்

-என முதலடி மாத்திரந் தொடங்கி, அப்புறம் அமைக்க அவருக்குக் கருத்துத் தோன்றாமையால், அதை அந்தக்கோவில் மதிற்புறத்தில் எழுதிப்போய் மறுநாள் வந்து பார்க்குமளவில், அதன்கீழ்,

பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே!
சீராரூர் மேவுஞ் சிவனேநீ யெப்படியோ
நேரார் புரிமெரித்த நேர்!

என்ற மற்றமூன்றடியும் முடித்து எழுதியிருக்கக்கண்டு விசாரித்து, காளமேகப்புலவரால் அது முற்றுப்பெற்றதென்று கேள்விப்பட்டு, அவர் கவிபாடுந் திறத்தைக் குறித்து அவ்வித்துவான் அதிசயித்து, அதிக சந்தோஷப்பட்டார். இப்பாடலின் பொருள்: அக்கினிஸ்தம்பமாய் விளங்கியிருப்பவனே, சிறப்புப் பொருந்திய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே! திரிபுர தகனஞ் செய்த காலத்தில் உன் கையிலேந்திய வில் நாரோ, நைந்திருந்தது; அவ்வில்லோ, வளைக்கப்படாத கல்லாயிருந்தது; அம்போ, மண் தின்னப்பட்டிருந்தது; இப்படி உனக்குக் கிடைத்த யுத்தாயுதமெல்லாம் ஒன்றுக்கும் உதவாமற் கேவலம் அவலமானவைகளாயிருக்க, சத்துருக்களுடைய நகரத்தை நீ எரித்தாய் என்பது எப்படியோ? யோசிக்குமிடத்திற் சிரிப்பாயிருக்கின்றது!

அதன்பின்பு வெகுநாள் கழித்துக் காளமேகப்புலவர், பிராண வியோகமாய், அவர் சரீரம் மசானத்திற் காஷ்டத்தின்மேல் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கையில், மேற்படி வித்துவான் அச்செய்தி கேட்டு, அம்மயானத்திற் சென்று, பிரேதாக்கினி கொழுந்துவிட்டு எழுந்து ஆகாயமளாவி எரிவது கண்டு மனங்கலங்கி,

ஆசுகவி மாரி யகில வுலகமெலாம்
வீசு கவிகாள மேகமே! - பூசுரா
விண்கொண்ட செந்தழலாய் வேகின்ற தேயையோ
மண்டின்ற பாணமென்ற வாய்.

என ஒரு வெண்பாப் பாடி வியசனப்பட்டார். இந்தப் பாடலும், ‘நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபம் கற்சாபம்’ என்கிறதும், இரட்டைப் புலவர்களாற் பாடப்பட்டனவென்று சிலர் சொல்வர். அப்படிச் சொல்வது யுத்திக்கும் அனுபவத்திற்கும் விரோதமாயிருக்கின்றது.

இன்னும் காளமேகப்புலவர் பாடிய பாடல்கள் பல உண்டு. அவைகளுட் சில இடக்கர்களாயும், கொடிய வசை முதியவைகளாயும் இருப்பதுபற்றி, இங்கு விடப்பட்டன. அவைகளைத் தனிப்பாடற்றிரட்டில் விரிவாகக் காணலாம்.

‘காளமேகப்புலவர் சரித்திரம்’ முற்றியது

பார்க்க:

தொகு

விநோதரசமஞ்சரி

13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது

15.ஏகம்பவாணன் சரித்திரம்