விநோதரசமஞ்சரி/15.ஏகம்பவாணன் சரித்திரம்

விநோத ரச மஞ்சரி

தொகு

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

தொகு

ஏகம்பவாணன் சரித்திரம்

தொகு

நிலவளம் நீர்வளம் பொருந்திய தென்தேசத்திலே வசித்திருந்த வேளாள குலதிலகனாகிய வாணன் என்பவன், ஆயிரம் ஏர் வைத்து விவசாயஞ்செய்து, வெகு திரவியஞ் சம்பாதித்துச் சீமானாய் வாழ்ந்திருக்கும் நாளில், அந்தப் பிரபுவுக்கு ஓர் ஆண்பிள்ளை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜாதகம் கணிக்கவேண்டுமென்று ஜோதிஷர்களுக்குச் சொல்ல, அவர்கள் தற்காலக் கிருக நிலையைப் பார்க்குமளவில், ஐந்திற் சூரியனிருக்க, அவனைச் சனி பார்ப்பதனாற் பிதிருகண்டமும், நாலிற் சந்திரனிருக்க அவனைச் சுக்கிரன்பார்ப்பதனாற் மாதிரு கண்டமுமாய் இருப்பதை அறிந்து, அவர்கள், ‘இதை எப்படி முதலியாருக்கு அறிவிப்பது!’ என்று மயங்கி வியசனமுற்றிருந்து, பிறகு சாஸ்திரத்துக்குத் தோஷஞ் சம்பவியாமலிருக்கும்பொருட்டு அதனை ஒருவாறு குறிப்பித்தார்கள். விவேக கோசரமுடைய அந்த முதலியார், ‘உள்ளதை நீங்கள் மறைப்பானேன்? எதுவும் ஊழின்படி நடக்கிறது! மாதுரு பிதிருகளின் நிரியாண காலத்தை மாத்திரம் திட்டமாய் அறிவிக்கவேண்டும், என்ன, அவர்கள் உள்ள வண்ணம் தெரிவித்த சமயத்தில், அவர், ‘உலகத்திற் சாதகம் விதித்தபடியே நடக்கின்றதா? இதை நம்புவது எப்படி? என்ன, ஜோதிஷர்கள், ‘வாத துர்ப்பலமேயொழியச் சமயதுர்ப்பலமில்லை என்பார்களே! அதுபோலச் சோதிடர்கள் செவ்வையாய் ஆராயாமையால், ஒருவேளை தப்பிப் போனாலும் போகலாம், சாஸ்திரம் தவறாகமாட்டாது; இதற்குத் திருஷ்டாந்தம் ஒன்றுண்டு’ என்ன, அவர், ‘அவர் அஃதெப்படி?’ என, ஜோதிஷர்கள் சொல்லத் தொடங்கினார்கள்:

‘பூர்வம் ஒரு வேந்தனுடைய சம்ஸ்தானத்தில் ஜோதிஷத்திற் பிரபல பாண்டித்தியமுடையவர் ஒருவரிருந்தார். அவருக்குச் சமானமாகப் பிரகஸ்பதியைத்தான் சொல்லவேண்டும். சிருஷ்டிகாலந் தொடங்கிக் கிழக்குமேற்காக உதயமாகி அஸ்தமிக்குஞ் சந்திர சூரியர் தெற்கு வடக்காக மாறி உதித்தொடுங்கினாலும் அவரெழுதுஞ் சாதகம் ஒரு பொழுதும் மாறுபடுகிறதே யில்லை. அப்படிப்பட்டவருக்கு அருமையாக ஒரு பெண்குழந்தை பிறந்தது; அதற்கு அவர் ஜாதகம் கணித்துப் பலாபலத்தைப் பார்க்கும்பொழுது, ‘விவாகமாகி சாந்தி செய்யப்பட்ட க்ஷணமே அந்தப்பெண் வைதவ்வியத்தையடையும்,’ என்றிருந்ததனால், அந்த ஜோதிஷர், ‘நம் குழந்தைக்கு இந்தக் கதியானால், நாமெப்படிச் சகித்திருப்பது!’ என்று துக்க சாகரத்தில் மூழ்கிப் பிறகு அப்பெண்ணை நாளொருமேனியும் பொழுதொருவடிவுமாக வளர்க்க, வளர்ந்துகொண்டிருக்கையில், மேற்படி செய்தி எங்கும் பிரசித்தமானதால், அவள் பிரவிடையாகுமளவும் அவளை விவாகஞ்செய்வார் இல்லாதது கண்டு, ஜோதிஷர், ‘ஐயோ? பிராமண ஜாதியிற் பெண்களுக்கு இளமையிலே தானே விவாகம் நடக்கிறது சம்பிரதாயமாயிருக்க, நம்முடைய பெண் பருவமுடையவளாகியும், பாணிக்கிரகணமாகாமலிருப்பது நாம் ஜன்மாந்திரத்திற் செய்த குறையோ? செலவெல்லாம் நாமே இறுத்துக் கன்னிகாதானமாகக் கொடுத்தாலுங் கொள்ளமாட்டோம் என்கிறார்களே! பெண்ணைப் பெற்றுக் கலியாணஞ் செய்விக்காமற் சும்மா வைத்திருப்பதும் தர்மமன்றே? என்ன செய்யலாம்?’ என்று அல்லும்பகலும் இதுவே சிந்தையாயிருந்தார்.

ஒருதினம் உத்திரதேசத்துப் பிரமசாரி பிராமணன் ஒருவன் இவர் கிருகத்திற்குப் ‘பவதி பிக்ஷாந்தேகி’ என்று உபாதானத்திற்கு வர, இவர் அவனைப் பார்த்து, ‘இங்கே ஒரு பெண்ணிருக்கிறாள்; அவளைப் பதினாயிரம் வராகன் ஸ்திதி வைத்துப் பதினாயிரம் வராகன் விலை மதிக்கத்தக்க பூஷணமிட்டு, ஒரு பெரிய வீடும் கட்டிக்கொடுத்து உனக்கு விவாகஞ்செய்விக்கிறேன், சம்மதிதானா?’ என்ன, அவனுக்குச் செய்தி தெரியாததனாலும், எளியவனாதலாலும், ‘பணமென்றாற் பிணமும் வாயைத் திறக்கும்,’ என்கிற பழமொழிப்படி, அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு, உடன்பட்டான். இவர் தம் பெண்ணை அவனுக்குத் தத்தம் பண்ணிச் சம்பிரமாக ஏழுநாள் வரைக்குங் கலியாணச் சடங்கு செய்வித்து எட்டாநாள் ருதுசாந்தி நடப்பித்தார்.

‘அந்தப் பிராமணன் சயனக்கிருகத்தில் அன்றிரவு அப்பெண்ணுடன் கூடிச் சுகம் அனுபவித்தான். அவன், மலோபாதைக்குப் போய்வருகிறேன்!’ என்று தன் மனைவியிடம் சொல்ல, அவள் மேற்படி சங்கதி தெரிந்தவளாகையால், தூரத்திற் போகவிடலாகாது என்று தங்கள் கொல்லையிலேதான் சீக்கிரம் போய்வரச் சொன்னாள். அவன் அப்படியே போய் மலவிசர்ச்சனம் பண்ணி அக்கொல்லைக்கு அப்புறத்திலுள்ள மடுவிற்போய்ச் சௌசம் முடித்துக் கொண்டு திரும்புகையில், அதிலிருந்து ஒரு முதலை அவன் காலைக் கவ்விப் பிடித்தது. அப்பொழுது, பிராமணன், ‘நீ என்னை விட்டுவிடு,’ என்ன, முதலை, ‘என்ன, முதலை, ‘எனக்குப் பசியாயிருப்பதனால், விடமாட்டேன்,’ என்ன, அவன், ‘அப்படியானால் நல்லதுதான்; ஆயினும், புதியவளாக மணஞ்செய்யப்பட்ட என் பெண்சாதிக்கு ஒரு சொற்சொல்ல வேண்டியிருக்கிறது; அதைக்குறித்து நான் போய் ஐந்து நிமிஷத்திற்குள்ளே வருகிறேன்’ என, முதலையானது, ‘நீ சொன்னசொல் தவறினால், தீபம் அணைந்து போன சமயத்திற் போஜனஞ் செய்தவன் போகின்ற கதியிற் போகிறேன்,’ என்று பிரமாணிக்கம் பண்ணினால் விடுவேன்,’ என, அவன் அப்படிச் சத்தியஞ்செய்து கொடுத்துத் தன் மனைவியிடத்திற் வந்து, அச்செய்தியைச் சொல்ல, அவள் பலவித்ததிலுந் தடுத்துங் கேளாமல், திரும்பிவந்து முதலையை அழைத்து, ‘என்னைஉண்டு உன் பசியைத் தீர்த்துக்கொள்,’ என்றான். அது அதிக ஆசையுடனே விழுங்குகிற தருணத்தில் அவன் பெண்சாதி விளக்கை ஏற்றி ஒரு பாத்திரத்தில் மறைத்துப் புருஷன் பின்னே தெரியாமற் கொண்டுபோய் முதலைக்கு வெளிச்சம் தெரியும்படி காட்டி, அந்தக்ஷணமே பொட்டென்றணைத்து விட்டாள். அதுகண்டு முதலை, ‘ஹரிஹரி! இஃதென்னை பாவம்!’ என்று பிராமணன் காலை விட்டுவிட்டது. அவன், ‘நீ ஏன் என்னை விழுங்காமல் விட்டுவிட்டாய்?’ என, அது ‘சத்தியமென்பது உனக்கு மாத்திரந்தானா? எனக்கில்லையா? நான் இனி உன்னைத் தீண்டமாட்டேன்! சுகமாய்ப்போ!’ என்றது. மறுபடி இவனென்ன சொல்லியுங் கேளாமல் அதுவும் இவனும் வாதாடிக்கொண்டிருக்கையில், பிராமணத்தி கணவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டாள்.

பொழுது விடிவதற்கு முன்னே பந்துக்கள், ‘ஜோதிஷர் மாப்பிள்ளை இறந்துபோயிருப்பான்; பிரேதத்தை மயானத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க வேண்டும்,’ என்று அவருடைய வீட்டுத் தெருவாயிலில் வந்து கூட்டங்கூடியிருந்தார்கள். ஜோதிஷரோ, பெண்ணையும் பிள்ளையையும் இராத்திரி சயன கிருகத்தில் விடுத்த மாத்திரத்திற் சுடுகாட்டற் காஷ்டம் அடுக்குவித்து, பிணத்திற்கு உடுத்த கோடி வஸ்திரம் பாடை முதலானவைகளும் ஜாக்கிரதை செய்வித்திருந்து, காலையில் எழுந்து கதவைத் தட்டி மகளைக் கூவி, ‘அம்மா, உன் நாயகனுடைய க்ஷேமம் என்ன?’ என, அவள் கதவைத்திறந்தாள். மருமகன் சிறிதும் வாட்டமின்றி உயிரோடிருக்கப் பார்த்து, நடந்த செய்தியை விசாரத்தறிந்து, ஆச்சரியப்பட்டு, ‘ஓ!ஓ! சாஸ்திரம் பொய்த்துப் போய்விட்டது; ஆகையால் இனி ஜோதிஷ சாஸ்திரத்தை நம்புதற்கோ இடமில்லை; என் மாப்பிள்ளைக்கு அடுக்கிய காஷ்டத்தில் இப்புத்தகங்களையெல்லாம் வைத்து நெருப்பிட்டுக் கொளுத்திப் போடுகிறேன்!’ என்று நிச்சயித்து, அவைகளையெல்லாம் மேற்படி பாடைமேற் சுடலைக்கு எடுப்பித்துக் கொண்டுபோய்க் கட்டைமேல்வைத்துக் கொளுத்தப் போகிற சமயத்தில் பிரகஸ்பதி பகவான் ஒரு பிராமணப் பிள்ளையாக வடிவுகொண்டு எதிரே வந்து, ‘கட்டைமேல் வைக்கப்பட்டிருக்கிற இவை யென்னை?’ என்று கேட்க, சாஸ்திரி, ‘ஜோதிஷ புஸ்தகங்கள்,’ என்று சொல்ல, ‘இவற்றைக் கொளுத்த வேண்டிய நிமித்தம் என்ன?’ என, புத்திரியின் ஜாதகம் பொய்த்துப் போனதால், இவற்றாற் பயனில்லையென்று கொளுத்த யத்தனித்தேன்,’ என, பிரகஸ்பதி, ‘சாஸ்திரம் எக்காலதும் பொய்யாது; அஃது இருக்கட்டும், இப்பொழுது பிரகஸ்பதி எங்கிருக்கிறார்? சொல்லும் பார்ப்போம்,’ என, ஜோதிஷர் தற்கால லக்கினத்தைச் சோதித்துப் பார்க்குமிடத்தில் மற்றெங்குமில்லை என்றும், தம்முடனே பேசுகிறவரே அப்பிரகஸ்பதி என்றும் அறிந்து, ஐயமுற்றிருக்க, பிராமண வடிவாகி வந்த பிரகஸ்பதி, பின்னும் அவரை நோக்கி, ‘உம் புத்திரி உற்பத்தியான காலத்திற் பிரகஸ்பதி இருந்த சமயமென்ன?’ என, அவர், ‘கண்ணை மூடிக்கொண்டிருந்தார்,’ எனத் தேவகுருவானவர், ‘கண்ணை மூடினது மெய்யே, ஆயினும் சிசு உற்பத்தி அப்பொழுதன்று, மூடித்திறந்த மாத்திரத்திலாகையால் உம் குமாரத்திக்கு வைதவியம் வருவதற்குக் காரணமில்லை’ என்று தெளிய உரைத்துத் தமது நிஜ ஸ்வரூபத்தையுங் காட்டிப் பின்பு அந்தர்த்தானமாய் விட்டார்,’ என்று சொன்னார்கள். அதுகேட்டு வாணமுதலியார், ‘அப்படியா! அன்றெழுதினவன் இனி அழித்தெழுதப் போகிறதில்லை! வருகிறது வரட்டும்!’ என்று நினைத்திருந்தார்.

சிலநாளில் அவர்கள் தெரிவித்தபடியே ஜாதகனுடைய தாய் காலஞ்சென்று போனாள். அதையறிந்தவுடனே வாண முதலியார் தமக்கு மரணம் சமீபத்திருப்பதையும், பிற்காலம் குழந்தைக்கு ஆதரவில்லாத்தையும் நிச்சயித்துணர்ந்து, தம்மிடத்தில் நெடுநாளாய்ப் பண்ணையாளாயிருந்து, அகமும் புறமும் ஒத்து நடந்த உண்மையுள்ள உத்தமனாகிய ஏகன் சாம்பானிடத்தில் அந்தக் குழந்தையையும் சொத்துகளையும் ஒப்புவித்து, அவன் முகத்தைப் பார்த்து, ‘கொல்லையிற் பூமிக்குள் அளவிறந்த திரவியம் புதைத்து வைத்திருக்கிறேன்; அதையும் நீயே கைக்கொண்டு, இப்பிள்ளையையும் உன் பிள்ளையாக வளர்த்துக்கொள்,’ என்று சொல்லிவிட்டுத் தேகவியோமானார்.

அப்பண்ணைக்காரன், தன் ஆண்டை சொற்படியே அவருக்குச் செய்யவேண்டிய உற்றுரிமை முதலிய கிரியைகளையெல்லாம் அக்குழந்தையைக் கொண்டு குறைவில்லாமல் செய்வித்து, வேளாளர் குலத்தில் நல்ல சங்பிரதாயஸ்தராகிய ஒருவரைக் கொண்டு, அப்பிள்ளைக்கு வேண்டிய உணவு முதலியவைகளை ஊட்டி வளர்ப்பித்து, ஐந்து வயதிற் பிரபல வித்துவானாகிய கம்பரிடத்தில் விடுத்துக் கல்வி பயிற்றுவித்து, அவன் பூரணபாண்டித்தியமுடையவனான காலத்தில், அப்பிள்ளையின் மரபில் தகுதியான பெண்ணைத் தேடி விவாகமுஞ் செய்வித்து, தன் எஜமானருடைய சொத்துகளில் அரைக்காசளவும் தான் இச்சியாமல், முழுமையும் எஜமானரின் பிள்ளைக்கு ஒப்புவித்துப் புதையலிருக்கும் இடத்தையுங் காண்பித்து, ‘இதையும் நீயே அனுபவித்துக்கொள்; எனக்கு ஒன்றும் வேண்டுவதில்லை,’ என்றான்.

அப்பிள்ளை பண்ணையாள்

தொகு

அப்பிள்ளை பண்ணையாள் காட்டிய இடத்திலுள்ள நிக்ஷேபதனத்தை வெட்டியெடுக்கப்போன சமயத்தில் அதைப் பூதங் காத்திருந்த்தனால், வெட்டினவன் மூக்கிலும் வாயிலும் உதிரம் பெருக, அவன் கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான். மேலும் கருங்குளவிகள் செங்குளவிகள் புறப்பட்டு, அருகிலே ஒருவரையும் அணுகவொட்டாமல் துரத்தத் தலைப்பட்டன’ அதனால், ‘இதற்கென்ன செய்வது?’ என்று மனமுருகியிருக்கையில், அன்றிராத்திரி பிள்ளையின் சொப்பனத்தில் அப்பூதம் வந்து, ‘நான் நெடுங்காலமாகக் கண்ணை இமை காப்பது போல இடைவிடாது பாதுகாத்திருந்த ஏழு கோடி திரவியத்தை எளிதாக நீ கைப்பற்றிக் கொள்வதெப்படி? எனக்குத் திருப்தியுண்டாகத் தயை உண்மை பத்தி முதலிய நற்குணங்களையுடைய ஒரு புருஷனைப் பலிகொடுத்தால், இந்தத் திரவியத்தைக் கொடுப்பதுமன்றி, நானும் உனக்குக் கைவசமாகி, உட் தொண்டு போல எப்பொழுதும் காலாலிட்ட வேலையைக் கையாற் செய்துவருவேன்,’ என்றது. அவன் விழித்துக்கொண்டு ஏகன் சாம்பானை அழைத்துத் தான் கண்ட கனாவை அவனுக்கு அறிவிக்க, சாம்பான், ‘அந்தப் பூத்ததிற்கு ஒரு நரபலி கொடுத்தால், ஏழுகோடி திரவியம் அகப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை; அதைக்குறித்து அவசியம் முயற்சிசெய்யத் தான் வேண்டும்,’ என, அது கேட்டுப் பிள்ளையாண்டான், ‘யாரைப் பலிகொடுக்கின்றது?’ என்று யோசிக்குமிடத்திற் பண்ணையாள், ‘யோசனையென்ன? தடையில்லாமல் என்னைப் பலி கொடுக்கிறதுதானே!’ என்றான். அப்பிள்ளை, ‘கிருஷ்ண! கிருஷ்ண! பெற்ற தகப்பனைப் பார்க்கிலும் என்னிடத்தில் அதிக பிரீதியுள்ளவனாகி என்னை வளர்த்து, எனக்குச் சகல யோக்கியதையுமுண்டாகும்படி மிகவும் பாடுபட்ட உன்னையா பலிகொடுக்கிறது? இது நன்றாயிருக்கிறது! எனக்கிப்பொழுது உள்ள திரவியமே போதும்; நானந்த ஜோலிக்கே போகிறதில்லை,’ என்றான். ஏகன், ‘இஃதென்னை! எத்தனை நாளிருந்தாலும் ஒரு நாளிறக்கத்தானே வேண்டும்? எப்படிப் பட்டவர்களுஞ் சாகாதிருக்க மாட்டார்களே! மண்ணிலே முளைத்த பூண்டு மண்ணுக்கு இரையாமல்லவா? நானிருந்து ஆரை ரக்ஷிக்கப் போகிறேன்? இறந்தேனானால், யசமானருக்கு ஏழு கோடி நிதி கிடைக்கிறதே!’ என்று நினைத்து, அன்றிராத்திரி ஒருவருக்குந் தெரியாமற் புதையலிருக்கிற இடத்திற் போய்க்கழுத்தை அறுத்துக்கொண்டு பூதத்திற்குப் பலியானான்.

அந்த க்ஷணமே பூதம் வாணமுதலியார் பிள்ளையின் சொப்பனத்திற்போய், உங்கள் பண்ணைக்காரன் எனக்கு இப்பொழுது பலியாய்விட்டான்; இனி நீவந்து உன் பிதா புதைத்துவைத்த ஏழு கோடி திரவியத்தையும் கைப்பற்றிக் கொள். நானுனக்குச் சொன்ன சொல் தவறாமல் இன்றுமுதல் தொண்டு செய்கிறேன்,’ என்றது. அவன் விழித்தெழுந்திருந்து அந்த இரவில் திரவியம்புதைபட்ட இடத்திற்போய், ஏகன் சாம்பன் கழுத்தறுபட்டுக் கிடக்கிற அலங்கோலத்தைக் கண்ணினாற் பார்த்து, மனம் பதைக்க, அவனுக்காகக் கண்ணீர் விட்டழுது, மெய்சோர்ந்து, பின்பு அவனைச் சிறப்பாக எடுத்துத் தகனம்பண்ணி, சஞ்சயனம் அந்திய கர்மம் முதலானவைகளும் தன் கையினாலேயே செய்துமுடித்து, அவன் செய்த நன்றியை மறவாதிருப்பதற்காக அவன் பெயரை முதலிலும், கம்பர் தனக்காசிரியராகையால் அவர் பெயரை இடையிலும், வாணர் தன்னைப் பெற்றவராகையால் அவர் பெயரைக் கடையிலுஞ் சேர்த்து, அம்மூன்றும் ஒருமிக்கத் பெயராக வழங்கவேண்டுமென்று ஏக கம்ப வாணன் எனத் தான் பெயரிட்டுக்கொண்டு அந்தப் புதையலை வெட்டியெடுத்துத் தன் வீட்டிற் சேர்ப்பித்துத் தன் தந்தையினும் அதிக தனிகனாயும் சகல ராசாக்களும் மதிக்கத்தக்க மகா பிரபுவாயும் கீர்த்தி பெற்றிருந்தான்.

சேர சோழ பாண்டியன் மூவரும் ஒரு தினம் ஏகம்பவாண முதலியாரைக்காண வேண்டுமென்று அவன் வீட்டுக்கு வந்து, ‘முதலியார் எங்கே?’ என்று உள்ளே ஆளனுப்பி விசாரிக்க, அவன் மனைவி, ‘கழனிக்குப் போயிருக்கிறார்,’ என்ற உத்தரஞ்சொல்ல, இவர்கள் அது கேட்டு, ‘முடி நடப் போயிருக்கிறாரோ?’ என்று அவன் குலத்தொழிலைக்குறிப்பித்து ஏளனம் பண்ணினது கண்டு, அவன் மனைவிக்கு அது சகியாமையால், அவள், ‘நம் முதலியார் முடிநடுவது மெய்தான்; ஆயினும், அவர் இந்தச் சொற்பமாகிய நாற்று முடியா நடுவார்? சேரசோழ பாண்டியர்களாகிய மூவேந்தருடைய முடிகளைப் பறித்தெடுத்து, அவர்கள் சேனைகளைக் கண்டதுண்டமாக்கி, யுத்தகளமாகிய கழனியில் அவற்றை எருவாக இட்டு, அது நிறைய சிவந்தரத்தமாகிய நீரைத்தேக்கி, ஏறும் பட்டவர்த்தன யானையாகிய பகட்டை விடுத்து, அதன் காலால் மிதிப்பித்துக் குழை சேறாக்கி, அச்சேற்றில் வரிசையாக நட்டு, வெற்றியாகிய வேளாண்மை செய்துவருகிறார்,’ என்ற கருத்துக்கேற்க,

சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அடிச்சேற்றில் - மானபிரான்
மாவேந்த னேகம்ப வாணன் பறித்துநட்டான்
மூவேந்தர் தங்கண் முடி.

என்றொரு பாடலை எழுதிப் போக்கினாள். அப்பாடலை அவர்கள் படித்துப் பார்த்து, ‘அடா! இவன் இப்படிப்பட்ட ரணசூரனென்று நாமறியாமற் போனோமே! நல்லதாகட்டும்!’ என்று இறுமாப்புடனே போய்விட்டார்கள். அவர்கள் போன மாத்திரத்தில் ஏகம்பவாணன் வீட்டுக்கு வந்து, மேற்படி செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் கர்வத்தை அடக்க வேண்டுமென்று தன்னிடத்திலுள்ள பூதத்தை அனுப்பி, ‘முன்னே சேரனைத் தூக்கி வா,’ என்றான். அது, சேரன்படுத்து நித்திரை பண்ணும்பொழுத கட்டிலோடே தூக்கி வந்து எதிரே விட்டது; அவனைச் சிலநாள் வரையிற் சிறைக்கூடத்தில் அடைத்து வைக்க, அவன் ‘நம் வாய்க்கொழுப்பாலல்லவா இப்படி வந்து விடிந்த்து! என்ற ஏகம்பவாணனுக்கு வருஷந்தோறும் இவ்வளவு திரவியம் பகுதி கட்டுகிறேனென்று ஒரு தொகை குறித்து உடம்படிக்கை செய்து இதமாக அவனிடத்திற் செலவு பெற்றுக்கொண்டு தன் தேசத்திற் போய்ச்சேர்ந்தான்.

அவன்போனபிறகு சோழனிடத்திற்குப் பூதத்தை யேவிப் பிடித்து வரச்செய்து, அவனையும் அவ்வாறு உடம்படிக்கை பண்ணச்சொல்லிச் சிறை நிவர்த்தியாக்கி அனுப்பிவிட்டு, கடைசியிற் ‘பாண்டியனைக் கொண்டுவா,’ என்று பூதத்திற்கு உத்தரவு பண்ணினான். பாண்டியன் பேய்க்கு விரோதமாகிய வேப்பமாலை தரித்திருப்பவனாதலால் அவனிடத்தில் அது போகப்பயந்து பின்னிடுவதைக் கண்டு, கம்பர் வீட்டுக்குப் போய் இச்செய்தியை அவரிடத்திற் சொல்லி, ‘இதற்கென்ன உபாயஞ் செய்யலாம்?’ என்ன, கம்பர் ‘பிடியானையைக் கொண்டு களிற்றியானையை வசப்படுத்துவது போல, ஸ்திரீகளைக் கொண்டு அவனை மயக்கி அந்த வேப்பமாலையைக் கிரகித்து வரும்படி செய்தால், அப்பால் உமது எண்ணஞ் சித்திக்கும்,’ என்று தமது வீட்டில் வேலை செய்கின்ற வெள்ளாட்டிகளுள் நாலு பெயரை அழைத்து, ‘நீங்கள் முதலியார் சொன்னவண்ணஞ் செய்யுங்கள்,’ என்று ஏவினான். ஏகம்பவாண முதலி அந்நால்வர்க்கும் விலையுயர்ந்த வஸ்திரம், ஆபரணம், புஷ்பம், பரிமளதிரவியம் முதலியவைகளைக்கொண்டு நன்றாக அலங்காரம பண்ணுவித்து, நீங்கள் பாண்டியனிடத்திற்சென்று, அவனுக்கு உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டி, நான் கொண்ட கருத்து முற்றும்படி எவ்விதத்திலாவது என் மூக்கை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும்,’ என்று அனுப்பினான். அவர்கள் நாலு பெயரும் அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்னும் நால்வரைப்போலப் பாண்டியன் சமுகத்திற்குப்போய், மயிலாடுவது போல நடனமாடியும், குயில் கூவுவதுபோல இசை பாடியும் அவனைப் பிரமிக்கப் பண்ணினார்கள்.

மீனத்துவசனாகிய பாண்டியன், ஆனந்த பரவசமாய் அவர்களுக்கு முத்துமாலை, மோகனமாலை முதலாகிய அனேக பூஷணங்கள் வெகுமானஞ் செய்தான்; அவர்கள் அரணனை நோக்கி, ‘மகாபிரபு, நீரெங்களுக்குப் பரிசு கொடுக்கும்பொழுது எங்களைக்கேட்டு எங்கள் அபீஷ்டப்படியல்லவோ செய்ய வேண்டும்? அப்படிச் செய்யவில்லையே!’ என்றார்கள். பாண்டியன் அவர்கள் கருத்தை அறியாமையால், ‘நீங்கள் சொல்லுவது சரிதான்; உங்களிஷ்டப்படியே செய்கிறேன், சொல்லுங்கள்,’ என்றாள். அவர்களில் ஒருத்தி, ‘மகாராஜரே! என் பெண் நீர் கொடுத்த முத்துமாலை மோகனமாலை மேல் ஆசை கொண்டவளல்லள், உமது தோளிலணிகின்ற வேப்பமாலை மேலேதான் ஆசைகொண்டிருக்கிறாள்; ஆகையால், அதை அவளுக்குக் கொடுக்க வேண்டும்,’ என்று குறிப்பித்து,

மாப்பைந்தார் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவென்பெண்
வேப்பந்தார்க் காசைகொண்டு விட்டாளே! - பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவிலிமா றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா

-என்று ஒரு கவிபாடினாள். அவன் அது கேட்டு, ‘வேப்பமாலையை எப்படிக் கொடுத்துவிடுகிறது!’ என்று நினைத்து ஒன்றும் அவட்கு உத்தரஞ் சொல்லாமலிருந்தான்.

மற்றொருத்தி அந்தக் கருத்தைக் கொண்டே,

தென்னவா மீனவா சீவிலிமா றாமதுரை
மன்னவா பாண்டி வளநாடா முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண்

-என்றொரு பாடலைப் பாடினாள். அதற்கும் அவன் மறுமொழி சொல்லவில்லை.

பின்னொருத்தி, அந்த நோக்கத்தினாலேயே,

வேம்பா கிலுமினிய சொல்லுக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ? - மீன்பாயும்
வேலையிலே வேலைவைத்த மீனவா நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்

என்றொரு பாட்டைச் சொன்னாள். அவன் அதற்கும் வாய்திறவாமல் மௌனமாயிருந்தான். அதன்பிறகு ஒருத்தி, அப்பெண்கள் மூவரையும் பார்த்து, ‘கேளுங்கள்! சகோதரிகளே பாண்டிய மகாராஜா இந்தச் சொற்பமாகிய வேப்பமாலையைக் கொடுக்கமாட்டார் என்று நினைக்கவேண்டா; இவராலே வஞ்சனையில்லை! ஆற்றூரில் அரசு செலுத்துகின்ற ஏகம்பவாண முதலியாரிடத்திலுள்ள பூதம் வந்து நம்மைப் பிடிக்குமென்னும் அச்சத்தினாலேதான் கொடாமலிருக்கின்றார். இதை அறியாமல், நீங்கள் ஏன் வீணே இவரை அலட்டுகிஃன்றீர்கள்? இவர்மேல் தோஷம் சொல்வது சரியன்று,’ என்று அவன் மனத்திற்குத் தக்கதாக,

இலகு புகழாறை யேகம்ப வாணன்
அலகை வரும்வருமென் றஞ்சி - உலகறிய
வான்வர்கோன் சென்னிமேல் வண்கை வளையெறிந்த
மீனவர்கோ னல்கிடான் வேம்பு

என்ற பாடலைச் சொன்னாள்.

அதுகேட்டு அவன், ‘நம்மை இவள் கேலி செய்கிறாள்! என்று வெட்கப்பட்டு, ‘இனி, எப்படிச் சம்பவித்தாலுஞ் சம்பவிக்கட்டும் மானம் போனபிறகு பிராணனிருந்து பிரயோஜனமென்ன? உலோபி யென்று மாத்திரம் பெயரெடுக்கலாகாது; கர்ணராஜன் அவன் தேடிய புண்ணியத்தையுமல்லவோ தானம் பண்ணினான்!’ என்று நினைத்து, அந்த நொடியில் தான் தரித்திருந்த வேப்பமாலையைக் கழற்றிக் கொடுத்துவிட்டான். அவர்கள் அவனுயிரைக் கொண்டு போவது போல அதை வாங்கிப்போய், ஏகம்பவாணனிடம கொடுத்தார்கள். அவன் அதைப் பெட்டியிற் பதனப்படுத்தி வைத்துக்கொண்டு அந்தப் பெண்களுக்கு உசிதமான வெகுமதி செய்தனுப்பிவிட்டுப் பூதத்தை அழைத்து, ‘வேப்பமாலையைத் தொட்டல்லவா பாண்டியனைத் தீண்டக் கூடாதென்றிருப்பாய்? இப்பொழுது அவன் சிகை என் கையிற் சிக்கிக்கொண்டது! இனி நீ பயமில்லாமற் போய் அவனைப் பிடித்த பிடியிற் கொண்டுவா,’ என்றார். அவன் சொன்னது சொல்லாததற்கு முன்னே அது சங்கையின்றிச் சென்று, தூக்கி வந்துவிட்டது. ஏகம்பவாண முதலி, காலுக்குங் கைக்கும் விலங்கிட்டுப் பாண்டியராஜனை அருஞ்சிறையில் வைத்தான். அவன் முதலிக்குப் பிரிய வசனங்களைச் சொல்லியும் பிரமாணிக்கங்கள் பண்ணியும் தன்னை விடாமையால், தன்மனையாளுக்குச் செய்தி அனுப்பி, ‘இந்தச் சிறை விடுவிக்கும்படி ஏகம்பவாண முதலியாரை நீயாவது இரந்து கேட்கவேண்டும்,’ என்ன, அவள் ஏகம்பவாணனுடைய ஔதாரியத்தைச் சிறப்பிக்கத் தொடங்கி, அதன் வழியாய் அதன் பராக்கிரமத்தைக் குறிப்பித்து,

என்கவிகை யென்சிவிகை யென்கவச மென்றுசவும்
என்கரியீ தென்பரியீ தென்பரே - மன்கவன
மாவேந்த னேகம்ப வாணன் பரிசுபெறும்
பாவேந்த ரைவேந்தர் பார்த்து.

என்றொரு பாட்டுப் பாடியனுப்பினாள். அதை அவன்படித்துப் பார்த்து, அதில், ‘மிக்க வேகத்தையுடைய பரிமாவை நடாத்துகின்ற நகுலராஜனையொத்த ஏகம்பவாண முதலியாரைப் பாடி அவரிடத்தில் யானை குதிரை குடை கொடிமுதலாகிய பலவகைப்பட்ட பரிசு பெற்று வருகின்ற கவிஜனர்களை முன்பு அம்முதலியாருடனே எதிர்த்துத் தோற்றுத் தத்தம் விருது முதலானவைகளை இழந்த அரசர்கள் பார்த்து, ‘இந்தப் புலவர் பிடித்துக் கொண்டு போகின்ற குடை நான் பிடிதிருந்தது; இவரேறிய தண்டிகை நானேறியது; இவர் தரித்த கவசம் நான் தரித்தது; இவரேந்திய துவஜம் நான் கைக்கொண்டிருந்தது; இவர் ஊர்ந்து வரும் யானை என்னுடைய யானை; இவர் ஆரோகணித்த புரவி என்னுடைய புரவி,’ என்று சொல்லி, அனுதபிப்பார்கள், என்னும் பொருள் தோன்றக் கண்டு, அதிசயித்துச் சீற்றமாறிச் சந்தோஷத்துடனே பாண்டியனை உடன்படிக்கை செய்யச்சொல்லிச் சிறைவிடுத்தான். அன்றுதொட்டு, அவ்வுடன்படிக்கையின்படி அவனும் மற்றை அரசர்களும் ஏகம்பாணனுக்குப் பிரதி வருஷமுந் தவறாமற் பகுதி கட்டி வந்தனர்.

ஒருபுலவன் கவிபாடிப் பரிசுபெற்று வருகையில் அவனை இசைப்புலவனொருவன் கண்டு, அரசனென்று ஐயுற்று, தேர் யானை புரவி முதலிய சதுரங்கக் கூட்டங்களைத் திறைப்பொருளாகப் பெற்றுவருகின்ற புலவர் சிகாமணியே, உமது தேசம் எது? உமது நாமம் யாது? தெரியச் சொல்ல வேண்டும்,’ என்று வினவ, அப்புலவன் அவனை நோக்கி, ‘வீணையைக் கையிற்கொண்டு வாசிக்கின்ற பாணரே! வாரும் வாரும்! இந்தச் செய்தியைக் கேளும்; நான் அரசனல்லேன்; நீரும் நானும் கல்வியால் ஒத்த குலத்தினரே; மகத நாட்டிற்குத் தலைவரும், தென்னாற்றூரைப் பரிபாலிப்பவருமாகிய ஏகம்பவாண பூபதி மனமகிழ்ச்சி கூர்ந்து கொடுத்த அனேக வரிசைகள் பெற்று வருகின்ற புலவன்தான்; நீரும் இப்படிப்பட்ட பரிசு பெற்று வரலாம். அவரிடத்திற் சீக்கிரமாகப் போம்; அப்பிரபு வசிக்கும் சந்திரகாந்தக் கற்பதித்த முற்றங்களிலும் முத்துப்பதித்த சிகரங்களையுடைய மாட மாளிகை கூட கோபுரங்களிடத்தும் ஆத்தி மரமிருக்கின்றது; உயர்ந்த வேப்பமரம் இருக்கின்றது; வளர்ந்த பனைமரம் இருக்கின்றது; அதனருகில் அரசமரம் இருக்கின்றது; இவை அரச ஸ்தானத்தை அறியத்தக்க அடையாளங்கள்,’ என ஓர் ஆற்றுப்படையாய்ப் பொருளமைத்து,

தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி திறைகொ ணர்ந்துவரு மன்னநின்
   தேச மேதுனது நாம மேதுபுகல்; செங்கை யாழ்தடவு பாணரே!
வாரு மொத்தகுடி நீரு நானுமக தேச னாறைநகர் காவலன்
  வாண பூபதி மகிழ்ந்த ளித்தவெகு வரிசை பெற்றுவரு புலவன்யான்;
நீரு மிப்பரிசு பெற்று மீண்டுவர லாகு மேகுவான் முன்றில்வாய்
  நித்தி லச்சிகர மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆரு நிற்குமுயர் வேம்பு நிற்கும்வளர் பனையு நிற்குமத னருகிலே
  அரசு நிற்குமர சைச்சு மந்தசில அத்தி நிற்குமடை யாளமே.

என்பது முதலாகப் பற்பல புலவர்கள் உசிதமான பாடல்கள் பாடிப் பாமாலை சூட்டவும் அவனதிக பிரபலமாக வாழ்ந்திருந்தான்.

15.ஏகம்பவாணன் சரித்திரம் முற்றியது

பார்க்க:

தொகு

14.காளமேகப்புலவர் சரித்திரம்

16.ஔவையார் சரித்திரம்

விநோதரசமஞ்சரி