விநோதரசமஞ்சரி/17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை

விநோத ரச மஞ்சரி

தொகு

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

தொகு

17. பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை

தொகு

[இது வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது.]

1. ஆற்றைக் கடந்தது

தொகு

அவிவேக பூரண குரு என்று ஒரு ஆசாரியரிருந்தார். அவர் ஏவிய ஊழியம் செய்யும்படி மட்டி, மடயன், பேதை, மிலேச்சன், மூடன் என்று பெயர்பெற்ற சீஷர்கள் ஐந்து பேர் அவர் மடத்திலிருந்தார்கள். இந்தச் சீஷரும் குருவும் ஆகிய ஆறுபேரும் ஒருநாள் மற்ற சீஷர்களை விசாரிக்கும்படி,, காலையிலெழுந்து சுற்றுக் கிராமங்களுக்குக் கால்நடையாய் நடந்து போனார்கள். போய்த் திரும்புமளவில், வழிநடுவில் இருக்கின்ற ஓர் ஆற்றங்கரையில் மூன்றாஞ்சாமத்தில் வந்து சேர்ந்து, நதியைப் பார்த்து, அதிலிறங்கப் பயந்து, ‘இது மிகவும் பொல்லாத மோசமுடையது,’ ஆகையால், இது விழித்திருக்கும் வேளையில் இதைக் கடந்து போகக்கூடாது’ என்று குருவானவர் ‘ஆறு நித்திரை செய்கிறதோ, விழித்திருக்கிறதோ? சோதித்துப் பார்,’ என்று மிலேச்சனை ஏவினார். அவன் குருவார்த்தையைச் சிரசின்மேற் கொண்டு, அப்போது புகைச்சுருட்டுப் பற்ற வைக்கும்படி தன் கையில் எடுத்த கொள்ளிக்கட்டையைக் கொண்டுபோய், தான் ஆற்றில் இறங்காமல் தூரநின்று எட்டித் தண்ணீரிலே தோய்த்தவுடனே தண்ணீர் சரீரென்று புகைந்தது கண்டு மிலேச்சன் பதறித் தவறிக் கீழே விழுந்து, பதைத்து உதைத்துக்கொண்டு, மெல்லென எழுந்து, நடுங்கிப் பயந்து, அலறிக் குளறி அழுதுகொண்டு ஓடிவந்து, ‘ஐயா, ஐயா, நதியைக் கடக்கிறதற்கு இது தருணமன்று! அது விழித்திருக்கிறது! நான தொட்டவுடனே நஞ்சுள்ள நாகம் போலச் சீறிக் கொதித்துக் கோபித்து, இரைத்து, புகைந்து, எழுந்து, பாய்ந்து என்னைக் கொல்ல வந்தது; அதன் உக்கிரத்துக்கு இலக்காகாமல், தங்கள் பரமகிருபையினாலும் என்னைப் பெற்றவள் செய்த தவத்தினாலுந் தப்பி நான் உயிர் பிழைத்து மீண்டு வந்தது மிகவும் அதிசயம்!’ என்றான். அதைக்கேட்டுக் குருவானவர் திடுக்குற்று, மூர்ச்சித்துப் பின்பு தெளிந்து, ‘அப்பா, தெய்வ சங்கற்பத்தை ஆரறியக்கூடும்? அது கண்ணுறங்கிற வரைக்கும் சற்று நேரம் காத்திருப்போம்,’ என, அவரும் சீஷரும் நதியின் பக்கத்தில் உருத்தெரியாமல் இருள்சூழ்ந்த ஒரு பூஞ்சோலையில் தங்கியிருந்தார்கள். அங்கே பொழுது போக்கும்படி அந்த ஆற்றின் விசேஷங்கள் பலவற்றையுங் குறித்துத் தனித்தனியே அவனவன் சொல்லி வருமளவில், மட்டியென்னும் சீஷன் சொன்னதாவது:

‘சுவாமி, இந்நதியின் தந்திரத்தையும், மோசத்தையும், குரூரத்தையுங் குறித்து என் பாட்டனார் பலமுறையும் சொல்ல நான் நன்றாய்க் கேட்டிருக்கிறேன்; என் பாட்டனார் பெரிய வியாபாரியாயிருந்தவர்; அவர் ஒருநாள் உப்புப்பொதி ஏற்றின இரண்டு கழுதைகளைத் தாமும், தம் கூட்டாளியுமாக ஓட்டிக்கொண்டு நடு ஆற்றில் இறங்கி வருகையில், கோடைக்காலமாயிருந்ததனால், வெப்பந்தணிய அரையளவு ஓடுகிற குளிர்ந்த தண்ணீரிலே தாமுங் குளித்துக் கழுதைகளையும் நிறுத்திக் குளிப்பாட்டினார். பிறகு அக்கரைக்குப் போய்ப் பார்த்தபொழுது, ஊசியினால் உறுதியாய்ச் சந்தில்லாமல் தைத்திருந்த கோணிப்பையின் வாய் சற்றுந்திறவாமலிருக்க, அதற்குள்ளிருந்த உப்பையெல்லாம் ஆறானாது, ‘தோலிருக்கச் சுளை விழுங்கினது போல’ உபாயமாய்த் திருடித் தின்றுவிட்டதைக் கண்டார்கள்; கண்டு, ‘ஆ! ஆ! இந்த ஆறு உப்பைக் கொள்ளையடித்துத் தின்ற மதத்தினால் அல்லவா எங்களை விழுங்காமல் விட்டுவிட்டது! உப்புப் போனாற் போகிறது! அந்த மட்டில் நல்ல சகாயம் செய்ததே, இதுவே பெரிய நன்மை!’ என்று நினைத்து, அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்,’ என்பதே.

இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே ஒருவன் குதிரையேறி வருவதைக் கண்டார்கள். ஆற்றில் ஒரு ஜாணளவு உயரத் தண்ணீர் ஓடி வருவதைக் குறித்துச் சற்றும் அஞ்சாமலும் அவன் குதிரைமேலிருந்தபடி கூசாமலும் சரசரவென்று கடுகி வந்தான். அதைக்கண்டு இவர்கள், ‘அடடா! எங்கள் குருக்களும் குதிரையிருந்தால் அவரும் அவரைச் சார்ந்த நாங்களும், அச்சமில்லாமல் ஆற்றிலிறங்கலாமே! அஃது இல்லாததனால்லல்லவா இப்படித் தியங்கியிருக்க வேண்டி வந்தது? இனி எப்படியாகிலும் ஒரு குதிரை வாங்க வேண்டும்,’ என்று தங்களுக்குள் நிச்சயித்துக் கொண்டு, குருவினிடத்தில் அதைக் குறித்து விண்ணப்பஞ் செய்தார்கள். அவர், இந்தச் செய்தியைப் பற்றிப் பின்பு பேசுவோம்’ என்று சொல்லி, ‘இப்பொழுது பொழுது சாய்ந்து அஸ்தமன காலம் சமீபத்ததனால், மடத்திற்குப் போக வேண்டுமே! ஆதலால், ஆற்றின் நித்திரையைச் சோதியுங்கள்,’ என்று சீஷர்களுக்குச் சொன்னார்.

அப்படியே கொள்ளிக்கட்டையை மடயன் கொண்டுபோய்த் தண்ணீருக்குள்ளே தோய்த்துச் சோதிக்குமிடத்தில் அந்தக் கொள்ளியிற் பற்றிய நெருப்பு முன்னமே அவிந்து போனதனால், ஆற்றிற் சிறிதும் புகை கிளம்பாதது கண்ட, அவன் மிகவுங் களிகூர்ந்து ஓடிவந்து, ‘இதுதான் நல்ல சமயம் இனிக் கிட்டாது வாயைத் திறவாமல், சப்தியாமல், தாமதியாமற் சுறுக்காய் எழுந்து வாருங்கள்! வாருங்கள்! ஆற்றுக்கு நல்ல நித்திரை வேளையாயிருக்கிறது! இப்பொழுது எவ்வளவு பயப்படாமல் பின்னிடவும் வேண்டுவதில்லை!’ என்றான்.

இந்த நற்செய்தியை மடயன் சொல்லிக் கூப்பிட எல்லாருந் திடீரென்று எழுந்து கிமாவென்னாமற் பத்திரமாக இறங்கி, அலைகள் முதலாய்ச் சப்தியாதபடி மெதுவாய்க் காலைத் தூக்கி ஒவ்வோர் அடியாகத் தண்ணீர்க்குள் வைத்து ஊன்றிப் பின்பு பெயர்த்திட்டு, நெஞ்சு துணுக்கென்று பதைபதைக்க, இலகுவாகத் தாண்டித்தாண்டி நதியைக் கடந்துபோய்க் கரை ஏறினார்கள். அவர்கள் கரையேறினவுடனே முன்பு பட்ட சங்கடத்துக்குத் தக்கதாக அதிக மகிழ்ச்சி கொண்டு, தலைகால் தெரியாமல் துள்ளியாடிக்கொண்டிருக்கும் பொழுது, மூடனானவன், ‘நாமெல்லோரும் அபாயமில்லாமல வந்து சேர்ந்தோமா? எண்ணிப் பார்ப்போம்,’ என்று தன்னை மாத்திரங் கூட்டாமல், மற்றவர்களை எண்ணினான். எண்ணினவிடத்தில் ஐவரிருக்கக் கண்டு, ‘அப்பப்பா! ஐயையோ! இஃதென்னை பேரிழவு! ஒருவன் ஆற்றோடே போய் விட்டானே! ஐந்துபேர் மாத்திரந்தானிருக்கிறோம்!’ என்று குருவைப் பார்த்துத் தேம்பித் தேம்பி அழுதான். குரு அவனை, அழவேண்டா!’ என்று கையமர்த்தி, எல்லாரையும் வரிசையாய் நிறுத்தி, ஒருகால் இருகால் முக்காலும் அவரைத் தனித்தனியே தமது விரலை நீட்டிச் சுட்டித் தாமே எண்ணிக் கணக்குப் பார்த்தார். அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அவர் தம்மை நீக்கிக் கணக்கேற்றி, ‘ஆமப்பா! நீ சொன்னபடி, மெய்யாகவே ஐந்து பேர் மாத்திரம் இருக்கிறோம்!’ என்று சொல்லி விசனப்பட்டார். அவ்வாறே அவனவன் தன்னை விட்டு ஒழிந்தவர்களை மாத்திரம் எண்ணி எண்ணி, ஆறாம் பெயரைக் காணாமையால், ஆறு பேரில் ஒருவனைச் சந்தேகமில்லாமல் ஆறு விழுங்கி விட்டதென்பது அவர்களுக்குள்ளே நிச்சயமாயிற்று. பிறகு குருவும் அவர்களும் அலறியழுது, கூகூவென்று கூச்சலிட்டு, நதியைப் பார்த்துக் கண்ணீர் சோரும்படி, ‘ஓ பாவியாறே! துரோகியாறே! பரம சண்டாள நதியே! கொடும்புலி போலுங் கடுங்கொலையாறே! மண்ணிலும் விண்ணிலும் வாழும் சராசரங்களெல்லாம் வாழ்த்தி வணங்கும்படி, தவமனைத்துந் திரண்டு ஒருவடிவந் தாங்கி வந்து, பவமொழித்தருளும் பரமாத்த குருநாதருடைய உத்தமசீஷனை ஒரு நொடிப் பொழுதிற் குத்திர குணத்தாற் கொள்ளை கொண்டாயே! எள்ளளவாயினும் இரக்கமில்லாமல் கிழங்கு போல விழுங்கி விட்டாயே. அஞ்சுதல் என்பது கொஞ்சமுமின்றி வாழைப்பழம் போல விழுங்கிவிட்டாயே! உன் மனம் உருகாத இரும்போ? கல்லோ? நீ பெண்ணுடன் ஆணுடன் பிறக்கவில்லையோ? நன்றிகெட்ட நாசகால நதியே! நீயும் உலகத்தில் நிலைத்திருப்பாயா? அண்டத்தளவும் அலையெறிவாயா? கடல்போல முழங்கிக் கரைபுரள்வாயா? குளிர் வெண்முத்தங் கொழித்திடுவாயா? இனி நீ உண்ணீர் வற்றி, ஊற்றுக்கண் அடைபட்டு, பள்ளந் தூர்ந்து, வெள்ளம் மாறி, உள்ளம் வெதும்பி, உருவுந் தோன்றாமல் பாழாய்ப் போவாய்!’ என்று ஆற்றைச் சபித்துப் பின்னும் பித்துப் பிடித்தாற்போலத் தாறுமாறாக வைது கொண்டிருந்தார்கள். அந்நேரமட்டில் ஆறு கொண்டுபோனவனைத் தங்களுக்குள் இன்னானென்று தங்கள் மவுட்டியத்தினால் ஒருவனும் அறியவில்லை; அவன் எவனென்று விசாரிக்கவுமில்லை.

அத்தறுவாயிற் புத்திமானாகிய வழிப்போக்கன் ஒருவன் அவ்விடத்தில் வந்து, அவர்கள் பரிதபிக்கிறதைப் பார்த்து, ‘ஏனையா துக்கப்படுகிறீர்கள்? உங்களுக்கு என்ன குறை சம்பவித்தது? சொல்லுங்கள்,’ என்று கேட்க, அவர்கள் நடந்த சமாசாரத்தைச் சவிஸ்தாரமாகச் சொல்ல, அவன் அவர்கள் மூடத்தனத்தை அறிந்துகொண்டு, ‘அடா அப்பா! இது மகாபிரயாசையான காரியம்! என்னாலன்றி மற்றொருவராலே முடியாதது! நான் மந்திரவித்தையிலே வெகு சமர்த்தன்! அதர்வண வேதம் நான் பார்த்துப் பிச்சையிட்டவர்களுக்குண்டு; எனக்கு யட்சணி, மோகினி, குட்டிச்சாத்தான் முதலானவைகளும் வசியப்பட்டிருக்கின்றன. அவைகள் நான் சொன்னபடி ஆடுகின்றன; எனக்கு நீங்கள் நல்ல வெகுமதி செய்தால், ஆற்றோடே போனவனை அரைக்கணத்தில் அழைப்பிக்கிறேன்; அப்பொழுது என் திராணியைப் பாருங்கள்!’ என்றான். குருவானவர் அதிக சந்தோஷப்பட்டு, ‘அப்பா, நாங்கள் திக்குக்கெட்டுத் தடுமாறும் வேளையிலே மகாராஜன் எங்கள் குல தெய்வம் போல எங்கிருந்து வந்தாயோ! தெரியாது! ஆனாலும், நீ இப்பொழுது செய்ய ஏற்பட்ட பெரிய உதவிக்கு எளியவர்களாகிய நாங்கள் ஈடாக உனக்கு என்ன செய்யப்போகிறோம்1 உன் குருவுக்குப் புண்ணியமாய்ப் போகிறது! எப்படியாவது மனம் பெரிது பண்ணிக் காணாமற் போனவனை அழைப்பித்துக் கொடுத்தால், செய்யாமற் செய்த உதவியாயிருக்கும்! எங்களுக்கு வழிச்செலவுக்கு நாற்பத்தஞ்சு பணம் முன்றானையில் முடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்; அதை உன்கையில் வேண்டுமானால் கொடுத்துவிடுகிறோம்; தயவுசெய்ய வேண்டும்!’ என்றார்.

அவன், ‘அப்படியே ஆகட்டும்!’ என்றும் தன் கையிலேந்திய வச்சிரவுலக்கை போலப் பருத்து நீண்ட இருப்புப்பூண் கட்டப்பட்ட தடியை அவர்களுக்குக் காட்டி, நான் சொன்ன மந்திரத்தை இதிலேதான் இருக்கிறது; நீங்கள் வரிசையாய் நின்று முகத்தைச்சுளிக்காமல் சந்தோஷமாக ஒரு பிரார்த்தனை செலுத்துதல் போலக் கும்பிட்டுக்குனிந்து, இந்தத்தடியால் முதுகில் ஆளுக்கு ஓர் அடிபட்டுக் கொண்டு உடனே அவனவன் தன்பெயரைச் சொல்லி எண்ணிக்கொண்டு வந்தால், ஆறு பேரும் இவ்விடத்தில் இப்பொழுதே பிரத்தியக்ஷமாக வந்திருக்கச் செய்வேன்!’ என்றான். அவர்கள், ‘நல்லது!’ என்று சம்மதித்தார்கள். மந்திர வித்தைக்காரன் அவர்களை வரிசையாக நிறுத்தி, அந்தத் தடியால் ஓங்கித் தன் கைகூசாமல் முதல்முதல் குருவின் நடுமுதுகைப் பார்த்து மிகவும் உரமாக ஓர் அடி போட்டான். அவர், ‘அப்பாடா! போதும்1 போதும்1 நான்தான் பரமார்த்தகுரு!’ என்றார். அவன், ‘ஒன்று,’ என்றான். இந்தப் படியே எல்லாரையும் ஒவ்வோர் அடியடிக்க, அவர்களில் ஒருவன், ‘நான் மடயன்,’ என்றும், ஒருவன், ‘நான் மட்டி’ என்றும், ஒருவன், ‘நான் மூடன்’ என்றும், ஒருவன், ‘நான் மிலேச்சன்,’ என்றும், ஒருவன், ‘நான் மூர்க்கன்’ என்றும் வெவ்வேறாகத் தங்கள் பெயர்களைச் சொல்லவும், அவன் கணக்கேற்றவும், அப்பொழுதில் ஆறு பெயரில் ஒருவனுங்குறையால் இருக்கக் கண்டு, ‘சரி! சரி!’ என்று ஒத்துக்கொண்டார்கள். பின்பு அவ்வறுவரும் ஆச்சரியப்பட்டு, மாயவித்தைக்காரனாகிய வழிப்போக்கனை மெச்சித் துதித்துச் சொன்னபடி அவனுக்குப் பணத்தை அவிழ்த்துக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

2. குதிரை முட்டை வாங்கியது

தொகு

பரமார்த்த குருவும் ஐந்து சீஷர்களும், மடத்துக்குச் சென்றபின்பு ஆற்றிலே தாங்கள் பட்ட அவதியைப் பலகாலும் சொல்லிச் சொல்லி விசனப்பட்டார்கள். அப்பொழுது மடத்தைப் பெருக்கிக்கொண்டிருந்த ஒருகண் குருட்டுக் கிழவி, நடந்தவைகளையெல்லாம் விவரமாகக் கேட்டுக் கைகொட்டி நகைத்து, ‘ நீங்கள் ஆற்றைத் தாண்டி வந்தவுடனே உங்களை எண்ணிக் கணக்கேற்றின வகையிலே மோசம் வந்தது; தன்னையாகிலும் வேறொருவனையாகிலும் தப்பவிட்டெண்ணினாற் கணக்குத் தப்புத்தான்; ஆனாலும், போனது போகட்டும்; இனி வேறெந்தச் சமயத்திலாவது இப்படிப்பட்ட மோசச் சங்கடம் வாராதபடிக்கு உங்களுக்குச் சகாயமாகச் சுளுவாய் நானோர் உபாயஞ் சொல்லுகிறேன்; காட்டிலே முட்டை முட்டையாய்க் கிடக்கிற காளைமாட்டுச் சாணத்தைப் பொறுக்கி எடுத்துவந்து, நன்றாய்ப் பிசைந்து கூட்டி, நிலத்திலே அடைபோலத் தட்டி, எல்லாரும் சக்கரம் போல அதைச் சுற்றியிருந்து, நுனிமூக்குச் சாணத்திற்படக் குனிந்து அழுத்தி நிமிர்ந்து, பிறகு சாணியில் பதிந்திருக்கிற குழிகளை எண்ணினால், கணக்குத் தப்பாமல் இத்தனை பேரென்று வெகு சுளுவாயறியலாமே! கேளுங்கள்; அறுபது எழுபது வருஷத்துக்கு முன்னே பத்துப்பெண்டுகள் கூடின இடத்திலே தாங்கள் கணக்கேற்றின வகை இதுவே, இதையறியாமல் ஏன் வீணாய்ப் பிரயாசைப்பட்டீர்கள்?’ என்றாள்.

அவர்கள், ‘இது நல்ல உபாயந்தான்! பணத்துக்குஞ் செலவில்லை; இது நமக்குள் ஒருவனுக்குந் தோன்றாமற் போயிற்று’ என்று பின்பு குருவுடனே, ‘எல்லாக் காரியத்துக்கும் ஒரு குதிரை வாங்கினால் உத்தமம்; ஐயா, எப்படியாகிலும் உமக்குக் குதிரை சம்பாதித்துக் கொடுக்கவேண்டுமென்று எங்களுக்கு இஷ்டமாயிருக்கிறது,’ என்பதாகச் சகலருஞ்சொல்ல, குரு, ‘ஒரு குதிரை விலை எவ்வளவாயிருக்கும்?’ என, அவர்கள், ‘நூறு பொன் அல்லது ஐம்பது பொன்னிற் குறையாது,’ என்று சொல்லக்கேட்ட பொழுது, ‘அம்மாத்திரத்துக்கு அவகாசமில்லை,’ என்று குருவானவர் சொன்னார். இந்தப்படி அவர்கள் பலநாளும் ஆலோசனை செய்து கொண்டிருக்கையில் மேய விட்ட கறவைப்பசு ஒருநாள் பொழுது சாயுஞ்சமயத்தில் வீட்டுக்கு வாராததைக்கண்டு ஊரிலெங்கும் போய்த் தேடினார்கள்; தேடினவிடத்திலும் அகப்படாததனால், மறுநாள் மட்டி என்பவன் கிராமாந்தரங்களிலே சென்று தேடினான்.

மூன்றுநாள் மட்டுந் தேடி எங்குங் காணாமல், மடத்துக்கு வந்து குருவை நோக்கி, ‘ஐயா, பசுவைக் காணேன்! ஆகிலும், அது பெரிதன்று; சொற்ப விலையில் நமக்குக் குதிரை அகப்பட்டது!’ என்று சந்தோஷமாய்ச் சொன்னான். ‘அஃதெப்படி?’ என்று குருவும் ஆசையோடு கேட்க, ‘காணாமற் போன கறவைப் பசுவைத் தேட ஊருக்கூர், வனத்துக்கு வனம், கொல்லைக்குக் கொல்லை போய் எல்லாஞ் சோதித்து வருகையில், தேவரீருடைய கடாக்ஷ விசேஷத்தால், ஒரு பெரிய ஏரிக்கரைச் சார்பிலே நாலைந்து கோளிகைக் குதிரை (பெட்டைக் கழுதைகள்) மேயவுங் கிடக்கவுங் கண்டேன்; அருகே போகப் போக நான் எந்த நாளும் காணாதவைகளும் என் இருகையாலுந் தழுவக்கூடாதவைகளுமாகிய குதிரை முட்டைகளைக் கண்டு, ‘இவைகளென்ன? குதிரை முட்டைகளோ, அல்லவோ!’ என்று சந்தேகப்பட்டு, அங்க வந்த ஒருவனைக் கேட்க, அவன், ‘குதிரை முட்டைகளே,’ என்றும், ‘ஒவ்வொன்றின் விலை அதிகமில்லை; நாலைந்து பொன் மாத்திரந்தான்,’ என்றும் எனக்குச் சொன்னான்; ஐயா, இது நல்ல சமயம்! சுலபத்திலே ஜாதிக்குதிரைகள் கிடைக்கின்றன; அவைகள் நாமெப்படி வளர்க்கின்றோமோ, எப்படிப் பழக்குகின்றோமோ, அப்படிக்கெல்லாம் எளிதாய் இணங்கத் தக்கவைகளாகும்,’ என்று மட்டி சொல்ல, எல்லாரும் அதுவே சம்மதியாகி, அவனோடே மடயன் என்பவனைக் கூட்டிக் கையில் ஐந்துபொன் கொடுத்துத் தாமதியாமல் உடனே பி்ரயாணப்படுத்தி அனுப்பினார்கள்.

சொன்னபடி மட்டியும், மடயனும் குதிரைமுட்டை வாங்கப் புறப்பட்டுப் போனபிறகு, இங்கே மூடனென்பவன் தன் மனத்தில் ஒரு சந்தேகத்தை நினைத்துக்கொண்டு வந்து, மூர்க்கனையும் மிலேச்சனையும் குருவையும் பார்த்து, ‘கேட்டீர்களா! ஒரு சமாசாரம்; மட்டி மடயன் இருவரும் போயிருக்கிறதனால் அவசியம் தடையில்லாமல் நல்ல ஜாதிக் குதிரை முட்டை வருமென்று வைத்துக்கொள்ளுவோம்; வந்தால், அடைகாத்த பிறகல்லவோ முட்டை பரிபாகிக்கும்? பரிபாகித்த பின்பல்லவோ, குதிரைக்குட்டியைக் காணக்கூடும்? ஆனாலும், ஆர் அடைகாக்கிறது? அப்பா1 எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை! அஃது இருகையாலுந் தழுவக்கூடாத அத்தனை பெரியதாய் இருக்கிறதென்றானே! பத்துப் பதினைந்து கோழிகளை வைத்தாலும் போதாது; அவைகள் நிற்கவுமாட்டா; அப்புறம், இதற்குப் போம் வழியென்ன? சொல்லுங்கள்,’ என்றான்.

இந்தச் சொல்லைக்கேட்டு எல்லோரும் மிகவும் விழிப்பாட்டமாய், ஒருவனொருவனைப் பார்த்து, வகை தெரியாமல், வாய்விட்டுப் பேசாமல் இருந்தார்கள். வெகுநேரஞ் சென்ற பின்பு குருவானவர், ‘நமக்குள்ளே ஆராகிலுமொருவன் அடை காத்தாலொழிய, வேறே வழி காணோமே’ என்று எதிரே இருந்த மூவரையுந் தனித்தனியே கேட்க, அவரவர் ஒவ்வொரு போக்குச் சொல்லத் தலைப்பட்டனர். முதலாவது, மூடன், ‘தினந்தினம் ஆற்றுக்குப் போய் வேண்டிய தீர்த்தமெல்லாங் கொண்டுவரவும், காட்டுக்குப்போய் வேண்டிய எரிகரும்பு சம்பாதித்துக் கொடுக்கவும், எனக்கு உத்தியோகமாயிருக்க, நான் அடைகாக்கக் கூடுமோ?’ என்றான். இரண்டாவது மூர்க்கன், ‘நான் இரவும் பகலு்மாகப் பின்வாங்காமல், மடைப்பள்ளியில் பத்துபேருக்குச் சோறாக்கவும், நாநாவிதக் கறிகளைச் சமைக்கவும், அதிசயமான பலகாரங்கள்பண்ணவும், வெந்நீர் வைக்கவும், அடுப்பண்டையிலே கிடந்துழைத்துக்கொண்டு சாகிறேனல்லவோ? ஆதலால், அடை காக்கிறதற்கு என்னாலாகுமா?’ என்றான். மூன்றாவது, மிலேச்சன், ‘விடியுமுன் எழுந்திருந்து, ஆற்றுக்குப்போய்த் தந்ததாவளம் பண்ணி, வாய் கொப்பளித்து, முகங்கழுவிச் சுத்தி செய்து, கிரமத்தோடே சந்தியா அனுஷ்டானம் முடித்துக்கொண்ட பிறகு, நந்தனவனங்களிற் புகுந்து நாளரும்புகளெடுத்து, விந்தை விந்தையாய்த் தொடுத்து, விக்கிரகங்களுக்குச் சார்த்தித் தூபதீபங் காட்டித் தேவாராதனை புரிதற்கு வேண்டிய உதவிசெய்வது என் காரியமாயிருக்கிறதனால், நான் அடைகாக்கிறது எப்படி?’ என்றான்.

அதற்குக் குருவானவர், ‘இதெல்லாம் உள்ளதுதானே? போன மற்ற இரண்டு பேர்களாலேயும் ஆகாது; அவர்களில் மடயனுக்கு இங்கே வருகிறவர்கள் போகிறவர்களை விசாரிக்கவும், அவர் சொல்லும் உத்தரத்துக்கு மறு உத்தரங் கொடுக்கவும், பல பேருங்கொண்டுவரும் வழக்குகளைக் கேட்டுத் தீர்க்கவும், எந்நேரமும் முடியாத வேலையாயிருக்கிறது; கடைசியிலே மட்டி என்பவன் எதற்காவது ஏவின சமயத்தில் கடைக்குச் சந்தைப் பேட்டைக்குப் போகிறவனல்லவா? ஆகையால், உங்களுக்குள் ஒவ்வொருவருக்கும் ஒழிவில்லை; நான் மாத்திரந்தான் சும்மாவிருக்கிறேன்; அதனால், நான் முட்டையை மடியிலே வைத்துக்கொண்டு, கையாலே தழுவிப் போர்வையாலே மூடி, மார்போடணைத்து, அன்போடு பேணிக் கண்ணும் கருத்தும் இடைவிடாது அதனிடத்தில் ஊன்றி நிற்கப் பத்திரமாய் அடை காக்கிறதைவிட எனக்கு வேறே வேலையென்ன? முட்டை பரிபாகப்பட்டுக் குதிரையைக் கண்டடைந்தால், அதுவே போதும்; படத்தக்க பிரயாசமெல்லாம் பார்க்கக் கூடாது,’ என்றார்.

இந்த ஆலோசனையெல்லாம் மடத்திலே நடக்கும்போது, இராத்திரி மூன்றாம் ஜாமத்தில் சந்திரோதயத்தோடு புறப்பட்ட மட்டியும் மடயனும் இரண்டரைக்காத வழிக்கப்பால் முன் கண்டு குறித்த அடையாளமான இடத்துக்குப்போய்ச் சாம்பற் பூசணிக்காய் திரளாய்க் காய்த்துக்கிடந்த ஏரிக்கரையைக் கிட்டினார்கள். கிட்டிக்கண்டு, களிகூர்ந்து, அங்கிருந்த குடியானவன் அருகிற்சென்று, ‘அப்பா, இந்தக் குதிரை முட்டைகளில் எங்களுக்கு ஒரு முட்டை அவசியம் கிரயத்துக்குத் தரவேண்டும்!’ என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவன் இவர்கள் மூடத்தனத்தைக் கண்டுகொண்டு, ‘ஓ! ஓ! இந்த உத்தம ஜாதிக் குதிரை முட்டையை நீங்கள் விலைகொடுத்து வாங்கத்தக்கவர்களா? இது வெகுவிலை பெற்றதாகும்!’ என்று சொல்ல, ‘போமையா போம்! இதற்கு ஐந்துபொன்தானே உள்ள விலை? நாங்களென்ன அறியோமோ? எங்களுக்குத் தெரியாதது போல நீர் ஏன் உயர்த்தி உயர்த்திப் பாடுகிறீர்? கைம்மேலே இதோ இந்த ஐந்து பொன்னையும் வாங்கிக்கொண்டு, நல்ல முட்டையாய் ஒன்று தாருமையா,’ என்றார்கள். அதற்கந்தப் பயிரிடுங் குடியானவன், ‘நீங்கள் நல்ல கிரகஸ்தரென்று தெரிய வருகிறது! உங்கள் சற்குணத்தைப் பற்றி இந்த விலைக்குச் சம்மதிக்கிறேன்; நல்லது; உங்களுக்குச் சரிப்போன ஒரு முட்டையைத் தெரிந்தெடுத்துக்கொண்டு போங்கள்; இவ்வளவு மலிவாய் வாங்கின விலையை மாத்திரம் ஒருவரிடத்திலும் வெளிவிடாதிருங்கள்,’ என்றான். ‘அதைப்பற்றி எங்களுக்கு வேண்டுவதென்ன? அப்படியே வெளிப்படுத்தவில்லை,’ என்று அவர்கள் இருவரும் தங்கள் மனத்துக்கேற்றபடி, எல்லாவற்றிலும் பெரியதாக ஒரு காயைத்தேடித் தெரிந்தெடுத்துக் கொண்டு, மறுநாள் அதிகாலமே பலபலவென்று பொழுது விடியுமுன் சிற்றிருட்டிலேதானே எழுந்து, மட்டி தலைமேல் முட்டையை எடுத்துப் பதனமாய் வைத்து, வழி காட்டிக்கொண்டு முன்னே போகையில், மட்டி காணாது கண்டதாக அதிசயித்துச் சொல்லத் தொடங்கினான்.

‘ஆ! ஆ! பெரியோர்கள், ‘எல்லாம் தபோ பலத்தாற் கைகூடும்!’ என்பார்கள். அதற்கு அத்தாட்சி இப்பொழுது பிரத்தியக்ஷமாகக் கண்டோம்; நம்முடைய குருநாதர் செய்துவருகிற தபோ பலம் இதுதான்; நூறு பொன், நூற்றைம்பது பொன் பெறத்தக்க ஜாதிக்குதிரையை மாயப்பொடி தூவிப் பறித்துக்கொண்டு போகிறது போல, நாம் எத்தனை சுலபமாக ஐந்து பொன்னுக்கு வாங்கிக் கொண்டு வருகிறோம் பார்!’ என்றான். அதற்கு மடயன், ‘இதிலே ஆலோசனை ஏன்? ‘பண்ணிய பயிரில் புண்ணியந் தெரியும்,’ என்று சொல்வதை நீ கேட்கவில்லையா? நம் குருவானவர் உள்ளபடியே புண்ணியாத்துமா என்பது அவருக்கு இப்பொழுது கிடைத்த இந்தக் குதிரையினளவிலே உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது; இன்னமொரு திருஷ்டாந்தம்! என் தகப்பன், தான் பரமயோகியன் என்பதும், யோகசாலி என்பதும், தனக்கு நான் கிருஷ்ண விக்கிரகம் போலப் பிள்ளையாய்ப் பிறந்ததனாலல்லவோ தெளிவாகக்கண்டு பெருமகிழ்ச்சி கூர்ந்தான்!’ என்று சொல்ல, மட்டி, ‘அதைக்குறித்துஞ் சந்தேகமா? விரையொன்று போடச் சுரையொன்று காய்க்குமா? ஆமணக்கு விதைத்தால், ஆச்சா முளைக்குமா? நல்வினை நன்மையைத்தான் தரும்; தீவினை தீமையைத்தான் தரும்,’ என்றான்.

இப்படி ஆனந்தத்துடனே பேசிக்கொண்டே வெகுதூரம் நடந்து, பின்பு இடுக்கு வழியிற் போகும்போது அவ்வழியோரத்திற் சாய்ந்திருந்த ஒருமரத்தின் கொம்பு குறுக்கே பட்டு, மட்டி தலையிலிருந்த சாம்பற் பூசனிக்காய் தவறிக் கீழே நெருங்கிய புதரின்மேல் விழுந்து, அதன் நடுவிற் கிடந்த கல்லின்மேல் விசையாய்த் தாக்கித் தகர்ந்துடைந்தது. அப்போதந்தப் புதரிலே பதுங்கியிருந்த முயல், அதிர்ந்தெழுந்தோடியது. அது கண்டு, ‘இதோ! முட்டைக்குள்ளிருந்த குட்டிப்பரி ஓடுகிறது!’ என்று அபயமிட்டுக்கொண்டு இருவரும் அதைப் பற்றிப் பிடிக்கப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் காடுஞ் செடியும் மேடும்பள்ளமும் கல்லுங்கரடும் முள்ளும்முருடும் பாராமல் ஓடவே, உடுத்த வஸ்திரம் செடிகளிலே மாட்டிக் கிழிந்து, கயிறுகயிறாய்த் தொங்க, முட்கள் முதுகைக் கிழிக்க, கற்கள் காலிலுறுத்த, உடம்பெல்லாம் காயம்பட, உதிரம் பீரிட்டுப்பாய, ஊற்றிலிருந்து பெருகுவதுபோல வேர்வை வடிய, நெஞ்சு பதைக்க, காதடைக்க, நாக்கு வறள, தாகமதிகரிக்க, குடல் குழம்ப, இரைப்பெடுக்க, பெருமூச்சு வாங்க ஓடியும் முயல் அகப்படாமல், தவித்துத் தடுக்கி விழுந்தார்கள். இதற்குள்ளாக முயல் கண்ணினாற் காணக்கூடாமல் மறைத்து, வெகுதூரத்தில் ஓடிப்போய் விட்டது. அவர்களும் இளைப்பைப்பாராமல் எழுந்து, கல்லும் முள்ளுந் தைத்த காலால் நொண்டி நொண்டி வெயிலிலே நடந்து, அங்கங்கே தேடிச் சலித்துப் போய், அன்றைக்கெல்லாம் பசியுடன் பட்டினி கிடந்து அஸ்தமித்த பின்பு மடத்துக்குச் சென்றார்கள்.

மடத்து வாயிலில் நுழையும்போது, ‘அட அப்பா! அட அப்பா!’ என்று கூவி, வாயிலிலே மோதியடித்துக்கொண்டு கீழே விழுந்தார்கள். உள்ளே இருந்தவர்கள் துணுக்குற்று ஓடி வந்து கை தூக்கியெடுத்து, ‘என்ன அபாயம் வந்தது!’ என்று கேட்க, நடந்த வர்த்தமானமெல்லாம் இருவரும் விவரமாய்ச்சொன்ன பிறகு, மட்டி என்பவன் தனக்குள்ளே அதிசயித்து, மற்றவர்களுடனே, ‘ஐயா! நான் பிறந்த நாள்முதல் இன்றைய வரையில் ஒருக்காலும் இத்தனை வேகக் குதிரையைக் கண்டதேயில்லை! இது கறுப்புப் பாய்ந்த சாம்பல் நிறமாய் உயரத்திலும் பருமனிலும் முயலை ஒத்ததாய், ஒரு முழ நீளமாய், இன்னும் முட்டைக்குள் கிடக்கும் குட்டியாயிருந்தாலும், இரு செவியும் விரித்துக்கொண்டு இரண்டு விரற்கடை நீளமுடைய குறுவாலைத் தூக்கி, நிலத்திலே மார்புபட நாலு காலையும் விரித்து நீட்டி ஓடின சுறுக்கும் வேகமும் சொல்லவும் நினைக்கவுங் கூடா!’ என்றான்.

அதைக்கேட்டு அவர்களெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கக் குருவானவர் அவர்களை அமர்த்திக் ‘கூண்டோடே போச்சுது குளிருங் காய்ச்சலும்,’ என்றது போல, ஐந்து பொன்போனதன்றி, அதனோடு குதிரைக்குட்டியும் போய்விட்டதே! அது தாவளைதான்! சிறு குட்டியாயிருக்கும் பொழுதே இப்படிக் கடுமையாய் ஓட்டம் பிடித்தது. இனிமேல் வளர்ந்து பெரியதாகியபோது எப்படிப் பறக்கமாட்டாது! அச்சமில்லாமல் திடச்சித்தமாய் அதன்மேல் ஆர் ஏறியிருக்கப் போகிறார்கள்? அப்பா, நான் கிழவனாக்கும்! அப்படிப்பட்ட வாயு வேகக் குதிரை பணச் செலவில்லாமற் சும்மா இலவசத்தில் வந்தாலும், எனக்கு வேண்டா!’ என்றார்.

3. வாடகை மாடு ஏறிப் போனது

தொகு

பலநாள் சென்ற பின்பு தூரப் பயணம் போகும்படி அவசரமுண்டாயிற்று. சீஷர்கள், ‘அவ்வளவு தூரம் நம்முடைய குருவானவர் கால் நடையாகப் போக முடியாது, அதிகப் பிரயாசமாம்,’ என்று ஒரு மோழை மாடு வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்தார்கள். அதற்கு வாடகை நாளொன்றுக்கு மூன்று பணம் கொடுக்கத் தீர்த்துப் பல அலுவலினாலே விடிந்ததன்மேல் ஒரு ஜாமம் கடந்தபின் குருவும் சீஷர்களும் பயணம் புறப்பட்டுப் போனார்கள். கடுவேனில் என்னும் கோடைக் காலமாகையால், அவர்கள் நடக்கக் கொள்ளி கொண்டு சுடுகிறது போலச் சுள்ளுச் சுள்ளென வெயிலெறிக்க, மரம் மட்டை, குளம் குட்டை இல்லாமையால், உண்ண நீரும் ஒதுங்க நிழலும் கிடையாத வெட்டவெளியாகிய பாலை நிலத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள். அப்படியே போகப்போக அகோரமும் கடூரமுமான வெயிலின் வெப்பம் பொறாமல், பசிய இளங்கீரைத்தண்டு போலக் கிழக்குருக்கள் துவண்டு கீழே விழத் தலைப்பட்டார். அதைக் கண்டு சீஷர்கள் மாட்டை நிறுத்தி, அவரை இறக்கி, அவர் வெப்பத்தை ஆற்றுதற்கு நிழல் எங்குமில்லாமையால், நிறுத்தப்பட்ட மாட்டின் நிழலிலே தரையில் துணியை விரித்துப் போட்டுக் கிடத்தி, விசிறியில்லாததனால் வஸ்திரத்தினாலே விசிறிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு, அதிலே கொஞ்சம் ஆறுதலான பிறகு குளிர்ந்த காற்று வீச, மறுபடியும் மாட்டின் மேலேற்றி, மெள்ள மெள்ள நடத்திக் கொண்டுபோய்ப் பொழுது போகுமுன்னே ஒரு சிற்றூரிற் சென்று இறங்கினார்கள். அங்கே ஒரு சிறிய வீட்டின் நடையிற் போய் இருக்கும்படி வாயிலுக்குள் நுழைந்தவுடனே மாட்டுக்காரனுக்கு மூன்று பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள். அவன், ‘இது போதாது,’ என்றான். ‘இஃதென்னை! முன் உன்னோடே பேசிச் சம்மதித்த நாட்கூலி மூன்று பணந்தானல்லவோ?’ என்று அவர்கள் சொல்ல, அவன் மறுத்து, ‘மாடு வாகனமாயேறிப் போவதற்காக உதவினதற்கு இந்தக் கூலி பொருந்தினது சரிதான்; பிறகு நடுவழியில் வெயிலுக்குக் குடையாக உதவினதற்குக் கூலி கொடுக்கவேண்டாவா?’ என்று கூச்சற் போட, ‘இஃது அநியாயம்! அநியாயம்!’ என்று அவர்கள் கோபித்துக் கடூரமாய்ப் பேச, அப்புறம் மாட்டுக்காரனுக்கும் அவர்களுக்கும் சண்டையாய்ப் பெரிய ஆரவராமுண்டானதனால், ஊரார் அறிந்து, ஆண் பெண் பெரியோர் சிறியோரெல்லாரும் ஒரு கூட்டமாகக்கூடி மொய்த்து வந்தார்கள். அவர்களில் நியாயக்காரனொருவன், சந்தடியை விலக்கி வந்து, கூச்சலை அடக்கி, இரு திறத்தார் வழக்கையும் விசாரித்து, ‘நல்லது! நான் சொல்லுகிற தீர்ப்புக்குள்ளாவீர்களோ? உங்கள் சம்மதி என்ன? சொல்லுங்கள்,’ என்று கேட்டுப் பின்பு சொல்லத் தொடங்கினான்:

‘நான் சில நாளுக்கு முன் தூரதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகையில் நடு வழியிலே ஒரு ராத்திரி ஓரூரில் ஒரு பெரிய விடுதியில் தங்கினேன்.அங்கே வந்தவர்களுக்கெல்லாம் வசிக்கும் இடம் குடிக்கூலிக்கு விடுவதன்றிச் சாப்பிடுதற்கு வேண்டிய சோறு கறி முதலானவைகளும கிரயத்துக்குக் கொடுப்பார்கள்; ஆகையால், ‘உமக்கு ஏதாவது வேண்டுமா?’ என்று அவர்கள் என்னைக் கேட்டபொழுது, எனக்குச் செலவுக்குப்பணமில்லாமையால், நான் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்திருக்கிறேன், வேறொன்றும் தேவையில்லை,’ என்றேன்; அத்தருணத்தில் அங்கு வந்த மற்றவர்களுக்கு ஒரு பெரிய ஆட்டுத்தொடையை இருப்புச் சலாகையிற் கோத்து நெய் தடவித் தணலின்மேல் காட்டிப் பக்குவமாய்ச் சுட்டார்கள்; அது சிவக்க வேகவேக, அதிற் பூசின நெய் உருகி நெருப்பில் துளித்துப் புகையத் தலைப்பட்டது; அப்போது அதன் வாசனை அதிக ரம்மியமான பரிமளமாயிருந்தது; நான் கொண்டுவந்த கட்டுச் சாதத்தை அந்த மணத்தோடே சாப்பிடுகிறது நல்லதென்று நினைத்து, அதை அப்படியே சற்று நேரஞ் சுழற்றிக் கொண்டிருக்கும்படி உத்தரவு கேட்டேன்; அவ்வாறே சுழற்றிக் கொண்டிருக்க நான் சாதத்தை அவிழ்த்தெடுத்துச் சீலையோடே ஒரு கையால் அந்தப் புகையின்மேற் பிடித்து, மற்றொரு கையால் சீக்கிரமாய் அள்ளி அள்ளி அவ்வாசனையிலேயே இன்பமாய்ச் சாப்பிட்டேன்; பிறகு போக வேண்டுமென்றிருக்கையில், விடுதிக்காரன் வாசனை மோந்ததற்காகக் கூலி கேட்டான்; நான், ‘அதற்கேது கூலி?’ என்றேன்; அவன் ‘கொடுக்க வேண்டும்,’ என்றான்; நான், ‘கொடுக்கிறதில்லை,’ என்று எழுந்து நடந்தேன்; அவன், ‘நீ கொடாமற் போகக் கூடாது,’ என்று ஆணையிட்டுத் தடுத்தான்; இந்தப்படி இருவரும் வழக்கிட்டு, அந்த ஊர் அதிகாரியண்டைக்குப் பிராதுக்குப் போனோம்; அவனோ, பூரண பண்டிதன், சகல சாஸ்திர நிபுணன், அதிக புத்திமான், மகா சமர்த்தன்! மிகவும் நியாய சூக்ஷ்மம் தெரிந்தவன்; அந்த மகானுபாவன் பண்ணிய நியாயத் தீர்ப்புக் கேளுங்கள்; ‘கறி தின்றதற்கு விலை பணமும், கறி மணம் மோந்ததற்கு விலை பணத்தின் மணமுமாகும். இதுதான் தீர்ப்பு,’ என்று விடுதிக்காரனை அருகே அழைத்துப் பணம் நிறைந்த பையை எடுத்து அவன் மூக்கிலே அழுந்த உரைத்துத் தேய்த்தான்; அவன் ‘மூக்குப் போயிற்று! ஐயோ! மூக்குப் போயிற்று!’ இந்த மட்டில் வந்த கூலி போதும், போதும்!’ என்றான். பார்த்தீர்களோ! இதுவே நல்ல நியாயமும் உத்தம நீதியுமாம் அல்லவா? இந்தத் தீர்ப்புத்தான் உங்களுக்கும். எப்படியென்றால், மாடேறி வந்ததற்குக் கூலி பணமும், மாட்டின் நிழலிலிருந்ததற்குக் கூலி பணத்தின் நிழலும் போதுமானவை; ஆகிலும், மாட்டு நிழற்கூலிக்கு இப்போது அஸ்தமித்ததனால் பணநிழல் அகப்படாது. அதற்குப் பதிலாகப் பணச் சத்தத்தை ஒத்துக்கொள்,’ என்று சொல்லி, அவனைச் சிக்கெனப் பிடித்துப் பணப்பையைத் தூக்கி அவன் காதிலே உரமாகத் தாக்கும்படி அதனால் மோதியடித்துப் ‘பணச்சத்தங் கேட்டையா?’ என்றான். அவனும், ‘ஆமையா! ஆமையா! கேட்டேன், கேட்டேன்! காது நோகிறது, போதும் கூலி, போதும்! அப்பா, உனக்குப் புண்ணியமாய்ப் போகிறது! என்னை விட்டுவிடு!’ என்றான். அந்தச் சமயத்தில் குரு அவனைப் பார்த்துக் குருவும், ‘உன் மாடெனக்குப் போதும்; இந்தச் சஞ்சலம் இனி ஆகாது; நீ மாட்டை ஓட்டிக்கொண்டு போ; இன்னுங் கொஞ்சம் தூரந்தான்பயணம் போக வேண்டும்; காலமே மெள்ள நடந்து போகிறேன்,’ என்று அவனைப் போகச்சொல்லிப் பின்பு நியாயக்காரனைப் பார்த்து, ‘ஐயா, நீர் எங்கள் வழக்கைப் பாரபக்ஷமில்லாமல் எள்ளுக்காய் பிளந்தாற்போலத் தீர்த்தீர்,’ என்று புகழ்ந்து ஆசீர்வதித்தனுப்பினார்.

4. குதிரை பிடிக்கத் தூண்டில் போட்டது

தொகு

மறு நாள் குருவும் சீஷரும் வெயிலுக்குப் பயந்து கோழி கூவினவுடனே எழுந்து, ஆயத்தஞ் செய்து புறப்பட்டார்கள். தளர்ந்த நடையாய் நடந்து போகிறதனாலே காதவழி கூட இன்னங் கடக்காததற்குள்ளே வெயிலேறினதைக் கண்டு, ஒரு குளிர்ச்சியான சோலையிலிறங்கினார்கள். அங்கே இளைப்பாறிக்கொண்டிருக்கையில், மிலேச்சன் என்பவன், மலோபாதைக்குப் போய்ச் சமீபமாயிருந்த ஏரியிற் கால் கழுவப்போனான்.

கரையின்மேல் ஐயனார் கோயிலிருந்தது. அதிலே ஆரோ ஐயனாரப்பனைக் குறித்துப் பிரார்த்தனை செய்து, மண்ணினாற் புதிதாய்ப் பண்ணிச் சுட்டு வர்ணந் தீர்ந்த ஒரு பெரிய மண்குதிரையைக் கொண்டுவந்து செலுத்தியிருந்தார்கள். அந்த மண்குதிரையின் நிழல் ஏரி நிறையத் தெளிந்திருந்த தண்ணீரிற் காணப்பட்டது. அதை ஏரியிற் காலலம்பப் போன மிலேச்சன் கண்டு, தண்ணீர்க்குள்ளே குதிரை நிற்கிறதென்று நினைத்து, அதிசயப்பட்டுப் பின்பு கரையிலே நிற்கும் மண் குதிரைக்குச் சரியொத்த நிறமும் உயரமும் பருமனும் சாயலுமாயிருக்கக் கண்டதனால், தண்ணீரிலே தோன்றினது அதன் நிழலாயிருக்க வேண்டுமென்று சமுசயப்பட்டான்.

சமுசயப்பட்டாலும், அப்போது அடித்த காற்றினால் தண்ணீரசைய அதிலே காணப்பட்ட குதிரை நிழலும் அசையத் தலைப்பட்டது. அதைப் பாரத்துக் கரைமேலிருக்குங் குதிரையைப் பார்க்கும்பொழுது அஃது அசைவொன்றுமில்லாதிருந்ததனால், நீருக்குள் நிற்கும் குதிரை வெறென்றும் உயிருள்ளதென்றும் நிச்சயம் பண்ணினான். அதை ஓட்டுகிறதற்கு எத்தனப்பட்டு, வாயினால் கூச்சல் போட்டுக் கல்லைக்கொண்டெறிந்தான். எறிந்த மாத்திரத்தில் தண்ணீர் அதிகமாயாடி அலைந்தெழும்பக் குதிரையும் தலையெடுத்துக் காலுதறி உடல் துடித்துத் துள்ளினதாக இவன் கண்ணுக்குத் தோன்றினதனாற் பயந்து, காலும் அலம்பாமல், மற்றவர்களிடத்தில் ஓடிவந்து தான் கண்டதையெல்லாஞ் சொன்னான்.

அந்தப் புதுமையைக் கேட்டு எல்லோரும் திடீரென்றெழுந்து ஓடிப்போய், ஏரிக்குட் சுற்றிப் பார்க்குமிடத்தில் மிலேச்சன் சொன்னது மெய்யென்று நம்பிக்கொண்டு, ‘தண்ணீரிலிறங்கினால் தவளை கடிக்கும்!’ என்பவர் போல, அவர்கள் ஏரி நீரில் இறங்கப் பயந்து, இறங்காமல் அதற்குள்ளிருக்கிற குதிரையைப் பிடிக்கும்படிக்கு ஆலோசனை பண்ணத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன், ‘கொள்ளைக்கண்டால் வாயைத் திறக்கிறது குதிரைக்குச் சுபாவமாகையால் கொள்ளை வேவித்து வைத்தால், அந்த வாசனையைக் கண்டு அதைக் குதிரை தின்னுகிறதற்கு மேலே வரும்; அப்பொழுது அதைப் பிடித்துக் கொள்ளலாம்,’ என்றான். மற்றொருவன், ‘பசுமையாயிருக்கிற ஒரு பிடி அறுகம்புல்லைப் பிடுங்கிக் கொண்டுபோய்த் தண்ணீர்க்கு மேலே காட்டினால், குதிரை அதைத் தின்னத் தாவியெழும்பும், அந்நேரத்திற் பற்றிக்கொள்ளலாம்,’ என்றான். பின்னொருவன், ‘பெட்டைக் குதிரை கனைக்கிறது போலக் கரைமேலிருந்தபடி கனைத்தால், குதிரை காமவெறி கொண்டு மேலே கிளம்பும், அந்தச் சமயத்தில் தப்பாமல் கைவசப்படுத்திக் கொள்ளலாம்,’ என்றான். இன்னுமொருவன், ‘எருமை போய் ஏரியில் விழுந்தால், தவளை தானே குதித்தோடும் என்பதனால், ‘எருமைக் கடாவை ஓட்டிக்கொண்டு போய்த் தண்ணீரில் விட்டால், அது நாலு பக்கமும் ஓடியாடிக் குதிக்கும்; அந்த உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் குதிரை கரையேறி வரும்; அத்தருணத்தில் வருத்தமில்லாமல் பிடித்துக்கொள்ளலாம்,’ என்றான். இப்படி நாலுபேருஞ் சொன்ன உபாயங்களெல்லாந் தனக்குச் சம்மதியாததனால் மிலேச்சன், ‘சரியன்று,’ என்று மறுத்து, ’நானோர் உபாயஞ் சொல்லுகிறேன், கேளுங்கள்! தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறது போல, இதையும் பிடித்துக் கரைமேலிழுக்க வேண்டும்,’ என்றான். அதற்கு அவர்களெல்லாம், ‘ஆம்! ஆம்! இது நல்ல உபாயந்தான்!’ என்று உடன்பட்டார்கள்.

தங்களுக்குள் ஒருவன் வைத்திருந்த கருக்கரிவாளைத் தூண்டில் முள்ளாகவும், வழியில் உண்ணுதற்குத் தாங்கள் கொண்டுவந்த கட்டுச் சாதத்தைத் தூண்டிலின் இரையாகவும், குரு்வானவர் கட்டியிருந்த தலைப்பாகையைத் தூண்டிற் கயிறாகவும், அவர் கையிலே பிடிக்கிற ரிஷபவுருச் செய்து வைத்த பித்தளைப்பூண் கட்டிய தடியைத் தூண்டிற்கோலாகவும் ஆயத்தப்படுத்தி, எப்படியாவது நினைத்த காரியத்தை முடிக்கவேண்டுமென்று தீர்மானித்து, அப்படியே கட்டுச் சோற்று மூட்டையைக் கருக்கரிவாளின் முனையிலே கோத்து, அடியிலே தலைப்பாகையைக் கட்டி, அதைத் தடியிலே சுற்றி முடிந்து, தண்ணீர்க்குள் குதிரை காண்கிற இடத்தில் எறிந்தார்கள். அது தொம்பென்று விழுந்து விசையோடு மிகவுந் தண்ணீர் ததும்பினதனால், அங்கே தோன்றின குதிரையும் துள்ளி எழுந்து நெளித்துக் கிளம்பினது போலக் கண்டதனால் எல்லோரும் பயந்தோடினார்கள்.

முண்டாசியைத் தொடுத்த தடியைப் பிடித்திருந்த ஒருவன் மாத்திரம் அதைக் கைவிட்டோடாமல் நின்றான். அவன் ஏரியின் அலையமர்ந்த பின்பு அதிலுள்ள பெரியமீன்கள் மெள்ள மெள்ள அணுகிக் கட்டுச்சாத மூட்டையைக் கடித்திழுத்த ஜாடையைக் கண்டு, கைச்சைகை செய்து மற்றவர்களை அழைத்துக் ‘குதிரை இதோ இப்பொழுதுதான் இரையைக் கடிக்கிறது,’ என்றான். சற்று நேரம் போன பிறகு தலைப்பாகையை இழுக்கச் சீலையுஞ் சாதமும் போனதனால் பாகையுடனே கட்டின கருக்கரிவாளானது அங்கே முளைத்திருந்த ஏரிக்கோரையில் மாட்டிக்கொண்டது. அவன் அது குதிரை வாயில் மாட்டிக்கொண்டதாக நினைத்துக் ‘குதிரை வாயில் மாட்டின போதே குதிரை நம்முடையதாய் விட்டது,’ என்று சந்தோஷமாய்க் கூப்பிட, அனைவருங் கூடி வந்து தலைப்பாகையைப் பிடித்திழுக்கப் பாகை பழையதாகையால் அற்றுப்போயிற்று. எல்லோரும் ஒருமிக்க மல்லாக்காய்க் கீழே விழுந்தார்கள்.

இப்படி அவர்கள் விழுந்தறுவாயில் ஒரு கிரகஸ்தன் வந்து, ‘இஃதென்னை?’ என்று கேட்க, எல்லாவற்றையும் ஒழுங்குபடச் சொன்னார்கள். அதுகேட்டு அவன் இவர்கள் மவுட்டியத்தைக் கண்டு கரைமேலே இருந்த குதிரையை வஸ்திரத்தினாலே மறைக்க நீருட்குதிரை மறைந்தது. அதை அவர்களுக்குக் காட்டி, அந்த மயக்கத்தை நீக்கினான்.

அப்போதவர்கள் தங்கள் குருவை அவனுக்குக் காட்டி, ‘ஐயா, எங்கள் குருசுவாமியானவர் தளர்ந்த வயதாகையால், ஏறிப் போவதற்குக் குதிரை ஆவசியகமாயிருக்கிறது; அது கொள்ளுதற்குப் போதுமான பணமில்லாததனாலே சுளுவிலே அதன் முட்டை வாங்கினோம்; அது சேதமாய் விட்டது; பின்பு வாடகை மாடு வைத்து அதனிமித்தம் வெகுவாகச் சஞ்சலப்பட்டோம்; இப்பொழுது இப்படியாயிற்று,’ என்று எல்லாம் விவரமாயவனுக்குச் சொன்னார்கள். அவன் அவர்கள் கபடமறியாத நல்ல மனிதர்களென்று கண்டு, மனமிரங்கி, ‘என்னிடத்தில் ஒரு நொண்டிக் கிழக்குதிரை உண்டு, இது உங்கள் வழிப்பயணத்துக்கு உதவும்; அதற்காக நீங்கள் பணங்காசு கொடுக்க வேண்டுவதில்லை; நான் இலவசமாகத் தருகிறேன், என்னூருக்கு வாருங்கள்,’ என்று அழைத்துக்கொண்டு போனான்.

5. குதிரையேறிப் போனது

தொகு

அந்த மனிதன் திரவியஸ்தனல்லாத ஏழையானாலும், தர்மிஷ்டனாகையால், அவர்களைச் சொன்னபடியே சமீபத்திலிருந்த தன்னூருக்கு அழைத்துக் கொண்டுபோய், அன்றி ராத்திரி அவர்களுக்கு நெய் பால் தயிர் முதலானவைகளிற் குறையில்லாமல் போஜனம் செய்வித்துச் சாப்பிட்ட பிறகு, வெற்றிலை பாக்குப் புகையிலை முதலானவைகளுஞ் சம்பிர்மமாய்க் கொடுத்தான்.

மறுநாட் காலையில் அவன் கொல்லை வெளியில் மேய்ந்து கொண்டிருந்த நாட்டுத் தட்டாகிய ஒரு குதிரையைப் பிடித்துக்கொண்டு வந்து குருவுக்கு முன்பாக விட்டு, அதை அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். கொடுத்த குதிரையோ, வயது சென்ற கிழமும், ஒரு கண் பொட்டையும், ஒரு காது மூளியும், முன்காலில் ஒரு கால் நொண்டியும், பின் கால் முட்டிக் காலுமான ரூபமாய், அந்தக் கிழ குருவுக்குத் தக்க வாகனமாயிருந்தது. ‘எப்படி யிருந்தாலும், குதிரை பணச் செலவில்லாமல் இலவசத்தில் அகப்பட்டதே!’ என்று எல்லாரும் அதிக மகிழ்ச்சி கூர்ந்தார்கள். மட்டி குதிரையைச் சுற்றி வந்து தடவியும், மடயன் அதன் நொண்டிக்காலைப் பிடித்திழுத்து முறுக்கியும், மூடன் மொட்டை வாலைப் பற்றி உருவியும், மூர்க்கன் நொள்ளைக் கண்ணைத் துடைத்தும், மிலேச்சன் பசும்புல்லைக் கொண்டுவந்து வாயிலே கொடுத்தும் இவ்விதமாக அதை மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குமேல் குதிரை முஸ்திப்புத் தேடத் தலைப்பட்டார்கள். குதிரை கொடுத்தவன் பீற்றலாயிருந்த ஒரு பழஞ்சேணத்தைக் கொடுத்தான். அதிற்குதிரை வாலின்கீழ் மாட்டப்படும் பின்தட்டு வாரில்லாததனாற் பாலைக் கொடியைத் திரித்துக் கட்டினார்கள். அப்படியே கடிவாளத்துக்கு வாரில்லாமையால், ‘வழீயிலே கண்ட குதிரைக்கு வைக்கோற்புரி கடிவாளம்,’ என்ற பழமொழிப்படி பழுதையை முடிந்து வைத்தார்கள். தங்கப்பட்டையும் இறுக்கு வாரும் சம்பாதிக்க வெகு பிரயாசப்பட்டும் கிடையாததனால், மடத்துக்குச் சமீபத்திலிருந்து பேட்டைக்குப்போய், அவ்விரண்டும் முன்கால் பின்கால்களிற் கட்டுகிற அசாடி பிசாடிக்கயிறுகளும் வாங்கிக்கொண்டு வந்தார்கள். இப்படி முஸ்திப்பெல்லாம் அமைத்த பின்பு குதிரைச்சவாரி பண்ணுதற்கு ஜோதிஷ முறைப்படி வாரசூலையைத் தள்ளி, அமிர்தயோகமான சுபமுகூர்த்தம் ஒன்று நிருணயம் பண்ணினார்கள். அந்நேரத்தில் ‘ஊர் கூடிச் செக்குத் தள்ளுகிறது போல’ ஊராரெல்லாம் வந்து கூடிப் பேரிரைச்சலிட்டு வாழ்த்திப் பரமார்த்த குருவை முதல் முதற் குதிரைமேல் ஏற்றி வைத்தார்கள். அப்பொழுது,

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போங் காத வழி.

என்கிற படியே ஐந்து சீஷர்களில் ஒருவன் முன் புறத்திலிருந்து கடிவாளத்தைப்பிடித்திழுக்க, ஒருவன் பின்புறத்திலிருந்து வாலைப் பிடித்து முறுக்கி அதட்டியோட்ட, இருவர் பக்கங்களிலிருந்து குருவின் கால்களைக் கைலாகு கொடுத்துத் தாங்க, ஒருவன் முன்னே, ‘பரமார்த்தகுரு வருகிறார்! பராக்கு! எச்சரிக்கை!’ என்று கட்டியங் கூறிப் பராபரி பண்ணக் கிழக்குருவானவர், மகா சம்பிரமத்துடனே குதிரை சவாரி பண்ணினார்.

இந்தப் பஞ்சதாளக் குதிரையின்மேல் உல்லாசமாக உடல் பூரிக்க வெகுதூரம் போன பிறகு, நடுவழியில் வழிச்சாரி ஆயக்காரனொருவன் கண்டு, ஓடிவந்து, மறித்தான். இவர்கள், ‘ஏன் மறிக்கிறாய்?’ என்றார்கள். அவன், ‘குதிரைக்கு ஐந்து பணம் ஆயங்கொடுக்க வேண்டும்; அது கொடாமற் போகக் கூடாது’ என்றான்.

அதற்கிவர்கள், ‘இஃதென்னை புதுமை? குருவேறின குதிரைக்கும் ஆயமுண்டா? வியாபார சம்பந்தமா? உத்தியோக சம்பந்தமா? அவையெல்லாமல்லவே! எங்கள் குரு முதிர்ந்த வயதாய்ச் சரீரம் தளர்ந்திருக்கின்றதனால், கால் நடையாய் நடக்க மாட்டாததைக் கண்டு, ஒரு புண்ணியவான் தருமத்துக்குக் கொடுத்த குதிரையாக்குமிது! இதற்கு ஆயம் வாங்கினை நாங்கள் எங்குங் கண்டதில்லை! ஆனாலும், அநியாயம்’ என்று அவர்கள் கூச்சல் போட, அவன், ‘அநியாயமோ, நியாயமோ, எனக்கொன்றுந் தெரியாது; பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும்,’ என்று மத்தியானமட்டும் மறியலில் வைத்து, ‘விடமாட்டேன்!’ என்றதனால், தப்பிப் போக வேறே வழி காணாமல், ‘நாம் கொடாக் கண்டராயிருந்தாலும், இவன் விடாக்கண்டனாயிருக்கிறானே! ஐயோ! வீண் தண்டமிது!’ என்று ஐந்துபணங் கொடுத்தார்கள். அவன் விட்டுவிட்டான்.

குரு, குதிரையில்லாவிட்டால் இந்தச் சஞ்சலம் வரமாட்டாதல்லவா!’ என்று மிகவும் தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டு, பின்பு இளைப்பாறும்படி ்சீஷர்களுடனே கிட்ட இருந்த சாவடிக்குப் போனார். அங்கே எதிர்ப்பட்ட ஒரு கிருகஸ்தனோடே குருவானவர் தாமே வலுவில் முறையிட்டுக் கொள்ளத் தொடங்கினார். ‘அப்பா, நான் பிறந்த நாள்தொட்டு இதுவரையிலும் ஒருக்காலும் குதிரையேறினதில்லை. ஒரு நாளுஞ் சிரியாதவன் திருநாளிற் சிரித்தான்,’ என்பது போல, இன்றைக்குத்தான் முதல் முதல் குதிரையேறி வந்தேன், வந்த இடத்தில் இந்த அநியாயம் நடந்தது! இப்படி நீதியில்லாமல் வழி பறிக்கிற கள்ளனைப் போல நிஷ்டூரமாய்ச் சம்பாதிக்கிற பணம் ஆருக்காவது நன்மையாயிருக்குமாழ என் வயிறெரிய வாங்கின பணம் அவனுக்குச் செரிக்குமா? நெருப்பாய் மூளாதா?’ என்றார்.

அதுகேட்டு அவன், ‘ஐயா, பெரியவரே, இது காலத்தின் சுபாவம்; இந்நாளிற் பணமே குரு, பணமே தெய்வம், ‘பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்,’ என்பது முன்பு கேட்டோம்; இப்போது ‘பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே’ என்பதற்குச் சரியாய்ப் பணத்தைவிட வேறே உறவும் சினேகமும் இல்லாயாக்கும்,’ என்றார்.

இதற்கேற்கக் குருவும், ‘அப்பா, இந்தக் காலத்திலே கஷ்டத்தில் அரைக்காசு கிடக்கக் கண்டாலும் அதை நாக்காலே நக்கியெடுக்கக் கூசார்கள்!’ என்று சொன்னார். அவனும், ‘சந்தேகமா! அப்படி நக்கியெடுக்கும்பொழுது அஃது அவர்களும் நாறாதையா! இதற்கு ஓர் அத்தாக்ஷி கேளும்,’ என்று சொல்லுகிறான்:

‘ஓர் ராஜா பணத்தாசையினாலே தன்சீமையில் ஒரு பொழுதும் இல்லாத வரியெல்லாம் ஏற்படுத்தி வைத்து, அதன் பின்பு மூத்திரவரியும் விதித்தான். இஃது அவன் மகனுக்குச் சம்மதியாமல், ‘குடிகளிடத்தில் இந்த நாறுகிற வரிகேட்டு வாங்குகிறது லச்சைக் கேடாயிருக்கிறது!’ என்று தகப்பனுக்குச் சொல்ல, ராஜா மகனுக்கு அப்பொழுது மறுமொழி சொல்லாமலிருந்து, பல நாள் போக வைத்து, வரிப்பணம் பொக்கசம் நிறையச் சேர்ந்தபின், மகனை அழைப்பித்து, அந்தப் பணத்தை முகரச்சொல்லி, ‘நாறுகிறதோ?’ என்று கேட்டான். மகன் வெறொன்றும் நினையாமல் ‘நாறவில்லை, மணக்கிறது,’ என்றான். இராசா, ‘இது மூத்திரவரிப் பணமாக்கும்!’ என்றான். கேட்டீரோ? பணம் வந்தாற் போதும்! அஃது எப்படி வந்தாலும் பாரமன்று ஐயா!’ என்றான்.

இவ்வாறு பல பேச்சுகள் பேசிக்கொண்டிருந்து பொழுது போக்கின பின் சாயங்காலத்தில் மீளவுங் குதிரையெறிப்போய் ஒரு பட்டிக்காட்டிலே தங்கினார்கள். அன்றிராத்திரி, குதிரையைக் கட்டாமல் மேய விட்டுக் காலமே பயணத்துக்குத் தேடினபோது அகப்படாமையால், மூர்க்கன் வீட்டுக்கு வீடு நுழைந்து பார்க்கையில், அதை ஒருவன் தன் வளைவில் கட்டி வைத்திருந்தான். இவன் அதை விடச் சொன்னபோது, அவன், ‘இராத்திரி முப்பது நாழிகையும் என் பயிரில்மேய்ந்தது; எனக்கு வெகு சேதமாயிற்று; அதனாற் பரிச்சேதம் விடமாட்டேன்,’ என்றான். அதைக்குறித்து அடுத்த ஊர் நாட்டானே போய் நயமாய்ச் சொல்லி அமர்த்தியும், அவன் ‘பயிர்ச்சேதம் கொடுத்தால்தான் நான் குதிரையவிடச் சம்மதிப்பேன்,’ என்றான். நாலுபேருங் கூடிக் குதிரை மேய்ந்த கொல்லையைப் பார்த்து, மிதித்தது மேய்ந்ததெல்லாம் மதித்துப் பத்துப்பணத்துச் சேதம்எட்டுப்பணத்துச் சேதம் உண்டென்று சொல்லக் கடைசி்யிலே தீர்ந்தபடிக்கு நாலு பணத்தை வாங்கிக்கொண்டு குதிரையை விட்டுவிட்டான்.

குருவேவென்றால், வெகுவாய்ச் சலித்துக்கொண்டு, ‘நமக்கு, இந்தக் குதிரை என்னத்துக்கு? இது வந்ததனாலே பணச்செலவுகளெத்தனை? சஞ்சலங்களெத்தனை? சங்ககைக் கேடுகளெத்தனை? இவைகளெல்லாம் நமது மகிமைக்குத் தகா அப்பா!’ என்று கால் நடையாய்ப் போகத் துணிந்தார். அதற்குச் சீஷர்கள், ‘ஆ! ஆ! அது சரியன்று!’ என்றும், ‘கால்நடை நடக்க உம்மாலாகாது,’ என்றும் சொல்லிக் கொண்டிருக்க, அவ்விடத்தில் ஒரு வள்ளுவப்பண்டாரம் இவையெல்லாங் கேட்டுக் கிட்டவந்து, ‘கவலைப்பட வேண்டாவையா,’ என்றான். மேலுமவன், ‘இந்தக் கஷ்டங்களெல்லாம் குதிரையைப் பிடித்த தோஷத்தினால் வந்தனவாக்கும்! செலவோடே செலவாக எனக்கு ஐந்து பணங் கொடுத்தால், நான் கிரகசாந்தி செய்து, அந்தத் தோஷத்தை நிவர்த்தியாக்கி விடுகிறேன்,’ என்றான். இவர்கள் செலவுக்காக அஞ்சிப் பார்ப்பது காரியமென்றென்று நினைத்துப் பணங்கொடுக்கச் சம்மதித்துத் தோஷத்தைக் கழிக்கச் சொன்னார்கள்.

அப்பொழுது அந்த வள்ளுவன், ‘இவர்கள் நமது வலையிற் சிக்கினார்கள். ஆகையால், இவர்களைச் சந்தேகமில்லாமல் நாம் ஏய்க்கலாம்,’ என்று நிச்சயித்துப் பணத்தை முன்னே கொடுக்கச் சொல்லிக் கழற்றிக்கொண்டு, அவர்கள் கண்ணுக்கு முன்பாகப் பலவிதத் தாட்டோட்டமான சடங்குகளைச் செய்து, நாநாவிதப் பச்சிலையும் பறித்து அபிமந்திரித்து எறிகிறது போலக் குதிரைமேல் எறிந்து உரக்கப் பேசாமல், மெதுவாய் மிணமிணவென்ற சத்தமாக, ‘ஆ! ஊ! ஐயும் கிலியும் சௌவும் ஓம் சுவாக!’ என்று அனேகமுறை உச்சரித்து, மும்முறை குதிரியைப் பிரதக்ஷிணம் வந்து, வால் முதல் தலை பரியந்தம் அதைத்தடவி, அதன் ஒற்றைக் காதைக் கையினாற் பிடித்துக் கொண்டு, இந்தக் காதிலேயாக்கும் தோஷமெல்லாம் தங்கி நிற்கிறது; இப்படிப்பட்ட தோஷத்தைக் கழிக்கத்தான் அந்நாளில் அந்தக் காதை அறுத்தார்கள். இப்பொழுது இந்தக் காதையும் அறுத்துப் போட்டால், இந்நாளில் வந்த தோஷமும் அற்றுப்போம்,’ என்றான். உடனே வெட்டரிவாளைத் தீட்டிக்கொண்டு அந்த ஒரு காதையுந் திடீரென்று அறுத்துத் தோஷந் தொடராதபடி தூரக்கொண்டுபோய் ஆழக் குழிதோண்டிப் புதைத்து, மேலே மண்போட்டுக் குறிசெய்துவிட்டு வந்தார்கள். இதிலே அன்றெல்லாம் சென்றதனால், மறுநாட்காலையில் வெகு தொந்தரவுபட்டு மடத்துக்குச் சென்றார்கள்.

6. பிராமணன் ஜோசியம் சொன்னது

தொகு

மடத்துக்குப் போன பிறகு, குருவானவர் வெகுவாய் விசனப்பட்டார். ‘நமக்குக் கிடைத்த குதிரை குரூபமான குதிரையாயிருந்தும், பணச்செலவில்லாமல் வந்ததென்பதனால் கொஞ்சம் சந்தோஷமாயிற்று; என்றாலும், இக்குதிரையினால் வழியில் அனுபவித்த சங்கடங்களை எல்லாம் நினைக்க நினைக்கத் தீராத மனக்கிலேசம் உண்டாகின்றது! தெய்வச்செயல் இப்படியும் இருக்கிறதல்லவா!’ என்று சிந்தித்துக் குருவானவர் சீஷர்களைத் தமது சந்நிதானத்திற் கூட்டிவைத்துக் கொண்டு, ஞான விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்:

‘தம்பிமாரே வரவர இந்தப் பிரபஞ்ச வாழ்வைப் பார்க்குமிடத்தில், முயற்கொம்பு போலவும், கானற்சலம் போலவும் சூனியமாயிருக்கின்றதென்று காண்கின்றேன்; தீமைகலவாத நன்மையும், கசப்புக் கலவாத இனிப்பும், துக்கங்கலவாத சந்தோஷமும் இங்கே கிடைக்கமாட்டா; ஐயோ! விலைகொடுத்து வாங்காமல் உபகாரமாய்க் குதிரை வந்ததென்று நாம் மிகவும் மகிழ்ந்தோமல்லவா! அன்றுதானே இந்தப் பாக்கியத்துடனே தொடர்ந்து வந்த கிலேசங்களையும் கண்டீர்களே! ஒரு துளித்தேனை நக்குகிறதற்காக அத்தனை கசப்பும் விழுங்க வேண்டுமோ? நெல்லுக்கும் உமியிருக்கிறது; எவ்வகைக் கனிகளுக்கும் தோலும் கொட்டையுமுண்டு; இவையெல்லாம் இயல்புதான்; ஆகிலும், நான் ஒரு தினத்தில் அனுபவித்த பொல்லாப்போ, மிகவும் அதிகம்! குதிரை ஏறுகிறதற்கு எனக்கு அதிர்ஷ்டமில்லையாக்கும்! விதிக்கெதிராய் நடக்க என்னாற் கூடுமோ? கூடாதே! ஆதலால், இனி அந்தக் குதிரையை அது வந்த இடத்திற்குத் திருப்பி அனுப்பிவிடுகிறதே காரியம்! ஆகாது, ஆகாது!’ என்றார்.

அதற்குச் சீஷர்களெல்லாரும், ‘ஆகா! அப்படிச் சொல்ல வேண்டாவையா! அஃதென்னை, நீர் கொண்ட குதிரையோ, நாங்கள் தேடின குதிரையோ? இரண்டில் ஒன்றுமன்றே? தெய்வாதீனமாய்த் தானாக வந்த குதிரையன்றோ? நாமதைத் திரும்ப அனுப்பினால், திருவுளத்துக்கு மறுவுளமாக நடக்கிறதாகுமே! ஆதலால், இஃது அதிக தோஷமாய் முடியாதா? குதிரைைப் பிடித்திருந்த தோஷத்தை அந்த வள்ளுவன் கழித்த பிறகு அஞ்சத்தக்கது என்ன இருக்கின்றது? ஒன்றுமில்லையே!’ என்றார்கள்.

இவைகளுடனே இன்னும் பல நியாயங்களை அவர்கள் விரிவாகச் சொல்ல, குருவும் மனந்தேறி, ‘நீங்கள் சொன்னபடி ஆகட்டும்,’என்றார். ஆனாலும், அன்று வந்த மோசம் போல இனி வாராதபடிக்கு, இராமாறு குதிரையை மேயவிடவொண்ணாது; வீட்டிலேதான் கட்டுவிக்க வேண்டும்; அதற்கான இடமுங் காணோமே!’ என்றார்.

அப்போது மூர்க்கனென்பவன், ‘இதற்காக ஆலோசனை என்ன? இந்த க்ஷணத்திலே நான் போய் ஆலங்கொம்புகளை வெட்டிக்கொண்டு வந்து, நம்முடைய மடத்துக்கு ஒரு மூலையில் நேர்த்தியான இலாயமொன்று, பண்ணிப் பதித்தது போலக் கட்டுகிறேன்,’என்றான்.

என்றவுடன் புறப்பட்டுப்போய், வழியோரத்திலிருந்த பிரமாண்டமான கொடியாலின் மேலேறி நின்று, செழிப்பாயுயர்ந்து வளர்ந்து ஒழுங்காயிருந்த கிளையைக் கோடாரியினால் வெட்டத் தொடங்கினான். ஆனாலும், அவன் நுனிப்பக்கத்திலிருந்து அடிப்பக்கத்தில் வெட்டுகிறதைக் கண்டு வழிப்போக்கனாய் வந்த ஒரு பிராமணன், ‘தம்பி, அப்படி நிற்கவேண்டா, கிளையோடே நீயும் விழப்போகிறாய்,’ என்றான். அதற்கவன், ‘இந்தத் துர்ச்சகுனமான வார்த்தையை எனக்கு நீ சொல்ல வந்தாயோ!’ என்று அறையிற் செருகி வைத்திருந்த வெட்டரிவாளைப் பிராமணன் மேல் எறிந்தான். அவனும்,‘இந்த மூடன் பட்டறியட்டும்!’ என்று விலகித் தப்பிப்போய்விட்டான். மூர்க்கனோ என்றால், முன்னின்றபடி பின்னும் வெட்டினதனால் அரைவாசிக்கு அதிகமாக மரம் அறுப்புண்டு மளமளவென்று முறிந்துவிழத்தானும் அதனோட விழுந்தான். ‘அம்மம்ம! இங்கு வந்த அந்தப் பிராமணன் பிரபலமான் சாஸ்திரி! மகாபுரோகிதன்! அவன் சொன்னபடிக்கு ஆயிற்று!’ என்று கடுக எழுந்து, பிராமணனைப் பின்பற்றிக் கூவிக்கொண்டே ஓடினான். சடுதியில் இவன் கிட்ட ஓடி வருகிறதைப் பிராமணன் கண்டு, ‘இந்தப் புத்தியில்லாத மிருகம் என்ன செய்யுமே!’ என்று அஞ்சி நின்றான். மூர்க்கன் வந்து, ஒரு கும்பிடு போட்டு, ‘ஐயா, நீர் பிரபலசாஸ்திரி; இன்னமோர் ஆருடம் எனக்குச் சொல்லவேண்டும்; நான் பரமார்த்த குருவின் சீஷனாக்கும்; அவர்மேல் எனக்கு அதிக பக்ஷமுண்டாயிருக்கின்றது; அவருக்குத் தளர்ந்த வயதாயிருக்கிறபடியினாலே, அவர் கொஞ்சநாளுக்குட்சாவாரென்று நான் பயந்திருக்கின்றேன்; இப்பொழுது நீரெனக்காறுதலாக, அவருக்கு முடிவு காலம் எப்பொழுதுவரும்? அதற்குமுன் காணப்படும் அடையாளமென்ன?’ என்பவற்றைச் சற்றே தயவு செய்து சொல்லவேண்டும்!’ என்றான். பிராமணன் தப்புவித்துக் கொள்ளப் பலவிதப் போக்குச்சொல்லியும் அவன் கேளாததனாலும், விடாத்தனாலும், கடைசியிலே, ‘ஆசன சீதம் ஜீவன நாசம்,’ என்றான். அவன், ‘அஃதென்னை ஐயா, அதற்கு அர்த்தம் சொல்லவேண்டும்,’ என்று அலட்டிக்கேட்க, ‘உன் குருக்களுக்கு இருப்பிடம் என்றைக்குக் குளிர்ந்து காண்கிறதோ, அஃது அன்றைக்குச் சாவு கிட்டினதென்பதற்கு அடையாளம் என்று அறிந்துகொள்,’ என்று பிராமணன் சொன்னான்.

மூர்க்கனும் நமஸ்காரஞ் செய்துவிட்டுப் போய், வெட்டின கிளையை மடத்துக்கிழுத்துக் கொண்டு வந்து, நடந்த செய்தி எல்லாம் விவரமாய்ச் சொன்னான். குருக்கள் இதைக்கேட்டு, மிகவும் விசாரப்பட்டு, ‘ஜோசியஞ் சொன்ன பிராமணன் மகா சாஸ்திரியல்லவென்று சொல்லக்கூடாது; உனக்கவன் சொன்னபடியெல்லாம் உடனே பிரத்தியக்ஷமாயிற்றே! ஆதலால், எனக்கு அவன் சொல்லியனுப்பின ஜோசியமும் தப்பமாட்டாது; ‘ஆசன சீதஞ் ஜீவன் நாசம்,’ என்பது நல்ல யுத்தியும் அனுபவமுமான வசனந்தான், இனி எச்சரிக்கையாயிருக்க வேண்டுமாக்கும்! ஒருகாலும் கால்சுத்தி செய்யக்கூடாது. அதன்மேல் ஆண்டவன் விட்டபடியாகிறது!’ என்றார்.

7. குரு குதிரைமேலிருந்து விழுந்தது

தொகு

சொன்ன எச்சரிக்கையோடு நெடுநாளிருந்து, பின்பு சீமா மூலங்களுக்குப் போய் வந்தால், சீஷர்கள் கையிற் பணம் பறியுமேயொழிய மடத்திலிருந்தால் அது வர அறியாதென்று அதைப்பற்றி ஊருக்கூர் சுற்றித் திரியக் குருவும் சீஷர்களும் புறப்பட்டார்கள்.

எங்கும் போய்ச் சுற்றிக்கொண்டு ஒருநாள் அவர்கள் மடத்துக்குத் திரும்பி வருகையில், குருக்கள் அடைந்தசைந்து குதிரைமேல் ஊசலாடிக்கொண்டு வரும்பொழுது, கீழை தொங்கின ஒரு மரக்கொம்பு பட, அவர் தலைப்பாகை பின்பக்கத்தில் விழுந்து அதைச் சீஷர்கள் எடுத்தார்களென்றெண்ணிக் கொண்டு, ஒன்றும் பேசாமல் சும்மா வெகுதூரஞ் சென்றபின்பு, அவர், ‘தலைப்பாகை எங்கே? தாருங்கள்,’ என்று கேட்டார். ‘அஃது அங்கே விழுந்தவிடத்திலே கிடக்கும்,’ என்று அவர்கள் சொல்ல, அவர் கோபித்துக் கொண்டு, ‘விழுந்ததெல்லாம் எடுக்கத் தேவையில்லையோ? நான் சொல்ல வேண்டுமோ?’ என்றார். அந்த மட்டில் மடயன் அப்படியே அங்கே ஓடிப்போய், விழுந்த பாகையை எடுத்துக்கொண்டு வருகையில், அதற்குமுன் பெய்த மழையில் செழிப்பாய் வளர்ந்திருந்த புல்லை மேய்ந்து அன்றிராத்திரி குதிரை கழித்த இளகலாகிய லத்தியை அந்தத் தலைப்பாகையில் ஏந்திக்கொண்டு வந்து, பக்தியுடனே குருவின் கையில் ஒப்புவித்தான்.

அப்பொழுது அவர், ‘சீசீ! என்று வெகுவாய்க் கோபித்தார். அதற்கு எல்லாருங்கூடி, ‘இஃதேதையா! விழுகிறவை சகலத்தையும் எடுக்கச் சொல்லி முன் கற்பித்தீரல்லவோ? குருவார்த்தை கடக்கலாகாதென்று கற்பித்தபடி செய்தால், இப்பொழுது நீர் ஆயாசப்படுவானேன்?’ என்றார்கள். குருவோ, ‘அப்படியன்று, எடுக்கத்தகுவதும் எடுக்கத்தகாததுமுண்டு, எதையும் பகுத்தறிந்து நடக்கவேண்டும்,’ என்றார். ‘நாங்கள் அம்மாத்திரத்திற்குத் தக்க மனுஷரல்லேம்! எடுக்கவேண்டியதை மாத்திரம் இன்னதென்பதாக வேறே எழுதித் தரவேண்டும்,’ என்று சொன்னார்கள். அவரும் எழுதிக் கொடுத்தார்.

அப்புறம் போகையில் ஈரமாயிருந்த வழுக்கு நிலத்தில் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக்குதிரை சறுக்கி விழுந்தது. அத்தருணத்தில் அதன் மேலிருந்த குருவும் தவறி அருகேயிருந்த குழியில் தலைகீழும் கால் மேலுமாய் விழந்து, ஒரு கால் அங்கபடியில் மாட்டிக்கொண்டு எழுந்திருக்கக் கூடாமல், கோவென்றலறி, ‘அன்பான சீஷர்களே, என்னை எடுக்க வாருங்கள்!’ என்று கூப்பிட்டார். சீஷரும் சரேலென்று ஓடிவந்து, குரு முன்னே எழுதித்தந்த ஜாபிதாவையெடுத்து, ஒருவனை வாசிக்கச் சொன்னார்கள். அதிலே, ‘விழுந்த தலைப்பாகை எடுக்கவும், விழுந்த வேஷ்டி உத்தரீயம் எடுக்கவும், விழுந்த சட்டை குட்டை உள்ளாடைகளையெடுக்கவும் வேண்டும்,’ என்று அவன் வாசித்தபடியே ஒவ்வொன்றாய் எல்லாவற்றையுங் குருவினிடத்திலிருந்து கழற்றி எடுத்து, அப்புறம் வைக்க குருக்கள் மாத்திரம் நிருவாணமாய் அங்கே கிடந்தார்.

அவரிப்படிக் குழியிற்கிடந்து தம்மையும் எடுக்கச் சொல்லி எவ்வளவு கெஞ்சினாலும், எவ்வளவு சலித்துக்கொண்டாலும், எவ்வளவு கடுஞ்சொற்கள் சொன்னாலும், சீஷர்கள், ‘இதுவும் முன்னமேதானே ஜாபிதாவில் எழுதாதனாலே நாங்கள் எடுக்க மாட்டோம்,’ என்று ஒரே பிடிவாதமாகச் சாதித்தார்கள். மேலும், அவர்கள், ‘ஐயா, குரு சிகாமணியே, எடுக்கவில்லையென்று வீணாய் எங்கள்மேல் கோபிக்கிறீரே! நல்லது! உம்மையும் எடுக்கும்படி எழுதினதெங்கே? காட்டும் பார்ப்போம்! எழுதினபடி செய்வோமேயொழிய, எழுதாததை அப்படித் ‘தடிக்குமிஞ்சின மிடாவைப் போல வரம்பு கடந்து ஒரு போதுஞ் செய்யச் சம்மதியோம்!’ என்றார்கள். அவரும் இவர்கள் சாதனையைக் கண்டு, தப்பும் வழி வெறொன்றும் காணாமையால், ஓலையும் எழுத்தாணியும் வாங்கி, கிடந்தவிடத்திலேதானே, ‘நான் விழுந்தாலும் எடுக்கக் கடவீர்கள்,’ என்றுகைகால் நடுங்கிக் கொண்டே எழுதிக்கொடுத்தார்.

எழுதினதைக் கண்டு சீஷர்களும் ஒருமிக்கப் போய் அவரை எடுத்தார்கள். அவர் விழுந்த குழியிற் சேறிருந்தபடியால், குருவுடம்பெல்லாஞ் சேறுபட்டு அழுக்கானதென்று சமீபத்திலிருந்த தண்ணீரிலே குளிப்பாட்டினார்கள். பின்பு பழையபடியே உடுப்பெல்லாமுடுத்திக் குதிரை மேலேற்றி, மடத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள்.

8. குருவைச் சேமித்தது

தொகு

குருவானவர் குழியில் விழுந்து எழுந்திருக்கக் கூடாமற் கிடந்த சமயத்திற் சீஷர்கள் மிகவும் அஞ்சிப் பதறினதனால், அந்தப் பிராமணன் முன்பு சொல்லியிருந்த ஜோசியத்தின்மேல் ஒருவருக்கும் ஞாபகமில்லாமற் போயிற்று. திரும்பக் குதிரை ஏறின பிறகு இருப்பிடம் குளிர்ந்ததென்று கண்டு, குருநாதரே விசாரப்பட்டார். ஆகிலும், மடத்துக்குப் போய்ச் சேருமளவில் ஒன்றும் சொல்லாமல் போனார்.

தளர்ந்த வயதாகிய காலத்தில் விழுந்த அதிர்ச்சியினால் அன்றிரவில் நித்திரை கொள்ளாமல் மருண்டு புரண்டு கொண்டிருந்து, அவர் பிராமணன் சொன்ன ஜோசியம் அடிக்கடி நினைவிலே தோன்ற, வெகுவாய்ச் சஞ்சலப்பட்டார். குதிரையிலிருந்து குழியில் விழுந்ததனால் உடம்பதிர்ந்து இப்படி அரட்டப்படுகின்றதென்று நினையாமல், ஆசனங்குளிர்ந்து சாங்காலங் கிட்டினதனாலாக்கும் இவையெல்லாம் சம்பவித்தனவென்று நிச்சயம் பண்ணிக்கொண்டார். இந்த நினைவோடு அன்றிராத்திரி முழுதும் தமக்குள்ளே பயந்து பதறி, ஒரு நிமிஷம் கண்மூடாமற் பெருமூச்சுவிட்டு, மனந்தத்தளித்ததனால், விடியற் காலத்தில் சீஷர்களை அழைப்பித்தார்.

அவர்களும் வந்து பார்க்க, அவருடைய கண் குழிவிழுந்து பஞ்சடைந்ததாகவும், முகமெல்லாம் வற்றிச் சுருங்கி வெளித்துச் சாயல்மாறினதாகவும், வாயுதடு உலர்ந்து நாவில் ஈரமில்லாமல் வார்த்தை குழறவும், பிரமை கொண்டது போல உற்று உற்றுப் பார்க்கவும், மேல் சுவாசம் வாங்கவுங் கண்டு மிகவும் பயந்தார்கள்.

அப்பொழுது அவர் பெருமூச்செறிந்து, ‘தம்பிமாரே! எனக்கு மரணாவஸ்தையானது நெருங்கிவிட்டது;இனி ஆத்துமா பிரிந்து கடமெழும்பிப் போகும் போலக் காண்கிறது; நீங்கள் எனக்குச் சமாதிக்குழியொன்று வகுத்து அதில் என்னை வைத்துச் சவத்தைச் சேமிக்கிறது போலச் சேமஞ் செய்துவிடுங்கள்,’ என்றார். ‘அஃதேதையா!’ என்று அவர்கள் சாரீரம் பதறிக் கேட்க, ‘ஓ, ஓ! இஃதென்னை! ‘ஆசன சீதம் ஜீவன நாசம்,’ என்றதை மறந்து போனீர்களோ?’ என்று சொல்லிப் பின்னுங் குருவானவர் சொல்வார்: ‘நேற்ற ுநான் விழுந்த குழியிலே நீருஞ்சேறும் மிகுதியாயிருந்த படியினாலே எனக்கு இருப்பிடத்திலே ஈரந்தாங்கியது; ஆனாலும், அப்போது உண்டான ஆபத்தினாலே அஃது எனக்குத் தோன்றாதே போயிற்று; பிறகு அதிகமாய் இருப்பிடம் குளிர்ந்ததும் கண்டேன்; பிராமணன் சொன்ன சாஸ்திரத்தையும் நினைத்தேன்; இராத்திரி முழுதும் உடம்பு வலியும் ஆராட்டமும் கண்டு, சற்றும் நித்திரையில்லாததனால் சாவு கிட்டினதென்று நன்றாய் அறிந்து கொண்டேன்; இனி வேறு ஆலோசனை வேண்டுவதில்லை; சீக்கிரம் சமாதிச் சேமத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள்,’ என்றார்.

அதைக்கேட்டு அவர்களும் அந்தத் துர்க்குறியை நினைத்து அஞ்சினார்கள். அஞ்சினாலும் அச்சத்தை வெளியிடாது, உள்ளே அடக்கிக்கொண்டு, நாநா விதமாகக் குருவின் மனந்தேறும்படி ஆறுதலும் தேறுதலுமான பலபல வார்த்தைகளைச் சொன்னார்கள்.என்ன சொல்லியும், அவருக்கு மனக் கிலேசம் மாறவில்லையென்று தெரிந்துகொண்டு, முன்பு அந்த ஊர்ச் சகுன சாஸ்திரக் காரனாயிருந்த அசேதன மூர்த்தி மகன் அசங்கதன் என்பவனால் தங்கள் குருவைப் பிடித்த சனியை நீக்கி, அவர் மனத்தைத் தேறச் செய்ய வேண்டுமென்று அவனைப் போயழைத்தார்கள்.

அசங்கதன் நடந்த வரலாறுகளையெல்லாம் விவரமாய்க் கேட்டபிறகு வந்து குருவைப் பார்த்து, ‘உமக்குச் சம்பவித்த குறையென்னை? நோவென்னை? மனவிசாரமென்னை? மாறாத கிலேசமென்னை? என் குருவே, என்னையனே, என் பிதாவே, சொல்லும்,’ என்று கண்ணீர் சோர, வாயிதழ் துடிக்க, முகம் வெயர்க்கக் கேட்டான். அதற்கெல்லாம், ‘ஆசன சீதம், ஜீவன் நாசம்!’ என்கிற வசனமேயொழிய வேறொரு மறு உத்தரமும் குருவானவர் சொன்னவரல்லர். அப்போதவன், ‘நல்லது! ஆசனசீதம் உமக்கு ஜீவன் நாசமென்று பிராமணன் சொன்னானே! நானும் அவன் ஆசனோஷ்ணம் அவனுக்கு நாசமாகப் பண்ணுகிறேன். அந்தப் பிராமணனை எனக்குக் காட்டுங்கள்; அவனுக்கு உலக்கை பூஜை பண்ணி அவனால் வந்த தோஷமெல்லாம் அடியோடே தீர்த்துப் போடுவேன்! அவனைக் காட்டும்! சீக்கிரம் காட்டும்!’ என்றான்.

‘உலக்கைப்பூஜையென்று ஒரு பூஜையுண்டோ? ஒரு நாளும் அப்படிப்பட்ட பூஜையைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே! அஃதாவதெப்படிப்பட்டது? சொல்,’ என்று குருவானவர் கேட்டார். அதற்கு அசங்கதன் மறுமொழி சொல்லத்தொடங்கினான். ‘இவ்வகைப் பூஜை உட்சமயம் புறச் சமயங்களிலும் காணக் கிடையாத பூஜையாக்கும்! ஞாபகமாய்க் கேட்கக் கடவீர்: ஓரூரில் ஒரு செட்டி இருந்தான்; அவன் அதிக சிவபக்திக்காரன்; அநுதினமும் பண்டாரங்களுக்கு அசனம் இடவேண்டு்மென்னும் ஆசையினால், அவர்களை எங்கே கண்டாலும், சுவாமி சுவாமி, அடியேனுடைய சிறு குடிசையிற் பிக்ஷை பண்ணும்படி எழுந்தருள வேண்டும்!’ என்று அழைப்பான். அவனுக்கு மக்களில்லை; கொண்ட மனைவியோவென்றால், நித்தமும் பண்டாரங்களுக்குச் சோறாக்குவதிலும் கறியாக்குவதிலும் பரிமாறுவதிலும் வெகு வருத்தப்படுவதனால், புருஷன் செய்கிறது அவளுக்குப் பொருந்தவில்லை. ஆயினும், இவை குறித்துப் புருஷனுக்கு ஏதாவது வெறுப்பாகச் சொன்னால், அவன் மனம் பொறுக்கமாட்டாதென்று அவளறிந்து ஓர் உபாயமெடுத்தாள்: ஒருநாள் அந்தச் செட்டி தான் கடையிலிருந்து அவ்விடத்தில் வரக்கண்ட பண்டாரத்தை அழைத்து, ‘என் வீட்டில் இன்றைக்குப் பிக்ஷை பண்ண வேண்டுமையா,’ என்றான். அவனும் சம்மதித்ததனால், ‘இப்போது கடையிலே வேலையாயிருக்கிறேன்; நீர் என் வீட்டுக்குப் போய், என் மனைவியைக் கண்டு, இந்தச் செய்தி சொல்லி, நான் வருவளவும் எங்கும் போகாமல், அங்கேதானே தங்கியிரும்,’ என்றான். பண்டாரம் சந்தோஷமாய்ப் போய்ச் செட்டி சொன்னதை அவன் மனையாட்டியோடே சொன்னான். அதற்கவள், ‘இவனொருகாலும் இங்கே வாராதவனாக்கும்!’ என்று கண்டுகொண்டு, ‘ஐயா, மெத்த நல்லது! நீர் இங்கே தானே இரும்,’ என்று வீட்டுத் திண்ணை மேலே பாயைக் கொண்டு வந்து விரித்தாள்.

பிறகு உடனே வீட்டு முற்றத்தை நன்றாய்ப் பெருக்கி, எங்குஞ் சாணத்தைக் கரைத்துத் தெளித்துத் தீற்றி மெழுகித் தன் கால் கைகளையுஞ் சுத்தி செய்து ஆசாரத்தோடே நெல்லுக் குற்றுகிற உலக்கையைக் கையிலெடுத்துக் கொண்டாள்; பிறகு அதில் நிறையச் சாம்பலைத் தடவித் தானும் அதைப் பூசிக்கொண்டு, நடு வாசலில் உலக்கையைக் கிடத்தி, அதற்கு எதிரே மூன்றுமுறை சாஷ்டாங்கமாய் விழுந்து வாயைத்திறந்து உரக்கப் பேசாமல், மந்திரஞ் சபிப்பது போல மிணமிண வென்றாள்; என்றதன் பின்பு உலக்கையைச் சாம்பல் போகும்படி துடைத்து, முன்னே அஃது இருந்த இடத்திலேதானே வைத்தாள். இவையெல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பண்டாரம், வெகுவாக ஆச்சரியப்பட்டு, ‘இந்நாள் மட்டும் நான் எங்குங் காணாத அதிசயத்தை இப்போது இங்கே கண்டேன்! இஃது என்ன பூஜையம்மா!’ என்று கேட்டான். அதற்கவள், ‘ஐயா, இஃது எங்கள் குலதெய்வத்தின் விசேஷ பூஜையாக்கும்! இனிமேல் நீரும் நன்றாயறியப் போகிறீர்,’ என்று வீட்டுக்குள் நுழைந்து போகையில், ‘இஃது உன் தலைமேலேதான் வந்து விடியும்,’ என்று அமர்த்த சத்தமாய்த் தன்னிலே தான் சொல்லிக் கொள்வதுபோலச் சொல்லிக்கொண்டு போனாள். அப்படி மெத்தெனச் சொன்னாலும், அஃது அவனுக்குக் கேள்வியாக வேண்டுமென்று அவள் விரும்பினபடியே அந்தச்சொல் பண்டாரத்தின் காதிலே விழுந்தது. அப்போது அவன், ‘நான் தெய்வாதீனமாய்த் தப்பிப் பிழைத்தேன்,’ என்று எண்ணிக்கொண்டு, செட்டிச்சி வீட்டில் நுழைந்தவுடனே சத்தப்படாமால் எழுந்து இலகுவாய்த் தப்பிப் போய் விட்டான். அவன் போன அடியிலே செட்டி வந்து, ‘நானனுப்பின பண்டாரம் எங்கேயடி?’ என்று கேட்க, அவளும், ‘நல்ல பண்டாரத்தை அல்லவோ இந்த விசை அனுப்பினீர்; அவர் வந்தவுடனே உலக்கையைத் தரச்சொல்லிக் கேட்டார்; அதற்கு நான் ‘இப்போது செட்டியார் வருவார்; அவருத்துரவில்லாமற் கொடுக்கப்படாது; சற்றே இரும்,’ என்று இதோ பாயையும் விரித்துப்போட்டேன் பாரும்; அவர் கேட்கமாட்டாமல், உடனே கோபித்துக்கொண்டு போய்விட்டார்,’ என்றாள். அது கேட்டுச் செட்டி, ‘அது அப்படியன்று, பண்டாரங்கள் என்ன கேட்டாலுங் கொடுக்கிறது எனக்குச் சம்மதிதானே! நீ அறியாயா?’ என்று சொல்லி, உலக்கையைக் கையிலெடுத்துக் கொண்டு பண்டாரத்தைத் தேடி அதைக் கொடுக்கும்படி தெருவிலே போனான். பண்டாரமும் நடக்குங் காரியத்தை முற்ற முடியக் காணும்பொருட்டு ஒரு தெரு முடுக்கில் ஒதுங்கியிருந்து உலக்கையோடே செட்டி வருவதைக் கண்டபோது, ‘இஃதேது! இவன் என் தலைமேலே பூஜை முடிக்க வருகிறானே!’ என்று பயந்து ஓட்டமெடுத்தான். செட்டியும் அதுகண்டு, ‘பண்டாரமே’ என்று அவனைப் பின்தொடர்ந்தோட, அவன் அதிக விசையாய் ஓடக் கடைசியில் செட்டிக்கு முதிர்ந்த வயதும் பெருத்த தொந்தியுமானதனால், இரைப்பெடுத்து ஓடமாட்டாமற் கால் சலித்து, அம்மட்டிலே நின்று, வீட்டுக்குத் திரும்பி விட்டான்.

‘இதுதான் உலக்கைப் பூஜை. இந்தப் பூஜையை நான் உனக்கு ஜோசியஞ் சொன்ன அந்தப் பிராமணன் முதுகின் மேலே முடித்தால் ஆசனோஷ்ணமாகி, அவனுக்கேயல்லாமல் உமக்கு நாசம் வாராதையா,’ என்றான். அதற்குப் பரமார்த்த குருவும் சிரித்து, ‘உன்னை அசங்கதனென்று சொல்வது நியாயமே! நீ எப்போதும் சரசபரிகாசங்களே செய்து வருகிறாய்,’ என்றார். அவனும், குருக்கள் சிரித்ததாகக் கண்டு பரிகாசத்தை விட்டு, மீண்டுஞ் சொல்லத்தொடங்கினான். ‘ஐயா, பிராமணன் சொன்ன வசனம் உண்மைதான்; இருப்பிடத்தில் குளிர்மை கண்டால் சாவுக்கடையாளமென்றுது சரியே; ஆயினும், வேறு காரணமில்லாமல் ஆசனங் குளிர்ந்து போனால்தான் அவன் சொன்னபடியாகும்; நீர் தண்ணீரிலேயும் சேற்றிலேயும் விழுந்தீர்; அதனாலே இருப்பிடங்குளிர்ந்தது மெத்த அதிசயமோ! அப்போது குளிரேதேயிருந்தால்தான் அதிசயமாகும். இப்போது இந்த வீண் கவலையை விட்டுவிடும்; இனிமேல் சேற்றில் உட்காராமலும், தண்ணீரிலே வீழாமலும், மற்றொரு காரணமில்லாமலும் ஆசன சீதங்கண்டால், அத்தருணத்தில் ஜீவன் நாசம் கிட்டினதென்று நினைக்கலாம்; இஃது ஒழிய, மற்றதெல்லாம் அபத்தமையா,’ என்றான். அசங்கதன் சொன்னது குருவின் மனத்திலே தைத்து, நியாயம் போலத் தோன்றிற்று. ஆதலால், அவர் சற்றுத் தேறியெழுந்து, சாப்பிடவும் அங்கங்கே திரியவும் தலைப்பட்டார்.

இப்படிச் சிலநாட்போன் பிறகு ஒரு நாள் இராத்திரி நடு ஜாமத்திற்குமேற் கனமழை ஒரு பாட்டமாய்ப் பெய்தது. அப்பொழுது குருவின் படுக்கை மேலே அவரிருப்பிடத்திற்கு நேரே அடுத்தாற்போல, மோட்டி நீரொழுக்கு விழுந்தது. அஃது அதிக தூக்கத்தினால், அவருக்குத் தெரியாதே போயிற்று. மழையும், மழையொழுக்கும் ஒழிந்த பின்பு குருக்கள் மெய்ம்மறந்து நித்திரையோடே புரண்டு, தமது இருப்பிடத்தில் ஈரம் உறைக்கத் தூங்கிக் கிடந்தார். அப்படித் தாக்கின குளிர்மையினாலே திடீரென விழித்து மிகவும் இருப்பிடங் குளிர்ந்ததாகக் கண்டு ‘குளிர்மை பிறக்க இப்போது வெறொரு காரணமுமில்லையே! ஆகையால், நமக்கினிச் சாங்காலம் வந்தது,’ என்று நிச்சயித்தார்.

வந்த குளிர்ச்சிக்குச் சீஷர்களும் வேறு முகாந்தரங் காணாமையால், படுக்கையின் குளிர்மை முதலாய்க் குருவினிருப்பிடச் சீதத்தினால் வந்ததென்று நினைத்து, ‘முன்பிராமணன் சொன்ன ஜோசியத்தின்கருத்து நிறைவேறுங் காலம் இதுதான்,’ என்று நிச்சயித்தார்கள். குருவைக் காணவந்த சுஜாதி மனுஷரும் இவர்களோடொத்த புத்திமான்களாகையால், அவ்வாறே பேச, சொன்னதையெல்லாம் குரு ஒத்துக்கொண்டு, தம்மைக் குறித்துக் கேட்டவர் யாவருக்கும், ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்பதேயொழிய வேறே மறுமொழி உச்சரியாதிருந்தார்.

நாளுக்கு நாள் இவர் இவ்விதமாக அடைந்த மிகுந்த மனக்கவலையும், சரீர பலவீனமும் தாங்கமாட்டாமல், ஒருநாள் அதிக சோகமாய்க் கிடந்தார். அப்பொழுது எல்லாரும், காகூவென்று கூச்சலிட்டுத் தலைமேற் கையை வைத்துக்கொண்டு, ‘ஐயையோ! எங்கள் ஆண்டவர் மாண்டாரே! மடிந்து போனாரே!’ என்று அலறி அழுது, சவச் சேமச் சடங்கு ஆரம்பஞ் செய்து, குளிப்பாட்டத் தொடங்கினார்கள்.

மடத்திலிருந்த பெரிய தொட்டி நிறையத் தண்ணீர் விட்டுக் குருவை உள்ளபடி பிரேதமென்றெண்ணி எடுத்து அதிலே போட்டு அமுக்கிச் சுற்றிப் பத்துப்பேர் கூடியிருந்து ஒருமிக்கத் தேய்த்துக் கழுவினார்கள். கழுவும் போதவருக்கு மயக்கந் தெளிந்தாலும், தண்ணீருக்குள்ளே மூச்சு விடமாட்டாமலும் கையையும் காலையும் அவர்கள் பிடித்து அமுக்குகிறதனால் சைகை காண்பிக்கக் கூடாமலும் மூடத்தனத்தினால் அந்த மடயர்கள் கையிலகப்பட்டுப் பராமார்த்த குரு அநியாயமாய்ச் செத்தார்!

அதன் பின்பு அனைவரும் பெருங்கூட்டங்கூடி அவரை அலங்கரித்துப் பூந்தேர் கட்டி அதற்குள் அவரை முறித்துவைத்து, சம்பிரமமாகச் சங்கு தாரை முழங்க எடுத்துக் கொண்டு, முன்னும் பின்னும் இரு பக்கமும் சீஷர்கள் நெருங்கிவந்து, ‘ஆசன சீதம் ஜீவன் நாசம்,’ என்று ஆடிக்கொண்டு போய்ச் சமாதிக்குழி தோண்டி அதில் வைத்து அடக்கஞ் செய்தார்கள்.


பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை முற்றியது

பார்க்க:

தொகு

16.ஔவையார் சரித்திரம்

18.சிறுகூனன் கதை

விநோதரசமஞ்சரி