விநோதரசமஞ்சரி/19.ஒரு பதிவிரதை சரித்திரம்
விநோதரச மஞ்சரி
தொகுஅஷ்டாவதானம் வித்துவான் வீராசாமி செட்டியார்
தொகுஒரு பதிவிரதை சரித்திரம்
தொகு‘செய்வன திருந்தச் செய்’ என்பது போல, நாம் மேன்மை பெறுவதற்கு ஒரே வழியுண்டு. அவ்வழியாவது, நம்முடைய வேலையை நாம் உலோபமின்றித் திருந்தச் செய்வதாம். ஒரு வேலையினுடைய தாழ்மையை எண்ணி, அவ்வேலை செய்பவரை நாம் ஒரு போதும் தாழ்வாகக் கொள்ளலாகாது. தாழ்ந்த வேலை செய்பவரை விட உயர்ந்த வேலை செய்பவர் சிறந்தவரென மதிப்பது தவறு. செய்யும்வேலையைக் கொண்டு ஒருவனை நாம் மதிக்காமல், அவன் அவ்வேலையை எவ்வாறு செய்கிறானென்பதையே ஆராய வேண்டும். ஒரு வேலையைச் செய்யும் விதமும் திறமுமாகிய இவ்விரண்டுமே, செய்வோனை அறியுங் கருவியாம். தன் குலவிதிப்படி சொற்ப காலத்தில் அழுத்தமும் அழகுங்கூடிய செருப்பைத் தைக்கும் சக்கிலி, சாரமற்ற விஷயங்களைப் பேசித்திரியும் உயர்குலத்தோனைக்காட்டிலும் மேலானவனாவான்.
முன்னொருகால் யௌவன சந்நியாசியொருவர் ஒரு காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, அரிய தவஞ்செய்து கொண்டிருக்கையில், ஒருநாள் அவர் தலைமேல் சில சருகுகள் விழுந்தன. அவர் கண்களை வி்ழித்து அண்ணாந்து பார்த்தபோது அமரத்துச்சியில் ஒரு காக்கையும் கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. உடனே அவருக்கு அதிக கோபம் பிறந்தது. ‘இச்சருகுகளை என் தலையில் எறிந்தீர்களல்லவா? ஆ! உங்களுடைய ஆண்மையை அறிகிறேன்!’ என்று சொல்லி, அவர் தம் பற்களைக் கடித்துப் புருவத்தை நெறித்துக் கோபாவேசத்தோடு அவைகளை உற்று நோக்கவே, யோக பலத்தால் அவர் சிரசினின்று அக்கினி ஜுவாலையெழுந்து அப்பக்ஷிகளைச் சாம்பராக்கிற்று.
பின்னர் அவருக்குக் குக்ஷி பாதை உண்டாகவே காட்டை விட்டு நாட்டிற்புகுந்து, ஒரு வீட்டின் தெருக்கதவுக்கருகில் நின்றுகொண்டு, ‘அம்மணீ, கொஞ்சம் அன்னந்தா,’ என்றார். ‘குழந்தாய், கொஞ்சம் பொறு,’ என்று அவ்வீட்டுக்குள்ளிருந்து ஓர் ஒலி கேட்டது. உடனே அவர், ‘பெண் பேதாய்! என் வல்லமை இன்னதென்பதை நீ அறியாய்! நீ எப்படி என்னைக் காக்க வைக்கலாம்?’ என்று எண்ணினார். அவர் இவ்வாறு எண்ணுகையில் உள்ளே அவ்வரவம் திரும்பவும் கிளம்பி, ‘பிள்ளாய், உன்னை நீ அதிகமாக மதித்துக் கொள்ளாதே! இங்குக் காக்கையேனும் கொக்கேனும் இல்லை,’ என்றது. அது கேட்டு, தவசிக்கு ஆச்சரியமுண்டாகிப் பின்னும் சற்று நேரம் நிற்கலானார். கடைசியில் ஒரு மாது வெளியில் வரக்கண்டு, ‘அம்மா, அதை நீ எவ்வதிதமறிவாய்?’ என்று கேட்டார். ‘மதலாய், நீ செய்த யோகமும் அறியேன் யாகமும் அறியேன், நான் ஓர் எளிய பெண் பேதை; உடம்பு குணமில்லாமல் இருக்கும் என் கணவரை உபசரித்துக் கொண்டிருந்ததால், நான் உன்னைக் காக்கும்படி செய்தேன். என் காலமெல்லாம் எனது வேலையைச் செய்வதிலேயே கழித்து வந்தேன். கல்யாணமின்றிக் கன்னிகையாயிருந்த காலையில் கன்னியர்க்குரிய என் கடமையைச் செய்தேன்; எனக்குக் கலியாணமான பிறகு மனைவியருடைய கடமையைச் செய்கிறேன். நான் பண்ணும் யோகம்ஃ இவ்வளவேயாம். இவ்வித யோகத்தினாலேயே நான் ஞானமடைந்தேன். இப்போது உனது மனதிலுள்ளதையும், நீ காட்டிற் செய்ததையும் நான் நன்கறிந்து சொல்லக்கூடும். இதைவிட நீ அதிகம் அறிய விரும்பிஇனால், அடுத்த பட்டணத்திலுள்ள கடை வீதிக்குப்போய் அங்குள்ள கசாப்புக்காரனைப்பார், நீ தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய சங்கதிகளை அவன் உனக்கு உணர்த்துவான்,’ என்று சொன்னான்.
தான் என்னும் அகந்தை கொண்ட அச்சந்நியாசி, அதைக் கேட்டதும் வெட்கமடைந்து, ‘ஆடுமாடு அறுக்கும் கசாப்புக் காரனோ, கடைசியில் நமக்குக் குருவானான்!’ என்று, சற்றுத்தலை குனிந்து யோசித்தாரெனினும், கொஞ்சநேரத்துக்கெல்லாம் அவர் செய்த நல்வினை அவ்வெண்ணத்தை மாற்றிக் கசாப்புக்காரனைக் காணவேண்டுமென்னும் ஆசையைத் தந்தது. அவ்வாசையால் அவர் அவ்வூர் அடைந்து, கடைவீதி போய்க் கொண்டிருந்தபோது, கொஞ்ச தூரத்தில் தடித்த தேகமும் உயர்ந்த உருவமுமுள்ள ஒரு கசாப்புக்காரன், வலக்கையில் ஒரு பெரிய கத்தியைப் பற்றி, அனேக பிராணிகளைக் கொன்று, மாமிசத்தை வருபவரிடத்தில் விற்பனை செய்வதைக் கண்ணுற்றார். அப்போது சந்நியாசி, ‘ஓ, தெய்வமே, தான் ஞானத்தையுணர்வது இக்கொலை பாதகனிடத்தி்லேயோ? நன்றாயிருக்கிறது! இவனைப் பார்த்தால், பூதமே மனிதரூபமெடுத்து வந்தது போல இருக்கிறதே!’ என்றெண்ணினார்.
கசாப்புக்காரன் தலையை நிமிர்த்தி, ‘சுவாமி, அந்தம்மாளா உம்மை அனுப்பியவர்? நான் என் வேலையை முடிக்குந்தனையும் இங்கே உட்கார்ந்து கொண்டிரும்,’ என்றான். பின்னர் மாமிசமனைத்தும் விற்றானதும், கசாப்புக்காரன் விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு, ‘வாரும் ஐயா, வீட்டிற்குப் போகலாம்,’ என்று சொல்லிச் சந்நியாசியை அழைத்துச் சென்றான். அங்கே கசாப்புக்காரன் சந்நியாசிக்கு ஓர் ஆசனம் தந்து, ‘கொஞ்ச நேரம் பொறும்!’ என்று வெளியிலுட்காரச் சொல்லி, வீட்டில் நுழைந்து, உள்ளிருந்த தன் தாய் தந்தையரைத் தூக்கி வந்து உட்காரவைத்துக் குளிப்பாட்டி, அன்னம் படைத்து, மற்றும் வேண்டிய பணிவிடைகளைச் செய்து, திரும்பி வந்து சாமியார் எதிரில் உட்கார்ந்து, ‘ஐயா, நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள் போலும்! உங்களுக்கு என்னால் ஆகவேண்டிய உதவியாது?’ என்று கேட்டான். சந்நியாசி, ஆத்துமத்தைப் பற்றியும், கடவுளைப்பற்றியும் சில விடைகள், பெரிய புத்தகமாகி வியாஸ கீதை என்று பெயர்பெற்று யாவராலும் மதிக்கப்பட்டு வருகிறது. வேதாந்தத்தின் இரகசியங்களெல்லாம் அதில் விளக்கப்பட்டிருக்கின்றன.
கசாப்புக்காரன் தன் பிரசங்கத்தை முடித்ததும், சந்நியாசிக்குண்டாகிய ஆனந்தத்தின் அளவை நம்மாற் சொல்லமுடியாது! அவர், ‘இவ்வளவு ஞானத்தோடு கசாப்புக்காரனெனப் பெயர் பூண்டு ஈனமான வேலை புரிய வேண்டுவதென்ன?’ என்று அவர் கேட்க, அவன், ‘மகனே, நாம் செய்யும் எந்த வேலையும் அவலக்ஷணமும் அசுத்தமும் ஆனதல்ல; நான் குலத்தில் கசாப்புக்காரனாய்ப் பிறந்தேன், நான் இளம்பருவத்தில் கசாப்புத் தொழி்லிற் பழகினேன். உலகத்தவரைப் போல நான் ஆசை வையாமல், என் அலுவலைச் செவ்வனே செய்ய முயலுகிறேன். கிருகஸ்தனுக்கு விதித்துள்ளபடி, நான் என் கடமையை நடத்தி, என் பெற்றோர்களைச் சந்தோஷிப்பிக்க என்னாலியன்ற மட்டும் பிரயாசைப்படுகிறேன். யான் உன்னுடைய யோகவித்தையைக் கற்றிலேன்; ஒரு நாளும் சந்நியாசி வேஷம் தரித்திலேன்; நாட்டை நீங்கிக் காட்டிலும் புகுந்திலேன். ஆயினும், நான் அறிந்தது, ஆசையை அற வெறுத்து, என் தொழிலைப் பழுது வாராமல் செய்து வருவதனாலுண்டாகியதாம்,’ என்றான்.
உலகீர்! இக்கதையால், ஞானமே எல்லாவற்றினும் மிக அரியதும், எல்லாராலும் விரும்பத்தக்கதுமாமென்றும், அந்த ஞானத்தையடைய ஒவ்வொரு மனிதரும் பிரயாசைப்பட வேண்டுமென்று விளங்குகின்றமையால், ஒவ்வொருவரும் வாணாளை வீணாளாக்காமல், ஞானம் கைவல்லியமாகு முயற்சியில் நிற்போமாக!
ஒரு பதிவிரதை சரித்திரம் முற்றியது