விநோதரசமஞ்சரி/20.காளிதாசப்புலவர் சரித்திரம்
விநோதரச மஞ்சரி
தொகுஅஷ்டாவதானம் - வித்துவான் வீராசாமி செட்டியார்
தொகுதிருமகளும் நாமகளும் பண்டுதொட்டு மகிழ்ந்து தமது உறைவிடமாகக் கொள்ளப்பெற்றுள்ள இப்பரதகண்டத்திலே, மகினா என்னும் நாட்டிலே, மகிஷபுரியிலே, மகேந்திரன் என்னும் அரசன் ஒருவன் செங்கோலோச்சி வருவானாயினன். அவனும் அவன் தேவி அன்னபூரணி என்றவளும் இயற்றிய அருந்தவப் பயனாக, அழகெலாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாலொப்ப ஒரு புத்திரி உற்பவமாயினள். அப்புத்திரியை அவன் கண்மணி போலப் பரிபாலித்து, ஏற்ற காலத்திலே கல்வி கேள்விகளிலும், படைக்கலப் பயிற்சியிலும் அவளுக்கிணை உலகத்தில் மற்றெவருமில்லை என்று யாவரும் பாராட்டும் வண்ணம் வல்லவளாக்கி, வித்தியா குரோசம் என நாமகரணஞ் செய்து, ‘இவளை இவளுடன் கல்வி கேள்வி முதலியவற்றில் வாதாடி வெல்லுவார்க்கே மணம் முடித்துக் கொடுப்பேன்,’ என்று நாடெங்கும் முரசறைவித்தான்.
முரசொலி கேட்ட கவிவாணரும் அரசரும் காமுகரும் என்னும் இவ்வரிசையோர், தத்தம் இஷ்டதேவதைகளை வழிபட்டு, நாட்பார்த்து, நன்னிமித்தம் ஓர்ந்து, தத்தம் பதிகளை விடுத்துப் புறப்பட்டு, மகிஷபுரியை அடைந்து, தனித்தனியே அவளுடைய சமுகஞ்சென்று வாதாடி, வெட்கி, ஒருவர் பின் ஒருவராய் அகல்வாரும், அவளுடைய கட்டழகை நினைந்துருகி அவள் முகதரிசனமே பெரும் போகமென வீணவாவுற்று அந்நகரிற்றானே குடி கோலுவாருமாயினர்.
இப்படி நாட்பல கழிந்த பின்னர், அரசனும் கவலை மிக்கவனாகி, ‘இனி நம் புத்திரியை ம்மஃ புகுத்தாது வைத்திருப்பது நன்றன்று! அவளோ, பன்னீராட்டைப் பருவத்தளாயினாள்; எண்ணில்லாத அரசரும் கவிவாணரும் வந்து வாதாடி அவளுக்குத் தோற்று வெட்கி அகன்றார்கள். இனி அவளை வதுவை செய்யத்தக்க வல்லவர் உலகத்தில் யாவர் இருக்கிறார்! இதற்கு யாது கூறுகிறாய் மந்திரி?’ என்று தன் முதல் மந்திரியாகிய ஆத்மாக்ஷகன் என்னும் மந்திரியுடன் சூழ்ச்சி செய்வானாயினன்.
இதற்கிடையில் முன்னர் அவளுடன் வாதஞ்செய்து ஆற்றாதோடிப்போன கவிவாணர் சிலர் ஒருங்கு கூடி, ‘நம்மையும் இன்னும் எண்ணில்லாத அரசர் கவிவாணர் முதலியோரையும் அவமானஞ்செய்து புறத்தே தள்ளிவிட்ட ராஜகுமாரியை வஞ்சகச் சூதினால் அவமானஞ் செய்யோமாகில், நாம் ஆண்மக்களாய்ப் பிறந்தும், பயனில்லாதவராவோம்; ஆதலால், அங்ஙனஞ்செய்ய ஓர் உபாயம் தேடுவோமாக!’ என்று ஒரு நவீன சூழ்ச்சி செய்து, அதற்குக் கருவியாக ஒருவனைத் தேடிப்புறப்பட்டுப் போகையில் அரிகரபுரத்திலேயுள்ள அனந்த நாராயண ஐயன் என்பானுக்குப் புத்திரனும் தருமத்துக்கேற்ற வேதாத்தியயனத்துக்கு யோக்கியன் அல்லனென்று அவன் மௌட்டிகம் காரணமாக நீக்கப்பட்டவனுமாகிய அரிகர ஐயன் என்பவன், தனது மந்தைக்குத் தீனியின் பொருட்டு ஒரு மரக்கொம்பின் மேலேறி நுனியிலிருந்து அதன் அடியை வெட்டிக்கொண்டிருக்கக் கண்டு மகிழ்ந்து, ‘இம்மூடர் திலகமே நமது கருத்தை நிறைவேற்றற்குத் தகுந்த கருவியானவன்,’ என்று மதித்து, அவனை அணுகி, அழைத்துக்கொண்டு, தம்முள் ஒருவருடைய கிருகத்தைச் சேர்ந்து, அங்கே அவனை உயர்ந்த பரிமளத் தைலமிட்டு நீராட்டி, நல்ல போஜனமருத்தி, களப கஸ்தூரிகளை அணிவித்து, ஆடையாபரணாலங்கிருதனாக்கி, யார் என்ன கேட்கினும், என்ன செய்யினும், சமிக்கைகளாலன்றி வாயைத் திறந்து யாதும் சொல்லாதிருக்கும்படி உடன்படுத்தி, ஒரு சிவிகையில் ஏற்றித் தாமே சுமந்துகொண்டு போய், ராஜசமுகஞ் சேர்ந்தார்கள்.
இதைக்கண்ட வாயிலாளர் அரசனிடம் சென்று வித்துவான்களது வரவைத் தெரிவித்தலும், அரசன் மிக்க மகிழ்ச்சி உடையனாகிச் சபா மண்டபம் புக்கு, வித்துவான்கள் எல்லோரையும் உபசரித்து, ஆசனத்திருத்தித் தன் குமாரத்திக்குச் சேதி போக்கினன். அவளும் காலந் தாழ்க்காது எழுந்து ஆடையாபரணாலங்கிருதையாகிச் சபா மண்டபம் புகுந்து, தந்தையையும் ஏனைய பெரியோரையும் வணங்கி நின்றாள். வணங்கி நின்ற புத்திரியை அரசன் பார்த்து, ‘ எனது அன்பிற் சிறந்த புத்திரி, இங்கே இவ்வித்துவக் குழாத்தின் மத்தியிலே வீற்றிருக்கும் இப்புருஷோத்தமர், கலாசமுத்திரமெனத் தக்கவரும், இவ்வித்துவ கணத்திற்கெல்லாம் குருவாயுள்ளவருமாவார்; இவர் இன்றைக்கு உன்னுடன் வாதாடி உன்னை வென்று மணமுடிக்கக் கருதி வந்திருக்கின்றனர்; இஃதுணர்த்துமாறே ஈண்டுன்னை வருவித்தேன்,’ என்றுரைத்தான். அது கேட்ட வித்தியா குரோசன் என்னும் அந்த நங்கை, குறுமுறுவல் செய்து, அவன் மௌனி என்பதை முன்னரே உணர்ந்து கொண்டவளாகையால், அவனுடன் சமிக்கைகளால் வாதாட நிச்சயித்து, பிரபஞ்ச காரணம் ஒன்றே, என்னும் குறிப்புத் தோன்ற, ஒரு விரலைக் காட்டினாள். அது கண்ட ஐயன், யாது கருதியோ இருவிரலைக் காட்டினான். இதன் பொருளைப் பக்கத்திலிருந்து வித்துவான்கள் எல்லோரும் விரித்துரைத்து மேற்கோள் காட்டி, உலக காரணம் இரண்டென்று சுவபக்ஷஸ்தாபனமும் பரபக்ஷகண்டனமும் செய்தார்கள். அதற்கு அந்நங்கையும் சம்மதித்தவளாகி, சங்கேதப்படி அவனுக்கு மாலையிட உடன்பட்டாள். தன் புத்திரி மணத்துக்கியைந்தமையைக் கண்ட அரசன், ஆனந்தோததியில் மூழ்கினவானாய், கல்யாணோற்சவத்திற்கு வேண்டுவனவெல்லாஞ் செய்வித்து, அதி சம்பிரமமாக இருவருக்கும் மணம் முற்றுவித்தான்.
அன்றிரவு இந்திர சயன மண்டபமெனத் தகும் அலங்காரப் பள்ளியறைக்கு மணமகன் எழுந்து போய், அங்கேயுள்ள விநோதங்களையெல்லாங் கண்டு, மருள் கொண்டு, பிரமித்துச் சிறிது நேரம் யாது செயற்பாலது என்று ஆலோசித்து நின்றான். அது கண்ட தோழிகள் மணமகனுக்கென்று நவீனமாக அமைக்கப்பட்டுள்ள அம்ஸதூளிகா மஞ்சத்தைச் சுட்டிக்காட்டி, அதிற்போய்ச் சயனிக்குமாறு சொன்னார்கள். அவ்வாறே மணமகனும் அம்மஞ்சத்திலேறிப் படுத்து, அவ்வகைச் சுகமான படுக்கையை எந்நாளிலுங் கண்டு கேட்டறியாதவனாதலால், சடுதியில் பிரஞ்ஞையற்றான் போன்று ஆழ்ந்து நித்திரை போயினன். இதற்கிடையில் அங்கே அந்தப்புரத்திலிருந்து மணமகள் ஆடையாபரணாலங்கிருதையாகிச் சந்தன புஷ்பாதிகளணிந்து, இரத்தினங்கள் இழைத்த தங்கத்தட்டுகளில் அதிமாதுரியமான சிற்றுண்டிகளைத் தாதிகளேந்த நான் மருங்குந் தன்னைச் சூழ்ந்து செல்லப் பள்ளியறை போயினள்; அங்கே கணவன் துயில் செய்வதைக் கண்டு, வீணையை எடுத்து மெள்ள மீட்டினாள். அதற்கு, அவன் விழிக்காததைக் கண்டு, மீண்டும் சிறிதுநேரம் சுரத்தோடு பொறித்தாள். அதற்கும் அவன் எழுந்திராமையைக் கண்டு, வீணையோடு பொருத்தி இனிய கீதங்களைப் பாடினாள். அதனாலும் அவன் நித்திரை தெளிந்திலன். அப்பால் பாடலை ஒழித்து விட்டு, தாம்பூலம் தரித்துத் தம்பலத்தை அவனுடைய வாயில் உமிழ்ந்தாள். அதனால், நித்திரை சற்றே தெளிந்தவனாகி, தான் மணமகனாயிருப்பதை மறந்து, நான் ஆட்டுக்கூட்டத்தருகில் படுத்திருக்கும் வழக்கத்தை எண்ணி, ஆடுகளன்றோ தனது வாயில் மலங்கழிக்கின்றனவென நினைத்து, ‘தூ தூ! மூதேவி ஆடே!’ எனப் பிதற்றி விழித்தான்.
இம்மொழிகள் புண்ணில் வேல் நுழைந்தாலொப்ப ராஜகுமாரியினது செவியிற் புகுதலும், ராஜகுமாரி மிகுந்த சினங்கொண்டு, துணுக்கென ஒரு வாளாயுதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, அவனை அதட்டி எழுப்பி, ‘நீ யாவன்? உன் வரலாறென்ன? உள்ளபடி சொல்! அன்றேல், இக்கடகத்தால் உன்னைத் துண்டிப்பேன்! என்ன, ஏழையாகிய அவ்வையன், நடுநடுங்கித் தைரியங்குன்றி, உடல் சோர்ந்து, நாக்குழறி, சாட்டாங்கமாக அவள் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலியஸ்தனாய் நின்று, ‘தாயே, நான் அரிகரபுரத்திலேயுள்ள அனந்தநாராயண ஐயனுக்குப் புத்திரன், என்பெயர் அரிகரன். தந்தை முதலியோர் எனது மௌட்டிகம் காரணமாக என்னை ஆடு மேய்க்கும் தொழிற்கே யோக்கியன் என்று அத்தொழிற்கு உரியவனாக்கினர். அதுவே என் தொழில். இன்று காலையில் நான் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கையில் என்னை வித்துவானக்ள் சிலர் வந்து பிடித்துக்கொண்டு போய், அலங்கரித்து, யார் என்ன கேட்கினும் வாயினால்யாதும் பேசாதிருக்குமாறு உடன்படுத்தி, ஒரு சிவிகையிலேற்றி இங்கே கொண்டுவந்தார்கள். அதன் பின்னர் நிகழ்ந்தவைகளை நீயே அறிவையன்றோ? இதுவே என் வரலாறு; என்னக் கொல்வது தருமமன்று! நான் யாதுமறியேன்!’ என்று கூறினான்.
இவைகளைக் கேட்ட அரசகுமாரி, புன்சிரிப்புக்கொண்டு வாளைத் தூரத்தே வீசிவிட்டு அவனை, ‘அஞ்சாதிரு!’ என்று தேற்றி, அவன் தெளிந்த பின்னர், அவனைப் பார்த்து, ‘ஓ பிராமணா. இவ்வூருக்கு மேற்றிசையிலே புவனேஸ்வரி ஆலயமொன்றிருக்கின்றது; அங்கே நீ இப்போதுதானே சென்று, கோவிலுள் நுழைந்து, கபாடபந்தனம் பண்ணிக்கொள்; சிறிது நேரத்தின்மேல், புவனேஸ்வரி வந்து கதவைத் தட்டுவாள்; நீ ‘திறப்பதில்லை,’ என்று கூறு; ‘காரணம் யாது?’ என்பாள்; பீஜாக்ஷரத்தை நின் கைச்சூலத்தால் இந்தக் கதவின்புரை வழியாக என் நாவிற் பொறித்து, என்னை என்றுங் காக்கவும் உடன்படுவையேல், திறப்பேன்,’ என்று கூறு; அதற்கவள் உடன்பட்டு அவ்வாறே செய்து முடிப்பாள், அதன்மேல கதவைத் திற,’ என்று கூறினாள்.
அவனும் அதுகேட்டு மகிழ்ந்து, குறிக்கப்பட்ட வழியே சென்று, கோவிலிலே நுழைந்து, புவனேஸ்வரியினது அருள்பெற்றுக் கொண்டு, உடனே திரும்பி அந்தப்புரம் வந்து, பள்ளியறைக் கதவைத் தட்டி ராஜகுமாரியை அழைத்தான். அரசகுமாரி விழித்து, ‘நூதனக் குரலொலி கேட்கப்படுகின்றதே! இஃதேது!’ என்னும் கருத்துள்ள,
என்னும் வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தாள். மேககுலமெழுந்து கருப்பஞ்சாற்றுக் கடலினிடமாகச் சென்று படிந்து கருப்பஞ்சாற்றை ஆரமு்கந்து மீண்டு வந்து முழங்கிநின்றாற் போன்று நின்ற ஐயன் செவியில் அச்சொற்கள் படுதலும் ஐயன் புளகம் கொண்டு, கருப்பஞ் சாற்று மழை விடாது பொழிந்தாலொப்பப் பொழிந்த அதியற்புதக் கவிமழையால் இரகுவமிசம், மேகசந்தேசம், குமார சம்பவம் என்னும் நூல்களாகிய ஜலாதாரங்கள் மூன்றும் விடியுமுன் நிறைந்து தேங்கின. இவைகளைக் கண்ட ராஜகுமாரி, சொல்லற்கரிய மகிழ்ச்சி கூர்ந்தவளாகியும், அவன் தன்னைத் ‘தாயே,’ என்று கூவிக் காலில் வீழ்ந்து பணிந்த காரணத்தால் தான் அவனை நாயகனாகக் கொண்டு சுகிக்கக் கூடாமையை நினைத்து, வியசனமுற்று, அவனைப் பார்த்து, ‘உன்னை நான் நாயகனாக வரித்தேன்; அப்பால் நின் வாயினின்றும் எழுந்த துஷ்ட வாசகம் காரணமாக உன்னைக் கொல்லுதற்கு முயன்றேன்; நீ உண்மையைக் கூறித் தாயென முறைகொண்டு விளித்து என் பாதத்தில் வீழ்ந்தனை; அதனால், உன்னைச் சேருவது தகுதி அன்று; ஆகையால் இன்று முதலாக நீ காளிதாசன் எனப் பெயர்புனைந்து எங்கும் விளங்கி, ராஜபூச்சியதையுடையவனாய் வாழ்க!’ என்று ஆசி கூறி, அவனை அனுப்பினள். அவன் போன பின்னர், அரசகுமாரி புவனேஸ்வரியினது ஆலயத்தையடைந்து, அத்தேவியை வணங்கி, அவளருளால் தாசிவடிவம் பெற்று, போஜராஜனுடைய நகரஞ்சென்று, காளிதாசனைச் சேர்ந்து சுகிக்கும் கருத்துடையவளாகி, அங்கே வாசம் பண்ணுவாளாயி்னள்.
அவளிங்ஙனமாக, அங்கே அவளிடத்தில் அனுமதி பெற்றுப்போன காளிதாசன், சில காலமாகத் தேச சஞ்சாரம் செய்து, அங்கெல்லாம் தன்னைக் கவிச்சிங்கமென நாட்டிப் பெயர் படைத்து, ஈற்றில் ஆங்காங்குப் பரிசாகப் பெற்ற யானை குதிரை சிவிகை குடை கொடி ஆலவட்டம் சாமரம் பரிஜனங்கள் முதலியன் சூழ ஓர் யானைமேலேறி வாத்தியங்களொலி செய்யத் தாரா நகரஞ் சேர்ந்து, போஜனுடைய அவைக்களம் புகுந்தான்.
அவ்வேளையில் போஜராஜன் பூஜாமண்டபத்திலே பூஜை புரிவானாயினன். சபாமண்டபத்திலே வித்துவான்கள் மாத்திரமிருந்தார்கள். காளிதாசன் தான் புகுந்திருப்பது அரசனுடைய சபா மண்டபமாயிற்றே என்பதைச் சிறிதும் சிந்தியாமல், உத்தண்ட நடையைடையவனாய்ச் சபை நடுவே சென்றான். அது கண்ட வித்துவான்கள் சிங்கத்தைக் கண்ட யானைக்குழாம் போலத் திகைத்தெழுந்து நின்றார்கள். காளிதாசன் அவர்களை உட்காரும்படி செய்து, தானுமோராசனத்திலே வீற்றிருந்து அவர்களுக்கெல்லாம் தானே தாம்பூலம் கொடுத்துத் தானும் தாம்பூலந் தரித்துக்கொண்டு, அவர்களுடன் அளவளாவுவானானான். அப்போது வித்துவான்களெல்லோரும் அன்று காலையில் அரசன் சங்கர கவி என்பானொருவனுக்குப் பாத்திரபாத்திரம் நோக்காது பன்னிரண்டு லக்ஷம் பொன் கொடுத்ததைப் பற்றிக் குறைகூறி முறையிட்டார்கள். காளிதாசன் அதனைக் கேட்டு நகைத்து, ‘நீங்கள் அதன் பொருட்டு வியசனப்படுவது அறியாமை; எங்ஙனமென்பீராயின், அரசன் சங்கர கவிக்குப் பரிசாகக் கொடுத்தது ஓரிலக்ஷமே; அப்பால் அரசன் செய்வது சங்கரபூஜையாதலின் அப்பெயர் தரித்து அப்பூஜா காலத்தில் வந்தமையால், தர்மவிசேஷம் பற்றியும் பூஜா காலத்திலே உருத்திரருக்குத் தானஞ் செய்வது கடனாதலாலும், பதினொருஉருத்திரர்க்கும் தனித்தனி ஓரிலக்ஷமாகச் சங்கற்பித்துப் பின்னோரிலக்ஷமாகப் பன்னிரண்டு லக்ஷம் பொன் அக்கவிக்குக் கொடுத்தவாறு காண்க,’ என்றான். இதைக் கேட்ட வித்துவக்குழாம் காளிதாசனுடைய சாதுரியத்தையும், அரசனுடைய விவேகத்தையும், தங்கள் அறியாமையையுங் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் வெட்கமும் அடைந்தவராய், மேற்கூறத்தக்கது யாதெனத் தெளியாது மயங்கி இருந்தார்கள். இதற்கிடையில் போஜராஜனும் பூஜையை முடித்துக்கொண்டு அந்தப்புரஞ் சென்று, மீண்டு வரும்போது காளிதாசன் சொன்ன சமாதானம் செவியிற் பட்டது. பட்ட மாத்திரத்தில் அரசன் ஆச்சரியவந்தனாய், ‘நமது அந்தரங்கக்கருத்தை உள்ளபடி அறிந்துகொண்டு சொன்ன இவன் நரன்றானோ! அன்றி ஈசனோ!’ என்று ஐயமுற்றுச் சிறிதுநேரம் ஸ்தம்பித்து நின்று, ஈற்றில் அவனைப் பார்க்கவேண்டுமென்று அவாவுற்று விரைந்து சபையிற் புகுந்தான். அரசனைக் கண்ட காளிதாசனும் மகிழ்ந்து மங்கள ஆசி கூறினான்.
அரசன் காளிதாசனைக் காண்ட மாத்திரத்தில் சொல்லுதற்கரிய பெருமகிழ்ச்சியில் முழுகிப் பரவசப்பட்டு நின்றமையால், பிரதி வந்தனஞ் செய்ய மறந்து, நெடுநாட் பிரிந்திருந்த காதலை தன்நாயகனை ஆவலோடுங் கையைப் பிடித்து இழுத்துச் செல்வது போலத் தன் கரங்களால் அனவ கரத்தைப் பிடித்து அ்ழைத்துக்கொண்டு அந்தப்புரஞ் சேர்ந்து, அங்கே காளிதாசனை ஓர் ஆசனத்திருத்தித் தானுமோர் ஆசனத்திலே வீற்றிருந்து, அவன் முகத்தைப் பார்த்து, ’பிராமணோத்தமரே, உமது திருநாமத்தால் பெருமையுற்றுள்ள எழுத்துக்கள் எவை? உமது பிரிவையாற்றாது வருந்துவது எத்தேசம்? உம்மை நினைந்து கவலையுற்றிருக்கும் ஜனங்கள் யாவர்? என்றான். அதற்குக் காளிதாசன், ‘ எனது பெயர் காளிதாசனே1.,’ என்று அரசனுடைய கையிலெழுதினான். அரசன் அதனைப் படித்து அன்புகூரப் பெற்றவனாய்க் காளிதாசனுடைய பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தான்.
(1.மூன்று வினாக்களுக்கும் விடை கொடாது, ஒன்றுக்கு மாத்திரம் விடைகொடுத்தது, காளிதாசன் வரலாற்றை அரசன் நெடுங்காலமாகப் பிறர் வாய்க் கேள்வியால் உணர்ந்திருந்தானாகையால், மற்றை வினாக்களுக்கு விடை அனாவசியகம் என்பது கருதி என்க.)
அப்பால், இருவரும் மிக்க சினேகம் பூண்டு, நாநா விஷயங்களிற் சல்லாபம் செய்து கொண்டிருக்கையில், மாலைக்காலஞ் சமீபத்தது. அது கண்டு அரசன், ‘சூரியன் கடலிலாழ்ந்தான்’ என்னுங் கருத்துள்ள,
என்பதை ஒரு சுலோகத்து முதலடியாகச் சொன்னான். அச்சமயத்திலங்கிருந்த வித்துவசிரேஷ்டையாகிய சீதை என்பவள், ‘வண்டுகள் தாமரை மலரில் அடங்கின,’ என்னுங் கருத்துள்ள,
என்பதை, இரண்டாமடியாகச் சொன்னாள். இவைகளைக் கேட்டிருந்த வித்துவ சிரேஷ்டனாகிய பாண கவி என்பானொருவன், ‘உத்தியானவனத்திலிராநின்ற பறவைகள் மரப்பொந்துகளிலடங்கின,’ என்னுங் கருத்துள்ள,
என மூன்றாமடியைச் சொன்னான். அது கேட்ட அரசன், காளிதாசனை நோக்கி, ‘உத்தம கவியே! நீர் நான்காமடியைச் சொல்லும்,’ என்றான். காளிதாசன் அதற்கிசைந்து, ‘யுவதிகளிடத்தில் மன்மதன் மெல்ல மெல்ல வரத் தலைப்பட்டான்,’ என்னுங் கருத்துள்ள,
என நான்காமடியைச் சொன்னான்.
வெய்ய வன்சென்று மேவினன் பாற்கடல்
செய்ய தாமரைச் சேக்கைய வண்டினம்
துய்ய கோடரந் துன்னின புட்குலம்
பைய வோதியர்ப் பற்றினன் காமனே.
இதனைக் கேட்ட அரசன் முன்னைய மூன்றடிகளைப் பார்க்கிலும் நான்காமடியே சொல்லிரசம், பொருளிரசம், சந்தரசம் முதலியவற்றான் விசிட்டமுற்றிருப்பது கண்டு மிக்க சந்தோஷமுடையனாகிக் காளிதாசனைப் பார்த்து, ‘நீர் சரஸ்வதியின் அமிசாவதாரமன்றி மற்றன்று. உமது திருவாக்கில் மாலைக் காலத்தை முற்றாக வருணித்தருளும்,’என்றான். அதற்குக் காளிதாசனும் நன்றென்றிசைந்து, ‘வியசனமிக்குள்ளவனுடைய கல்வியறிவு எவ்வாறு மழுங்குமோ அவ்வாறு தாமரைப் பூவின் காந்தியும், அந்நியதேசத்தையடைந்த மானி எவ்வாறு கீழ்மையடைகிறானோ அவ்வாறு வண்டுகளும், கொடுங்கோல் மன்னன் எவ்வாறு உலகத்தை வருத்துகின்றானோ அவ்வாறு இருளும், உலோபிகளிடத்துள்ள செல்வம் எவ்வாறு சன்மார்க்கத்தில் பிரயோஜனப்படாதோ அவ்வாறு கண்களும் இருக்கின்றன,’ என்னுங் கருத்துள்ள,
வ்யஸநித யிவ்வித்யாக்ஷய்யதே பங்கஜ ஸ்ரீர்க்குணி கயிவ விதேஸே
தைன்ய மாயாம்தி ப்ருங்கா: குந்ரூபதி ரிவலோகம் பீடயத்யந்தநா
ரோதந மிவக்ரூபணஸப வியாத்ததா மேதிசக்ஷி}}
துன்பினாற்றுடக் குண்டவர் கல்விபோற் சோதி மாய்ந்தது தாமரை மாமலர்
வன்பு லாம்பிற நாட்டை மானிபோல் மாண்பு பொன்றின வண்டின மாவன
அன்பி லாமற மன்னவ ராணைபோல் ஆதியந்தம் பரந்தது வல்லிருள்
இன்பி லாதபுன் லோபிகள் செல்வம்போல் ஈனமுற்றன கண்களி ரண்டுமே.}}
என்னும் இச்சுலோகத்தைச் சொல்லி முடித்தான். இதனைக் காளிதாசன் சொல்லுந்தோறும் அரசனுக்குண்டான பெருமகிழ்ச்சி இத்துணையதென்று சொல்லுதளெளிதன்று!‘இதற்குக் கைம்மாறாக உமக்கு யான் செய்யத்தக்கது யாதுமென்னிடத்திலில்லையே!’ என்று காளிதாசனைக் கட்டித் தழுவுவான்; ‘உம்மோடு சமமாக யான் வீற்றிருக்கத் தக்கவனோ!’ என்றுகூறிக் கீழே அவனுடைய பாதங்களினருகே உட்காருவான்; அவனுக்கு உபசாரங்கள் பல செய்வான்; ‘நீர் சிறியேனைத் தேடி வர என்ன தவம் செய்தேன்!’ என்பான்; யான் பெற்ற பேறு போல உலகத்தில் யாவன் பெற்றான்?’ என்பான். இவ்வாறே அரசன் அவனைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடி உபசரித்தான்.
கற்றார்முற் கல்வியுரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே
எட்டுணை யானு மிரவாது தானீதல்
எத்துணையு மாற்ற இனிது.
என்றபடி, கல்வியறிவினது அருமை பெருமைகளை ஆராய்ந்தும் கேட்டும் சீர்தூக்கியுமறிய வல்ல பிரபுக்களே வித்துவான்களைக் கனம் பண்ணுவார்கள். மாணிக்கத்தினது பெருமையை அறியாதாரிடத்தில் மாணிக்கத்தை விற்கப் போகும் இரத்தினவணிகர் போன்று, இந்நாளில் வித்துவான்கள் தமது கல்வித்திறமையைக் கல்வியென்னுஞ் சொல்லையேனும் செவ்வனே அறியாத போலிப்பிரபுவினிடம் காட்டப் போய் மதிப்பிழந்து மீள்வர். கல்வித்திறமை காட்டி நன்கு மதிப்பும் பரிசும் பெற விரும்புவோர், சந்திரனையுங் கங்கையையுந் தரித்த கடவுளைப் பாடுக. இந்நாளிலே போஜன் அவனன்றி மாற்றியாவனுள்ளன்? அது நிற்க.
அப்பாற் காளிதாசன்...
தொகுஅப்பாற் காளிதாசன் தன்னை அரசன் மிகவும் உபசாரஞ்செய்து கனப்படுத்துவதைச் சகிக்க முடியாதவனாய், அரசனைப் பார்த்து, ஸ்துதியாக ஒரு கவி சொல்லத் தொடங்கினான். அது வருமாறு: ‘ஒருவரை ஒருவர் உபசரிக்க வேண்டுவது சினேகம் உண்டாகும் வரையுமே! சினேகம் உண்டாய பின்னருமன்று. ‘உண்மையான சினேகருக்குச் செய்யும் உபசாரம் பரிகாசம் போலும்!’ என்னுங் கருத்துள்ள சுலோகம் இது!
‘உபசார; கர்த்தவ்யோ யாவதறுத்பம் நஸளஹ்ருதா: புருஷா:
உத்பந் நஸன ஹ்ருதாநா முபசார: கைதவம் பவதி,’
‘வந்திக்க நட்பு வருங்காறும், வந்தபின்
வந்திப்பு நிந்திப்பா மற்று.’
இதனைக் கேட்ட போஜன் மகிழ்ச்சி கூர்ந்து, அச்சுலோகத்திற்காகப் பொன்விளை நிலங்கள் சிலவற்றைக் காளிதாசனுக்குத் தத்தஞ் செய்தான்.
அப்பால் காளிதாசன் தனக்கு அரசனால் தத்தஞ் செய்யப்பட்ட ஸ்வர்ண நிலங்களின் அருமையையும், அதனால்வரும் அளப்பரிய ஊதியத்தையும், அரசனுடைய இணையில்லாத ஔதாரிய குணத்தையுங் கண்டு பேரானந்தமும் பெருவியப்புமுடையவனாகி, அரசனுடைய குணாதிசயங்களை வியந்து கூறத் தொடங்கினான்:
‘மனத்துக்கின்பந் தரும் உத்தமப் பாடல்களைச் செய்யும் புலவருடைய சிரமத்தையும், அப்பாடல்களிலேயுள்ள பலவகை இன்பங்களையும் கற்ற விவேகிகளேயன்றி மற்றோர் அறியார். எங்ஙனமெனில், பிள்ளைப் பேற்றால் வரும் சுகதுக்கங்களை மலடி அறியாதது போலென்க,’ என்னுங் கருத்துள்ள சுலோகம் வருமாறு:
ஸீகவே: ஸப்த ஸௌபாக்கியம் ஸத்கவிர்வேதித்திநாபர:
நஹி வந்த்யா விஜாநாதி பராம் தௌஹ்ருத ஸம்பதம்
குழவி பெறுமருமை கூர்மலடி தேராள்
வழுவில் கவிபாடும் வன்மை - செழுமைபெறும்
சொல்லி ரசத்தின் சுவையென் பனவெல்லாம்
வல்லவரல் லாரறியார் மற்று.
இச்சுலோகத்தை அரசன் கேட்டு, ‘இக்கவிமேகம் இல்லையாயின், நாம் செழிப்பதில்லை!’ என மனத்துள் மதித்து, அன்று முதலாகக் காளிதாசனை முன்னையினும் சதமடங்கதிகமான அன்புகொண்டு சினேகித்து வருவானாயினன். இப்படி வருநாளில், முன்னே காளிதாசனைச் சேர்ந்து சுகித்தல் வேண்டுமென்னும் விரதத்தோடு விலாசவதி என்னும் பெயர் பூண்டு தாசியுருக்கொண்டு வந்து இப் போஜராஜனுடைய தாரா நகரத்திலே வசிப்பவளான ராஜகுமாரியின் கண்வலைப்பட்ட காளிதாசன், அவள் வீட்டுக்குப் போக்குவரவுடையவனாய் இருப்பதை வித்வான்களறிந்து, அவன் மேற் குற்சிதமுற்று, அவனைத் தீண்டுவதற்கும் அருவருத்திருந்தார்கள்.
இதனை அரசன் கண்டு வித்துவான்களைப் பார்த்து, ‘நீங்கள் பிராமணோத்தமராகிய காளிதாச கவியைத் தீண்டுதற்கு அருவருத்துத் திரிவது யாது காரணம் பற்றி?’ என்று வினவினன். வித்துவான்கள் அவனுடைய ஒழுக்கம் தீயதென்று காரணங் காட்டினார்கள். அது கேட்ட அரசன் ஆச்சரயவசத்தனாகி, ‘கலா சமுத்திரமாகிய காளிதாச கவி வேசி கமனஞ் செய்ய உடன்பட்டதென்னை! காளிதாச கவிக்கு நற்புத்தி போதிக்க யாவருளர்!’ எனச் சிந்தித்திருந்தான். இங்ஙனஞ் சிந்தித்திருக்கும் அச்சமயத்தில் காளிதாசன் தற்செயலாய் அரசன் சமுகம் வருவானாயினன்; வந்தபோது, அரசனுடைய முகக் குறியால் அவனுடைய உள்ளக்கருத்தை அறிந்து, அவனைப் பார்த்து, ‘திரிபுர தகனராகிய ஸ்ரீருத்திரமூர்த்தி மேலும் கூசாது அம்பு கொடுக்கத் தலைப்பட்ட மன்மதன், சிற்றறிவும் சிறு தொழிலுமே இயல்பாகிய குணங்களாகவுடைய எளிய நரர் மேல் பாணந்தொடுக்குந் துணிவையும் விரைவையும் சொல்ல வேண்டுமோ!’ என்னுங் கருத்துள்ள,
சேதோபுவச்சபலதாப்ரஸங்கே காவ சுதாமா நுஷலோக பாஜாம்
யத்தாஹஸீலஸ்ய புராம் விஜேதுஸ்ததாவிதம் பௌருஷ்மர் தமாஸீத்
முப்புரங்கள் செந்தழலில் மூழ்குவித்த முக்கணன்மேல்
செப்புமதன் பாணஞ் செலவிடுத்தான் - அப்பதகன்
சிற்றறிவும் புன்றொழிலுஞ் செருநரர் மேல்வாளி
எற்றிடுகை நூதனமன் றீங்கு.
என்னுமிச்சுலோகத்தைப் பாடினான். இதைக் கேட்ட மாத்திரத்தில் அரசன் தன் மனத்திற் குடி கொண்டருந்த சிந்தாகுலமெல்லாம் தினகரனைக் கண்ட இருள் போல இல்லாதொழிய, மிக்க மகிழ்ச்சியுடையனாகித் திரவிய சாலாபதியைக் கூவி அழைத்து, அச்சுலோகத்தை எழுதி அவன் கையிற் கொடுத்து, ‘இச்சுலோகத்திலுள்ள அக்ஷரங்கள் எத்தனையோ, அத்தனை லக்ஷம் பொன் எடுத்து இக்கவி சிரேஷ்டருக்குக் கொடுப்பாயாக!’ என்று ஆஞ்ஞாபித்தான். அதனைக்கேட்டுக் காளிதாசன் பேரானந்தமுற்று, மீண்டும் ராஜாவை ஸ்துதிக்கத் தொடங்கி, ‘அஷ்டலக்ஷ்மி விலாசனே, ராஜாதி ராஜனாகிய போஜமகாராஜனே, அண்ட கோடிகளெல்லாம் உனது எல்லையில்லாத கீர்த்தியினால் ஒரே மயமாய் வெளுத்திருப்பது பற்றித் திருநாராயணர் தமது திருப்பாற்கடலைக் காணாதவராகித் தேடியலைகின்றார்; சிவபெருமான் தமது கைலாசகிரி எவ்விடத்துளதென வினாவித் திரிகின்றார்; அவ்வாறே இந்திரன் தனது ஐராவதத்தையும், பிரமன் அன்னத்தையும், இராகு சந்திரனையும் தேடி உழலுகின்றார். திருமால் மோரை எடுத்துக்கொண்டும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்துகொண்டும், பிரமன் நீருடன் பாலைக் கலந்துகொண்டும், ஏனையோர் உபாயங் கண்டறியாமலும் திரிவது இம்மயக்கத்தாலன்றோ?’ என்னும் கருத்துள்ள,
‘மஹாராஜஸ்ஸ்ரீமான் ஜகதி யஸஸா தேதவளிதே பய; பாராவாரம்
பரம்புருஷோயம் ருநயதே, கபர் தீ கைலாஸம் கரிவர மபௌமம்
குலிசப்ருத் களாநாதம் ராஹீ: கமலபவநோஹம் ஸமதுநா, நீர
க்ஷீரே க்ருஹீத்வா நிகிலககத்தீர்யாதீநாளீகஜன்மா தக்ரம் த்ருத்
வாது ஸர்வா நடதி ஜலநிதீந்ஸம்ப்ரமாச்சக்ரபாணி, ஸர்வாநுத்
துங்கஸைலாந் தஹதிபஸீபதி; பாலநேத்ரேணபஸ்யன் வ்யாப்
தேத்வத் கீர்த்திகாந்த்யாத்ரிஜந்திக்ருபதே போஜராஜக்ஷிதீந்தா..’
என்னுமிச் சுலோகங்களையும், ‘ஓ பண்டித ராஜரத்நமே, இங்ஙனஞ் சிறந்து நிறைந்துள்ள உனது கீர்த்தியைப் பிரமதேவன் நிதானங் கண்டறிய விருப்புற்று, ஒரு நிறைகோலெடுத்து அதில் உனது கீர்த்தியை ஒரு தட்டிலிட்டு, மற்ற தட்டில் உபகீர்த்தியைத் தூக்கி வைத்தான்; அக்கிரி உனது கீர்த்திக்குச் சமமாகாதது கண்டு, அத்துடன் இடபதேவரைத் தூக்கிவைத்தான்; அங்ஙனமும் சமமாகாமை கண்டு, உமாதேவியாருடன் சிவபிரானையும் தூக்கி வைத்தான்; அங்ஙனமுந் தட்டுத் தாழ்ந்திலது. அது கண்டு, கங்கையை ஏற்றினன். அதனாலும் சமப்படவில்லை. அப்பால் மதியையும் ஏற்றி வைத்தான்; அதுவும் சமமாக்கிற்றில்லை. ஈற்றில் ஆதிசேடனையும் தூக்கி வைத்தான்; அவ்வகையிலும் உனது கீர்த்தி சமநிறையாகாததாயிற்று,’ என்னுங் கருத்துள்ள,
வித்வத்ராஜ ஸிகாமணே துலயிதும் தாதாத்வதீயம் யஸகா:
கைலா ஸஞ்ச நிரீக்ஷ்யதத்ர லகுதாம் நிஷிப்தவான் பூர்த்தயே
உக்ஷாணம் ததுபர்யமாஸஹாரம் தம்மூர்த்தி கங்காஜலம்
தஸ்யாக்ரே பணி புங்கவம் ததுபரிஸ்பராம் ஸீதாதீதிகம்.
இச்சுலோகத்தையும், ‘நாரதர் கோபாலனை ஒரு சமயத்தில் கண்டு, ‘கோபாலா, நீ சுவர்க்கத்தை விட்டு எங்கே போகின்றாய்?’ என்ன, அதற்குக் கோபாலன், நாரதரைப் பார்த்து ‘ஐயா, போஜராஜனுடைய கீர்த்தியைக் கேட்ட காமதேனு ஏங்கி மெலிந்து போயினமையால், பால் சுரவாதொழிந்தது; ஆதலால், அதன் கன்றுக்குப் புல் அறுக்குமாறு பூமிக்குப் போகிறேன்,’ என்றான். அது கேட்ட நாரதர், கோபலனைப் பார்த்து, ‘கோபால, பூலோகத்துச் செய்தியை நீ அறியாய் போலும்! பூலோகத்திலுள்ள புல் எல்லாம் போஜராசனுடைய சத்ருக்களால் கவ்வப்பட்டனவன்றோ! இதனை நீ யறியாதிருந்தது ஆச்சரியம்!’ என்று கூறினார் என்னும் கருத்துள்ள,
ஸ்வர்காத்கோபாலகுத்ர வ்ரஜஸிஸீரமுநே பூதரே காமதே
நோ: வத்ஸஸ்யாநேது காமஸ்த்ருண சயமதுநா முக்த்துக்தம்ந
தஸ்யா ஸ்ருத்ஸ்ரீபோஜராஜ ப்ரசுரவிதரணம்வ்ரீடஸீஷ்
கஸ்தநீ ஸாவயர்தத்தஸ் ஹி ப்ரயாஸ்த தத்பித தரிபி:
ஸர்விதம் ஸர்வ முர்வ்யாம்.
இச்சுலோகத்தையும் பாடிப் புகழ்ந்தான். இவைகளைக் கேட்ட போஜராஜன் சொல்லுதற்கரிய மகிழ்ச்சி கூர்ந்து, முன்போலவே மீண்டும் அக்ஷரலக்ஷமாகவே பொன்னை வாரி வழங்கினான். இவ்வாறு சில தினங்கள் கழித்து வருகையில் ஒருநாள் சதுர்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவராகிய பிராமணர் சிலர் போஜனுடைய குணாதிசயங்களைக் கேள்வியுற்று அவனுடைய நகரஞ் சேர்ந்தார்கள். அங்கே வந்த மாத்திரத்தில் அரசனைக் காணப்போகும்போது அவனுக்குப் பிரீதியாகிய ஒரு பொருளுடன்போய்க் காணுவதன்றோ அழகென்னும் எண்ணம் தோன்றிற்று. தோன்றவே, அரசனுக்குப் பிரீதியாகிய பொருள் யாதென்று வினாவியபோது, கவியே அவனுக்குப் பிரீதியான பொருளென அறிந்து, அவ்வாறே கவியொன்று செய்யத் தொடங்கித் தனியிடந்தேடி எல்லாருங்கூடிப் பலவாறு யோசித்து ஈற்றில் ஒருவாறு முதலிரண்டடிக்கும் பொருள்தேடி, அப்பொருளுக்கேற்ற பதங்களை ஆராய்ந்தமைத்தனர். பிறகு, யாதும் புலப்படவில்லை. பலவாறு யோசித்தும் ஒன்றுந் தோன்றாமையால், கவலை மிகப்பெற்று, ‘இன்றைக்கு இது முடியாது; நாளை பார்ப்போம்,’ என்று கூறி வெளியே போயினர். அங்ஙனம் போகையில், காளிதாசன் நாள்தோறும் புவனேஸ்வரி ஆலயத்துக்குப் போய் வரும் வழக்கப்படி அங்குப் போய்த் தரிசனை முற்றி மீண்டு வந்தான். அச்சமயத்திலே ‘காளிதாசகவி இவன்தான்,’ என ஒருவன் அவ்வேதியர்க்குக் காளிதாசனைச் சுட்டிக்காட்டினான். காட்டியதும், வேதியர் காளிதாசனை அணுகி, ஆசி கூறினர். அதற்குப் பிரதியாகக் காளிதாசனும் வந்தித்தான். அதன் பின்னர் அவ்வேதியர்கள் அவனைப் பார்த்து, ‘உத்தம கவியே, யாம் உத்தரதேசத்தோம், வேதங்களிலே யாம் அறியாதது யாதுமில்லை. அச்செல்வம் எங்களிடமிருந்தும், யாம் முன்னைநாட் செய்த தவக்குறைவால் இச்சென்மத்தில் போஜனத்துக்கு அலைபவர் ஆயினோம். எமக்கோ, கவி செய்யும் வல்லபமில்லை. அன்றியும், உன்போலும் உத்தமகவிகளுக்கே அரசன் மழை போலத் திரவியங்களை வழங்குகின்றானாம். எம் போலும் வேத விற்பனரைக் காணின் யாதுசெய்வானோ! அறியோம். ஆயினும், அவனைக் காணப்புகும்போது அவனுக்குப் பிரீதியாகிய ஒரு பொருளைக் கொடுத்துக் காண்பதே மரபாகலின், அவனுக்குவப்பாகிய கவியொன்று செய்துகொண்டு போகக் கருத்துற்றோம். கருத்துற்றும் எங்கள் கருத்துப்படி கவி முடியவில்லை. பாதி கவிமாத்திரம் ஒருவாறு அமைந்தது. அப்பால், அடுத்த பாதியையும் முடித்து முழுக்கவியாக்க எமக்கு யாதும் தோன்றவில்லை. ஆதலால், அதன் குறையை நீயே முடித்துத் தருக. அதற்கு உனது சம்மதம் எப்படி?’ என்றார்கள்.
அதுகேட்ட காளிதாசன், அவர்கள் மேல் கிருபை கூர்ந்து, ‘அந்தணர்காள், நீங்கள் அமைத்த கவியைச் சொல்லுங்கள் கேட்போம்,’ என்றான். அவர்களும் உடனே அக்குறைக்கவியைச் சொன்னார்கள். அது, ‘போஜராஜராகிய இந்திரரே, எமக்குப் போஜனம் கொடும். அதுவும் நெய் பருப்புடனிருக்க வேண்டும்,’ என்னுங் கருத்துள்ள,
போஜனம் தேஹி ராஜேந்த்ரா க்ருதஸுப ஸுமந்விதம்
என்பது. அதுகேட்ட காளிதாசன் குஞ்சிரிப்புற்று, ‘நன்றாயிருக்கிறது! உங்கள் வேண்டுகோளின்படி மற்றைய அடிகளையும் முடித்துத் தருகிறேன்; எழுதிக் கொள்ளுங்கள்,’ என ஆஞ்ஞாபித்து, ‘கார்காலத்துச் சந்திரகாந்தி போலும் வெள்ளிய எருமைத்தயிருஞ் சேர்த்துக் கொடுப்பீராக,’ என்னுங் கருத்துள்ள,
மாஹிஷஞ்ச சரத்சந்த்ர சந்திரிகா தவளம் ததீ.
என்னும் கடையடிகளைச் சொன்னான். பின்னர் வேதியர்கள் அக்கவியை மனனம் பண்ணிக்கொண்டு அரசனுடைய சமுகம் சேர்ந்தார்கள். அரசனுமவர்களை உபசரித்து, ‘நீங்கள் வந்த காரியம் யாது?’ என்று வினவ, வேதியர் அரசனைப் பார்த்து, ‘மண்டலேஸ்வரரே, ஒரு கவி செய்து கொண்டு வந்தோம். அதனைச் சிரவணம் செய்தருளுவீராக,’ என்று வேண்டினார்கள். கவிப்பிரியனாகிய அரசன் களிகூர்ந்து, வேதியரைப் பார்த்து, சொல்வீர்களாக,’ என்றான். அவர்கள், ‘இன்று நமது மிடி நீங்கிற்று’ என்று உள்ளத்தில் எண்ணிக் கொண்டு, அக்கவியை எடுத்துப் பாடினார்கள். அரசன் அதனைக் கேட்டுப் புன்னகை கொண்டு, ‘நீர் செய்து வந்த கவியில் முன்னைய அடிக்கு யாதுங் கொடுக்கத் தக்கதன்று; பின்னைய அடிக்கே பெரும்பொருள் கொடுக்கத் தக்கது; அவ்வாறே அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன் மேரையாகப் பெற்றுக்கொண்டு செல்லுமின்,’ என்று கூறினான். வேதியர்கள், ‘குருடனுக்கு வேண்டியது கண்’ என்றாற் போல, ‘எவ்வடிக்காயினுமாகுக! எமக்கு வேண்டுவது திரவியமே,’ என மனத்துள் மதித்துப் பொன்னை வாங்கிப் பொதியாக்கிக் கொண்டு தம்மில்லத்துக்கு ஏகினார்கள்.
அப்பால் காளிதாசன் அரசன் சமுகம் புகுதலும், அரசன் அவனைப் பார்த்து, ‘இக்கவியின் கடையடியை இயற்றிக் கொடுத்தவர் நீரன்றோ? என்று வினாவ, காளிதசன் அரசனைப் பார்த்து ‘அதர இனிமையையும், ஸ்தன காடின்னியத்தையும், நேத்திரத்தினது கூர்மையையும், கவிரசத்தையும் அனுபவித்தவரே அறிவர்,’ என்னுங் கருத்துள்ள,
அதரஸ்ய மதுரிமாணம் குசகாடின்யம் தருசோச்சதைக்ஷண்யம் கவிதாய: பரிபாகம்ஹ்யநுபவரஸி கோவீஜாநாதி.}}
என்னுமிச் சுலோகத்தையெடுத்துக் கூறினான். அதுகேட்ட அரசன், ‘உண்மை! உண்மை!’ என்று மெச்சி, அவனையும் அவனுரையையும் உச்சிமேற் கொண்டான்.
இப்படி அரசன் தினந்தோறும்...
தொகுஇப்படி அரசன் தினந்தோறும் காளிதாசன்மேலதிகரித்த அன்பு கொண்டு அவனைச் சன்மானித்து வருநாளில், ஒருநாள் அரசன் சமுகத்தில் காளிதாசன் புக, அரசன் வழக்கத்திற்கு மாறாக எழுந்து மரியாதை செய்யாமலும் இனிய சொற்சொல்லாமலுமிருந்தான். அது கண்ட காளிதாசன் முகமும் மனமும் கறுத்து, ‘இதுகாறுமில்லாத இவ்வவமதிப்புக்குக் காரணமென்னை?’ என்று சிந்தித்து நின்றான். அப்போது வித்துவான்கள் செய்துவருகின்ற மித்துரு பேதமே இங்ஙனம் அரசன் செய்தமைக்குக் காரணமாமன்றி, வேறு யாம் யாதேனும் அரசனுடைய அதிருப்திக்கேதுவாகச் செய்ததொன்றில்லையே! அதனை அரசன் தானே உணர்ந்து கவலட்டும்,’ என மனத்துட் சமாதானஞ் செய்துகொண்டு சபையை விட்டு நீங்குமளவில், அங்கே ஒரு தராசு இருக்கக் கண்டு, அதனைப் பார்த்துச் சொல்லுவான் போன்று, சிலேடையாக ஒரு சுலோகஞ் சொன்னான். அது வருமாறு: ‘ஓ, தராசே, உனது செயல் மிகவும் வியக்கற்பாலது! பெரிய வஸ்துவைக் கீழாகவும் சிறிய வஸ்துவை மேலாகவும் செய்கின்றனையே! இஃதென்னை?’ என ஒருவாறும், ‘ஏ நியாயாதிபதி, பெரியோரைக் கீழாகவும் சிறியோரை மேலாகவும் மதிக்கின்றனையே! உனது நியாயாதிபதித்துவமிருந்தபடி என்னை?’ என மற்றொருவாரும் பொருள் கொள்ளத்தக்க,
ப்ராப்ய ப்ரமாண பதவீம் கோநாமாஸளதுலே பலேபஸ்தே
நயஸிகரிஷ்ட மதஸ்தாத் ததிதரமுச்சைஸ் தாரம்குருஷே?
சமநிலைநின் றார்க்குந் தகநிறையைக் காட்டுஞ்
சமரசனே யானாற் றராசே- அமையவரும்
அற்பமதை மேலாக்கி ஆருங் கனமதனை
எப்படிக்கீ ழாக்கினைநீ யீண்டு.
என்னும் இச்சுலோகத்தால் அரசனைக் கண்டித்தவழியும் காளிதாசன் தனது மனத்துயருக்கு எல்லை காணாதவனாகி, மீண்டும் அரசனைப் பார்த்து, ‘யாரும் தமது தேசம் என்னும் ஆசைபற்றிப் பிறதேசம் போகுங்கால் வியசனப்படுதல் ஆச்சரியம்! தமது முன்னோரால் தோண்டப்பட்ட உப்புநீர்க் கிணற்றில் தமது கிணறாயிற்றே என்னும் உரிமையால் தாகம் தணிப்பரோ?’ என்னுங் கருத்தமைந்த,
யஸ்யாஸ்திசர்வத்ரகதிஸ் ஸகஸ்மாத் ஸ்வதேச ராகேண ஹியாதி கேதம்
தாதஸ்யகூபோயமிதப்ருவாணா: க்ஷாரம்ஜலம் காபுருஷா: பிபம்தி.
ஆருவர்நீர்க் கூபமே யாயிடினு மெந்தையிது
பாரறியத் தொட்டதொரு பண்பினால் - நீரதனை
உண்பே னெனவொருவ னுன்னுமோ? பாணகரை
என்பேரூர் என்ப தெவன்?
என்னுமிச்சுலோகத்தைச் சொல்லிவிட்டுத் துக்கத்தோடும் அரசனுடைய சபையை விட்டகன்று, தாசி வீடு நோக்கிச் செல்லுகையில், ‘உடைந்து பிளவுபட்ட முத்தானது செம்பஞ்சுக் குழம்பினால் பொருத்தப்படுமாறுபோல, அஞ்ஞானத்தினால் பிரிக்கப்பட்ட நம் இருவரையும் சந்தி செய்ய வல்லவன் எம்மகான்? என்னுங் கருத்தையடக்கி,
அவஜ்ஞாஸ்படிதம் ஸமீகர்த்துமக ஈஸ்வர: ஸம்திமநயாதிஸ்
புடிதம் லாக்ஷாலேபேலமௌக்திகம்.
என்னுமிச் சுலோகத்தை இயற்றிப் பாடிக்கொண்டு சென்றான்.
அப்பாலரசனும் ஊடல் கொண்ட மங்கையினது மனத்தைப் போலும், மனமுடையனாகி, அவைக்களம் விட்டகன்று, அந்தப்புரஞ்சென்று, கூம்பிய முகத்துடன் மஞ்சத்திற்படுத்திருந்தான். அப்போது அவனுடைய தேவி லீலாவதி வந்து, அவன் முகத்தை நோக்குமளவில் அது வழக்கத்துக்கு மாறாகப் புலந்திருப்பதைக் கண்டு, ‘பிராணநாதரே, அடியான் முகமும் உமது திருவதனமும் உதயாதித்தனும் அதன் பிரதிபிம்பமும் போன்றிருத்தற்கு மாறாகச் சூரியன் முன்னர் நின்ற சந்திரனையொத்து இன்று உமது முகம் புலந்திருத்தற்குக் காரணம் யாது?’ என்றாள். அது கேட்டரசன், ‘பிரியை, காளிதாசன் இன்று எமது அவைக்களம் புக்கபோது அவரை என்றும் போலுபசரியாது அவமதித்திருந்தோம்; அதனால் அவர் கோபித்து உடனே சபையை விட்டு மீண்டனர்,’ என ஆதியோடந்தமாக நிகழ்த்த யாவுங் கூறினான். அப்பால் அரசி அரசனைப் பார்த்து, ‘நாயகரே, அறிவிற் சிறந்த நீவிர் இப்படி அவரை அவமதித்தல் தகுமா? ‘கூடிப்பிரியேல்’ என்பது மூதுரை. பூண்ட சினேகம் பங்கப்படவிடுவதினும் சினேகம் பூணாதிருத்தல் நன்று; எங்ஙனமெனில், ஒருவனுக்குப் பிறவி தொட்டுண்டாய கண்கள் பின்னர் இடையிலே கெடுமாயின், அவனுக்குண்டாகும் துக்கம் மிகப் பெரிதாம்; பிறவிக்குருடனுக்கோ, துக்கம் மிகச் சிறிதாம், அதுபோல. ஒருமுறை நட்ட நண்பு பின்னர்ப் பங்கப்படுமாயின், அதனால் வருந்துன்பம் ஆற்றற்கரிதாமென்க. அங்ஙனமாகவும், காளிதாசரோ சரஸ்வதியினது அமிசாவதாரியாய் உள்ளவர். ஆதலின், அவர் விசேஷ பூஜ்யதைக்குரியவர். ஆதலின், நீவிர் அவரை அவமதித்ததும் வெறுத்ததும் தகா,’ என்றாள்.
இவற்றைக் கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சியுடையவனாகி, ‘ என் அமிர்தமே, என் போலும் பாக்கியசாலி யாவனுளன்! யான் பெற்ற பேறு யாவர் பெற்றார்! உன்னைப்போலும் மந்திரி எனக்கு வேறு யாவன், நன்று சொற்றனை! உன்னை மணம் முடித்த பயன் இன்றுதான் பெற்றேன்! நீ கூறியவை யாவும் உண்மையே! உனது இஷ்டப்படி நாளைய உதயத்திலே காளிதாச கவியை வரவழைத்துச் சமாதானம் பண்ணுகிறேன்,’ என்று கூறி, அவனை அவளுடைய விவேகத்திற் மெச்சி, எப்போது சூரியோதயமாகுமென்னும் ஆவலுடன் உண்டு சுகித்து நித்திரை போயினான்.
அடுத்தநாட் காலையில் அரசன் நித்திய கடன்களை முடித்து வழக்கம்போலச் சபாமண்டபம் புகுந்தான். அப்போது அங்குள்ள வித்துவக்குழாம் சூரியனில்லாத தாமரைக்குழாம் போலக் காளிதாசனில்லாமையால் பொலிவு குன்றியிருப்ப, அரசன் அதனால் மனம் வாடிப் பக்கத்திலிருந்த சேவகரை விளித்து, ‘காளிதாசக் கவியைக் கடிது சென்று அழைத்து வம்மின்,’ என்று ஆஞ்ஞாபித்தான். அவ்வாறே அச்சேவகரும் காளிதாச கவியிடஞ்சென்று அஞ்சலி செய்து, ‘அரசர் உம்மை அழைத்து வருமாறு எமக்குப் பணித்தார், எழுந்தருளுக,’ என்றனர். அதுகேட்ட காளிதாசன் அலங்கிருதனாகி, அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், ‘நேற்று அரசனால் அவமதிக்கப்பட்ட நாம் இன்று அங்குப் போதல் தகுமா? யாது பற்றி அரசன் நம்மை அழைத்தான்? அரசன் தான் இதுகாறும் அன்பினாலுபசரித்துச் சன்மானித்து வந்த வித்துவான்களையெல்லாம் துரத்துதற்குக் கருத்துக் கொண்டானோ?’ என்னுங் கருத்துள்ள,
யம்யம்க்ருபோ நுராகேண ஸம்மாநயதிஸம்ஸதி
தஸ்யதஸ்போத் ஸாரணாய யதம்தே ராஜவல்லபா!
என்னும் இச்சுலோகத்தைச் சொல்லி, ‘நாடோறும் நாம் இன்னும் அரசனாற் சன்மானிக்கப்பட்டு வந்தும், மாபாவியாகிய மனஸ்தாபத்தினால் துவேஷிக்கப்பட்டோம்! குணவான்களாகிய மந்திரிகளிடத்தில் யோசனை செய்யாது அரசியற்றும் அரசன் எங்கேயிருக்கின்றானோ, அங்கெல்லாம் துட்டரிருப்பரன்றிச் சத்துருக்களுமிருப்பார்களோ? இரார்,’ என்னுங் கருத்துள்ள,
அவிவேகமதிக்ருபதிர் மந்திரிஷுகுணவத்ஸுவக்ரிதக்ரீவ:
யத்ரா கலாஸ்ச ப்ரபலாஸ் தத்ராகதம் ஸஜ்ஜநாவர.
என்னுஞ் சுலோகத்தையுஞ் சொல்லிச் சென்று, அரண்மனை வாயிலை அடைந்தான். அப்போது அரசன் காளிதாசன் வரும் அரவங்கேட்டு ஆசனத்தை விட்டெழுந்து, ஐந்து ஆறடித் தூரம் எதிர்வந்து உபசரித்துத் தனது கரத்தால் அவன் கரத்தைப் பற்றி அழைத்துப்போய்ப் பக்கத்திலிருத்தித் தானுமிருந்தான். அப்போது அங்கிருந்த கவிவாணருடைய முகமெல்லாம் கரிந்தன. அதற்கேதுவாக, அரசனும் காளிதாசனை நோக்கி, ‘உத்தம கவி சிரேஷ்டரே! நீர் இன்றைக்கு இத்தனை நேரம் தாழ்த்து வந்ததென்னை? அன்பரே, நீரில்லாத சபையுமொரு சபையாகுமா!’ என்று பலவாறு புகழ, இருவரும் பிரிந்து கூடிய தலைவியும் தலைவனும் போன்று, அன்பு பெருக்கமுடையவராகி, வழக்கம்போல அற்றைப் பகலைக் கழித்து மீண்டனர். அன்றுதொட்டுச் சிறிதுகாலம் நட்போடு கழித்து வருகையில், காளிதாசனுடைய சத்துருக்களாகிய கவிவாணர், தம்முள் விளைந்த பொறாமை காரணமாக, ஒரு நாள் யாவரும் ஒருங்கு கூடிச் சூழ்ச்சி செய்து, அரசனுடைய பாங்கியருள் ஒருத்தியை அழைத்து, ‘நங்காய், நெடுங்காலமாக அரசனுடைய சம்ஸ்தானத்தில் வித்துவான்களாகவும் அவருக்கு உற்ற நண்பர்களாகவுமிருந்த எங்களுக்குக் காளிதாசன் சனீசுவரன்போலத் தோன்றி விட்டான்! அவனால் எங்கள் கீர்த்திக்கும் வருவாய்க்கும் பங்கம் வந்தது இது உனக்குத் தெரிந்த விஷயமே. அவனைக் கல்வியில் வெல்லத்தக்க அத்துணை வல்லவர்கள் உலகத்திலில்லை. ஆதலால், நீ ஒரு சூழ்ச்சிசெய்து அவனைப் பரதேசம் போகுமாறு செய்வையேல், உனக்குப் பரிசு கொடுப்போம்,’ என்றார்கள். அவள் அதுகேட்டு மகிழ்ந்து, ‘புத்தி உண்டாயின் சாதித்தற்கரியது யாது?’ எனக்குப் பொன்னாலாய ஆரமொன்று தருவீர்களாயின், உங்களிஷ்டப்படி முடிக்கிறேன்,’ என்றாள். அவ்வாறே அவர்களும் ஓராரத்தை அவளுக்குக் கொடுத்து, அவளைத் தூண்டிவிட்டுச் சென்றார்கள். அவள் அதனைப் பெற்றுக் கொண்டு சமயம் பார்த்திருக்கும் நாளில், ஒருநாள் அரசன் அவளைத் தன் கால்களை வருடுமாறு பணித்து நித்திரை செய்தான். அப்போது அவள் தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே தகுந்த சமயமென ஊகித்து, அரசனுடைய கால்களை நித்திரைச் சோர்வினால் இடையிடையே விடுத்து விடுத்துப் பிடிப்பாள் போன்று நடித்துப் பிடித்து, நித்திரை மீதூர்ந்து கனவிற் புலம்புவாள் போல, ‘காளிதாசன் காமவிகாரங் கொண்டு பாங்கியுருத்தரித்து அந்தப்புரத்திலே லீலாதேவியுடன் இரமிக்கின்றான்,’ என்று நடித்துக் கூறினாள். அதுகேட்ட அரசன் துணுக்குற்று, நித்திரை விட்டெழுந்து, ‘தரங்கவதீ,’ என்று அவளை விளித்து, ‘நீயுந் துயிலுகின்றனையோ?’ என்றான். அதற்கு அவள் அப்போதுதான் துயில்விட்டு விழித்து நடிப்பாக யாதுமறியாதவள் போலத் திகைத்து நின்றாள். அப்பால் அரணன் அப்பஞ்சணையிற்றானேயிருந்து, ‘இவள் கண்டதோ கனவு! கனவிலே முன்னர்க்காணாததொன்றும் தோன்றாதன்றோ? இவள் கண்ட கனவு தேவாநுஞ்ஞையால் வந்த கனவுமன்று; என் தேவி லீலாவதி கற்பிற் சிறந்தவளாகையால், அங்ஙனம் செய்யாளே! காளிதாசனோ, காமவிகாரமுடையவனென்பதில் சந்தேகமுமில்லை. ‘காமிகளுக்கு நியதியில்லை’ என்பதும் ஆன்றோர் வாக்காயிற்றே! அவன் தாதி உருத்தரித்தற்கும் ஒருப்படுவான்; எப்படியிருப்பினும், இதனைப் பரீக்ஷித்து நிச்சயித்தல் வேண்டும்,’ என மனத்துள் முடிவு செய்துகொண்டு, அடுத்த நாட்காலையில் அரசன் தனக்குச் சுரநோய் உண்டாயிற்றென நடித்துப் படுத்திருந்தான். அதனையறிந்து காளிதாசனும் அரசனைப் பார்க்க வந்திருந்தான். அப்போது அரசனுடையதேவி லீலாவதியும் பயற்றம் பருப்பும் அரசியும் கலந்து பாகஞ்செய்த பத்தியவுணவைப் பாங்கி தரங்கவதியால் எடுப்பித்துக்கொண்டு அங்கு வந்தாள். அரசன் அதனிடத்திலுள்ள பயற்றம் பருப்பைப் பார்த்துச் சொல்லுவான் போன்று, சிலேஷார்த்தம் பயக்குமாறு, ‘இப்பருப்பு வெட்கமற்று ஆடையின்றி இங்கு வந்திருக்கின்றதே!’ என்னுங் கருத்தமைத்த,
முத்கதானீகதவரீளாகவிம்த விதுஷாம்கதம்
என்னுமடியை இயற்றிச் சொல்ல, காளிதாசன் அதனைக் கேட்டு, ‘பிறவிக்குருடன் முன்னர் ஒரு பெண் ஆடையின்றி வந்தால் தோஷமாமோ?’ என்னும் கருத்தமைந்த,
தேவ்யாம் சமீபவர்த்தந்யே
என்னுமிக் கடையடியை உத்தரபாதமாகச் சொல்லி அச்சுலோகத்தைப் பூரணஞ்செய்தான். இதைக்கேட்ட மாத்திரத்தில் எல்லாமறிந்த லீலாவதி மந்தஹாசஞ் செய்தாள். அதனைக் குறிக்கொண்ட அரசன், நாம் நினைத்ததற்கும் இவள் புன்னகை செய்ததற்கும் பொருத்தமாயிற்று! ஆயினும், பெண்களுடைய மனநிலையை யாவர் உணர வல்லவர்?’ என்று மனத்துள் மதித்துக்கொண்டு, கோபாதிகனாகிக் குற்றமற்ற காளிதாசனை நோக்கி, ‘ ஏ, காளிதாசா, நீ எனக்கு மிக்க நண்பனாயிருப்பினும், அதனை நான் பொருட்படுத்துகின்றிலேன்! நீ பிராமணனாயினை; அதனால் உன்னைச் சிரச்சேதம் பண்ணாது விடுகிறேன்! இனி நீ எனது தேசத்தில் ஒரு சிறிது நேரமுமிருத்தலாகாது! என் தேசத்தை இக்கணத்திற்றானே விட்டு அகலக்கடவை! மறு மாற்றமின்றித் தூர நட,’ என்று கடிந்து சொன்னான். இவ்வாறே பாவிகளாகிய அக்கவிவாணருடைய ஏவலின் வழிச்செய்த மகாதுஷ்டையாகிய பாங்கியினது வஞ்சவுரையினால் அரசன் வெகுண்டு, நிரபராதியாகிய காளிதாசன் மேலும், லீலாவதி மேலும் அபவாதமேற்றி, லீலாவதியை யாதுஞ்செய்யாது, காளிதாசனைத் தனது சமுகம்விட்டு ஓட்டினான். காளிதாசனும் அது தெய்வசம்மதமென நினைத்து, விலாசவதி வீடுபோய்ச் சேர்ந்தான்.
இவ்வாறு வீடுபோய்ச் சேர்ந்த காளிதாசனை விலாசவதி எதிர்சென்றுபசரித்து அழைத்துப்போய்ப் பஞ்சணை மீதிருக்குமாறு செய்து, தானும் அருகிலுட்கார்ந்து, அவனை நோக்கி, ‘என் பிராணநாதரே, எந்நாளும் இவ்வளவு சீக்கிரமாக அரண்மனையை விட்டு வீட்டுக்கு வராத நீர், இன்று வந்த காரணம் யாது? உமது முகம் புலந்திருப்பது யாதுபற்றி?’ எனக் கேட்டனள். அது கேட்ட காளிதாசன், அவள் முகத்தைப் பார்த்து, ‘பிரியாய், உன்னைப் பிரிதற்குக் காலம் வந்ததே! உன்னை எவ்வாறு பிரிந்தாற்றுவேன் என்பதே என் மனத்தை அராவுவது,’ என்றான். அதுகேட்ட விலாசவதி, இடியேறு கேட்ட நாகம் போல நடுநடுங்கி, ‘ஐயோ! என் பிராணநாதரே, இவ்வுரைகளை என்னிடத்தில் மனங்கூசாது எவ்வாறு கூறத் துணிந்தீர்? நீர் பிரிந்தால், என் உயிர் தரிக்குமோ? அன்பரே, இன்று அரசன் சமுகத்தில் நடந்தது யாது? அடியாளுக்கு ஆதியோடந்தமாகக் கூறும்,’ என்ன, காளிதாசன் அவளை நோக்கி, ‘நங்காய்! என் சத்துருக்களாகிய வித்துவான்கள் செய்த வஞ்சகத்தினால் அரசன் மயங்கி, என்னைத் தனது தேசத்தினின்றும் ஓடிப்போகுமாறும், போகாது தரிக்கின் சிரபங்கதண்டம் அடையுமாறும் கடிந்து ஆஞ்ஞாபித்து விட்டான். ஒன்றை நாம் நினைத்திருக்க மற்றொன்று வந்து கூடுவதும், அங்ஙனமன்றி அதுவே வருவதும், நினையாமலிருக்க நன்மைகள் வந்து சேருவதும் ஈசன் விதிப்படியன்றி, நமது எண்ணபடியன்று; ஆதலால், யான் அரசனுடைய ஆஞ்ஞைப்படி அந்நியதேசம் போகப் பிரியாவிடை கொடுப்பாயாக,’ என்னுங் கருத்துள்ள,
அகடித கடிதா நிகடயதிகடிக கடிதாநி துர்க்கடீகுருதே
விதிரே தாநி கடயதியாநி புமாந்தைவசந்தியதி
என்னுமிச் சுலோகத்தையும், ‘நொய்தாகிய புல்லானது கற்றையாகத் திரண்டு முறுக்கப்பட்டபோது, மதங்கொண்ட யானைகளையும் கட்டற்கு வாய்ப்பது போல, புன்கவிகளாகிய சத்துருக்களுடைய திரண்ட பொறாமையால், யான் இவ்வாறு துன்பத்திற்கு ஆளாயினேன்!’ என்னுங் கருத்துள்ள,
பஹுநாமல் பசாராணாம் சமவாயோதுர த்யய:
த்ரணைர்விதீயதே ரஜஜுர்ப்பத்தியந் தேகத்தந்திந:
என்னுமிச்சுலோகத்தையும் சொன்னான். இவைகேட்ட விலாசவதி, குறுமுறுவல் கொண்டு, ‘இதற்குத்தானா அஞ்சினீர்! அஞ்சாதீர்! நீர் எனது வீட்டிலேதானே சகலவித சுகங்களோடும் மறைந்து வாசஞ்செய்யலாகும்; ஆதலால், நீர் பரதேசஞ் செல்ல வேண்டுவதில்லை,’ என்றாள். நன்றென்று கூறிக் காளிதாசனும் அதற்கிசைந்து, அங்கேதானே இருப்பானாயினன்.
இப்படியிருக்கையில் ஒருநாள்...
தொகுஇப்படியிருக்கையில் ஒருநாள் அரசனுடைய தேவி லீலாவதி, நிலாமணி முற்றத்திலே குறுநடை கொண்டான். அப்போது மாலைக் காலமாதலின், காளிதாசன் மாறு வேஷம் பூண்டு புவனேஸ்வரி ஆலயத்திற்குப் பூஜை காணுமாறு வீதி வழியே சென்றான். அவனுடைய நடையினால் அவனைக் காளிதாசனென உணர்ந்த லீலாவதி, அரசனிடம் போய், ‘என் பிராண நாயகரே, நீவிர் என்னுடன் வந்து சல்லாபித்திருத்தற்கும் நேரங்காணாதவராகிச் சிறிது காலம் காளிதாசருடன் நட்ட நண்பு இப்போது யாதாயிற்று?’ என்று கேட்டாள். அரசன் அவளை நோக்கி, ‘பிரியாய், காளிதாசன் தினந்தோறும் பாங்கியுருத்தரித்து, அந்தப்புரத்துக்கு வந்து உன்னுடன் ரமித்துப் போகின்றான் எனக் கேள்வியுற்ற நான், அதனை நிச்சயிக்கும் பொருட்டுச் சில காலத்திற்கு முன்னர் ஒருநாள் சுரங்கொண்டேன் போல நடித்துப் படுத்திருக்கையில், காளிதாசனும் நீயும் நேர்முகமாய் என் முன்னர் வர நேர்ந்ததை நீயுமறிவையன்றோ? அப்போது நான் சொன்ன முற்பாதிச் சுலோகத்துக்குப் பிற்பாதியாகக் காளிதாசன் கூறியதைக் கேட்டு, நீ மந்தஹாசம் செய்தமையால், நான் சந்தேகித்து, அவனை ஊரைவிட்டு ஓடுமாறு கட்டளையிட்டேன்; உன்னைத் தாட்சணியத்தால் கொலைசெய்யாது விடுத்தேன்; இதுவே காளிதாசனை நான் பிரிந்ததற்குக்காரணம்,’ என்றான்.
அதுகேட்ட தேவி, ‘நாயகரே, நன்று சொன்னீர்! உம்மால் தழுவப்படும் என் தேகம் பிறர் தேகத்தைத் தீண்டுதற்கும் ஒருப்படுமா? மாதர்களெல்லோரும் உம்மைச் சேருதற்குத் தவஞ்செய்ய முன்னை ஊழ்வலியால் எனக்குக்கிடைத்த கிட்டுதற்கரிய உமது சேர்க்கையை நான் தள்ளிவிட்டுப் பிறனொருவனைத் தேடப்புகின், என்புத்தி என்ன புத்தியாமோ! இனியான் இருந்தென்ன, இறந்தென்ன! ஆ! ஜகதீசா! என் பதிவிரதா தர்மத்தை இக்கணத்தில் நாட்டேனாகில், உயிர்விடுவதில் ஐயமில்லை,’ என்றாள்.
நன்றென அரசனும் மற்றைநாள் உதயத்திலே பழுக்கக் காய்ச்சிய இருப்புப்பலகைகளை ஏவலாளரால் பரப்புவித்து, தேவியை நோக்கி, ‘இதன்மேல் நடந்துவரக் கடவை; அன்றேல், கொல்லுவேன்,’ எனச் சராசனத்தை எடுத்து நாண்பூட்டி அம்பு தொடுத்து ஆயத்தனானான். அவ்வாறே அவளும் நமஸ்கரித்து எழுந்து வந்து, புட்பசயனத்தின் மீது நடந்து உலாவுவாள் போன்று மும்முறை அவ்விருப்புப்பாளத்தின்மீது நடந்து, மயிலென ஒதுங்கினாள். கற்புநெறி தவறாத உத்தமிகளுக்கு அக்கினியுமஞ்சுமென்றால், பொறாமையால் வசிட்ட முனிவரது தேவியாம் கோதை போலுங் கற்பினாற்சிறந்த உத்தம பத்தினிகளை வாளா தூற்றும் பாபிகளுக்கு நாப்புழுத்தழுதல் முதலிய கொடிய நோய்கள் இம்மையிலும், மறுமையிலும் இரௌரவாதி நரகங்களுமே கதியாமென்பதைத் துணிதல் வேண்டும். அது நிற்க. இங்ஙனமவள் நடந்து சென்ற மாத்திரத்தில், அரசன் அச்சமு வெட்கமு மேலிடப் பெற்றவனாகி, நடுநடுங்கிக் கண்களினின்றும் கண்ணீர் வார, நாத் தழுதழுத்து, அவளை அணுகி, ‘தேவி, யான் ஆயாமற் செய்த பிழையைப் பொறுக்கக் கடவாய்,’ என்று இரந்து அப்பால், ‘பாவியேன் யாது செய்தேன்! ‘கவேகாளிதாச கவிகோடி மகுடமணே!’ என்னுஞ் சொற்களையன்றி வேறு யாதுங்கூற அறியாதவனாகிச் சோகித்துப் பேய்க்கோட்பட்டான் போன்று கணந்தோறும், ‘கவேகவே’ எனப் பிதற்றிக் கீழே விழுந்து புரளத் தலைப்பட்டான். அது கண்ட தேவி, தனது கையினாலே சிறிது ஜலத்தையெடுத்து அரசனுடைய முகத்திலே தெளித்து, அவனுக்குப் பிரஞ்ஞை உண்டாக்க அரசன் விழித்தெழுந்து, காளிதாசனுக்குத் தான் செய்தது அநீதியே என்று அவளுக்குச் சொல்லி, மிகப் பரிதபித்து, ‘அவனை எப்போது காண்பேன்! என் குற்றத்தை எவ்வாறு நீக்குவேன்! என்னைப் போலும் மூர்க்கன் உலகிலுளனோ?’ எனப் பலவாறு கூறித் தன்னைத்தானே நிந்தித்திருந்தான்.
அரசனுக்குக் காளிதாசனைப் பிரிந்த துக்கம் இம்மட்டில் நீங்கிற்றன்று. அரசன் அவனை ஒவ்வொரு சமயத்திலும் நினைத்து அன்று முழுதும் அதுவே கவற்சியாய், ஊண் உறக்கம் ஒழித்து வாளாவிருப்பான்; தனது சமுகத்து வித்துவான்களை நிந்திப்பான்; ஏவலாளரைக் கடிவான். இப்படிச் சிலகாலங் கழிந்து வருகையில் ஒரு நாள், அஸ்தமன காலத்திலே அரசனும் தேவியும் நிலாமணி முற்றத்திலே சல்லாப விநோதராயிருந்தனர். அப்போது இருட்படாம் நீக்கி உதயமாகும் சந்திரனையும் தன் முன்னரிருக்கும் லீலாவதியினுடைய முகத்தையும் அரசன் பார்த்து, ‘கற்பிற்சிறந்த லீலாவதியினுடைய முகத்துக்குச் சிவபெருமான் சடையிடமாகத் தரித்த சந்திரனே உவமிக்கப்படத்தக்கது,’ என்னுங் கருத்துள்ள,
துளண அணு அணு ஸர இக்
ளௌசோமுஹசதம்கரு ஏதாயே
என்னும் இப்பாதி சுலோகத்தைச் சொன்னான். இதனைக் கேட்டுச் சமீபத்திலிருந்து வித்துவான்களெல்லாரும் இதனை முடித்தற்கு ஏதுவறியாதவர்களாகி, அரசனிடம் விடைபெறாது சாதுரியமாய் அங்குநின்றும் நீங்கி, இல்லந்தேடிப் போயினர். அங்கு நிகழ்ந்தவைகளெல்லாம் ஒற்றரால் அறிந்த காளிதாசன், நூதன கவிவாணன்போல் வேஷம் பூண்டு, அவ்வித்துவான்களை இடைவழியில் நிறுத்தி, அவர்களுடன் அளாவினான். அப்போது வித்துவான்கள் அரசன் சொன்ன சுலோக அடியைச் சொல்லி, ‘இதனை முடியும் பார்ப்போம்!’ என, அவனிடம் கடாவினர். அதற்குக் காளிதாசன், ‘பிரதமை தினத்துச் சந்திரன் எவ்வாறு சமானமாகும்?’ என்னுங் கருத்தமைத்து,
அணு இதிபம்ணயதிநஹ அணுகிதம் சம்பதிபதி ஈதம்ஸ
என்னும் உத்தர பாகத்தைச் சொன்னான். ‘அரசன் யாதொரு தக்க காரணமுமின்றிப் பூர்வ பாகத்தைச் சொல்லானே! நாம் கொண்ட மயக்கமன்றோ நம்மைக் கெடுத்தது? எப்படியிருக்கினு மிருக்க,’ என்றுகூறி, அவ்வுத்தரார்த்தத்தை வித்துவான்கள் மனனம் பண்ணிக்கொண்டு, அந்நூதன கவிவாணரைப் பார்த்து, ‘நீர் நாளை உதயத்தில் அரண்மனை வாயிலில் வந்திரும்,’ என்று கூறிவிட்டுச் சந்தோஷத்துடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள். அடுத்த நாட்காலையில் வித்துவான்கள் அரசனுடைய அவைக்களம் புகுந்து, தங்கள் மனனம் பண்ணிவந்த சுலோகபாகத்தைக் கூறிப் பிரசங்கிக்க, அரசன் மகிழ்ந்து, ‘இது காளிதாசன் வாக்கே!’ என நிச்சயித்துப் பதினைந்து லக்ஷம் பொன் பரிசளிக்குமாறு ஆஞ்ஞாபித்துவிட்டு, சேவகரை அழைத்து, ‘அரண்மனை வாயிலில் வித்துவான்களுக்கிடையே யாதேனும் பிணக்கு நிகழுமாயின், அவர்களெல்லோரையும் ஒருங்கே கொணர்மின்,’ என இரகசியமாய்க் கட்டளையிட்டான்.
அப்பால் வித்துவான்கள் அப்பதினைந்து லக்ஷம் பொன்னையும் பெற்றுக்கொண்டு அரண்மனை வாயிலை அடைந்தார்கள். அங்கே காளிதாசனாகிய நூதன கவிவாணன், தனக்குரிய சிரேஷ்ட பாகத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுமாறு கேட்டான். அதுகேட்ட வித்துவான்கள், ‘சிரேஷ்ட பாகம் உமக்கு எவ்வாறு வரும்?’ என்று வாதிக்க, கலகமெழுந்தது. அது கண்ட சேவகர் அவர்கள் யாவரையும் ஒருங்கு பற்றி அரசன் முன்னர்க் கொண்டுபோய் விடுத்தனர். அங்கே கபடமெல்லாம் வெளியாயின. வெளியாகவே, அரசன் காளிதாசனை யுணர்ந்து அவன் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, ‘யான் ஆயாது புரிந்த பிழைகளைப் பொறுப்பீராக!’ என்று வேண்டினன். வேண்டவே, காளிதாசன் தனது மெய்வடிவைக் காட்டி அரசனைத் தழுவ, அன்பு பெருகி, இருவரும் அந்தப்புரஞ்சென்று, லீலாவதி முன்னிலையில் ஊடிப் பிரிந்தார் கூடியிருந்தாற்போலக் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.
இவ்வாறு சிலகாலம் கழித்து வருகையில் ஒருநாள், பவபூதி என்னுமொரு மகாபண்டிதன், அரசன் சபைக்கு வந்து, அங்கே தனக்குச் சமமான வித்துவான் எங்குமில்லையென்று தருக்கிக் கூற, அங்கிருந்த பாணகவி எழுந்து நகைத்து, ‘பவபூதி, பகைவரை அகற்ற வல்ல பாணமிங்கிருப்பதைக் கண்டிலைகொல்லோ?’ என்றான். அதுகேட்ட பவபூதி, ‘பாணா, இங்கிருக்கும் காளிதாசன் எனக்கு நிகராகான் என்றால் நீயா எனக்கு நிகராவாய்?’ என்றான். அதுகேட்ட காளிதாசன், ‘பவபூதி, எண்ணிப் பேசக் கடவை! வித்துவான்களால் நிறைந்திருக்கும் இச்சபைக்கு நாயகமாகச் சிவபிரான் போல வீற்றிருக்கும் ராஜேந்திரனே நம்மிருவரையும் சீர்தூக்கித் தாரதம்மியங்களை அறிய வல்லவன்,’ என்றான். அதுகேட்ட அரசன் அவர்களை நோக்கி, ‘சரத்காலத்தை வருணிப்பீர்களா?’ என்றான். அவ்வாறே இருவரும் உடன்பட, முதலிலே பவபூதி வருணிக்கத் தொடங்கினான். அது வருமாறு: ‘சந்திரவிம்பம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டது, ஆகாசத்தில் நக்ஷத்திரங்கள் பரவின; மதன வில் அசையாது நின்றது; மந்தமாருதம் ஓய்ந்தது; சண்பகக் கொடி அசைதலொழிந்தது; பின்னர் எவ்வாறாயினதோ! அறியேம்!’ என்னுங் கருத்துள்ள,
முத்தாபூஷணமிந்து பிம்பமஜனிவ்யாகீர்ண தாரம்நப:
ஸாமரம் சாபம்பேத சாபலம்பூதிந்தீவரே முத்ரிதே
வ்யாலீனம் மலகண்ட மந்தரணிதம் மந்தாநிலைர்மந்திதம்
நிஷ்பம்தஸ்தபகாச சம்பகலதா சாபூந் நஜாநேதத.
என்னுமிச்சுலோகத்தைச் சொல்ல, காளிதாசன் எழுந்து, ‘அரசரே, என் கவியைச் சற்றே கேட்க,’ என்று விண்ணப்பித்து, ‘சந்திரமண்டலம் வியர்த்தது; பூமாலையாற் கட்டுண்ட இருட்குலம் குலைந்தது. முன்னரே தாழம்பூ மந்தஹாஸஞ் செய்யத் தலைப்பட்டுவிட்டது. குண்டல நிர்த்தனம் ஓய்ந்தது. நீலோற்பலமிரண்டும் குறுக்காகக் குவிந்தன. பவளவோசை உள்ளடங்கினது, பின்னர் யாது நிகழ்ந்ததோ! அறியேம்! சந்திரனால் விழுங்குண்ட இருள் இவ்வகைத்து,’ என்னுங் கருத்துள்ள,
ஸ்விந்நம்மண்டல மைந்தவம் விலுலிதம் ஸ்ரக்பாரந்ததம்தம
ப்ராகேவ பர்தமானகைதகசிகா லீலாயதம் ஹுஸ்மிதம்
சாந்தம் குண்டல தாண்டவ குவலயத்வந்த்வந் திரேமீலிநம
வீதம்வித்ரும ஹீத்க்ருதம் நஹிததோ ஜநேகிமாஸீதிதி.
என்னுமிச் சுலோகத்தைச் சொன்னான். இருவர் சுலோகத்தையுங்கேட்ட அரசன், அவ்விரண்டனையுஞ் சீர்தூக்கிப் பார்த்து, ‘பவபூதி கவிவாணரேயன்றிக் காளிதாச கவிக்கு இணையாகார்!’ என்றான். அதுகேட்ட பாணகவி, ‘காளிதாசனைப் பின் யாவனென்பீர்?’ என்ன, அவன், ‘சரஸ்வதியின் அமிசாவதாரி,’ என, அங்கிருந்து பவபூதி கோபாவேசனாய், அரசனைப் பார்த்து, ‘நன்று கூறினீர்! பக்ஷபாதம் பண்ணுகின்றீரே!’ என்றான். அப்போது காளிதாசன் அரசனை நோக்கி, ‘மண்டலேசரே, இவ்வபகீர்த்தி உமக்கு வேண்டா. புவனேஸ்வரி ஆலயத்திற்குப் போய், அவள் சந்நிதியில் ஒரு தராசில் இருவர் சுலோகத்தையுமிட்டு நிறுக்க, எது தாழ்கின்றதோ, அதுவே சிறப்புடையதென ஒரு பக்ஷம் துணிவோம்,’ என்ன, அரசனும் நன்றெனக்கொண்டு, புவனேஸ்வரி ஆலயத்திற்கு யாவருடனும் எழுந்து சென்று, அங்கு ஒரு தராசை எடுத்து நாற்றி, அதில் இருவர் சுலோகத்தையுமிட்டு நிறுத்தான். அப்போது காளிதாசனுடைய கவி வைக்கப்பெற்ற தட்டுத் தாழ்தலும், புவனேஸ்வரி தானணிந்திருந்த மாலையினின்றும் உதிர்ந்து திருமேனியிற் படிந்து கிடந்த மகரந்தத்தை நகத்தினால் எடுத்து, பவபூதியினுடைய சுலோகமிருந்த தட்டிலிட்டு, இரண்டையுஞ் சமமாக்கினாள். அது கண்ட காளிதாசன் புவனேஸ்வரியைப் பார்த்து, ‘ஏ கருணகடாக்ஷி, சிறியேன் பாக்கியமே பாக்கியம்! அடியேனும் பவபூபதியும் மலைவுற்று என் சுலோகத்தையும் பவபூதியின் சுலோகத்தையும் தராசிலிட்டு நிறுக்கும்போது, அவனுடைய தட்டு மேலெழும்பியது கண்டு, அவன் உன்னிடத்து வைத்த பத்தியினால் அவன்மேல் நீகொண்டிருக்கும் அன்பு இத்தகையதென்று காட்டுமாறு உனது மேனியிற்படிந்து கிடந்த மகரந்தத்தை எடுத்து இட்டுத் தட்டைச் சமமாக்கினையே! நீ பக்தவத்சலை என்பதை இன்று கண்டேன்!’ என்று துதித்தான். அத்துதி சுலோகம்,
அஹோமே ஸௌபாக்கியம் மமசபவபீதேஸ்ச பணிதிம்
தடாயா மாரோய்ய ப்ரதிபலதிதஸ்யாம லபிமநிகிராம்
தேவீஸத்யஸ்ருதி கலிதகல் ஹார கலிகாமதூளீ
மாதுர்யம் க்ஷிபதி பரிபூர்த்திதை பகவதீ.
என்பது. இதுகேட்ட பவபூதி, அடியற்ற மரம்போலக் காளிதாசனுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்க, காளிதாசன், ‘நீ சரத்காலத்தைக் குறித்து வருணித்த சுலோகத்தில் அக்காலத்துரிமைகளுளொன்றாய தாழம்பூவின் செய்தியைக் கூற மறந்தனையாதலின், உன் கவி என் கவிக்குச் சமமாகாது போயிற்று,’ என்ன, அவனும் மெய்யென்றி ஒப்பினான். அப்பால் அரசன் இருவரையும் தகுதிக்கேற்பச் சன்மானித்து நடாத்தி வந்தான்.
இப்படிச் சன்மானித்து வருகையிலொருநாள் அரசன், காளிதாசனை நோக்கி ‘உமது வாயால் உதயகாலத்தை வருணிப்பீராக,’ என்ன, காளிதாசன் நன்றென எழுந்து, ‘ஓர் இரசவாதி தான் செய்யும் வாதத்தினாலுண்டாகும் பஸ்மத்தை உண்டு நிறம் பெற்றாலொப்ப, கீழ்த்திசை பொன்ரேகையைப் பொருந்தியது. மூடர்கூட்டத்தில் அகப்பட்ட கலைவல்லான் போன்று சந்திரன் விளங்கினான். முயற்சியற்ற அரசர் போலத் தாரகா கணம் ஒளிமழுங்கி மறைந்தது. வணக்கமற்றவர்களுடைய மனம் போலத் தீபங்கள் பிரகாசித்தன,’ என்னுங் கருத்துள்ள,
அபூத்விம்காப்ராசீ ரஸபதிரிவப்ராஸ்ய கநகம் கதச்சாயஸ்
சம்தோபுதஜன இவஸ்ராமியஸ்தஸி
க்ஷணாத்ஹீணாஸ் தாராந்ருபதய இவாநுத்யமராநமி வாராஜன்
தேவிநய ரஹிதாநாமிவகணா.
என்னுமிச் சுலோகத்தைச் சொன்னான். அதுகேட்ட அரசன் மகிழ்ந்து, அக்ஷரத்துக்கோரிலக்ஷம் பொன்னாகப் பரிசளித்தான்.
மற்றொருநாள் அரசன் காளிதாசனைப் பார்த்து, ‘உமக்குச் சரஸ்வதியினது அருள் மிகுதியுண்டென்பது உண்மையாயின் நான் இங்கிருந்தபடியே சாகுமாறு பாடும்,’ என்றான். அதுகேட்ட காளிதாசன் பதைபதைத்து, ‘பூலோக ரக்ஷகரே, யாது கூறினீர்! உயிரைப் பிரிந்து உடல் நிற்குமாயினன்றோ, நானும்மைச் சாகுமாறு பாடுவேன்? அஃதொழிய, வேறு யாது கூறினும் செய்வேன், அதனை மறந்தருள்க!’ என்றான். என்றாலும் அரசன் சினந்து, ‘என் சமுகம் விட்டகலக் கடவீர்,’ என்றான். ‘உம்மை இறக்கப் பாடுவதினும், அகன்றிருப்பது எனக்குப் பெரும்பாக்கியம்!’ என்று காளிதாசன் கூறிக்கொண்டு, அந்நாட்டை விட்டகன்று, அதற்கணித்தாகிய ஒரு சிற்றூரை அடைந்து, அங்கே வாசஞ்செய்வானாயினன். சில காலமாயின பின்னர், அரசன் காளிதாசனது ஞாபகம் வரப்பெற்று, அவனைத் தேடுமாறு வேற்றுருத்தாங்கி ஊர்தோறுஞ் சென்று, ஆங்காங்குச் சிறிது சிறிது காலந்தங்கி, ஈற்றிலே காளிதாசன் வாசஞ்செய்திருக்கும் சிற்றூரையடைந்தான். அங்கே காளிதாசன் கடைவீதி வழியே செல்லும்போது வேற்றுருத்தாங்கிய அரசன் எதிர்ப்படக் கண்டு, தன்னால் முன் ஒருபோதும் அவ்வூரிலே காணப்படாதவனாகத் தோற்றலின், ‘நீ எவ்வூராய்?’ என்றான். அரசனும் அவனையுணராது, ‘யான் தாராபுரிவாசி,’ என்றான். அதுகேட்டு, ‘அரசரின் க்ஷேமாதிகளெப்படி?’ என்று காளிதாசன் வினவினான். அதுகேட்ட அரசன், காளிதாசனைக் கண்டுணரும்படி தான் உபாயமாக எதிர்ப்பட்டார் யாவரிடத்தும் வழக்கமாகக் கூறுகின்றபடி, ‘போஜராஜன் இறந்து வெகு நாளாயினவே!’ என்றான். அவ்வாசகம் காளிதாசன் செவிக்குக் காய்ச்சிய லோகநீராக, பதைபதைத்து, ‘தாரா நகரம் நிராதாரமாய்த் தத்தளிக்கவும், சரஸ்வதி கொழுகொம்பற்ற கொடிபோல வருந்தவும், பண்டிதர்கள் ஒருங்கே நல்கூரவும் போஜன் இறந்தானே!’ என்னுங் கருத்துள்ள,
அத்யதாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதீ
பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவங்கதே.
என்னும் இச்சுலோகத்தைச் சொன்னான். சொற்றலும், பொய்யா வாக்காதலின், அரசன் இறந்து கீழே விழுந்தான். அதனைக் காண்டலும், காளிதாசன் முன்னையினும் பதின்மடங்கு நடுநடுங்கி, அவன் அரசன் என்பதையுணர்ந்து, ‘என்பொருட்டு ஈதடைந்தனை! என் போலும் பாவி யாவன்!’ எனக் கவன்று, அவனைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு முன்பாடிய சுலோகத்துக்கு மறுதலையாக,
அத்யதாரா சதாதாரா சதாலம்பா சரஸ்வதீ
பண்டிதா மண்டிதா சர்வே போஜராஜா புலங்கதே.
என்னுமிச்சுலோகத்தைச் சொல்ல, அரசன் உயிர்பெற்றுத் தானும் எதிர் தழுவினான். அப்பால் இருவரும் அவ்வூரை விட்டுத் தாரா நகரஞ் சேர்ந்தனர்.
அப்பால் ஒருநாள் அரசன் வீதிவலம் வரும்போது ஓருத்தமி நெற்குற்றிக்கொண்டிருந்தாள். அது கண்ட அரசன் உலக்கையைப் பார்த்து,’ஏ முசலமே, ஏன் தளிர்க்காதிருக்கின்றனை?’ என்னுங்கருத்துள்ள,
முசலகிசயைம் தேதத்க்ஷணாத்யந்நஜாதய்
என்ற அடியை மனத்திலெண்ணிக்கொண்டு சபைக்கு வந்து, காளிதாசனுக்கு அவ்வடியைச் சொல்ல, காளிதாசன் உத்தரமாக, ‘அழகும் கற்பும் ஒன்று கூடி உருவெடுத்த உத்தமியினுடைய பூங்கரத்தால் தழுவப்பெற்றும் அம்முலசம் தளிர்த்ததில்லை. அது காட்டிற் பிறந்ததன்றோ? காட்டிற் பிறந்தவர்கள் சுகமறிவார்களோ? அறியார்கள். ஆதலினாலன்றோ, கிட்டற்கரிய உத்தமி கையால் தழுவப்பட்ட களிப்பினாலாயினும் அது தளிர்த்ததில்லை?’ என்னுங் கருத்துள்ள,
ஜகதிவிதிதமே தக்காஷ்டமே வாஸிநூ நம்தபிகிலஸத்யம்
காநநே வர்த்திதோஸி
குவலயதளநேத்ரீ பாணிசம்கோத்ஸவேம்ஸ்மிந்
முஸலகிஸலயம்தே தத்க்ஷணாத்யந்நஜாதம்
என்னுமிச் சுலோகத்தைச் சொன்னான்.
அப்பால் ஒருநாள் ஒரு தீர்த்த யாத்திரிகன் அரசன் சமுகத்தில் வந்து, ‘உம்மிடத்திலுள்ள வித்துவான்களை என்னோடு கங்கா ஸ்நானத்திற்கு அனுப்புதல் வேண்டும்,’ என்ன, அரசன் அதற்கியைந்து, ‘விருப்பமுள்ளோர் எல்லோரும் போகலாம்,’ எனப் பொருளுங்கொடுத்து ஆஞ்ஞை செய்தான். அவ்வாறே எல்லோரும் போகக் காளிதாசன் மாத்திரம் போகாது அங்கேயே இருப்பானாயினன்.
அடுத்த நாட்காலையில் வழக்கம் போலக் காளிதாசன் கவி சபாமண்டபம் புகக்கண்ட அரசன், ‘வித்துவான்கள் எல்லாரும் கங்கா ஸ்தானத்தின் பொருட்டுக் காசிக்கப் போய்விட்டார்களே! நீர் மாத்திரம் போகாது தயங்கிய காரணம் என்னை?’ என்று காளிதாச கவியைக் கேட்க, காளிதாச கவி அரணனைப் பார்த்து, ‘சகல சாஸ்திரங்களையும் அளவறக் கற்றுத்தெளிந்த நீர் இங்ஙனம் என்னைப் பார்த்துக் கேட்டது எனக்குப் பேராச்சரியத்தை விளைக்கின்றது! எவனுடைய இருதயகமலத்தில் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கிறாரோ, அவனிடத்திலேயே சகல தீர்த்தங்களுமிருக்கின்றன. எவனிடத்தில் சிவபெருமான் கோவில் கொள்ளவில்லையோ, அவனே தீர்த்த யாத்திரை முதலியன செய்தற்குரியவன்,’ என்னுங் கருத்துள்ள,
தேயாம்தீ தீர்த்தேஷு பிரதாயேசம போரத்தூர ஸர்த்திகம்
யஸ்ய கௌரீஸ்வரஸ் சித்தேதீர்த்தம் போஜபரம்ஹிஸா
என்னுமிச் சுலோகத்தைச் சொல்ல, அரசன் கேட்டுமகிழ்ந்து,மௌனஞ் சாதித்தான்.
இப்படியே அரசன்...
தொகுஇப்படியே அரசன் நாள்தோறும் காளிதாசனுடைய வாயினின்றும் வெளிப்படும் அரும்பொருட்கவிகளாகிய நறுந்தேனைச் செவியாகிய வாயினாலே பருகிக் களித்து வருகையில், அரசன் சமுகத்துப் புன்கவிஞர் செய்த வஞ்சகத்தினால் காளிதாசன் மீது அரசன்மீண்டும் அதிருப்தி காட்ட நேர்ந்தது. அதனைக் காளிதாசன் அறிந்து, அரசனுடைய நகரம் விட்டு வெளிப்பட்டு, அல்லாளதேசம் சென்று, அத்தேசத்தரசன் சபையிற் புகுந்து, அங்குத் தன் வரலாற்றைச் சொல்ல, அரசன் மகிழ்ந்து நீர் போஜராஜனிடத்திலிருந்து பெற்ற சன்மானத்தினும் மும்மடங்கதிகமான சன்மானத்தோடும் இங்கேதானே இருக்கக் கடவீர். உமது கீர்த்தி எனது காதுக்கெட்டிய நாள் முதலாக உம்மைக் காண வேண்டுமென்று நான் கொண்ட பேரவாவுக்கு உமது வரவால் இன்று எல்லை கண்டேன்!’ என்று பலவாறு முகமன் கூறி உபசரித்துத் தன் பக்கத்திலி்ருத்தி, ‘கவிஞரேறே, என் கவிக்கலி தீர, ஒர கவி சொல்லியருளும்,’ என்றான். கூறியவாறே காளிதாசனும் எழுந்து, சபையை வந்தனம் கூறி அடக்கி, அரசனைப் பார்த்து, ‘நரேந்திரரே, உம்பகையரசனது பட்டணத்திலே சஞ்சரிக்கின்ற ஒரு வேட்டுவமாது, வீதிகளிலே சிந்திக்கிடக்கின்ற இரத்தினங்களைக் கருங்காலிக் கட்டையாலுண்டாய தழலென எண்ணிச் சாம்பிராணியை அத்தழலிட்டுக் கண்ணை மூடி ஊத, அவள் வாயினின்றும் வரும் சுவாசம் நறிய வாசனையாய்க் கமழ, அஃது உணர்ந்த வண்டுகள் அச்சாம்பிராணியின்மேல் வந்து மொய்க்க, அவற்றைப் புகையென்றெண்ணுகின்றாள்,’ என்னுங் கருத்துள்ள,
அல்லாள க்ஷோணிபால் த்வத்வபிஹித நகரே சம்சரம்
தீகிராதிராதீகீர்ணாரா தாயரத்நாந்யுருத்ரகதிராம்காரசம்கா
குலாமகீக்ஷீப்த்வா ஸ்ரீகம்டம்தது பரிமுதுகுளீபூத
நேத்ராதமம்தீஸ்வாஸாமோதா நுயாதைர்மதுகர
நிகரைர்த்தூமஸமகாசபிபர்த்தி
என்னுமிச்சுலோகத்தைச் சொல்ல, அரசன் மகிழ்ந்து, அக்ஷரத்துக்கோரிலக்ஷமாகப் பொன்னை வாரி வழங்கினான். அப்பால் காளிதாசன் அவ்வல்லாள தேசத்தரசனிடத்திற்றானே மிக்க சம்பிரமமாயிருந்து விளங்கிவரு நாளிஃல தன்னைக் காளிதாசன் பிரிந்தவன்றே அவன் பின்னே செல்லப்பெற்ற கருத்தினனாய்த் தாரா நகரத்தில் அரசு புரிந்திருந்த போஜமகாராஜன், காளிதாசனுடைய பிரிவைச் சகிக்க முடியாதவனாகி, தன் பிரதானி யொருவனை அல்லாள தேசத்துக்குப் போக்கிக் காளிதாசனை அழைத்து வருமாறு ஆஞ்ஞாபித்தான். அவ்வாறே அப்பிரதானி காளிதாசனிடத்திற்குச் சென்று,கருத்தை வெளியிட, காளிதாசன் தான் கொண்டிருந்த கோபந் தணிந்து, போஜனிடச் செல்ல ஒருப்பட்டானாகி, அல்லாள நாட்டு வேந்தனிடஞ்சென்று, பிரியா விடை பெற்றுக்கொண்டு போஜனுடையநகரஞ் சார்ந்து, உத்தியான வனத்திற் போயிருந்தான். அதனை அறிந்த போஜராஜன், அங்கேபோய்க் காளிதாசனை வணங்கி உபசரித்தான். அவ்வளவில் இருவரும் முன்போல நேசராகி, அந்தப்புரஞ் சென்றார்கள். அங்கே காளிதாசன் விருந்தருந்தி ஆசி கூறி, விடைபெற்றுத் தன் பிரியை வீட்டுக்கேகிச் சுகித்து, முன்போலக் காலக்கழிவு செய்துவருகையில், ஒருநாள், அரசன் பரத்தை, கவரி வீசக் காளிதாசனைப் பக்கதிருத்தி, மஞ்சத்தின்மீது படுத்திருப்பானாயினன். அப்போது காளிதாசன் அவ்வேசியைப் பார்த்து வருணிக்கத் தொடங்கி, ‘கூந்தலைப் பார்த்து ஸ்தனங்கள் அஞ்சுகின்றன1.. ஸ்தனபாரத்தைக் கண்டு கூந்தல் அஞ்சுகின்றது2. கசமும் குசமுமாகிய அவ்விரண்டையுங் கண்டு அல்குல் அஞ்சுகின்றது3. மதிமுகத்தாளே! இவற்றையெல்லாஞ் சந்திசெய்து பரித்து நிற்கும் உனது வல்லமை வியக்கற்பாலதே!’ என்னுங் கருத்துள்ள,
கசபாராத் குசபார: குசபாராத் பீதிமே சகபார:
கசகுசபாராஜ்ஜகநம்கோயம் சந்த்ராநநே சமத்கார.
என்னுமிச் சுலோகத்தைச் சொல்லக் கேட்ட அரசன், ‘நானும் சொல்லுகிறேன், கேட்பீராக’ என்று கூறி, ‘முகத்தைக் கண்டு பாதங்கள் பீதியடைகின்றன4. வார்த்தையினால் அதரமும் தந்தபந்திகளும் அச்சமெய்துகின்றன5. கசமும் குசமும் நயனமும் இடையைக் கண்டு பயமடைகின்றன6,’ என்னுங் கருத்துள்ள,
வதநாத்பதயுகளீயம் வசநாததரஸ்சதந்ததபந்திதஸ்சகசத
குசயுகளீயம் லோசனயுகளம் சமத் பதஸ்தரஸதி
என்னுமிச் சுலோகத்தைச் சொல்லி, ‘என்னுடையதே சிறப்புடையது!’ என்று அரசன் கூற, காளிதாசன் தன்னுடையதே சிறப்பால் மிக்கது என்ன, இருவரும் போலி மலைவுற்றுக் களித்தனர்.
(1. ‘கூந்தலைப் பார்த்து ஸ்தனங்கள் அஞ்சுகின்றன,’ என்பது, கூந்தல் மேகத்துக்கும், ஸ்தனங்கள் மணற்குன்றுகளுக்கும் உவமிக்கப்படுவனவாக, மழைபெய்யின் மணற்குன்று அழிதல் இயல்பென்னும் ஏதுப்பற்றி என்க. 2. ‘கூந்தல் ஸ்தனங்களைக் கண்டஞ்சுகின்றது,’ என்பது, கூந்தல்-கரும்பாம்பு; ஸ்தனம்-யானை; யானைக்குப் பாம்பு அஞ்சுவது பற்றியென்க. 3. ‘கசகுசங்களாகிய அவ்விரண்டையுங் கண்டு அல்குல் அஞ்சுவது’ என்பது, கசம்-கூந்தல்; கூந்தலுக்குக் கொன்றைக்காய் உவமை. குசம்-ஸ்தனம்; ஸ்தனத்துக்குக் குடம் உவமை. ஆகவே, பாம்பு கொன்றைக்காயைக் கண்டு சத்துருவென்று திரித்துணர்ந்தஞ்சுதலும் குடத்திலடங்குதலும் இயற்கையாதலின் என்க. 4. ‘முகத்தைக்கண்டு பாதங்கள் அஞ்சுகின்றன,’ என்பது, சந்திரனைக்கண்டு தாமரை கூம்புதலியற்கையாதலாலென்க. 5. ‘வார்த்தையினால் அதரமும் தந்தபந்திகளும் அஞ்சுகின்றன,’ என்றது, கிளிமொழியைக் கேட்ட கொவ்வைக்கனியும், மாதுளவித்தும் அஞ்சுமென்பது, கிளிக்கு அவை உணவாகுமெனும் வருணனையாலென்க. கொவ்வைக்கனி அதரத்துக்கும் மாதுவள வித்துப் பல்வரிசைக்கும் உவமைகள். 6. கூந்தலுக்கு இருளுவமை. இடைக்கு மின்னுவமை; மின்னால் இருள் கெடுதலால், கூந்தல் இடைக்கஞ்சுமென்றதென்க. இனி, குசத்துக்கு யானையும் இடைக்குச் சிங்கமுமுவமை யாதலின், சிங்கத்துக்கு யானையஞ்சுமென்க. கண் மானுக்குவமையாதலின், மான் சிங்கத்தைக் கண்டஞ்சுதலியற்கை.)
அப்பால் ஒரு நாளிரவில் அரசன் நகர்ச்சோதனையின் பொருட்டு வீதிதோறுஞ் சென்றுலாவி வருகையில், ஒரு வீட்டிலே ஒரு பிராமணன் தன் மனைவியினது மடிமீது தலையை வைத்துச் சயனிப்பதையும், அப்பார்ப்பனிக்கருகிலே ஒரு மகவு சந்தனக்குழம்பு நிறைந்த தங்கப்பாத்திரத்தில் விழுந்து விளையாடுவதையுங் கண்டு, மனத்திற்குறித்துக்கொண்டு அதனை மறைத்து, அக்கினி மயமாகிய கனற்சட்டியெனச் சுட்டித் தன் வித்துவான்களுடைய விவேகத்தைப் பரீக்ஷிக்கும் கருத்துடையவனாகி, மற்றைநாட்காலையில் சபைக்கு வந்தபோது வித்துவான்களை விளித்து, ‘சென்ற இரவில் நாம் நகர்வலம் வந்தபோது ஒரு வீட்டில் ஓர் அந்தணன் தன் மனைவியினது மடியிலே தலையை வைத்து நித்திரை போக, அவன் மகவு பக்கத்திலிருந்த ஒரு கனற்சட்டியில் விழுந்து விளையாடக்கண்டேம்,’ என்று கூற, அது கேட்ட காளிதாசன், ‘நீர் கூறியது நெருப்பேயாகுக. அதனால் நீரடைந்த ஆச்சரியம் ஆச்சரியமன்று, பதிவிரதையானவள் தனது மடியில் நாயகன் நித்திரை செய்ய அவளுடைய சமீபத்திலிருந்த அனற்சட்டியில் குழந்தை விழுந்து விளையாடுகினும் அஞ்சுவளோ? அஞ்சாளே! எங்ஙனமெனில், அக்கினிபகவான் தான் அம்மகவைத் தகிக்கின் தன்னைப் பதிவிராதக்கினி தகித்துவிடுமேயென அஞ்சுவனன்றோ?’ என்னுங் கருத்துள்ள,
ஸுதம்பதம் தமரஸ்மீக்ஷயபாவநேகந, போதயாமாஸபதிம்
பதிவ்ரதா ததாபவத் தத்பதிபக்தி கௌரவாத் ஹுதாசநஸ்
சந்நத பங்க சீதல
என்னுமிச்சுலோகத்தைக் கூறிச் சந்தனமென அரசனுடைய குறிப்பையும் சுட்டாது சுட்டினான். இதனைக்கேட்ட அரசன் கழிபெரு மகிழ்ச்சியினால் பரவசனாகிக் காளிதாசனைப் பற்றுக்கோடாகத் தழுவிநின்று, ஈற்றில் தெளிந்தான். இவ்வாறு நடந்து வருகையில், போஜனுடைய நாட்டிலே காட்டு மிருகங்கள் வந்து பயிர் முதலியவைகளை அழிக்கத் தலைப்பட்டன. அதுகண்டு பிரஜைகள் அரசனிடம் போய் முறையிட்டார்கள். குடிகளுக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்ததாக நோக்குமியல்பினனாகிய போஜன்,குடிகள் சொன்னகுறையைக் கேட்டு, சிறிது நேரமுஞ் சகிக்கலாற்றாது உடனே வேட்டைக்காயத்தனாகி, நகரத்தை விட்டு வெளிப்பட்டு நாடுதோறுஞ் சென்று, மிருகங்களைத் தேடி வதைசெய்துகொண்டும் வேடரால்பல மிருகங்களை வலைப்படுத்தக் கொண்டும், பாணத்துக்கும் வலைக்குந்தப்பிக் காடுபோய் அடைந்த மிருகங்களைத் தொடர்ந்து காட்டிற்புகுந்தான். அங்க நெடுநேரமாக வேட்டஞ் செய்தமையால், தாகம் மீதூரப்பெற்றுத் தடாகந்தேடி நீரருந்தி, அதன் சார்பிலுள்ள சோலையிலிருந்து களை நீங்கினான். அப்பொழுது ஒரு குரங்கு ஒரு நாவல் மரத்திலேறிக் கொம்புகளை அசைத்துத் தனது, இயற்கைக்குணத்தைக் காட்ட, அக்கொம்புகளில் பழுத்திருந்த பழங்கள் அத்தடாகத்து நீரிலே, ‘குளுகுக் குளுகுக் குளு’ என விழுந்தன. பக்கத்திலிருந்த அரசன் அவ்வொலிக்குறிப்பை மனனம் பண்ணிக்கொண்டு, காட்டினின்றும் மீண்டு நகரஞ்சேர்ந்தான்.
அடுத்த நாட்களில் அரசன் சபைக்கு வந்து, தான் காட்டிலிருந்து அவதானித்து வந்த ஒலியைக் ‘குளுகுக் குளு’ என்று ஒரு சுலோகபாதக் கூறு போலச் செய்து, ‘இதனைப் பூரணஞ் செய்வீர்களாக,’ என்று வித்துவான்களிடம் கூறிக் கேட்டான். அது கேட்ட வித்துவான்களெல்லோரும், ‘இஃதென்னை1’ என்று பரிகசித்து, மயங்கித்திகைக்க, காளிதாசனெழுந்து, ‘அரசரே, நீர் குறித்தது பழுத்த கனிகளால் நிறைந்திருந்த நாவல் மரத்திலே குரங்கேறிக் கொம்புகளைக் கப்பிதஞ்செய்ய, அதன் பழங்கள் நீரிலே விழுந்த ஒலிக் குறிப்பேயாம்,’ என்னுங் கருத்துள்ள,
ஜம்பூ பலானிபக்வாநி பதம்தி விமலே ஜலே
கபிகம்பித சாகாப்யோ குளுகுக் குளுகுக் குளு.
என்னுமிச் சுலோகத்தைச் சொன்னான். இதைக்கேட்ட மாத்திரத்தில் அரசன் அன்பாலும் அச்சத்தாலும் மெய் நடுநடுங்கி, நாத்தழுதழுத்து, ஆனந்தக் கண்ணீர் பொழியக் காளிதாசனின் பாதங்களில் விழுந்து, ‘குருநாதரே, இன்றே உமது மெய்வடிவை உணர்ந்தேன்! பிறர்மனத்திலுள்ளதை ஓர்ந்து சொல்லும் வல்லமையுடைய உம்மைச் சாமானிய நரனாகிய என்னுடன் சமமாக்கி வைத்திருந்த என் அறியாமை இருந்தவாறென்னை!’ எனப் பலவாறு துதித்துக் கொண்டாடினான்.
அப்பால் முன்பனிக் காலத்து ஓரிரவில் வாடையால் நலிவுற்ற அரசன், கனற்சட்டியையணுகிக் குளிர் காய்ந்திருக்கும்போது அக்கனற்சட்டியை எவ்வாற வருணிக்கலாமென்று சிந்தித்துப் பார்த்தும், தக்கவாறு புலப்படாமையால், ‘்நாளையுதயத்தில் இதனைக் காளிதாசனிடம் கேட்போம்!’ என்று முடிவுசெய்து, குளிர்நீங்கிய பின் படுத்துறங்கி, விடியற் காலத்திலெழுந்து நித்தியக் கடன்களை முடித்துக்கொண்டு, சபையிற் பிரவேசித்து, காளிதாசனைப் பார்த்து, ‘கவிசிரேஷ்டரே, உமது திருவாக்கால் கனற் சட்டியை வருணிக்குமாறு பிரார்த்திக்கின்றேன்,’ என்றான். நன்றெனக் காளிதாசனுமெழுந்து, அரசனைப் பார்த்து, ‘மண்டலாதிபதீ, கனற்சட்டியானது இரும்பினாலமைக்கப்பட்டதாயினும், அதனிடத்துள்ள விசேஷ குணங்களினால் அதனை வித்துவான்களின் மனத்துக்கு உவமிக்கலாம். எவ்வாறெனில், வெகு லோகையாயிருத்தலாலென்க¶.
¶ ‘பகுலோகா’ என்பது, ‘பகு லோகா’ எனவும், ‘பகுல ஊகா’ எனவும் இருவகையாகப் பிரிக்க முறையே, ‘மிக வலிய லோகத்தாலமைந்தது எனவும், ‘நுண்ணிய விவேகமுடையவர்’ எனவும் பொருள்படும்.) உஷத்காலத்துச் சூரியனுடைய தேர்க்கால் போலவும் பூட்டப்பட்ட சாதகப் புள்ளைப் போலவுமிருக்கின்றது. (’ஸுகடித சக்ரா’ என்பது, பூட்டப்பட்ட தேர்ச்சக்கரமெனவும், ‘பூட்டப்பட்ட சாதகப்புள்’ எனவும் பொருள்படும்.) இன்னும் கனற்சட்டியானது, நீறு பூத்த தழல்போலும் திருமேனியையுடைய சிவனுக்கும் சமமாகத்தக்கது,’ என்னும் கருத்துள்ள,
கவிமதிரிவ பஹுலோஹா ஸுகடித சக்ராப்ரபாதவேனேவ:
ஹரமூர்த்தி ரிவஹஸந்தீபாதி விதூமா நிலோபேதா
என்னுமிச் சுலோகத்தால் வருணித்தான். அதற்காக அரசன் காளிதாசனுக்கு அக்ஷரமொன்றுக்கு லக்ஷம் பொன் மேரையாகக் கணக்கிட்டுக் கொடுத்தான்.
அப்பால் ஒருநாள் அரசன் தன் பாரிகளிலொருத்தியாகிய கமலை என்பவளுடன் சூதாடப் புகுந்து, தான் தோற்கின் அன்றிரவு அவளுடைய அந்தப்புரத்தில் சயனிப்பதாகச் சபதமொட்டிச் சூதாடியபோது தோற்றான். அதனால் அன்றிரவு சந்திரமுகியினுடைய அந்தப்புரத்திற்குப் போகும் முறைக்கு மாறாகக் கமலையினுடைய அந்தப்புரம் போக வேண்டியவனானான். அச்சமயத்தில் பட்டத்துத் தேவியாகிய லீலாவதியும் தன்னுடைய அந்தப்புரத்துக்கு வருமாறு வேண்டி அரசன்பால் தூது போக்கினான். இவ்வாற்றால் அரசன் அம்மூவரையும் எவ்வாறு திருப்தியடையச் செய்யலாகும் என்னும் சிந்தனையுடையவனாகி, ஒருதலைத் துணிபின்றியிருந்தான். அடுத்தநாட் காலையில் வழக்கம் போல அரசன் சபைக்குப்போய், அங்கிருந்த வித்துவான்களைப் பார்த்துச் ‘சென்ற இராமுழுதும் நித்திரையற்றேன்!’ என்னும் இவ்வளவே கூற, காளிதாசன் நிகழ்ந்தவைகளையெல்லாம் சுலோகமாக்கி, எடுத்துக் கூறினான். அது கேட்ட அரசன் வெட்கித் தலைகுனிந்தான்.
சிலநாட் கழிந்த பின்னர், புதிதாக அரசன் தான் அமைப்பித்த ஒரு மாளிகையிற் குடிபுகுத வேண்டிப் பிரயத்தனங்கள் செய்தான். அப்பொழுது அம்மாளிகையில் ஒரு பேயிருத்தலையுணர்ந்த அரசன், அதனை அங்குநின்றும் ஓட்டவேண்டி, மாந்திரிகர்களை வருவித்து, ‘ஓட்டுமின்,’ என்ன, அவர்கள் எல்லோரும் தம்தம் மந்திரவலியைக் காட்டியும் அதனை அகற்ற முடியாதவர்களாகி, அப்பேய்க்கே இரையாகி மாண்டார்கள். அதனால், அரசன் மிக்க கவலை வேண்டா; நானே அதனை ஓட்ட வல்லேன்!’ என்று அரசனுக்குத் திடமொழி கூறி, அம்மாளிகைக்கேகி, அங்கிருந்து புவனேஸ்வரியை நோக்கி ஜெபம் செய்துகொண்டிருந்தான். அப்போது பேய் சினத்தெழுந்து வந்து, காளிதாசன் முன்னர்நின்று, ‘உலகம் துவிதம்,’ என்னும் கருத்துள்ள,
சர்வஸ்யத்வே,
என்னும் வாக்கியத்தைச் சொல்லிற்று. இங்ஙனங்கூறிய பைசாசத்தைக் காளிதாசன் பார்த்து, ‘செல்வம் வறுமை என்பவற்றிற்கு நற்புத்தி தீப்புத்தியே ஏதுவாகும்,’ என்னுங் கருத்துள்ள,
ஸுமதிகுமதீ ஸம்பதா பத்திஹேதூ
என்னுஞ் சுலோகத்தைச் சொன்னான். அவ்வளவில் அப்பேய் மீண்டு போய் இரண்டாஞ்சாமத்தில் திரும்பி வந்து, ‘விருத்தனும் ஆடவளும்,’ என்னுங் கருத்துள்ள ஓர் வாக்கியத்தைச் சொல்லிற்று. அதுகேட்ட காளிதாசன், ‘இளம்பெண்கள் ஆடவருடைய சேர்க்கையால் விருத்தரை நீக்குகின்றார்கள்,’ என்னுங் கருத்துள்ள,
வ்ருந்தோயூனா ஸஹபரிசயநத்த்யஜ்யதே காம்ய ரூப்யா,
என்னும் வாக்கியத்தைச் சொன்னான். உடனே, அதுபோய் மறைந்து மூன்றாஞ்சாமம் தோன்றி, ’ஏககோத்திரம்,’ (ஏகோ கோத்ரே) என்றது. அதற்குக் காளிதாசன், ‘ஒரு குலத்திற் பிறந்தவன் என்பான், அக்குலமனைத்தையும் காப்பவனே,’ என்னுங் கருத்தமைந்த,
ஏகோ கோத்ரே ப்ரபவதி புமான்ய: குடும்பம் பிபர்த்தி
என்னும் வாக்கியத்தைக் கூறப் பைசாசம் மறைந்தது. அப்பால், நான்காஞ்சாமத்தில் அப்பைசாசம் திரும்பி வந்து,
ஸ்திரீ புவச்ச,
என்று கூற, அதற்குக் காளிதாசன், ‘ஒரு ஸ்திரீ, புருஷனைப் போலச் சகல அதிகாரத்தையும் வகிப்பவளாயின், வீடு நசிக்கும்,’ என்னுங் கருத்தடங்கிய,
ப்ரபவதியதா தத்திகே ஹம் விகஷ்டம்.
என்னும் வாக்கியத்தைச் சொன்னான். அவ்வளவிலே பைசாசம், ‘இவனை வெல்லுவதரிது!’ எனச் சிந்தித்துச் சந்தோஷித்து, ‘பக்தா,’ எனக் காளிதாசனை அழைத்து, ‘உனக்கு வேண்டுவதைக் கேள், தருதும்,’ என்றது. அதற்குக் காளிதாசன், ‘நீ இவ்விடம் விட்டகல்வதே எமக்கு வரம்,’ என்ன, அது நன்றெனக்கூறி, அங்குநின்றும் அகன்று போயது. இதனைக் கண்ட அரசன் ஆச்சரியவசத்தினனானான்.
இதன் பின்னர்...
தொகுஇதன் பின்னர் ஒருநாள் அரசன் ஸ்நானத்தின்பொருட்டுத் தனக்குரிய பூந்தடாகத்துக்குப் போய்ப் படித்துறையில் நின்றான். அப்போது அரசனுடைய பூசைக்காகவே தீர்த்தம் கொண்டுபோக வந்த அந்தப்புரத்துச் சேடியொருத்தி, அரசனைக் கண்ணுற்று, மையல் லாகிரியால் தன்வசந் தப்பி இடையிற்றாங்கிய தங்கக்குடத்தைச் சோரவிடுத்தாள். அஃது அப்படித்துறையில் விழுந்துருண்டோடும்போது, ‘டண்டம் டடண்டம் டண்டம்’ என்னுமொலியுடன் ஓடிற்று. அவ்வொலிக்குறிப்பை அரசன் மனனம் பண்ணிக்கொண்டு ஸ்நானாதிகளை முடித்துச் சபைக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கே காளிதாசன் வந்திருக்கக்கண்டு, அவனைப் பார்த்து, அவ்வொலிக்குறிப்பை மாத்திரஞ் சொன்னான். அதனைக்கேட்ட காளிதாசன், நிகழ்ந்தவற்றையெல்லாம் உடன் நின்று கண்டவன் போன்று,
ராஜாபி ஷேகே மதவிஹ்வ லாயா
ஹஸ்தாச்யு தோஹே மகடோயு வத்யா
ஸோபாந மார்க்கே ஷீகரோதி சப்தம்
டண்டம் டடண்டம் டடடண்ட டண்டம்.
என்னுமிச் சுலோகத்தைச்சொன்னான். இச்சுலோகத்துக்கும் அரசன் அக்ஷரத்துக்கு லக்ஷமேரையாகவே பொன்னை வாரிப் பரிசாக வழங்கினான்.
மற்றொரு நாள், அரசன் வீதி வழியாகச் சிற்றுலாப் போகையில் ஒரு பரத்தை மாது பந்தாடிக் களித்து நிற்ப, அதனைக் கண்ணுற்ற அரசன், தன் பக்கத்தில் நிற்கின்ற காளிதாச கவியைப் பார்த்துப் ‘பந்தாட்டத்தை வருணித்தருளும்,’ என்ன, நன்றெனக் காளிதாசனும் வருணித்தான். அஃதியாதெனில், ‘பந்தாடுமிச்சுந்தரி தனது பந்தைப் பார்த்து, ‘ஏ பந்தே, நீ என் ஸ்தனங்களுக்கிணையாவையோ? இணையாகாய்; ஏன் வீணிலே ‘என்னை உன் ஸ்தனத்திற்குச் சமமாகச் சேர்த்துக்கொள்,’ என இரந்து பாய்கின்றாய்? தூரப்போ,’ எனக் கூறியடிப்பது போலப் பந்தை அடிக்கின்றாள். அதுகண்ட கருநீல மலர்கள் யாசிக்கும் தரித்திரரைப் போல மேலிருந்து அவள் பாதங்களில் வீழ்ந்தன,’ என்னுங் கருத்துள்ள,
பயோதராகார தரோஹி கந்துக:
கரேணரோஷாதபி ஹந்யதேமூஹீ:
இதிவநேத்ராக்ர திபீதமுத்பலம்
ஸ்திரியா: ப்ரஸதாய பாதபாதயோ:
என்னும் இச்சுலோகமென்க.
இவ்வாறே காளிதாசன் நாள்தோறும் திண்மை, நுண்மை, வனப்பாதிகளாற் சிறந்த சிங்கார கவிகள் சொல்லி அரசனை மகிழ்வித்து, அவனிடம் குவை குவையாகப் பொன்னைப் பரிசாகப் பெற்று வந்ததுமன்றி, இடையிடையே அனேக நூல்களையும் இயற்றி வந்தான். நாடகாலங்காரத்திலும் காளிதாசன் வல்லவன் என்பது அவனாலியற்றப்பட்ட சகுந்தலை நாடகம், விக்கிரமோர்வசி நாடகம், மாளவிகாக்கினிமித்திர நாடகம் முதலியவற்றாலுணரப்படும். மற்றை எப்பாஷையிலும் அவ்வகைச் சிறந்த நாடகநூல் இல்லையென ஆய்ந்தோர் கூறுப.
பௌராணிகரூபமாகச் செய்யப்பட்ட நூல்கள் இந்நூற்றொடக்கத்திலே கூறப்பட்டன காண்க. தோத்திர ரூபமாக இயற்றப்பட்ட நூல்கள், சியாமளா தாண்டகம், கவுரிசதகம் முதலியன கருவி நூல்களாக இவனாலியற்றப்பட்ட நூல்கள், சுருத போதம், நாநார்த்த சப்த ரத்தினம், சந்திராலோகம் முதலியன. இவையேயன்றி, சமயநூல்கள் சுத்த சந்திரிகா, வியாக்கியானம் முதலியன.
போஜராஜனுடைய பிரிய கவிகள், காளிதாசன், பவபூதி, தண்டி என்னும் மூவரே. இவருள் காளிதாசனே சிரேஷ்ட நண்பன். இவன் இற்றைக்கு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்கு முன்னர் இருந்தவன் என்பது அனேகர் துணிபு.
இக்கவிசிரேட்டன் கல்வியாலான்ற பெரியோனாயினும், பரத்தையர் கமனத்தை நீக்காதவனென்பதைக் கேட்க அனேகர், குற்சிதமெய்துவர். அரசன் இவன்மேல் இடையிடையே வெறுப்புற்றிருந்தமைக்கும் அதுவே காரணம். அரசன் அங்ஙனம் வெறுப்புக்காட்டியும், காளிதாசன் அப்பரத்தையர் கமனத்தைக் கைவிட்டிலன். பரத்தையென இங்கு யாம் பேசுவது பரத்தையுருக்கொண்டு போந்து இவனுடன் நிறை தவறாது சுகித்திருந்த அரசகுமாரியை அன்று; இவனுக்கு மரணகாரணயிருந்ததும், பரத்தையர் கமனமே. இவன் ஈற்றில் அரசனைப் பிரிந்து தனக்குரிய அரசகுமாரி வீட்டுக்குப் போகாது நவீனமாக ஒரு பரத்தை வீடு போய்ச் சேர்ந்திருந்தான். அப்போது அரசன் இவனுடைய வரவை நெடுநாளாகப் பார்த்திருந்தும், வெளியாகாமை கண்டு, நவீனமாக ஒரு சுலோகப் பாதியைச் செய்து, ‘இதனைப் பூரணஞ்செய்ய வல்லாருக்கு என்னரசிற்பாதி கொடுப்பேன்,’ என்று முரசறைவித்தான். அச்சுலோக பாதம் வருமாறு: ‘தாமரை மலரினிடமாகக் குவளைகள் உற்பத்தியாகிக் கலந்திருப்பது காணப்படுகின்றது,’ என்னுங் கருத்துள்ள,
குஸுமே குஸுமோத்பத்தி:
ச்ருயதே நதுத்ருச்யதே.
என்பது. அதனை அப்பரத்தை மாது காளிதாசனுடைய பள்ளியறையிலே கால்மாட்டுச் சுவரிலே மையினால் வரைந்து விட்டாள். அவன் நித்திரை விட்டெழுந்த போது எதிரில் இச்சுலோக பாதம் புலப்பட்டது. உடனே அவன் இதன் உத்தர பாதத்தை எழுதிப் பூரணஞ்செய்து போயினன்.
அது, ‘ஏ பெண்ணே! போஜனது முகமாகிய தாமரை மலரிலே நயனமாகிய குவளைமலர்கள் காணப்படுகின்றனவே,’ என்னுங் கருத்துள்ள,
மனோஹரீ தவமுகாம் போஜே
நேத்ரம் இந்தீவர த்வயம்.
என்பது.அது கண்டு பரத்தை மாது பொருளவாவின்வாய்ப்பட்டுச் சிந்திப்பாளாயினள்; ‘இவனை நாம் கொல்லோமாயின், நமக்கு இராச்சியஞ் சித்திக்காது. எப்படியும் இவனே இச்சுலோகம் செய்தானென்பது அரசனுக்குப் புலப்படும். புலப்படவே, அரசனும் பரிசுகொடுக்க உடன்படான். ஆதலால், இன்றிரவில் இவனைக் கொலைசெய்து, முற்றத்தில் புதைத்துவிட்டு, நாளையுதயத்திலே சுலோகத்தோடு அரசன் சமுகத்திலே புகுவோம்’ என இவ்வாறு சிந்தித்து முடிவுசெய்து கொண்டு, காளிதாசன் சயனித்தவுடன் வாளால் அவனைக்கூறிட்டு முற்றத்தில் புதைத்துவிட்டு, அடுத்த நாட்காலையில் சுலோகத்தோடு அரசன் சமுகஞ்சேர்ந்தாள். அதனை அரசன் கண்ட மாத்திரத்தில் ‘இஃது யாவர் செய்தது?’ என்று வினவ, அப்பாதகி, ‘தானே செய்தேன்,’ என்றாள். அதுகேட்ட அரசன், விம்முதமுற்று, ‘பாதகீ, கொன்றையா?’ என்று அதட்டி வினவ, பாதகி திகைத்தாள். அரசன் அவளைச் சிறைப்படுத்திவிட்டு, அவள் வீட்டுக்குச்சென்று பரிசோதிக்கையில், அவனுடைய உடலத்துண்டங்கள் அகப்பட்டன. அரசன் தான் பெற்றிருந்த ஒரு தெய்விக வரத்தினால் காளிதாசனுடைய தலையையெடுத்துக் கையில் ஏந்திக் கொண்டு, ‘நடந்ததைச் சொல்!’ என்ன, அதுவும் நிகழ்ந்தவாறு கூறியது. அப்பால் அரசன் துக்கசாகரத்தில் மூழ்கித்தேறி, அபக்கிரியைகளை முடிப்பித்தான். அவளையுங் கொல்வித்தான். ஈற்றில் அரணனும் தானும் கொலை செய்து கொண்டு இறந்தான்.
இவற்றைக் கேள்வியுற்ற வித்தியா குரோசம் என்னும் அரசகுமாரியும், வேசியுருக்கொண்டு காளிதாசனை இணைபிரியாத சுகித்திருந்தவளுமாகிய கற்பின் மிக்காள், அரசன் இறந்தவிடத்துக்கோடி, அவளையுங் காளிதாசனையுமெழுப்பிச் சிறிது காலம் உச்சீவித்து வாழ்ந்திருக்கச் செய்தாள் எனக் கன்ன பரம்பரையாகப் பலர் கூறுகின்றனர். இஃது அப்பிரமாணியம். வேறு சிலர் இன்னும் பலவாறு கூறுப.