விநோதரசமஞ்சரி/6.மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது
விநோத ரச மஞ்சரி
தொகுவித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்
தொகு6. மகா பண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது
பூமிதேவியின் முகதிலகம் போன்ற செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் ராஜதானியாகிய மதுரைமாநகரத்தில் எழுநூறு வருடத்திற்கு முன்பு அரசாண்ட பாண்டியகுலத்தரசன் ஒருவனுடைய சம்ஸ்தானத்தில் வித்துவஜன கோலாகலன்என்று எண்டிசையிலும் பிரசித்தமாகப் பெயர் பெற்ற சம்ஸ்கிருத வித்துவான் ஒருவனிருந்தான். அவன் தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, தர்மசாஸ்திரமென்கிற நான்கிலும் பூரண பாண்டித்தியமுளவன். மற்ற வித்துவஜனர் யாவரும் அவனைக் காணுமிடத்திற் கருடனைக் கண்ட பாம்பு போலவும், யமனைக் கண்ட உயிர் போலவும் நடுங்குவார்கள். அவன் அத்தகைய வித்தியா சாமர்த்தியமுடையவனாதலால், பாண்டியன் அவனைச் சன்மானித்துத் தன்னருகில் அதிக கௌரவமாக வைத்துச் சம்ரட்சணை செய்து வந்தான். அவ்வித்துவான் தனக்குண்டான வித்தியா கர்வத்தினாலும் 'கொண்டவன் பலமிருந்தாற் குப்பையேறிச் சண்டை செய்யலாம்' என்பதற்கிசைய, அரசன் தன்மேல் வைத்த தயையினாலும் ஒருவரையும் மதிக்கிறதேயில்லை. பச்சோந்தியைக் கண்டு பயந்து மயில் தன்கண்ணை அதனிடத்திற் கொண்டு கொடுப்பது போலப் பலதேசங்களிலும் இருக்கின்ற கவிஜனர்களெல்லாம் அவனுக்கு அஞ்சி வருஷாந்தரம் கப்பங்கொடுத்து வந்தார்கள். கையில் ஏடும் எழுத்தாணியும் எடுத்தவர்கள்இடத்திலெல்லாம் அவன் கப்பம் வாங்கி வருகையில், ஸ்ரீ வைஷ்ணவ சமயாசாரியர்களுக்குள் மகிமை தங்கிய யமுனைத்துறைவர் என்றும் யாமுனாரியர் என்றும் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் திருநாமமுடைய அவதார புருஷரொருவர், ஏறக்குறையப் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள சிறுபிள்ளையாய்ப் பாஷியாசாரியார் என்னும் உபாத்தியாயருடைய பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாட்காலையில் ஏழெட்டு நாழிகைக்கு அப்பள்ளிக்கூடத்தில் இப்பிள்ளையைக் காவலாக வைத்துவிட்டு, மற்றப்பிள்ளைகளும் உபாத்தியாயரும் போஜனத்திற்குப் போயிருந்தார்கள். அத்தருணத்தில் அந்த உபாத்தியாயர் நாலைந்து வருடத்து வரிகொடுக்கவில்லை என்று அதைக்கேட்டு வாங்கிவர வித்துவஜன கோலாகலன்அனுப்பிய தண்டற்காரன் வந்து, 'உபாத்தியாயர் எங்கே போனார்?' என்று கேட்க, காவலாயிருந்த யமுனைத்துறைவர், எங்கள் உபாத்தியாயரைத் தேடுகிற விதம் என்ன?' என்று கேட்டார். அச்சேவகன், 'வித்துவஜன கோலாகலர்' என்னும் எங்கள் வித்துவசிரோமணி உங்களுபாத்தியாயரிடத்தில் கப்பம் வாங்கிவரச் சொன்னார். அது நிமித்தம் அவரைத் தேடுகிறேன்,', யாமுனாரியர், 'வரி வாங்குவது ஏதுக்காக?' என்ன, அவன், எங்கள் வித்துவான் சகலபண்டிதர்களுக்கும் சிரேஷ்டராகையால், அவருக்கு ஏடுமெழுத்தாணியும் பிடிக்கிறவர்கள் எல்லாம் வரிகொடுக்கிறது வழக்கந்தான்' என்றான்.
அதைக்கேட்ட யமுனைத்துறைவர், 'இதென்ன வழக்கம்! நியாயவிநோதமாயிருக்கின்றதே! பிடித்தவருக்கெல்லாம் பெண்டுபோல, உலகாள்பவர்களுக்கும் வரிகொடுக்கிறது, இவனுக்கும் வரி கொடுக்கிறதா? நன்றாயிருக்கிறது!' என்று அதிசயித்து, 'வரி கொடுக்கிறதில்லை எனப் போய்ச்சொல்' என்றார். அச்சமயத்தில் உபாத்தியாயர் வந்து, அதை அறிந்து 'சிம்மசொப்பனங்கண்ட யானையைப் போலக் கைகால் விலவிலக்கக் 'குடிமுழுகிப் போயிற்றே! சுபாவத்திலேயே அவன் கொடியவன்; அப்படியிருக்க, இதைக்கேட்டால் அவன் சும்மா விடுவானோ? அந்த யமகண்டனை ஆர் வெல்லுகிறது!' என்று பயந்தார். யாமுனாசிரியர், 'தேவரீர் அதைப் பற்றிக் கண்கலக்கங்கொள்ள வேண்டுவதில்லை. வெந்நீரில் வீடு வேகுமா? இருப்புத்தூணைச் செல்லரிக்குமா? அப்படியே வருமானால், நீவிரொன்றும் சிந்தியாமல் அடியேனை ஏவினால், நான் போய் உமது கடாக்ஷத்தினால் ஜயிக்கிறேன்!' என்று விண்ணப்பம் செய்தார். இவர் எத்தனை விதத்திற் சொன்னாலும், அவைகளை உபாத்தியாயர், 'கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தும் கண்கட்டு வித்தை' என்பார் போல, நம்பவில்லை.
இப்படி வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் போய் இங்கே நிகழ்ந்தனவெல்லாம் சொல்ல, அவ்வித்துவான், 'கொட்டினால் தேளும் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியுமா?' என்று கோபித்துக்கொண்டு, அந்தச் செய்தியை அரசனுக்கறிவித்து, அவனுடைய அனுமதிப்படி வாதுக்கு வரச்சொன்னான். அதுகேட்டு, உபாத்தியாயர் மனங்கலங்கி, 'ஐயையோ! யாமுனாரியா, நீ என்தலைமேலே கல்லைப் போட்டாயே! இனி நான் எப்படித் தலை எடுப்பது?' என்று துக்கித்தார். யமுனைத் துறைவர், அவருக்கு நிர்ப்பயமாகும்படி தைரியஞ்சொல்லிச் சேவகனைப் பார்த்து, 'வாது செய்கிறதற்கு உங்கள் வித்துவானை இங்கே வரச்சொல். அல்லவென்று நம்மை அழைப்பிக்கிறதானால், மரியாதைப்படி நடந்துகொள்ளச் சொல்,' என்றார். உடனே சப்பரம் சாமரம் முதலிய பரிவட்டணைகளோடு பல்லக்குவர, அதன்மேலேறிச் சென்று மதுரையில் ராஜவீதியிற் பிரவேசிக்கும்போது, உப்பரிகைமேல் உலாவிக்கொண்டிருந்த பாண்டியராஜன், மிகவும் ஆச்சரியங்கொண்டு, கைகொட்டுச் சிரித்தான். அங்கிருந்த இராணியானவள், 'மகாபிரபு, நீர் நகைக்கின்ற காரணமென்ன?' என்றாள். மகாராஜன், 'பெண்ணே, இதோ பார் வீதியிற் பல்லக்கில் வருகிற இந்தக் குழந்தை நம் வித்துவஜன கோலாகலருடனே வாது செய்ய வருகிறதாம்,' என்றான். ராஜபத்தினி அக்குழந்தையின் தேஜஸை நன்றாய் உற்றுப் பார்த்து, அதிக மகிழ்ச்சி கூர்ந்து,'இவர் வாது செய்வதன்றி நம் வித்துவானையும் அவருக்கு மேலானவர்களையும் ஜயிப்பதும் அருமையல்ல,' என்றாள். அரசனுக்கு அந்தச்சொல், 'புண்ணிலே கோலிட்டது போல' வருத்தத்தை விளைக்க, அவன் 'போ போ! நீயென்ன பேதையாயிருக்கிறாய்! நம் வித்துவானுக்கு மேலானவர்களும் உண்டென்று சொல்வது, 'பெட்டைக்குதிரைக்கு இரட்டைக்கொம்பு முளைத்தது,' என்பது போலிருக்கிறது! இச்சிறு பிள்ளையும் அவரை வெல்லுமா? காலில்லாத முடவனுங் கடலைத் தாண்டுவானா? மண்பூனையும் எலியைப் பிடிக்குமா? இது சொப்பனந்தான்,' என்றான். ராஜமஹிஷி, 'வித்துவான் தோற்பது நிச்சயமே! இது இவர் முகக்குறியால் எனக்கு உள்ளங்கைப் பொருள்போல விளக்குகின்றது; சந்தேகமில்லை,' என்றாள். இவ்வாறு இருவரும் சம்பாஷிக்கையில் அரசன், 'நீ இந்தப் பிள்ளையை எவ்வளவு சிறப்பித்துச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்! 'விரல் உரலானால், உரல் எப்படியாக மாட்டாது!' நம் வித்துவானே ஜயிப்பார். இவர் ஆரம்பத்திலேயே தோற்றால் நீ என்ன செய்வாய்?' என இராணி, 'மெய்யாக இவர் தோற்றாரானால், நாம் உம் தாசிக்குத் தாதியாகி, அவளிட்ட வேலை செய்வேன்,' என்றாள். வேந்தன், 'பைத்தியக்காரி! 'மண் குதிரையை நம்பி ஆற்றிலிறங்குவார் போல' நீ யோசியாமற் பேசுகிறாய்! உன்சொற்படியே இவர் ஜயித்தால், நான் இவருக்கு எனது இராச்சியத்திற் பாதி பகிர்ந்து கொடுப்பேன்,' என்றான்.
பின்பு யமுனைத்துறைவர் அவ்வரசன் சமூகத்தில் வந்தார். அப்போது அங்கு வந்த வித்துவஜனகோலாகலன், அவர் வடிவைப் பார்த்து வயதைக் குறித்துக் குலுங்க நகைத்து, 'நெடியமகா மேருவுடனே அற்பமாகிய ஒரு திரணமானது எதிர்ப்பது போல, சுண்டு விரலத்தனை சிறு பையல் நம்முடனே வாது செய்ய வந்தானே!' என்று அலட்சியம் பண்ணி மிகவும் கர்வத்தோடே அவரை நோக்கி, 'ஓய், சிறுபிள்ளாய்! நீ ஹரிச்சுவடி வாசித்தாயா? உனக்கு எழுத்துக் கூட்டத் தெரியுமா? உன் பெயரைப் பிழையில்லாமலெழுதுவாயா? ஒரு பூனைக்குட்டியானது வேங்கைப்புலியை வெல்ல வருவது போலக் கவிச்சிங்கமாகிய நம்முடன் வாதுக்கு வந்தவன் நீதானா?' என்றான்.
யாமுனாரியர், 'இவன் ஆரம்ப சூரத்துவமாய்ப் பேசுகிறான்,' என்று புன்னகை புரிந்து, 'நீர் பெரியவராயும் நாம் சிறுபிள்ளையாயுமிருப்பதைப் பற்றி நம்மை அவமதிக்கிறீர். யானை எத்தனை பெரிது! அதைக் கண்டவுடனே உக்கிரங்கொண்டு விசையாய் எழும்பிப் பாய்ந்து அதன் மஸ்தகத்தைப் பிளக்கின்ற சிங்கக்குட்டி எத்தனை சிறிது! மலை பிரமாண்டமானதாயிருந்தும், அதை ஒரு விரலளவான சிற்றுளி சக்கை சக்கையாகப் பெயர்த்தெறியவில்லையா? அறுகம்புல் நுனியில் தங்கி நிற்கின்ற தினையளவாகிய பனித்துளி, பெரிய பனையளவையும் தனக்குள் அடக்கிக் காட்டவில்லையா? ஒரு பயறளவாகிய நெருப்புப் பொறியுமல்லவோ, ஆகாசமளாவிய வைக்கோற் போரைச் சுட்டெரிக்கின்றது! சிறிய மீன் சினையிலும் அதிநுட்பமாகிய வித்திலிருந்து வெகுதூர மட்டும் கிளைத்து நன்றாய்த் தழைத்து ஓங்கி மேலெழுந்து வளர்ந்து பூமியின்கீழ் இரண்டு மூன்று புருஷபாகம் வேர் வீழ்த்து அடர விழுதுவிட்டு மட்டற்ற யானை சேனைகளோடு அரசர்களுக்கு இருக்க நிழல் கொடுக்கின்ற ஆலவிருக்ஷம் உற்பத்தியாகின்றதே! பெருந்தாழி நிறையப் பூரிக்கப்பட்ட பாலைத் துளி மோர்ப்பிரையானது தயிராய்ப் பரிணமிக்கப் பண்ணுகின்றதே! உலகமெங்கும் வியாபிக்கின்ற சூரியனை ஒரு கைக்குடையுமல்லவோ மறைக்கின்றது! இருபத்தொரு நிலைக் கோபுரம் போன்ற உயர்ந்த தேரை நடத்துவது இறையத்தனை அச்சாணியல்லவா? அன்றியும், அங்குஷ்ட பிரமாண தேகத்தையுடைய அகஸ்திய முனிவர், அண்டத்தை முட்டிய விந்திய பர்வதத்தை அடக்கி, மகாசமுத்திரத்தையும் உட்கொள்ளவில்லையா? இவைகளை எல்லாம் ஆலோசியாமல், இளையரென்றும் முதியரென்றும் விவகரித்துக்கொண்டு வீண் காலம் போக்குவானேன்? எடுத்த காரியத்தை நடத்தத் துணிவதே யுக்தம்,' என்றார். வித்துவான் அப்பொழுதும் இறுமாப்படங்காமல், அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, முட்டைப் பணியாரம் போலக் குதித்தெழும்பித் தன் அறிவின்மையால் ஆழமறியாமல், 'இவனுக்கும் சாஸ்திரத்திற்கும் எவ்வளவு தூரம்! 'கிணற்றுத்தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியுமா?' நாம் இது வியாஜமாக வேறெதையாவது பேசி அரைக் கணத்தில் விரட்டித் துரத்தி விடலாம்!' என்று அவருடனே தர்க்கம் முதலிய சாஸ்திரவிஷயத்தைப் பற்றிச் சிலநேரம் சம்வாதித்து, அதனால் அசைக்கக்கூடாமை கண்டு அவரை நோக்கி, 'சாஸ்திர வாதம் செய்யத்தொடங்கினால், வெகுநாட் செல்லும்; நீரும் சிறுபிள்ளை; 'குருவியின் தலைமேலே பனங்காயை வைப்பது போல' உமக்கு அதிக பிரயாசத்தைத் தர நமக்குச் சம்மதியில்லை; ஆகையால், அது நிற்க; 'மற்றெந்த விஷயத்தையாவது நீரே பேசும்; பார்ப்போம்! என்று கபடமாகச் சொன்னான்.
யமுனைத்துறைவர், 'ஏது! இவன் நம்மிடத்திற் பரிவுளவன் போலப் பேசுகிறானே! இது உண்மையா? 'ஆடு நனைகிறதென்று கோநாய் குந்தியழுமா?' இது, ஜாலமேயல்லாமல் வேறன்று' என்று நினைத்துக்கொண்டு, அவனை, 'நீர் பார்க்கிறதென்பதென்ன? உமது அனுமதிப்படியே செய்வோம்; அதிகமாய்ப் பேசவேண்டுவதில்லை. நாம் 'ஆம்' என்கிற மூன்று கேள்வியை மாத்திரம், 'அல்ல' என்று நீர் மறுப்பீரானால், நம்மை ஜயித்ததாக ஒப்புக்கொள்ளுகிறோம், உமக்குச் சம்மதி தானா?' என்றார். அதற்கு அவனும் அரசனும் 'சரிதான்' என்று சம்மதித்து, உடன்படிக்கை செய்தார்கள்.
★சிறுகுழந்தையாகிய...
தொகு- முதற்கேள்வி
- சிறு குழந்தையாகிய யாமுனாரியர் அவ்வித்துவானையே குறித்து, 'ஐயா, உம் தாய் புத்திரவதி என்கிறோம். நீர் உம்முடைய வாக்குவல்லமையால் அவள் புத்திரவதி அல்லளென்று மறுத்துவிடும், பார்ப்போம்!' என்று கேட்டார். அது கேட்டு வித்துவான் நெ
டுநேரமாகப் பலவிதத்திலும் ஆராய்ந்து, மறுக்கக் கூடாமையால், 'என்னைப் பெற்ற தாய் மலடிதான்!' என்று வீண் குதர்க்கம் செய்வேனானால், கேட்பவர் பார்ப்பவர் அனைவரும், 'என்னகாணும்! நீ அவள் கர்ப்பத்திலிருந்து கொழுக்கட்டை போலப் பிறந்து குட்டிச் சுவர் போல நட்ட நடுவிலிருந்துகொண்டு வாய் கூசாமல் அவளை மலடியென்று பிரத்தியட்ச விரோதமாக விதண்டாவாதம் செய்கிறையே? என்பார்களே! அதற்கு என்ன உத்தரம் சொல்லுகிறது? இதேது! 'முதற்கோணல் முற்றுங் கோணலாய்' முடிவது போலக் காண்கிறதே! இப்படி இறங்குந் துறையிலேயே நீச்சலாயிருந்தால், எதிர்கரை ஏறுவதெப்படி?' என்று மயங்கினான்.
- இரண்டாவது கேள்வி
- யமுனைத்துறைவர் வித்துவானைப் பார்த்துப் பாண்டியனைக் குறித்து, 'இந்த அரசர் தர்மவான் என்கிறோம், எதோ! நீர் மறுக்கக் கூடுமானால், மறுக்கலாம்,' என்றார். வித்துஜனகோலாகலன் தன் கருத்தினாற் கூடியவரையில் எட்டிப்பார்த்தும் எட்டக்கூடாமற் கடினமாயிருந்ததனால், அவன், 'ராஜா தர்மவானல்லன்,' என்போமானால், அரசனே நம்மைப் பகைத்து, 'அடா நன்றிகெட்ட பாதகா, என்னுடைய சொத்தை உன் இஷ்டப்படி கைகொண்ட மட்டும் கொள்ளைகொண்டு, ஆயுட்காலமெல்லாம் அனுபவித்து, இப்பொழுது என்னைப் பாவியென்று சொல்லி எனக்கே துரோகம் செய்கிறையா!' என்று உடைவாளை உருவி ஒரே வீச்சாக வீசிவிடுவானே! என்ன செய்வது!' என்று தயங்கினான்.
- மூன்றாவது கேள்வி
- யமுனைத்துறைவர், 'இந்த ராஜபத்தினி பதிவிரதை' என்றார். இது வித்துவான் செவியில் நுழைந்தவுடனே அடிவயிற்றில் இடிவிழுந்தது போல அவனுக்கு யாதொன்றும் தோன்றாமையால், அவன், 'இவரை நீறு பூத்த நெருப்பென்று நினையாமல் எளிதாகச் சிறுபையலென்று அவமதித்தோமே; நமக்கென்ன! கிரகசாரந்தான் போதாதோ! இத்தனை காலமாய் மகா வித்துவான்கள் அனைவரையும் அவர்கள் தலைக்குப் போட்டால் நாம் காலுக்கும், நாம் காலுக்குப் போட்டால் தலைக்கும் போட்டு ரசாபாசப்படுத்திப் பட்டி மிரட்டு மிரட்டிச் சயித்து வந்தோமே! இப்பொழுது ஒரு குழந்தையின் கேள்விக்கு உத்தரம் சொல்ல வகை தெரியாமல், கற்றறி மூடனாய் விட்டோமே! இனி நமக்கென்ன பெருமை! பண்டிதனென்னும் பட்டமும் பறந்துபோம்! முதற்கேள்வி ஒன்றுக்காவது உத்தரம் சொன்னோமா? இல்லையே! ஆயினும் அது ஒருவேளை 'ஆனைக்கும் அடிசறுக்கும்' என்பதாகத் தவறியதென்று நினைக்கவுங்கூடும். ஆதலாற் பெரிதன்று. இரண்டாவதற்காவது சொல்லவேண்டுமே! அதுவும் ஈடேறாமற் போயிற்றே! போனாலும் போகட்டும்! மூன்றாவதற்காவது சொல்லலாமென்றால், ராஜபத்தினி வியபிசாரி என்றல்லவோ சொல்ல வேண்டும்? எவ்விதத்தில் நாவெழுந்து சொல்லுகிறது! சொன்னாற் பக்கத்தார் பல்லை உதிர்க்கார்களா! மேல் அரசனைக் குறித்துப் பிறந்த இரண்டாங் கேள்வியிலும் இம்மூன்றாங் கேள்வியும் பழியும், பாவமும், விரோதமும் விளைக்கத் தக்கதாய் இருக்கின்றதே! இதைக்குறித்து உத்தரஞ்சொல்ல வாயைத் திறக்கவுங்கூடுமோ! இந்த விஷயம் கையுமெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், வெளியிலே சொல்லத்தக்கதல்லவே! அரசன் மனைவி நிர்தோஷியியாயிருக்க அவளைத் தோஷமுடையவள் என்று சும்மா அவள் தலையில் வியபிசாரிப்பட்டம் கட்டலாமா! அது பெண்பாவமல்லவா! 'மண்ணின்மேல் நின்று பெண்ணோரம் சொல்வது' எப்படி? ஒருவர் தலையில் மாணிக்கமிருக்கிறதென்று அவர் தலையை வெட்டலாமா! நிமித்தமாகக் கங்கை கொதித்ததென்றால், நம்புதற்கு இடமுண்டோ! நாம், ஓட மருந்துண்டு உறங்கி விழுந்தாற் போல ஆனோமே! 'தன்வினை தன்னைச்சுடும்,' என்பதாக நம்முடைய மதமே நம்மை அழித்தது! நமக்கு அடக்கமென்பது சற்றுமில்லாமற் கல்வியில் நாமே பெரியமென்று அகங்கரித்துப் பிறரைப் பொருள்செய்யாமல், அரசனது சலுகையிலே அவர்களை அவமானப் படுத்திவந்த அந்தக் கொடுமையல்லவோ இப்படி விளைந்து நமது வாயைக் கட்டியது!' என்று எண்ணாததும் எண்ணி ஏங்கியிருந்தான். அதுகண்டு ராஜபத்தினி மனமுருகி, 'நான் செய்த பிரதிக்கினையை முடித்து, என் மூக்கை முன்னுக்குக் கொண்டு வந்தாரே!' என்று பெருமகிழ்ச்சி கூர்ந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, அக்குழந்தையாகிய யமுனைத் துறைவரைத் தன்னிரு கையாலும் இறுகத் தழுவிக்கொண்டு, 'இவர் என்னை ஆள வந்தாரோ! என்று வியந்தாள். அன்றுமுதல் அவருக்கு ஆளவந்தார் என்ற திருநாமம் வழங்கத்தலைப்பட்டது. அத்தருணத்தில் ஆனை போல இருந்த வித்துவஜன கோலாகலன் பூனை போல ஒடுங்கிச் சிவுக்கென்றெழுந்து, 'ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவதுபோல' வித்துவஜன கோலாகலன் என்னும் இத்தனை பெரியபெயர் எனக்கேன்? 'அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு கூடவா!' என்பது போல, 'என் திறமைக்கு விருதுகளும் வேண்டுமா?' என்று சலிப்புற்றுத் தன் விருதுகளையெல்லாம் வாங்கி அவருக்கு முன்பாக வைத்து, அவரை வணங்கி நின்றான்.
அரசன் இவைகளையெல்லாம் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டுப் பிரமிப்படைந்து, ஆளவந்தாரை விழி களிக்க நோக்கி, 'சுவாமி, தேவரீர் கேட்ட மூன்று கேள்விகளுள் ஒன்றையாவது நம் வித்துவான் மறுக்கச் சத்தியில்லாமல் தோற்றது வாஸ்தவமே! அம்மூன்றுள் ஒன்றேனும் இரண்டேனும் தேவரீரால் மறுக்கக் கூடுமோ?' என, அவர் 'மூன்றும் மறுக்கக்கூடும்,' என்று உத்தரிக்கின்றார்.
முதலாவது, 'உமது தாய் புத்திரவதி' என்றதற்கு மறுப்பு: 'வாழையானது ஒரே குலை ஈனுவது போல, இந்த வித்துவானுடைய தாய் இவரொருவரை மாத்திரம் பெற்றதனால், 'ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல; ஒரு மரமும் தோப்பல்ல' என்ற பழமொழிப்படியே அவள் வாழை மலடியாதலால், புத்திரவதி யல்லள்,' என்றார்.
இரண்டாவது, 'ராஜா தர்மவான்,' என்றதற்கு மறுப்பு: 'ராஜா ராஷ்டிர கிருதம் பாபம்' என்ற நீதி வாக்கியப்படியே, 'தேசத்தார் செய்த பாவம் அரசனை அடையும்,' என்பதனால், ராஜா தர்மவானல்லன்,' என்றார்.
மூன்றாவது, 'ராஜபத்தினி பதிவிரதை,' என்றதற்கு மறுப்பு:
'கரு உற்பத்தியாற் சந்திரனுக்கும், விளையாட்டாற் கந்தருவனுக்கும், தீபனவிர்த்தியால் அக்கினிக்கும் முன்பே சுவாதந்தரியப்பட்டுப் பின்பு மணஞ்செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற காரணத்தால், நான்கு பதிகளையுடையவளாதலாலும்,
- அன்றியுங் கனலி சான்றா யல்லது வதுவை யாற்றற்
- தோன்றுமோ? வருண னொவ்வா துதகமோ டளிக்குந் தூய
- மன்றலெவ் வாறுமுற்றும்! வானவ ரருளில் லாமல்
- துன்றுநீர்ப் புவியில் யார்க்குஞ் சூழ்வினை முடிக்க லாமோ?'
- என்றவாறே, மணஞ்செய்யுங் காலத்தில் அக்கினி, வருணன் முதலிய பஞ்ச தேவர்களுக்கும் அவள் சமர்ப்பிக்கப் படுதலாலும் ஸ்திரீக்குப் பதிவிரதா பங்கம் வருகின்றது.' என்றார். இவ்வண்ணமாக ஆளவந்தார் வித்துவஜன கோலாகலனை முன்பு கேட்ட மூன்று கேள்விகளையும் பின்பு தாமே சாஸ்திர சம்மதமாகவும், உலகத்தாருக்கு அங்கீகாரமாகவும் மறுத்துரைக்கக் கேட்டு, பாண்டிய ராஜனானவன், சிறு பாலராகிய இவர் இத்தனை அருமையும் பெருமையுமாகிய கேள்வி உத்தரங்களையெல்லாம் எப்படி உணர்ந்துரைத்தார்! தாமுரைத்தவைகளைத் தாமே மறுக்கவும், மறுத்தவைகளை ஸ்தாபிக்கவும் தக்க பரமசத்தி இவருக்கு எங்கிருந்து உற்பத்தியாயிற்று! மேலும், நம் வித்துவான் தாய்க்கு ஏகபுத்திரரென்பது எவ்விதத்தில் தெரிய வந்தது? அது ஜோதிஷத்தினால் அறியலாமென்றால், அவர் ஜாதகத்தையும் இவர் பார்க்கவில்லையே! ஆதலால், அசாத்தியம்! அசாத்தியம்!, என்று பலமுறையும் நினைத்து, ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி, 'பூர்வம் போஜராஜ சம்ஸ்தானத்திலிருந்து காளி தாசன், தண்டி, பவபூதி முதலாகிய சம்ஸ்கிருத வித்துவான்களும் இந்த மதுரையில் தமிழ்ப்புலமை செலுத்தியதெய்விகம் வாய்ந்த சங்கப்புலவர்களும் இவருக்கு ஒப்பல்லர்! இவர் சரஸ்வதி விக்கிரகமாயும், அவதார புருஷராயும் இருக்கின்றார்!' என்று பரமானந்த மடைந்து, இரகசியத்தில் தன் பத்தினிக்கெதிரே தான் நிர்ணயித்தபடி தன் இராச்சியத்திற் பாதி கொடுத்தான்.
ஸ்ரீ ஆளவந்தார் அந்த இராச்சியத்தை வகித்து நெடுநாள் அரசாண்டு வருகையில், இவருக்கு முன்னடியார் பின்னடியார் யாவருக்கும் பரமாசாரியாகிய ஸ்ரீமந்நாத முனிகள் நியமனப்படி, ஸ்ரீராமமிசிரர் என்னும் மணக்கால்நம்பி வந்து, ஆளவந்தாருக்கு மிக விருப்பமாயும் ஞானசாதனமாயும் இருக்கிற தூதுளங்கீரை எவ்விடத்தில் இருந்தாலும் தேடிக் கொய்து கொடுத்துக்கொண்டிருந்தார். அதை மடைப்பள்ளியில் தளிகை செய்பவர்கள் வாங்கித் துவையலரைத்துப் பரிமாற, ஆளவந்தார் இஷ்டமாய்ப் புசித்து வந்தார். இப்படி ஐந்தாறு மாதம் நடந்தும், அவர் ஏதென்று கேளாமையால், பிறகு ஒரு நாள் அந்த மணக்கால் நம்பி அதைக்கொண்டு வந்து கொடாதிருந்தார். அன்று ஆளவந்தார், 'தூதுளங்கீரைத் துவையல் ஏன் பரிமாறவில்லை?' என்றார். 'இன்றைக்கு அந்த வைஷ்ணவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை,' என்று பாகஞ்செய்வோர் சொல்ல, 'ஓ!ஓ! இவர் ஆரோ? ஏது நிமித்தமோ! தெரியவில்லை. அபசாரம் வந்ததே!' என்று அநுதாபப்பட்டு, 'நாளைக்கு வந்தால் நம்மைக்கண்டு பேசிப்போகச் சொல்லுங்கள்,' என்று நியமித்தார். மற்றைநாள், அவர், 'நாம் நேற்றுக் கொண்டுபோய்க் கொடாது நிறுத்தினதனால் யாமுனாரியருக்குக் கேள்வியாயிருக்கலாம். இன்றைக்கை நம்மனோரதம் முடியும்,' என்று வழக்கப்படி தூதுளங்கீரை கொண்டுவந்த பொழுது ஆளவந்தார் அவரைக் கண்டு, 'எங்கிருந்து வந்தீர்? உமது திருநாமம் யாது? என்ன காரியார்த்தமாய் இங்ஙனம் நடத்தி வருகிறீர்?' என்ன, அவர், 'யாம் மணக்கால்என்னும் ஊரில் வசிக்கும் காரணத்தால் எனக்கு மணக்கால் நம்பி என்பது பெயர். நம் பிதா மகனாராகிய ஸ்ரீமந்நாத முனிகள் தேகவியோகமாகும் காலத்தில், அவரது ஆர்ச்சிதமாகிய திரவிய நிக்ஷேபத்தை எமது அடக்கலத்தில் வைத்து, 'இதை நம்முடைய பெயரனாரிடத்தில் நீர் ஒப்புவிக்க வேண்டும்,' என்று நியமித்துப் போனார். அதை உம்மிடத்தில் சேர்ப்பிக்கும் பொருட்டு நம்பெருமாள் கோயிலிலிருந்து வந்தோம்,' என்றா.
ஸ்ரீஆளவந்தார், அந்த, நிக்ஷேப தனம் எப்படிப்பட்டது? எவ்வகையாற் காண்பது? என்ன உபாயத்தாற் கைவசமாம்? எவ்விடத்திலுள்ளது? வெளியிட வேண்டும்,' என்ன, மணக்கால் நம்பி அவரை நோக்கி, அரசன் முதலானவர்களிடத்திலுள்ள நிதி போல 'வெள்ளம் முதலானவைகளால் அதற்கு அபாய மில்லாமையால், அது அழியா நிதி; நிரஞ்சன திருஷ்டியாலன்றி, அஞ்சன திருஷ்டியாற் காணப்படாதது; மிருகபலி நரகபலி இட வேண்டுவதில்லை; வெறும் பச்சிலையைக் கிள்ளியிட்டு எளிதில் கைப்பற்றிக் கொள்ளப்படும். இரண்டாற்றுக்கு நடுவே, ஏழு சுற்றுக் கோட்டைக்குள் பிரணவ பீஜ யந்திரத்திலிருக்கிறது. அதை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு நிற்கிறது. பன்னிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை அவ்விடத்திற்குத் தென்சமுத்திர மத்தியிலிருந்து ஓர் இராட்சசன் வந்து, அதைப் பார்வையிட்டுப் போவதுண்டு. இத்தன்மையாய் இருக்கின்ற நுமது பிதுரார்ச்சிதமாகிய க்ஷேம திரவியத்தை யாம் எத்தனைக் காலமாய்ப் பாதுகாத்து வருவோம்? இனி, நீர் கிருபை செய்து வந்து கைப்பற்றிக் கொள்ள வேண்டும்,' என்றார்.
திரவியமென்ற மாத்திரத்தில், ஆளவந்தார் அரசாள்பவராகையாலும், 'பாட்டனுடைய ஸ்திதியாகிய பைதிருக தனத்துக்குப் பெயரன் உரியவன்,' என்பதனாலும், அதன்மேல் அபேக்ஷை கொண்டு, 'எதோ! அதைக் காண்பியும், வருகிறோம்!' என்று தம் பரிசனங்களுடனே பிரயாணப்பட்டார். மணக்கால் நம்பி, 'இந்தக் கூட்டத்தை நிராகரித்து நீர் மாத்திரம் வந்தாற் காண்பிக்கிறோம்' என்ன, அப்படியே அவர் தனித்து வர, அழைத்துப்போய் அத்திருவரங்கம் பெரியகோயிலிலே சயன திருக்கோலமாயெழுந்தருளிய எம்பெருமானைக் காட்டி, 'உங்கள் பாட்டனார் நம்முடைய அடைக்கலமாக வைத்து உமது வசம் ஒப்புக்கொடுக்கும்படி நியமித்த பரமதனத்தைப் பாரும்!' என்றார்.
ஆளவந்தார், திருவரங்கநாதனைச் சேவித்துப் பரவசராய் 'இந்த மகானுபாவருடைய குணப்பிரபாவத்தை என்னவென்று வர்ணித்து ஸ்துதி செய்கிறது!' என்பதாய், அத்தியவசாயத்தோடே மணக்கால்நம்பி தம் பக்கல் எழுந்தருளியது முதல் அவர் தமக்கு அரங்கநாதனைக் காட்டிக் கொடுத்ததுவரையில் நிகழ்ந்தவை யாவையும் ஒவ்வொன்றாக நினைவுகூர்கின்றார்:
'பங்கனிருக்கு மிடத்தைத் தேடிக் கங்கை வந்தது' போல, இந்த ஸ்ரீவைஷ்ணவ சீலர் ஈஷணத்திரயமாகிய சேற்றில் அழுந்திக்கிடந்த அசேதனனென்னும் அடியேனைப் பொருள் செய்து தாமே வந்து சந்தித்து, கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போலத் தூதுளங்கீரையைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்து, எனக்குத் தத்துவஞானம் உதயமாகிப் பரிபாகம் வருமளவும் காத்திருந்து, 'மண் தின்னும் பிள்ளைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச் செல்வத்தாய் அழைப்பது' போல, 'உங்கள் பிதிரார்ச்சிதமாகிய பணப்புதையல் இருக்கின்றது, வந்து கைக்கொள்ளும்,'என்றார். அதன்கருத்து நாயேனுக்கு அப்பொழுது, சாதாரணமாகிய லோக திரவியமென்றே தோன்றிற்று. இப்பொழுதோ, சகல புவன கர்த்தாவாகிய சாக்ஷாது சுவாமியாய் விளங்குகின்றது!
பின்பு, பரமகாருணியராகிய இவரை நோக்கி, 'அந்தத் திரவியம் பொன், வெள்ளி, இரத்தினத்தோடு சம்பந்தப்பட்டதோ அல்லது நகை நாணயங்களாயிருப்பதோ?' என்ன, 'மற்ற நிதிபோல கவரப்படுவதன்று; அழியாநிதி' என்றார். அதனால், அவ்வீசுரன் நிருபாதிகனும், நித்தியனுமாமென்று பொருள்படுகின்றது. அதன்பின்பு நான் மண்ணிற் புதைத்த திரவியம் கரைந்து போகுமென்பதனால், 'அதை எவ்விதத்தாற் காண்பது?' என்ன, 'நிரஞ்சன திர்ஷ்டியாலன்றி அஞ்சன திர்ஷ்டியாற் காணப் படாதது,' என்றதனாற் சர்வாந்தரியாமி யானவன் அஞ்ஞானிகளுக்கன்றி மெய்ஞ்ஞானிகளுக்கே பிரசன்னமாவன் என்பது விளங்காநின்றது. பிறகு, 'புதைபொருளைப் பூதங்காக்கும்,' என்பதனால், 'அது எனக்கு என்ன உபாயத்தாற் கிடைக்கும்?' என்ன, 'பலியிட வேண்டுவதில்லை; பச்சிலையைக் கிள்ளியிட்டுப் பற்றிக் கொள்ளலாம்' என்றார். அக்குறிப்பு, ' அந்தப் பரமாத்துமா திருத்துழாயால் அர்ச்சித்தவர்களுக்குச் சுவாதீனப்படாமற் போகான்,' என்பது ஆயிற்று.
மற்றும், 'காடோ, மலையோ கானாறோ அது இருக்குமிடம்!' என்றெண்ணி நான், 'எவ்விடத்திலுள்ளது?' என்ன, 'இரண்டாற்றுக்கு நடுவே' என்றார். அதனால், அது தென்காவிரி வடகாவிரியாகிய உபயகாவிரிக்கு மத்தியமென்பதும், ஏழுசுற்றுக் கோட்டை என்றதனால், அது சப்த பிரகாரங்களாற் சூழப்பட்ட அரங்கக் கோயிலென்பதும்; பிரணவ பீஜயந்திரம்' என்றதனால், அது ஓங்கார விமானம் என்பதும், ஓர் இராட்சசன் வந்து பார்வையிட்டுப் போகிறான்'என்பதனால், அங்கே விபீஷண ஆழ்வான், துவாதச வருஷத்திற்கு ஒருகால் வந்து சேவித்துப் போகிறானென்பதும், இந்தத் தனத்தை உங்கள் பிதாமகனார் உமக்கு ஒப்புக்கொடுக்கச் சொன்னார்,' என்றதனால், அது சுவாமி கைங்கரியத்தை உள்ளிட்ட பிரபத்தி நிஷ்டையைக் கைக்கொள்ளும்படி ஸ்ரீமந்நாத முனிகளால் நியமிக்கப்பட்டதென்பதும் குறிப்பித்தவைகளாயிருக்கின்றன,' என்று நிச்சயித்துணர்ந்து, இவர் செய்த பரமோபகாரம் ஆர் செய்வார்கள்!' என்றும், 'யாதொரு சாதனமுமில்லாமல் தாபத்திரயாக்கினியால் தகிக்கப்பட்டுக் கேவலம் அசத்தனாயிருக்கின்ற எளியேற்கு 'முடவனுக்குக் கொம்புத்தேன் கிடைத்தது' போலப் பராமார்த்தம் சித்தித்ததே!' என்றும்,--
இது அனேக கோடி காலம் 'அகோர தபசு, அஷ்டாங்க யோகம் முதலானவைகளைச் செய்தர்களுக்குத்தான் வாய்க்குமோ?' என்றும், 'இதற்கு மேலான வாழ்வு, அல்லது இகபரசாதனம் வேறேன்ன இருக்கின்றன?' என்றும், 'தேடி வந்த சீதேவியை வேண்டாவென்று விலக்கி விடுவது போல, இதைக் கைவிட்டு எத்தனை வருஷகாலம் அரசாட்சி பண்ணினாலும் சஞ்சித, ஆகாமிய, பிராரத்தி கர்மவசத்தனாகி உழல்வதேயல்லாமல், நித்திய பாக்கியமாகிய மோக்ஷத்திற்கு அருகனாகக்கூடுமோ? கூடாது. ஆதலால், இதுதான் ஆத்துமார்த்தம்' என்று தமக்குள் உறுதியாகக்கொண்டு இராச்சியத்தை வாந்தி அசனம் போல அருவருத்துக் கைவிட்டு, கடல் நடுவில் அமிழ்கின்றவன் அங்கொரு தெப்பத்தைக் கண்டுபிடித்துக் கரையேறுவது போல, பகவத் கடாக்ஷத்தால் ஆசாரியராயெழுந்தருளிய மணக்கால் நம்பி திருவடிகளை ஆசிரயித்து, பஞ்சசம்ஸ்கார சம்பன்னராய், பிரபத்தி நிஷ்டையை அவர் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீஆளவந்தார் வாழ்ந்திருந்தார்.