விநோதரசமஞ்சரி/7.காலபேத வியல்பு
விநோத ரச மஞ்சரி
தொகுவித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்
தொகு(இது சுபட்ச விபட்ச சம்வாதமாகச் செய்யப்பட்டது)
சுபட்சன்: ஓய் விபட்சரே, வாரும். உம்மைக்கண்டு வெகு நாளாயிற்று! சுகமாயிருக்கிறீரா?
விபட்சன்: சுபட்சரே, இந்தப் பொல்லாத படுபாவி மகன் காலத்திற் சுகம் எப்படியுண்டாகும்?
சுபட்சன்: ஓ! ஓ! ‘பிள்ளையாரைப் பிடித சனி அரசமரத்தையுங் கூடப்பிடித்தது,’ என்பது போல, உமது முயற்சியின்மையைக் காலத்தின் மேலேற்றி அதற்குத் தோஷம் கற்பிக்கின்றீரோ! இது ‘கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான்றியான்,’ என்பதாயிருக்கின்றதே! காலமென்ன செய்யும்?
விபட்சன்: கல்லும் தேங்காயுஞ் சந்தித்து போலப் பேசுகிறீரோ? சகலத்திற்கும் காலமே மூலம், அது முன்போல இல்லை; வரவரப் பேதிக்கின்றது. இதை நீர் ‘கத்தரிக்காய் சொத்தையென்றால், அரிவாள் மனைக்குற்றம்,’ என்பார் போல, முயற்சியின்மை என்கிறீர். சுபட்சன்: புத்திமானாயிருந்தும் யோசியாமல், ‘காலமானது பேதிக்கிறது, என்கிறீரே! இது, ‘மலடி மகப்பெற்றாள்,’ என்பது போலவும், எக்காலத்திலும் அசையாதிருக்கின்ற காரணதால் அசலமென்று பெயர் பெற்ற மலை அசைகின்றதென்பது போலவும் இருக்கின்றதே! என்ன நியாயத்தைக் கொண்டு அப்படிச் சொல்கிறீர்?
விபட்சன்: ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?’ அது கணம், விநாடி, நாழிகை, முகூர்த்தம், ஜாமம், பகல், இரவு, நாள், வாரம், பக்ஷம், மாதம், இருது, அயனம், வருஷம், வியாழவட்டம், யுகம், கற்பம் முதலானவைகளாய்ப் பேதித்து நிகழ்வதைப்பற்றிச் சொல்லவேண்டியிருக்கின்றது.
சுபட்சன்: கணம் முதலாகிய பகுப்பாய் நிகழ்வது சகஜமே; அப்பகுப்பும் தொன்றுதொட்டு அவ்வாறு ஒரு தன்மையாய் நிகழ்வதன்றிச் சிலமுறை குறைந்தும் அதிகரித்தும் ஒன்று மற்றொன்றாக மாறியும் நிகழ்வதன்றே? அங்ஙனமாக அது பேதிக்கிறதென்பது ‘மூக்கு மயிர் பிடுங்கி ஆள் பாரம் குறைந்தது,’ என்பது போல இருக்கின்றதே!
விபட்சன்: ஒருவித்து முளைத்துக் கிளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்து நசிப்பது ஏககாலத்திலேயா? அதற்குரிய பருவம் வாய்த்தாலல்லது அப்படியாகாதே! மேலும், அரும்பு, பூ, பிஞ்சு, காய், பழம் முதலானவைகளில் ஒன்றன் குணம் மற்றொன்றுக்கில்லையே! இவ்விகற்பமெல்லாம் காலத்தினாலேதானே அவைகளுக்குண்டாகின்றன? இவ்வாறு சகலமும் ‘சர்வசிய காரணங் கால,’ என்கிற காலப் பிரமவாதப்படி வெவ்வேறாகிய காலமே காரணமாகப் படிப்படியாய் உற்பத்தி விர்த்தி நிவர்த்தியாகின்றதனால், காலம் பேதிக்கின்றதென்பதற்கு ஆடங்கமென்ன?
- சுபட்சன்
- ‘பல உமி தின்றால் ஓரவிழ் தட்டாதா?’ என்று நினைத்துக்கொண்டு, இவ்விதத்தாற் காலம் பேதிக்கிறதென்பது, ‘ஆகாயம் விழுந்துவிட்டது,’ என்பது போல இருக்கிறது. பொதுவாய் ஆராயுமிடத்திற் சகல புவன சராசரங்களும் தோன்றி, வளர்ந்து, அழிவது அவற்றின் சுபாவ தருமமேயன்றி வேறல்ல; என்றாலும், பனம்பழம் முதிர்ந்து தன்னியல்பாய் உதிர்ந்து விழுஞ்சமயத்திற் காக்கை தன் சுபாவப்படி அதன்மேலேற, உடனே அப்பழம் விழுந்தது கண்டோர், ‘காக்கைதான் அதனைத் தள்ளியது,’ என்று சொல்கிற காகதாலிய நியாயமாக அவையெல்லாம் காலத்தோடு ஒத்து நிகழ்வதனாற் காலக்கிரமத்தினாலேயே அப்படியாகின்றன என்று உலகத்தாரால் விவரிக்கப்படுகின்றன.
- விபட்சன்
- நீர் காகதாலிய நியாயம் என்றல்லவோ சொல்லுகிறீர்? வையாகரணிகள் பெரும்பாலும் காலப்பெயர் அதனோடு சம்பந்தப்பட்டு நிகழும் பொருள் முதலியவற்றிற்கு ஆகுபெயராகி வழங்குகின்றதென்பதனால், அவ்வாறே அப்பொருள் முதலியவை பேதிப்பதைக் காலம் பேதிக்கின்றதென்றால் விரோதமென்ன?
- சுபட்சன்
- ‘சங்கிலே வார்த்தால் தீர்த்தமும், செம்பிலே வார்த்தால் தண்ணீருமா?’ ஒருவிதத்தில் இரண்டும் ஒன்றுதானே? இது ‘நரகடு காசிகி போயி நீள்ளு, நாலுகு பாலு சேசிநாடு கதா,’ என்பதாயிருக்கின்றது. இருந்தாலும், இருக்கட்டும், பொருள் முதலிய பேதிப்பது உண்மையே. அவற்றைக் காலத்தின் மேலேற்றி அது பேதிக்கின்றதென்று சொல்வதினும், காலத்திற்குக் காலம் அப்பொருள் முதலியவை பேதிக்கின்றன என்பதற்கு விரோதமொன்றுமில்லை. அதை வேண்டுமானால், ஊரெங்குமறியப் பறையறைந்து கொண்டு பேசும். அப்பொழுதும், ‘உற்றது சொன்னால்தான் அற்றது பொருந்தும்’.
- விபட்சன்
- இது சரிதான். இப்படியே செய்வோம். முற்காலத்தில் வற்றாச் சமுத்திரம் போலக் குறைவற்றிருந்த கல்வி செல்வம் கைத்தொழில் முதலானவைகள் கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரன் போல வரவரக் குறைந்து வருவதனால், அவை இன்னும் சிறிது காலத்திற்குள்ளே தேரை வால் போலச் சுத்த சூனியமாய்விடுமென்றல்லவோ நினைக்க வேண்டியிருக்கின்றது?
- சுபட்சன்
- என்ன சொன்னீர்! முற்காலத்தில் வற்றாத சமுத்திரம் போலக் குறைவற்றிருந்த கல்வி செல்வமுதலானவைகள் வரவரக் குறைகின்றனவென்றல்லவா? இது ‘ஓடிப்போன முயல் பெரிய முயல்,’ என்பதாயிருக்கின்றதே! இப்படிக் கலவைக்கீரை பறிப்பது போலக் கல்வி செல்வ முதலிய எல்லாவற்றையும் கலந்தெடுத்துப் பேசுவது கழச்சிக்காய் மயக்கத்திற்கு இடமாகும். பட்டுக்கத்தரித்தது போல ஒழுக்குப்பட ஒவ்வொன்றாக வகுத்து, துலை நிறை போல நிதானமாகச் சீர்தூக்கி, ‘பேசப் போகிறையோ, சாகப்போகிறையோ?’ என்பதையும் யோசித்து, மிகப் பயன்படும்படி பேச வேண்டாவா?எட்ட
- விபட்சன்
- வெண்காயத்தை உரிக்கவுரிக்க ‘ஈரவெண்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை,’ என்றபடியே அது புரைபுரையாய் உரிவதேயல்லாமல், உள்ளே ஒன்றும் இல்லாதது போலச் சிலர் சொல்வதைப் பகுக்கப் பகுக்க ஒரு பயனுமில்லாததாய் முடியும். அது தெரிந்தும், அப்படிப் பேசப் பைத்தியமா? நாமென்ன வேலையற்ற வீணர்களா? களங்கமற்ற கண்ணாடி போலத் தெளிவுடையதாகவும், மறுணலூப்ற்? போலப் பயன் விளைவதாகவும் முதல் முதற் கல்வியைக் குறித்து நான் பேசுகிறேன் பாரும்.
கல்வி
தொகுவேதாகம புராணங்களும், தர்க்க வியாகரணாதி சாஸ்திரங்களுமாகிய இலக்கிய இலக்கணக் கல்வி குன்றின்மேலிட்ட விளக்குப்போலப் பிரகாசமாக முற்காலத்தில் எங்கும் பிரதிபலித்திருந்ததே! அது இக்காலத்தில் குடத்திலேற்றிய விளக்கைப் போல அல்லவோ இருக்கின்றது!
- சுபட்சன்
- நீர் ‘அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறது,’ என்பதாகப் பேசுகிறீர். கல்வி முற்காலத்திற் பெரும்பாலும் சம்ஸ்கிருத பாஷையிலும், அதற்கு ஒருவாறொப்பாகத் தமிழிலும் தெலுங்கிலும், சிறுபான்மை இதர பாஷைகள் சிலவற்றிலும் தேனூறு பாய்ச்சலாயிருந்ததேயல்லாமல், இக்காலத்தில் கங்கை பிரவாகித்தாற் போலவும், கடல் மடை திறந்தது போலவும் அனேக பாஷைகளிற் சாதாரணமாய்ப் பெருகியிருக்கின்றதே! முன் இப்படி இருந்ததா?
- விபட்சன்
- அது மெய்யானால், ‘அகத்திலழகு முகத்தில் தெரியும்,’ என்பதாக அதைக் கற்றுக் கேட்டுணர்ந்த வித்துவஜனங்கள் அக்காலத்திலிருந்தது போல இக்காலத்திலும் அதிகரித்திருக்க வேண்டுமே?
- சுபட்சன்
- ஏனில்லை என்கிறீர்? ‘உலக்கை தேய்ந்து உளிப்பிடியாய் விட்டதோ?’ அக்காலத்தில் வித்துவஜனர்கள் சம்ஸ்கிருத பாஷையில், பாணினி, வரருசி, பதஞ்சலி, காளிதாசன், தண்டி, பவபூதி முதலானவர்களும், தமிழில் அகத்தியர், தொல்காப்பியர், மதுரைச் சங்கத்தார், வேம்பத்தூர்ச் சங்கத்தார், ஔவை, திருவள்ளுவர், கம்பர், காளமேகம், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலானவர்களும், ஆந்திர பாஷையிற் பீமகவி, பொம்மன், போத்து ராஜு, நன்னயபட்டு, திக்கன்ன சோமயாஜி, ஸ்ரீநாதன் முதலானவர்களும், இதரபாஷைகளிற் சிற்சிலருமே இருந்தார்கள். இக்காலத்தில் வைதிகக்கல்வியில் அவ்வளவு பூரணபாண்டித்தியமுடையவர்கள் இல்லை. ஒருவாறானவர் சிலர் இருக்கின்றனர். இலௌகிய கல்விப் பயிற்சியுள்ளவர்களோ, வெகுபெயரிருக்கிறார்கள். இவர்களைக் குறித்து அறியாததுபோல வினாவுதல், ‘நீஜாமலி தண்டில் நிஜாருகாரனைக் கண்டாயா?’ என்பது போலிருக்கிறதே! இக்காலத்தில் பலஜாதிப் பெண்களும் கல்வி கற்கின்றார்கள். பூர்வம் அத்தி பூத்தது போலச் சில ராஜஸ்திரீகள் மாத்திரம் கல்வி பயின்றார்கள். அதுவும், ‘நிர்வாணப் பட்டணத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்,’ என்னப்படுவது போல அவர்களுக்குக் கௌரவத் தாழ்வாயிருந்தது.
- விபட்சன்
- அந்நாளில் எத்தனையோ புஸ்தகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்நாளில் ‘உள்ளதையுங் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்,’ என்பதாக, அவைகளை எவர்களும் எடுத்துப் படியாது கைவிட்டதனால் எல்லாம் இறந்து போயின.
- சுபட்சன்
- முன்னாளில் ஒரு புஸ்தகமாவது அச்சிடப்படாமல் அருமருந்து போலச் சில மாத்திரம் பனையேடு முதலானவைகளில் எழுதப்பட்டிருந்தன. இக்காலத்தில் எழுதப்பட்டவைகளேயன்றி, அச்சிடப்பட்டவைகளும் ‘கன மழை பெய்து காடு தளிர்த்தது’ போல நாளுக்குநாள் அதிகரித்து, உலகமெல்லாம் புஸ்தகமயமாய் நிறைந்திருக்கின்றன.
- விபட்சன்
- முற்காலத்தைப் போல இக்காலத்தில் புஸ்தகங்களைப் படித்துக் கொடுக்கக் கேட்டால், அருக்காணி முருக்கம்பூப்போலச் சரக்குப் பிரியம் பண்ணுகிறதே யொழிய சுலபத்திற் கொடுக்கிறதில்லை. ஒருவருக்குக் கற்பிக்கிறதும் அதிக பிரயாசத்திலிருக்கிறது.
- சுபட்சன்
- ‘ஆலையில்லாவூருக்கு இலுப்பைப்பூச் சருக்கரை,’ என்பது போல, அக்காலத்திலேதான் புஸ்தகங்களை எளிதாய்க் காட்டுகிறதும் கற்பிக்கிறதுமில்லை. கற்பிக்கத் தொடங்கினாலோ, கோப்பியமாயிருக்கிற வேதாகமங்களை அன்றி, சாமானிய இலக்கணங்களையும் ‘காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடி சில்லி மூக்கி,’ என்பதாக அபூர்வமாயும், வீட்டுக்கதவைச் சார்த்தி உள்ளேயிருந்து தீக்ஷை கொடுப்பது போல அதி ரகசியமாகவும், ஆராவது இரண்டொருத்தருக்கு மாத்திரமே கற்பிக்கிறது; இக்காலத்திலோ, தாய் தன் சிசுவைத் தேடிப் பாலூட்டுவது போல,இன்னார் இனியாரென்னும் பேதமில்லாமல், அனைவருக்கும் நிராடங்கமாகச் சகல புஸ்தகங்களும் கொடுக்கப்படுவதன்றிப் பகிரங்கமாய்க் கற்பிக்கப்படுகின்றன.
- விபட்சன்
- பூர்வத்தில் வித்துவான்களுக்கிருந்த மிக்க செல்வமும் சிறப்பும் பிரபுக்களுடைய அபிமான முதலியவைகளும் இப்பொழுதில்லையே!
- சுபட்சன்
- அந்த வெட்கக்கேட்டை வெளியிலே சொல்லவேண்டுமோ! அக்காலத்தில் சில வித்துவான்கள் மாத்திரமே செல்வமுதலானவைகளைப் பெற்றுச் சுகித்திருந்தார்கள். சில வித்துவான்கள் ‘எட்டாத பழத்தைப் பார்த்துக் கொட்டாவி கொள்வது’ போலப் பெருஞ்செல்வமுடையவர்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்து, ‘குழிப்பிள்ளையை நரி சுற்றுவது’ போல,அவர்களை விடாதடுத்திருந்தும் அவர்கள் கொடாத உலோபிகளாகையால், ‘கண்ணாடி நிழலிற்கண்ட பணம் கடனுக்குதவாதது’ போல, அவர்கள் பொருள் இவர்கள் ஆபத்துக்கு உதவாமல் வருந்தினார்கள். பின்னும் சிலர், ‘மெத்தப்படித்தவர்களுக்கு உண்கிற சோறு வெல்லம்’ என்பதற்குச் சரியாய் ஊணுக்குமுடைக்குமே தரித்திரப்பட்டார்கள். இவைகளுக்கு,
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும்
தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட் டங்கி
எம்மில்ல
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லிப்
பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டே,
‘ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையு ளடங்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம்’ எனுமே.
என்பதனுள் சத்திமுற்றப்புலவர் வறுமையினால், இருக்க நல்லிடமும் உடுக்க ஆடையுமின்றி அலைந்தாரென்பதும்,
ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பில்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழூஉந்தன் மைந்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்பதனுள், ஒரு வித்துவானானவர், ‘என்வீட்டில் அடுப்பு மூட்டவில்லை; என் வயிற்றிற் பசி துடிக்கிறது; பிரசவித்த என் மனைவிக்குத் தாரகம் பண்ண வழியில்லை; பிறந்த குழந்தைக்குப் பாலுமில்லை,’ என்று குமணராஜனிடத்தில் விசனப்பட்டாரென்பதும்,
வணக்கம்வருஞ் சிலநேரம், குமர கண்ட வலிப்புவருஞ் சிலநேரம், வலிய செய்யக்
கணக்குவருஞ் சிலநேரம், வேட்டை நாய்போற் கடிக்கவருஞ் சிலநேரம், கயவர்க் கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப் பாடிப் பாடி எத்தனைநாள் திரிந்துதிரிந் தலைவே னையா!
குணக்கடலே! அருட்கடலே! அசுர ரான குரைகடலை வென்றபரங் குன்று ளானே!
என்பதனுள், ‘பொருளுடைய பிரபுக்களும் கல்வியை விரும்பவில்லை; வித்துவானைச் சன்மானிக்கவும் ஆதரிக்கவுமில்லை’ என்பதும் திருஷ்டாந்தமாகத் தோற்றுகின்றன. இந்நாளிற் கற்றவர்களுள் அனந்தம் பெயர் புஷ்களமான செல்வமும் சிறப்பும் பெற்றுப் பிரபுக்கள் முதலியோரால் அபிமானித்து ஆதரிக்கவும்பட்டு வருகிறது பிரத்தியக்ஷத்திலேயே தெரிய வருகிறதே!
- விபட்சன்
- அப்படியா! ‘வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்,’ என்பதாகச் சத்திமுற்றப் புலவர் வறுமைப்பட்டதை அறிந்த நீர், பின்பு அவர் பாண்டியனாற் சன்மானிக்கப்பட்டு அதிக சம்பத்தைப் பெற்று வாழ்ந்திருக்கும் நாளில் ஒருநாள் அவன் அவரைத் தன் சமூகத்தில் வரவழைத்துக் குசலம் விசாரிக்குமளவில் அப்புலவர்,
வெறும்புற் கையுமரி தாற்கிள்ளை சோரும், என்வீட்டில் வரும்
எறும்பிற்கு மார்பத மில்லை,முன் னாளென் னிருங்கவியாம்
குறும்பைத் தவிர்த்தெங் குடிதாங்கி யைச்சென்று கூடியதால்
தெறும்புலிகொல் யானை கவளங்கொள் ளாமற் றெவிட்டியதே!
என்றுபாடித் தமது க்ஷேமத்தை அறிவித்த செய்தி அறியாமற் போனதென்ன?
- சுபட்சன்
- ஆயினும், அஃதென்ன? ஏகதேசந்தானே? ‘ஏகராக்ஷ்யம் நகர்த்தவியம்,’ அல்லவோ?
- விபட்சன்
- ‘நல்ல கதை, நீளமில்லை,’ என்பதாக, நீர் ஏகதேசம் என்பது அதிசயமாயிருக்கிறது! அஃது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கிறது,’ என்னும் ஸ்தாலி புலாக நியாயமாகக் கொள்ளப்படாதோ? அன்றியும், குமணனைப் பாடியபுலவனும், அவனாற் கோடி பொன்பெற்று வாழ்ந்ததும் உமக்குக் கேள்வி இல்லையோ?
- சுபட்சன்
- முற்காலத்தில் படிக்காசன் என்னும் வித்துவானை மதுரைத் திருமலை நாயக்கர் சிறையில் அடைத்த செய்தி உமக்குத் தெரியாதோ?
- விபட்சன்
- அப்பிரபு சமூகத்தில் அந்த வித்துவான் சமயமறியாமற்போய்க் குஜோத்தியமாய் வசனித்ததைப் பற்றி அவருக்குக் கோபமுண்டதனாற் சிறையலடைத்தார். அது ‘வாய்க்கொழுப்புச் சீலையால் வடிந்தது,’ அல்லவா? பிறகு மூன்றாநாள் பிரபு ‘வித்துவானைப் பார்ப்போம்,’ என்று எதிரே வர, அவரைக்கண்டு புலவன் உபாயமாய்த் தப்பித்துக் கொள்ளவேண்டுமென்று, சிறையிலிருந்தபடியே,
நாட்டிற் சிறந்த திருமலையா துங்க நாகரிகா!
காட்டில் வனத்திற் றிரிந்துழ லாமல் கலைத்தமிழ்தேர்
பாட்டிற் சிறந்த படிக்காச னென்னுமோர் பைங்கிளியைக்
கூட்டி லடைத்துவைத் தாய்இரை தாவென்று கூப்பிடுதே!
என்பதாக, அவரைப்பாடி ஸ்துதி செய்தவளவிற் பிரபுவுக்குத் தயையுண்டாகிச் சிறையை விட்டு நீக்கிப் பரிசு கொடுத்து உபசரித்தனுப்பினார்.இதிலே தாழ்ச்சி என்ன? இது நிற்க, முற்காலத்திற் கல்வி பயிலிடம் அனேகமிருந்தன; அவைகளில் எத்தனையோ பெயர் வித்தியாப்பியாசம் செய்து வந்தார்கள். இக்காலத்தில் அப்படி யில்லையே!
- சுபட்சன்
- ‘பொரிமாவை மெச்சினாளாம், பொக்கை வாய்ச்சி,’ என்பதாக, அதை நீர்தாம் மெச்ச வேண்டும்.முன்னாளில் வடக்கே சரசுவதிபீடமும், தெற்கே தமிழ்ச்சங்கமும், மற்றவிடங்களில் இரண்டொரு பாஷை வழங்கும் சிலபள்ளிக் கூடங்களுமே இருந்தன. சங்கப்புலவர் முதலிய சிலர்தவிர, அப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர்களெல்லாம் ‘சப்பாணிக்கு நொண்டி சடுகுடுப்பை,’ என்பதாக, மற்றவர்களை நோக்குமிடத்து இவர்களும் வாசித்தவர்கள்தாம் என்னும்படி கல்வியில் உபாயமானவர்களாயிருந்தார்களே அல்லாமல், நல்ல நிர்வாகிகளல்லர். இந்நாளில் ஒரு கண்டத்திலேயா? ஒரு ராச்சியத்திலேயா? எங்கே பார்த்தாலும் இங்கிலீஷ், இலத்தீன், கிரீக்கு, பாரிஸ், இந்துஸ்தானி முதலிய எத்தனையோ பாஷைகளில் எத்தனையோ பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. விசேஷமாக இந்தியாவில் எங்கும் ஜில்லாப் பாடசாலை, தாலூக்காப் பாடசாலை, கிராமப்பாடசாலைகள் ஏற்படுத்தி சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துரைத்தன பாஷை முதலாகப் பற்பல பாஷைகளும் கற்பிக்கப்படுகின்றன. ஆங்காங்குள்ள உபாத்தியாயர்களும் கணிதம், பூகோளம், சுகோளம், இரசாயன சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், நியாய சாஸ்திரம், நீதி சாஸ்திரம், இலக்கண சாஸ்திரம், பல தேச சரித்திரம் முதலானவைகளிலும், பாரத ராமாயணாதி காவியங்களிலும் சாராதாமிசம் என்னும்படி அதிக நிபுணர்களாயிருக்கிறார்களே! சர்க்கரையும் மாவும் சரியாமா? முன்னாளில் ஆரையாவது பூகோளத்தில் ஒரு தேசத்தை, அல்லது ஜலபூசந்திகளை, நதிசங்கமம் முதலானவைகளைக் குறித்து எங்கிருக்கின்றனவென்றால், பசபசவென்று விழிப்பாரே அல்லாமல் வேறென்ன செய்வார்? ‘பிறவிக் குருடனுக்குப் பணநோட்டந் தெரியுமா?’ இக்காலத்தில், ‘இன்ன கண்டத்தில், இன்ன திசையில், இத்தேசத்திற்குச் சமீபத்தில், இத்தனை காதத்தில், இன்னாருடைய ஆளுகையில் அந்தத் தேசமிருக்கிறது; அதில் வசிப்பவர்களுடைய வருணம், மதம், பாஷை, கைத்தொழில், வர்த்தகம் முதலானவைகள் இவையிவை,’ என்றும், குறித்த ஜலசந்தி, பூசந்தி, நதிசங்கமம் முதலியவை இன்னவின்ன இடங்களிலிருக்கின்றனவென்றும், அத்தேசம் முதலானவைகளுக்குக் கரைவழியாகப் போனால் இத்தனை மாதத்தில், கப்பல்மேற் போனால், இத்தனை நாளிற் போய்ச்சேரலாமென்றும், கண்ணிலே கண்டதுபோல, எந்தச் சிறுபிள்ளையுஞ் சொல்லுவான்; அவைகளைப் பூமிப் படத்திலும், பரிஷ்காரமாய்த் தெரியக் காட்டுவான். ஜில்லாப் பாடசாலை, தாலூக்காப் பாடசாலை, கிராமப் பாடசாலைகளில் வாசிக்கின்ற மாணாக்கர்களில் எவர்களையாகிலும் இலக்கண விஷயத்தைக் குறித்து வினாவினாலோ, அவர்கள் இங்கிலீஷ் முதலிய பாஷாந்தரங்களில் மாத்திரமன்றி, தமிழிலும் அஃது எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்துவகைப்படுமென்றும், அவைகளிற் பொதுவிதி, சிறப்புவிதி, வழாநிலை, வழு, வழுவமைதிகள் இவையிவை யென்றும் அதி நுட்பமாக ஐயந்திரிபற உய்த்துணர்ந்து, பாலையும்நீரையும் பிரிக்கின்ற அன்னத்தைப்போல நன்றாய்ப் பகுத்துரைப்பார்கள். இவர்களே இவ்வளவு சாமர்த்தியர்களாயிருப்பதனால், இனிச் சிறந்த சென்னை ராஜவித்தியா சங்கத்தில் வாசிப்பவர்களுடைய திறத்தையும், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் திறத்தையும் எடுத்துச் சொல்லவேண்டியதென்னை? ’ஸ்ரீரங்கத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவாய்மொழி கற்பிக்க வேண்டுமோ?’ பலவிடங்களிலுமுள்ள பாலிகா பாடசாலைகளிற் படிக்கின்ற சிறு பெண்களை நோக்கிக் கணிதத்தைப்பற்றிக் கேட்டால், அது சங்கலனம் விபகலனமென்று இருவகையாமெனவும், அவற்றோடு குணமும் பாகஹாரமுஞ் சேர்ந்து நால்வகையாமெனவும், அந்நான்கனோடு வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் நான்குஞ்சேர்ந்து எண்வகையாமெனவும், மற்றும் அனேக வகையாமெனவும், அவற்றுட் கூட்டல் சங்கலனம், கழித்தல் விபகலனம், பெருக்கல் குணனம், பங்கிடல் பாகஹாரம், ஓரெண்ணை அதனால் ஒருமுறை பெருக்கவருவது வர்க்கம், அவ்வர்க்கத்திற்கு மேற்படி எண் வர்க்கமூலம், ஓரெண்ணை அதனாற் பெருக்க வருவதை மற்றொரு முறை அவ்வெண்ணினாற்பெருக்க வரும் பேறு கனம், அக்கனத்திற்கு மேற்படியெண் கனமூலமெனவும், மற்றவைகளும் இன்னவை இன்னவையெனவும், ஒரு மயிர் முனையும் பிசகாமல், ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ விளக்கமாகவும், அவதானஞ் செய்வது போல முறைமையாகவுஞ் சொல்வார்களே! ஒழிந்த சாஸ்திரம் முதலானவைகளைக் குறித்து விசாரித்தாலும் வெகு பெயர் சம்பிரதாய விரோதமில்லாமல் திட்டமாய்ச் சொல்வார்கள். கல்வியைப் பற்றி இன்னமொரு புதுமையிருக்கிறது; அதையும் சற்றே கேளும்: பூர்வம் சுதேசிகளுக்கும் அனேகர் இங்கிலீஷ் பாஷையை ஏ.பி முதலிய எழுத்து மூலமாய்க் கற்காமல், அவ்வார்த்தைகளை மாத்திரம் குருட்டுப் பாடமாகத் தெலுங்கு அல்லது தமிழிலெழுதி, ‘கம்’ அண்டே ரம்மனெ மாட்டா; ‘கோ’ அண்டே பொம்மனே மாட்டா; ‘ஸிடௌன்’ அண்டே கூச்சுண்டனே மாட்டா; ‘கெடப்’ அண்டே லெய்யனெ மாட்டா,’ என்று ஞாபகம் பண்ணிக்கொண்டு, ஆங்கிலேய துரைகளிடத்தில் உத்தியோகஞ் செய்து வந்தார்கள். இது சொன்னால் வெட்கமும், அழுதால் துக்கமுமல்லவா?
கைத்தொழிலாளிகள்
தொகு- விபட்சன்
- ‘கல்வி கரையில,’ என்பதனால், இம்மட்டில் அதை நிறுத்தி, இனிக் கைத்தொழில் செய்யும் தொழிலாளிகளைக் குறித்துப் பேசுவோம்.
- சுபட்சன்
- இதுவரையிற் கல்வியைக் குறித்துக் ‘கல்வி கல்வியாகப் பேசினீரே! இப்போது தொழிலாளிகளைப் பற்றிப் பேச எத்தனித்தீரோ? ‘ஆராத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்,’ என்பதாக அந்த வள்ளலும் பேசினால் தெரிய வருகிறது.
- விபட்சன்
- கருமார், தச்சர், கல் தச்சர், கன்னார், தட்டார், கணக்கர், கொற்றர், குலாலர், கைக்கோளர், பாணர், செம்மார், ஒட்டர், உப்பரவர் முதலிய தொழிலாளிகள் முற்காலத்தில் அனேகர் இருந்தார்கள். இக்காலத்தில், ‘முளைத்ததே மூன்று மயிர், அதிலும் இரண்டு புழுவெட்டு,’ என்பதாகச் சிலரல்லது அதிகமில்லை. அவர்களும் திறமையுள்ளவர்களல்லர். அப்படிப்பட்ட வேலைக்காரரைத்தேடிப் பிடிக்கிறதும் வெகு கடினமாயிருக்கிறது.
- சுபட்சன்
- ‘எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்,’ என்பது போல, உம்மைப் போன்றவர்களுக்கு அந்தத் தொழிலாளிகள் அதிகந்தான். மற்றவர்களுக்கு அவர்களெவ்வளவு? ‘இட்டதெல்லாங் கொள்ளும் பட்டிமகன் கப்பரை,’ என்பது போல, வரவு செலவல்லவே? இக்காலத்திலுள்ள பற்பல தொழிலாளிகளையும் எண்ணத் தொலையுமா? ஏடிடங் கொள்ளுமா? இவர்கள் கைத்தொழில்களும் அக்காலத்திலுள்ளவை போலப் பரும்படியானவைகளா? அதிகயுத்தி நுட்பமும் அழகும் விசித்திரமுமாயிருக்கின்றன. அவைகளைத்தான் அளவிடல் ஆர் தரம்?
- விபட்சன்
- ‘ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை,’ என்பதாகப் பேசுகிறீரோ? இந்து தேசத்தின் தென்திசையிலுள்ள காஞ்சீபுரம்,ஸ்ரீரங்கம், மதுரை, திருநெல்வேலி, திருப்பெருந்துறை, திருக்குடந்தை முதலான தேவஸ்தானங்களையும், வட திசையிலிருப்பவைகளையும் பார்த்துப் பேசும். அந்நாளிலுண்டாக்கப்பட்ட அதியுன்னதமாகிய ஆலயங்களும், அவற்றின் கர்ப்பக்கிருகம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களும், ஸ்தூபி சிகர கோபுரங்களும், அவைகளில் அமைந்த வேலைப்பாடுகளும் இந்நாளில் வேறெந்த இடங்களிலாவது உண்டா? எதோ, விரலை நீட்டும்!
- சுபட்சன்
- ‘தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்,’ என்பதாகப் பேசுகின்றீரே! அந்த மட்டில் ‘அடிச்சட்டியிற் கரணம்போட்டுக் குண்டு சட்டியிற் குதிரைச்சவாரி பண்ணினது’ போதும்! நீர் இந்து தேசத்தைப் பற்றி மாத்திரமே பேசுகிறீர். உமது சொற்படியே அந்நாளில் இத்தேசத்தில் கோயில் குளம் கொஞ்சம் விசேஷமாகவும் விசித்திரமாகவும் உண்டாக்கப்பட்டது மெய்யே! இந்நாளிலோ, ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களில் உண்டாயிருக்கின்ற நாநா விதமான கைத்தொழில்களின் சித்திரத்தைக் குறித்துச் சொல்லக் கூடுமா? இதற்கும் அதற்கும் ஏற்றக்கோலுக்கும் அரிவாட் பிடிக்குமுள்ள தாரதம்மியம் இருக்கின்றதே! இந்த இந்து தேசத்திலேயே வண்டிகள், குதிரைகள், பல்லக்குகளின்மேல் ஜனங்கள் ஏறிப்போகும் ஏழெட்டுநாட் பிரயாண தூரத்தை வாயு வேகமாக இரண்டு மூன்று அல்லது நாலு மணி நேரத்திற்குள்ளே கடப்பதற்கு நாற்பது ஐம்பது ஒன்றாகத் தொடுக்கப்பட்ட புகைவண்டித் தொடர்களும், அவைகளை நடத்துவதற்கு அடிப்பாதை கிளைப்பாதைகளாக எல்லை காணப்படாத இருப்புப் பாதைகளும் அசாத்தியமாக உண்டாக்கப்பட்டன. அனேக நாட் பிரயாண ஸ்தானங்களுக்கும், மனோவேகமாக நாலாறு நிமிஷத்திற்குட் செய்திகளை அறிவிப்பதற்கு ஆச்சரியமான மின் தபாற்கம்பிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையென்ன சாமானியமா? மிகவுஞ் சுலபமாகப் பஞ்சைக் கொட்டையிற் பிரித்தெடுப்பதற்கும், அதிக விரைவாகப் பஞ்சு நூற்பதற்கும், பட்டு நூல் பருத்தி நூல்களால் நாணயமான வஸ்திரம் நெய்வதற்கும், பலவிதக் கடிதங்கள் செய்வதற்கும், அச்சுப்பதிப்பதற்கும், மரம் அறுப்புதற்கும், தண்ணீரிறைப்பதற்கும், ஐரோப்பா முதலிய தேசங்களில் விதம் விதமாகிய யந்திரங்களும், அஷ்டதிக்கிலும் அதிக விசாலமான ஆறுகளைத் தாண்டிச் செல்வதற்குச் சமுத்திரத்தில் வாராவதி கட்டினது போல, பெரிய பெரிய பாலங்களும், ஆற்று நீரத்தனையும் அவலமாய்ப் போகாமற் பயிர் முதலானவைகளுக்குப் பாய்ந்து உபயோகமாம்படி செய்வதற்கு நெடுங்கால்களும், அணைக்கட்டுகளும் மிதமில்லாமற் சமைக்கப்பட்டிருக்கின்றன. குதிரைகள், வண்டிகள், மாடுகள், மனிதர்கள் தடையின்றித் தாராளமாய்ச் செல்வதற்குக் கச்சித் தெருப்போல அகலமான நெடிய சாலைகள் எங்கங்கும் செப்பனிடப்பட்டன. அச்சாலைகளின் இரு பக்கங்களிலும் நிழலிடும்படி வரிசை வரிசையாகப் பற்பல மரங்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. மாலுமிகள் இரு காத தூரத்தில் வரும்பொழுதே துறைகண்டு கப்பல்களைச் செலுத்துவதற்கு அடையாளமாகத் தீபஸ்தம்ப விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இப்பொழுது எண்ணெய்ச் செலவு முதலானவைகளில்லாமல், வாயு தீபம் வைப்பதற்கும், இன்னும் பலவித அதிசயக் கிரியைகளை நடத்துவதற்கும் வரையறைப்படாத முயற்சிகள் செய்யப்படுகின்றன. இங்கிலாந்து, கல்கத்தா, பங்காளம், பம்பாய், சுவேஸ் முதலான பலதேசங்களுக்கும் போக்குவரவு சீக்கிரமாகச் செய்வதற்கு நீராவி மரக்கலங்களும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் எவ்வளவு திரவியம் விரயமாயிருக்க வேண்டும்! ‘அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும்; ஆறுகடக்கப் பாயவும் வேண்டும்’ என்று பணச்செலவில்லாமற் சுளுவிலே நடக்கயத்தனித்தால் முடியுமா? நாரில்லாமல் மாலை தொடுக்கலாமா? இனிமேல், காசியிலிருந்து புகைவண்டியில் ஏறினவனை முன்பின்னாக ஒரு பக்ஷத்துக்குள் இராமேசுரத்திலிருக்கிறவர்கள் கண்டு பேசுவார்கள். இங்கிலாந்தில் அன்று நடந்த சமாசாரம் அன்றே மின்கம்பி மார்க்கமாகச் சென்னை ராஜதானியில் விசதமாய்க் கேட்கப்படும். இப்பொழுது அத்தேசத்தில் உண்டாகப்பட்ட ‘கிரேட் ஈஸ்டர்ன்’ என்னும் ஆறு பாய்மரங்களையுடைய பிரமாண்டமாகிய கப்பலின் புதுமையான கைங்கரியத்தை வகுத்துரைப்பது எளிதன்று! அஃது ஒன்றே நீராவி மரக்கலமும் பாய் வலித்தோடும் மரக்கலமுமாயிருக்கின்றது. அந்தக்கப்பல் கடல் நடுவிலிருக்கின்றதனால், அதில் தங்குகிறவர்கள் தங்களை ஒரு தீபத்தில் வசிப்பவர்களாகவும் நினைக்கக் கூடும். ஒரு வீச்சில் இரண்டு பெயர், அல்லது மூன்று பெயர்களைக் கரணைகரணையாக வெட்டி வீழ்த்தத்தக்க கூரிய கத்திகள், கொஞ்சங்குறைய ஒரு நாழிகை வழியிலிருப்பவர்களையும் சுடுவதற்கேற்ற பலவகைத் துப்பாக்கிகள், காத தூரத்திலுள்ள கருங்கற் கோட்டைகளையும் ஊடுருவும்படி குண்டு பிரயோகிக்கும் அனேக விதப் பீரங்கிகள், விசித்திரமான படங்கள், கண்ணாடிகள், ஒளிச்சித்திரக் கருவிகள், கடிகாரம் முதலானவைகளும் நவநவமாகச் செய்யப்படுகின்றன. அவைகளையும் மற்றக் கருவிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லப்புகுந்தாற் கடை பரப்புகிறதாக அல்லவோ காணப்படும்.
- விபட்சன்
- வாயிற் ககனகுளிகை போட்டுக்கொண்டு ஆகாய கமனஞ் செய்யுஞ்சித்தர்களைப் போல, முற்காலத்திற் சூத்திர ரதத்தின்மேலேறி ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு ஆகாசமார்க்கமாகப் போக்கு வரவு செய்தார்களே! அப்படி இக்காலத்திலில்லையே!
- சுபட்சன்
- ‘பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாகப்பேசாதே’ என்பதனாற் பகுத்தறியாது பேச வேண்டா, நீர் குறித்துரைத்த சூத்திர ரதம், பாரதம், சீவகசிந்தாமணி முதலிய புஸ்தகங்களிற் கண்டதேயல்லாமற் கண்ணிற்கண்டதல்லவே? இக்காலத்தில் ஆங்கிலேய பிரான்சியர்களிற் சிற்சிலர் ஆகாயக் கப்பல்கள் உண்டாக்கி, அவைகளிலேறிக் ககனத்தில் அதிக உயரத்திலெழும்பி, வேகமாய்ச் செல்லக் காண்கின்றோம்; என்றாலும், அவை இதுவரையிற் காற்றின் வழியேயன்றி ஒருவன் சுவாதீனமாக நடத்துவதற்கு இசையவில்லை. இதுதான் அவற்றிற்குக் குறை.
- விபட்சன்
- சபாஷ்! கெட்டி! கெட்டி! சாதுரியமாக வசனிக்கிறீரே! இம்மட்டில் அதை நிறுத்தும். விவசாயத்தைப் பற்றிப் பேசுவோம்.
- சுபட்சன்
- ‘தம்பி, கால் நடைப் பேச்சுப் பல்லக்கிலே,’ என்பதாக டம்பாசாரமாய் மாத்திரம் பேசுகிறீர். ஆயினும், கிணற்றினாழமும் கயிற்றின் நீளமும் பார்க்க வேண்டாவா?’ வெகுநேரமாகத் தொழிலாளிகளையும் தொழில்களையுங் குறுத்துப்பேசி, ‘கன்றை விட்டுக் கட்டுத்தறியைப் பிடித்தது’ போல, இப்பொழுது அதைவிட்டுப் பயிர்ச்செய்கையைப் பற்றிப் பேசுவோமென்கிறீர், பேசத் தலைப்பட்டால், இறக்கை கட்டிக்கொண்டுதான் பறப்பீர்!
பயிர்ச்செய்கை
தொகு- விபட்சன்
- முற்காலத்திற் பயிர்ச்செய்கையானது எவற்றினும் பிரதானமாயும், அபரிமிதமாயும் நடந்து வந்தது. அதற்கு அக்காலத்தில் அகவிலை மாறாமற் செவ்வையாயிருந்ததே சாட்சி.
- சுபட்சன்
- ‘செத்தவன் கண் செந்தாமரைக்கண், இருக்கிறவன் கண் நொள்ளைக்கண்,’ என்று பேசுகிறீரே! சிரிக்கப்போகிறார்கள்! அஃது, ‘ஆறு கலியாணம்; மூன்றுபெண்கள் மார்போடே மார்பு இடிபடுகிறது,’ என்பதாயிருந்தது ஒருவர்க்கும் தெரியாததன்று. எப்போதும் பூமி நீண்டு அகன்று, விசாலித்திருப்பதுதான். இருந்தும், அக்காலத்திற் கூடிப் பயிர் செய்தவர்கள் கொஞ்சம் பெயர்களே. ஆகையால் அதிலெவ்வளவு சாகுபடி செய்யப்படும்? அரசிலை நுனியளவு நிலந்தானே? இந்நாளிலதற்குப் பதினாயிரம் பங்கு அதிகமாக எந்தத் தேசத்திலும் சிறிதிடமாவது காடாய்க் கரம்பாயிருக்க வொட்டாமலும், புறம்போக்காய்ப் போக விடாமலும், பள்ளத்தாக்கு மேட்டுப்பாங்காகிய சகல நிலங்களையும் திருத்தி, ‘உண்பாரைப் பார்க்கலாம், உழுவாரைப் பார்க்கலாமா?’ என்று யாவரும் ஏர்கட்டியுழுது நன்செய் புன்செய்ப் பல தானியங்களும் விதைத்து, நாற்று விட்டு நட்டு, தோட்ட நிலங்களில் அபரிமிதமாகிய காய்கறி வர்க்கங்களும், ஓயா முயற்சியுடனே உண்டுபண்ணுகிறார்களே! எங்கே பார்த்தாலும் கழனிகள், கொல்லைகள், தோப்புகள், சோலைகள், தோட்டங்கள், துரவுகள், ஏரிகள், ஆறுகளாயிருக்கின்றன. எத்தனையோ ஊர்களில் விளைச்சல்அறுத்துப் போர் போட்டு ஒப்படிசெய்து தானியங்களைச் சேர் கட்டிக் குதிர்கள் கூடுகளிற் கொண்டுபோய் நிறைத்து வைப்பதுமன்றி, பூமியின் கீழும் புதை போட்டு வைக்கிறார்களே! அகவிலைதான் என்னவித்தியாசமாயிருக்கின்றது! இவைகளுக்காக எவ்வளவோ தீர்வை கொடுத்து வருகிறார்கள். பட்டணம் முதலாகிய பற்பல தேசங்களிலும் நகக்கண்ணில் அழுக்குப்படாமற் சொகுசாயிருந்து உத்தியோகஞ் செய்கிறவர்கள் பெற்றுவருஞ் சம்பளமெல்லாம் இடுப்பொடியக் கைசலிக்க மண்வெட்டி கொண்டு நிலத்தைக் கொத்தி மேழிபிடித்து உழுது, மார்புநோவத் தண்ணீரிறைத்துப் பயிரிட்டு உழைக்கிறவர்களுடைய கஷ்டார்ச்சிதந்தானே?
- விபட்சன்
- ‘முன்னே பிறந்த காதைப் பார்க்கிலும் பின்னே முளைத்த கொம்பு வலியது,’ என்பார்களே! அது போல இக்காலத்தையே சிலாகித்துச் சொல்ல வருகிறீர். என்ன சொன்னாலும், அகவிலையைக் குறித்து நான் சம்மதிக்க மாட்டேன், அது போகட்டும், அக்காலத்தில் வர்த்தக விஷயமென்ன, இலேசாயிருந்ததா? அஃது இக்காலத்திற் ‘பூவிற்ற கடையிற் புல்விற்றது’ போலப் பீடழிந்திருக்கின்றதே!
வர்த்தகம்
தொகு- சுபட்சன்
- ‘மெல்லெனப் பாயுந் தண்ணீர் கல்லையும் உருவிச் செல்லும்,’ என்பதனால், அவசரப்படாமற் பொறுமையாய்ப் பேச வேண்டுமே! அந்த வழக்கம் உம்மிடத்திலில்லை. ‘முதலை நரியின் காலைவிட்டுப் புங்கமரத்து வேரைப் பிடித்தது’ போலப் பயிர்ச்செய்கையை விட்டு வர்த்தகத்தைப் பேசத் தலைப்பட்டீர்! அந்நாளில் துறைமுகங்களையுடைய சில ராஜதானிகளில் மாத்திரம், ஒருவிதமான சிறிய பெரிய சில பாய்மரக் கப்பல்களும், சுலுப்புகளும், படவுகளும் சீமா மூலங்களிலிருந்து அபூர்வர்மாய்ச் சரக்கேற்றி வருவதுண்டு. அவை வெகுதூரத்தில் வரும்பொழுதே அச்செய்தி கேட்ட வர்த்தகர்களுக்கு, ‘வந்தது கப்பல்! மலர்ந்தது தொப்பை!’ என்பதாக ஒரு புஜம் இருபுஜமாய்ப் பூரிக்கும். இக்காலத்தில் ‘மலைவிழுங்கும் மாரியாத்தாளுக்கு உரல் சுண்டாங்கி,’ என்பதாக அவையெல்லாம் எவ்வளவு? காற்றுக்கா மழைக்கா? கண்டவிடமெல்லாம் துறைமுகங்கள்! அத்துறை முகங்களிலெல்லாம் திரளாக வருவதும் போவதும் நங்கூரம் போட்டுத் தங்குவதுமாகிய ஒன்றிரண்டு, மூன்று நான்கு பாய் மரங்களையுடைய எத்தனையோ கப்பல்கள்! பலவகையான எத்தனையோ மற்ற உருவங்கள்! அவைகள் எவ்வளவோ ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சரக்குகள் சாமான்கள்! அச்சரக்குகள் சாமான்களைக் கொள்ளுகிறவர்கள் விற்கிறவர்கள் எத்தனையோ வர்த்தகர்கள்! அவர்கள் கொண்டு விற்கும் ஸ்தானங்கள் கடலும் காவேரியும் போல அதிக விசாலமான எத்தனையோ கிடங்குகள்! மண்டிகள்! அவ்வர்த்தகத்திற்கு வைத்த முதற்பணம் ரொக்கமாக எத்தனையோ கோடி ரூபாய்கள்! எத்தனையோ கம்பெனிப் பத்திரங்கள்! பாங்கி நோட்டுகள்! அம்முதற்பணத்திற்கு வட்டி வீதமாக எத்தனையோ பணம் கொடுக்கல் வாங்கல் அவ்வர்த்தகத்தில் எத்தனையோ பணம் லாபம் சம்பாதிப்பது நஷ்டமிருப்பது! அந்த லாபத்தில் எத்தனையோ பணஞ் செலவு! எத்தனையோ பணம் இருப்பு! ‘சோற்றிலே கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், மோகனக் கல்லைத் தாங்குவானா?’ இத்தனைப் பிரபலமாகிய வர்த்தக விஷயத்தை வலமிடம் தெரியாத நாமா அளவிடுகிறது? நம்முடைய புத்தியைக் கொண்டு இதை ஆராய்வது, ‘நரி வாலைக் கொண்டு கடலாழம்பார்க்கிறது’ போலத் தான் மேலும், தூரதேசங்களுக்கு வர்த்தகர் முதலானவர்கள் பணம் ரொக்கமாக அனுப்பினால், இடைவழியில் ராஜிக தெய்விகம் எப்படியிருக்குமோ? தெரியாதே! அதைப்பற்றிப் பயமின்றி அங்கங்கேதானே பெற்றுக்கொள்ளும்படி, எவ்வளவு தொகைக்கானாலும் உண்டி முடித்தும் கொடுக்கப்படுகின்றது.
நகரங்கள்
தொகு- விபட்சன்
- ‘நின்ற மாத்திரத்தில் நெடுமரம் போனால் நின்ற மரமே நெடுமரம்,’ என்பதாக, இக்காலத்தின் வர்த்தகத்தையே பெருக்கிப் பெருக்கிப் பேசுகிறீர். அஃதிருக்கட்டும். அக்காலத்திலிருந்த நகரங்களைப்போல் இக்காலத்தில் அவ்வளவு சிறப்புள்ள நகரங்கள் எங்கிருக்கின்றன?
- சுபட்சன்
- ‘தனக்கழகு மொட்டை, பிறர்க்கழகு கொண்டை,’ என்பதை யோசிக்கவில்லை. நீர் முற்காலத்து ஸ்திதியையே விடாமற் சிறப்பித்து, ‘தடவிப் பிடிக்க மயிரில்லை; அவன் பெயர் சவுரிராஜப் பெருமாள்,’ என்பதாகப் பேசுகிறீர். இக்காலத்தில் ஐரோப்பா முதலிய கண்டங்களிலிருந்த நகர வளங்களை உமக்குச் சொன்னால் நம்பமாடீர். இந்த ஆசியாக் கண்டத்திலேயே எத்தனையோ சிறப்பான நகரங்களிருக்கின்றன. நாம் பல நாளும் வசிப்பதும் காண்பதுமாகிய இச்சென்னை முதலிய நகரங்களைக் குறித்துச் சிறிது நேரம் நாவாரப் பேசுவோம். வாரும்.
- விபட்சன்
- நீர் ‘சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணைவெட்டிப் படைப்பேன்,’ என்கிறீர். ஆயினும், சொல்லும், கேட்போம்.
- சுபட்சன்
- ஆ! ஆ! சென்னை முதலானவைகளின் கோட்டை கொத்தளங்களைப் பாரும்! எவ்வளவு சித்திர விசித்திரமாயிருக்கின்றன! இவை அதிக அகலமும் நீளமுமில்லாதிருந்தாலும், அழகும் அரணிப்புமாய், அகழ் சூழப்பட்டு, ஏற்றுமதி இறக்குமதிக்குத் தக்க துறைமுகங்களையுடையவைகளாய்க் கடலுக்கருகே இருக்கின்றன. வெள்ளி மலைகளைப் போல உன்னதமும் அற்புதமுமாகக் கட்டி வெண்சாந்து பூசப்பட்ட மூன்று நான்கு ஐந்தடுக்கு மெத்தைகளாகிய மாடமாளிகை கூடகோபுரங்களால் நிறைந்திருக்கின்றன. பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார் வாசஞ்செய்யும் வீதிகளோ விஸ்தாரம், கோயில் குளங்கள், மண்டபம் மதில்கள், சத்திரம் சாவடிகள், சந்தி சதுக்கங்கள் அளவிடப்படா. ஆலயந்தோறும் நித்தியாராதன பஞ்ச பர்வ பிரமோற்சவ மகோற்சவங்களும், வீடுதோறும் கல்யாண சோபனங்களும் அதிக விநோதமாக நடக்கின்றன. யாகசாலை, கல்விச்சாலை, புத்தகசாலை, கைத்தொழில் அபிவிர்த்திசாலை, வர்த்தகசாலை, உத்தியோகசாலை, பொக்கசசாலை, அச்சியந்திரசாலை, ஆயுதசாலை, இராணுவசாலை, காவற்சாலை, நீதிவிசாரணைச்சாலை, அரசிறைச்சாலை, தபாற்சாலை, வைத்தியசாலை, நூதனப் பொருட்காட்சிச்சாலை முதலானவைகளை, எங்கெங்கும் காணலாம்; மேற்படி தபாற்சாலைகள் ’சுண்டைக்காய் காற்பணம்; சுமைக்கூலி முக்காற் பணம்,’ என்பதாகச் செலவு அதிப்படாமல், சென்னையிலிருந்து காசிக்குப் போகும் கடிதமும் அதிசுலபமாக முக்காலணாவில் அனுப்பப்படுகிறதற்க உபயோகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வைத்தியசாலைகளில் வீரம், பூரம், லிங்கம், ரசபாஷாணாதி வைப்புச்சரக்குகளினால் உண்டாக்கிய பஸ்ப செந்தூரங்களுக்கும், சுக்குத் திப்பிலி மிளகு கோஷ்டம் முதலிய கடைச்சரக்குகளினாற் செய்த தைல சூர்ண கிருத லேகியங்களுக்கும், வனமூலிகைகளினால் இறக்கப்பட்ட கஷாயம் முதலானவைகளுக்கும், அவைகளை வெவ்வேறாக நிரப்பியிருக்கும் பலநிறப் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்களை நிரை நிரையாகச் சேர்த்து வைத்திருக்கும், விசித்திரமான அறைகளுக்கும், உசிதமான பற்பல வைத்தியக் கருவிகளுக்கும், அங்கிருக்கின்ற சாஸ்திர அநுபவ சாமர்த்தியமுடைய வைத்தியர் இரணவைத்தியர்களுக்கும், அவர்களிடத்தில் வந்து பிணி தீர்த்துக்கொள்பவர்களுக்கும் கணக்கேது? நூதனப் பொருட்காட்சிச் சாலைகளில் ஜெகத்தில் எட்டுத் திசைகளிலுமுள்ள நவலோகம் நவமணி முதலிய தாதுவர்க்கங்களையும், மரம் செடி கொடி முதலிய மூலவர்க்கங்களையும், பசு பக்ஷி மிருகம் முதலிய ஜீவ வர்க்கங்களையும் ஒருமிக்க ஏககாலத்திற் காணலாமே! நெல்லுமண்டி, அரிசி மண்டி, பல சரக்கு மண்டிகளும் இரும்புக்கிடங்கு, பஞ்சுக்கிடங்கு, மருந்து கிடங்குகளும், பலகைத் தொட்டி, பனைமரத்தொட்டிகளும், பட்டுக்கடை, புடைவைக்கடை, மளிகைக்கடை, கன்னாரக்கடை, காசுக்கடை, ஆபரணக்கடை, அத்தர் புனுகு முதலிய விற்குங் கடை, புஷ்பக்கடை, மற்றக்கடைகளும், ‘கரடி துரத்தினாலுங் கைக்கோளர் தெருவில் ஓட இடங்கிடையாது,’ என்பது போலச் சிறிதிடமும் வறிதாயிராமல், எங்கும் அடர்ந்து நெருங்கி வரிசை வரிசையாயிருக்கின்றன. மற்றக்கடைத் தெருவில் ‘உப்பிருந்தாற் பருப்பிருக்காது, பருப்பிருந்தால் உப்பிராது,’ இக்கடைத்தெருவிலோ, எந்த வேளையிலும் எப்படிப்பட்ட வஸ்துக்களையும் வாங்கலாம். புலிப்பாலும் அகப்படுமே!
- விபட்சன்
- நகரவாசிகளினுடைய பாஷை ஊண் உடை முதலியவைகள் அக்காலத்திலிருந்தது போல இல்லை. அவை இக்காலத்தில் ஒழுங்கற்றிருக்கின்றன.
- சுபட்சன்
- ‘பேச்சுக்குப் பேச்சு சிங்காரந்தான்,’ அக்காலத்தில் வாசித்தவர்களல்லாத பெயர்களெல்லாம் குழந்தை போலவும், கிளிப்பிள்ளை போலவும், குதலை வார்த்தையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வாசித்தவர்களோ, ‘ஊமைக்கு உளறுவாயன்தான் உற்பாத பிண்டம்’ என்பதாக, ஒருவாறு சரியாய்ப்பேசுவார்கள். இக்காலத்திற் கீழ்க்குலத்தாரும் மேற்குலத்தாரைப் போலவே தமிழ் தெலுங்கு முதலிய தத்தமக்குரிய பாஷைகளில் திருந்திய உச்சரிப்புடனே மதுரமொழுக நயமாக வசனிக்கின்றார்களென்றால், மேற்குலத்தார் எவ்வளவு இலட்சணமாக உச்சரிக்க மாட்டார்கள்?
‘அச்சையிலுமுண்டு பிச்சைக்காரன்,’ என்பது போல இங்கும் சில எளியவர்கள் உண்டெனினும், அவர்கள் தாமென்ன, ‘பசித்தொறும் பட்டினி கிடந்தோம்,’ என்றார்களா? அப்படியிருக்கச் செல்வமுடையவர்கள் காலந்தவறாமல் அறுசுவைக் கறியுடனும், பால் பழத்துடனும் திருத்தியாய்ப் பஞ்சபக்ஷ்ய பராமான்னம் புசித்து வருகிறார்களென்பதைச் சொல்ல வேண்டுமோ? முன்னாளிற்சிலர் ஏகாதசி உபவாசம் போல ஒரு பட்டினி இரு பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்கு என்றைக்காவது சோறகப்பட்டாற் ‘காய்ந்த மாடு கம்பிலே விழுந்ததற்கு ஒப்பாக’ ‘உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா?’ என்று அதிக ஆவலாய், ‘உப்பைத் தொட்டுக்கொண்டு உரலை விழுங்குவது’ போல ஊறுகாயைக் கடித்துக்கொண்டு ஒரு பானைச் சோற்றை ‘என்ன நன்று,’ என்று பேய் போலத் திணிக்கப் பார்ப்பார்கள். அவர்களிடத்தில் நாகரிகமில்லை.
‘காசுக்கொரு புடைவை விற்றாலும், நாயின் சூத்து அம்மணந்தான்,’ என்பது போல, முழுதும் நிர்வாணமாயிராவிட்டாலும் அக்காலத்திற் சிலர் கந்தைகளைக் கட்டிக் காலங் கழித்தார்கள். இக்காலத்தில் எவர்களும் நல்ல பட்டுப்புடைவை, சரிகைப்புடைவை, நாணயவேஷ்டி, உத்தரீயம், பாகை, சொக்காய், சால்வை முதலியவைகளையும் துரை மக்கள் போல நாகரிகமாயுடுக்கிறார்கள்.
அக்காலத்திற் சிலர் தவிர, ஏனையோர்கள் ‘வெறும் காதுக்கு ஓலை மேல்,’ என்பதாகச் சொற்ப விலை பெற்ற சில பொன்னகை வெள்ளி நகைகளும், பித்தளைப் பணிகளும் குறத்திகளணிகின்ற பாலமணி கீரைமணிகளைம் பூண்டிருந்தார்கள். அவை ‘காக்கையின் கண்ணுக்குப் பீர்க்கம்பூப் பொன்னிறம்’ என்பதாக, அவர்கள் பார்வைக்கு உசிதமாய்த் தானிருந்தன. இக்காலத்தில் அப்படிப்பட்டவைகளைப் பூணத்தலையிலெழுதியா? எல்லாரும் நவரத்தினப் பிரதிமை போலவும், பொன்காய்த்த மரம் போலவும், உள்ளங்காஃ முதல் உச்சந்தலை வரையில் மாற்றிலும் விலையிலும் மிக்குயர்ந்த தங்கத்தாற்செய்து முத்து பச்சை வயிரம் கெம்பு முதலிய நவமணிகளிழைத்த அழகிய பற்பல ஆபரணங்களும் கண்ணுக்கு இரம்மியமாக இட்டனுபவிக்கிறார்கள்.
ஆயிரம் பேர்களுள் ஆரோ சிலர் அந்நாளில் வாகனப் பிரதிஷ்டையோடிருந்தார்களேயொழிய, இதரமானவர்கள் எல்லாம் வெயிலில் உலர்ந்து, மழையில் நனைந்து, பனியில் உடல் விறைத்து, உளையிற்கால் புதைந்து, கட்டாந்தரையில் எலும்புதேய நடந்துதானே திரிந்தார்கள்? இந்நாளிலோ, ஒன்றிரண்டு மூன்றுநான்கு குதிரைகள் கட்டப்பட்ட இரண்டு நான்கு சக்கரங்களையுடைய அலங்காரமான பெரிய வண்டிகள் காடிகள் பல்லக்குகளேயன்றி, உல்லாசமாகச் சஞ்சரிக்கிறார்கள்; நாநாவித சுகந்த பரிமள புஷ்பாதிகளும் தரித்துக் கொள்ளுகிறார்கள்.
அக்காலத்தில் சிலர்க்கு நல்ல கட்டில் மெத்தை தலையணை கிடையா. அவர்கள் கயிற்றுக் கட்டிலில், அல்லது ஓலைப்பாயில் அல்லது பீறற் பாயில், அவை சரீரத்தில் உறுத்தும்படி தூங்குவார்கள். மற்றுஞ்சிலர்க்கு அவையும் அகப்படாமையால், வெறுந்தரையிலே புழுதி படியப் பனந்துண்டு போல உருள்வார்கள். இக்காலத்தில் விந்தையான தந்தக் கட்டில், சித்திர ரத்தினக்கம்பளம், பல வருணச் சமுக்காளம், பிரப்பம்பாய், பாலிகைப்பாய், மிருதுவான மெத்தை முகமல் திண்டு தலையணைகளின் மேற்படுத்து ஆனந்தமாக நித்திரை செய்கிறார்கள். மேஜை நாற்காலி டீப்பா, ஸோபா முதலானவைகளையும் கையாண்டு வருகிறார்கள். செம்பு, பித்தளை, வெண்கலத்தாலாகிய தட்டு முட்டுகளேயன்றிப் பொன் வெள்ளிகளினாற் செய்யப்பட்ட கலம், செம்பு, தவலை, தாம்பாளம் முதலியவைகளையும் சிலர் சாதாரணமாக வைத்து வழங்குகின்றார்கள்.
அந்நாளில் நாகரிகத்தை அறியாத சிலர், ‘நெய்கிறவனுக்கேன் குரங்குக்குட்டி?’ என்பதாக, ‘நிர்ப்பாக்கியர்களாகிய நமக்கு இந்த வாய்மதம் ஏன்?’ என்றெண்ணாமல், நாகரிகமாக உடுக்கிறவர்கள் பூண்கிறவர்களைப் பார்த்து, இவர்களெல்லாம் ‘வாதங் கெடுத்தது பாதி, வண்ணான் கெடுத்தது பாதியாக,’ ஊதிக்கதித்த உடம்பில் வெள்ளையும் சள்ளையுமிட்டுப் பிலுக்குக்காட்டுகிறார்கள்,’ என்றும்; ‘ஜன்மாந்திரத்திற் செய்த பாபத்தினாற் காதிலும் கழுத்திலும் கண்டதையெல்லாம் வீணே சுமந்து திரிகிறார்கள்,’ என்றும்; தண்டிகை ஏறுகிறவர்களை நோக்கி, ‘ஐயையோ! பிரேதம் போலச் சுமக்கப்படுகிறார்களே!’ என்றும் சொல்லிப் பரிகசிப்பார்கள். அவைகள் தங்களுக்கில்லாமையினாலேயோ அல்லது உள்ளவை உரியவையெல்லாம் ஆழவெட்டித் தாழப்புதைத்துவிட்டுத் ‘தேடத்தெசையிருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டமில்லாமையால், உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போம்,’ என்பதையும் நினையாமல், உலோபகுணத்தை வகித்துச் செவ்வையாயுண்ணாமையால் உடுக்காமல், கட்டாமற் கழற்றாமல், பஞ்சை வேஷம் போட்டுக்கொண்டிருப்பதனாலேயோ, அல்லது பிறருடைய செல்வச் சிறப்பைக் கண்குளிரப் பார்க்கப் பொறாமையினாலேயோ அவர்களப்படிச் சொல்வது, இந்நாளிற் பெரும்பான்மையோர் அது அவரவர் அமைப்பென்று நினைப்பார்களேயல்லாமல், அவ்வாறு பேச மாட்டார்கள்.
- விபட்சன்
- முற்காலத்தில் எத்தனையோ பெயர் நிறை செல்வமுடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் பணத்தைக் குறித்து அவர்களுக்கே வரவு செலவு தெரியா. இக்காலத்தில் ஆரைப்பார்க்கிலும், ‘கிடக்கிறது ஒட்டுத்திண்ணை, கனாக்காண்கிறது மச்சுமாளிகை,’ என்பதாகக் கையிலே காசில்லாமற் போனாலும், டம்பத்திற் குறைவில்லாமலிருக்கிறார்கள்.
- சுபட்சன்
- ‘தோற்பது கொண்டு சபையேறேல்,’ என்பதை உணராமற் பேசுறீர். முன்னாளில் சிறுபான்மையோர் தவிர, ஒழிந்தவர்களெல்லாம், ‘வல்லார் கொள்ளை வாழைப் பழம்’ என்பதாகப் பிறர் பொருளைத் திருடியும், பிறர் கையிற் பரிதானம் வாங்கியும், பிறருக்காகப் பொய்ச்சாக்ஷி சொல்லியும், பிறரைக் கணக்குப் புரட்டி ஏமாற்றியும், மற்றும் அடாதவைகள் பல செய்தும், பெருந்தொகையாகப் பணம் சம்பாதித்து மகராஜர்களானார்களேயல்லாமல், நியாயமாக அல்லவே? ஆதலால், ஒவ்வொருவன் இருபது லக்ஷம் முப்பது லக்ஷமுடைய சீமானாயிருந்தும், அச்செல்வம் நிலைத்திராமல், ‘வாசலிற்கட்டித் தாழ்வாரத்தில் அறுத்தது’ போல, அதிசீக்கிரத்தில் நிர்மூலமாயழிய, அவர்கள் ஓட்டாண்டிகளாய் விட்டார்கள். இந்நாளில் அநியாயத்திற்கு உடன்படாமலும், சத்தியம்தவறாமலும், சன்மார்க்கமாய்ப் பொருள் தேடி, நீடித்த செல்வமுடையவர்களாயிருக்கிறார்கள்.
- விபட்சன்
- முற்காலத்தில் அனந்தம் பெயர் பிரபலமாகத் தானதர்மம் செய்தார்கள். இக்காலத்தில் அச்செய்கை, ‘பெருங்காயமிருந்த குடுக்கை வாசனை போகாது,’ என்பது போலச் சிலரிடத்திலாவது சிறுபான்மையாகவாயினும் இருக்க வேண்டும்; அஃது எவ்வளவுமில்லையே!
- சுபட்சன்
- அக்காலத்தார் பிரபலமாகத் தானதர்மஞ் செய்ததாயல்லவோ சொல்லுகிறீர்? அவ்வாறு செய்தது புண்ணியத்தின் பொருட்டா? ‘தகப்பனுக்குக் கட்டக் கோவணமில்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடைபாவாடை போடச் சொன்னான்,’ என்பதாகத் தாய்தந்தையர் முதலானவர்கள் அன்னவஸ்திராதிகளுக்கு ஆடற்பட, அவர்களை ஆதரியாமல், ஆபால கோபாலமும் தங்களைப் புகழவேண்டுமென்னும் பிரதிஷ்டைக்காகத்தானே? அவ்விஷயத்தில் செலவிட்ட பொருளும் ஆர் வீட்டு உடைமை? தாங்கள் கஷ்டப்பட்டுத் தேடியதா? ‘தட்டானைத் தலையிலடித்து, வண்ணானை வழிபறித்தது,’அன்றி, வேறல்ல. இது ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்குடைத்தது’ போல இருக்கின்றதன்றோ?
- விபட்சன்
- ‘தேடாதழிக்கிற் பாடாய் முடியும்,’ என்பதனால், அது சரியன்று. அவ்வளவு ஆடம்பரமாகச் செய்யச்சொல்லி ஆரடித்தார்கள்? தங்களுக்கு உள்ள மட்டில், ‘தேகி’ என்று வந்தவர்களுக்கு ‘நாஸ்தி’ என்று சொல்லாமல், ஒரு கவளம் அன்னமாவது ஒருபிடி அரிசியாவது பிச்சை இடலாமே! பை பையாய்த் தூக்கிக் கொடுக்கச்சொல்லுகிறார்களா? தச்சன் அடத்த தலைவாசலெல்லாம் உச்சியிடிக்க உலவித்திரிந்தாலும், எச்சிற்கையாலும் காக்கையொட்டுவாரில்லாமல், பிச்சைக்காரரெல்லாம் பொச்சை வற்றி, இலச்சை கெட்டுப் போகிறார்களே! இஃதென்ன கொடுமை! ‘பிச்சையிட்டுக் கெட்டவர்களும் பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும்,’ உண்டோ?
- சுபட்சன்
- அக்காலத்திற் பணம் சம்பாதிக்கிற வகை தெரியாது. மேலும், ‘கணக்கனுக்கு உடற்பிறப்புப் பட்டினி,’ என்பது போல, வெகு பெயர்க்குச் சோம்பலும் கூடற்பிறந்ததாய் இருந்தபடியினாலே, ‘குண்டாங்கரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு வழியில்லாமல்’ உடம்பெடுத்தவர்களெல்லாம் ஓடெடுத்துத் திரிந்தார்கள். இக்காலத்திற் பொருள் தேடும் வழியைச் சிறு பிள்ளையும் அறிந்திருக்கிறான். சோம்பியிராமற் பற்பல தொழிலுஞ் செய்து, ‘முப்பது நாளும் போகப் பொற்பணமே வா,’ என்றால், அப்பணம் வீடு தேடி வர, யாவரும் சீமான்களாயிருக்கிறபடியினாலே, அவர்கள் மானங்கெட்டுப் பிச்சைக்குப் போவானேன்? என்றாலும், ‘குபேரன் பட்டணத்திலும் விறகுக்கட்டுக்காரனுண்டு,’ என்பது போலச் சில வறியவர்களுமிருக்கிறபடியினாலே அவர்களுக்குள் பாத்திராபாத்திர மறிந்து பிச்சையிடுகிறதுமின்றி, விசேஷமாக வெகு பெயர் தானதர்மமுஞ் செய்கிறார்கள்.
- விபட்சன்
- பூர்வகாலத்தில் யஜமானர்கள் வேலைக்காரருடைய கஷ்டமறிந்து பரிபாலித்தார்கள். அவர்களும் எஜமானர்கள் சொற்படி கேட்டு உண்மையாய் நடந்து வந்தார்கள். இக்காலத்தில் அப்படியில்லையே!
- சுபட்சன்
- அந்நாளிலேதான், ‘உழவுக்கேற்ற கொழு,’ என்பது போலக் ‘கோபமில்லாத துரைக்குச் சம்பளமில்லாத சேவகரா’யிருந்து, சிலர் ‘கெட்ட மாடு தேடுகிறதுமில்லை, மேய்த்த கூலி கேட்கிறதுமில்லை,’ எஜமானர்களும், ‘சருகரிக்க நேரமன்றித் தீக்காய நேரமில்லை,’ என்பதாக, வேலையாட்கள் காலை தொடங்கி மாலை வரையில் வேலை செய்தாலும், நாழிகைப் பொழுதிருக்கக் கண்டாற் ‘பால் கறக்கிற பசுவின் கன்றுக்குப் புல்லறுத்து வா,’ என்பார்கள். இந்நாளில் அப்படிப்பட்டவர்கள் நாணும்படி யஜமானர் பெரும்பாலும் வேலைக்காரரைப் பெற்ற பிள்ளைகள் போல எண்ணி, ‘அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி,’ என்று சொல்லாமல், வருத்தமறிந்து அபிமானித்துச் சம்பள விர்த்தி பண்ணிச் சம்ரக்ஷணை செய்து வருவார்கள். வேலைக்காரரும் அவர்களை அலக்ஷியம் பண்ணாமற் சாக்ஷாது பிதாவாகப் பாவித்துக் ‘குதித்துக் குதித்து மாவிடித்தாலும், குந்தாணிக்கொரு கொழுக்கட்டையுங் கிடையாது,’ என்பதாக, ‘எத்தனை பிரயாசைப்பட்டாலும் சொற்ப வரும்படி இல்லையே! என்று கழப்பாமல் அவர்கள் காலினால் ஏவிய வேலையைக் கையினாற்செய்து முடித்துத் தக்க சம்பளம் பெற்று ஜீவித்து வருகிறார்கள்.
- விபட்சன்
- முற்காலத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் கிரமமாய் நடந்து வந்தன. இக்காலத்தில் அவை மிகவும் சீர்கெட்டிருக்கின்றன.
- சுபட்சன்
- முற்காலத்திலேதான் கடன் படுகிறவர்களுக்குக் கடன் வாங்கும் பொழுதுள்ள சந்தோஷம் தீர்க்கும் பொழுதில்லை, ‘கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை,’ என்பதாக விரோதமுண்டாகிறது. அவர்களுட்சிலர் வட்டியையும் சிலம் முதலையும் புரட்டுகிறது. சிலர், ‘ஆறுமாதத்திற்கு வட்டியில்லை,’ என்கிறது; அப்புறம் ‘முதலேயில்லை,’ என்கிறது. கடன் கொடுக்கிறவர்களும் ‘தனம் இரட்டிப்புத் தானியம் முத்திப்பு’ என்பதற்கு மேற்பட்ட மேற்பட்ட கடுவட்டி, அல்லது வட்டிக்கு வட்டி வாங்குகிறது. சிலர் இது விஷயத்தில் மண்டையில் து்ணியைக் கட்டிக்கொண்டு சண்டைக்கு மார் தட்டுகிறது; இவை பெருவழக்காயிருக்கின்றன. அவையெல்லாம் இப்பொழுது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று,’ என்பதாக முக்காலே மூன்றுவீசம் ஒழிந்து போயின.
- விபட்சன்
- முற்காலத்தைப் போலத் துரைத்தனத்திற்குக் குடித்தனம் அமைந்து நடக்கிறதில்லை. சிறிது காலத்திற்கு முன்பு வட இந்தியாவில் உள்ளவர்கள், ‘தடிக்கு மிஞ்சின மிடா’ வாக ஏற்பட்டுத் துரைத்தனத்தாரைப் பகைத்தார்களே!
- சுபட்சன்
- வட இந்தியாவிலுள்ளவர்கள் அன்று பட்டபாடு யாவரும் தெரிந்ததுதானே? யானை மதர்த்துத் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வது’ போல, அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்வதை அறியாமல், அகங்கரித்துத் ‘தூங்குகிற புலியைத் தட்டியெழுப்புவது’ போலச் சாதுக்களாயிருந்த துரைத்தனத்தாரைக் கோபமூட்டி, ‘வளர்த்த கடா கையிற் பாய்ந்த விதமாக’ எதிர்த்தது கண்டு துரைத்தனத்தார் அவர்கள்மேற் படையெடுத்த பொழுது ‘முயலை எழுப்பி விட்டு நாய் பதுங்கினது’ போல, அந்தத் துஷ்டர்கள் பதுங்க, இவர்கள் விடாது தொடர்ந்து அதம் பண்ணிக் கருவறுத்தார்கள். அப்பொழுது ‘விளக்கில் வீழ்ந்திறக்கும் விட்டில் போல’த் துரைத்தனத்தார் கையிற்சிக்கி அ்னேகர் மாண்ட செய்தியை அறிந்த சிலர், ‘இவர்கள் நம்மையுங் கொல்வார்கள்’ என்று அஞ்சி நடுங்கிக் ‘கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டுவது’ போலப் பல்லைக்காட்டிக் கெஞ்சிக் காலில் வந்து விழுந்து மன்னிப்புப் பெற்றார்கள். இக்காலத்தில் அப்படி ஆரும் கர்வப்பட்டு எதிர்ப்பாரில்லை. ‘நெருப்பை ஈ மொய்க்குமா?’ அதிகாரத்திற்குச் சகலமானவர்களும் பெட்டியிற் பாம்பு போல அடங்க, அபராதிகளாகாமல், சட்டப்படி தங்கள் குறைகளைச் சமயமறிந்து விண்ணப்பமெழுதி அறிவித்து, மருத்துவர் கொடுக்கும் மருந்தினாற் பிணியாளிகள் சொஸ்தமடைவது போலத் துரைத்தனத்தார் செய்யும்நீதியால் தீமை மாறி வேண்டிய நன்மைகளைப் பெற்று வருகிறார்கள்.
- விபட்சன்
- அக்காலத்திலிருந்து உத்தம அரசர்களைப் போலவும், அவர்களின் ஆளுகையைப் போலவும் இக்காலத்திலுண்டா?
பூர்வத்தரசர்...
தொகு- சுபட்சன்
- அக்காலத்தரசர்களிற் சிலர் நிறைகல்வி கற்காமலும், அரசி்யற்றுமுறைமை இன்னதென்று குறியாமலும் சற்சன சகவாசஞ் செய்யாமலும், ‘துரியோதனன் குடிக்குச் சகுனியைப் போல’க் கிருத்திரமகுணமுள்ளவர்களையும், ‘குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்கக் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்ன’த் தக்கவர்களையும் சேர்த்துச் சினேகித்துக் ‘குப்பையிற் கீரை முளைத்தாற் கப்பலுக்குக் காலாமா?’ என்பதையும் நினையாமல், அவர்கள் துர்ப்போதனையைக் கேட்டு, விசுவசித்து நடந்து, வாய் வயிறென்பது அறியாமல் தின்று கொழுத்து, ‘அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார்,’ என்பது போல, இவர்கள் பல கூத்திமாரைப் படைத்து, அவர்கள் மோகவலையில் அகப்பட்டு, மதி மயங்கி, எந்நேரமும் கேளிக்கையிலும் சங்கீதத்திலும் சூது விளையாட்டிலும் சிந்தை வைத்து, வீண் காலம் கழிக்கிறதேயல்லாமல், இராச்சியத்தில் நினைவு வருகிறதில்லை. ‘மயிலாப்பூர் ஏரி உடைந்தது,’ என்றால், ‘வருகிற கமிட்டிக்கு ஆகட்டும்,’ என்கிறதேயொழிய, ‘இது தாமதத்திற் செய்யத்தக்கதன்றே!’ என்று, தீர்க்காலோசனை செய்கிறதில்லை. ஒருவேளை அதைக் கட்ட முயன்றாலும், விரைவாக வேலையை நடத்த மாட்டாமையால், இவர்கள் கட்டுகிறதற்குள்ளே, ‘தேவடியாள் சிங்காரிக்கிறதற்குமுன் தேரோடி நிலையில் நின்றது,’ என்பதாக, ஏரி நீரெல்லாம் வியர்த்தமாய்ப் புறம்பாய்ந்து போய்விடும். அப்புறம், ‘நாய் வாழ்ந்தாலென்ன, பூனை தாலியறுத்தாலென்ன?’ என்பார்களே, அந்தப்படி, ‘ஆர்கெட்டாலும் ஆர் சுகப்பட்டாலும் நமக்கென்ன?’ என்றிருப்பார்கள். ஒருவரையொருவர் குத்திக் கொலைசெய்தாலும், கேள்வி முறையில்லை. இவர்களுடைய குற்றங்களை, ‘மாமியாருக்கு உடை குலைந்தால் வாயினாலும் சொல்லக்கூடாது, கையினாலும் காட்டக்கூடாது,’ என்பதாக, யாவரும் இவர்களுக்கு அறிவிக்கக் கூடாது. ஒருவர் சொற்புத்தியும் கேளாமற் சுயபுத்தியுமில்லால் இருக்கையிற் சத்துருக்கள் வந்து வளைத்துக் கொள்ள இராச்சியத்தை அவர்கள் வசம் ஒப்பித்துவிடுவார்கள். அப்பால் அது ‘நந்தன்படவேடும், நாயடுத்த அம்பலமும்,’ ஆய்விடுகிறது.
இக்காலத்தரசர்கள் அத்தனை மௌட்டியமுடையவர்களல்லர். பிரான்சிய சக்கரவர்த்தி, ருஷிய சக்கரவர்த்தி, சீனச் சக்கரவர்த்தி முதலானவர்களுடைய குணாதிசயங்களும் அரசு செய்யும் முறைமையும், அவர்களால் அந்தந்தத் தேசதரசர்களுக்கு உண்டாகும் சௌக்கியசௌக்கியங்களும் சமாசாரப் பத்திரிகை மூலமாய்த் தெரியவருகின்றன. அவைகளைக் குறித்து நாம் வாதிக்க வேண்டிய ஆவசியகமில்லை.
நம்மைப் பரிபாலித்து வருகிற பிரித்தானிய துரைத்தனத்தாரைக் குறித்து நமக்குத் தெரிந்த மாத்திரம் பேசுவோம்: மேற்படி துரைத்தனத்தாருடைய சுகுணங்களும், அவர்கள் தங்களுக்கு நெடுநாளாகச் சுவாதீனப்பட்டிருக்கின்ற இங்கிலாண்டு முதலான தேசங்களை அரசாளும் முறைமையும் என்னவென்று சொல்லுகிறது!
ஆங்கிலோ தேசத்தில் மகிமை தங்கிய பிருன்ஸ்விக்கு வமிசத்தில் வலம்புரிச்சங்கில் உற்பவித்த அழகான ஆணிமுத்தைப் போலத் தோன்றி விக்டோரியா என்று சிறந்த பெயர்பெற்ற அருமைத் துரைமகள் பட்டந் தரித்துக் கிரீடதாரியாய் செங்கோல் ஏந்திச் சிங்காதனத்தில் வீற்றிருக்க, அவ்வரசிக்குப் பிரதான மந்திரியாகப் பல்மர்ஸ்டன் பிரபுவும், இந்திய மந்திராலோசனைச் சபைத்தலைவராக ஸ்ரீகரோலஸ் ஊட் என்பவரும் அச்சிங்காதனத்தின் இரு பக்கத்திலும் அடுத்திருக்க, பலவகைப் பார்லிமெண்டு சபையாரும் ஆங்கிலோ இந்தியா மந்திராலோசனைச் சபையாரும் நிறைந்திருக்க, மாட்சிமை பொருந்திய கானிங்கு பிரபு என்னும் கவர்னர் ஜெனரல் முதலானவர்களும் இசைந்திருக்க இந்தியவின் தலைப்பட்டணமாகிய கல்கத்தாவை உள்ளிட்டிருக்கின்ற பங்காளம், சென்னப்பட்டணம், பம்பாய், ஆக்கிரா என்னும் நான்கு ராச்சியங்களின் தலைவர்களாகிய கவர்னர்களும் லெப்டினெண்டு கவர்னர்களும், நீதிபதிகளாய் ஆங்காங்குள்ள ஜட்ஜுகளும், அரசிறை விசாரணைக் கர்த்தர்களாகிய அக்கவுண்டண்டு ஜெனரல்களும், பொக்கசத்தலைவர்களாகிய திரஷரர்களும், ஜில்லாத் தோறும் அரசிறை சேகரிக்கும் கலெக்டர்களும், அதிகாரஸ்தர்களாகிய வெவ்வேறு போலீஸ் கமிஷனர்களும், மற்றும் உயர்வும் தாழ்வுமாகிய பற்பல துரைத்தன உத்தியோகம் பார்ப்பவர்களும் கிரமமாக ஏற்பட்டிருக்க, குதிரை ராணுவங்கள், ஒட்டக ராணுவங்கள், பீரங்கி ராணுவங்கள், அவ்வவ்விராணுவங்களில் வெவ்வேறாயுள்ள சேனைத்தலைவர்களாகிய ஜெனரல், கர்னல், மேஜர், காப்டன் முதலானவர்களும், ஒவ்வொரு ராச்சியத்திற்கும் ஆங்காங்கு வகுப்பு வகுப்புகளாகக் காவலாயிருப்பதுமன்றி, ஆவசியகமான பொழுது யுத்த சன்னத்தராய் ஆயுத முஸ்தீப்புடனே போர்க்கோலங்கொண்டு, அந்நிய தேசங்களுக்குத் தண்டெடுத்துப் போய், அரசர்க்குரிய சதுர்வித உபாயங்களிற் சாமதான பேதங்களாற் கைவசமாகாத பகைவர்கள், ‘சடையைப் பிடித்திழுத்தாற் சந்நியாசி கிட்ட வருவான்,’ என்பதாகத் தண்டோபாயத்தைச் செய்தால் இணங்குவார்களென்று அவர்களுடைய கோட்டைகளை முற்றுகை செய்ய, அது நோக்கி அவர்கள் கடற்கரை மணல்போல அளவிறந்த சேனைகளோடு திரண்டு எதிர்த்த சமயத்தில், ‘கீரைத்தண்டு பிடுங்க ஏலப்பாட்டும் பாட வேண்டுமா? ஆயிரங் காக்கைக்கு ஒரு கல்லே போதும்,’ என்பதாகச் சில பீரங்கிகளைக் கொண்டு குண்டுப் பிரயோகஞ் செய்து, நாசமாம்படி ஜயித்து, ஜயபேரிகை முழக்கி, பல தேசங்களில் தங்கள் வெற்றிக்கொடியை நாட்டி, பல தேசத்தாரிடம் கப்பம் வாங்கிவர, யாதொரு தவறும் வாராமற் கட்டுக்காவலுடனே அரசாட்ச நடந்து வருகிறது. மேலும், இந்தத் துரைதனத்தாரால் அச்சிட்டுப் பிரசித்தஞ் செய்யப்படும் பற்பல சமாசாரப் பத்திரிகைகள் மூலமாய் அந்தந்த ராஜ்யங்களில் நடக்கும் சகலமான செய்திகளையும் இருந்தவிடத்திலிருந்தே அன்றன்று அறிந்துகொள்ளுகிறார்கள். இவர்கள் கோலின் கீழ் அமைந்திருக்கும் பிரஜைகளுக்குப் பல பல நன்மைகளை விளைவிப்பதற்கு நல்ல நல்ல சட்டங்கள் அப்போதப்போது உண்டாக்கப்படுகின்றன. இதற்காகவே கல்கத்தாவில் லெஜிஸ்லேட்டிவ் கௌன்ஸில் என்னும் சட்ட நிரூபணச் சபையும், கவர்ன்மெண்டு தோறும் மந்திராலோசனைச் சபைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் நாநா விஷயங்களையும் நன்றாய் ஆராய்ந்து நடத்தும்பொருட்டுத் தனித்தனியே எண்ணிறந்த சங்கங்களுமிருக்கின்றன. அந்நாளிலுள்ள துரைத்தனங்கள் பெரும்பாலும் ‘அச்சில்லாமல் தேரோட்டுவது போலவும்’ ஒரு சமாசாரப் பத்திரிகையாகிலும், இப்படிப்பட்ட திறமான சட்டங்கள் ணபைகளாகிலும் இல்லாமலே நடத்தப்பட்டன. அஃதென்னை? கண் தெரியாமல் வழி நடக்கிறதாகவல்லவோ இருக்கும்! சாட்டையில்லாப் பம்பரத்தை ஆட்ட வல்லவருமுண்டா?
எல்லாவிடங்களிலும் சாஸ்திரக் கல்விகளும், பலவிதத் தொழிற்கல்விகளும் கற்றுத் தேறினவர்களைப் பரீக்ஷித்து, பி.ஏ., எம்.ஏ., முதலிய பட்டங்களும், தக்க உத்தியோகங்களும் இஷ்டமாய்க் கொடுக்கப்படுகின்றன. ‘கொட்டிக் கிழங்கு கிண்டி எடுக்கிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத் தெரியுமா?’ அதுபோல, அக்காலத்திலிருந்த சில உத்தியோகஸ்தரால் அவ்விதப் பரீக்ஷை கொடுக்க முடியுமா? ஆங்கிலேயர் மாத்திரமின்றி இந்துக்களும் ஈஸ்திந்தியரும் மகமதியருமாகிய அனைவரும் பிராட்டு விவாகனென்னும் சதரமீன், பிரின்சிபல் சதரமீன், நேட்டிவ் ஜட்ஜ், கமிஷனர், உபகலெக்டர், தாலுக்கா முன்சிப், கோர்ட்டுப்பண்டிதர், கோர்ட்டுத் துவிபாஷி, சிரெஸ்ததார், ஆபீசு மானேஜர், ராணுவ சுபேதார், ஜமேதார், லிகிதர், திரான்சிலேட்டர் முதலிய உயர்ந்த உத்தியோகஸ்தர்களாக்கப் படுகிறார்கள்.
பிறவிக்குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தது போல, ஏழைகளாகிய தொழிலாளிகளுக்கும் இருப்புப்பாதை முதலிய ஸ்தானங்களில் மாறாமல் வேலை கிடைத்து வருகிறது. அது முகாந்தரமாக அவர்கள் பணம் சம்பாதித்துச் சீராய் ஜீவனம் பண்ணி வருகிறார்கள். அதனால், அரிசி விலை நெல்விலையும் விசாரிக்கிறதில்லை. குறைவாயிருக்கிறதேயென்று அவர்களுக்கு விசனமுண்டாகிறதில்லை. கூலிக்காரர்களுக்குள்ளும் எண்ணிறந்த பெயர் மோரீஸ் முதலிய பிரதேசங்களுக்குப் போய்ப் பாடுபட்டுப் பொருள் தேடுகிறார்கள். ‘கெட்டவன் பட்டணஞ் சேரவேண்டும்,’ என்ற பழமொழிப்படி இந்தச் சென்னை முதலிய நகரங்களுக்குள்ளும் அனேகர் பிரவேசித்து, வேலைசெய்து, அதிக பிரயோசனம் பெறுகிறார்கள். இக்காலத்தில் எவர்களும் உத்தியோகத்திற்கு ‘உமேது செய்யவேண்டுவதில்லை. படித்துப் பரீக்ஷை கொடுத்தவர்கள் வலுவில் அழைத்து உத்தியோகம் செய்விக்கப்படுகிறார்கள். ‘அறிவுடையொருவனை அரசனும் விரும்பும்,’ அல்லவா? மேலும், ராஜபக்ஷமுடையவர்களுக்குக் கவர்னர் ஜெனராலானவர் ‘கில்லத்து’க் கொடுப்பது மன்றி, மானியமும் விடுகிறார்.
எளியவனாகிய இழிகுலத்தவனும் சிறப்பாக உடுத்து வாகனப் பிரதிஷ்டையுடனே எங்கும் உல்லாசமாய்ப் போக்குவரவு செய்யலாம். அதைக்குறித்து ஆரும் ஏனென்று கேட்கக்கூடாது. கவர்னர் ஜெனரல் முதலானவர்கள் எதிரே வந்தாலும், ‘நம்மைக்கண்டு இவன் விலகவில்லையே!’ என்று சீற்றங்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனத்தில் அணுவளவாவது மாச்சரியம் உண்டாகாது.
கருநாடகத் துரைத்தனத்திலென்றாலோ, ஒருவன் அப்படிவரக் கண்டால், எந்தச் சாமானிய துருக்கனும், ‘ஹரே பக்ளோ! பக்ளோ! மாறு மாறு!’ என்பானே ஒழியச் சகிப்பானா? உண்ணாமலூரெங்கும் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்குப் போகலாகாது,’ என்பதனால், ஆராவது அவர்கள் பார்வைக்கு முன்பாகச் செவ்வையாய் உடுக்கவும், பெரிய வீடு கட்டவுங்கூடுமா? பிச்சைக்காரர் வேஷம் பூண்டல்லவோ திரியவேண்டும்? அவர்கள் துரைத்தனத்தில் ஏதுக்கும் உதவாத ஒருவனை உயர்ந்த உத்தியோகத்தில் ஏற்படுத்துவார்கள். அதிலவன் கொஞ்சம் தலையெடுத்ததது கண்டால், ‘ஏற விட்டு ஏணியை வாங்குவது’ போலவும், ‘சோற்றைப் போட்டுத் தொண்டையை நெரிப்பது’ போலவும், நிர்நிமித்தமாகக் குற்றஞ்சாட்டி, உடனே அதை விட்டு நீக்கி விடுவார்கள். ‘கல்யாண வீட்டிலேயே பந்தற்காலைக் கட்டி அழுகிறவள், கருமாந்தர வீட்டில் அழாமலிருப்பாளா?’ அதுபோலக் குற்றமில்லாதவர்களையே தண்டிக்கிற அவர்கள், குற்றவாளிகளைத் தண்டியாமலிருப்பார்களா? அன்றியும், ‘ஜாதியபிமானமும் சமயாபிமானமும் சந்நியாசிக்கும் போமா"? என்பதை அவர்கள் நினைக்கிறதேயில்லை. அவரவர் ‘குலாசாரத்தைக் குழைகறியாக்கி, மதாசாரத்தின் வாயில் மண்ணடிக்க வேண்டும்’ என்பதே அவர்களுடைய நோக்கம்.
நாகப்பட்டணம், சதுரங்கப்பட்டணம், தூற்றுக்குடி, கொழும்பு, யாழ்ப்பாணம் முதலானவைகளைக் கட்டியாண்ட உலாந்தருடைய ஆளுகையில், இந்து மதஸ்தர், மகமதிய மார்க்கத்தார், உரோமாசமயத்தார் தங்கள் தங்கள் மதச் சடங்குகள் செய்யக்கூடாது. செய்தவர்களுக்கு அபராதம் போடுவார்கள். முழங்காலுக்குக்கீழே தொங்கச் சொக்காய் போடக்கூடாது. அந்தப்படி வேஷ்டியும் உடுத்தலாகாது. தங்கள் சபையிற் சேராதவர்களை உத்தியோகத்தினின்று வி்லக்கிவிடுவார்கள்.
பாளயக்காரர் காலத்தில்தேசத்தில் ஆராயினும் பச்சென்றிருக்கக்கண்டால், சிலர் ‘பச்சை கண்டால் ஒட்டடி மகளே,’ என்பதாகத் தங்கள் கையின் கீழிருக்கிற துஷ்டர்களாகிய பழம் பெருச்சாளிகளை உபாயமாய்ப் போய்க் கன்னமிட்டுத் திருடி வரச்சொல்ல, அவர்கள் இராத்திரியில் முகத்திற் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு பந்தத்தைக் கொளுத்திப் பிலுபி்லென்று சென்று, குட்டிச்சுவரேறிக் குதித்து, உள்ளே நுழைந்து, வீட்டைக் குளம் பறித்துக் கையில் அகப்பட்ட மட்டும் சுருட்டிக்கொண்டு தாண்டிவிடுவார்கள். ‘ஒருசந்திப் பானையை நாயறியாது,’ அது போல, இந்த மூர்க்கர்கள் நல்லோர் பெரியோர்களை அறியார்கள். அற்பக் குற்றம் செய்தவர்களையும் சித்திரவதையாகக் கடுங்கொலை செய்வார்கள். ‘குரங்கின் கையிற் கொள்ளி கொடுத்தது போல, இந்தப் பாவி மக்களுக்கு அதிகாரங் கொடுத்தவர்கள் ஆரோ, தெரியவில்லை!
ஹைதர் அலியின் காலத்தில் நடந்த துன்மார்க்கத்தைச் சொல்லத் தொடங்கினாற் பெரிய பாரதமாக அல்லவோ விரியும்! அக்கொடியன் தன் படை வீரர்களுக்குச் சம்பளம் கொடாமல், ‘இராச்சியத்திற் கொள்ளையடித்து ஜீவனம் பண்ணுங்கள்,’ என்று ஏவுவான்! அவர்கள் ஏறக்குறைய எழுபதினாயிரம் எண்பதினாயிரம் பெயர்கள் தலைக்கொரு நாட்டுத் தட்டுத் தேடிப்பிடித்தேறி, பல திசையிலும் போய், ஆண்சிறை பெண்சிறை பிடிப்பார்கள். அனேகரை மரக்கிளையில் தலைகீழாகத் தூக்கி, அடியில்நெருப்பைப் போட்டுக் கொளுத்தி, மூக்கில் மிளகாய்ச்சாறு வார்த்து, கத்தியால் சிலிர்க்கச் சிலிர்க்க வெட்டி, வைப்புச் செப்புகளைக் காட்டச் சொல்லி, உள்ளதையெல்லாம் செப்பனிட்டுக் கொண்டு, கோயில்களுக்குள்ளும் புகுந்து, விக்கிரகங்களையும் ஆரதனைத் தட்டுமுட்டுகளையும் வாரியெடுத்துக்கொண்டு தாமதித்திருந்தால் ஆர் வந்து வளைத்துக்கொண்டு உதைக்கிறார்களோவென்கிற அச்சத்தினால், அவ்விடத்தில் நில்லாமல், அதிசீக்கிரத்திற் காற்றாய்ப் பறந்து போய்விடுவார்கள். இப்படி நடப்பதுகண்டு, சில சமயத்தில் ஆங்கிலேயரும் அவர்களைத் துரத்தியடித்தார்கள். இக்காலத்திலோ, அவ்வகையான உபத்திரவம் சொப்பனத்திலும் இல்லை. ஒன்று கேளும்: ‘தன் பெண்டாட்டியைத் தான் அடிக்கிறதற்குத் தலையாரி கையிற் சீட்டுக்கேட்டு வாங்க வேண்டுமா?’ அந்தப்படி இந்தத் துரைத்தனத்தார் தங்கள் ஆளுகையின் கீழிருப்பவர்களை அடக்க வேண்டுமானால், இவர்களுக்குப் பிரயாசமென்ன? சகலமானவர்களும் தத்தம் குலாசார மதாசாரங்களைத் தழுவி நடப்பதைக் குறித்து, இவர்கள் சிறிதும் அசூயைப்படாமலே இருக்கிறார்கள்.
- விபட்சன்
- இந்த ஆங்கிலேய துரைத்தனத்திலும் சாஸ்திரயுத்தமாகிய உடன்கட்டையேறுவது, தீக்குளிப்பது, செடிலாடுவது முதலானவைகளும், மற்றும் சில சடங்குகளும் தவிர்க்கப்படவில்லையோ?
- சுபட்சன்
- கணவன் இறந்தபொழுது மனைவி (சககமனம்) உடன்கட்டையேறல், அல்லது அக்கினிப்பிரவேசம் பண்ணுகிறது சாஸ்திரீயமாயிருந்தும், கடூரவதையாயிருப்பது பற்றி நிறுத்தப்பட்டது. வடக்கே, பெற்ற பிள்ளைகளை இரக்கமின்றி மனந்துணிந்து தாய்மார் எடுத்துக் கங்கையிலெறிவதும், சில தேசங்களிற் பிராணாபத்திற்கு ஏதுவாகிய செய்கை இதுவென்று நினையாமல் மனிதர்களுடைய உடம்பு பதைபதைக்க முதுகிலே இருப்புத் துறடு கொண்டு உருவக்குத்தி உயரத்தூக்கிச் செடிலாட்டுவது முதலிய வழக்கமும் தவிர்க்கப்பட்டன. எவன் எப்படிப் பட்ட செய்தற்கரிய குற்றஞ் செய்தாலும், ‘தலைக்கு மிஞ்சின ஆக்கினை என்ன இருக்கிறது?’ என்று அவனுக்குத் தூக்குக்கு மேற்பட்ட தண்டனை விதிக்கிறதற்குச் சட்டமேயில்லை. இவ்விதத்தினாலேயே இந்தத் துரைத்தனத்தார் ஜீவகாருணியுமுடையவர்களென்பது விளங்கவில்லையா? வெகுகாலமாய் ஒழியாத வலங்கை இடங்கைக் கலகம், துஷ்டாத்துமாக்கள் கும்பு கூடி்யிருந்து போகிறவர்கள் வருகிறவர்களைக் கண்டவிடத்தில் அடித்துப் பறிக்கிறது, காதை மூக்கை அறுக்கிறது, தலையை வெட்டிப் புதைக்கிறது, குடலைக்குத்திச் சரிக்கிறது, தீவட்டித் திருடர் உபத்திரவம் இவை முதலான சங்கடங்கள் அனைத்தும் நாளா வட்டத்தி்லே தொலைந்து போயின. தர்மம் தலையெடுத்தது. நீதிநிலைபெற்றது. சாந்தம் தழைத்து விளங்கியது. உண்மை உயர்ந்தோங்கியது. தேசாபினாமுஞ் செழிக்கின்றது. இனி ‘திருக்கண்ட கண்ணுக்குத் தீங்கேயில்லை,’ என்பதாக, எந்த வேளையிலும் மலைகள் மரங்கள் புதர்கள் அடர்ந்து இருள்சூழ்ந்த ஜனசஞ்சாரமில்லாத காட்டிலும் நிர்ப்பயமாக இருகையிலும் பொன்னேந்திக் கொண்டு போகலாம். ‘ஆயிர நட்சத்திரங்கள் கூடினாலும் ஒரு சந்திரனாகுமா?’ அது போல மற்றைத் துரைத்தனங்களெல்லாம் இந்தத் துரைத்தனத்திற்கு இணையாகுமா? இதுவே தர்ம துரைத்தனம். இதை வகுத்துரைக்க என் ஒரு நாவினாலே முடியாது.
- விபட்சன்
- இந்த ஆங்கிலேயருக்கு இத்தனை பிரபலமான கல்வியும், அதிசயிக்கத்தக்க யுத்தியும், அசாத்தியமான வல்லமையும், சமயோசிதமான ராஜதந்திரமும், தகுதியான செல்வமும், மிகுதியான நாகரிகமும் பூர்விகமாய் உண்டென்பது எனக்குத் தோன்றவில்லை; சில காலமாகத்தான் உள்ளன போலக் காண்கின்றது.
- சுபட்சன்
- அதற்கு ஐயமில்லை? ஆங்கிலேயருக்குள் நல்ல பாரமார்த்திகரைக் கேட்டால், அவர்களும், ‘ஆதியில் எங்களுக்குச் சீர்திருத்தமில்லை; வெகுநாளுக்குப் பின்புதான் அது முளைத்து வரவரக் கிளைத்துக் காலக்கிரமத்திலேயே வளர்ந்து, முந்தூறு வருஷமாக நன்றாய்த் தழைத்தோங்கி வருகின்றது; புராதனம் அல்ல,’ என்றே ஒளியாமற் சொல்லுவார்கள். இந்த ஒரு விஷயத்தினாலாவது, ‘முற்காலமன்றிப் பிற்காலமே நல்லது, என்பது தெரிய வந்ததா? நீர் இதுவரையில் முற்காலம் முற்காலமென்றே முறையிட்டு வந்தீரே! இப்பொழுது என் வழிக்கே வந்துவிட்டீர்! ‘குடலறுந்த நரி எவ்வளவு தூரம் ஓடும்.
- விபட்சன்
- உம்மைப்போல எனக்கு அதிக அனுபவமில்லை. உம்மாலே அபார சந்தேகமெல்லாம் நிவர்த்தியாகி, அனேக விஷயம் விளக்கமாய்த் தெரிய வந்தன. இன்னும் சில கேள்வி கேட்க விருப்பமாயிருக்கிறது. சற்றே முகங்கோணாமல் தயை செய்ய வேண்டும்!
- சுபட்சன்
- : எவர்களும் தாயினுடைய கர்ப்பத்திலிருக்கும் பொழுதே கற்றுக்கொண்டு வருகிறதில்லை; ‘பட்டறி கெட்டறி; பத்தெட்டு இறுத்தறி’ என்பதற்கிசைய உலகத்திற் பலவிடங்களிலும் உழன்று பயின்றுதானே அறியவேண்டியிருக்கிறது! ஆகையால், சுகமாகக் கேளும்; தெரிந்த மட்டும் சொல்லுகிறேன்.
- விபட்சன்
- : ஆங்கிலேயர் இப்படிக்கெல்லாம் சர்வோத்தமராயிருக்க இவர்களைக் குறித்து, ‘குயவனுக்குப் பலநாளைய வேலை; தடிகாரனுக்கு ஒரு நாழிகை வேலை,’ என்பதாகச் சிலர் ‘அடா அப்பா! இவர்கள் பார்த்தாற் பசுவும், பாய்ந்தாற் புலியுமாயிருக்கிற குளிர்ந்த கொள்ளிகள்! இவர்களை எப்படி நம்பி விசுவாசிக்கிறது?’ என்கிறார்களே! அஃதென்னை?
- சுபட்சன்
- உயர்ந்த மரத்தைக் காற்று மோதுகிறது வழக்கந்தானே! மேலும், ‘அடுக்குகிற அருமை உடைக்கிற பூனைக்குத் தெரியுமா?’ ‘லோகோ பின்னருசி,’ என்பதாகப் பல பெயரும் பல விதமாகப் பேசுவார்கள்தாம்! ஆனாலும் இவ்வாறு பேசுகிறவர்கள் பொறாமையுடையவர்களே. இதனால் ஆங்கிலேயருக்கு இழிவென்னை? இஃது, ‘அக்கினி மலைமேற் கர்ப்பூரபாணம் பிரயோகித்தது போல’ அல்லவா? யாவரேனும் சுபாவத்தில் அடக்கமுடையவர்களாகவே இருக்க வேண்டும். காரியத்தளவில் அப்படியிருக்கக்கூடுமா? கண்டிப்பாயிருக்க வேண்டுவது நியாயந்தானே! இருந்தாலோ,‘யதார்த்தவாதி வெகுஜன விரோதி,’ என்பதாய்த்தான் முடியும்; ஆதலால், ‘சொல் வளப்பமில்லாத நற்கதை சொன்னாலும் அதுவே துர்க்கதை,’ என்பதாக அதை விட்டு விட்டு, வேறெதையாவது பேசும்.
- விபட்சன்
- சுதேச ராஜாக்களுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆங்கிலேயர் பேராசை கொண்டு அபகரித்துக் கொண்டார்களே! தர்மமா? இஃது ‘ஊராருடைமைக்குப் பேயாய்ப் பறக்கிற’ கதையாய் முடியாதா?
- சுபட்சன்
- சுதேச ராஜாக்கள் விஷயத்தைப்பற்றி முன்னமே சொன்னோமே! இன்னமும் சிறிது சொல்லுகிறோம். மேற்படி ராஜாக்கள் அரசியற்றுந் திறமையில்லாமலே இராச்சியத்தை இழந்து போனார்கள். அந்த மட்டில் அவர்களை ஆங்கிலேயர், ‘சட்டி சுட்டது; கைவிட்டது,’என்பதாக மற்றைத் துரைத்தனத்தாரைப் போல அனாதரணை பண்ணிக்கைவிடாமல், மனமிரங்கி அவர்களுக்குக் கூடிய மாத்திரம் உதவிசெய்து தானே வருகிறார்கள்?
- விபட்சன்
- ‘தோலிருக்கச் சுளைவிழுங்கி’ போல, அவர்களுடைய தேசங்கள் எல்லாவற்றையும் ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்டு, வியாஜத்துக்காக அவர்களுக்குக் கொஞ்சம் பொருளை மந்திரிக்கிறது போலக் கை காட்டி வருகிறார்களே! இதுதானா உதவி செய்கிறது?
- சுபட்சன்
- ‘சும்மா இருக்கிற அம்மையாருக்கு அரைப்பணத்துத்தாலி போதாதா?’ என்பதாக, முழுமையுங் கைவிட்டவர்களுக்குப் பிராண ஆதாரமாக அவ்வளவு கிடைத்து வருகிறது எவ்வளவு விசேஷம்? அதைவிடக் கூடை கூடையாக வாரிக்கொடுப்பார்களோ?
- விபட்சன்
- இந்தக் கவர்மெண்டார் இந்தியாவிற் சில எளியவர்கள் வெகு காலமாய் இனாமாக அனுபவித்து வந்த மானியங்களைப் ‘பிச்சைக்காரன் சோற்றிற் சனீஸ்வரன் புகுந்தது’ போல, அவர்களுக்குச் சிறிதும் சுதந்தரமில்லை என்பதாக நிறுத்தி விட்டார்களே! இஃதென்னை நியாயம்?
- சுபட்சன்
- அப்படியல்ல; ஐம்பது வருஷத்திற்குக் குறையாத அனுபவமும் தக்க காரணங்களோடிசைந்த ஸாஸனங்களும் இல்லாதவைகளைத் தள்ளினார்கள். அன்றியும், ஒருவனுக்குரியது வேறொருவனுக்குச் சுவாதீனமாய் மாறுபட்டுச் சந்தேகத்திற்கும் சங்கடத்திற்கும் இடமாயிருந்ததனால், அவர்கள் தமது புத்தி விசேஷத்தால் அதைப் பூராயமாக ஆராய்ந்தறிந்து, அச்சங்கட முதலானவைகள் நிவாரணமாக, இனாம் ஸாஸனங்களைப் புதுப்பித்து, ஸ்திரப்படுத்தினார்கள். இப்பொழுது ஆக்டுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. அரசு நடத்துவதென்னை, எளிதா? அதற்கு முக்கிய சாதனமாகப் பூரண வித்தியா சாமர்த்தியமும், சூட்சுமபுத்தியும், தொன்றுதொட்ட அனுபவம் முதலியவைகளும் வேண்டுமே! இவ்விஷயத்தில் நமது சென்னைக் கவர்னரவர்களைக் குறித்துச் சொல்லவேண்டுவதேயில்லை.
- விபட்சன்
- இந்தச் சென்னை ராஜதானிக்குக் கவர்னராய் வந்திருக்கிற ஸ்ரீ கரோலஸ் டிரிவெலியன் என்பவருடைய குணாதிசயம் எப்படிப்பட்டது?
- சுபட்சன்
அறம்நி ரம்பிய அருளுடை அந்தணர்க் கேனும்
பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்,’
-என்று சொல்லப்பட்டிருந்தும், மேன்மேலும் தனவானும் கனவானுமாகிய நம் கவர்னரவர்களிடத்தில் எவ்வளவாவது அப்படிப்பட்ட வீணான பெருமித குணமிருக்கின்றதா? இவர் நிகர்வியாய்,
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்.
என்பதை உணர்ந்து, தேசத்தார் சுலபமாகத் தரிசிக்கத் தக்கவராயும், ஏழைகளிடத்தில் கடுமையில்லாமல் தாழ்மையாய் முகமலர்ந்து வசனிப்பவராயுமிருக்கின்றாரே! இஃது ஆச்சரியமன்றோ?
- விபட்சன்
- பிரான்சியர், ருஷியர், சீனர், ஆஸ்திரியர், அமெரிக்கர், உலாந்தர், போர்த்துகீசர், ஸ்பானியர், ஜெர்மானியர் முதலானவர்கள் ஆளும் தேசங்களிலும் ஆங்கிலேயர் அரசாளும் தேசம் மிகவும் அதிகமல்லவா?
- சுபட்சன்
- ஆம் ஆம்! ஆங்கிலேயர் அவர்கள் எல்லாரைப் பார்க்கிலும் மகா பராக்கிரமசாலிகளாகையால், ‘பலோ ராஜா பிருதிவி’ என்பதாக இவர்கள் சுவாதீனத்தில் எண்ணிறந்த தேசங்கள் உட்பட்டிருக்கின்றன. பற்பல தேசங்களும் நமது ஆங்கிலேய மகாராணியின் அழகிய வெண்கொற்றக்குடை நிழற்கீழ் அடங்கியிருக்கின்றன என்பதற்குப் பிரத்தியக்ஷமாக, அந்தப் பற்பல ராச்சியத்தாருடைய விசித்திரமான கொடிகள் யாவும் ஒவ்வொரு விசேஷதினத்தில் இங்கிலாண்டில் மாத்திரமன்றி, இந்தியாவிலும் கல்கத்தா முதலிய ராஜதானிகளின் உன்னதமாகிய கோட்டைக் கொடிக்கம்பங்களிலெல்லாம், தேர் சிங்காரித்தது போல அடுக்கடுக்காக ஏற்றி அலங்கரிக்கப்பட, அவையனைத்திற்கும் மேலாகத் தருமசெங்கோல் செலுத்தி வரும் இந்தப் பிரித்தானிய துரைத்தனத்தாரின் மகிமை தங்கிய கொடி ஏற்றப்பட்டுப் பிரகாசிக்கின்றதே! இதைவிட வேறு திருஷ்டாந்தமும் வேண்டுமா? ‘சந்தையில் அடித்ததற்குச் சாக்ஷியேன்?’
- விபட்சன்
- அப்படியா! இத்தன்மையாகிய ஆங்கிலேய அரசாட்சியானது இடையூறின்றி நெடுங்காலம் நிலைப்பெற்றிருக்குமானால், இவர்கள் கோலின் கீழ் அமைவுற்றிருக்கும் சர்வஜனங்களுக்கும் பரம்பரை பரம்பரையாய் ஆச்சந்திரார்கம் விசேஷித்த தன்மை உண்டாகுமென்பதற்குச் சந்தேகமில்லை அல்லவா?
- சுபட்சன்
- மெய்தான்; அது சர்வ ஜீவ தயாபரரும், ஜகத்காரணருமாகிய கடவுளின் சங்கற்பத்தலல்லவோ அனுகூலிக்க வேண்டுவது? தெய்வச்செயலில்லாமற் பொழுது விடியுமா? அஸ்தமிக்குமா?
- விபட்சன்
- அப்படியே அனுகூலிக்கக் கடவுள் திருவுளம் பற்றுகிறதற்கு நாம் என்ன செய்யவேண்டும் சொல்லும்.
- சுபட்சன்
- அவர் ஆபத்பாந்தவரும் பத்த பராதீனருமாயிருப்பவராகையால், அந்தப் பரமாத்துமாவை நோக்கிப் பிரார்த்தித்தால், நமது அபீஷ்டப்படியே திருவுளமிரங்கிக் கிருபை செய்யக்கூடும்.
- விபட்சன்
- ‘அப்படியே நாம் பிரார்த்தனை செய்வோம் என, பிறகு இருவரும் ஒருமனப்பட்டு, ஆங்கிலேய அரசாட்சி தழைத்தோங்கி நீடூழியாய் அழியாது நிலைபெற்றிருக்க வேண்டும் என்று சச்சிதானந்த நித்திய பரிபூரணராகிய கர்த்தாவை மனமொழி மெய்களால் தியானித்து வாழ்த்தி வணங்கி உய்ந்திருந்தனர்.