விந்தன் கதைகள் 2/கலையும் வாழ்க்கையும்

கலையும் வாழ்க்கையும்

ஒளிப்பதிவாளர் ஒன்பதாவது கொட்டாவியை விட்டு விட்டு, ஐந்தாவது காப்பியின் துணையுடன் பத்தாவது கொட்டாவியை விரட்டப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது, 'மேக்-அப்' அறையை விட்டு வெளியேறிய குமாரி கும்கும், பாட்டி பவனாம்பாளுடன் 'செட்'டுக்குள்ளே பிரவேசித்தாள்.

அஜந்தாக் கொண்டை - அசல் அல்ல, போலி; அந்தக் கொண்டையைச் சுற்றிலும் முல்லை அரும்புகள் - அசல் அல்ல, போலி; காதன வோடிய கண்கள் - அசல் அல்ல, போலி; கனிவாய் இதழ்கள் - அசல் அல்ல, போலி...

ஒரு வேளை அவளுடைய வாழ்க்கையே போலியாயிருக்குமோ?

அதைப் பற்றி அவளும் சிந்தத்தில்லை; அவளுடைய அபிமானிகளும் சிந்தித்ததில்லை!

இயற்கை இரவில் ஒளி வீசும் நட்சத்திரத்துக்குப் போட்டியாகச் செயற்கை இரவில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரத்தைக் கண்டதும் படத் தயாரிப்பாளர் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை; பத்து மணி கால்-ஷீட்டுக்குப் பன்னிரண்டு மணிக்கே வந்து விட்டாளே!' என்று திருப்தியுடன், “எங்கே டைரக்டர் சாரைக் காணோம்?" எனறு கேட்டுக் கொண்டே திரும்பினார்.

"இதோ, நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே அவர் இருபத்தேழாவது சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, "குட் மார்னிங்" என்றார் நட்சத்திரத்தின் பக்கம் திரும்பி.

பதிலுக்குக் "குட்மார்னிங்" என்று சொல்லி விட்டு "எங்கே டைலாக்?" என்று நட்சத்திரம் திருவாய் மலர்ந்தருள "இதோ!"என்று "டைலாக் பை"லை எடுத்து நீட்டினார் உதவி டைரக்டர். அதை ஒரு நட்சத்திரப் பார்வை பார்த்துவிட்டு "சரி, இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள் கும்கும்.

"உங்களுடைய ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் அன்புததும்ப வேண்டும். அதற்கு முதற்படியாக, யாரைக் கண்டதும் உங்களுடைய உள்ளத்தில் அன்பு சுரக்குமோ, பிரவாகம் - எடுத்து ஓடுமோ, அவர்களை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்!” என்றார் டைரக்டர்.

"இவ்வளவுதானே, என்னுடைய 'பேபி'யை நினைத்துக் கொள்கிறேன்?"என்றாள் கும்கும் அலட்சியமாக.

"பேபியா, உங்களுக்கா!" என்றார் டைரக்டர் ஆச்சரியத்துடன்.

"அதற்குள் மறந்து விட்டீர்களா, என்ன? சென்ற வாரம் 'அவுட்டோர் ஷூலிட்டிங்' குக்காகப் பெங்களுருக்குப் போயிருந்தபோது நான் வாங்கிக் கொண்டு வந்தேனே, ஒரு நாய்க்குட்டி...."

"ஓ, அதைச் சொல்கிறீர்களா? சரி, எதை நினைத்துக் கொண்டால் என்ன? எனக்கு வேண்டியது 'எபெக்ட்' - அவ்வளவுதான்! அதோ பாருங்கள், அந்தக் கடையை நோக்கி நீங்கள் இந்தக் காரில் செல்கிறீர்கள். கடையை நெருங்கியதும் காரை நிறுத்தச் சொல்கிறீர்கள்; கார் நிற்கிறது. டிரைவர் இறங்கிக்கதவைத் திறக்கிறார்; நீங்கள் இறங்கி உள்ளே செல்கிறீர்கள். இது தான் முதல் ஷாட்!"

கும்கும் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டார் டைரக்டர்.

"ஒன்றுமில்லை. இப்பொழுது நான் எதை நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்? எதன் மேல் அன்பைச் சொரிய வேண்டும்? கடை மீதா, கார் மீதா?"என்று கேட்டாள் அவள்.மேலும் சிரித்துக் கொண்டே.

"மன்னியுங்கள், அதற்குள் என்னுடைய கவனம் எங்கேயோ போய்விட்டது!" என்றார் அவர் அசடு வழிய.

வேறு எங்கே போயிருக்கும்? குதிரைப் பந்தயத்தின் மேல் போயிருக்கும்!

"கரெக்ட், கரெக்ட்! ஏன், நீங்கள் போவதில்லையா?”

இந்தச் சமயத்தில் படத் தயாரிப்பாளர் குறுக்கிட்டு, "அங்கே போகும் போது போவோமே ஸார்!" என்று பரிதாபத்துடன் சொல்லவே, "அடென்ஷன் ப்ளிஸ்!" என்று டைரக்டர் இரைந்து விட்டு, "இதோ இருக்கிறான் - இந்தப் பையனைத்தான் நீங்கள் நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்; இவன் மேல் தான் அன்பைச் சொரிய வேண்டும். இவன் தாய் தந்தையற்ற அனாதை; இவனுக்கு ஏகப் பசி;இவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து உங்கள் காரை நெருங்குகிறான்; பின் 'ஸீட்டின்' மேல் தட்டிலிருக்கும் ரொட்டியை எடுத்துப் பிட்டுப் பிட்டுத் தின்கிறான். அப்போது இதோ இருக்கிறாரே - இந்தப் போலீஸ்காரர் வந்து 'திருட்டுப் பயலே அகப்பட்டுக் கொண்டாயா?' என்று இவனைப் பிடித்துக் கொள்கிறார். அந்தச் சமயத்தில் நீங்கள் வருகிறீர்கள்; பையனையும் போலீஸ்காரரையும் மாறி மாறிப் பார்க்கிறீர்கள். நடந்தது இதுதான் என்று உங்களுக்குத் தெரிகிறது. 'ஐயோ பாவம்!' என்று இவனிடம் அனுதாபம் கொள்கிறீர்கள். உடனே உங்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, "அவனை விடுங்கள்; அவனுக்குத் தின்ன ரொட்டி கொடுத்தது நான்தான்!” என்று சொல்கிறீர்கள்; போலீஸ்காரர் பையனை விட்டு விட்டுச் செல்கிறார்; நீங்கள் இவனை நெருங்குகிறீர்கள்; 'ரொட்டி போதுமா, இன்னும் வேண்டுமா?' என்று கனிவுடன் கேட்கிறீர்கள். இவனுக்கு ஒரே வியப்பு;'இப்படியும் ஒரு தெய்வம் உண்டா, இந்த உலகத்தில்?’ என்று உங்களைப் பார்க்கிறான். இவனுடைய கண்களில் நீர் மல்குகிறது; அதை நீங்கள் அன்புடன் துடைக்கிறீர்கள். இதுதான் இன்று எடுக்கப்போகும் காட்சி!"என்றார் கும்கும்மை நோக்கி.

"சரி, இவனுடைய கண்ணிரைத்துடைக்கிறேன். அதற்குப் பிறகு இவனை நான் காதலிக்கிறேனா?"என்றாள் அவள். தன்னுடைய 'மேதாவிலாச'த்தைச் சற்றே வெளிப்படுத்தி!

"அது எனக்குத் தெரியாது; கதாசிரியரைத்தான் கேட்க வேண்டும்!' என்றார்.அவர் தற்காப்புக்காக.

"அவருடைய இஷ்டத்துக்காக இங்கே என்ன ஸார், நடக்கிறது? எல்லாம் நம்முடைய இஷடந்தானே?"

“என்ன இருந்தாலும் வயது என்று ஒன்று இருக்கிறது பாருங்கள். இவனோ சிறுவன்; நீங்களோ வயது வந்தவர்கள்...."

"அதனாலென்ன, அதுவும் ஒரு புதுமையாகயிருக்கட்டுமே!"

‘புதுமை' என்ற வார்த்தை காதில் விழுந்தது தான் தாமதம். ‘புதுமை எதுவாயிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் இருக்கிறேன்; நீங்கள் ஏறுங்கள், காரில்!” என்றார் படத் தயாரிப்பாளர்.

அவ்வளவுதான்; வெற்றிப் புன்னகையுடன் நடிகை கும்கும் காரில் ஏறி உட்கார்ந்தாள்.

டைரக்டர் திரும்பித் தலையில் அடித்துக் கொண்டு "கம் ஆன், ரிஹர்ஸல்!" என்று தம்முடைய தோல்வியைச் சமாளித்தார்.

அதைப் பொருட்படுத்தாமல் "எங்கே மேக்-அப்மேன்?" என்று குரல் கொடுத்தாள் கும்கும். 'டச் அப்' செய்து கொள்வதற்காக.

அதுவரை பொறுமையுடனிருந்த ஒளிப்பதிவாளர், 'லைட்ஸ் ஆர்பர்னிங்!' என்றார் நட்சத்திரத்தின் காதில் விழும்படி.

"எஸ் ஐ ஆம் ரெடி!" என்றாள் அவள்.

இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஓடி வந்த ப்ரொடக்க்ஷன் மானேஜர், "எனி திங்யு வாண்ட்?"

"ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஐஸ் க்ரீம், சோடா, காப்பி ஒவல்..." என்று அடுக்கிக் கொண்டே போனார். அவளை நெருங்கி

படத் தயாரிப்பாளர் அவருடைய கழுத்தைப் பிடித்து நெரிக்கத் தயாராவதற்கும் "இப்போது ஒன்றும் வேண்டாம் எனக்கு!" என்று சொல்லிவிடவே, "ஸைலென்ஸ் ப்ளீஸ்!" என்று ஏற்கனவே அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியைக் குலைத்தார் அவர்!

"சரி, ஆரம்பிப்போமா?" என்று எல்லோரையும் பார்த்தாற்போல் கேட்டுவிட்டு, "ஸ்டார்ட் ப்ளீஸ்!" என்றார் டைரக்டர்.

கடையை நோக்கிக் கார் சென்று நின்றது; ஒத்திகையும் ஒருவாறு நடந்து முடிந்தது.

"ஓகே டேக்!" என்றார் டைரக்டர்.

இப்படியாக அந்தக் காட்சி முழுவதும் அன்று படமாக்கப்பட்டு முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நட்சத்திரத்தைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.

"ஆஹா! அற்புதம்!" என்றார் ஒருவர். 'அபாரம் என்றார் இன்னொருவர்.

"அன்று நடிப்பின் சிகரத்தையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள்!" என்றார் ஒரு பேர்வழி. "நடிப்பின் சிகரத்தை மட்டுமா, என் இதயத்தைக் கூடத் தொட்டு விட்டார்கள். அந்தப் பையனின் கண்ணீரை அவர்கள் துடைத்தபோது, என்னுடைய கண்களிலும் நீர் நிறைந்துவிட்டது" என்றார் இன்னொரு பேர்வழி.

இந்தச் சமயத்தில் அங்கு வந்து உட்கார்ந்து 'கா' 'கா' என்று கரைந்த காக்கைகளை ‘ஸ் ஸ்' என்று விரட்டி 'அபிமானி'களின் மேல் தமக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை ஒருவாறு தீர்த்துக் கொண்டார் ஒலிப்பதிவாளர்!

எல்லோருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு 'நட்சத்திரப் புன்னகை' புரிந்து விட்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பினார் குமாரி கும்கும்.

ழியில் "ஏண்டி குப்பாயீ; பேபிக்குப் பிஸ்கெட் வாங்க வேண்டுமென்று சொன்னாயே?" என்றாள் பாட்டி.

"ஏன் பாட்டி, என்னைக் 'குப்பாயி குப்பாயி' என்று கூப்பிடாதே என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுகிறது? என்று எரிந்து விழுந்தாள் குமாரி கும்கும்.

"இனிமேல் சொல்ல வில்லையடி, அம்மா! இப்போது நீ 'டவு'னுக்குப் போகப் போகிறாயா? இல்லையா?"

"போகத்தான் வேண்டும்; இருந்த பிஸ்கட்டெல்லாம் தான் நேற்றே தீர்ந்து போய் விட்டதே!"

"சரி, வண்டியைத் திருப்பச் சொல்லு; வாங்கிக் கொண்டு போவோம்" என்றாள் பாட்டி.

"அதென்ன பாட்டி, நீங்கள் சொன்னால் திருப்ப மாட்டேனா?" என்றான் டிரைவர் முத்து சிரித்துக் கொண்டே.

"வாயை மூடுடா, உனக்குமா நான் பாட்டியாய்ப் போய் விட்டேன்?" என்றாள் அந்த நித்தியகன்னி.

"இல்லை மேடம் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே சென்று, நிறுத்த வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்தினான் முத்து.

அவ்வளவுதான்; அங்கிருந்த அனாதைச் சிறுவர், சிறுமியரெல்லாம் - பாரத புண்ணிய பூமியில் பூத்த பைந்தமிழ் மலர்களெல்லாம் அந்தக் காரைச் சூழ்ந்து கொண்டு வாயையும் வயிற்றையும் காட்ட ஆரம்பித்து விட்டன.

"அவமானம், நகரத்துக்கே அவமானம்!" என்றாள் கும்கும்.

"நகரத்துக்கு மட்டும் என்னடி, நாட்டுக்கே அவமானம் என்று சொல்லு" என்றாள் கௌரவம் மிக்க பவுனாம்பாள்.

"இறங்கினால் இந்த அவமானங்கள் என்னையே சாப்பிட்டு விடும் போலிருக்கிறதே!" என்றாள் குமாரி கும்கும்.

"ஆமாம், நீ இறங்காதே! முதலில் முத்துவைக் கீழே இறங்கி அவற்றை விரட்டச் சொல்லு!”

முத்து சிரித்தான்; சிரித்துக் கொண்டே தன்னிடமிருந்த பத்துக் காசைஎடுத்து அந்த அவமானங்களில் ஒன்றை அழைத்துக் கொடுத்து விட்டு "என்னிடமிருந்தது இவ்வளவுதான்; இதை எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்!" என்றான். அதை வாங்கிக் கொண்டு அவை சிட்டாய்ப் பறந்ததும் "இறங்குவோமா?" என்றாள் பாட்டி.

"எதற்கு இவனிடம் கொடுத்தால் இவனே வாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்!" என்று சொல்லிக் கொண்டே இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து முத்துவுக்கு முன்னால் விட்டெறிந்து, "ஒரு டின் பிஸ்கெட் வாங்கிக் கொண்டு வந்து வண்டியில் வை!" என்றாள் பேத்தி.

அப்படியே வாங்கிக் கொண்டு வந்து வைத்து விட்டு "போவோமா?" என்றான் முத்து.

"போக வேண்டியதுதான்!" என்றாள் நடிகை கும்கும்.

இந்தச் சமயத்தில் "ஏண்டி, 'நாலு பாவாடைக்கு ஸாட்டினும் நாலு தாவணிக்கு நைலானும் வாங்கிக் கொடு, வாங்கிக் கொடு!' என்று நானும் எத்தனை நாட்களாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன்? இன்றாவது வாங்கிக் கொடேண்டி!" என்றாள் பவுனாம்பாள்.

"அதற்கென்ன, வாங்கிக் கொண்டால் போச்சு!" என்றாள் கும்கும்.

இருவரும் இறங்கி முக்காட்டை இழுத்துப் போத்திக் கொண்டு எதிர்த்தாற் போலிருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தார்கள்.

அதுதான் சமயமென்று முத்து வண்டிக்குப் பின்னால் சென்றான்; ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நின்றான்.

குப், குப், குப்

"ஆகா! என்ன சுகம், என்ன சுகம்!

'ஏர் கண்டிஷன் ரூ'மின் குளுமை இமாசல வாசத்தின் பெருமை எல்லாம் இந்தப் பீடியிலல்லவா இருக்கிறது, எனக்கு!'

இந்த ரசனையில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்த அவனை, "ஏய், என்ன அது?" என்று கும்கும்மின் குரல் திடிக்கிட வைத்தது.

அவசரம் அவசரமாகக் கையிலிருந்த பீடித்துண்டைக் கீழே போட்டுக்காலால் மிதித்து விட்டு, "என்ன அம்மா, என்ன?" என்றான் அவன் பரபரப்புடன்.

"அங்கே பாருடா, இடியட்" என்றாள் கும் கும், ஆத்திரத்துடன்.

முத்து பார்த்தான்; ஒட்டிய வயிறும் குழி விழுந்த கண்களுமாகக் காட்சியளித்த ஒரு சிறுமி, 'பேபி'க்காக வாங்கி வைத்திருந்த 'பிஸ்கெட்டுகளில் ஒன்றை எடுத்து அவசரம் அவசரமாகத் தின்று கொண்டிருந்தான்!

"ஐயோ, பாவம்!" என்றான் முத்து.

"பாவமாவது? கூப்பிடு, போலீஸை!" என்று இரைந்தாள் கும்கும்.

அதற்குள் அந்த வழியாக வந்த ஒரு போலீஸ்காரர் "திருட்டுச் சிறுக்கி, இங்கேயும் உன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டாயா? நட ஸ்டேசனுக்கு" என்று அந்தப் 'பாரத புஷ்பத்தைத் தள்ளிக் கொண்டு போனார்.

முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏம்மா, காலையிலே அந்தப் பையன் ரொட்டியைத் திருடித் தின்றபோது, ஐயோ பாவம்! என்று நீங்கள் தானே?" என்று கேட்டான், திருதிருவென்று விழித்துக் கொண்டே.

"அது கலை; இது வாழ்க்கையடா, முட்டாள்!" என்றாள்.

அவள். அப்படியானால் அன்பு...

நடிக்கத்தானா?