விந்தன் கதைகள் 2/படித்தவர்கள்

படித்தவர்கள்

டுப் பகல் நேரம்; காசாம்பு கொண்டு வந்த கஞ்சிக் கலயத்தைக் காலியாக்கிவிட்டுக் களத்து மேட்டுக்கு வந்தான் கண்ணாயிரம்.

அங்கே அவன் கண்ட காட்சி......

எந்த வேலையைத் தன் மகன் செய்யக் கூடாது என்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுப் படிக்க வைத்தானோ, அந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்!

அதாவது, தந்தை விட்டுவிட்டு வந்த ஏரைப் பூட்டி, மாட்டை விரட்டி உழுது கொண்டிருந்தான் மகன்.

"ஏண்டா, முருகையா! இந்த வேலை செய்யவா உன்னை நான் படாத பாடு பட்டுப் படிக்க வைத்தேன்"

"செய்தால் என்னப்பா, உழவன் கைதானே உலகத்தின் கை?"

"அதற்காக என்னுடைய கைதான் பேனாவைத் தொட்டுக் கொடுப்பதோடு நின்று விட்டதே அது போதாதோ? போடா போ, போய் 'ரிஸல்ட்' வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு வா?"

"பார்த்துவிட்டேன் அப்பா, நான் பாஸ்!"

அவ்வளவுதான்; அவனைத் தூக்கித் தோளின் மேல் வைத்துக் கூத்தாடிக் கொண்டே, "காசாம்பு! ஏ, காசாம்பு!" என்று குதூலகத்துடன் குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.

"என்ன காசாம்பூவுக்கு?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினாள் அவள்.

"பையன் பாஸ் பண்ணிவிட்டானாம்!"

"அப்புறம் என்ன? வேலைக்கு மனு எழுதிப் போட்டு விட்டு, ‘எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா?' என்று இளித்துக் கொண்டே தபாற்காரனை வட்டமிடச் சொல்லுங்கள்!"

"போடி, போ! இவனை நான் எஸ். எஸ். எல். ஸி யோடு விட்டுவிடுவேனா, என்ன?"

"விடாமல் கட்டிக் கொண்டு அழப் போறீங்களா?"

"உனக்கு என்ன தெரியும்; எடுத்ததற்கெல்லாம் கட்டிக் கொண்டு அழத்தான் தெரியும்! போ, போ, போய் உன் தம்பியை இங்கே அனுப்பி விட்டு, நீ கொஞ்சம் கட்டுச் சோறு கட்டி வை!"

"எங்கே போவதற்காம்!"

"பட்டணத்துக்கு!"

"அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? அதைத் தான் எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்?"

"அழியாத செல்வம், அள்ள அள்ளக் குறையாத செல்வம்!"

"அந்த ஆள் ஏய்த்துப் பிழைக்கும் செல்வத்துக்காத் தான் ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுத் தொலைத்தீர்களே, அது போதாதா?"

"ஏழு ஏக்கர் என்னடி? இன்னும் இரண்டு ஏக்கர் பாக்கியிருக்கிறது பார், அதையும் அந்தப் பட்டணத்துச்சாமிக்கு விற்றுத்தான் இவனை நான் மேலே படிக்க வைக்கப் போகிறேன்!"

"கஞ்சிக்கு!"

"கவலைப்படாதே, இந்தக் கை இருக்கும்வரை காற்றாய்ப் பறக்க மாட்டோம்" என்று தன் கையை உயர்த்திக் காட்டினான் கண்ணாயிரம்.

அதற்கு மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை; சொன்னால்தான் அவன் கேட்கப் போகிறானா, என்ன?

மறுநாள் காலை.....

ரயிலை விட்டு இறங்கிய 'பட்டிக்காட்டுச் சாமிகள் இரண்டும் பட்ணத்துச்சாமி'யைத் தேடி அலைந்தன.

"அவருடைய பெயர் என்ன, அப்பா?" என்று கேட்டான், அலைத்தலைந்து அலுத்துப் போன முருகையன்.

"வக்கீல் வள்ளிநாயகம்"

"விலாசம்?"

"எழுபத்தைந்து, எல்லோரா நகர் என்று சொன்னார்!"

"இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா?" என்று எண்ணியவனாய் "எங்கே எல்லோரா நகர், எங்கே எல்லோரா நகர்?" என்று எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டே. எல்லோரா நகருக்குள் நுழைந்தான் முருகையன்.

அவனைத் தொடர்ந்து சென்ற கண்ணாயிரம் அங்கே வானளாவி நின்ற வண்ண மாளிகைகளைப் பார்த்ததும், "பார்த்தாயா, படித்தவர்கள் வசிக்கும் இடத்தை!" என்றான் பரவசத்துடன்.

"பார்த்தேன், பார்த்தேன்; பத்துக் குடிசைகள் போட்டுப் பத்துக் குடும்பங்கள் நடத்த வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பங்களா அல்லவா காட்டியிருக்கிறார்" என்றான் முருகையன் ஒரே வியப்புடன்.

"பத்து என்ன பதினாயிரம் குடிசைகள் கூடப் போட்டுக் கொடுக்கலாம், படிக்காத பதர்களுக்கு! நீ பார், எழுபத்தைந்தாம் நம்பர் வீடு எங்கே இருக்கிறதென்று?" என்றான் கண்ணாயிரம், வெறுப்புடன்.

"இங்கே ஒரு நம்பரையும் வெளியே இருந்தபடி பார்க்க முடியவில்லையே?"

"நம்பரைப் பார்க்க முடியாவிட்டால் என்ன, 'வள்ளி நாயகம் பி.ஏ.,பி.எல்,' என்று போர்டு' போட்டிருக்கும், பார்!"

அப்படியே அங்கிருந்த போர்டுகளையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தான் முருகையன், "நாய்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை!" என்று நாலைந்து போர்டுகளில் எழுதியிருந்ததைப் பார்த்தும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "என் அப்பா, இங்கே மனிதர்கள்தானே வசிக்கிறார்கள்?" என்றான் சந்தேகத்துடன்.

"மனிதர்கள் வசிக்காமல் நாய்களா வசிக்கும்?"

"அப்படித்தான் இங்கே எழுதியிருக்கிறார்கள்!"

"இருக்காது; எச்சில் இலை நக்கும் நாய்களுக்கு இவ்வளவு பெரிய பங்களாக்கள் இருக்கவே இருக்காது!"

"பட்டணத்திலே அப்படி நினைப்பதற்கில்லை அப்பா இங்கே படித்தவர்கள் கூட எச்சில் தட்டை நக்குகிறார்களாம்; அதற்கென்று அவர்கள் அங்கங்கே வைத்திருக்கும் கடைகளுக்கு ஓட்டல் என்று பெயராம்!"

"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்து மாட்டார்கள்!"

"அது என்னமோ உண்மைதான், அப்பா அவர்கள் எதையும் தெரிந்துதான் செய்கிறார்களாம்"

"அப்புறம் என்ன? விடு, கதையை; தேடு, வக்கில் வள்ளநாயகம் வீட்டை!" என்றான் கண்ணாயிரம்.

இந்தச் சமயத்தில் 'ஹாட்'டும் 'ஸுட்'டும் அணிந்த ஒருவர் எதிர்த்தாற்போல் வர, அவரை நோக்கி முருகையன் கேட்டான்.

"இங்கே வக்கீல் வள்ளிநாயகத்தின் வீடு எங்கே இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா!”

"என்னை மன்னியுங்கள், எதிர்த்த வீட்டுக்காரர் என் மனைவியை அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிப் போலீசில் புகார் செய்ய நான் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்

அவர் நிற்கவில்லை; போய்விட்டார்.

"அட, பாவமே! எதிர்த்த வீட்டுக்காரரிடம் இருக்கும் மனைவியை மீட்பதற்குக்கூடப் போலீஸாரின் உதவியை நாடும் அளவுக்கா இவர் கோழையாக இருக்க வேண்டும்?" என்றான் முருகையன், அனுதாபத்துடன்.

"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்ய மாட்டார்கள்!" என்றான் கண்ணாயிரம் ஆத்திரத்துடன்.

"அது என்னமோ உண்மைதான், அப்பா! அவர்கள் எதையும் தெரிந்து தான் செய்கிறார்களாம்!"

"அப்புறம் என்ன? விடு கதையை; தேடு வக்கீல் வள்ளிநாயகம் வீட்டை!"

அப்போது அந்தத் தெருவின் திருப்பத்திலிருந்து ஒரு வீட்டு முகப்புச் சுவரில் 'வள்ளிநாயகம் பி. ஏ., பி.எல் என்று 'போர்டு' தென்படவே, "இனி தேடவேண்டிய அவசியமில்லை அப்பா! இதோ இருக்கிறது, அவருடைய வீடு!" என்றான் முருகையன்.

உடனே மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு "சாமி சாமி" என்று அந்த வீட்டுக்கு முன்னால் நின்று குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.

அவ்வளவுதான்; உர்ர்ர்! வள், வள்! வள், வள்! என்று குரைத்துக் கொண்டே அந்த வீட்டு நாய் அவனை நோக்கி ஓடி வந்தது.

'ஒரு வேளை முருகையன் சொன்னது உண்மையாய் யிருக்குமோ?'

இந்த எண்ணத்துடன் தன் மகனைத் திரும்பிப் பார்த்தான் கண்ணாயிரம்.

"இப்பொழுதாவது சந்தேகம் தீர்ந்ததா, உங்களுக்கு? இங்கெல்லாம் நாய்கள்தான் வசிக்கின்றன!" என்றான் முருகையன்.

அதற்குள் அந்த நாயைத் தொடர்ந்து வந்த வேலைக்காரன், "யார் ஐயா, நீங்கள்? உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்று எரிந்து விழுந்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் அவனையும், அவனை முந்திக் கொண்டு நின்ற நாயையும் மாறி மாறிப் பார்த்தான் முருகையன் பிறகு, "'குணத்தில் வித்தியாசம் இல்லா விட்டாலும் உருவத்தில் என்னமோ வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

கேட்ட கேள்விக்கு உடனே பதில் கிடைக்காமற் போகவே, "ஏன் விழிக்கிறீர்கள்? இரவு எங்கே, எப்படி கன்னம் வைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா, என்ன?" என்றான் வேலைக்காரன் பொறுமை இழந்து.

"அட., கடவுளே! இது கன்னமிடும் கை இல்லை ஐயா, அன்னமிடும் கை!" என்றான் கண்ணாயிரம் தன் கையைக் காட்டி.

"பட்டணத்திலே திருடனுக்கும் திருடாதவனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது!" என்றான் முருகையன்.

"திருட வரவில்லை யென்றால் வேறு எதற்குத்தான் வந்திருக்கிறீர்கள்? அதையாவது சீக்கரம் சொல்லித் தொலையுங்கள்; எனக்கு நேரமாகிறது!"

"கோபித்துக் கொள்ளாதீர்கள், ஐயா பட்டணத்திலே இவனைப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆசை; அதற்காகப் பச்சைமலையிலே இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தைப் 'பட்டணத்துச் சாமி'க்கு விற்றுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போலாமென்று வந்திருக்கிறேன்!"

"அதற்கு இவ்வளவு தூரம் வருவானேன் அங்கே யாரும் இல்லையா, அதை வாங்க!"

"எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; இருந்தாலும், அதை விற்கும்போது 'பட்டணத்துச் சாமி'க்கே விற்கிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டேன்; அதை மீறலாமா?"

"சரிதான், அரிச்சந்திரனுக்கு நேர் வாரிசு போலிருக்கிறது! அவர் இல்லை, போய் வாருங்கள்!"

"எங்கே போயிருக்கிறார்?"

"ஊட்டிக்கு!"

"எப்போது வருவார்?"

"நாளைக்கே வந்தாலும் வரலாம்; நாலு நாட்கள் கழித்து வந்தாலும் வரலாம்!"

கண்ணாயிரம் முருகையனின் முகத்தைப் பார்த்தான், முருகையன் கண்ணாயிரம் முகத்தைப் பார்த்தான். அவர்கள் இருவரையும் பார்த்த வேலைக்காரனோ "சரி, பார்த்துக் கொண்டிருங்கள்! நான் வருகிறேன்" என்று நாயை அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.

அவன் என்ன செய்வான், பாவம்! எல்லாம் சகவாச தோஷம்; இல்லாவிட்டால் வீட்டுக்கு நாய் காவவென்றால் நாய்க்குக் காவலாக அவன் அங்கே இருந்து கொண்டிருப்பானா?

"நாளை, வந்து போயிற்று; நாலு நாட்'களும் வந்து போயின. வள்ளிநாயகம் வரவில்லை; வரவேயில்லை.

அந்தப் 'பட்டணத்துச் சாமி'யை எதிர் பார்த்தபடி, 'பட்டிக்காட்டுச்சாமி'கள் இரண்டும் எல்லோரா நகரைச்சுற்றிச்சுற்றி வந்தன; கண்ட இடத்தில் உண்டு, கண்ட இடத்தில் உறங்கின. கட்டுச் சோறு தீர்ந்தது. கையிலிருந்த காசும் கரைந்தது.

"இன்னும் எத்தனை நாட்கள் அப்பா, இப்படி நாம் இங்கே சுற்றிக் கொண்டிருக்க முடியும்?" என்றான் முருகையன்.

"அதற்காக வந்த காரியத்தை முடிக்காமலா போய்விடுவது? நீ பேசாமல் இரு, பட்டணம் நம்மைப் பட்டினி போட்டு விடாது!" என்றான் கண்ணாயிரம்.

இந்தச் சமயத்தில் யாரோ 'கலகல வென நகைக்கும் சத்தம் காதில் விழவே, இருவருமே திரும்பிப் பார்த்தனர். எதிர் வீட்டுத் தெருப்படிகளின் மேல் உட்கார்ந்திருந்த ஓர் ஏகாங்கி, "நகைத்தவன் நான்தான்; நாலு நாட்களாக நான் பட்டினி" என்றான் விரக்தியுடன்.

"உங்களை விட்டுவிட்டா இந்த வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள்? அப்படிச் சாப்பிடுபவர்கள் திருடர்கள் என்று காந்தி ஐயா கூடச் சொல்லியிருக்காரே?" என்றான் கண்ணாயிரம் வியப்புடன்.

"இந்த வீட்டில் மட்டுமென்ன, எல்லா வீடுகளிலும் என்னை விட்டு விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்!"

"எங்கள் கிராமத்தில் அப்படி யாரையும் விடுவதில்லையே?"

"அங்கே சிறிய சிறிய குடிசைகள்; அவற்றுக்குள் பெரிய பெரிய உள்ளங்கள். இங்கே பெரிய பெரிய மாளிகைகள் அவற்றுக்குள் சிறிய சிறிய உள்ளங்கள்!"

இதைச் சொல்லி அவன் வாய் மூடுவதற்குள் "ஏய் யார் அது?" என்று குரல் உள்ளேயிருந்து இடி முழக்கம் போல் ஒலித்தது.

"என்ன அது?" என்றான் கண்ணாயிரம், அந்த குரலொலியின் அதிர்ச்சியால் ஒரு குலுங்கி குலுங்கி நின்று.

"ஒன்றுமில்லை; வீட்டுக்கு உரியவர்கள் என்னை உபசரிக்கிறார்கள்" என்றான் ஏகாங்கி.

அடுத்த கணம் அவன் தலையில் ஒரு செம்பு தண்ணீர் வந்து விழுந்து சிதறி வழிந்தது!

எதிர்பாராத இந்தத் தாக்குதலைக் கண்டதும் முருகையன் கொஞ்சம் பின்வாங்கி, "இதுவும் உபசாரத்தைச் சேர்ந்ததுதானா?" என்றான் கொஞ்சம் சந்தேகத்துடன்.

"ஆமாம்; பட்டிக்காட்டில் காலுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரித்தால், பட்டணத்தில் தலைக்குத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறார்கள்" என்றான் அவன், தலையில் விழுந்த தண்ணீரைத் தன் கையால் முடிந்தவரை தட்டிவிட்டுக் கொண்டே.

அவனிடம் தன் மேல் துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு "ஒன்றும் புரியவில்லை ; எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றான் கண்ணாயிரம்.

"புரியும், இன்னும் இரண்டு நாட்கள் பட்டணத்தில் இருந்தால்!" என்று சொல்லிக் கொண்டே துடைத்த துண்டை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, "நன்றி நான் வருகிறேன்!" என்று நடையைக் கட்டிவிட்டான் ஏகாங்கி.

அன்றிரவு......

வண்டிமேடொன்றைத் தஞ்சமடைந்த தந்தையும் மகனும் வராத தூக்கத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது "ஐயா, ஐயா!" என்று அவர்களை யாரோ தட்டி எழுப்புவது போலிருந்தது. 'இங்கேயும் யாராவது விரட்ட வந்துவிட்டார்களோ, என்னமோ?' என்ற பீதியுடன் இருவரும் எழுந்து உட்கார்ந்தனர். அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த ஒரு கோவணாண்டி, "கோடை மாடு போல் கிடக்கிறீர்களே, ஏதாவது சாப்பிட்டீர்களா?" என்று அவர்களை விசாரித்தான்.

'இல்லை' என்பதற்கு அடையாளமாக இருவரும் தலையை ஆட்டினர்.

"நான் நினைத்தது சரிதான்; இந்தாருங்கள்; எழுந்து கையை அலம்பிக் கொண்டு வாருங்கள்!" என்று குடுவை தண்ணீரை எடுத்து அவர்களிடம் நீட்டினான் அவன்.

"பட்டணத்தில் இப்படியும் ஒரு பட்டிக்காடா?"

கண்ணாயிரத்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுக்குச் சற்று தூரத்தில் வைக்கோல் வண்டியொன்று அவிழ்த்து விடப்பட்டிருந்தது; அதற்கு அருகே இரண்டு மாடுகள் படுத்தபடி அசை போட்டுக் கொண்டிருந்தன; அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் இரண்டு கல்லடுப்புகள்; அவற்றில் ஒன்றின் மேல் சோற்றுப் பானை; இன்னொன்றின் மேல் குழம்புச் சட்டி!

'ஆஹா! பச்சைமலை கிராமமே பசி தீர்க்க வந்து விட்டது போலல்லவா இருக்கிறது!'

இந்த எண்ணத்தில் தன்னை மறந்து நின்ற அவனைப் பிடித்து உலுக்கி, "என்ன யோசிக்கிறீர்கள்? நாம் வரும் போது இங்கே ஒன்றும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா?" என்றான் கோவணாண்டி.

"ஆமாம் நீங்கள் எப்போது வந்தீர்கள்?"

"நான் காலையிலேயே வந்துவிட்டேன்; இந்த வைக்கோலை விற்றுத் தீர்க்கும்வரை இங்கே தான் தங்கியிருப்பேன்" என்றான் அவன், தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக!

"வந்த இடத்தில் எங்களை விருந்துக்கு அழைக்கிறீர்களே, நாளைக் காலையில் உங்களுக்குப் பழையது இல்லாமற் போய்விடுமே?" என்றான் கண்ணாயிரம் கொஞ்சம் தயக்கத்துடன்.

"நாளையைப் பற்றிக் கவலைப்பட நாம் யார்? கடவுள் இருக்கிறார், கொடுக்க; நாம் இருக்கிறோம், சாப்பிட! ம், பிடியுங்கள்; எப்பொழுது சாப்பிட்டதோ என்னமோ?" என்றான் அவன் மீண்டும் குடுவையை நீட்டி.

அதை வாங்கி இருவரும் கையை அலம்பிக் கொண்டதும் "உட்காருங்கள்! என் தம்பி இதோ இலை வாங்கிக் கொண்டு வந்து விடுவான்!" என்று அவர்களை உட்கார வைத்து விட்டுச் சோற்றையும் குழம்பையும் கொண்டு வந்து அவர்களுக்கு எதிரே வைத்தான் கோவணாண்டி. அதற்குள் இலை வந்து சேர்ந்தது; நாட்டு வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே நாகரிகம் தெரியாத அந்த நாலு ஜீவன்களும் சாப்பிட்டு முடித்தன.

படுக்கத் துண்டை விரிக்கும் போது "ஏன், அப்பா? அந்த வண்டிக்காரர் எவ்வளவு தூரம் படித்திருப்பார்?" என்றான் முருகையன்.

"நான் எவ்வளவு தூரம் படித்திருக்கிறோனோ, அவ்வளவு தூரம்தான் அவரும் படித்திருப்பார்!" என்றான் கண்ணாயிரம்.

டுத்த நாள்...

வழக்கம் போல் வள்ளி நாயகத்தின் வீட்டுக்கு வந்து வக்கீல் ஐயா வந்து விட்டாரா? என்று விசாரித்தான் கண்ணாயிரம்.

"வந்து விட்டார்! உட்காருங்கள்; இதோவந்துவிடுவார்!" என்று அவருடைய அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சைச் சுட்டிக்காட்டினான் வேலைக்காரன்.

கண்ணாயிரம் உட்காரவில்லை; நின்றது நின்றபடி நின்றான்.

உள்ளே யாரோ ஒரு கட்சிக்காரனுடன் வள்ளிநாயகம் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

"இந்தக் குரல் எங்கேயோ கேட்ட குரலாயிருக்கிறதே?"

'ஆம் வள்ளிநாயகத்தின் குரல் மட்டும் அவனுக்குக் கேட்ட குரலாயில்லை; அவருடன் பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரனின் குரலும் அவனுக்குக் கேட்ட குரலாயிருந்தது.

சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகச் சற்றே உற்றுக் கேட்டான் அவன்.

"நீ வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; இல்லையா?"

"வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; எழுதிக் கொடுத்தது ரூபாய் இரண்டாயிரத்துக்கு!"

"அதை வைத்துக் கொண்டு தான் ரூபாய் இரண்டாயிரமும் அதற்குரிய வட்டியும் தனக்குச் சேர வேண்டுமென்று அவன் உன்மேல் வழக்குத் தொடர்ந்திருக்கிறான்; இதிலிருந்து நீ தப்ப வேண்டுமானால் இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!"

"சொல்லுங்கள்!"

"அந்த ஆயிரம் ரூபாயைக் கூட அவனிடமிருந்து நான் வாங்கவில்லை என்று நீ சொல்லிவிட வேண்டும்!"

"ஐயையோ! அப்படிக்கூடப் பொய் சொல்லலாமா?"

"என்ன ஐயையோ! அவன் பொய் சொல்லும்போது நீ பொய் சொல்லக்கூடாதா?"

"அது எப்படிச் சொல்ல முடியும்? நான்தான் அவனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேனே?"

"நீ எங்கே எழுதிக் கொடுத்தாய்? உனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே?"

"எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் பேனாவைத் தொட்டுக் கொடுத்திருக்கிறேனே?"

"தொட்டுக் கொடுத்த கையைத்தான் எப்போதோ துடைத்துக் கொண்டிருப்பாயே! சும்மா சொல், வழக்கில் வெற்றியடைந்த பின் எனக்கு நீ ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் போதும்!"

"கேவலம், ரூபாய் ஐந்நூற்றுக்காக நான் பொய் சொல்வதோடு உங்களையும் பொய் வழக்காட வைக்க வேண்டுமா?"

"இந்த உலகத்தில் எது பொய் இல்லை?" எல்லாம் பொய் என்றுதான் நம்முடைய வேதம் கூடச் சொல்லுகிறது.

"வேதம் சொன்னால் சொல்லட்டும்; நான் சொல்ல மாட்டேன்!"

"சொல்லாவிட்டால் நீதான் கெட்டுப் போவாய்!"

"என்னைக் கெடுத்து விட்டு அவன் மட்டும் நன்றாயிருந்து விடுவானா? நன்றாயிருந்தால் இருக்கட்டும்; நான் வருகிறேன்"

இப்படிச் சொல்லிவிட்டு அந்தக் கட்சிக்காரன் வெளியே வந்ததும், "உங்களுடைய குரலிலிருந்தே உங்களை நான் தெரிந்து கொண்டு விட்டேன்!" என்றான் கண்ணாயிரம். கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தையும் அவனைப் பார்த்த பின் தீர்த்துக் கொண்டு.

கோபண்ணா சிரித்தான். சிரித்து விட்டு "நீங்களும் இவரைப் பார்க்கத்தான் வந்தீர்களா?" என்றான் சுவரில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த காந்தி மகானின் படத்தைப் பார்த்தபடி!

"ஆமாம்; இவரைப் பார்க்கத்தான் வந்தேன்; ஆனால் இனி பார்ப்பதாக இல்லை!" என்றான் கண்ணாயிரம், ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவனைப் போல.

முருகையனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் அப்பா?" என்றான் இடையே குறுக்கிட்டு.

"படித்தது போதும் வா, இவருடைய வண்டியிலேயே நாமும் ஊருக்குப் போய் விடுவோம்" என்றான் அவன், படியை விட்டுக் கீழே இறங்கிக் கொண்டே.

அதற்குமேல் முருகையன் அவனை ஒன்றும் கேட்கவில்லை, கேட்பதற்கு என்ன இருக்கிறது, 'படித்தவர்களின் லட்சண'த்தை அவனும் பார்த்த பிறகு?