விலங்குக் கதைகள்/பறவையும் சூரியனும்

பறவையும் சூரியனும்

ஒருநாள் சூரியன் தன் தங்கை நிலாவை பெர்ரி பழம் கொண்டுவர பூமிக்கு அனுப்பினான். பறவை வடிவத்தில் வங்த நிலா,

துந்தராப் பிரதேசத்தில் அலைந்தது. பழங்களைச் சேகரித்தது; திடீரென்று குமாரி பறவையைச் சந்தித்தது. அவை ஒன்றுக்கொன்று வணக்கம் சொல்லிக் கொண்டன.  அறிமுகம் செய்து கொண்டன: இரண்டும் வெகுநேரம் காட்டில் உலாவின: அவற்றின் பைகள் நிரம்பும்வரை பழங்களைச் சேகரித்தன.

நாம் சற்று களைப்பாறுவோமே! என்றது நிலா.

சரி! நீ வேண்டுமானால் ஓய்வு எடுத்துக் கொள்: அதற்குள் நான் போய் இன்னும் கொஞ்சம் பெர்ரி பழம் சேகரிக்கிறேன் என்றது குமாரி பறவை.

உடனே நிலா மிருதுவான புல்வெளியில் படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியது. பறவை நிலாவின் அருகில் சென்று உற்றுப் பார்த்தது. நிலாவின் அழகைப் பார்த்து மயங்கிப் போன பறவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது.

பிறகு நிலா விழித்தெழுந்தது. நீயும் நன்றாக உறங்கினாயா? என்று பறவையைக் கேட்டது.

நான் இப்பொழுதுதான் உறங்கி விழித்துக் கொண்டேன். உன்னை எழுப்பலாம் என்றிருந்தேன். அதற்குள் நீயே விழித்துக் கொண்டாய்; அது சரி! என் வீடு அருகில் தான் இருக்கிறது; போகலாம் வாயேன், என்றது பறவை.

நிலா பறவையின் வீட்டிற்குச் சென்றது. மாலையில் பறவை சகோதரனான மற்றொரு பறவை அந்த வீட்டுக்கு வங்தது.

பறவை சகோதரனிடம் சொல்லியது: இதோ பார்! அந்த நிலா எவ்வளவு அழகாக இருக்கிறாள். நாளை அவள் பழம் பறிக்கப் போவாள். அப்போது நீ என் உடையைப் போட்டுக் கொண்டு அவளோடு போய் வா! என்றது.


அன்று இரவு மான் மாமிசமும், தேனீரும் அருங்திவிட்டு அவை உறங்கச் சென்றன. மறுநாள் செல்வன் பறவை அதிகாலையில் எழுங்து சகோதரியின் உடைகளைப் போட்டுக்கொண்டு பழம் சேகரிக்க நிலாவோடு சென்றது.