விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி/3. கைப்பந்தாட்டம்

3. கைப்பந்தாட்டம்
(VOLLEY BALL)

1.தாக்கும் எல்லை (Attack area)

ஆடுகளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நடுக் கோட்டுக்கு இணையாக 3 மீட்டர் தூரத்தில் 2 அங்குலம் அகலம் கொண்டு குறிக்கப்பட்டிருக்கும் கோட்டுக்குத் தாக்கும் கோடு என்பது பெயர். அந்தத் தாக்கும் கோட்டிற்கும் நடுக்கோட்டிற்கும் இடைப்பட்டப் பகுதியாக விளங்கும் நிலப்பரப்பு தாக்கும் எல்லை என்று அழைக்கப்படுகிறது,

இந்த எல்லைக் கோட்டினால், ஆட்டத்தில் ஒரு சில ஆட்ட முறைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, தாக்கும் கோட்டிற்குப் பின்னால் உள்ள பின் வரிசை ஆட்டக்காரர்கள் வந்து தடுப்பதில் (Block) பங்கு பெறக் கூடாது. அடுத்து, பின் வரிசை ஆட்டக்காரர்கள் தாக்கும் எல்லைக்குள் வந்து வலைக்கு மேலே உள்ள பந்தைத் தாவி அடிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார். இதை மீறி ஆடினால் அது தவறான ஆட்டமாகும்.

2. தாக்கும் கோடு (Attack Line)

பின் வரிசை ஆட்டக்காரர்கள் வலையோரத்திற்கு வந்து தடுப்புச் செயலில் ஈடுபடாமலும்,அடித்தாட (Spike)

முயற்சிக்காமலும் தடை செய்யும் தன்மையில் அமைக்கப்பட்ட எல்லைக்கோடு ஆகும்.

3.பந்து(Ball)

மிருதுவான தோலினால் 12 துண்டுகளால் சேர்த்துத் தைக்கப்பட்டு, ரப்பர் அல்லது அதே தன்மையில் அமைந்த காற்றுப்பை உள்ளே இருக்குமாறு அமைக்கப் பட்டிருக்கும் பந்து. வட்ட வடிவம் உள்ளதாக இருக்க வேண்டும், ஒரே வண்ணத்திலும் அமைந்திருக்க வேண்டும்.

அகில உலகப் போட்டிகளில் பின்பற்றப்படும் பந்தின் அளவு:

பந்தின் எடை : 270 கிராம் முதல் 280 கிராம் வரை.

பந்தின் சுற்றளவு : 66 செ.மீ. முதல் 67 செ.மீ வரை.

4 தடுத்தாடுதல் (Blocking)

வலைக்கு மேலே பந்து இருக்கும் பொழுது, அதை எதிராட்டக்காரர் ஒருவர் தாக்கி அடிக்கிற சமயத்தில், தன் இடுப்புக்கு மேல் உடம்பின் எந்தப் பாகத்தினாலாவது முயற்சியுடன் வலைக்கு மேலே பந்தைத் தடுத்தாடும் முயற்சிக்கே தடுத்தாடுதல் என்று பெயர்.

தடுப்பதில் முன்வரிசையில் உள்ள எந்த ஆட்ட க்காரரும் பங்கு பெறலாம். தடுப்பதில் பங்க பெறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்களைப் பந்து ஒரே சமயத்தில் தொடுகிற பொழுது, ஒரு முறை பந்தைத் தொட்டு ஆடிய கருதப்படும். தடுப்பதில் பங்கு பெற்றவர்கள் மீண்டும் பந்தை எடுத்து விளையாடலாம். பின் வரிசையில் உள்ள ஒரு ஆட்டக்காரர். வலைக் கு அருகில் வந்து தடுப்பதில் பங்கு பெறுவது தவறாகும்.

5. எல்லைக் கோடு (Boundary Lines)

எல்லைக் கோடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆடுகளப் பரப்பின் எல்லையைக் குறித்து காட்டுகின்றன. அந்தக் கோடுகள் அனைத்தும் 5 செ. மீ. (2 அங்குலம்) உள்ளதாகப் போடப்பட வேண்டும். இந்தக் கோடுகள் எல்லாம் ஆடு களத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன. கட்டைகள் உலோகங்கள் மற்றும் கடினமான பொருள்களால் கோடுகள் அமைக்கப்படக் கூடாது.

6.பந்தைப் பிடித்தாடுதல்(Catching the ball)

பந்தை விளையாடும் நேரத்தில், ஆட்டக்காரரின் கைகளிலோ உள்ளங் கைகளிலோ நொடிப்பொழுது பந்து தேக்கமுற்று நின்றாலும் அவர் பந்தைப் பிடித்தாடியதாகவே கருதப்படுவார். ஆதலால், பந்து தெளிவாக அடிக்கப்பட்டே ஆடப்படவேண்டும். பந்தைப் பிடித்தாடுதல் தவறான ஆட்ட முறையாகும்.

7.ஆடும் இடம் மாற்றி நிற்றல்(Changing Positions)

ஒவ்வொருமுறை புதிதாக ஆட்டம் தொடங்கிறபொழுதும் (Game) ஆட்டக்காரர்கள் தாங்கள் விரும்புகிற இடத்தில் இருந்து ஆடிட அனுமதிக்கப்படுவார்கள். அதை நடுவருக்கு முன்னதாக அறிவித்திட வேண்டும்.

3. குழுப் பயிற்சியாளர் (Coach)

ஒரு குழுவின் தரமான ஆட்டத்திற்கும் திறமையான விளையாட்டுக்கும் குழுப் பயிற்சியாளரே காரணமாவார். அத்துடன், அவரது குழுவினரின் ஒழுங்கான தரமுள்ள நடத்தைக்கும் அவரே பொறுப்பாளியுமாவார்.

ஓய்வுக்காகவும், மாற்றாட்டக்காரர்களை ஆட்டத்தில் சேர்ப்பதற்காகவும் ஓய்வு நேரம் கேட்க குழுப் பயிற்சியாளருக்கு உரிமையுண்டு. ஓய்வு நேரத்தின் பொழுது ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில், ஆடுகளத்தினுள்ளே நுழையாமல்; ஆட்டக்காரர்களிடம் உரையாட குறிப்புரைகள் தர அவருக்கு உரிமை உண்டு.

ஆட்டக் குறிப்பேட்டில் பெயர் குறிக்கப் பட்டிருக்கும் பயிற்சியாளரே, மேற்கண்டவாறு செயல்பட முடியும். அவர் அதிகாரிகளிடம் எதிர்த்துப் பேசவோ, முறையீடுகள் செய்யவோ முடியாது.

9. குறிப்புரைதருதல் (Coaching)

அனுமதிக்கப்பட்ட குழுப்பயிற்சியாளரே குறிப்புரைகள் தர வேண்டும். ஆட்ட நேரத்தில் ஒரு குழுவினர் ஆடும் முறை களில் திறனில்லாமலோ அல்லது எதிராட்டக்காரர்களுக்கு ஏற்ற முறையில் துணுக்கங்களை மாற்றி ஆட வேண்டு மென்றோ அறிவுரை தரும் முறைக்கே குறிப்பரை தருதல் என்று அழைக்கப்படுகிறது.

ஆட்ட நேரத்தில் குறிப்புரைகள் தரக் கூடாது. ஓய்வு நேரம் அல்லது முறை ஆட்டங்களுக்கு இடைப்பட்ட (Sets) நேரத்தில் தான் குறிப்புரை வழங்க வேண்டும்.

மேற்காணும் விதிமுறைகளை முதல் தடவை மீறும் பொழுது, எச்சரிக்கை தரப்படும். இரண்டாவது முறை தொடர்ந்து செய்தால், மீண்டும் எச்சரிக்கப்படுவதுடன், அது ஆட்டக் குறிப்பேட்டில் குறிக்கப்படும். அத்துடன். தவறிழைத்த குழுவானது, சர்வீஸ் போடும் வாய்ப்பை இழக்கும் அல்லது எதிர்க்குழுவிற்கு ஒரு வெற்றி எண் தரப்படும் என்கிற முறையில் தண்டனை அறிவிக்கப்படும்.

10. ஆடு களம்(Court)

ஆடுகளத்தின் நீளம் 18 மீட்டர் அகலம் 9 மீட்டர் தரையிலிருந்து 7 மீட்டர் உயரத்திற்கு எந்த வித தடங்கலும் இருக்கக் கூடாது. பக்கவாட்டில் 3 மீட்டர் தூரத்திற்கு தடங்களில்லாத திறந்த வெளிப் பகுதியாகவும் இருக்க வேண்டும். ஆடுகளத்தின் தரை சமமாக இருக்க வேண்டும். திறந்த வெளியில் அமைக்கப்படும் ஆடுகளமானது 5 மி. மீட்டர் உயரம் ஏற்றத்தாழ்வு இருக்கும் வகையில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சிமிண்டால், அல்லது மணல் பகுதியில் புல் தரையில் ஆடுகளங்கள் அமையவே. கூடாது என்பதும் விதியாகும்.

11.நடுக்கோடு(Centre Line)

வலைக்கு நேராக, கீழாகக் குறிக்கப்பட்டு ஆடுகளத்தை. இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பக்கக் கோடுகளுடன் முடிந்து விடுகிற கோட்டுக்கு நடுக்கோடு என்று பெயர்.

12.நிலைப்பந்து (Dead Ball)

ஆட்ட நேரத்தின் போது ஒரு வெற்றி எண் எடுத்ததற்குப் பிறகு; அல்லது ஆட்டக்காரர்கள் இடம் மாற்றிக் கொண்டு நிற்கிறபொழுது; பந்து நிலைப்பந்தாக ஆகிவிடுகிறது. அதாவது பந்து ஆடப்படாமல் ஏதாவது ஒரு காரணத்தால் தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப் படுகிறபொழுது பந்து, ஆட்டத்தில் ஆடப்படவில்லை என்பது தான் பொருள். 13. ஆட்டத்தைத் தாமதப்படுத்துதல் (Delaying the Game) ஒரு ஆட்டக்காரர் விதிக்குப் புறம்பாக ஒரு செயலைச் செய்யும் பொழுது, அது ஆட்டத்தின் வேகத்தைத் தடைப் படுத்தி, ஆட்டத்தைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுகிறது என்று நடுவர் கருதுகின்ற நேரத்தில், அது ஆட்டத்தைத் தாமதப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. இந்தக் குற்றம் முதலில் எச்சரிக்கப்படும். மீண்டும் செய்தால் கடுமையான தண்டனையும் கிடைக்கும் .

14.இரட்டைத் தவறு (Double Foul)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ ஒரே நேரத்தில், ஒரே தன்மையிலான விதி மீறலைச் செய்தால், அது இரட்டைத் தவறு என்று கூறப்படுகிறது. அப்படி நேர்ந்தால் அதே வெற்றி எண்ணுக்காக, மறுபடியும் ஆட்டம் தொடர்ந்து ஆடப்படும்.

15. பல முறை பந்தாடுதல் (Dribbling)

ஆட்ட நேரத்தில், பந்தை எடுத்து விளையாடும் ஓர் ஆட்டக்காரர், தனது தேகத்தின் எந்த பாகங்களிலாவது ஒரு முறைக்கு மேல் பந்தைத் தொட விடுவதற்குத்தான் பலமுறை ஆடுகல் என்று பெயர். அதாவது மற்ற எந்த ஆட்டக்கார ராவது பந்தை ஆடாத நேரத்தில் பந்தைப் பல முறை தன் தேகத்தில் படவிடுவது தவறு. உடம்பில் பல பாகங்களில் பந்து பட்டாலும், ஒரே சமயத்தில் பல பாகங்களைத் தொடுகிற பந்தை, ஒரு தடவை ஆடியதாகவே கருத விதி இடமளிக்கிறது.

16.இடம் மாறி நிற்றல்(Fault of Positions)

எதிராட்டக்காரர் ஒருவர் சர்வீஸ் போடுகின்ற நேரத்தில் எதிர்ப் பகுதியில் நிற்கும் எடுத்தாடும் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் தங்களுக்குரிய ஆடும் இடங்களில் சரியாக நின்று கொண்டிருக்க வேண்டும். அதாவது ஆட்டக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கும் ஆடும் இட அமைப்பு போலவே நிற்றல் வேண்டும்.

அப்படி இல்லாமல், அடித்தெறியும் நேரத்தில் (சர்வீஸ்) ஒரு குழுவினர் தங்களுக்குரிய இடங்களில் நிற்காமல் நிலை மாறி நின்றால். அது தவறாகும். ஆனால், விளையாடும் நேரத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு நின்றேனும் ஆடலாம்.

ஆட்டக்காரர்கள் நின்றாடும் இடமானது, அவர்கள் நிற்கின்ற கால்களின் இட அமைப்பைப் பொறுத்தே கணிக்கப்படுகிறது.

17. வெற்றி தரும் சர்விஸ் (Game Point)

ஒரு குழு வெற்றி பெற 15 வெற்றி எண்கள் எடுத்தாக வேண்டும். 14வது வெற்றி எண் இருக்கும்போது, ஒரு குழு போடுகிற சர்வீஸ் ஆனது, வெற்றி தரும் சர்வீஸ் என்று அழைக்கப்படுகிறது. அந்த சர்வீஸ் போட்டு வெற்றி எண் பெற்றுவிட்டால் வெற்றி தான். அதில் தவறிழைத்து விட்டாலும், வெற்றி என்பதைப் பெற முடியாமற் போனாலும், அது வெற்றி தரும் சர்வீஸ் என்றே அழைக்கப்படுகிறது.

18.கடைசிமுறை ஆட்டம்(Last Set)

ஒரு குழு போட்டி ஆட்டத்தில் வெற்றி பெற 'இரண்டு முறை ஆட்டங்களில்' (Set) அல்லது 'மூன்று முறை ஆட்டங்களில்' வெற்றி பெற வேண்டும்.

இரண்டு முறை வெல்ல வேண்டும் என்னும் போட்டியில்.ஆளுக்கொரு முறை வென்ற பிறகு, மூன்றாவது முறை ஆட்டம் கடைசி முறை ஆட்டம் என்று அழைக்கப்படும். அது போலவே, மூன்று முறை வெல்ல வேண்டும் என்கிற போது, ஆளுக்கு இரண்டு முறை வென்று, ஐந்தாவது முறை போட்டியிடும் போது 'கடைசி முறை ஆட்டம்' என்று அழைக்கப்படும்.

கடைசி முறை ஆட்டம் ஆடுகிறபொழுது, இரு குழுக்களில் ஒன்று 8ஆவது வெற்றி எண் எடுக்கும் பொழுது, இரு குழுக்களும் தங்கள் ஆடுகளப் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்தந்த இடங்களில் நின்று ஆடுவோர் அதே போன்ற இடங்களில் நிற்க, அதே நிலையில் தான் அடித்தெறியும் சர்வீஸ் வாய்ப்பும் தொடர்ந்து இருக்கும்.

8 வெற்றி எண் வருகிற பொழுது குழுக்கள் தங்கள் பக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் தவறி விடுகிற பொழுது நடுவர் அல்லது குழுத்தலைவர்களில் யாராவது ஒருவர் கண்டு பிடித்து விட்டால், உடனே பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாறுவதற்கு முன்பு இருந்த வெற்றி எண்கள்: தொடர்ந்து நீடிக்கும். வேறு மாற்றம் எதுவும் நிகழாது.

19. முறையான தடுத்தாடல் (Legal Block)

முன் வரிசையில் உள்ள ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூன்று ஆட்டக்காரர்களும் ஒன்றாக இணைந்து, வலைக்கு மேலே பந்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களில் ஒருவராவது பந்தைத் தொட்டிருந்தால் தான் அது சரியான தடுப்பு அல்லது தடுத்தாடல் என்று கூறப்படும். தவறுகள் ஏதும் நேர்ந்து விடாமல் தடுப்பது தான் சரியான அல்லது முறையான தடுத்தாடல் ஆகும்.

20. போட்டி ஆட்டம் (Match)

ஒரு கைப்பந்தாட்டப் போட்டியை நடத்துகின்ற சங்கக்தைப் பொறுத்தோ, அல்லது அவ்வாறு சங்கத்தினர் முடி வெடுக்க இயலாத நிலையில் ஆடுகின்ற இரு குழுவினரின் இசைவினைப் பொறுத்தோ ஒரு போட்டி ஆட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, ஒரு போட்டி ஆட்டத்தில் 'இரண்டு முறை ஆட்டங்களில்' (Set) வெற்றி பெறவேண்டும். அகில உலகப் போட்டிகளில் ஒரு குழு வெற்றி பெற மற்றொரு குழுவை 3 முறை வெல்ல வேண்டும்.

21.ஆட்டக் குறிப்பேடு : MATCH SHEET (Score Sheet)

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஆட்டக் காரர்களின், மற்றும் மாற்றாட்டக்காரர்க ளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும் ஏட்டுக்கு ஆட்டக் குறிப்பேடு என்பது பெயர். போட்டி நடத்துகின்ற சங்கம், போட்டியில் பங்கு பெறுகின்ற குழுக்களின் பெயர்கள், போட்டி நடைபெறுகின்ற நாள், நேரம், ஆண்களுக்கா, பெண்களுக்கா, போன்ற குறிப்பு களுடன், தொடர்ந்து குழுக்கள் எடுக்கின்ற வெற்றி எண்களைக் குறிக்கும் முறையும் இந்த ஆட்டக் குறிப்பேட்டில் இடம் பெற்றிருக்கும்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஆட்டக் குறிப்பேட்டில் எழுதப்படாத ஆட்டக்காரர்கள், ஆட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் .

22.வலை (Net)

வலையின் நீளம் 9.50 மீட்டர். (31'.2.8") வலையின் அகலம் 1 மீட்டர் (3'3"). வலைக்குள்ளே உள்ள நூலினாலான இடைவெளிகள் (10 செ.மீ.) 4 அங்குலம் உள்ள கட்டங்கள் உள்ளனவாக அமைய வேண்டும் வலையின் மேற்புறம் இரட்டை மடிப்புள்ள வெள்ளை நாடா 2 அங்குல அகலத்தில் வைத்துத் தைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆண்கள் ஆடுகின்றபோது வலையின் உயரம் 2மீ. 48 செ.மீ. (7அடி11 5/8 அங்குலம்) : பெண்கள் ஆட்டத்தில் வலையின் உயரம் 2மீ.24செ.மீ. (7அடி4/8அங்குலம்). 23. பக்க நாடாவும் குறிக்கம்பும் (Net Markers And Antennas)

நடுக்கோடும் பக்கக்கோடும் சந்திக்கின்ற இடங்களுக்கு நேர் மேலாக, வலையின் இருபுறமும் 2 அங்குல அகலமும் 1 மீட்டர் நீளமும் உள்ளதாகக் கட்டப்பட்டிருக்கும் வெள்ளை நிற நாடாக்கள் பக்க நாடாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

குறிக்கம்பு வலைகளில் கட்டியிருக்கும் வலை நாடாக்களுக்கு இணையாக வெளிப்புறத்தில் சற்றுத் தள்ளி, வளைகின்ற தன்மையில் உள்ள கம்புகள் (Antennas) கட்டப் பட்டிருக்கின்றன.

அந்தக் குறிக்கம்பு 1.80 மீட்டர் உயரமும் (6 அடி) 10 மி. மீட்டர் விட்டமும் (3/8") உள்ளதாக அமைக்கப்பட்டி ருக்கம் கண்ணாடி நாரிழையால் அல்லது அதற்கிணையான பொருட்களால் ஆன இந்தக் குறிக்கம்புகள் வலையின் உயரத் திலிருந்து 32 அங்குலம் உயரத்தில் இருப்பதுபோல அமைக்கப் பட்டிருக்கும்.

பக்க நாடாக்களும் , இரண்டு குறிக்கம்புகளும் வலையின் ஒரு பகுதியாகவே கருதப்படும்.

24. ஆட்டக்காரரின் ஆடும் எண் (Number)

ஆட்டக்காரர்கள் பனியன் அல்லது ஜெர்சி அல்லது சட்டை ஏதாவது சீருடை அணிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் பனியனில் உள்ள ஆடும் எண்கள் பின்வருமாறு எழுதப்பட்டிருக்க வேண்டும் .

பனியனின் முன்பற எண் அளவு 8 முதல் 15 செ.மீ. அதாவது 3 முதல் 5 அங்குலம் வரை அகலம் 2 செ.மீ. (8/4”) பனியனின் பின்புறம் உள்ள அளவு 15 செ.மீ. அதாவது 6 அங்குலம்.

அகில உலகப் போட்டிகளில், ஒவ்வொரு குழுத்தலைவனும் தன் சட்டைக்குரிய நிறத்திலிருந்து வேறுபட்டதாக விளங்கும் ஒரு வண்ணத்தில், தனது சட்டையின் இடப் பக்கத்தில், மார்புப் பகுதியில் இருப்பதுபோல 80 செ.மீ.X 5 செ.மீ. பரப்புள்ள ஒரு அடையாளச் சின்னத்தை (Badge) அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

25. சொந்தப்பகுதியும் எதிர்ப்பகுதியும் (Own Court And Opponents Court)

ஒரு குழு தான் இருந்து ஆடுகின்ற ஆடுகளப் பகுதியை சொந்தப் பகுதி என்று கருதுகிறது. எதிராட்டக்காரர்கள் நின்று ஆடுகின்ற பகுதியை எதிர்ப்பகுதி என்று அழைக்கிறது.

26.வலைக்கு மறுபுறம் ஆடுதல் (Over the Net)

வலைக்கு மேலே பந்தைத் தொட்டு விளையாடுகின்ற நேரத்தில் கைகள் வலைக்கு மறுபுறம் செல்கின்ற முறையை வலைக்கு மறுபுறம் ஆடுதல் என்று கூறப்படுகிறது.

எதிர்க்குழு பகுதியில் வலைக்கு மேலே பந்து இருக்கும். போது எதிராளி ஆடுவதற்குமுன் பந்தை விளையாடினால், அது தவறாகும். ஆனால் அதே நிலையில் உள்ள பந்தை, எதிராளி ஆடும்பொழுது தொட்டால், அது தவறில்லை.

தடுப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பந்தைத் தொடாமல் வலைக்கு மறுபுறம் கைகள் சென்றாலும், பந்தைத் தாக்கி அடித்தபின் அந்த வேகத்துடன் வலைக்கு மறுபுறம் அடித்த கை சென்றாலும் அது தவறாகாது. 27.பந்தை விளையாடுதல்(Playing The Ball)

பந்து ஆட்டத்தில் உள்ள நேரத்தில், பந்தை ஆட்டக் காரர் தொட்டு விளையாடினாலும் சரி, ஆட்டக்காரரைப் பந்து போய் தொட்டாலும் சரி, அது பந்தை விளையாடியதாகவே கருதப்படும். இந்த நிகழ்ச்சி ஆடுகளத்திற்கு உள்ளே நடந்தாலும் சரி. எல்லைக்கோடுகளுக்கு வெளியே நடந்தாலும் சரி. அது பந்தை விளையாடிய நிகழ்ச்சியாகவே கொள்ளப்படும்.

28.வெற்றி எண் (Point)

ஒரு குழு சர்வீஸ் போட்டு அந்தப் பந்தைப் பெறுகின்ற எதிர்க்குழுவினர், வலைக்கு மேலே, சரியான முறையில் விதிகளுக்குட்பட்டு. வந்தப் பந்தை அனுப்பிய குழுவிற்கே திருப்பி அனுப்பத் தவறினால், சர்வீஸ் போட்டக் குழுவிற்கு 2 வெற்றி எண் கிடைக்கும்.

15 வெற்றி எண்களை முதலில் பெறுகிற ஒரு குழு அந்த முறை ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இரண்டு குழுக்களும் சமமான வெற்றி எண்கள் பெற்றிருந்தால், இரண்டு எண்கள் வித்தியாசம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். உதாரணமாக, இருகுழுக்களும் 1 - 14 என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் வெற்றி பெற 16-14; 17-15; 18-16; 19-17 என்ற வித்தியாசம் வரும்வரை ஆடி முடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

29.நின்றாடும் இடம் (Position)

ஒரு குழுவில் உள்ள ஆறு ஆட்டக்காரர்களும், எதிர்க் குழுவில் உள்ள ஒருவர் பந்தை அடித்தெறியும் (Service) நேரத்தில், அவரவர்க்குரிய இடங்களில் நிற்க வேண்டும். அவர்கள் இரண்டு வரிசையாக நிற்க வேண்டும். ஆனால், அந்த வரிசை நேர்க்கோட்டைப் போன்று ஒழுங்காக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

வலைக்கு அருகில் உள்ள மூன்று ஆட்டக்காரர்களும் 'முன்வரிசை ஆட்டக்காரர்கள்' என்றும், மற்ற மூவரும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். ஆட்டம் தொடங்கும் பொழுது அவர்கள் நின்றாடும் இடமானது குறிப்பேட்டில் இவ்வாறு குறிக்கப்படும் வலமிருந்து இடம் 2,3,4 என்பது முன்வரிசையினர் நின்றாடும் இடம் 1,6,5 என்பது பின்வரிசையினர் நின்றாடும் இடமாகும்.

30 சேர்த்துத் தள்ளுதல் (Pushing)

ஆட்ட நேரத்தில் பந்தை விரல்களினால் தள்ளி விளையாடாமல் உள்ளங்கைகளில் பந்து தேங்குமாறு வைத்துச் சேர்த்துத் தள்ளி விளையாடுவது, இது தவறான ஆட்டமுறையாகும்.

31.நடுவர் (Referee)

ஒரு போட்டி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும், ஆட்டக்காரர்களிலிருந்து ஆட்ட அதிகாரிகள் வரைக்கும். எல்லோருக்கும் இவர் தலைவராக இருந்து ஆட்டத்தை ஒழுங்குற நடத்துபவராக இருக்கிறார். விதிகளின் படியும், மற்றும் விதிகளில் குறிப்பிடாத எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் ஒரு முடிவு காண இவருக்குப் பூரண அதிகாரம் உண்டு, மற்றத் துணை நடுவர்கள் எடுக்கின்ற முடிவினையும், சரியில்லை என நினைக்கிற போது இவருக்கும் மாற்றிட அதிகாரமுண்டு. அவரது முடிவே முடி வானது இவர் ஆடுகள நடுக்கோட்டின் ஒரு பக்கத்தில், வலையிலிருந்து 1'.08" தூரத்தில் உயரத்தில் நின்று. ஆட்டத்தைக் கண்காணிப்பார்.

32.இடம் மாறி நிற்கும் முறை (Rotation Order)

சர்வீஸ் போடும் குழுவினர் தவறிழைத்தால் சர்வீஸ் போடும் வாயப்பு எதிர்க்குழுவினருக்கு மாற்றித் தரப்படும். இடம் மாற்றிக் கொள்ளவும்.என்று நடுவர் அறிவித்தவுடன். சர்வீஸ் போடும் குழுவினர் உடனே தங்களது நின்றாடும் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு மாறி நின்று கொள்ள வேண்டும். அதாவது பந்தை சர்வீஸ் போடும் வாய்ப்புப் பெற்ற குழுவினர் கடிகார முள் சுற்றுகிற நிலையைப் போல, (Clock wise) நிற்கும் ஒரு இடத்தை (One Position) உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

33.ஏந்தி ஆடுதெல் (Scooping)

பந்தை எப்பொழுதும் தாக்கி ஆட வேண்டும். நொடி நேரம் கூட பந்து கைகளில் தேங்கி நின்றாலும் அது தவறான ஆட்டமுறையாகும். பந்து தேங்கினால் அதனைப் பந்தைப் பிடித்தாடியதாகக் குற்றம் சாட்டப்படும். பந்தை அடிக்காமல், கைதொடர்ந்து செல்லுமாறு ஏந்தி ஆடினால், பந்தை ஏந்தித் தள்ளி ஆடினதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடும்.

34.ஆட்டக் குறிப்பாளர் (Scorer)

ஆட்டம் தொடங்குவதற்குமுன், ஆட்டக்காரர்கள், மாற்றாட்டக்காரர்கள் மற்றும் குழு மேலாளர்கள், பயிற்சியாளர்கள் பெயர்களை ஆட்டக் குறிப்பேட்டில் குறித்து வைப்பார். கேட்கப்படுகின்ற ஓய்வு நேரங்களையும், குழுக்கள் வெற்றி எண்கள் பெறுவதையும் குறித்து வைப்பார் ஆட்டக் காரர்களின் நின்றாடும் இடங்களையும் சுற்று. முறைகளையும் குறித்துக் கண்காணித்திருப்பார். முறை ஆட்டம் முடிந்த பிறகு, குழுக்கள் இரண்டும் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் இவர் கவனித்துக் கொள்வார். நடுவருக்கு எதிராக உள்ள ஆடுகளப் பகுதிக்கு அப்பால் குறிப்பாளர் அமர்ந்து, தன் பணியைத் தொடர்வார்

35. பந்தை அடித்தெறிதல் (Service)

ஆடுகளத்தின் பின் வரிசையில் நிற்கும் மூவரில், வலப்புற ஆட்டக்காரராக நிற்கும் ஒரு ஆட்டக்காரர், தன் கையினாலாவது கையில் ஒரு பகுதியினாலாவது பந்தை அடித்து (கையை விரித்தும் அடிக்கலாம் அல்லது மூடியும் குத்தலாம்) வலைக்கு மேலே செலுத்தி, விதிகளுக்குட்பட்ட முறைகளில் எதிர்க்குழுவினரின் பகுதியில் விழச்செய்து, ஆட்டத்தைத் துவக்குகிற முறைக்கே அடித்தெறிதல் என்று பெயர்.

நடுவரின் விசில் ஒலித்தவுடன், 5 வினாடிகளுக்குள்ளாக ஒரு ஆட்டக்காரர் அடித்தெறிய வேண்டும். கடைக்கோடடை. மிதித்துக் கொண்டு அடித்தெறியக் கூடாது. அடித்தெறியப்பட்ட பந்து வலையில் படாமல், பக்கநாடாக்களுக்கு புறமாகவும், ஆடுகள எல்லைக் கோடுகளுக்குள்ளும் விழுந்தால் தான் அது சரியான அடித்தெறிதலாகும்.

36. அடித் தெறியும் வரிசை (Serving order)

ஒரு குழு ஆட்டக்காரர்கள் 2 வரிசையாக நிற்பார்கள் அவர்களில் முன் வரிசை ஆட்டக்காரர்கள் என்றும், பின் வரிசை ஆட்டக்காரர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அவர்களில் பின் வரிசையில் நிற்பவர்களில் , பொதுவாக வலப் புற, ஒரத்தில் நிற்பவர்தான் முதன்முதலில் அடித்தெறியும் வாய்ப்பைப் பெறுவார். அவரைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்து அந்த அடித்தெறியும் சர்வீஸ் வாய்ப்பைப் பெறுவதைத் தான் அடித்தெறியும் வரிசை என்று கூறப்படுகிறது. அடித்தெறியும் வரிசை முறை கீழ் வருமாறு அமைகிறது

முதல் வரிசை 4,3,2

இரண்டாம் வரிசை 5,6,1 .

37. அடித்தெறியும் எல்லை (Service Area)

கடைக் கோட்டின் பின்னால், நேராக ஆடுகளப் பக்கக் கோட்டிலிருந்து இடதுபுறமாகவே வந்து 3 மீட்டர் துரத்தில் 2 அங்குல இடைவெளி விட்டு, ஒரு கோடு குறிக்க வேண்டும். அந்தக் கோடு கடைக்கோட்டைத் தொடாமல் இருக்க வேண்டும். அந்தக் கோட்டை 8 அங்குலம் பின்புறமாக நீட்டி விட்டால், அதுவே அடித்தெறியும் எல்லையைக் குறித்துக் காட்டும்.

அதாவது கடைக்கோட்டின் நீளம் 9 மீட்டர் தூரம் என்றால் அடித்தெறியும் எல்லையைக் குறிக்கும் தூரம் 3 மீட்டர். அதாவது மூன்றில் ஒரு பங்காகும். இந்த எல்லைக்குக் குறைந்தது, 2 மீட்டர் தூரத்திற்கு அருகில், எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் இருக்க வேண்டும்.

38 முறை ஆட்டம் (Set)

எதிராட்டக்காரர் ஒருவர் அடித்தெறிகின்ற பந்தை (சர்வீஸ்) எடுத்தாடுகின்ற குழு விதிகளுக்குட்பட்டவாறு வலைக்கு மேலே சரியான முறையில் எதிர் பகுதிக்குள் அனுப்பத் தவறுகிற பொழுது சர்வீஸ் போட்ட குழுவிற்கு 1 வெற்றி எண் கிடைக்கும்.

இவ்வாறு இரண்டு குழுக்களில் எந்தக் குழு முதலாவதாக 15 வெற்றி எண்களை ஈட்டுகிறதோ, அந்தக் குழுவே ஒரு முறை ஆட்டத்தில் வென்றது என்று அறிவிக்கப்படும். இதனை (Game) என்றும் சொல்வார்கள் கைப்பந்தாட்டத்தில் SET என்று கூறுவார்கள்.

சாதாரண போட்டியாக இருந்தால் ஒரு குழு 3 முறை ஆட்டங்களில் இரண்டு முறையும், பெரிய போட்டியாக இருந்தால் 5 முறை ஆட்டங்களில் மூன்று முறையும் வென்றாக வேண்டும்.

39 தாக்கி ஆடுபவர் (Spiker)

கைப் பந்தாட்டத்தில் ஒரு குழு 3 முறை பந்தைத் தொட்டாடி எதிர்க்குழுவிற்கு அனுப்பலாம் என்ற விதி இருக்கிறது பந்தை எடுத்து விளையாடித் தர ஒருவர், பந்தை வலைக்கு மேலே உயர்த்தித் தருபவர் ஒருவர், அதை வலிமையுடன் தாக்கி அடித்தாடி எதிர்க்குழுவிற்கு அனுப்புபவர் ஒருவர்.

தாக்கி ஆடுபவர்தான் அந்தந்தக் குழுவின் தலையாய ஆட்டக்காரராக இருப்பார். அவரால் தான் அதிக வெற்றி எண்களை எளிதில் பெற்றுத் தர முடியும் . இவ்வாறு தாக்கி ஆடும் ஓர் ஆட்டக்காரருக்கு வேண்டிய இன்றியமையாத திறன்கள். நல்ல உயரம், நின்ற இடத்திலிருந்து துள்ளி உயரயமாக எம்பிக் குதிக்கும் திறமை, வலைக்கு மேலே பந்தைப் பார்த்து அடிக்க முயல்கின்ற நேரம் அறியும் திறன் (Timing), உடலுறுப்புக்களின் ஒன்றுபட்டுத் திறம்பட இயங்கும் தன்மை.

இத்தகைய தகுதிகள் நிறைந்தவரே இப்படித் தாக்கி ஆடுபவராக விளங்க முடியும்.

40.ஒருமுறை தொட்டாடல்(Simułtaneous Touch)

இடுப்பு வரை அதாவது உடம்பின் மேல் பகுதியின் எந்தப் பாகத்தினாலாவது பந்தை வினையாடலாம். அது தவறில்லை. இடுப்புக்கு மேலே, உடம்பின் பல பாகங்களில் பந்து. பட்டாலும், அவை அனைத்தும் ஒரே சமயத்தில் தொட்டதாக இருந்தால், அதை ஒரு முறை தொட்டாடியதாகவே கருதப்படும்.

இவ்வாறு ஒரே சமயத்தில் படாமல் போனால், அது 'இரண்டு முறை தொட்டாடியது' (Double Touch) என்னும் தவறாகக் குறிக்கப்படும்.

41. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

எந்தச் சூழ்நிலையிலும், ஒரு குழுவில் 6 பேர்களுக்குக் குறையாமல் ஆடுகளத்தினுள் இருக்க வேண்டும். அதாவது நிரந்தர ஆட்டக்காரர்கள் மாற்றாட்டக் காரர்கள் என்பதாகும் ஒரு குழுவில் மொத்தம் 12 பேர்களுக்கு மேல் போகக் கூடாது

ஆடுகளத்தினுள் ஆட இறங்கிய 6 ஆட்டக்காரர்களைத் தவிர, மீதி 6 பேர்களும். நடுவருக்கு எதிராக உள்ள ஆடுகள பக்கக் கோட்டிற்குப் பக்கமாக அமர்ந்திருக்க வேண்டும் .

போட்டி ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே, ஆட்டக்காரர்கள், மாற்றாட்ட க்காரர்களின் பெயர்கள் ஆட்டக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டிருந்தால் தான், ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் பெயர் எழுதபடாதவர்களுக்கு ஆட்டத்தில் ஆட அனுமதியில்லை

மாற்றாட்டக்காரர்கள் ஆடுகளத்திற்கு . வெளியே, உடலைப் பதமாக்கும் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு உடனே வந்துவிட வேண்டும். 42.ஆள் மாற்றுமுறை (Substitutions)

ஓய்வு நேரத்தில் ஆட்டக்காரர்களை மாற்றிக்கொள்ள நடுவரிடம் முன் அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதியை குழுத் தலைவன் அல்லது மேலாளர் கேட்டுப் பெறலாம். ஆள் மாற்றுதற்குரிய ஓய்வு நேரம் 30 நொடிகள். அதற்குள்ளாக, ஒரு ஆட்டக்காரரையோ அல்லது பல ஆட்டக்காரர்களையோ ஒரே சமயத்தில் மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு.

ஒரு முறை ஆட்டத்தில் (Set) ஒரு குழு அதிக அளவு 6 முறைதான் மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ளமுடியும்.

மாற்றாட்டக்காரர், ஒருவர் உள்ளே போய் ஆட வாய்ப்பளித்து வெளியே வரும் ஒரு ஆட்டக்காரர், யாருக்கு இடம் கொடுத்து வெளியே சென்றாரோ, அதே இடத்தில் போய். நின்று ஆட முடியும். ஒரு மாற்றாட்டக்காரர் ஒரே ஒரு முறை தான் உள்ளே சென்று வெளியே வரலாம்.

ஒரு மாற்றாட்டக்காரர், ஆடுகளத்தில் இறங்கி ஆடி பின்னர் வெளியே வந்து விட்டால், மீண்டும் உள்ளே சென்று ஆட முடியவே முடியாது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், மாற்றாட்டக்காரர்களைப் போடுகின்ற வாய்ப்புகள் எல்லாம் முடிந்திருந்தால், காயம்பட்ட ஆட்டக்காரருக்குப் பதிலாக, ஒருவர் இறங்கி விளையாட அனுமதிக்கப்படும்.

43.மூன்று பந்து ஆட்டமுறை(Three Ball System)

ஆட்ட நேரத்தில் பந்து வெளியே போய்விட்டால், மீண்டும் அதை எடுத்து வருவதற்குள் நேரம் கடந்து போய் விடுகிறது என்பதாலும், ஆட்டத்தை இடை விடாமல் தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பதாலும், ஆட்ட வல்லுநர்கள் மேற்கொண்ட புது உத்திதான் இந்த மூன்று பந்து ஆட்ட முறையாகும். இந்த மூன்று பந்துகளை வைத்து 6 பந்துப் பையன்களைக் கொண்டு (Ball Boys) எப்படி ஆட்டத்தை நடத்துவது என்பது தான் புதிய முறை.

6 பந்துப் பையன்களும் நிற்கின்ற இடம் பின் வருமாறு.

ஆடுகள மூலை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பையன் (4) அதாவது அவர்களுக்குத் தந்திருக்கும் எண்கள் 1,3,4,6.

ஆட்டக் குறிப்பாளர் அருகில் ஒருவன் (2)

நடுவருக்குப் பின்புறம் ஒருவன் (5) ஆக . மொத்தம் 6.

ஆட்டத் தொடக்கத்தில் ஆட்டப் பந்துகளான மூன்றும் இருக்கும் இடம். ஒரு பந்து ஆட்டக் குறிப்பாளர் மேசையில்,மற்ற இரு பந்துகளும் பந்துப் பையன்கள் 1 இடமும் 4இடமும்.

இந்த 1ம் 4ம் தான். இரண்டு பக்கங்களிலும் நின்று. கொண்டு, சர்வீஸ் போடும் ஆட்டக்காரருக்குப் பந்தைக் கொடுப்பவர்கள் ஆவார்கள்.

பந்து வெளியே போய் விட்டால், பந்து வைத்திருக்கும் மற்ற பந்துப் பையன், உடனே எந்தக்குழு சர்வீஸ் போடுகிறதோ, அந்தப் பக்கத்தில் நிற்கும் பந்துப் பையனிடம் (1அல்லது 4) தரவேண்டும். அவன் சர்வீஸ் போடுபவரிடம் பந்தைத் தருவான்.

பந்து ஆடுகளத்தினுள் இருந்தால், அந்த இடத்திற்கு அருகில் உள்ள பந்துப் பையனிடம் , பந்தை உடனே கொடுத்துவிடவேண்டும். அல்லது ஆடுகளத்திற்கு வெளியே விடவேண்டும் 44. ஒய்வு நேரம் (Time Out)

ஓய்வுக்காக, அல்லது ஆட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள, குழுத் தலைவன் அல்லது குழுமேலாளர் நடுவரிடம் அனுமதி கேட்கலாம். அதற்குத் தான் ஓய்வு நேரம் என்று பெயர். அதற்குரிய நேரம் 30 நொடிகளாகும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு முறை ஆட்டத்திலும் 2 முறை ஓய்வு நேரம் கேட்க உரிமையுண்டு.

ஏதாவது காயம் யாருக்காவது ஏற்பட்டால் நடுவர் ஓய்வு நேரம் என்பதாக, 3 நிமிட நேரம் இடைவேளை உண்டு.

ஓய்வு நேர வேளையில், ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்வதோ அல்லது வெளியே உள்ளவர்களிடம் பேசுவதோ கூடாது. குழுப் பயிற்சியாளரிடம் அறிவுரை கேட்கலாம். ஆனால், அவரும் ஆடுகளத்தினுள் நுழையக் கூடாது.

சர்வீஸ் போட வேண்டுமென்று வருபவருக்கு அந்தந்த பகுதியில் உள்ள பந்து பையன், பந்தைத் தரவேண்டும். ஒய்வு நேரம் கேட்கப்படும் சமயத்தில், இரண்டாவது நடுவரிடம் பந்தை ஒப்புவித்திட வேண்டும்.

பந்துப் பையன் பந்தை ஒருவரிடம் வழங்கும் போது, எறியக் கூடாது தரையோடு தரையாக உருட்டி விட வேண்டும் பந்துப் பையன்கள் நிற்கும் இடங்கள்.