விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/கிரிக்கெட்டில் ஆறு ஓட்டங்கள் ஏன் வந்தது?
கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய இடம் வகிப்பது விக்கெட்டுகள்தான். 22 கெஜ தூரத்திற்குள்ளாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இரண்டு விக்கெட்டுகளைக் குறிபார்த்து, பந்தெறிந்து ஆடுபவர்கள் முயற்சிப்பார்கள். அப்படிஎறியப்படும் பந்தை அடித்தாடுபவர்கள், தூரத்திற்குப் போவதுபோல அடித்தாடி, அதற்கிடையில், இரண்டு விக்கெட்டுகளுக்கிடையே இருவரும் மாறிமாறி ஓடிஎடுக்கும் நிலையைத்தான் 'ஓட்டம் '(Run) என்று குறிப்பிடுவார்கள்.
ஒரு விக்கெட்டிலிருந்து 75 கெஜத்திற்கு அப்பால் எல்லைக் குறிக்கப்பட்டிருக்கும்; அவ்வாறு சுற்றிலும் எல்லையாகக் குறிக்கப்படும் மைதானம், பொதுவாக முட்டை வடிவ அமைப்பில் (Oval) அமைந்திருக்கும்.
பந்தடித்தாடும் அட்டக்காரர் ஒருவர், பந்தய மைதான எல்லைக்கு வெளியே பந்தை அடித்துப் போகவிட்டால், அவருக்கு 4 ஓட்டங்கள் (Four) என்று அறிவிக்கப்படும். அவருக்குரிய குறிப்பேட்டில் ஓட்டங்களின் மொத்தம் என்றும் குறிக்கப்படும்.
பந்தய மைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியே போய் பந்து விழுமாறு அடித்துப் பந்தை அனுப்பினால் அதற்கு எத்தனை ஓட்டங்கள் தரவேண்டும்? இந்த பிரச்னை, ஆட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து 1904-ம் ஆண்டுவரை எழவே இல்லை.
1904ம் ஆண்டு செஸ்டர் பீல்டு எனும் இடத்தில், டெர்பிஷயர் குழுவுக்கும் செசக்ஸ் குழுவுக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது. செசக்ஸ் குழுவைச் சேர்ந்த P.A.
பெர்ரின் (P.Perrin) எனும் ஆட்டக்காரர் ஒரு 'முறை ஆட்டத்தில்' (One Inning) 343 ஓட்டங்கள் எடுத்தார்.
அந்த ஓட்டங்களில், 68 முறை மைதானத்திற்கு வெளியே பந்து போகுமாறு (Boundary) பந்தை அடித்தாடினார். அதில் என்ன விசேஷம் என்றால், 14முறை பந்தை அடித்தபொழுது மைதான எல்லைக்கு வெளியே சென்றுதான் (Out of Boundary) பந்து விழுந்தது. அதற்கும் 4 ஓட்டங்களேதான் அவர்களால் அளிக்கப்பட்டன.
என்றாலும், இந்த முறை மாறவே இல்லை. மைதானத்திற்கு வெளியே பந்தை அடித்தால் என்ன செய்வது என்று எண்ணி எண்ணி முடிவுக்கு வராமலேயே, ஆட்டக்காரர்களும் ஆடிக்கொண்டிருந்தனர்.
1904ம் ஆண்டு P.A. பெர்ரின் ஆடியபிறகு, 1906ம் ஆண்டு ஒரு புதிய விதியைக் கொண்டுவந்தனர். அதாவது மைதான எல்லைக்கு வெளியே பந்துபோய் விழுமாறு அடித்தாடினால் அதற்கு 6 ஓட்டங்கள் தரலாம் என்று 1906ம் ஆண்டு முடிவு செய்தனர். ஆனால் அந்த விதி முறை 1910ம் ஆண்டுவரை மதில்மேல் பூனை போல அப்படியும், இப்படியும் என்பதுபோல பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆடப்பட்டது.
அந்தந்த மைதான அமைப்புக்கும் எல்லைக்கும் ஏற்ப அவர்கள் வைத்துக்கொண்டு ஆடினர். ஆஸ்திரேலியாவில் 1906ம் ஆண்டு காலத்தில், மைதானத்திற்கு வெளியே விழுமாறு பந்து அடிக்கப்பட்டால் அதற்கு 5 ஓட்டங்கள் தந்தும் ஆடினர்.
அதன் பிறகு 6 ஓட்டங்கள் என்று முடிவுசெய்தனர். இந்த ஆட்ட அமைப்பின்படி அ. கிம்பளெட் என்பவர் 1936ம்
ஆண்டு ஆடியபொழுது, 18 முறை மைதானத்திற்கு வெளியே பந்துபோகுமாறு (Boundary) அடித்தாடினார். அதில் 6 முறை மைதானத்திற்கு வெளியே பந்து போகுமாறு (Boundary) அடித்தாடினார். 'இது ஒரு முறை ஆட்டம்' (One Inning) கடக்கும் பொழுது நடந்தது.
ஆனால், 1968ம் ஆண்டு, ஸ்வேன் சீ (Swan Sea)என்னும் இடத்தில், கிளேமார்கன் குழுவிற்கும் காட்டிங்காம்ஷயர் எனும் குழுவிற்கும் நடந்த போட்டியில், சோபர்ஸ் என்பவர் ஒரு புது சாதனையையே நிகழ்த்தினார்.
M.A. நாஷ் (M.A. Nash) என்பவர் எறிந்த பந்தை (ஒரேஓவரில்) 6 முறை அடித்து, மைதானத்திற்கு வெளியே விழுமாறு 6x6-36 ஓட்டம் எடுத்தார் இதுவே இன்றும் உலகசாதனையாக இருக்கிறது.