விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பரிசு படுத்தும் பாடு
x
1980ம் ஆண்டில் கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் முதன் முதலாக புதிய ஒலிம்பிக் பந்தயம் நடைபெற்றது. அதில் கடைசி நிகழ்ச்சியான மாரதான் ஓட்டப் போட்டியில் மட்டுமே கிரேக்க நாடு வெற்றி பெற்றது. கிரேக்க ஒட்டக்காரர் ஸ்பிரிடன் லூயிஸ் வெற்றி பெற்று, தன் தாயகத்தின் மானத்தைக் காத்ததாக ஒரு வரலாறு.
கிரேக்க வீரன் வெற்றி பெற்றதும் அவனது ஆயுள் முழுவதும் இலவசமாக முடி அலங்காரம் செய்து தருவேன், ஆடை தைத்துத் தருவேன், உணவு வழங்குவேன் என்று ஒவ்வொருவராக முன்வந்து பரிசுதர முன்வந்தார்கள். கிரேக்கமே அவ்வீரனுக்கு வாழ்த்தி பரிசுகளை அளித்தது. அவற்றில் பிரச்சினைகள் ஏதுமில்லை.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தாயகம் வந்தபோது, அவர்கள் ஆயுள்காலம் வரை குளிர்பானம் வழங்குவோம் என்று வாக்களித்தது ஒரு நிறுவனம். அதில் ஏதும் பிரச்சினை முளைத்தெழவில்லை.
கிரிக்கெட்வீரர் கபில்தேவுக்கு மோட்டார் சைக்கிள் பரிசினை சென்னையில் டெஸ்ட் மேட்ச் நடந்தபோது பரிசளித்தார்கள். அதிலும் பிரச்சினை வரவில்லை.
சண்டிகார் நகரில், சண்டிகார் விளையாட்டுத்துறை எழுத்தாளர்கள் சங்கத்தில், பரிசளிப்பு ஒன்றை நடத்தியபோது, அதன் தொடர்பாக எழுந்த பிரச்சினைதான், பரிசு பெற்றவர்களை பாடாய்படுத்தி விட்டது . கீதா சட்ஷி (Geeta Zutshi) என்பவர், இந்தியாவில் சிறந்த வீராங்கனை ஆவார். சிறந்த ஓட்டக்காரி என்பதால் அவரை தேர்ந்தெடுத்து, பரிசளிப்பு விழாவும் நடந்தது. சிறந்த பெண் உடலாளர் (Women Athlete) என்பதாகத் தேர்ந்தெடுத்து அவருக்கு தொலைக்காட்சி (TV Set) ஒன்றைப் பரிசளித்தனர்.
தொலைக்காட்சி பெட்டியைத்தான் பரிசளித்தார்களே ஒழிய, அதற்குரிய உரிமத்தை (Licence) கொடுக்க மறந்து விட்டார்கள் விழாக் குழுவினர். தொலைக் காட்சிப் பெட்டியைத் தந்த நிறுவனமும் மறந்து விட்டது போலும்! தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கின்ற நேரத்தில், மலர்ப்படுக்கையில் முள் இருந்து உறுத்துவதுபோல, வீராங்கனையின் குடும்பத்தார்க்கு மனவேதனையை அளிக்க ஆரம்பித்தது அந்தப் பரிசுப் பொருள்.
உரிய லைசென்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன்படுத்துவது தவறு. தண்டிக்கப்பட வேண்டிய தவறுதான் என்பது எல்லோரும் அறிந்ததே! அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் அக்குடும்பத்தின் தலைவர் R.N. சட்ஷி. அதாவது விளையாட்டு வீராங்கனையின் தந்தையார்.
தொலைக்காட்சிப்பெட்டி தந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டார். பலமுறை லைசென்ஸ் பெற முயற்சி எடுத்துப் பார்த்தார். மாதங்கள் பனிரெண்டு மறைந்தோடின. ஆனால் அவரது முயற்சியானது ஆரம்ப நிலையிலேயே நின்று போனதே தவிர, ஒரு சிறு பலனைக்கூடத் தரவில்லை.
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு உரிய லைசென்ஸ் வாங்கலாம் என்றால், அதை வாங்கியதற்குரிய ரசீதும் இல்லை என்பதால், வைத்துக்கொள்ளவும் முடியாமல், வெளியே வீசி எறியவும் முடியாமல் தடுமாறித் தத்தளித்தார் என்பதாக
ஸ்போர்ட்ஸ் உலகம் என்ற ஆங்கில விளையாட்டுத்துறை வார இதழில் படித்தோம்.
பெருமகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரவேண்டிய பரிசானது, பெரும் சங்கடத்தில், அதுவும் தர்ம சங்கடத்தில் மாட்டிவிட்டிருக்கிறதே! விடவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பாக இருப்பவர்களை ஆட்டி வைக்கின்ற பரிசு படுத்தும் பாடு, கொடுமையான பாடுதான்.
பரிசுபடுத்தும் பாட்டைப் பார்த்தால் பரிசு என்றால் மற்ற வீரர்களும் வீராங்கனைகளும் வெகுவேகமாக ஓடிப்போனாலும் ஆச்சரியமேயில்லை தான்!