விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/வழி விட்ட வள்ளல்
1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் எனும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், 10,000 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற வீரர்கள் பலர், இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
வெற்றி பெற்று விடவேண்டும் என்ற வைராக்கிய நெஞ்சுடன், ஜப்பான் தேசத்திலிருந்து ஒரு வீரன் வந்திருந்தான். பார்வைக்கு ஒல்லியாகவும் குள்ளமாக வும் இருந்த அந்தவீரன், ஓட்டம் தொடங்கியவுடனே, தன் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினான்.
என்னதான் இவன் வேகமாக ஓடினாலும், மற்றவீரர்கள் இவனை பின்னால் தங்கவிட்டு விட்டு வேகமாக ஒடியதுமல்லாமல், ஒரு சுற்றுக்கும் (Round) முன்னால் இருப்பதுபோன்ற வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். ஜப்பானிய வீரனோ தன்னந் தனியனாக ஓடினான். சீக்கிரம் ஒடிச் செல்ல வேண்டும் என்பதற்காக முதல் ஓட்டப் பாதையிலேயே (Lane) ஓடிக்கொண்டிருந்தான்.
அவனது வலதுபுறமாகப் போய்கடந்துதான் மற்றவர்கள் முன்னேறி ஓடவேண்டும். அப்படி மற்றவர்கள் அவனைச் சுற்றி ஓடினால், அவர்கள் அதிக தூரத்தைக் கடக்க வேண்டி நேரிடும். அதனால் அதிக நேரம் ஓடி முடிப்பதாக ஆகிவிடும் என்பதை உணர்ந்த அந்த வீரன், தான் வாழாவிட்டாலும், மற்றவர்களாவது நன்றாக வாழட்டும் என்று முடிவு செய்தான். அதற்காக ஓடும் வழியையும் தாராளமாக விட்டான்.
“முதல் ஓட்டப்பாதையில் ஓடினால்தானே, மற்றவர்கள் தன்னை முந்துவதற்காக, இரண்டாம் ஒட்டப் பாதையில் போய் ஒடிச்செல்ல வேண்டும்! அப்படியில்லாமல், தான் மூன்றாவது பாதையில் ஓடினால் மற்றவர்கள் முதலாவது பாதையில்
தடங்கல் இன்றி ஓடுவார்கள். அதனால் நிச்சயம் நன்மை பயக்கும்" என்று நினைத்தான். அப்படியே ஓடிக் கொண்டிருந்தான்.
அனுபவப்பட்ட வீரன் அல்லவா அவன்! பண்பட்ட அவன் மனம் எண்ணியது போலவே நடந்தது. உலகப் புகழ்பெற்ற ஒட்டவீரர்களான போலந்து நாட்டின் ஜான்ஸ் குசோசின்கி, பின்லாந்துநாட்டுவீரர்கள். இசோகலோ, மற்றும் விர்டானென் என்பவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு, முதல் ஒட்டப் பாதையிலேயே ஓடினார்கள்.
அதில் போலந்து நாட்டு வீரர் ஜானஸ் வெற்றி பெற்றார். அதோடுமட்டுமன்றி, 16 ஆண்டுகளாக இருந்த ஒலிம்பிக் சாதனையையும் மாற்றி, புது சாதனையை வரலாற்றில் பொறித்தார்.
எல்லாம் ஓடிமுடிந்த பிறகு, எப்படியும் பத்தாயிரம் மீட்டர் தூரத்தை ஓடிமுடித்துவிட வேண்டும் என்று, கடைசியாக ஓடிவந்த அந்த ஜப்பானிய வீரனை பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர். பாராட்டினர்.
வழிவிட்ட வள்ளலாக மாறிய, பெயர் தெரியாத அந்த ஜப்பானிய வீரனின் பெருந்தன்மையை இக்கால வீரர்கள் பின்பற்றினால் என்ன? பின்பற்றினால் எத்தனை எத்தனையோ சச்சரவுகளையும் தகராறு களையும் தடுத்து நிறுத்தி, விளையாட்டு உலகத்தை சொர்க்க பூமியாக மாற்றலாம் என்று உங்களுக்கும் இப்படி எண்ணத் தோன்றுகிறது அல்லவா!