விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/வார்னிஷ் விளையாடுகிறது

23. வார்னிஷ் விளையாடுகிறது!

கிரிக்கெட் ஆட்டத்தில், எதிராட்டக்காரர் காத்து நின்று ஆடுகின்ற விக்கெட்டை, பந்தால் அடித்து வீழ்த்திபந்தடித்தாடும் ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்வதுதான் முக்கிய நோக்கம் என்பது எல்லோரும் அறிவார்கள்.

ஆனால், நடந்தது என்ன? அதைத் தொடர்ந்து நடுவர்அளித்த முடிவுதான் என்னஎன்று நீங்கள் அறிந்தால், மிகவும் ஆச்சரியப் படுவீர்கள். இப்படி ஒரு நீதியா என்று எரிச்சல் அடைவதுடன், நடுவரைக் 'கன்னா பின்னா' என்று பேசவும் தலைப்படுவீர்கள்.

அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கின்றீர்களா? நியூசவுத் வேல்ஸ் என்ற குழுவிற்கும் விக்டோரியா என்ற குழுவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

அந்தப்போட்டியில், ஒரு பந்தெறியாளர் (Bowler) எறிந்த பந்தானது, எதிராளி காத்து நின்ற விக்கெட்டில் மோதி, நடுக்கம்பான குறிக்கம்பைத் (Stump) தள்ளி விழச்செய்து விட்டது.

விக்கெட் விழுந்து விட்டால், அவர் ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவித்துவிட வேண்டியதுதானே! ஆனால், அந்த அந்த நடுவரே ஆட்டமிழக்கவில்லை (Not out) என்று அறிவித்து விட்டு, அந்தப் பந்து 'முறையிலா பந்தெறி' (No Ball) என்றும் கூறிவிட்டார்.

ஏன் அப்படி அறிவித்தார் என்று பார்த்தோமானால், விக்கெட்டில் இருந்த மூன்று குறிக்கம்புகளை இணைக்கும் இணைப்பான்கள் (Bails) கீழே விழவில்லை, இணைப்பான்கள் கீழே விழுந்தால்தான் விக்கெட் விழுந்தது என்று அறிவிக்கவேண்டும் என்ற ஒரு விதி இருக்கும் பொழுது, நடுவர் விதிக்கு மாறாக மீறி எவ்வாறு அறிவிப்பார்! ஆனால், இணைப்பான்கள் நடுக்கம்பு விழுந்த பிறகும் கீழேவிழாமல் இருந்ததே அது எப்படி?

அதுதான் அனைவருக்கும் மர்மமாக இருந்தது. என் இணைப்பான்கள் கீழே விழவில்லை? ஏதாவது மந்திரமா என்று எல்லோரும் எண்ணியபொழுது, மர்மம் வெளிப்பட்டது. அத்தனை மர்மத்திற்கும் காரணம் வெயில்தான் என்பது வெளியானதும், ஆச்சரியத்தில் எல்லோரும் அயர்ந்தே போனார்கள்.

மூன்று குறிக்கம்புகளையும் இணைக்கின்ற இரண்டு இணைப்பான்களும் வெயிலின் காரணமாக, ஒட்டிக் கொண்டன. அதாவது, இணைப்பான்களின் மேல் ஒட்டியிருந்த வார்னிஷ் வெயிலில் உருகி, இணைப்பான்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அதனால்தான் இணைப்பான்கள் கீழேவிழவில்லை. அடித்தாடிய பந்தடி ஆட்டக்காரர் (Batsmall) ஆட்டம் இழக்கவில்லை. அதிர்ஷ்டக்கார ஆட்டக்காரர்தான் அவர்!

வார்னிஷ் வாழ்க்கையில் மட்டும் விளையாட வில்லை, கிரிக்கெட் ஆட்டத்திலும் விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா? -

குறிப்பு: குறிக்கம்புகள் வீழ்ந்தாலும், விழாவிட்டாலும் இணைப்பான்கள் கீழே விழுந்தால், அந்த விக்கெட்டைக் காத்து ஆடக்கூடிய ஆட்டக்காரர் ஆட்டமிழப்பர் என்பதுதான் விதி.

ஒருசமயம் விக்கெட்டில் பந்து வந்து மோத எகிறிமேலே போன இணைப்பான் ஒன்று மீண்டும்வந்து அதே இடத்தில் அமர்ந்துகொள்ள, அந்த ஆட்டக்காரர் ஆட்டம் இழக்கவில்லை என்ற ஓர் நிகழ்ச்சியையும் இங்கே உங்களது நினைவுக்குக் கொண்டு வருகிறோம்.