விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/விளையாட்டு வழங்கிய வீரம்
விம்பிள்டன் எனும் இடத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியானது, உலகப் பிரசித்திப்பெற்றதோர் போட்டியாகும். அதிலே வெற்றி பெறுகின்றவர், மாபெரும் பரிசுத் தொகையினை பெறுவதுடன், வரலாற்றிலே உன்னதமான புகழையும் பொறித்துக் கொண்டு விடுவார்கள்.
அந்தப் போட்டியிலே பங்குபெற விரும்பினாள் ஒரு மங்கை, மங்கையல்ல. மணமானவள், ஒரு குழந்தைக்கும் தாயானவள், வயதோ 28. எத்தனை தடை அவளுக்குப் பார்த்தீர்களா!
முடிவெடுத்து விட்டாள் அந்தத் தாய். 1980ம் ஆண்டு நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டேதீரவேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். ஏற்கனவே ஒருமுறை விம்பிள்டன் போட்டியில் வெற்றி வீராங்கனையாக வந்தவள்தானே!
இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள் பயிற்சி செய்து திறமைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். பலப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணத் தொடங்கியபொழுது. துக்ககரமான செய்தி ஒன்று வந்து அவளை துளைத்தெடுக்கத் தொடங்கியது.
ஒருமுறை இம்மங்கையின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள். இவள் இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்று கூறிவிட்டார்கள். லிக்கேமியா (Leukemia) எனும் 'வியாதியா எனக்கு என்று அந்த மங்கை அயர்ந்தே போனாள். இரத்தத்தில் புற்றுநோய் வியாதி என்றால், அவள் வாழ்கின்ற வாழ்நாட்கள் எண்ணிக்கையில் தானே அமையும்! சொல்லொணாத் துயரம் அவள் வாழ்க்கையில் புகுந்தாலும், அந்தமங்கை தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் கைவிடவில்லை. தளர்ந்து போய்விடவுமில்லை. நோயுள்ளவள் விளையாட்டுப் பயிற்சியை எங்கே செய்யமுடியும்? வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். பயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்தாலும் தைரியம் இழக்காத நிலையில், இரவும் பகலும் தன் நினைவுகளிலேயே லயித்துப்போயிருந்தாள் அந்தமங்கை.
இன்னும் இரண்டு வாரங்கள்தான் விம்பிள்டன் போட்டி நடைபெற இருக்கின்றது என்ற நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சியான செய்தி அவளுக்கு வந்தது. ஆமாம்! இரத்த அணுக்களில் லிக்கேமியா நோய் போன்ற அறிகுறிகள் முதலில் தென்பட்டன. ஆனால், அறிகுறிதானே தவிர உண்மையல்ல என்று டாக்டர்கள் தீர்மானமாகத் தெரிவித்து விட்டார்கள்.
நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த நோய்ப் பயம் தொலைந்துவிட்டது. ஆனால் நேரம் இல்லையே பயிற்சி செய்ய! மரண அவஸ்தை என்பார்களே, அதிலிருந்து விடுபட்டு வந்த வீரமங்கை, மீண்டும் விம்பிள்டன் சென்று போட்டியிட்டாக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
தன் கணவனுடனும், குழந்தையுடனும் விம்பிள்டன் நோக்கிச் சென்றாள். விம்பிள்டன் போட்டியில் கலந்து கொண்டாள். வென்றாள். டென்னிஸ் ராணி எனும் அற்புதப் பட்டத்தையும் ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் பரிசாகப் பெற்றாள்.
நோய் என்றதும், நொந்து போய், நைந்து போய், மனநோயினாலேயே மயங்கிக் கலங்கும் மனித குலத்திற்கு இலக்கணமாக இல்லாமல், வீரம் மிகுந்த வீராங்கனையாக, வருவது வரட்டும் என்று எதிர்பார்த்து, எதிர்த்து, மனநிம்மதியுடன் வாழ்ந்து, மாபெரும் சாதனை செய்த வீராங்கனையார் தெரியுமா? இவான் சுலகாங்கெளலி என்பது தான் அவள் பெயர். ஏழு வாரங்கள் அனலில் கிடப்பது போல் வாழ்ந்தாலும், மன அமைதியையும்,உடல் ஆற்றலையும், விளையாடும் திறமைகளையும் இழக்காத வீராங்கனை யாக வாழ்ந்திட, இவான் சுலகாங்குக்கு எப்படி அந்த இதயம் வந்தது?
எல்லாம் விளையாட்டு வழங்கிய வீரமும் விவேகமும்தான். எதிர்பாராத சூழ்நிலைகளை, சிக்கல்களை விளைவித்து. விடுவித்துக் கொள்ள வழிகாட்டும் விளையாட்டில் பெற்ற பண்பட்ட மனம்தான், அவளை நிம்மதியாக வாழவைத்தது. வீராங்கனையாகத் திகழவிட்டது.
புற்றுநோயின் பயத்தையும் புறம்போக்கிய வீராங்கனை, நமக்கெல்லாம் அற்புதமான கலங்கரை விளக்கமாக அல்லவா நின்று வழிகாட்டுகிறாள்! நாமும் அந்த திடமான இதயத்தைப் பெறுவோம். தேர்ந்ததிறமைகளையும் வளர்ப்போம். சிறப்பாக வாழ முயல்வோம். அதுதானே மனிதப்பிறவியின் மகிமை!