வெற்றி முழக்கம்/2. கண்கள் பேசின

2. கண்கள் பேசின

தயணன் நளகிரியை அடக்கி அதன்மேல் ஏறிக் கொண்டு தன்னைப் பார்க்க விரும்பிய பிரச்சோதனனைக் காண வந்தான். பிரச்சோதனன் உதயணன் வரவிற்காகப் புலிமுக மாடத்தில் தேவியரோடு காத்திருந்தான். அப்போது அரசிளங்குமரியாகிய வாசவதத்தையும் அங்கு இருந்தாள். யானைமேல் வந்த உதயணனை மாடத்திலிருந்து இறங்கி வந்து பிரச்சோதனன் வரவேற்றான். உதயணனும் பகைமை பாராட்டாமல் வெளிப்படையாக அவன் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நன்றி செலுத்தினான். பிரச்சோதனன் மனத்தில் உதயனனைப் பற்றி முன்பு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் அன்பும் இரக்கமும் குடிகொண்டன. "நளகிரியின் திடீர் மதத்திற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?" என்று பிரச்சோதனன் வினவினான். உதயணன் அக் காரணத்தை யானை மருத்துவ நூல் முறைப்படி விரிவாக விளக்கிக் கூறினான். பிறகு பேச்சு வேறு விதமாகத் திரும்பியது. உதயணன் சமயம், கலை முதலியவைகளைப் பற்றிப் பிரச்சோதனனுக்கு ஒரு பெரிய விரிவுரையை நடத்த வேண்டி இருந்தது. உதயணனுடைய விரிவுரையைக் கேட்ட அவந்திவேந்தன் மனத்துள் அவன் பருவ இளமையையும் அறிவின் முதிர்ச்சியையும் நிறுத்துப் பார்த்து மகிழ்ந்தான். உதயணன் திறமையைக் கண்டு வியந்தவன், தன் புதல்வர்களுக்கு உதயணனை வணங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து அவன்பாலுள்ள கலைகளைக் கற்குமாறு ஆணையிட்டான். பிரச்சோதனனுடைய கண்கள் உதயணனைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது உதயணன் வேறு கண்கள் இரண்டின்பால் தன் கண்களைத் தூது போக்கிக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் யானையை அடக்கியது பற்றியும் மதத்தின் காரணம் பற்றியும் கேட்ட போது தற்செயலாக நிமிர்ந்த உதயணன், முன்பே தன் கண்களைப் புலிமுக மாடத்திலிருந்து இரண்டு கயல்விழிகள் ஆராய்வதைக் கண்டு கொண்டான். அப்போது இரண்டு பேருடைய கண்கள் சூழ்நிலையை மறந்து தமக்குள் ஏதோ பேசின. ஒன்றையொன்று ஊடுருவி நோக்கும் அந்த நான்கு கண்களிலும் காதல் களித்து விளையாடியது. தென்கடலில் இட்டகழி ஒன்று, வடகடலில் இட்ட நுகம் ஒன்றின் துளை ஒன்றில் பொருந்தினாற்போல, வெகுதொலைவில் உள்ள இரண்டு நாடுகளைச் சேர்ந்த இருவரை ஊழ் வினையாகிய விதி ஒன்று சேர்த்தது. ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டு திரியும் விதி ஏமாற்றமடைய விரும்பவில்லை. சிறைக் கைதியாக உதயணனை உச்சயினிக்கு அனுப்பிய விதி, யானையை அடக்கியதால் அரசனின் நண்பனாகச் செய்து வாசவதத்தையோடு சேர்க்கவும் திட்டமிட்டிருந்தது போலும்! வெஞ்சுடர்க் கதிரவனும், தண் கதிர் மதியும் ஒன்றுகூடிக் கடற்பரப்பின் மேற்சந்தித்தாற்போலப் புலிமுக மாடத்தில் ஆயத்தார்களுக் கிடையே நின்ற வாசவதத்தையும், கீழே யானையின் மேலே எழிலே உருவாக வீற்றிருந்த உதயணனும் கண்களே வாய்களாகக் கடந்த பிறவியிற் பிரிந்துபோய் மீண்டும் சந்தித்தாற்போலப் பேசினர். காதலுலகத்தில் பேச்சே பெரும்பாலும் கண்களில் தானே ஆரம்பமாகிறது? அதுதான் இங்கேயும் நடந்தது.

நூலும் பஞ்சும் போலப் பிரிக்க முடியாத உறுதி வாய்ந்தது என்று கூறும்படி அமைந்தது தத்தை உதயணன் காதல். நூழிற்கொடி ஒன்றோடொன்று முறுக்குண்டு இணைந்து கிடப்பதுபோல ஒன்றுபட்டது அவர்கள் அன்பு. தேனும் பாலும் விளைக்கும் தீஞ்சுவையினும் சிறந்த ஒன்று அந்தக் காதலின் சுவையே. குலமும் குணமும் கூடிய, அன்பும் இனமும் பிறவும் இசைந்து பொருந்தி இணைந்த ஒன்றாகும் அவ்விருவர் தொடர்பு. இத்தகைய தொடர்பு இயற்கையாக அமைவது அருமையினும் அருமை.

இறுதியில் சூழ்நிலையை உணர்ந்து சமாளித்துக் கொண்ட உதயணன், தத்தையின்பாலிருந்து கண்களை வாங்கிக்கொண்டு அரசன் கேட்ட கேள்விக்கு விடை கூறினான். மன்னனோ, ஆயத்தார்களோ இந்தக் காதல் நாடகத்தை உற்றுக் கவனிப்பதற்குள் தத்தை, உதயணன் இருவருமே தத்தம்நிலையை உணர்ந்து கொண்டனர். கண்கள் திரும்பினவே யொழிய ஒருவர் மனம் மற்றொருவரிடமிருந்து திரும்பவில்லை. திருப்பவும் முடியவில்லை. உதயணன் மனம் தத்தையிடம் உறவுகொண்டு திரும்ப மறுத்துவிட்டது. தத்தையின் மனமோ அவளுடைய தாபத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது உதயணனிடமே தங்கிவிட்டது. தத்தையும் உதயணனும் பிரிந்தனர். தனிமை அவர்களுக்குத் தந்த பரிசு வேதனை.

உதயணன் பால் அன்பும் இரக்கமும் பூண்ட பிரச்சோதனனின் உள்ளம், இப்போது அவனைக் கைதியாகவோ பகைவனாகவோ கருத மறுத்தது. அவன் உதயணனுக்காகப் புதிய அரண்மனை யொன்று அமைக்கச் செய்தான். அஃது அழகிலும் அமைப்பிலும் சிறந்து விளங்கியது. அரண்மனை யானைகளைக் கட்டும் குஞ்சரச் சேரிக்கு அருகில் கம்பீரமாகத் தோற்றமளித்த அந்த அரண்மனையில் ஓர் இளவரசனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை யெல்லாம் உதயணனுக்குக் குறைவற அமையும்படி செய்தது, அவந்தியர் கோமான் ஆணை. ஆத்திரம் அன்பாக மாறிவிட்டால் அதற்கு அழிக்க முடியாத வன்மை தோன்றிவிடுகிறது. தனக்கு மாற்றவனாகிய உதயணனை எந்திர யானையால் ஏமாற்றிப் பிடிப்பதுபோலப் பிடித்து வந்து இருட்சிறையில் அடைத்தான் பிரச்சோதனன். நளகிரி மதமுற்றபோது யாராலும் அடக்க முடியாத இறுதி நிலையில் உதயணனுக்கு மட்டும் அந்த யானையை அடக்கும் ஆற்றல் உள்ளது என்னும் செய்தியைச் சாலங்காயன் மூலமாக அறிந்த பிரச்சோதனன், உதயணன் முகத்தில் விழித்து அந்த உதவியைக் கேட்பதற்கே நாணினான். பிறகு சிவேதன் திறனால் உதயணன் அந்த உதவி செய்ய நேர்ந்தது. இப்போது உதயணனைத் தன் மூத்த அரசிளங்குமரன் போன்று எண்ணிப் போற்றும் மனநிலை, முன்பு மாற்றவனாக இருந்த பிரச்சோதனனுக்கு ஏற்பட்டுவிட்டது. மனம் நடிப்புத் திறன் வாய்ந்த ஒரு நடிகன். சூழ்நிலை அதற்கு ஏதேதோ பற்பல வேடங்களைக் கொடுக்கிறது. மாற்றத்திற்கு நொடிப்பொழுது வேண்டியதில்லை. ஏற்ற வேடம் தயாராகிவிடும். பிரச்சோதனன் மனமும் மனித மனந்தானே! அதனுடன் பண்பட்ட இயல்பும் தனி அமைப்பாக அதற்குண்டு. அந்த அமைப்புத்தான் தன் புதல்வர்களை உதயணனுக்குக் குற்றேவல் செய்யப் பணித்தும், அவன் தம்பியர்போல் இருக்குமாறு வேண்டியும், கலைகள் கற்க ஆணையிட்டும், பிரச்சோதனனை உதயணனுக்கு மதிப்பளிக்கும்படி செய்தது.


தன்னுடைய முதுமைக்கும் அதன் காரணமாகத்தான் பெற்றுள்ள அறிவு அநுபவங்கட்கும் ஒருபடி மேலாகவே, உதயணன் பெற்ற அறிவும் அனுபவமும் இருப்பது கண்டு பிரச்சோதனன் வியந்து அவனை விரும்பினான்.


இவ்வளவு எளிதில் பிரச்சோதனன் தன்னைப் பற்றிய கருத்தை மாற்றிக்கொண்டு, தனக்கு அரண்மனை இயற்றி, அரசகுமாரருக்கு ஆசிரியனாக்கியது உதயணனுக்குப் பெரிய சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. ‘இதுவும் ஒரு சூழ்ச்சியோ?’ என்று எண்ணினான் உதயணன். பாண்டவர்க்கு நூற்றுவர் அரக்கில் அமைத்ததுபோலத் தனக்கெனப் பிரச்சோதனன் சமைத்த மாளிகையில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ என்று ஆராய்ந்து முடிவில் ஒருவாறு ஐயம் நீங்கலாயினான்.


ஐயம் தீர்ந்த பிறகு தனக்கு அமைத்த அந்தப் புதுமாளிகையின் இயற்கை வளங்களைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் அங்கிருந்தான் உதயணன். இவ்வாறு தன் புது அரண்மனையின் காட்சியின்பத்தில் உதயணன் திளைத்துக் கொண்டு இருக்கும்போது, கதிரவன் தன்ஆட்சியை முடித்துக் கிளம்பினான். மாலைப் பொழுது வந்தது. மாற்றான் போற்றியதை நினைந்த மனத்தில் மெல்லத் தத்தையின் காதல் நினைவு தலைகாட்டியது. கண்களால் பேசிய காதல் பேச்சை இப்போது மனம் பேசத்தொடங்கியது. ஆனால் மனத்தின் இந்தப் பேச்சு நிறைவடையவில்லை. இதற்குப் பதில் சொல்ல இன்னொருத்தி வேண்டியிருந்தது.