வெற்றி முழக்கம்/3. விதி வென்றது
3. விதி வென்றது
மனத்தை மையல் செய்யும் மாலை நேரம். குஞ்சரச்சேரி மாளிகையின் அழகிய சோலையில் உதயணன் உலாவிக் கொண்டிருந்தான். அந்த அழகிய பெரிய சோலையில் சந்தன மரங்களை வேலியாக எடுத்த சண்பகத் தோட்டமொன்று உட்பகுதியாக அமைந்திருந்தது. சண்பக மரங்களுக்கிடையே வேங்கை மரமொன்று இயற்கையாக உண்டாகியிருந்தது. அந்த வேங்கை மரத்தின் கிளையில் ஓர் ஊஞ்சல். அதில் ஆடுவதற்கும் ஆட்டுவதற்கும் போட்டியிட்டனர் அங்கிருந்த சின்னஞ்சிறு பெண்கள். அப்பெண்கள் பாடிய ஊஞ்சல் பாட்டிற்குத் தகுந்தபடியாக அங்கிருந்த மயில் தோகை விரித்து அபிநயத்துடன் ஆடத்தொடங்கியது. இந்த ஆடல் பாடல்களைக் கேட்டுப் பக்கத்திலிருந்த வெயில் நுழைவறியாத புதரில் உள்ள தும்பியும் வண்டும் ஒன்றையொன்று மருட்டின. கொம்பிலிருந்த மணிநிற இருங்குயில் பேடை தன் அன்புச் சேவலை அகவி அகவி அழைத்தது. கமுக மரத்தில் தன் சேவலைக் காணாத அன்னப்பேடை பாளையைக் கண்டு சேவல் அதில் மறைந்து விட்டதோ என ஐயுற்றது. உதயணன் இவற்றையெல்லாம் கண்டான். கண்ட காட்சிகள் அவன் தனிமையை அவனுக்கு உணர்த்தின. தத்தையின் மேற்சென்ற நினைவோடு, ஒரு புறமாகச் சுற்றிக் கொண்டிருந்த உதயணன் தனிமை வேதனையால் சூழப்பட்டான். அப்போது கதிரவன் பழுக்கக் காய்ச்சிய பொன் வட்டத்தைப்போல் மேலை மலைமீதில் மறைந்து கொண்டிருந்தான். விலங்குகளும் பறவைகளும் தனித்திருக்கும் தத்தம் துணைகளை நோக்கிச் சென்றன. ஒரு பெரிய சக்கரவர்த்தி வாழும் வரையிலும் அவனுக்குட்பட்டிருந்து, அவன் மறையும்போது மெல்ல வெளிக்கிளம்பித் தம்முருக்காட்டி ஆட்சி செலுத்த முயலும் பல பகைக் குறுநில மன்னர்களைப்போல், சூரியன் மறைந்ததும் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுசிறு விண்மீன்கள் தலையை வெளியே நீட்டின. தாய்ப்பால் உண்ணும் பருவத்தில் தலைமை பூண்டு, அரசாள வந்த மிகவும் இளம் பருவத்து அரசன் போல வானிற் பிறைமதி தோன்றியது.
மாலை முற்றி இரவு தோன்றும்படியான அழகிய நேரம். மகளிர் சந்தனத்தின் ஈரம் புலர்த்தும் அகிற்புகை எங்கும் பரந்தது. தத்தம் குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக மகளிர் கூறும் பொய்க் கதைகளின் ஒலி ஒருபுறம். எங்கும், இடை இடையே ஒளிபரப்பும் பாண்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. உதயணன் நேரமாகிவிட்டதை உணர்ந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். இரவு உணவு முடிந்தபின் தனக்கென அமைக்கப்பட்ட மணிக்கால் அமளியில் துயிலச் சென்றான். தூக்கம் எங்கிருந்து வரும்? தூக்கம் வருவதற்குப் பதில் வாசவதத்தையின் கவின்முகம் மானசீகமான உரு வெளியில் தோன்றி அருகே வந்தது. அழகு என்பது இவ்வாறு இருக்க வேண்டும் எனத் தேவர்கள் ஒன்றுகூடித் தீட்டிய தெய்வ ஓவியம் போன்ற தத்தையின் உருவைத் தன் மனத்தில் அழியாமல் எழுதிவிட முயன்றான் உதயணன். ‘அன்று புலிமுக மாடத்தில் தன் வேல்விழியைக் கருவியாகக் கொண்டு என் உள்ளங்கவர்ந்த கள்ளியிடமிருந்து உள்ளத்தோடு அவள்பாற் சென்ற என் ஆண்மையை நான் பெற முடியுமோ?’ என்று மாணிக்கப்படுக்கைமேல் தூக்கமின்றித் தனிமைத் துன்பம் வாட்ட அதற்கு ஆளாகிய உதயணன் ஒன்றும் புரியாது அமர்ந்திருந்தான்.
உதயணன் மட்டுமா இத் துயருக்கு ஆளானான்? இல்லை! இல்லை! இப்போது வாசவதத்தையின் கன்னி மாடத்திற்கு வருவோம். இதோ அவளும் காதல் காரணமாக விளைந்த தனிமைத் துன்பத்துக்கு இலக்காகத் தவறவில்லை என்று அவள் தோற்றத்தைக் கண்டே அறிந்து கொள்ளலாம். உதயகிரியின் உச்சியில் தோன்றும் இளங்கதிரவன்போல நளகிரியின் மேலமர்ந்திருந்த உதயணனைக் கண்டதும் அவள் நெஞ்சு அவன்பால் அடைக்கலம் புகுந்துவிட்டது. நெஞ்சை உதயணனிடம் பறிகொடுத்துவிட்ட அவள் கன்னிமாடத்திற்குத் திரும்பியதும் ஆயத்தார்களை நீக்கித் திருமணி மாடத்தின் பகுதியில் ஓர் ஒதுக்குப்புறமாக அமர்ந்து உதயணனை நினைக்கத் தொடங்கினாள்.
உதயணனைப் பற்றியும் அவன் பேரழகைப் பற்றியும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்த வாசவதத்தைக்குத் தன் தந்தையாகிய பிரச்சோதனன் மேற்கூடக் கோபம் வந்துவிட்டது. வேற்று நாட்டிலிருந்து தன் கிளைஞரைப் பிரிந்து சிறைப்பட்டவன், தனியானவன் என்பதை எல்லாம் சற்றும் சிந்தியாது, ‘யாழோடு சென்று மத யானையை அடக்கு’ என்று அவருக்கு ஆணையிட்டாரே நம் தந்தை அவருக்குக் கண்களே இல்லையோ? ஒரு வேளை அவர் கண்கள் மரத்தாலாகிய உணர்ச்சியற்ற கண்களோ? என்று எண்ணினாள் தத்தை. அவள் மனத்தில் உதயணன் மேலெழுந்த காதல், பெற்ற தந்தையையும் பழிக்கும்படி செய்கிறது என்றால் அதன் விந்தையை எவ்வாறு விளக்க முடியும்!
தத்தை உதயணனையே எண்ணித் தாபமுற்று அமர்ந்திருக்கையில் பிரிந்திருந்த அவள் ஆயத்தார் வந்து சேர்ந்தனர். தத்தையின் மேனியில் வாட்டம், குழைவு முதலியன கண்டு பரபரப்படைந்து பலவகையாகப் பேணி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஆயம், செவிலி முதலியோருடன் ஈடுபட்டது. தத்தையின் தாபம் அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. குளிருக்குச் சந்தனம் பூசினாற் போலாயிற்று. இரவு ஒரு வழியாக முடிந்தது. காலைப் பொழுது நன்கு விடிந்தது.
நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி, விதி எப்போதுமே தோல்வியடைவது இல்லை. விதி என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட நியதியாக இருக்கும்போது அதை மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் தோல்வி அடையச் செய்துவிட முடியுமா என்ன? உதயணன் வாசவதத்தை காதல், விதியின் கூட்டுறவு என்பதுபோல அமைந்துவிட்டது. அப்படியானால் அதன் வெற்றிக்கும் விதிதானே பொறுப்பாளி? மறுநாள் காலை பிரச்சோதனனின் அரசவை கூடியது. பிரச்சோதனனுடைய அரசவை மிகப்பெரியது. அவனுடைய அவையின் கண்ணுள்ள மந்திரச் சுற்றத்தினர் விதியொன்றொழியப் பிறவற்றிற்குக் கட்டுப்படுதலை அறியார். கூற்றுவனையும் மாற்றும் ஆற்றல் படைத்தவர். முற்றுந்துறந்த முனிவர்கள் பலர் அதில் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செய்த வண்ணம் அவையிற்புகுந்தான் பிரச்சோதனன். அவையில் பலவகை அறிவு நூல்களின் நயங்கள் ஆராயப்பட்டன. அறிஞர் பலர் உரையாடினர். அவ்வகையாகக் கிடைத்த கேள்வி யின்பத்தில் சிறிது நேரம் ஈடுபட்டான் அரசன். அப்போது உதயணன் நினைவு அவனுக்கு வந்தது. உதயணனை அழைத்து வரச் சொல்ல வேண்டுமென அவன் எண்ணினான். இதற்குள் அன்றைய அவை ஒருவாறு முடிந்தது. உதயணனை அழைத்து வருமாறு ஓர் ஏவலாளனை அனுப்பினான். அவை முடிந்துவிட்டமையால் அரசன் உதயணனுக்காகத் தன் கோயிலுள்ளே காத்திருந்தான். உதயணன் நன்றாக அலங்கரிக்கப்பட்ட பெண் யானை ஒன்றின்மேல் அமர்ந்து வந்து சேர்ந்தான். மணல் முற்றத்தில் யானை மேலிருந்து இறங்கிய அவனைப் பிரச்சோதனன் எதிரே சென்று வரவேற்றான். தன்னோடு சமமான ஆசனத்தில் உதயணனை அமர்த்திக்கொண்டு பலவிதமான உபசாரங்களை அவனுக்குச் செய்தான். ‘இதை உன் சொந்த அரண்மனையைப்போல நினைத்துக் கொள்ளுதல் வேண்டும். நமக்குள் வேறுபாடு வேண்டாம்’ என்றான். அப்போது பணிப்பெண் ஒருத்தி பவழத்தட்டில் தாம்பூலம் கொணர்ந்து அளித்தனள். அதை இருவரும் தரித்துக் கொண்டனர். சற்று நேரம் மன மகிழ உரையாடியபின் உதயணனை அங்கே சிறிது பொழுது இருக்கும்படியாகக் கூறிவிட்டுப் பிரச்சோதன மன்னன் அரண்மனையின் உட்புறஞ் சென்றான். உட்புறத்திலிருந்த சிவேதன் மன்னனை வணங்கி வரவேற்றான். அரசன் சிவேதனைக் கொண்டே உதயணனிடம் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க விரும்பினான். "சிவேதா! உதயணன் யாழ் வாசிப்பில் வல்லவன் என்பதை நீயும் கேள்விப் பட்டிருப்பாய்! அன்று உன்னாலேதான் நளகிரியின் மதத்தை உதயணன் அடக்கினான். இன்று உன்னால்தான் என் வேண்டுகோளை உதயணன் ஒப்புக்கொள்ள வேண்டும். தத்தைக்கு வீணை கற்பிக்க ஏற்ற ஆசிரியன் அகப்படாமல் யானும் அவள் தாயும் பல நாள்கள் வருந்தியதுண்டு. அந்த வருத்தம் இனி உதயணனால் தீர்ந்துபோகும் என்று நம்புகிறேன். என் நம்பிக்கையின் வெற்றியும் தோல்வியும், நீ உதயணனிடம் பேசி அவனைச் சம்மதிக்கச் செய்வதைப் பொறுத்தது! உதயணன் ஒரு பேரரசன் மகனாயினும், என் பொருட்டு இதை நிறைவேற்றுவதில் இழுக்கு நோக்கமாட்டான் என்று எண்ணுகிறேன். நீதான் இதை அவனிடமுரைத்து உடன்பாடு பெற்று வரவேண்டும்” என்று தன் மந்திரிகளுள் ஒருவனாகிய சிவேதனைப் பிரச்சோதனன் வேண்டிக் கொண்டான். இவ்வாறு கருதி வேண்டிய பிரச்சோதனன் உள்ளூற வேறோர் எண்ணத்துடன் இதைச் செய்தான். உதயணனை மீண்டும் கௌசாம்பி நகரமோ, வைசாலி நகரமோ செல்லவிடாமல் உச்சயினியிலேயே இருக்கச் செய்துவிட வேண்டும் என்பது தான் அந்த எண்ணம். இத்தகைய அருங்கலைச் செல்வனொருவனை வெளியே விட்டுவிட அவனுக்கு விருப்பமில்லை. தத்தைக்கு வீணை கற்பிக்குமுகமாக உதயணனை உச்சயினியிலேயே மடக்கிவிடலாம் என்று தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானமே இந்த வேண்டுகோள் வடிவாக வெளிப்பட்டது.
அரண்மனையில் பிரச்சோதனன் போனபின்பும் காத்திருந்த உதயணன், சிவேதன் உட்புறமிருந்து வருவதைக் கண்டு வரவேற்றான். இருவரும் தத்தம் நலங்களைப் பற்றியறிந்து அளவளாவி முடிந்தபின் உதயணனிடம் சிவேதன் தன்னுடைய அரசனின் விருப்பத்தை மெல்லத் தெரிவிக்க ஆரம்பித்தான். சிவேதன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உதயணனை வேதனை செய்தது. பிரச்சோதன மன்னனின் வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாமல் அவன் தவித்தான். தானும் ஓரரசன் என்றறிந்தும் பணியாளனாக அமர்த்திக் கொள்வதுபோல மகளுக்கு வீணை கற்பிக்க வேண்டுகிறானே என்ற கவலை ஒருபுறம் உதயணனை வாட்டியது. உதயணன் அந்த வேண்டுகோளை ஆராய்வதன் மூலமாகப் பிரச்சோதனனுடைய உள்ளத்தையே ஒருமுறை ஊடுருவிப் பார்த்தான். ஒரு நிலையான காரணம் அவனுக்குத் தென்படவில்லை. ‘என்னுடைய குடி ஒழுக்கம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளவா? அல்லது என் கலைவன்மையைப் புகழ் பெறாதபடி ஒடுக்க வேண்டிச் செய்த செயலா? இல்லை என்மேல் இரக்கமுற்றுச் செய்த காரியந்தானா? மனத்தில் எண்ணியது சரியா, தவறா என்று ஆராயாமல் எண்ணியதை எண்ணியபடியே செய்வதுதான் பேரரசர்களுடைய இயல்போ? எதற்காக இவன் எனக்கு இந்த ஆணையிடுகிறான்? இவன் மகளுக்கு நான் ஆசிரியனாக இருந்து யாழ் கற்பிக்க வேண்டுமாமே? யார் அந்தப் புண்ணியவதி? ஒருவேளை அன்று நாம் புவிமுக மாடத்தில் கண்ட காரிகை தானோ? இல்லை இவனுடைய பல பெண்களில் வேறொரு பெண்ணாகவும் இருக்கலாம். இந்தச் சிவேதனிடம் இதை வாய்விட்டுக் கேட்பது நாகரிகமல்ல. எப்படியாயினும் இங்கு யாழ் கற்பிப்பது மூலமாக அவளை நான் சந்திக்க ஒரு வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொள்ளலாம். என்னிடம் யாழ் கற்கப்போவது யாராயினும் என் உள்ளங்கவர்ந்த அந்தப்பெண் அங்கே எப்போதாவது தட்டுப்படாமலா போய் விடுவாள்? அவளை மீண்டும் சந்திக்காமல் என்னால் உயிர் வாழ முடியாது. அவளைச் சந்திக்க வேண்டுமானால் இதற்கு ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். உயிர் கெடவிருக்கும் நிலையில் ஒழுக்கம் பார்த்துக் கொண்டிருப்பது தகாது. நான் எப்படியும் இதற்கு உடன்பட்டே ஆகவேண்டும். இவ்வாறு உதயணன் மனத்தில் எண்ணங்கள் விரைந்து எழுந்தன. உதயணன் சிவேதனிடம் யாழ்கற்பிக்க உடன்பட்டான். சிவேதன் நன்றியோடு விடைபெற்றுச் சென்று உதயணன் யாழ் கற்பிக்க இணங்கிய செய்தியை அரசனுக்கு உரைத்தான்.
அரசன் வாசவதத்தையை மனத்திற் கருதியே உதயணனை யாழ் கற்பிக்க அழைத்தான். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எனவே தன்னுடைய பல தேவியர்கள் பெற்ற, பேதைப் பருவத்து மகளிர் எல்லோரையும் தன்பால் வரவழைத்து அவருள் யாவர் உதயணனிடம் யாழ் கற்கத் தகுந்தவர் என ஆராய்வதுபோல் ஆராய்ந்து, வாசவதத்தையே தக்கவள் எனத் தேர்ந்தெடுத்தான். விதி முழுதும் வென்றது. உதயணனுக்குச் சாதகமாகவே வென்றது. உதயணன் எவளைச் சந்திக்கலாம் என்பதற்காக யாழ் கற்பிக்க இணங்கினானோ, அவளே யாழ் கற்பவளாக வாய்த்திருப்பது அவனுக்குத் தெரியவில்லை.