வெற்றி முழக்கம்/20. படை வந்தது!
அரண்மனைப் பஞ்சணைகளில் பூவனைய மஞ்சங்களிலே துயின்ற வாசவதத்தை, அன்று அங்கே அந்தப் பாலை மணலிலே தளர்ந்து சோர்ந்த வண்ணம் காஞ்சனையின் மடியில் படுத்திருந்தது உதயணனை என்னவோ செய்தது. வேடர்களிடமிருந்து உதயணன் கைக்கட்டை அவிழ்த்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதுகண்ட தத்தை எழுந்தாள். காஞ்சனை விலகி நின்று கொண்டாள். தீப் புகையினாலும் நடந்த இளைப்பினாலும் வாடியிருந்த தத்தையின் முகத்தில் நாணங் கலந்த மலர்ச்சி பிறந்தது. அவளைத் தன் நீண்ட கைகளால் மெல்ல தழுவிக்கொண்டே ஆறுதல் கூறினான் உதயணன். குவளை மலர்களிலிருந்து முத்துதிர்வது போலத் தத்தையின் கண்களிலிருந்து சொரிந்த நீர் முத்துக்கள், உதயணனைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவாகத் தான் இருக்கவேண்டும். எப்போதும் மிகுந்த துன்பத்திற்கு இடையில் தோன்றும் மின்னல் நேர மகிழ்ச்சியில்தான் இன்பம் மிகுதி. கைக்கெட்டுகின்ற மல்லிகைப்பூவைக் காட்டிலும் நச்சுப் பாம்புகள் சூழ்ந்து வசிக்கும் இடத்திலுள்ள மனோரஞ்சித மலருக்கு மணம் அதிகமல்லவா? இங்கே இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் புட்பக நகரம் சென்ற வயந்தகன் நிலையை அறிய அவனைப் பின்பற்றுவோம்.
‘ஆருயிர் நண்பனும் அரசகுமாரனுமாகிய உதயணனைத் துன்பத்திற்குரிய சூழ்நிலையில் தனித்திருக்கச் செய்துவிட்டு வந்திருக்கிறோமே' என்ற கவலை ஒருபுறம். எதிரே மைக்குழம்பெனக் குவிந்துகிடந்த இருளில் புட்பக நகரத்தின் பாதை தெரியாது போயின துயரம் ஒருபுறம். விரைவில் இடவகனைச் சந்தித்துப் படையுடன் திரும்ப வேண்டுமென்ற பரபரப்பு ஒருபுறம். இவ்வளவும் சேர இருளைக் கிழித்து ஒடும் மின்னல்போல் முன்னேறிச் சென்றான் வயந்தகன். எதிரே புட்பக நகரத்தின் மாடமாளிகைகளில் ஒளி செய்த விளக்குகளும் பிறவும் தன்னுடைய கண்ணுக்குத் தெரிகின்ற அளவு நகரை நெருங்கிய பிறகுதான் வயந்தகனுக்கு உயிர் வந்தது. அப்போதுதான் பூத்த மல்லிகைபோலக் கீழ் வானிலும் கருமை நீங்கி வெளித்து உதயமாகக் கொண்டிருந்தது. வயந்தகன் புட்பக நகருள் நுழைந்து அரண்மனையின் கொடிமதிற் புறத்தை அடைந்தான். காவலர் அனுமதி பெற்று இடவகனைக் காண உள்ளே சென்ற வயந்தகன். ஒற்றன் ஒருவனிடம் ஏதோ தனித்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கே இடவகனைக் கண்டான். வயந்தகனைக் கண்ட இடவகன், ஒற்றனை அப்படியே விட்டு விட்டு ஆவலோடு முன்வந்து வரவேற்றான். தன்னை வரவேற்ற இடவகன் முகத்தில் தோன்றிய கலக்கமும் துயரமும், எது காரணமாக விளைந்தவை என்று வயந்தகனுக்குப் புலப்பட வில்லை. உதயணனுடைய நலத்தை விசாரித்த இடவகன் முகத்தில் பரபரப்புத் தோன்றியதும், உதயணன் நலமென்பதை அறிந்தவுடன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்ததும் வயந்தகனுக்குப் புதிராகவே இருந்தன. அந்தப் புதிரை இடவகன் அவிழ்த்தபோது வயந்தகனும் அவனோடு சேர்ந்து சிரிக்க நேர்ந்தது. ‘உதயணனுடைய ஊக்கம், உயர்ச்சி, ஒழுக்கம், கலைநலம் இவைகளை எல்லாம் கண்டு பொறாமை கொண்ட பிரச்சோதன மன்னன், உள்ளே ஈட்டி, வேல் முதலிய ஆயுதங்களைக் குத்திட்டு நிறுத்திய பொய்ந்நிலம் ஒன்றை அமைத்து, வஞ்சகமாக அதிலே வீழ்த்தி உதயணனைக் கொன்றுவிட்டான்’ என்று காட்டு வேடர் மூலமாகத் தான் கேள்வியுற்றதாகவும் அச் செய்தியே தன் துயரத்துக்கும் பரபரப்பிற்கும் காரணமென்றும் இடவகன் சொன்னபோது, வயந்தகன் வாய்விட்டுச் சிரித்தான். பொய் சொல்லுகிறவர்கள் எவ்வளவு அழகாக அதற்குக் கை கால்களை ஒட்ட வைத்து உண்மையைப்போல உருவாக்கி விடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வயந்தகனுக்கு வியப்பாயிருந்தது. தனது காரியத்தின் துரிதத்தை நினைவிற் கொண்டு வந்தவனாய், உதயணனுடைய அப்போதைய நிலையை அவந்தியிலிருந்து புறப்பட்டது தொடங்கி இலவம் புதரில் தங்கியிருப்பதுவரை விரிவாகக் கூறி, உடனே படையுதவி தேவைப்படுவதையும் விளக்கினான் வயந்தகன். அதோடு தன்னை நம்புவதற்காக உதயணன் கூறிய அடையாள மொழியையும் வயந்தகன், இடவகனிடம் அறிவித்தான். இடவகன் உடனே தன் படைகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான். படைகள் எழுந்தன. இடவகனும் வயந்தகனும் முன்சென்றனர். படை பின் தொடர்ந்தது, இடவகன் ஆணைப்படி படைகளுக்குப்பின் வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் உரியவாகப் பலவகை அலங்காரப் பொருள்கள் சுமந்து கொண்டு வரப்பெற்றன. அணிகலன்களும் பரிவாரமும் பணிப் பெண்களுமாக அக் கூட்டம் படைக்குப்பின் அமைதியாகச் சென்றது.
படை காட்டுள்ளே வந்துவிட்டது. முன் சென்ற வயந்தகனும் இடவகனும் இலவம்புதரை அடைந்தனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. புதர் எரியும் புதையுமாகத் தீப்பட்டுக் கொண்டிருந்தது புதருக்கு எதிரே உதயணின் அம்புக்கு இலக்காகிய வேடர்கள் சிந்திய குருதியும் நினமும் பரந்திருந்தன. மேலே அந்த நிணவிருந்தை எதிர்நோக்கிக் கழுகுகளும் காக்கைகளும் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த இலவம் புதரும் எதிரே தெரிந்த குருதிப் பரப்பும் கண்ட அவர்கள் உதயணனுக்கும் காட்டிலுள்ள வேடர்களுக்கும் ஏதோ போர் நடந்திருக்க வேண்டுமென்று உய்த்துணர்ந்தனர். ஆனால் உதயணனும் தத்தை, காஞ்சனை ஆகியோர்களும் தங்கியிருந்த இலவம் புதர் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்ததுதான் வயந்தகன் ஐயப்படக் காரணமாகியது. ‘ஒருவேளை உதயணன் தத்தை முதலியவர்கள் நெருப்பில் அழிந்து போயிருக்கக் கூடுமோ?’ என்பதற்குமேல் வயந்தகனால் நினைக்கவே முடியவில்லை. அவன் வாய்விட்டு அழுதே விட்டான். மேலே என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் அங்கேயே அயர்ந்துபோய் அமர்ந்து விட்டனர். உதயணன் முதலியவர்களுக்கு ஏதேனும் துயர்நேர்ந்திருந்தால் தாங்களும் நட்பை நிலைநாட்ட உயிர் விடுவதாகவே முடிவு செய்தனர். இடவகனும் வயந்தகனும். இதற்குள் பின் தொடர்ந்த படையும் அங்கே வந்து சேர்ந்தது. பெருந்துயருடன் அமர்ந்திருந்த தங்கள் அரசனையும் வயந்தகனையும் கண்ணுற்ற படைத் தலைவர்கள் வருந்தத் தக்க ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அனுமானித்துக் கொண்டனர். வயந்தகன் வாயிலாக நடந்தவற்றை அறிந்தபின் அவர்கள் “தாங்கள் கருதுவதுபோல உதயணன் முதலியோருக்குத் துயரம் எதுவும் நேர்ந்திரக்காது. இதோ புற்பரப்பின் இடையே தெரியும் அடிச்சுவடுகள் வேடர்களுடையன. இச் சுவடிகளைப் பின்பற்றிச் சென்றால் உதயணன் முதலியோரைச் சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்று உறுதிகூறி, இடவகனுக்குத் தைரிய மூட்டினர். படைத் தலைவர் கூற்றில் சற்றே நம்பிக்கை வரப்பெற்றவராய் வயந்தகனும் இடவகனும் எழுந்து அந்த அடிச்சுவடுகளின் வழியே பின்பற்றி நடந்தனர். ஏனையோரும் பின் தொடர்ந்தனர். சற்றுத் தொலைவு சென்றதும் படைத்தலைவன் மலைச் சரிவின் கீழே சிறுசிறு உருவிலே எறும்புக்கூட்டம் போலத் தோன்றிய வேடர் கூட்டம் புல்வெளியில் நடுவே தெரிந்தது. அந்தக் கூட்டத்தைப் படையுடன் நெருங்கிய அவர்கள், வேடர்களுக்கு இடையே உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடன் நிற்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். -
இடவகனுடைய படைகள் வேடரை வளைத்துக் கொண்டன. சுற்றிக் கருங்குவளை மலர் பூத்த பொய்கையுள் நடு மையத்தில் ஒரே ஒரு தாமரை பூத்தாற் போல நின்றான் உதயணன். சுற்றி வளைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த வேடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் கருங்காலி மரத்தின் மேலிருந்த பறவையொன்று ஒருமுறை கத்தியது. அதைக் கேட்ட நிமித்திகன், “இனி நமக்குத் துன்பம் நேரும். நாம் இவ்விடத்தை விட்டு ஓடிவிடுதல் நல்லது” என்று வேடர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் யாவரும் அவனை வெறுப்புடன் எரித்துவிடுவது போலப் பார்த்தனர். நாற்புறமும் சிதறி ஓடுவதற்குத் தொடங்கிய வேடர்கள். இறுதி முறையாக உதயணனை நெருங்கித் துன்புறுத்தலாயினர். அதைக் கண்ட இடவகன் படையினர், விரைவில் வந்து வேடர்களை வில்லும் வாளும் வேலும் கொண்டு எதிர்த்தனர். இது உதயணனக்கு ஏற்படுத்திய நிலை, இருதலைக் கொள்ளி போல இருந்தது. இப் புறம் வேடர்கள் துயரம் பொறுக்க முடியவில்லை. வந்திருக்கும் படையினர் தனக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்துவிட்டால், போகின்ற போக்கில் சினந்தீர ஏதாவது செய்துவிட வேடர்கள் தயங்க மாட்டார்கள். இதற்காக வந்திருப்பவர் எவரென்பதையே அறிந்து கொள்ளாதவன்போல உதயணன் நடிக்க நேர்ந்தது. “வந்திருக்கின்ற படையினர் உங்களைச் சேர்ந்தவர்களா? பிறரா? இவர்களால் நமக்கு ஏதேனும் துன்பம் நேருமாயின் எங்களை இங்கே எங்காவது மறைந்திருக்கச் செய்யுங்கள்” என்று வேடர்களை நோக்கிக் கூறி ஏமாற்றினான் உதயணன்.
அதற்கு வேடர்கள் “இது உதயணனின் மந்திரிகளாகிய இடவகன் படை. உயிர்தப்ப விரும்பினாயாயின் எங்களோடு ஓடிவருக” என்று மறுமொழி கூறிவிட்டுத் தாங்கள் தப்ப வழிதேடி, விரும்பிய திசைகளில் ஒடலாயினர். சிலர் புற்புதர்களில் ஒளிந்து ஓடினர். பதுக்கைக் கற்களின் இடையிலே பதுங்கியவாறு விரைந்தனர் வேறு சிலர். எஞ்சியவர்களில் இடவகன் படைவீரருடைய வாளுக்கு இரையாயினர் சிலர். படைவீரர் வியக்க, வேட்டுவப் போர்த்திறங் காட்டிப் போரிட்டனர் சிலர். வயந்தகனும் இடவகனும் கூடப் போரில் ஈடுபட்டிருந்தனர் போலும். வேட்டுவர்களில் பெரும்பாலோர் ஓடி விட்டார்களேனும், எஞ்சியவராய் நின்று போரிட்ட சிலருக்கே இடவகன் படை வீரர்கள் முற்றிலும் முயன்று விடைகூற வேண்டியிருந்தது. இந் நிலையில் உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடனே சிறிது விலகி ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் மறைந்திருக்க விரும்பினான். அதற்கு வேறோர் காரணமும் இருந்தது. தானும் தத்தை, காஞ்சனை இவர்களும் இருந்த இடம் இரண்டு தரத்துப் படையினருக்கும் இடையில் அமைந்திருந்தது. ‘அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அம்புகள் வேல்கள் முதலியன இடையிலிருக்கும் தங்களுக்கு ஏதேனும் ஊறு செய்தலும் கூடும்’ என்று கருதிப் பக்கத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரிடத்தில் தத்தை, காஞ்சனை இவர்களுடன் மறைவாகச் சென்று உதயணன் இருந்து கொண்டான்.
போர் ஒரு வழியாக முடிந்தது. சீறி எழுந்த பாம்பின் முன் எலிக்கணம்போல மறைந்த சுவடு தெரியாதபடி ஆகி விட்டது வேடர் படை. உதயணன் வெளியே வந்தான். வயந்தகன், இடவகன் முதலியோரும் படைத் தலைவர்களும் அளப்பரிய மனமகிழ்ச்சியுடன் திங்களைச் சூழ்ந்த விண் மீனினம்போல உதயணனைச் சூழ்ந்துகொண்டு வெற்றிக் களிப்பு விளங்க ஆரவாரம் செய்தனர். பிரிந்த நண்பர்கள் கூடினர். பேசரிய மனநிறைவை அடைந்தனர். இடவகன், உதயணனைத் தழுவிக்கொண்டு கண்ணிர்விட்ட காட்சி, கூடியிருந்தவர்களை உருக்கியது. அல்லல் அகன்ற மகிழ்ச்சியில் தத்தையும் காஞ்சனையும் வெளிவந்து ஒருபுறமாக நின்று கொண்டனர். அடுக்கடுக்காக எழுந்து வந்த துன்பங்களை அரிய துணையாக நின்று போக்கிய வயந்தகன் இப்போது இடவகன் துணையுடன் தக்க தருணத்தில் வந்து உதவியிரா விட்டால் தன்கதி என்ன ஆகும்?’ என்று சென்ற உதயணன் மன எண்ணங்கள் சட்டென்று தடைப்பட்டன. எதிரே வயந்தகன் வந்து நின்றான். அப்போது அவனை உதயணன் பார்த்த கனிந்த பார்வையில் நன்றியறிவு பூரணமாகக் கனிந்து தெரிந்தது.
அப்போதைக்குப் பக்கத்திலிருந்த சிறு சோலை ஒன்றில் யாவரும் தங்கினர். வெகு நாள்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றார்களாகையால் இடவகனும் உதயணனும் இடை விடாது பேசிக்கொண்டிருந்தனர். வயந்தகன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். துன்பப் பெருங்கடலைக் கடக்க இன்பப் புணையாக வந்துதவினர்கள் என்று அவர்களிடம் மீண்டும் நா தழுதழுக்க நன்றி கூறினான் உதயணன்.