வெற்றி முழக்கம்/21. மலைச்சாரலிலே
சோலையில் தங்கி உதயணன் முதலியவர்கள் அளவளாவிக் கொண்டிருந்தபோது இடவகனின் படைவீரர்கள் பக்கத்திலே இருந்த சயந்தி நகரத்தைச் சார்ந்த மலைச்சாரலில், உதயணன் தத்தை முதலியோர் தங்குவதற்கேற்ற பட மாடங்களையும் ஏனையோர்க்குரிய படைவீடுகளையும் அமைத்துக் கொண்டிருந்தனர். மறுகும் முற்றமும் முன்றிலுமாக வகுத்து அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாடி வீடுகளின் தோற்றங்கள் மலைச்சாரலில் தனி அழகுடனே தோன்றின. தூயவெண் பட்டுக்களால் இயற்றப்பட்ட பட மாடங்கள் தொலைவிலிருந்து காண்பதற்கு விசும்பிலே கட்டிய கண்ணாடி நகர் போலத் தெரிந்தன. வாசவதத்தைக்கு இயற்றிய பாடி வீட்டில் பள்ளிமாடம், அன்றிலும் விளையாடு முன்றில் முதலியவற்றை அழகுறச் சமைத்திருந்தனர். சந்தனப் பலகை, மணிக்கலப் பேழை இருக்கைக் கட்டில், ஆலவட்டம் முதலிய அலங்காரப் பொருள் அதில் நிரம்பியிருந்தன. உதயணனுக்குரிய படமாடக் கோவிலிலும் ஒரு சிறந்த அரசனுக்கு வேண்டிய அணிகலன்களும் பொருள்களும் மிகுந்திருக்குமாறு இயற்றப்பட்டிருந்தது. பலவகைக் குற்றிளையோர் ஆடவரும் மகளிருமாகப் பணி செய்யக் காத்திருந்தனர். ஒருவருமே அற்ற சூனியப்பிரதேசமாகிய அந்தக் காட்டில், மலைச்சாரலில் இயற்றப்பட்ட நகரில் இவ்வளவு பேர் தோன்றியது புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போலிருந்தது. நல்ல நேரம் பார்த்து உதயணன் முதலிய யாவரும் சோலை நீங்கி மலைச்சாரலில் அமைக்கப் பெற்ற நகரில் குடிபுகுந்தனர். பெண்யானையின்மீது வேகமாக வந்த உடல் நோவுதீர மருத்துவ முறைப்படி உணவு சமைக்கப் பட்டது. நாழிகைக் கணக்கர் உண்ண வேண்டிய பொழுதறிந்து கூறினர். இரவும் பகலுமாக விடாது பயணம் செய்த அலுப்பு உதயணனைச் சோர்வு கொள்ளச் செய்திருந்தது. வேடர்களோடு போர் செய்த களைப்பு வேறு அவனை வருத்தியது. உடல் அலுப்பு நீங்க எண்ணெய் பூசி நீராடிவிட்டுப் பின்பு உண்ணலாம் என்று கருதினான் உதயணன். உடல் ஒளிகுறைந்து வாட்டங் கண்டிருந்தது. வல்லவன் வகுத்த வாசனை பொருந்திய எண்ணெயைப் பூசிக்கொண்டு குளிர்ந்த நீரில் மனம் விரும்பி வெகு நேரம் உடல் குளிர ஆடினான் உதயணன். நீராடி முடிந்தபின் நண்பர்கள் ஒன்றாக உண்ண அமர்ந்தனர். வெகு நாள்களுக்குப் பிறகு நேர்ந்த இந்த அரிய அமைதியான வாய்ப்பு மூவர் மனத்திலும் மகிழ்ச்சியை நிறையச் செய்திருந்தது. மகிழ்ச்சி நிறைவோடு உதயணன், வயந்தகன், இடவகன் மூவரும் உண்டனர். சிரிப்பும் விளையாட்டுமாக உண்டு முடிக்க நேரமாய்விட்டாலும் உவகை மிகுதியில் பொழுது போனதே தெரியவில்லை நண்பர்களுக்கு. பிடியில் வழிப்பயணம் செய்த இளைப்பு. உறக்கமின்றிப் பல இரவுகளைக் கழித்தமை, வேடர்கள் தொல்லை, தீயினால் ஏற்பட்ட வேதனை, இவ்வளவும் தீர நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான் உதயணன்.
வாசவதத்தையை ஆயமகளிர் நன்கு நீராட்டினர். அழகிய கற்சுனையின் நடுவே பொற்பாவைபோல நின்று, காண்போர் மகிழ நறுநீராடினாள் தத்தை. நீராடியபின் பசிதீர அமுதம் போன்ற உணவை உண்ணச் செய்தனர். இரண்டு நாட்களாக உண்ணாமலிருந்து பசி மிகுந்திருந்த தத்தை நன்கு உண்டாள். சுவைமிக்கதாகச் சமைக்கப் பட்டிருந்தது அந்த நல்லுணவு. உணவு முடிந்தபின் தோழிப் பெண்கள் துயர்தீரப் பல பணிவிடைகள் செய்தனர். யாவரும் ஒய்வு கொண்டனர். அப்போது மலைச்சாரலில் நகரின் அமைதியான தோற்றம் அழகின் எல்லையாக விளங்கியது. படையோடு வந்திருந்த குதிரைகள், யானைகள் இவை யாவும் பெரிய பெரிய மரங்களிலே கட்டப்பட்டிருந்தன. நகரின் அமைதியைக் கலைத்துக் கொண்டு யானைகளின் முழக்கம் மலைச்சாரலில் கேட்டுக் கொண்டிருந்தது. போகபூமியைக் காட்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் செயற்கை நகரின் நூல்வெண் மாடங்கள் பாற்கடலின் அலைகளைப் போலக் காட்சியளித்தன. மொய்த்துக் கிடந்த படை வீரர்கள், கூட்டங் கூட்டமாக ஒய்வுபெற்றுக் கொண்டிருந்தனர்.
உதயணன் முதலியோர் இளைப்பாறி எழுந்ததும் பக்கத்திலுள்ள சயந்தி நகரத்திற்குச் செல்லுவதற்குத் திட்டமிட்டனர். மேருமலை மேல் எழுந்த செங்கதிர்ச் செல்வன் போல அழகிற் சிறந்த யானை ஒன்றின்மீது ஏறி அமர்ந்தான் உதயணன். வயந்தகனும் இடிவகனும் பக்கத்தே வேறு யானைகளின்மீது ஏறி வரலாயினர். இருபுறமும் யானைகள் சூழ நடுவில் உதயணன் இருந்த தோற்றம், சுற்றிலும் கரு முகில் இருப்ப நடுவே சுடர் இருந்ததென விளங்கிற்று. அவன் தலைக்குமேலே நிழல் செய்து கொண்டிருந்த, வெண்கொற்றக்குடை, தண்மதி போலத் தெரிந்தது.
நிரை நிரையாக வில்லும் வாளும் வேலும் கேடயமும் ஏந்திப் படைகள் பின்சென்றன. யானை புரவி தேர் முதலியன வரிசையாகப் பின்பற்றிப் போயின. பொதியிற் சந்தனமும் விந்தியத்து யானைக் கொம்புகளும் மேருமலைப் பொன்னும் குடகடலிற் பிறந்த படர்கொடிப் பவழமும் தென்கடற் பிறந்த மின்னொளி முத்தும் ஈழத்துச் செப்பும் இமயத்து வயிரமும் ஆகிய அலங்காரப் பொருள் பல ஏந்திய ஏவலிளையர் அவர்களுக்குப் பின்னே சென்றனர். யவனத்துத் தச்சரும் அவந்தி நாட்டுக் கொல்லரும் மகதநாட்டு மணிவினைஞரும் பாடலி நாட்டுப் பொற்றொழிலாளரும் கோசலத்து ஒவியரும் வத்தவநாட்டு வண்ணக்கம்மரும் ஆகிய தொழிற் செல்வர்களின் கலைக் கூட்டம் அப்பால் போயிற்று. காட்டில் உதயணனுக்கு உதவவே இடவகன் வந்தான் எனினும், தனக்குப் பேரரசனாகிய உதயணனை அவன் அமைச்சருள் ஒருவனாகிய தான் காணச் செல்லும்போது தக்க மரியாதைகளுடன் செல்ல வேண்டும். அன்றியும் உதயணனை மணஞ் செய்துகொள்ள அவன் ஆருயிர்க் காதலி தத்தையும் உடன் வந்திருப்பதால் ஏற்ற அலங்காரப் பொருள்களுடனும் எதிர் கொள்ள வேண்டும் என்று கருதியே இவ்வாறு பல் பொருளும் பல வினைஞரும் கொண்டு வந்திருந்தான் இடவகன். வாசவதத்தை கொல்லப்பண்டி (ஒருவகை சித்திரச் சிவிகை) ஒன்றில் காஞ்சனை துணை நின்று ஏற்ற ஏறிக்கொண்டாள். கூடியிருந்த மக்கள் கூட்டத்தை விலக்கக் கைக்கோற் சிலதர் குரலிட்ட ஒலிகளுக்கிடையே புறப் பாட்டுக்கு அறிகுறியான முரச ஒலியும் கலந்தொலித்தது.
மலைச்சாரலிலுள்ள சிற்றுர்களில் வாழும் குறுநில மக்களாகிய குறும்பர்களும் அவர்களின் தலைவர்களும் முன்னரே இடவகன் மூலம் உதயணனுடைய வரவு குறித்து ஒலைச் செய்தி பெற்றிருந்தனர். அங்கங்கே கூடி நின்று உதயணனுடைய அடையாள இலச்சினையை மரியாதையுடன் கண்டுணர்ந்து பல்வகைத் திறைப் பொருள்களுடன் சந்தித்தனர். குறும்பர் மக்கள், அவர்கள் தலைவர் முதலியோர், யானைத் தத்தமும் மலைத்தேனும் பல கனிவகைகளும் வீணை செய்வதற்கேற்ற மரத் தண்டுகளும் மூங்கிலில் வினைந்த முத்துக்களும் அகிலும் புலித்தோலும் ஆகிய பல பொருள்களை அன்புடன் கையுறையாகக் கொடுத்தனர். ‘எக்காலத்தும் நின் குடியினராக வாழும் பேறு எமக்குக் கிட்டுக’ என்ற அவர்கள் வேண்டுகோளை உதயணன் மகிழ்ச்சியோடு வரவேற்று மிக்க நன்றி செலுத்தியபின், அவர்களிடம் விடைபெற்று மேற்சென்றான். அப்பால் இவ்வாறே பல சிறுசிறு மலைகளையும் காடுகளையும் சிற்றுார்களையும் கடந்து பயணத்தைத் தொடர்ந்தனர். இடைஇடையே தன் கீழ் வாழும் குடி மக்களின் அன்பு கனிந்த வரவேற்பு உதயணனுக்கு மனகிழ்வை அளித்தது. நிகழ்ந்த துன்பங்களை மறப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது. மலைப் பகுதிகளிலும் காட்டுப் புறங்களிலும் வாழும் அம் மக்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள். அவர்கள் அன்பு வஞ்சனை கலவாத தூய்மை வாய்ந்தது. அதில் தங்கள் அரசன் என்ற முறையில் மதிப்பும் கலந்திருந்தது. பொழுது சாயும் நேரம். யாவரும் சயந்தி நகரத்தை நெருங்கினர். அழகிற் சிறந்த சயந்தி நகரம் மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் பொன் மயமாகக் காட்சி அளித்தது. தேவகோட்டத்து மணியோசை வருவோரெல்லாம் வருக என்று அழைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. சயந்தி நகரை உதயணனுடைய அமைச்சர்களில் ஒருவனாகிய உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நகரம் உதயணன் ஆட்சிக்கு உட்பட்டதாயின், அவன் ஆணையின்மேல் உருமண்ணுவா ஆண்டு வந்தான். சயந்தி நாற்புறமும் இயற்கை வளமிக்க மலைகள் சூழ்ந்த நகர். என்றும் குன்றாத எழில்வளமும் சார்ந்தது.
அந்த நகரத்திற்குள் தத்தை, காஞ்சனை, வயந்தகன், இடவகன் இவர்கள் புடைசூழ மிக்க விருப்பத்துடன் உதயணன் புகுந்தனன். படைகள் யாவும் புறநகரிலே தங்கி விட்டன. உதயணன் வரவு முன்பே ஒலைச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததனால், நகரில் எங்கும் களிப்புடன் கூடிய ஆரவாரம் மிகுந்து காணப்பட்டது. பூரண விளக்கு, தோரண மாலைகளும் சுடரொளி விதானங்களுமாகப் பொலிவும் புதுமையும் பெற்று விளங்கின, நகரப்பெரு வீதிகள் யாவும். அவற்றை மகிழ்ச்சியுடன் நோக்கியவாறே இவர்கள் சென்றனர்.