வெற்றி முழக்கம்/4. திரை விலகியது

4. திரை விலகியது

த்தை யாழ் கற்க வேண்டிய நல்ல நாள் விரைவிற் குறிப்பிடப் பெற்றது. தன்னுடைய பிற புதல்வியருக்கு ஏற்ற பரிசுகளைக் கொடுத்து வருந்தாதபடி செய்தான் பிரச்சோதனன். உதயணனிடம் வீணை கற்கும்பேறு தத்தைக்கே தக்கதெனப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். யாழ் கற்க ஏற்ற கீதசாலை கட்டி அலங்கரிக்கப்பட்டது. தத்தையின் கலைக் கல்விக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப்பட்டன. குறித்த மங்கல நன்னாள் வந்து சேர்ந்தது. வாசவதத்தையை அவளுடைய ஆயத்தார் நன்றாக அலங்கரித்தனர். கலை மகளைக் கற்று அறியத் திருமகள் செல்வதுபோல, அவளைக் கீதசாலைக்கு உதயணனிடம் யாழ் கற்க அழைத்துச் சென்றனர் தோழியர். காதில் குண்டலம் அசையக் காலிற் சிலம்பொலிப்பக் கீதசாலையுள் சென்றாள் தத்தை, கீதசாலையில் யாழ் கற்பிக்கவேண்டிய மேடையில் ஆசிரியனிருந்து கற்பிப்பதற்கும், அதற்கு எதிரே கற்பவள் அமர்ந்து கற்பதற்குமாக இரண்டு இருக்கைகள் பொன்னிலும் மணியிலும் இழைத்துச் செய்யப்பட்டிருந்தன. இரண்டிற்கும் இடையே ஓர் அலங்காரமான மெல்லிய பட்டுத் திரைச்சீலை ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் கற்பவளும் கற்பிப் பவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாதிருந்தது. தத்தை, திரைக்குப் பின்னாலே கற்பவள் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தப்பட்டாள். கற்கின்ற முதல் நாள் இப்படித் திரையிட்டு அதை விலக்கியபின், கற்பார் ஆசிரியனை வணங்கிப் பெரிதும் பயபக்தியுடன் கற்றல் கலைமரபு. இதற்குள் சிலர் சென்று, கற்பிக்கும் ஆசிரியனாகிய உதயணனை மரியாதைகளுடன் அழைத்து வந்தனர். உதயணன் திரைக்கு இந்தப் புறம் ஆசிரியருக்கென இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். திரை இரண்டு உள்ளங்களின் வேகத்தைத் தாங்கிக்கொண்டு இடையே நின்றது. தனக்கு யாழ் கற்பிக்க இருப்பவன், அன்று புலிமுக மாடத்திலிருந்து தான் யானை மேற்கண்ட இளைஞனே எனத் தத்தை அறியாள். தான் கற்பிக்க வேண்டியவள், அன்று தன் உள்ளங்கவர்ந்த கன்னியாகவே இருப்பாள் என்று உதயணனும் அறியான். இருவர் அறியாமையும் உந்தி நிற்கும் ஆவலின் தாக்குதலை அந்த மெல்லிய பட்டுத்திரை எவ்வளவு நேரந்தான் தாங்கும்? ஆசிரியனையும் மாணவியையும் அதிக நேரம் சோதனை செய்வதற்குத் தத்தையின் தோழிகளே விரும்பவில்லை போலும்,


‘ஆசிரியனிடம் கற்பதற்குமுன் அவனை மனப்பூர்வமாக வணங்கவேண்டியது மாணவர் கடமை. அதை மறவாது நீயும் செய்க’ என்று கூறித் தோழியர் திரையை விலக்கினர். தன் காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக் கமலமலர் குவிந்தது போலக் கூப்பி வணங்கிவிட்டுத் தலை நிமிர்ந்தாள் தத்தை. எதிரே அன்று நெஞ்சைக் கவர்ந்து சென்ற கள்வன் வியப்புடன் தன்னையே கண்களால் பருகிவிடுவதுபோலப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் தலைகுனிந்தாள். முதலில் விலகியது பட்டுத்திரை. இப்போது இரண்டு உள்ளங்களிலுமிருந்த சந்தேகத்திரைகளும் விலகின. தத்தையாக அவளை அறிந்தான் உதயணன். உதயணனாக அவனை அறிந்தாள் தத்தை. இருவருக்கும் இடையிலிருந்த யாழினின்றும் இன்னும் இசை எழவில்லை. இருவர் மன யாழிலிருந்தும் இனிய அன்புப் பண் ஒலிப்பதை இருவருமே அறிந்து கொண்டனர். கண் மூடித் திறப்பதற்குள் இந்த அறிமுகத்தால் ஏற்பட்ட வியப்பு நாடகம், சில கணங்களில் முடிந்தது. ஆசிரியனாகவும் மாணவியாகவும் சூழ்நிலையை வெளிப்படையாக ஆக்கி வைத்திருக்கும்போது இருவரும் இந்தக் காதல் நாடகம் நடிக்க முடியாதல்லவா? உதயணன் யாழைக் கையிலெடுத்துக் கற்பிக்க ஆரம்பித்தான். தத்தை மீண்டும் முறைக்காக அவனை வணங்கிக் கற்க ஆரம்பித்தாள். தத்தையின் ஆயம் அவளைச் சூழக் காவலாக இருந்து கொண்டு கவனித்தது. மாரன் மலர்க்கணைகள் முழுவதையும் தத்தையிடம் எய்து பழிதீர்த்துக் கொண்டபோது, மனம் யாழில் போகுமா? முதல் நாளாகையாலும் உதயணன் மன நிலையிலும் ஏறக்குறைய அதே மனவேதனை ஏற்பட்டிருந்ததாலும், விரைவாக யாழ் கற்பிப்பதை முடித்துவிட்டுப் பிரியாமற் பிரிந்தான் அவன். சந்தேகத்திரை விலகப் பெற்ற இருவரும், மறுபடி தாபத்திரை மூடப்பெற்றுப் பிரிந்து சென்றனர்.


உதயணன் தத்தைக்குத் தொடர்ந்து யாழ் கற்பித்து வந்தான். அதனுடன் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய கண்கள் காதல் கற்பனையை வளர்த்து வந்தன. பிரச்சோதனன் செய்த இந்த ஏற்பாடு, ஊரார் தங்களுக்குள் கூடிக் கூடிப் பழிமொழி பேசும்படி செய்துவிட்டது. ஆனால் அவற்றை அரசன் அறியாதபடி அஞ்சி முணுமுணுக்கத் தொடங்கியது ஊர். 'சிறை செய்யப்பட்டு வந்த பகையரசன் உதயணன், வாலிப வயதினனுங்கூட. அவனைக் கொண்டு பருவம் வந்த தன் மகளுக்கு நம்பிக்கையுடன் யாழ் கற்பிக்கச் செய்த மன்னனுக்கு அறிவு மங்கிவிட்டதோ? பகைவனை நம்பிப் பெற்ற மகளை ஒப்புவிக்கிறானே?' என்னும் பழிமொழி ஊரெங்கணும் எழுந்தது. ஆனால் அரசன் ஆணைக்கு அஞ்சி மறைவாகப் பரவிவந்தது இந்தப் பழிமொழி.


வேந்தன் அறியின் வெஞ்சினம் கொள்வான்; ஆகையால், வாய் திறந்து பேசாமல் நகரில் காதும் காதும் வைத்தாற் போலப் பெருகிப் பரவியது இந்தப் பேச்சு. ‘ஆசிரியனாக வந்த உதயணனும் அரசன். கற்பவளாகிய வாசவதத்தையும் அரசன் மகள். இருவரும் திருமணப் பருவத்தினர். இதன் முடிவு என்ன ஆகும்?' இப்படியும் ஒரு சிலர் பேசிக் கொண்டனர்.

இஃது இவ்வாறிருக்க, உதயணன் தத்தையின் மேலெழுந்த வேட்கையை அடக்க முடியாது தவித்தான். அஃது அவன் உடல் நலத்தையே ஓரளவு பாதித்திருந்தது. இருந்தபோதிலும் தத்தைக்கு யாழும் அரசகுமாரர்க்கு வில் முதலிய கலைகளும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. உதயணனது உடல்நலிவோ நாளுக்கு நாள் காண்போர் சந்தேகமுறும் அளவுக்கு நிலைமுற்றிவிட்டது. இந்நிலையில் ஏற்ற உதவியாக வயந்தகன் வந்தான். அவனைக் கண்டவுடன் உதயணனுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.