வெற்றி முழக்கம்/40. பகைவர் படையெடுப்பு
பதுமையின் தோழியாகிய யாப்பியாயினி, உதயணனிடம் அவன் யாழ் நலத்தைப் புகழ்ந்து கூறும்போது பதுமையும் அண்மையில் இருந்தாள். நேற்று நகைச்சுவை ததும்பச் சிரித்தவாறே தன்னிடமே உரையாடிய அவர்களிடம் இன்று பயபக்தி தென்படுவதை உதயணன் கண்டான். முதல் நாள் கொடுத்த அதே யாழை அவன் கரங்களிற் கொடுத்து, “இந்த யாழிலிருக்கும் மறைவான குறைவை நீக்கிச் செவ்வழிப் பண்ணைப் பாடியருள்க” என்று யாப்பியாயினி, உதயணனிடம் கூறி வேண்டினாள். அவள் கொடுத்த யாழைக் கையிலே வாங்கிக்கொண்ட உதயணன், நேற்றுக் கூறாமல் மறைத்த அந்தச் செய்தியை இன்று வெளிப்படையாகக் கூறிவிடக் கருதினான். முதல் நாள் தொடக்கத்தில் தான் நடித்துவிட்ட நடிப்பிற்கு ஏற்ப, இன்றும் அவன் அதை மனத்தோடு மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நேற்று அவள் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ் வாசித்துவிட்டதனால் இன்றும் அதை மறுக்க வழியில்லாமல் ஒப்புக் கொள்ளும்படியாகவே நேர்ந்தது.
நேற்றே அந்த யாழிலுள்ள குற்றத்தைத் தெரியும்படி செய்து விட்டதனால் இன்றும் அதைக் கூறுவது பிழையில்லை என்று உதயணன் எண்ணினான் “இந்த யாழ் பட்டுப் போன மரத்தினாற் செய்யப்பெற்றது! இது மங்கலமும் தூய்மையும் உடையது அல்ல! எனவே இது பயன்படாது” என்று தான் சொல்லத் துணிந்ததைச் சொல்லிவிட்டுக் கைகளில் வாங்கிய யாழை அவளிடமே திருப்பிக் கொடுத்து விட்டான். இதைக் கண்ட பதுமை உடனே தன் தோழியை அருகிலழைத்து “என் தமையன் தருசக வேந்தன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததும் யவனத் தச்சன் இயற்றியதுமாகிய உயர்தரமான யாழை நீ சென்று உடனே எடுத்துவா” என ஏவினாள். யாப்பியாயினி உடனே மாடத்திலிருந்து கீழே சென்று மகர வடிவில் இயற்றப்பட்ட அந்த அழகிய யாழை எடுத்துக் கொண்டுவந்தாள். இரண்டாவதாகக் கொணர்ந்த அம்மகர யாழைக் கையில் வாங்கிக்கொண்ட உதயணன் அந்த யாழில் உறுப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அழகைக் கண்டு வியந்தான். ஆனால் அதிலுள்ள நரம்புகளைக் கூர்ந்து நோக்கியபடியே மீட்டிப் பார்த்தவுடன் தான் அப்படி வியந்தது பிழை என்று அவனுக்குப் புரிந்தது. “நிணம் புலர உலர்த்திடாமற் பச்சையாகக் கட்டப்பெற்ற அந் நரம்புகள் குற்றமுடையன” என்று கூறி வேறு நல்ல நரம்புகளைக் கொண்டு வருமாறு தோழியிடம் சொன்னான் அவன். தோழி யாழில் இணைப்பதற்கான வேறு நரம்புகளைக் கொண்டு வந்து அவன் முன்பு வைத்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள். இசைக் கருவிகளையும் அவற்றின் அங்கங்களையும் பார்த்த அளவிலேயே அவை இன்ன இன்ன வகையில் குணமுடையன, இன்னின்ன வகையில் குற்றமுடையன என்று தெரிந்து கூறும் ஆற்றலுடைய உதயணன், இரண்டாவதாக எடுத்து வந்த அந்த நரம்புகளையும் பார்த்த மாத்திரையிலேயே, ‘இவையும் பயன்படா’ எனக்கூறி ஒதுக்கி விட்டான். தோழி மீண்டும் சென்று வேறு பலவகை நரம்புகளை எடுத்து வந்தாள். பதுமை கண்ணிமையாமல் வியப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் கண்ட ஆராய்ச்சித் திறமும் ஆழமான பயிற்சியும் அவளை மலைத்துப் போகச் செய்திருந்தன. அவளுடைய தோழி கொண்டு வந்த யாழ் நரம்பில் வேறு ஒன்றை அசாதாரணமாகப் பார்த்த மாத்திரமே கையிலெடுத்த உதயணன், அதனுடைய முறுக்கை அவிழ்த்துப் பிரித்து அதில் மயிர் பின்னியிருப்பதை அவர்களுக்குக் காட்டினான். இவ்வாறே பல நரம்புகளை ஆராய்ந்து கூறியபின், இறுதியாகத் தோழி கொண்டு வந்த நரம்புகளில் பொற்சரடு போல் முறுக்கிய ஒரு நரம்பை யாழிலே பொருத்திக் கட்டினான். கட்டியதும் அவள் கையில் யாழைக் கொடுத்தான். “யாழையும் பாட்டையும் எல்லோரும்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால் இவரைப்போல அதன் குணாகுணங்களைச் சொல்லுவார் மிக அரியர்” என்று தோழியிடம் பதுமை உதயணனைப் புகழ்ந்து கூறினாள். உதயணன் புதிதாக நல்ல நரம்பைச் சேர்த்துக் கொடுத்த யவனக் கைவினை நயம் பொருந்திய அந்த யாழைத் தன் தோழியின் கையிலிருந்து வாங்கிப் பதுமை இனிமையாகப் பாடலானாள்.
உதயணன் அவள் பாடலைக் கேட்டு, அதன் இன்சுவையை அநுபவித்தான். பதுமையின் பாட்டு அவன் உள்ளத்தை உருக்கும் இனிமை கொண்டதாக இருந்தது. இவ்வண்ணமே காதலின்பமும் இசையாராய்ச்சியுமாகக் கழிந்து வந்தன அவர்கள் நாட்கள். ஒவ்வொரு நாளும் வந்து நிகழ்வதும் கழிந்து போவதும் அறியாமல் இருவரும் இருந்தனர். இவர்கள் கன்னிமாடத்தினுள் இவ்வாறு இருந்து வந்தபோது, தருசகராசனிடம் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் கேட்டுப் பரிசங்களோடு வந்து சேர்ந்தான். பதுமையின் எழிலையும் கலைப் பயிற்சிகளையும் பல முறை பலர் வாயிலாகக் கேள்விப்புட்டிருந்த அச்சுவப் பெருமகன் அவளைப் பற்றிய நினைவிற்குத் தன் நெஞ்சில் நிரந்தரமாக ஓரிடம் அளித்துவிட்டான். அந்த ஆசை காரணமாகவே தருசக வேந்தனிடம் நேரிலேயே சென்று கேட்டுப் பார்த்து விடுவது என்றெண்ணி இப்போது திருமணப் பரிசங்களுடன் ஆரவாரமாகப் புறப்பட்டு வந்திருந்தான். அவனும் ஒரு பேரரசன் என்ற முறையில் தருசகன் சிறப்புடன் அவனை வரவேற்பதற்காகத் தன் தலைநகரை நன்கு அணி செய்யச் சொல்லியிருந்தான். தருசகராசன் தானே தன் பரிவாரங்களோடு எதிரே சென்று அச்சுவப் பெருமகனை மதிப்புடன் வரவேற்றான். அச்சுவப் பெருமகன், தருசகனுடைய அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கிச் சில நாள்கள் இருந்தான்.
இந்தச் செய்திகளெல்லாம் கன்னிமாடத்திலுள்ளவர்களுக்கு விவரமாகத் தெரிவதற்குக் காரணமில்லாமற் போயிற்று. உதயணன் திடுமென்று ஒருநாள் தன் நண்பர்களைப் பற்றிய நினைவு வந்தவனாய் அவர்களைச் சந்திக்கும் எண்ணத்துடன் கன்னிமாடத்திலிருந்து வெளியேறிப் பிறரறியாமல் காமன் கோட்டத்திற்குச் சென்று விட்டான். அங்கே போன இடத்தில் நண்பர்களைக் காணமுடியவில்லை. தற்செயலாகத் தன்னுடன் வந்திருக்கும் வீரனொருவனை அங்கே சந்திக்க முடிந்ததனால் நண்பர்களும் தானிருந்த அதே அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை பார்ப்பதையும் பிற விவரங்களையும் அவன் தெரிந்து கொண்டான். அதன் பின்னும் அவன் உடனே கன்னிமாடத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. காரியார்த்தமாகச் சில நாள்கள் அங்கே வெளியிலேயே தங்கிவிட்டான். இவ்வாறு அவன் இங்கு வந்து விட்டபோது பதுமை கன்னிமாடத்தில் இவனைக் காணாது தவித்தாள். ஆனால் விரைவில் திரும்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்கு உள்ளூற இருந்தது. எங்காவது தவப் பள்ளியில் யாரையாவது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். நம்மிடம் கூறினால் நாம் வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றெண்ணி அவராகவே சொல்லாமல் போயிருக்க வேண்டும் என்று கருதிக் கலங்கித் துடிக்கும் தன் மனத்தைத் தேற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவள்.
உண்மையில் அவன் அங்கே காணாமற்போனது அவளுக்குப் பெருந் துயரத்தையே அளித்தது. அவள் உதயணனை எண்ணி ஏங்கியதுபோல் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தான். தருசகன் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகனுடன் அளவளாவி இருந்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவன் பகையரசர்கள் சிலர் ஒன்றுகூடி அவன்மேல் படையெடுத்து மகத நாட்டு எல்லைக்கே வந்துவிட்டனர். அவர்கள் தருசகன் சிறிதும் எதிர்பாராத நிலையில் அவனைத் தாக்க வேண்டும் என்ற கருத்துடன் பல நாள்களாக அதற்கு வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்தவர்கள். இப்போது அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவே விரைவில் முழு ஆற்றலோடு ஒன்று சேர்ந்து மகத நாட்டைக் கைப்பற்றிவிடும் எண்ணத்துடனே புறப்பட்டு வந்திருந்தார்கள். தருசகன்மேல் நெடுநாட்களாகப் பகை கொண்டிருக்கும் விரிசிகன் என்ற அரசன் இந்தப் படையெடுப்பிற்கு முக்கியக் காரணமாக இருந்தான். அத்தினபுரத்து அரசன் எலிச் செவியன், வாரணாசி மன்னன், அயோத்தி வேந்தன், போதனபுரத்தை ஆண்டு வந்த மிலைச்சன், துவராபதித் தலைவனாகிய சங்கரன், சீ நகரத்து மன்னன் வேசாலி என வேறு ஆறு அரசர்களும் விரிசிகனுக்கு உதவியாகத் தத்தம் படைகளுடனே மகதவேந்தனை எதிர்த்து வெற்றி கொள்ள எண்ணி உடன் வந்திருந்தனர். அவர்களிலே சிலர் பதுமையை மணந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும், மகத மன்னன் தங்களுக்கு அவளைக் கொடுக்க மாட்டானே என்ற ஏக்கமும் கொண்டிருந்தவர்கள்.
கேகயத்து மன்னன் அச்சுவப் பெருமகன் பதுமையைத் தனக்குத் திருமணம் பேச வந்துள்ளதையும், தருசகன் அவனை வரவேற்று மகிழ்ச்சியோடு தன் விருந்தினனாக ஏற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்தபின், அவர்களுடைய ஆத்திரமும் பொறாமையும் தருசகன்மேல் இப்போது, பன்மடங்காகப் பெருகியிருந்தன. ‘பலவகையான சிறு கயிறுகளை எல்லாம் ஒன்று திரட்டி முறுக்கிய ஒரு பெரிய கயிற்றால் வலிமை மிக்க யானை ஒன்றைக் கட்டிப் பிணிப்பதுபோலத் தாங்கள் ஒன்றுசேரும் வன்மையால் பேரரசனாகிய தருசகனை வென்று அவன் தங்களைப் பணிவுடன் வணங்கித் திறை கொடுக்குமாறு செய்ய வேண்டும்’ என்று அவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்திருந்த ஒவ்வொரு அரசனுக்கு அழுத்தமான எண்ணம் இருந்தது. அந்த எண்ணமே அவர்களுடைய ஒற்றுமைக்கு முழுக்காரணமாகவும் இருந்துகொண்டு தூண்டிற்று. அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் பேசுவதற்காகத் தருசகராசனிடம் வந்து விருந்தினனாகத் தங்கியிருந்ததனால் அவன் மேலும் அவர்களுக்கு மனக் கொதிப்பு ஏற்பட்டிருந்தது. தருசகனையும், கேகயராசனையும் அடக்கி ஒடுக்கிவிட்டால் அதன்பின் பதுமையை, தங்களுள் யாராவது ஒருவரையே மணம் புரிந்து கொள்ளும்படி செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் தமது தீர்மானத்தை அமைத்துக் கொண்டிருந்தனர்.
பதுமையைப் பற்றிய சபலம் யார் யாருக்கு அங்கே இருந்ததோ, அவர்கள் எல்லோருமே அந்தத் தீர்மானத்தைத் தங்கள் தங்களுக்கு ஆறுதலும் சாதகமும் ஏற்படுவதற்கு ஏற்றதாக வைத்துக் கொண்டிருந்ததுதான் விந்தை! ஒவ்வொரு அரசனும் படையுடன் தன் நாட்டு எல்லையைக் கடந்து மகதத்திற்குப் புறப்படும்போது தனக்கு அந்தப் போரால் ஏற்படும் இத்தகைய ‘அழகிய சுயநலம்’ ஒன்றைக் கருதியே புறப்பட்டிருந்தனர். ஆனால், வெளிப்படையாக எல்லோரும் மகத மன்னனின் எதிரிகள் என்ற முறையில் ஒரே கட்சியாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்! படைகளோடு புறப்பட்டு வந்த அந்த மன்னர்கள் யாவரும், மகத நாட்டு எல்லைக்கு அப்பால் வந்து தங்கி முற்றுகைக்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீன்கள் காலருகே வருகின்றவரை அடங்கி ஒடுங்கி நிற்கும் கொக்குப் போலத்தான் அந்தப் பகையரசர்களும், மகத நாட்டு எல்லையில் வந்து தங்கிக் காலந் தாழ்த்திக் கொண்டிருந்தனர். பகையரசர்கள் இவ்வாறு வந்து தங்கியிருந்த செய்தி மெல்ல மெல்லப் பரவி, மகத நாடெங்கும் தெரியலாயிற்று. தலைநகரில் தருசகராசனுக்கும் இச் செய்தி விரைவில் தெரிந்துவிட்டது.