வெற்றி முழக்கம்/41. சோலைமலைத் திட்டம்
மணம் பேச வந்திருக்கும் அச்சுவப்பெருமகன் தன்னுடைய விருந்தினனாகத் தங்கியிருக்குப் பொழுதே சற்றும் எதிர்பாராத நிலையில் தங்களுக்குள் ஒன்று கூடிப் போருக்கு இழுக்கும் பகைவர்கள் செயலைக் கண்ட தருசகன், உண்மையாகவே மலைப்பு அடைந்தான். படையெடுப்புச் செய்தி கேட்ட நகரத்து மக்கள் கலவரமடைந்து அவரவர்க்குத் தோன்றிய கருத்துக்களை அங்கங்கே பேசத் தொடங்கி விட்டனர். பொதுவாக நகர் முழுதும் இச் செய்தி திகைப்பையும் அச்சத்தையும் ‘இனி என்ன நிகழுமோ?’ என்ற பர பரப்பையும் உண்டாக்கியிருந்தது. நகரையும் அரசனையும் திகைப்பும் கவலையும் கொள்ளச் செய்திருந்த இச் செய்தி அரண்மனைக் கன்னி மாடத்திலும் அந்தரப் புரத்திலும் கூடப் பரவிவிட்டது. ஏற்கெனவே மாணகன்(உதயணன்) தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கன்னிமாடத்திலிருந்து போய் விட்டதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள் பதுமை. இந்தப் படையெடுப்புச் செய்தி அவளுக்கு இன்னும் மிகுந்த துயரத்தை அளித்தது. ஆனாலும் அவளுக்கு உடனே என்ன தோன்றியதோ தெரியவில்லை; தன் தோழி அயிராபதியை அழைத்தாள். மாணகன் எப்படியும் அவனுடைய பழைய இடமாகிய காமன் கோட்டத்திற்குத்தான் திரும்பிச் சென்றிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவனைப் பிரிந்து தான் படுகின்ற துயரம் முதல் பகையரசர் படையெடுப்பு வரை எல்லாச் செய்திகளையும் அவனிடம் கூறி வருமாறு அந்தத் தோழியை அனுப்பினாள் பதுமை. அது கேட்ட தோழி அயிராபதியும் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு விரைவாய்க் காமன் கோட்டத்திற்குச் செல்லப்புறப்பட்டாள்.
பதுமையின் நம்பிக்கை சரியாகவே இருந்தது. நல்ல வேளையாக அயிராபதி காமன் கோட்டத்திற்குள் நுழைந்த போது, தன் நண்பர்களைத் தேடி வந்த உதயணன் அங்கே இருந்தான். அவன் அப்போது அதே ‘மாணகன்’ என்னும் அந்தண இளைஞன் வடிவத்திலேயே இருந்ததனால் அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்ள அயிராபதிக்கு மிகுந்த நேரமாகவில்லை. அவள் உதயணன் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிப் பதுமை அவனுக்குக் கூறி அனுப்பிய செய்திகளை எல்லாம் விரிவாகச் சொன்னாள். திடீரென்று பகையரசர்கள் மகத நாட்டின்மீது படையெடுத்து வந்திருப்பதையும், அதனால் அரண்மனையில் திகைப்பும் கலவரமும் நிரம்பியிருப்பதையும்கூட அவள் வணக்கத்துடனே விவரமாக எடுத்துச்சொன்னாள். உதயணன் அவள் கூறிய யாவற்றையும் கவனத்துடனே கேட்டான். பதுமை அயிராபதியின் மூலம் அனுப்பியிருந்த செய்திகளும், பகைவர் படையெடுப்பைப் பற்றிய விவரங்களும் ஒரு வகையில் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. தன்னுடைய திறமையையும், ‘உண்மையில் தான் யார்’ என்பதையும் தருசகனுக்கு வெளிக் காட்டுவதற்குப் பகைவர்களின் இந்தப் படையெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு என்று உதயணன் எண்ணினான். இதே வாய்ப்பைக் கொண்டு பதுமைக்கும் தனக்கும் உள்ள காதலிலும் தான் வெற்றியடைந்துவிட முடியும் என்பது அவன் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிலவுகிற எண்ணங்களோடு தோழி அயிராபதிக்கு மறுமொழி கூறி அனுப்பினான் அவன். “இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளச் சொல்! அதன்பின் பதுமையை நான் சந்திக்க வந்து சேருவேன். இப்போது நான் இன்றியமையாத சில செயல்களை மேற்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். இதை விவரமாகப் பதுமைக்கு எடுத்துச் சொல்லி, வேண்டிய ஆறுதல் கூறு” என்று அவன் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டு சென்றாள் அயிராபதி. அயிராபதி சென்ற பின்னர் உதயணன் சிந்தித்தான். ‘படையெடுத்து வந்திருக்கும் பகைவர்களை எதிர்க்கும் வகை தெரியாமல் தருசகன் திகைத்துக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் நாமே நம்முடைய வீரர்களுடனே சென்று ஏதாவதொரு சூழ்ச்சியால் அவர்களை வென்று நம் திறமையை, தருசகனுக்குக் காட்ட வேண்டும் தருசகன் கவனத்தை நம்பக்கம் கவரவல்லதாக அமையவேண்டும், நமது அந்தத் திறமையின் வெற்றி’ என்ற எண்ணங்கள் அவன் மனத்தில் எழுந்தன. எதற்கும் தன் நண்பர்களைக் கலந்து கொண்ட பின்பே தான் செயலில் இறங்க வேண்டும் என்ற நினைவுடன், காமன் கோட்டத்தில் சந்தித்த தன் நாட்டு வீரனை அழைத்து மாறுவேடத்துடன் அரண்மனையிலிருக்கும் உருமண்ணுவாவிற்கு அவன் மூலம் இந்தச் செய்தியைக் கூறி அனுப்பினான். உதயணன் செய்தி கூறி அனுப்பிய சற்றைக்கெல்லாம் அந்த வீரன் உருமண்ணுவாவையும் கையோடு அழைத்துக்கொண்டே அங்கு வந்து சேர்ந்து விட்டான். இருவரும் வெகுநேரம் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர்.
“நம்மிடம் இப்போது படை வலிமையும் மிகுதியாக இல்லை. நாம் தலைநகரத்திலிருந்து புறப்படும்போது நம்முடன் வந்த வீரர்களும் இப்போது இந் நகரத்தில் அங்கங்கே தனித்தனியாக மறைந்து வசித்து வருகின்றனர். அவர்களை ஒன்று திரட்டுவது இப்போது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்படியே ஒன்று திரட்டிக்கொண்டு நாம் எல்லோரும் சென்றாலும் நேருக்கு நேர் நின்று போர் செய்து பகைவர் படையெடுப்பை நம்மால் முறியடிக்க முடியாது. எனவே தந்திரத்தால்தான் இந்தப் பகைவர்களை இப்போது இங்கிருந்து திரும்பி ஓடுமாறு செய்ய முடியும். நாமும்-நம்மைச் சேர்ந்தவர்களும் வாணிகம் செய்வோர்போல மாறுவேடங் கொண்டு பகைவர் ஆதரவு பெற்று, அவர்கள் படையில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொண்ட பின்பு, நள்ளிரவில் அவர்கள் படைக்குள்ளேயே கலவரத்தை உண்டாக்கிவிட்டு, நம்மை அடையாளங் கண்டு கொள்ள முடியாதபடி போர் செய்து அதனால் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும். இம்முயற்சியில் நமக்கு வெற்றி கிட்டுமானால், ‘யாவும் உதயணன் ஆற்றலால் விளைந்தவை’ என்று நம்மவர்களைக் கொண்டே உன் புகழை நகரெங்கும் பரப்பித் தருசகன் செவிகளுக்கும் அது எட்டச் செய்யவேண்டும். அப்போது நீ இங்கு வந்திருப்பதையும் காலமறிந்து செய்த உனது உதவியையும் அறிந்து தருசகன் பாராட்டுவதற்கு நேரும். அந்த நிலை ஏற்பட்டால்தான் பதுமையின் தொடர்பிற்கும், மற்றவற்றிற்கும் தருசகன் உதவி உனக்குக் கிடைக்க முடியும். இப்போது அதற்கான அடிப்படைச் செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்” என்று உருமண்ணுவா தன் கருத்துக்களை உதயணனுக்குத் தெளிவாக விவரித்தான்.
காரண காரியங்களுடனே சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக உருமண்ணுவா கூறிய திட்டங்களைக் கேட்டபின்பு, அவையே தக்கவை என்று தோன்றியது உதயணனுக்கு. அத்திட்டங்களின் படியேதான் செயலாற்ற வேண்டியது என்ற முடிவிற்கு வந்தான் அவன். இப்படியே உதயணனும் உருமண்ணுவாவும் சில நாழிகைப்போது தங்களை மறந்து சிந்தனையிலே ஆழ்ந்தவர்களாய் அமர்ந்திருந்தனர். சிந்தனை கலைந்த உடனே உருமண்ணுவா உதயணனையும் அழைத்துக் கொண்டு காமன் கோட்டத்திலிருந்து வெளியேறினான். மேலே நடக்கவேண்டிய செயல்களை வரிசையாக நிறைவேற்றுவதற்கு வேண்டிய பொறுப்பு அவ்விருவருக்கும் மட்டுமே மிகுந்த அளவில் இருந்தது. மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்திற்குப் பக்கத்தில் ‘சின்னச்சோலை’ என்னும் பெயரையுடைய மலை ஒன்று இருந்தது. உதயணன் முதலியவர்களோடு மகதநாட்டிற்கு மாறுவேடத்தோடு வந்திருந்த வீரர்களில் பெரும்பாலோர் இந்த மலையடிவாரத்திலும் இதன் சுற்றுப்புறங்களிலும் மறைமுகமாகத் தங்கள் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் இப்போது உதயணனுக்கு ஏற்பட்டிருந்ததனால், அவன் உருமண்ணுவாவுடன் காமன் கோட்டத்திலிருந்து புறப்பட்டு நேரே சின்னச் சோலைமலைக்கு வந்திருந்தான்.
சின்னச் சோலைமலை, தொடர்ச்சியான பெரிய மலை அல்ல. ஒரு சிறுகுன்று போன்றதுதான் அது. உருமண்ணுவாவின் சொற்படி உதயணன் அந்த மலையின்மேல் ஏறித் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியக் கூடிய அடையாளப் பாடல் ஒன்றை உரத்த குரலிற் பாடினான். அவன் பாடியபோது அமைதி நிறைந்திருந்த இரவு நேரமாகையால், அவனுடைய அந்தப் பாட்டுக் குரல் குன்றைச் சுற்றி வெகுதொலைவுவரை தெளிவாக ஒலித்தது. அழைப்புக்கு அறிகுறியான அந்த அடையாளப் பாட்டை உதயணன் பாடி முடித்தவுடன் உருமண்ணுவாவோடு அவனும் குன்றின் மேலேயே இருந்து கொண்டான். இரவு நடு யாமத்திற்குள் பாட்டொலியைக் கேட்ட எல்லா வீரர்களும் குன்றின்மேல் உதயணனும் உருமண்ணுவாவும் இருந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடனே வந்து கூடிவிட்டார்கள். தங்கள் அரசன் மகத மன்னனுடைய நட்பு வேண்டி வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கு ஏதாவது நல்ல வழி புலப்பட்டிருக்கும் என்றே இந்தப் பாட்டொலி கேட்டதும் அவர்களிற் பலர் எண்ணி வந்திருந்தார்கள். சின்னச் சோலைமலையைச் சுற்றி உள்ள வீரர்கள் யாவரும் வந்தபின், தங்கள் அரசனிடம் பற்றுமிக்க அந்த வீரர்களைத் தங்கள் திட்டத்திற்கு உடன்படச் செய்யும் கருத்துடன் உருமண்ணுவா அவர்களோடு பேசினான். அந்தப் பேச்சுக்கு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பயன் விளைந்தது.