வெற்றி முழக்கம்/43. தருசகன் புகழுரை
படையெடுத்து வந்திருந்த பகை மன்னர்களுக்குள் கலவரத்தை மூட்டிவிட்டபின் ஏற்கெனவே உதயணன் எல்லாரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த இடத்தில் வத்தவநாட்டு வீரர்கள் ஒன்று கூடினர். அவ்வாறு அவர்கள் கூடியது இருள் நன்றாகப் புலராத நேரத்தில். ஆகையால் ‘வத்தவன் வாழ்க!’ என்ற அடையாளக் குரலால் தங்களை இனம் புரிந்துகொண்டு ஒன்று பட்டிருந்தனர். அந்த வீரர்களில் ஒருவருக்கேனும் போரினால் ஒரு சிறு இரத்தக் காயம்கூட இல்லை. அவ்வளவு சாமர்த்தியமாகச் சூழ்ச்சியை நிறைவேற்றி விட்டுத் தப்பி வந்திருந்தனர் அவர்கள். ‘பகைவர்களைத் தந்திரமாக ஓட்டிவிட்டோம். இனி உதயணனுக்குத் தருசகன் நட்பு சுலபமாகக் கிடைத்துவிடும். பதுமையின் காதலிலும் இதனால் உதயணன் வெற்றி பெற முடியும்’ என்று உருமண்ணுவா முதலிய தோழர்கள் எண்ணினார்கள். உதயணன் அங்கு வந்திருப்பதையும், இரவோடிரவாக அவன் தன் ஆட்களுடனே தருசகனை வளைக்க வந்த பகைவர்களைத் துரத்திவிட்டதையும் நகர் எங்கும் வலியப் பரப்புதல் வேண்டும் என்று அவன் நண்பர் எண்ணினர். அப்படிச் செய்வது தருசகனுடைய கவனத்தையும் பாராட்டையும் உதயணனுக்குக் கிடைக்க வைப்பதற்குச் சிறந்த வழி என்று அவர்களுக்குத் தோன்றியது.
பதுமையும், தருசகன் நட்பும் உதயணனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் உதயணனைப் பற்றி மகத வேந்தனாகிய தருசகனுக்கு மிக்க நன்மதிப்பு ஏற்பட வேண்டும். அதற்குரிய செயலைச் குதிரை விற்பவனாக மாறுவேடங் கொண்டு உதயணன் நிறைவேற்றியது மட்டும் போதாது. ‘அவ்வாறு உதயணன்தான் நிறைவேற்றி உதவியிருக்கிறான்’ என்பதைத் தருசகன் உணருமாறும் செய்தாக வேண்டும். எனவே அம்முறையில் அச்செய்தியை நகரெங்கும் பரப்புவதற்குத் திட்டமிட்டு வயந்தகனையும் வேறு சில வீரர்களையும் அனுப்பினர். “உதயணனின் தந்தையாகிய சதானிகனுக்கு மகத மன்னன் நண்பன். ‘என் தந்தையின் நண்பருக்குத் துயர் வந்தால் காப்பது என் கடமைல்லவா?’ என்று எண்ணி அவன் இங்கே வந்து நேற்றிரவு முற்றுகையிட்டிருந்த தருசகனின் பகைவர்களை முறியடித்து அனுப்பி விட்டான்” என்று வயந்தகன் முதலியோர் இராசகிரிய நகரில் அங்கங்கே செய்திகளைப் பரப்பலாயினர். படையெடுப்புச் செய்தி அறிந்து கலவரத்தில் ஆழ்ந்திருந்த இராசகிரிய நகரம், வயந்தகன் முதலியோர் பரப்பிய இச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தது. மெல்ல மெல்ல அரண்மனையிலும் பலர் வாயிலாக இச் செய்தி பரவிக் கவலையை நீக்கியது. நகர மக்கள் உதயன்னனைத் தெய்வமெனக் கொண்டாடிப் போற்றலாயினர். .
அரசன் தருசகன் அரண்மனையில், இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி கொண்டான். உதயணனை அப்போது உடனே காணவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. இந்த ஆவல் அவன் மனத்தில் பெருகவே அவன் அச் செய்தியைக் கூறியவர்களை அழைத்து வருமாறு தன் ஏவலர்களை அனுப்பினான். அவன் அனுப்பிய ஏவலர்கள் நகரில் பல இடங்களில் தேடியபின் இறுதியாக வயந்தகனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றனர். வயந்தகனும் அவனுடன் இருந்த மற்றவர்களும் அதை எதிர்பார்த்தே காத்திருந்தவர்கள் போலக் காவலாளர்களுடன் தருசக மன்னனின் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனார்கள். தருகன், வயந்தகன் முதலியவர்களை அன்போடு வரவேற்று முதல் நாள் நிகழ்ந்த செய்திகளை எல்லாம் ஆர்வத்தோடு விசாரித்தான். உதயணன் தனக்கு வவிய வந்து உதவி செய்த பண்பை வாய் நிறையப் புகழ்ந்தான். தனக்குப் உதயணனின் தந்தை சதானிகனுக்கும் இருந்த நட்புணர்ச்சியின் கனிந்த நிலையைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்தான்.
“நான் திகைத்து மலைத்துக் கொண்டிருந்த நிலையில், உதயணன் இங்கு வந்து என் பகைவர்களை ஓடச் செய்தது நான் பெற்ற பெரும்பேறு ஆகும்” என்று போற்றி வியந்தான். வயந்தகன் முதல் நாள் நிகழ்ந்தவற்றைத் தருசகனுக்குக் கூறினான். தருசகன் வயந்தகனின் மூலமாக உதயணன் அப்போது இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனை அழைத்துவரத் தன் பட்டத்து யானையை அனுப்பினான். உடனே அரண்மனை உதயணனை வரவேற்பதற்கேற்றபடி அலங்கரிக்கப்பட்டது. தருசகன், உதயணனை ஏற்ற முறையில் வரவேற்றுப் போற்றி நன்றி செலுத்திக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். தருசகனின் அழைப்பைக் கேட்டதும் உதயணனும் உருமண்ணுவா முதலிய அவன் தோழரும், பிறவீரர்களும் மனமகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு உதயணனுடன் அரண்மனைக்குப் புறப்பட்டனர். இப்போது அவர்களில் ஒருவராவது மாறுவேடத்துடன் இல்லை. எல்லோரும் துணிந்து சுய உருவத்துடனேயே சென்றார்கள். உதயணன், தருசகன் மன்னன் அனுப்பியிருந்த பட்டத்து யானைமேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான்.
தன் அரண்மனை வாயிலிலேயே வீரர்களும் தோழர்களும் புடைசூழ யானைமேல் வரும் உதயணனைத் தருசகன் எதிர்கொண்டு மரியாதையாக வரவேற்றான். தருசகனுடைய அரசவையைச் சேர்ந்த சிலர், “எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை என்று, தெளிவாகச் சிந்தித்து அறியாமல் உதயணன் போன்ற வேற்றரசர்களை உள்ளே அழைத்துக் கொள்வது சரியல்ல” என்று அவனை எச்சரித்தனர். தருசகன் அவர்களுக்கு, உதயணன் உதவிப் பண்பு மிகுந்தவன் என்பதையும் அவன் நட்பின் சிறப்பையும், எடுத்துச் சொல்லிச் சமாதானம் கூறினான். யானை மேலிருந்து இறங்கிய உதயணனைக் கையோடு கைபிணைத்துத் தழுவி, உள்ளழைத்துச் சென்றான் தருசகன். நண்பர்களும் பிற வீரர்களும்கூட, மதிப்போடு அதே முறையில் வரவேற்கப் பட்டனர். தருசகன் மீண்டும் மீண்டும் உதயணனை வாய் ஓயாமல் நிறைய நிறையப் புகழ்ந்து நன்றி கூறினான். அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் தன் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். உதயணன் அப்பொழுதுதான் புதிதாக அங்கே அரண்மனைக்குள் வருபவனைப்போல நடித்தவாறே அதற்கு ஒப்புக் கொண்டான். உதயணனுக்கும் அவன் தோழர்களுக்கும் அது புது இடமா என்ன? ஏற்கெனவே அவர்கள் மாறுவேடத்தோடு வேலை பார்த்த இடம்தானே? படை வீரர்கள் மட்டுதான் அவ்விடத்திற்குப் புதியவர்களாக இருந்தார்கள். பெருமதிப்புக்குரிய விருந்தினர்களாக இப்போது தருசக வேந்தனுடைய அரண்மனையில் அவர்கள் தங்கினர்.