வெற்றி முழக்கம்/42. மித்திர பேதம்


42. மித்திர பேதம்

சோலைமலைமேல் வந்து கூடிய அந்த வீரர்களுள், முன்பு யூகியோடு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடனே உதயணன் மீள்வதற்கு உதவி செய்த வீரரும் பலர் இருந்தனர். பிரச்சோதனது மிகப்பெரிய படையை ஒரு சிலராகவே தனியே நின்று எதிர்த்த அந்த வீரர்களிடம், உருமண்ணுவா தங்களுடைய திட்டத்தைக் கூறினான். அவர்களோ, “இது படையாகவே எங்களுக்குத் தோன்றவில்லை. காக்கைக் கூட்டம்போலப் பலர்கூடி அல்லவா படையெடுத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது! முன்பு பிரச்சோதனனின் பெரும் படையையே எளிதில் வென்ற நாம், இப்போது இவர்களைத் துரத்திவிட்டு அதனால்_தருசகன் நட்பைப் பெற்றுக் கொள்வது நமக்கு மிக எளிதாக முடியக்கூடியதே.” என்று கூறி இத் திட்டத்தை வரவேற்றனர். வாணிகர்களாக மாறுவேடத்திற் சென்று, இரவோடு இரவாகக் கலவரம் செய்து அவர்களை ஓட்டி... விடலாமென்பதற்கு வீரர்கள் உறுதியாக ஒப்புக் கொண்டனர். இத் திட்டத்தை எல்லாரும் ஒப்புக்கொள்ளவே வாணிகர்களாக மாறுவேடம் செய்து கொள்வதற்குத் தகுந்த பொருள்களைச் சேகரிக்கும் கருத்துடன் மலையிலிருந்து யாவரும் கீழே இறங்கினர்.

எண்ணிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட தொகையையுடைய அவர்கள் எல்லோரும், ஒரே விதமான வாணிகர்களாகவே சென்றால் பகைவர்கள் ஐயப்பட நேரிடும் என்பதற்காக, வாணிகர்களிலும் பலபல வாணிகங்களை நடத்தும் வேறுவேறு வாணிகர்களாகச் செல்லவேண்டும் என்று எண்ணினார்கள். அதற்குப் பற்பல விதமான வாணிபப் பொருள்கள் வகை வகையாகத் தேவையாயிருந்தன. பகைவர் பாசறையை நோக்கிப் புறப்படுவதற்குமுன் விரைவாக இவற்றைக் கவனித்து ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் மலையிலிருந்து இறங்கிய அன்றிரவு, பொழுது விடிந்ததுமே அவர்கள் இந்த ஏற்பாடுகளிலே ஈடுபட்டு விட்டனர். வாசனைப் பொருள்களை வாணிகம் செய்பவர்களாகச் சிலர் பச்சைக் கருப்பூரம், அகிலம், சந்தனம் முதலியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். பழம், மிளகு, இஞ்சி, மஞ்சள், முதலிய உண் பொருள்களை விற்பவர்களாக மாறினர் வேறு சிலர். மருந்துப் பொருள்களை வாணிகம் செய்யும் மருந்து வாணிகர்களாகச் சிலரும். மகளிர்க்கு உரிய அணிகலன்களை விற்போராகச் சிலரும், மாறு வேடத்தில் தத்தம் பொருள்களோடு புறப்பட்டனர். சின்னச் சோலைமலையைச் சுற்றியிருந்த படை வீரர்கள் யாவரையும் இத்தகைய மாறுவேடங்களில் பகைவரது பாசறையை நோக்கி அனுப்பியபின், உதயணன் முதலியோர் அந்தச் சூழ்ச்சியின் முடிவான இறுதிச் செயல் ஒன்றைச் செய்வதற்குப் பின்தங்கினர்.

படை வீரர்கள் புறப்பட இருந்த நேரத்தில் இடவகனால் உதயணன் உதவிக்கென்று அனுப்பட்ட இசைச்சன், உயர்ந்த சாதிக்குதிரைகள் பலவற்றோடு அங்கே வந்து தோன்றினான். உதயணன் குதிரைகளுடன் வந்த இசைச்சனையும் தன் தோழர்களையும் தன்னுடனிருக்கும்படி கூறிவிட்டு ஏனையோரை எல்லாம் அனுப்பினான். படைவீரர்கள் சென்ற சிறிது நேரங்கழித்துச் சில முக்கியச் செய்திகளைத் தங்களுக்குள்ளே கலந்து ஆலோசித்துக் கொண்ட பின்னர், உதயணன் முதலியோர் குதிரை வாணிகர்களாக மாறுவேடங் கொள்ள லாயினர். வயந்தகனைக் குதிரை விற்பவர்களின் தலைவன் போல மாறுவேடங் கொள்ளச் செய்தனர். முதலிற்சென்ற வாணிகர் வேடத்தோடு கூடிய படைவீரர்களும் சரி, குதிரை விற்பவர்களாகப் புறப்பட்ட இவர்களும் சரி, ஆயுதங்களைப் போதுமான அளவு மறைத்து வைத்துக்கொண்டு சென்றார்கள்.

“நாங்கள் குதிரை வாணிகம் செய்பவர்கள். ஒன்பது ஆண்டுகளாக எங்களுக்கு மகத மன்னனோடு பழக்கமுண்டு. ஆனால் இப்போது மகத அரசன் முன்போல் இல்லை. எங்களுக்கும் அவனுக்கும் பெரும்பகை மூண்டிருக்கிறது. நாங்கள் அவனைக் கருவறுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக நீங்களும் படையெடுத்து வந்தீர்கள்” என்று பகைவர்கள் பாசறையை அடைந்ததும் வயந்தகன் பகைமன்னர்களை நோக்கிக் கூறினான். பகை மன்னர்கள் அவன் கூறியதை நம்பி வரவேற்றனர். சூழ்ச்சி வென்றது. தங்களைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த பகையரசர்கள், மகத நாட்டின் பகைவன் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் துணிந்து இருந்தார்கள். அந்த நிலைதான் தருசகனின் பகைவர்கள் எனக் கூறிக்கொண்டு குதிரை விற்பவர்களாகவும், வேறு பலவகை வாணிகர்களாகவும் வந்த உதயணன் முதலியோரை அவர்கள் தயங்காமல் தங்களுடன் சேர்த்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது. தனித்தனிப் பாசறைகளில் தத்தம் படைகளுடனே தங்கிக் காலத்தை எதிர்நோக்கியபடி காத்திருந்த அப்பகையரசர்கள் ஆறு பேரும், மகிழ்ச்சியோடு குதிரை விற்பவர்களையும் பிறரையும் வரவேற்று உபசரித்தனர். தங்கள் பாசறைகளிலேயே தங்கியிருப்பதற்கும் இடமளித்தனர்.

‘இராசகிரிய நகரத்தின் அமைப்பு, அந் நகரத்தை எப்படி எப்படித் தாக்கலாம்?’ என்பது போன்ற செய்திகளை யெல்லாம் குதிரை வாணிகர் தலைவனாக மாறுவேடத்திலிருந்து வயந்தகனிடம் பகையரசர்கள் தூண்டித் தூண்டி அவலோடு கேட்கத் தொடங்கினார்கள் வயந்தகன் அவற்றிற்கு விருப்பத்தோடு விடை கூறுபவன் போலப் பொய்யாக எதை எதையோ சொல்லி நடித்தான். மகதநாட்டு எல்லைப் புறத்தில், ஒரு பெரிய சமவெளியில் பல பாசறைகளை அமைத்து அங்கங்கே பிரிந்து தனித் தனியாகத் தங்கியிருந்த அந்த அரசர்கள், ஒவ்வொருவரும் மாறுவேடத்தில் வந்த வணிகர்களைத் தங்கள் தங்களோடு தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், உதயணன் முதலியோர், தாங்கள் எல்லோரும் தனியாக ஒரே பாசறையில் தங்க வேண்டும் என்றே கருதினர். சில செயல்களைத் தங்களுக்குள் சிந்தித்துக் கொள்ள அவர்களுக்கு அங்கே தனிமை அவசியமாக இருந்தது. ஆகையால் விரிசிகன் முதலிய பகையரசர்களின் வேண்டுகோளை மறுத்துத் தங்களுக்கு எனத் தனியாக ஒரு பாசறை அமைத்துக் கொடுத்தால்தான் வசதியாக இருக்கும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர்கள் தங்குவதற்கென்று அதே எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தனிப்பாசறை ஒன்று அமைத்துக் கொடுக்கப் பட்டது. தனிப்பாசறையில் தங்கிய உதயணன் முதலியோர் ‘அங்கே தங்கியிருக்கும் பகையரசர்களின் தொகை, படைகளின் வலிமை. தங்கள் சூழ்ச்சியால் அவர்களை ஓடச் செய்வதற்குப் பகல்நேரம் ஏற்றதா?’ இதே இரவு நேரம் ஏற்றதா?’ ஆகியவற்றைச் சிந்தித்து மேலே இயற்ற வேண்டிய செயல்களைப் பற்றித் தங்களுக்குள்ளே கூடி ஆராய்ந்தனர், சிந்தனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இறுதியாக, நள்ளிரவில் அன்றே தங்கள் சூழ்ச்சியை நிறைவேற்றிப் பகையரசர்கள் ஓடிப்போகுமாறு செய்து விட்டுத் தாங்களும் தங்கள் கூடவே கொணர்ந்திருக்கும் குதிரைகளில் ஏறித் தலைநகருக்கு ஓடிவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர். இன்னஇன்ன இடத்தில் இப்படி இப்படிச் சூழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதையும், நள்ளிரவில் அதை நிகழ்த்த வேண்டிய முறையைப் பற்றியும் தெளிவாகப் பேசிக்கொண்டனர். படையெடுத்து வந்திருக்கும் விரிசிகன் முதலாகிய ஆறு பகையரசர்களும் அந்த எல்லைக்குள்ளே தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த ஆறு பாசறைகளில் இருந்தனர். எனவே உதயணன் தன்னோடு வந்துள்ள மிகக் குறைவான தொகையினராகிய வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்துக்கொண்டு அந்தச் சூழ்ச்சியை நடத்த வேண்டியதாய் இருந்தது. அவ்வாறே வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்தனர். பகைவர்களின் ஒவ்வொரு பாசறைக்கு முன்பும் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். ஆகையினால் அவற்றை முற்றுகையிட்டுச் சூழ்ச்சி புரிவதற்குச் செல்லும் வீரர்கள் முன்னெச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்றும், தங்கள் சூழ்ச்சி வெற்றியடைந்தாலும் அடையாவிட்டாலும் தப்பியபின் எல்லோரும் ‘இன்ன இடத்தில் வந்து கூடிவிட வேண்டும்’ என்றும், உதயணன் முதலியோர் தம் வீரர்களுக்கு முன்னதாக அறிவுரை கூறினர்.

இரவு முதல் யாமம் முடிந்து, இரண்டாம் யாமம் தொடங்கும் நேரம். எங்கும் நள்ளிருள் செறித்து கருமை மண்டிக் கிடந்தது. குதிரை வாணிகர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தங்கியிருந்த பாசறையிலிருந்து, தனித்தனிக் கூட்டமாய் இருளின் கருமையோடு கருமையாகக் கலந்து வீரர்கள் அரசர்களின் பாசறைகளை நோக்கிப் புறப்பட்டனர். கால் அடி பெயர்த்து வைக்கும் ஒலிகூடக் கேட்காதபடி நடந்தனர் வீரர்கள். எங்கும் நிசப்தம் நிலவியது. சற்று நேரத்தில் ஒரே சமயத்தில் ஆறு பாசறைகளிலிருந்தும் கூக்குரலும் கலவரமும் எழுந்தன. குதிரை வாணிகர்கள் தங்கியிருந்த இடம் ஒன்றுதான் அந்த எல்லைக்குள்ளேயே அப்போது சூனிய அமைதியோடு விளங்கிற்று. ஆனால் அந்தக் கலவரத்திற்கு நடுவில் அதைக் கவனிக்க அங்கே யாருக்கும் பொழுதே இல்லை.

விரிசிகனுடைய பாசறைக்குள் வேலும் வாளும் தாங்கி நுழைந்த உதயணன், வீரர்கள் இருட்டில் தங்களை இன்னாரென அடையாளங் கண்டு கொள்ள முடியாமல் ‘அயோத்தி அரசன் வாழ்க!’ என்று கூறிக்கொண்டே போர் செய்தனர். அயோத்தி அரசனுடைய பாசறையைத் தாக்கச் சென்றிருந்தவர்களோ, ‘விரிசிகன் வாழ்க!’ என்று கூறியவாறே போரிட்டனர். இவ்வாறே எலிச்செவியரசனைப் புகழ்கின்ற சொற்களைக் கூறிக் கொண்டே மிலைச்ச வேந்தன் பாடி வீட்டிலும், ‘மிலைச்சன் வாழ்க!’ என்ற வாழ்த்துடன் எலிச்செவியரசன் பாடி வீட்டிலும் போர் செய்தனர். “படை யெடுத்து வந்திருக்கும் தங்களுக்குள்ளேயே உள்நாட்டுப் பகை திடீரென்று கிளம்பி இந்தக் கலவரம் உண்டாயிருக்க வேண்டும்” என்று ஆறு அரசர்களும் தனித்தனியே எண்ணி நடுங்கும் படியாக உதயணன் வீரர் இத்தகையதொரு சூழ்ச்சித் திறத்துடனே அந்தத் தாக்குதலை நடத்தினர். ஒற்றுமையோடு வந்திருக்கும் இந்த ஆறு அரசர்களும் ஒற்றுமை குலைந்து தனித்தனியே தத்தம் பாசறைகளிலிருந்து நாட்டுக்குத் திரும்பி ஒடவேண்டும் என்று கருதியே உதயணன் இந்தத் தந்திரமான வழியைத் தன் வீரர்களுக்குக் கூறியிருந்தான். இந்தச் சூழ்ச்சியினால் இருளில் பகைவர் படையைச் சேர்ந்த வீரர்கள் தங்களுக்குள்ளேயே போர் செய்துகொள்ளத் தொடங்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மடிந்து கொண்டிருந்தார்கள்

உதயணனும், அவனுடைய வீரர்களும், தோழர்களும் இந்த உள்நாட்டுக் கலவரத்தைப் பெருகி வளர வழி செய்துவிட்டுத் தம் குதிரைகளுடன் அமைதியாக வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். அயோத்தியரசன், விரிசிகன் தனக்கு வஞ்சகமிழைக்கத் திட்டமிட்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். விரிசிகனோ, அயோத்தி வேந்தன் தன்னைக் கொலை செய்யக் கருதியே நள்ளிரவில் அவன் வீரர்களைத் தன் பாசறைக்கு அனுப்பியதாக எண்ணி அவன் மேலே வன்மம்கொண்டு நெஞ்சு குமுறினான். இப்படியே ஒவ்வொரு அரசனும் தங்களுக்குள்ளேயே மற்றொருவனை எதிரியாக எண்ணி மனங்கொதித்தனர். அவர்கள் படை வீரர்களும் அதே மனக்கொதிப்போடு, பெரிய புயலினால் அலைமோதும் கடல் போலத் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் ஒவ்வொரு அரசனும் தன் தன் படைகளுடன் பாசறை முதலியவற்றைக் கிடந்தது கிடந்தபடியே போட்டுவிட்டுத் திரும்பித் தன் நாட்டை நோக்கி ஓடலானான். பொழுது விடிவதற்குள் அவர்கள் பாசறைகள் இருந்த இடம் வெறும் பாலைவனமாகி விட்டது.

முதல்நாள் இரவு சூழ்ச்சிப் போரில் மாண்டவர்களின் பிணங்களை விருந்துண்ண வந்த கழுகுகளைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. ஒன்றுபட்டு வந்திருந்த ஆறு பேரரசர்களின் உறுதியையும் ஒற்றுமையையும் வலிமையையும் ஒரே ஓர் இரவிற்குள் தன் சூழ்ச்சியால் அழித்திருந்தான் உதயணன். ஒடிய வேந்தர்கள் யாவரும் தற்செயலாக ஒரு மலையடிவாரத்தில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. தாங்கள் யாவரும் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை அப்போது அவர்கள் புரிந்து கொண்டனர்.