வெற்றி முழக்கம்/54. சேனாபதி பதவி
சேனாபதி மகனுடன் ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கெளசிகன் முதலிய நால்வரும் வருடகாரனைச் சந்திப்பதற்காக அவன் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். வருடகாரன் அவர்களை அன்போடு வரவேற்று இருக்கச் செய்துவிட்டுத் தன்னோடு மகத நாட்டிலிருந்து வந்த தாரகாரி என்பவனை மறைவாக வரவழைத்து அவன் மூலமாக, ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கெளசிகன் முதலியோர் தன்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை, உடனே உதயணனுக்குத் தெரிவித்து விட்டான். ‘ஆருணிக்குப் பக்கபலமாக இருக்கும் முக்கியமான ஆட்களை அகப்பட்ட வரை தொலைத்துவிட வேண்டும்’ என்று உதயணனும் வருடகாரனும் முன்பே தங்களுக்குள் ஒர் இரகசியத் தீர்மானம் செய்து கொண்டிருந்தனர். அதற்காகவே வருடகாரன் தன்னிடம் வந்திருப்பவர்களைப் பற்றி உதயணனுக்குத் தாரகாரி மூலம் அவ்வளவு அவசரமாகச் சொல்லி அனுப்பினான்.
தாரகாரி வந்து சொல்லிய செய்தியைக் கேட்டதும் உதயணன், பிங்கலன் முதலிய வீரர்களைத் திரட்டி வருடகாரனின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். தண்ணீரில் ஒளியோடு துள்ளும் கெண்டை மீனைச் சமயம் பார்த்துக் கொத்தும் மீன் கொத்தியைப்போல உதயணனால் அனுப்பப்பட்ட வீரர்கள், வருடகாரனின் துணையைக் கொண்டு பரம இரகசியமாகச் சகுனி கெளசிகன் முதலியோர்களைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனர். சிறைப் பிடிக்கப்பட்டு வந்துள்ள அவர்களை இடவகனுடைய பொறுப்பின்கீழ் ஒப்பித்தான் உதயணன். சிறைப்பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே இடவகனிடம் உதயணன் தனியே கூறியிருந்தான். தீமூட்டி அதனிடையே அவர்களை மாண்டுபோகச் செய்ய வேண்டும் என்பது ஏற்பாடு. இடவகன் அதற்கான செயல்களைச் செய்து சிறைப்பட்டவர்களை அழிக்க முற்பட்டான். அப்போது மாலை நேரம். அகப்பட்டுக் கொண்ட பகைவர்களுக்கோ, அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் அந்தி நேரம்.
இடவகன் தன் செயலை நிறைவேற்றப் போகின்ற தருணத்தில் உதயணன் அங்கே வந்தான். சகுனி கெளசிகன் முதலியவர்கள் மூலமாக, வருடகாரன் தனக்குப் பகைவன் தான் என்பதை மேலும் அழுத்தமாக ஆருணியை நம்பச் செய்வதற்காக, ஒரு சிறு சூழ்ச்சியை நடித்துக் காட்டும் கருத்துடனேயே அவன் அங்கு வந்திருந்தான். “இடவக! உட்பகை எவ்வளவு பொல்லாதது பார்த்தாயா? நம்முடைய நெருங்கிய நண்பன்போல நேற்றுவரை உறவு கொண்டிருந்த வருடகாரன், திடுமென்று ஆருணியின் பக்கம் போய்ச் சேர்ந்து கொண்டானே! எவ்வளவு பயங்கரமானது அவன் வஞ்சகம்?” என்று சகுனி கெளசிகன் முதலியவர்களும் கேட்கும் படியாகவே இடவகனிடம் உதயணன் கூறினான். இடவகன் வைத்த தீயிலிருந்து ஆருணியைச் சேர்ந்த எல்லோரும் மீள முடியாவிட்டாலும், இரண்டொருவர் எப்படியோ தப்பிச் சென்றுவிட்டனர். இது நடந்த மறுநாள் காலையிலேயே, தன் படைகளைச் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்கு மிக அருகிலே இருந்த ஒரு மலைத் தொடரின் அடிவாரத்திற்குக் கூட்டிச்சென்று, அங்கே பாசறையாகத் தங்கி இருந்து கொண்டான் உதயணன். தான் அவ்வாறு மலையடிவாரத்தை அரணாகக் கொண்டு தங்கியிருக்கும் செய்தியை ஆருணிக்கும் அவனைச் சேர்ந்தவர்கள் மூலமாகவே தெரியச் செய்தான். உதயணன் இவ்வாறு செய்த செயல்கள் எல்லாம், ஒவ்வொரு பயன் நிறைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்தன.
‘வருடகாரனைத் தேடிவந்த அமைச்சர்களைத் தான் வலிய சிறைப்படுத்திவந்து கொன்றதனால் தனக்கும் வருடகாரனுக்கும் பகை என்பதை ஆருணி உறுதியாக நம்புவான். இந்த நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டதும் உடனே வருடகாரனிடம் அபிமானம் பெருகும். அபிமானத்தினால் அவனிடம் பெரும் பதவி ஒன்றை நிர்வகிக்கும்படி ஒப்பிப்பான். வருடகாரனுக்கு அத்தகைய, பெரும் பதவி கிடைப்பது நாம் ஆருணியின் வெல்வதற்குரிய முதல் அறிகுறியாகும். ஆருணியின் கோட்டைக்கு மிகவும் பக்கத்தில் இருந்து கொண்டே அவனோடு போரிட்டு அவனை வெல்வது அருமை. எனவே அவனுக்கு ஒரு போக்குக் காட்டுவதுபோல மலைப்புறமாகச் சென்று தங்குவோம். வருடகாரன் தன்னுடைய தந்திரச் செயல்களால் ஆருணியைப் படைகளோடு நாம் தங்கியிருக்கும் மலைப்புறமாக அழைத்து வருவான். அடர்த்தியான மலைப்பகுதியில் ஆருணியின் படைகளைச் சிதறிவிடச் செய்து வென்றுவிடலாம் என்று இவ்வாறெல்லாம் தனக்குள் பன்முறை எண்ணிப் பலாபலன்களை ஆராய்ந்து பார்த்தபின்பே உதயணன் இவ்வளவையும் செய்திருந்தான். உதயணன் எண்ணியது வீண்போகவில்லை.
தீயில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிச் சென்றவர்கள் ஆருணியை அடைந்து, தங்களுக்கு உதயணனிடம் நிகழ்ந்த யாவற்றையும் கூறினர். உதயணன் வருடகாரனின்மேல் அளவற்ற குரோதங்கொண்டிருப்பதையும், தன் படைத் தளத்தை மலைப்புறமாக மாற்றிக்கொண்டு போய்விட்டதையும் அவர்கள் மூலமாக ஆருணி அறிந்தான். இந்த மட்டிலும், போன அமைச்சர்களில் இவர்களாவது தீயில் சாகாமல் பிழைத்து வந்தார்களே என்று அவனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம். ‘எப்படித் தப்பினர்’ என வியப்பு ஒருபுறம்! ‘தன்னுடைய காதில் அந்தச் செய்திகளை வந்து கூறவேண்டும் என்பதற்காவே, அவர்களை வேண்டுமென்றே உயிரோடு தப்பவிட்டு அனுப்பியிருக்கிறான் உதயணன்’ என்பது அவனுக்கு எப்படித் தெரியமுடியும்? இந்த நிலையில், போனவர்களை உதணயன் சிறை செய்து தீயிட்டதற்காகத்தான் மிகவும் வருந்துபவன்போல ஆருணியின் ஆறுதலைப் பெறுவதற்காக நடித்தான் வருடகாரன். ‘உண்மையாகவே உதயணனைப் பகைத்துக் கொண்டு வருடகாரன் தங்கள் பக்கம் சேர்ந்திருக்கிறான்’ என்று வந்தவர்கள் மூலமாகவும் அறிந்தபோது, ஆருணிக்கு அவன்மேல் உண்மையா பற்றும் விருப்பமும் ஏற்பட்டன. தன் படைகளோடும் அரசவையைச் சேர்ந்த அமைச்சர்கள், தளபதிகளுடனும் வருடகாரனைச் சந்திப்பதற்காக, அவன் இருப்பிடத்திற்கு ஆருணியே தேடிக் கொண்டு நேரிற் சென்றான்.
ஆருணியை வருடகாரன் வணங்கி, மதிப்போடு வரவேற்றான். வருடகாரன் கண்ணிர் சிந்தியவாறே, உதயணனால் சகுனி கெளசிகன் முதலியவர்கள் தீயிலே கொல்லப்பட்ட செயலுக்காகத் தன் வருத்தத்தை ஆருணியிடம் தெரிவித்துக்கொண்டான். “இந்த அடாத செயலுக்காகவாவது நாம் உடனே உதயணனைப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவன் இப்போது மலைப்பக்கத்தை அரணாகக் கொண்டு அங்கே படைகளோடு தங்கியிருக்கின்றானாம். உடனே நாம் படையோடு அங்கே சென்று அவனைச் சின்னா பின்னப்படுத்த வேண்டும்!” என்று போலி ஆவேசத்தோடும் ஆத்திரத்தோடும் வருடகாரன் கூறியபோது, ஆருணி அதை மெய்யென்றே நம்பி, உடனே அப்போதே படையோடு புறப்படச் சம்மதித்து விட்டான். அதோடு பதினாறாயிரம் வீரர்கள் அடங்கிய தன் பெரிய படையை நடத்திச் செல்லும் சேனாபதிப் பதவியை, அப்போதே உடனடியாக வருடகாரன் பொறுப்பில் அவனைப் பூரணமாக நம்பி அளித்தான் ஆருணி, படைகள் உதயணன் தங்கியிருக்கும் மலையடிவாரத்தை அடைவதற்குள், இடையே ஒரு பெரிய காட்டாற்று வெள்ளத்தையும் கடக்க வேண்டியிருந்தது. அதற்கு வேண்டிய படகுகளையும் உடனே ஏற்பாடு செய்தனர். வருடகாரன் தன் பொறுப்பையும் சேனாபதிப் பதவியின் பெரிய கடமையையும் உணர்ந்துகொண்டு நடிப்பவனைப் போன்று படைகளை முறைப்படுத்தி, மறுகரைக்குப் படகுகளில் ஏற்றி அனுப்பினான். படைகள் யாவும் மறுகரையை அடைத்ததும் வருடகாரன் ஆருணியை அணுகி வணக்கத்தோடு. “இனி மேல் என்ன செய்யலாம் அரசே!” என்று விநயமாகக் கேட்டான். ஆருணி அவனுக்கு மிகுந்த சிறப்புக்களை அளித்துத் தன் பக்கலில் அன்போடு அமர்த்திக் கொண்டான். தன் சூழ்ச்சிக் கருத்தை முடிப்பதற்கு ஏற்ற பதவியே தனக்குக் கிடைத்திருக்கிறது என்ற திருப்தியோடு சேனாபதியாக நடித்தான் வருடகாரன்.