வெற்றி முழக்கம்/55. படைச்செலவு
வருடகாரனின் தலைமையில் ஆருணியரசனின் படைகள், படகுகள் மூலமாக வெள்ளத்தைக் கடந்து மறுகரையிற் சேர்ந்தபின்பு, சென்ற இடம் வஞ்சகாந்தை, காந்தவதி என்னும் இரண்டு நதிகள் ஒன்றுகூடும் சங்கமமுகம். இரண்டு நதிகளும் சங்கமமாகும் அந்த இடத்திற்கு அப்பால் அடர்ந்த பெருங்காடு பரந்து இருந்தது. அந்தக் காட்டில் ஆருணிக்கு வேண்டிய வேடர்கள் பலர் இருந்தனர். ஆற்றுக்கு மறுகரையில் வருடகாரனும் ஆருணியும் அமர்ந்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டு வேடர்கள் யாவரும் தங்கள் தங்கள் தலைவர்களின் கீழ் அணிவகுத்து வந்த ஆருணியின் படைகளோடு ஒன்று சேர்ந்து கொண்டனர். படையின் வன்மை வேடர்களால் பெருகுவது கண்டு ஆருணி மகிழ்ந்தான், ‘தங்கள் சூழ்ச்சி தரைமட்டமாகி விடுமோ?’ என்று வருடகாரன் உள்ளுறத் தயங்கினான். இவர்கள் இவ்வாறு படையுடனே தங்கியிருந்த வஞ்சகாந்தை-கந்தவதி நதிகளின் சங்கமத்துக்கு அப்பால் சிறிது தொலைவிலே, தவதிசயந்தம் என்னும் மலைத் தொடர் இருந்தது. இந்த மலைத் தொடரின் அடிவாரத்தை அரணாகக் கொண்டே உதயணனின் படை தங்கியிருந்தது. ஆருணியின் பக்கம் படை மிகுதியாகி வருவது கண்ட வருடகாரன், ‘எவ்வாறேனும் சூழ்ச்சி புரிந்து இந்தப் படைகள் ஒன்றாகச் சென்று தாக்காமல் தனித்தனியே இவற்றை உடைத்துவிட வேண்டும்’ என்று தன் மனத்திற்குள் கருதினான்.
“பாஞ்சாலர் வேந்தே மாரிக் காலத்தில் மேலும் மேலும் மழை பொழிந்து கொண்டிருக்கும்போது நீரைப் போக விடாமல் ஒரே குளத்தில் நிரப்பினால் குளம் தானே உடைந்து போகும். கேவலம் மிகக் குறைந்த படைகளோடு மலையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசனை எதிர்க்க, இவ்வளவு படைகளையும் ஒன்றாக ஒரே திசையில் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. உதயணனுக்கு உதவியாக, அறிவில்லாத மலைவாழ் வேட்டுவர்கள் எவரேனும் அங்கே சேர்ந்தாலும் சேர்ந்திருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களையும் எதிர்க்க வேண்டும். ஆகையால் படைகளைப் பல பிரிவாகப் பிரித்து, மலைத் தொடரின் பல திசைகளிலும் போக்க வேண்டும்” என்று ஆருணியை நோக்கிக் கூறினான் வருடகாரன். வருடகாரன் கூறியபடியே செய்வதற்கு ஆருணி சம்மதித்துவிட்டான். வருடகாரனின்மேல் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை! ‘வருடகாரன் தன்னிடம் சொல்லுவன யாவும் தனக்கு நன்மையே தரும்’ என்று உறுதியாக நம்பினான் அவன்.
ஆருணியின் உடன்பாட்டைப் பெற்றவுடனே வருடகாரன் படைகளைப் பல கூறுகளாகப் பிரித்தான். அவ்வாறு பிரித்த உடனே தன் ஆள் ஒருவன் மூலமாக, ‘எந்தெந்தப் படை எப்படி வருகிறது? அதை எவ்வாறு நிர்மூலமாக்கி விடலாம்’ என்பதை உதயணனுக்கும் தானே முன்னறிவிப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டான். தவதிசயந்த மலையில் போரை எதிர்நோக்கிப் படையோடு வந்து தங்கிக் காத்திருக்கும் உதயணனுக்குக் கந்தவதி நதியின் சங்கம முகத்திலிருந்து வருடகாரன் அனுப்பிய செய்தி விரைவிற் கிடைத்தது. அதையறிந்த உதயணன் தன் படைகளை அதற்கு ஏற்றபடி அணி வகுத்துத் தனித்தனியே மலை இடுக்குகளிலே நிறுத்தி வைத்தான். மகத நாட்டிலிருந்து வருடகாரனைப் போலவே தருசகனால் தன்னுடன் அனுப்பப்பட்டிருந்த தருமதத்தன் என்னும் திறமை வாய்ந்த தளபதியை மலைத்தொடரின் நுழைவாயிலிலே படைகளோடு மறைவாக இருக்கும்படி செய்தான். அங்கங்கே மறைவான புதர்களிலே பகைவர்களை அவர்கள் கண்ணுக்குத் தெரியாமலே சூறையாடுவதற்காகப் பல வாட்படை வீரர்களைத் தொகையாக மறைந்து இருக்கச் செய்தான்.
வருடகாரன் என்ற பாகனால் தந்திரமாகத் துரத்திக் கொண்டு வரப்படுகின்ற ஆருணி என்னும் மதயானையைப் பிடிப்பதற்குரிய இவ்வளவு ஏற்பாடுகளையும் உதயணன் முன்னேற்பாட்டுடனும் கவனத்துடனும் செய்து வைத்துக் கொண்டான். இங்கே இவ்வாறிருக்க நதிக்கரையில் வருடகாரனின் விருப்பப்படி படைகளைத் தனித்தனிக் குழுவாகப் பிரிக்கச் சம்மதித்த ஆருணி, மகிழ்ச்சியோடு அவன் கூறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒப்புதல் கொடுத்துக் கொண்டிருந்தான். ‘கெடுமதி கண்ணுக்குத் தெரியாது’ என்ற நிலையில் இருந்தான் அவன். படைகள் புறப்படுவதற்கு முன்னால் பல தீய நிமித்தங்கள் உண்டாயின. ஆருணியின் படையைச் சேர்ந்த மந்தரம் என்ற யானைக்கு மதம் பிடித்து அது தறிகெட்டு ஓடியது. படையினரைச் சேர்ந்த சில முரசங்கள், சில முறை அடித்ததுமே தோல் கிழிந்து கெட்டுப் போயின. கொடிகள் அடிக்கடி நிலை சாய்ந்து மண்ணில் வீழ்ந்தன. ஓர் அரசன் தன் படைகளோடு போருக்குப் புறப்படும் நேரத்தில் யானை தறிகெட்டு ஓடுவதும், வெற்றியை முழக்க வேண்டிய மங்கலமான முரசங்கள் தோல் கிழிவதும், கம்பீரமாக வீசிப் பறக்க வேண்டிய கொடிகள் கால் இற்றுத் தரையிலே சாய்வதும், எவ்வளவு அமங்கலமான நிகழ்ச்சிகள்? ஆனாலும் ஆருணி இவற்றைப் போருட்படுத்தவும் இல்லை; இவற்றைக் கவனித்து மனத்தில் தவறாகக் கருதவும் இல்லை.
வருடகாரன் வகிர்ந்த கோட்டைச் சிறிதும் மீறாமல், அவன் சொன்னபடி இயங்கும் பொம்மையாக அல்லவா இப்போது ஆருணி இருக்கிறான்? ஆனால் ஆருணியின் அமைச்சனாகிய பூரண குண்டலன் என்பவன், இந்தத் தீய சகுனங்களை எல்லாம் கண்டு மனம் நடுங்கி, “அரசே! இப்போது படையோடு புறப்படுவது நமக்கு நல்ல பயனைத் தரும் என்று தோன்றவில்லை. அமங்கலமான தீய நிமித்தங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன” என்று அறிவுரை கூறிப் பார்த்தான். “இப்படியே நகரத்துக்குத் திரும்பிச் சென்று விட்டுப் படையெடுப்பை ஒத்திப் போடலாம்” என்றும் அந்த அமைச்சனே மேலும் கூறினான். அதைக் கேட்டு ஆருணியும் கொஞ்சம் மனம் தளர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். வருடகாரனுக்கு உடனே ஒரு தந்திரமான எண்ணம் உண்டாயிற்று. அதனால் ஆருணியைப் படையெடுப்புக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும் என்று அவன் எண்ணினான்.
ஆருணி படையெடுப்பைச் சட்டென்று நிறுத்தி விட்டால் அதுவரை உதயணனும் தானும் செய்திருந்த சூழ்ச்சிகளெல்லாம் வீணாகி விடுமோ என்ற பயம் வருடகாரனுக்கு. எனவே, “அரசே! இந்தத் தீய நிமித்தங்களைக் கண்டு தங்கள் அமைச்சர் பூரணகுண்டலர் தவறாகப் புரிந்து கொண்டு பயப்படுகிறார். இவை நமது பகையாளிகளின் அழிவைக் குறிக்குமே அன்றி, நாம் கனவிலும் இவற்றால் நமக்கு அழிவு நேருமென அஞ்ச வேண்டியதில்லை! இந்தத் தீய சகுனங்கள் உதயணனின் அழிவையே கூறுகின்றன” என்று வருடகாரன் கூறினான். உடனே ஆருணி, “ஆம்! வருடகாரரே! நீர் கூறிய படிதான் இருக்க வேண்டும். அதுதான் சரி. நாம் இதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டியதே இல்லை. நம்படை தாமதமின்றிப் புறப்படட்டும்” என்று வருடகாரனுக்கு ஒப்பாகப் பேசினான். உடனே பூரணகுண்டலன் மேலே பேசத் தோன்றாமல் வாய் ஒடுங்கிப் போனான். வருடகாரன் படைகளோடு புறப்பட்டான். ஆருணியும் தவதிசயந்த மலையில் தன் வாழ்வின் விதியை நிர்ணயித்துக் கொள்ளுவதற்கோ என்னவோ, நம்பிக்கையோடு விரைந்து படையோடு சென்றான்.