வெற்றி முழக்கம்/70. தூதுவர் வரவும் வேதனை அழிதலும்
தத்தையிடம் பதுமாபதி மானனீகையைத் துன்புறுத்தலாகாதென்று வேண்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், அங்கே உதயணன் முன்னிலையில் அப்போதுதான் வந்திருந்த கோசல நாட்டு அரசனுடைய தூதுவர்களை அழைத்து வந்து நிறுத்தினார்கள் அரண்மனைக் காவலர்கள். உதயணன் அவர்களை அன்புடனே வரவேற்று அமரச் செய்து, அவர்கள் வந்த காரியத்தை வினாவினான். தங்கள் அரசனாகிய பிரச்சோதனன், உதயணனுக்கு ஒரு திருமுகமும் தனியாக வாசவதத்தைக்கு ஒரு திருமுகமும் கொடுத்தனுப்பியதாகக் கூறி, வாசவதத்தைக்கு அனுப்பிய திருமுகம், உதயணனுக்கு அனுப்பிய திருமுகம் இரண்டையுமே எடுத்து அவனிடம் கொடுத்தார்கள், அந்தத் தூதுவர்கள். திருமுகங்களை வாங்கிக் கொண்டதும் மின்னல் வேகத்தில் உதயணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘இந்தச் சமயத்தில் கோசலத்தரசனுடைய இத்திருமுகத்தை அங்கே வாசவதத்தைக்குக் கொடுத்து அனுப்பினால், அவள் கவனத்தை மானனீகையின் மேலிருந்து திருப்பிவிடலாம்’ என்றெண்ணி ஒரு குற்றேவல் மகளை அழைத்து அதை உடனே தத்தையிடம் சேர்க்குமாறு கொடுத்தனுப்பினான்.
திருமுகத்தை வாசவதத்தையிடம் சேர்த்துவிடுவதற்காகப் பெற்றுக் கொண்டு சென்ற பணிப்பெண் தத்தையும் பதுமையும் தனியே நின்று உரையாடிக் கொண்டிருந்தபோது அதைக் கொண்டு வந்து தத்தையை வணங்கி அவளுடைய கையிற் கொடுத்தாள். தத்தை அருகிலிருந்த பதுமையிடம் அந்தத் திருமுகத்தைக் கொடுத்து அதை உடனே தனக்கு வாசித்துச் சொல்லும்படி வேண்டிக் கொண்டாள். பதுமை திருமுகச் சுருளைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினாள். ‘கோசலத்தரசன் ஓலையை வாசவதத்தை காண்பாளாக: உன்னுடைய தங்கை (கோசலத்தரசன் ஒரு வகையால் வாசவதத்தைக்குச் சிறிய தந்தை முறையுடையவனாக வேண்டும்) வாசவதத்தை (மானணிகையின் இயற் பெயர்) பாஞ்சால நாட்டரசன் ஆருணி என் நகரத்தைக் கைப்பற்றியபோது இங்கிருந்த மற்ற உரிமை மகளிரோடு அவனாற் பிடித்துக் கொண்டு போகப்பட்டாள். மகளைப் பிரிந்த துயரத்தால் நானும் என் தேவியும் துன்பத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டோம். ஆருணியிடமிருந்து உதயணன் கோசாம்பி நகரத்தை வென்றபோது, ஆருணியின் அந்தப்புரத்து மகளிர் யாவரும் அவனிடம் அகப்பட்டனராம். அப்படி அகப்பட்ட உரிமை மகளிரை உதயணன் உனக்கும் பதுமைக்குமாகப் பிரித்து வழங்கியிருக்கிறானாம். அந்தப் பெண்களுள் மானனீகை என்னும் மறுபெயர் பூண்டு, ‘தான் கோசலத்தரசனின் கோப்பெருந்தேவி வசுந்தரியிடம் வண்ணமகளாக இருந்ததாகவும் அப்போது ஆருணியாற் சிறைப் பிடிக்கப் பட்டதாகவும்’ கேட்பவர்களிடம் எல்லாம் பொய் வரலாறு கூறிக்கொண்டு, என் மகளும் உன் தங்கைமுறை உடையவளுமான வாசவதத்தை அங்கேயே இருந்து வருகின்றாள் - என்று அறிந்துகொண்டேன். இது உண்மைதானா? மானனீகை என்னும் பெயரோடு அங்கிருக்கும் அந்தப் பெண் என் அருமை மகள் வாசவதத்தை தானா என்பதை அறிந்து கொள்வதற்கு நானே விரைவில் அங்கே, கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டு வரலாம் என்று எண்ணி இருக்கின்றேன். அதுவரை அந்தப் பெண்ணைக் கண்காணித்து அவளுக்கு ஒரு குறையும் நேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு ஆகும்” என்று இவ்வாறு அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்ததைப் படித்தாள் பதுமை.
“எதற்கும் நீயே ஒருமுறை தெளிவாகப் படித்துவிடுவது தான் நல்லது! எனக்கு இதில் ஒன்றுமே விளங்கவில்லை" என்று கூறிக்கொண்டே திருமுகத்தை வாசவதத்தையிடம் நீட்டினாள் பதுமை. வாசவதத்தை ஓலை முழுவதையும் தானே மீண்டும் ஒருமுறை படித்தாள். அவள் முகம் வியப்பால் மலர்ந்தது. சிறு வயதில் தன் சிறிய தந்தையாகிய கோசலத்தரசன் வீட்டில் தான் பார்த்திருக்கும் தன் தங்கை வாசவதத்தையின் இளம்பருவத் தோற்றம் அவள் மனக் கண்களுக்கு முன் தோன்றியது. எதிரே கட்டி வைக்கப்பட்டிருந்த மானனீகையை நன்றாக ஊடுருவி நோக்கினாள் அவள். சந்தேகமே இல்லை! அவள் கோசலத்தரசன் மகளும், தனக்குத் தங்கை முறையுடையவளுமாகிய வாசவதத்தையாகவே இருக்க வேண்டும்! தத்தையின் மனம் அதுவரை மானனீகையிடம் குரூரமான முறையில் நடந்து கொண்டதற்காகத் தன்னையே கடிந்து கொண்டது.
‘அறியாமல் எவ்வளவு பெரிய துரோகத்தை நம்முடைய தங்கைக்கே நாம் செய்துவிடக் கருதியிருந்தோம்’ என்று நினைக்கும்போதே அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவள் உடனே தானே பாய்ந்தோடிச் சென்று மானனீகையைக் கட்டியிருந்த தூணிலிருந்து அவிழ்த்து விட்டாள். விழிகள் நீர் பெருக்க உள்ளத்தில் இயல்பாக ஊறிய பாசத்துடனே அவளைத் தழுவிக் கொண்டாள். சுற்றியிருந்தவர்களால் தத்தையின் இந்த மாறுதலுக்குக் காரணம் கண்டுகொள்ள முடியவில்லை. தத்தை திருமுகத்தைக் காட்டி உண்மையை விளக்குவதற்கு முன்னால், மானனீகைக்கே அவள் தன்னை அன்போடு தழுவிக் கொண்டதன் காரணம் புரியவில்லை. “மானனீகை! நான் உன்னை இவ்வளவு துன்புறுத்திய பின்பும், நீதான் கோசலத்தரசன் மகள் வாசவதத்தை என்பதனை என்னிடம் கூறாமலே இருந்து விட்டாயே? உனக்குத்தான் எவ்வளவு அடக்கமும் பொறுமையும் இருக்கிறதடி! நான் அறியாமற் செய்துவிட்ட துன்பங்களை மனத்தில் வைத்துக்கொண்டு வருந்தாதே. இந்தக் கணமே அவற்றை மறந்துவிடு” என்று தழுவிக் கொண்டிருந்தவாறே அவளிடம் கூறினாள் வாசவதத்தை. கூடியிருந்த தோழிப் பெண்களையும் பிறரையும் உடனே அங்கிருந்து விலகிச் செல்லுமாறு தத்தை பணித்தாள். யாவரும் விலகிச் சென்றனர்.
மாறுவேடத்தில் பித்தனாக இருந்த யூகியும் கத்தரிகையைப் பயன்படுத்துவதற்காக நின்று கொண்டிருந்த வயந்தகனும்கூட அங்கிருந்து சென்றுவிட்டனர். கூட்டம் கலைந்த பின்பு வாசவதத்தை, மானனீகையை அன்போடு கைப்பற்றி அழைத்துக்கொண்டு தனது அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். போகும்போதே, தன் தந்தை தத்தைக்குத் தூதுவர்கள் மூலம் திருமுகம் அனுப்பியிருப்பதும் வாசவதத்தை தனக்குத் தவ்வை (அக்காள்) முறை ஆக வேண்டும் என்பதையும் அவளிடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொண்டாள் மானனீகை. “நான் உனக்கு அலங்காரம் செய்கிறேன் என்ற பேரில் உன் முகத்தில் யவன மொழியில் அவருக்குக் காதல் கடிதம் எழுதியதும் நீ அறியாமல் அவரோடு காதல் ஒழுக்கம் மேற்கொண்டு ஒழுகியதுமாகிய செயல்களை நீ மன்னித்து விட வேண்டும்” என்று உள்ளமுருகக் குழைந்து வாசவதத்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மானனீகை. “அவற்றை எல்லாம் மீண்டும் நினைந்து மனம் கலங்க வேண்டாம்” என்று அவளுக்குக் கனிந்த மொழியால் ஆறுதல் கூறினாள் தத்தை. மானனீகையைத் தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று வாசவதத்தை தன் கைகளாலேயே அவள் கூந்தலுக்கு எண்ணெய் பூசி நீராட்டினாள். பதுமையும் அப்போது மானனீகையை உபசரிப்பதில் தத்தைக்கு உதவியாக இருந்தாள். நீராட்டு முடிந்ததும் இருவரும் அவளை நன்றாக அலங்கரிக்கத் தொடங்கினார்கள். அலங்காரம் முடிந்தபின் மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.
இங்கு இவர்கள் இவ்வாறிருக்க வயந்தகனிடமிருந்து நடந்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டு அறிந்து கொண்டான் உதயணன், மானனீகை யார் என்பதையும் மற்ற விவரங்களையும் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் அவன் உள்ளம் களித்தது. ‘மானனீகை கோசலத்தரசனுக்கு மகள்! வாசவதத்தை என்பதே அவளுடைய மெய்யான பெயர்! தன் கோப்பெருந்தேவி தத்தைக்கு அவள் தங்கை முறையினள்’ என்றெல்லாம் வெளியான செய்திகளால் மானனீகைக்கும் தனக்கும் இடையேயுள்ள அன்புத் தொடர்பு அறுவதற்கில்லை என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. அந்த உறுதியைத் தான் அடைவதற்குக் காரணமான செய்திகளை வந்து கூறிய வயந்தகனைப் பாராட்டித் தழுவிக் கொண்டான் உதயணன். எல்லா நற்செய்திகளையும் தம் அரசனிடம் சென்று கூறித் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளோடே வருவதாகத் தத்தையிடமும் உதயணனிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றனர் கோசல நாட்டு மன்னனிடமிருந்து வந்திருந்த தூதுவர்கள். வாசவதத்தையும் பதுமையுமே முன் நின்று, மானனீகைக்கும் உதயணனுக்கும் திருமணம் நிகழ மகிழ்ச்சியோடும் முழுஅளவு மனத் திருப்தியோடும் ஏற்பாடு செய்தனர். ‘கோசலத்து வேந்தன் மகளை உதயணன் திருமணம் புரிந்துகொள்ளப் போகின்றான்’ என்ற மங்கலச் செய்தி எங்கும் பரவியது. குறுநில மன்னரும் பெருநில மன்னரும் திருமண அழைப்பு ஓலை பெற்றனர்.
தன் மகள் கோசாம்பியில் வாசவதத்தையின் பாதுகாப்பில் நலமாக இருக்கின்றாள் என்பதையும், உதயணனும் அவளும் காதல் மேற்கொண்டு ஒழுகுகின்றனர் என்பதையும் தூதுவர்கள் வந்துகூறக் கேட்ட கோசல மன்னன் பேருவகை உற்றான். திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைப்பதற்காக உடனே தன் பரிவாரங்களுடனும் திருமணத்திற்கு வேண்டிய பெரும் பொருள்களுடனும் கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன். உதயணனைப் போன்ற ஓர் பேரரசன் தன் மகளுக்குக் கொழுநனாக வாய்த்ததனால் அவன் மனம் மட்டிலாக் களிப்பில் ஆழ்ந்திருந்தது. மானனீகையின் தாயும் கோசலராசன் தேவியுமாகிய வசுந்தரியும் அதே அளவு மகிழ்ச்சியோடு கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள். ஒரு மங்கல நாளில் கோசாம்பி நகரத்து அரண்மனையில் உதயணன் மானனீகை திருமணம் சிறப்புற நடந்தேறியது. பதுமையும், வாசவதத்தையும் தாமே மானனீகைக்கு வதுவைக்கோலம் புனைந்தனர். யூகி, வயந்தகன், கோசலமன்னன் யாவரும் வாழ்த்திப் புகழ நிகழ்ந்து முடிந்தது அந்தத் திருமணம். உதயணன், மானனீகை இருவர் மனோரதமும் தடையின்றி நிறைவேறியது. உதயணனின் மூன்றாவது மண வாழ்வு தொடங்கியது.