வெற்றி முழக்கம்/71. மந்தர முனிவர் வந்தார்
மானனீகை, உதயணன் திருமணத்திற்குப் பின்பு கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்க்கை அமைதியும் இன்பமும் மிகுந்ததாகச் சென்று கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க முன்பு உதயணனால் மாலை தொடுத்துச் சூட்டப்பெற்ற, இலாவண மலைச்சாரலின் தவப் பள்ளியைச் சேர்ந்த விரிசிகை என்னும் பெண்ணின் நிலைபற்றி அறிய வேண்டாமா? வாசவதத்தை முதலியவர்களுடன் உதயணன் இலாவான மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கியிருந்தபோது அங்குள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் விரிசிகையைச் சந்தித்து அவளுக்கு அழகிய மாலை, கண்ணி முதலியவைகளைத் தொடுத்துச் சூட்டினான். அப்போது அங்கே வந்த தத்தை, உதயணன் மேற் கோபம் கொண்டு ஊடினாள். உதயணன் தன்னை மடியில் இருந்திக் கொண்டு மாலை சூட்டிய நிகழ்ச்சியை அவன் அங்கிருந்து சென்ற பின்பும் விரிசிகையால் மறக்க முடியவில்லை. அந்த நினைவும் இன்ப உணர்ச்சியும் அவள் உள்ளத்தில் என்றென்றும் அழியாத ஓவியங்களாக நிலைத்துவிட்டன. அன்று உதயணன் இலாவான மலைச்சாரலில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றபோது தன்னிலிருந்து உயிரோடு தொடர்புடைய இன்றியமையாத பொருள் ஒன்றை அந்த ஆணழகன் பறித்துக்கொண்டு போவது போன்ற ஓர் உணர்ச்சி விரிசிகைக்கு ஏற்பட்டது. அந்த மெல்லிய உணர்வின் காரணமோ, உள்ளர்த்தமோ விரிசிகைக்கு அப்போது தெளிவாகப் புலப்படவில்லை. நாளாக ஆக அவ்வுணர்வு அவளுக்கு அர்த்தமாயிற்று! உதயணனுக்குத் தன் உள்ளம் தானாகவே காணிக்கையாகியிருப்பதை அவள் உணர்ந்தாள். அவனின்றித் தனக்குத் தனியே வாழ்வில்லை என்பதையும் அறிந்தாள். விரிசிகையின் நிலையில் ஏற்பட்ட இந்த மாறுதலை அவளுடைய தந்தையாகிய மந்தரமுனிவர் அறிந்தார். காரணம் புரியாதவர் போலத் தம் மகளைத் தாமே அதைப் பற்றிக் குறிப்பாக விசாரித்தார். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண் எதையும் ஒளிக்காமல் நடந்தது எல்லாவற்றையும் தந்தையிடத்தில் கூறி விட்டாள். அவள் கூறிய அடையாளங்களில் இருந்தும், அந்தச் சமயத்தில் இலாவாண மலைச்சாரலுக்கு வந்து சென்ற அரசர் உதயணனைத் தவிர வேறு எவரும் இல்லை என்று அறிந்ததாலும். ‘தம் மகளின் மனத்தைக் கவர்ந்துகொண்டு சென்றவன் உதயணனே’ என்று அவர் உய்த்துணர்ந்து கொண்டார். ‘தம் மகளுக்கும் அவனே ஏற்ற நாயகன் ஆவான்’ என்று மனம் விரும்பி அமைந்தவர், அதன் பிறகு உதயணனைச் சந்தித்து அவனிடம் விரிசிகையின் திருமணம் பற்றிப் பேசி முடிவு செய்வதற்குக் காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் மட்டும் பொருத்தமாக வாய்க்காமல் அவரை ஏமாற்றம் செய்துகொண்டே இருந்தது.
விரிசிகையின் ஏக்கமும் தவிப்பும், அவள் உதயணனை எண்ணும் நாள்களைப் போலவே வளர்ந்து கொண்டிருந்தது. உதயணன் யூகியை இழந்த செய்தி, தத்தை எரியுண்டதாகக் கூறப்பெற்ற பொய்ச் செய்தி இவைகளைக் கேள்விப்பட்ட முனிவர், திருமண விஷயமாக அப்போது உதயணனைச் சந்தித்துப் பேசுவதற்குக் காலம் ஏற்றதில்லை என்றே எண்ணி நாளைக் கடத்திக் கொண்டு வந்தார். ஆனாலும் ‘உதயணனை எண்ணி விரிசிகை தாபத்தால் உள்ளுறத் தவித்துக் கொண்டிருக்கின்றாள்’ என்று கண்டுணர்ந்தபோது அவர் பரபரப்பும் அவசரமும் கொண்டார். இந்தச் சமயத்தில் தான் உதயணன் மகத மன்னனாகிய தருசகனின் படை உதவியால் கோசம்பியை ஆருணியிடமிருந்து மீட்டுக் கொண்டதும் யூகி, தத்தை ஆகியோர்களைத் திரும்ப உயிருடன் பெற்றதுமாகிய செய்திகளை விரிசிகையின் தந்தையாகிய மந்தர முனிவர் அறிய நேர்ந்தது. உடனே அவர் கோசாம்பி நகரத்திற்கு உதயணனைக் காண்பதற்காகப் புறப்பட்டார்.
சோசாம்பியை அடைந்து அரசவை கூடியிருக்கும் போதில் உதயணனைக் காண அவைக்குள் நுழைந்து, வந்த செய்தியைக்கூற நேரம் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தார் அவர். உதயணனின் கவனம் மந்தர முனிவரின் பக்கமாகத் திரும்பிய போதில், அவர் உதயணனை நோக்கித் தாம் வந்த காரியத்தை விவரிக்கலானார். “பெருமை பொருந்திய வத்தவர்குலப் பேரரசே! முக்கியமானதும் உனக்கு விருப்பத்தைத் தரக் கூடியதுமான ஒரு நல்ல செய்தியைப் பற்றி இப்போது உன்னிடம் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன். நீயோ சிறப்பும் பெருந்தகைமையும் பொருந்திய சிறந்த குலத்தைச் சேர்ந்தவன். நான் யார் என்பதையும் கூறுகிறேன்; கேட்பாயாக! முன்பு மந்தர நாட்டின் அரசனாக இருந்து, பருவ முதுமையால் மக்களிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுத் துறவறம் மேற்கொண்ட மந்தர மன்னன் நான்தான். இப்போது என் தவப்பள்ளி இலாவாண மலைச்சரலில் இருக்கின்றது. அங்கே நான், என் மனைவி நீலகேசி, என் மகள் விரிசிகை ஆகிய மூவருமே வாழ்ந்துவருகிறோம்...” என்று கூறிக் கொண்டே வந்து சற்றே நிறுத்தினார் மந்தரமுனிவர்.
‘விரிசிகை’ என்ற பெயரையும் இலாவாண மலைச் சாரலையும் அந்த முனிவர் நினைவூட்டியதும் உதயணனுக்கு முகமலர்ச்சி ஏற்பட்டது. ‘வந்திருப்பவர் எதற்காக வந்திருக்கிறார்?’ என்பதை அவனாகவே மனக் களிப்போடு அனுமானித்து உணர்வதற்கு முயன்றான். அதற்குள் தாம் இடையே நிறுத்திய பேச்சை மேலே தொடர்ந்தார் மந்தர முனிவர். “நீ உண்டாட்டு விழாவிற்காக இலாவாண மலைச் சாரலுக்கு வந்திருந்தபோது நான் சில புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வருவதற்காக யாத்திரை சென்றிருந்தேன். திரும்பி அங்கே வந்த பின்பு, விரிசிகை மூலமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். அந்தச் சம்பவம் இன்றுவரை உனக்கும் நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன். விரிசிகையையோ, அந்த நிகழ்ச்சியையோ நீ மறந்திருக்க மாட்டாய் என்பது என் உறுதியான நம்பிக்கை! எனவேதான், நான் இங்கு வந்தேன். நீ மாலை தொடுத்துச் சூட்டிவிட்டு வந்த தினத்திலிருந்து விரிசிகை உன் நினைவாகவே இருக்கின்றாள். உன் பிரிவினால் அவள் எய்தியிருக்கும் துயரம் உரைக்கும் தரத்தினது அன்று. உன்னிடம் பறிகொடுத்த மனத்தினளாய் எப்போதும் உன் நினைவு சூழவே விரிசிகை அங்கே சீவனற்று இயங்கி வருகின்றாள். உனக்காக உள்ளத்தை அர்ப்பணித்துவிட்டுத் தணியாக் காதலுடனே காத்திருக்கும் காரிகையை ஏமாறச்செய்வது உன்போன்ற ஆடவருக்கு அழகு அன்று. ‘நான் என் மகளை உனக்கு மணம் செய்து கொடுக்கிறேன். நீ அவளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று உன்னை வற்புறுத்துதல் எனக்குப் பண்பாடு ஆகாது. இருந்தாலும் விரிசிகைக்கு உன்னை மணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. உனக்கு விரிசிகையை மணந்துகொள்ளவேண்டிய கடமை பண்டை வினைத் தொடர்புடையதாக இருக்கிறது. முன்பே அவளுக்கு மலர்மாலை சூட்டியவன் நீ! முறை என்ற வகைக்கு அந்தப் பழைய நிகழ்ச்சியும் சான்றாக நிற்கிறது. ஆகையால் என் விருப்பப்படி நானே மனமுவந்து விரிசிகையை உனக்குக் கொடுக்கின்றேன். விரிசிகையை ஒரு நல்ல மங்கல நாளில் நீ மணம் செய்து கொள்ளவேண்டும்” என்று மந்தரமுனிவர் வேண்டிக் கொண்டார்.
உதயணனுக்கும் அந்த வேண்டுகோள் விருப்பத்தையே உண்டாக்கியது. ஆயினும் தன் தேவிமார்களுள் முதன்மை வாய்ந்தவளாகிய வாசவதத்தையைக் கலந்து ஆலோசித்து, அவள் சம்மதம் பெற்றுக்கொண்ட பின்னரே முனிவரிடம் தன்னுடைய உடன்பாட்டைத் தெரிவிக்க விரும்பினான் அவன். மானனீகை நிகழ்ச்சி வேறு அவனைப் பயமுறுத்தியது. எனவே மந்தர முனிவரைத் தகுந்த உபசாரங்களுடன் பெருமதிப்பிற்குரிய வரவேற்பளித்து, அரண்மனையில் தங்குமாறு செய்தபின் வாசவதத்தையைக் காணச் சென்றான் உதயணன். ஏற்கெனவே மானனீகையை மணந்து கொள்வதற்குள் இடையில் தத்தையினால் நிகழ்ந்து முடிந்திருந்த குரூரமான சோதனைகள் அவனை எச்சரித்திருந்தன. எனவேதான் விரிசிகையை மணந்து கொள்வது பற்றித் தத்தையினிடமிருந்து கருத்து அறிந்த பின்புதான் மேற்கொண்டு எதுவும் தீர்மானிக்க முடியும் என்றெண்ணியபடி அவளை அணுகினான் உதயணன். தவிர, முன்பே இலாவாண மலைச்சாரலில் விரிசிகைக்கு மாலை சூட்டியது காரணமாக வாசவதத்தை தன்மேல் சினமும் ஊடலும் கொண்டு பிணங்கியிருப்பதனால் அவளிடம் கேட்காமல் ஏதும் செய்யச் சம்மதிக்கவில்லை அவன் உள்ளம். ஆகவே அவன் வாசவதத்தையை அணுகி மந்தர முனிவர் வரவு பற்றியும், விரிசிகையை மணந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அவருடைய வேண்டுகோளையும் விளக்கமாக எடுத்துக் கூறினான்.
தத்தைக்கு அப்போதிருந்த மனநிலை, ‘பிறருக்காக நம்முடைய இன்பத்தைப் பகுத்து அளிப்பதனாலேயே வாழ்வில் தியாகம் என்ற பெரும் பண்பாடு இடம் பெற முடியும்’ என அமைந்திருந்தது. மானனீகை, உதயணன் திருமணத்திற்கு அப்பால் இத்தகையதொரு மனநிலை அவளுக்குத் தன் போக்கில் ஏற்பட்டிருந்தது. அன்றியும் விரிசிகையின் காதல் அவளுக்கு முன்பே தெரியும். ‘என்னால் அந்த முனிவர்தவமகளுடைய வாழ்க்கை பாழ்படுவானேன்? இவரே உயிர் என்று கருதி வாழும் சூதுவாதற்ற அந்தக் கன்னியும் இவரை மணந்து கொள்ளட்டுமே. அதனால் எனக்குக் குறை என்ன வந்துவிடப் போகிறது! எனக்குச் சம்மதம் என்றால் பதுமைக்கும் மானனீகைக்கும்கூட அது சம்மதமாகவே இருக்கும். விரிசிகையின் காதல் கருகி அழிய வேண்டாம். அவளை இவர் மணந்து கொள்ளட்டும், அதற்காக இவ்வளவு தொலைவு தேடிவந்து வேண்டிக் கொண்டு நிற்கும் அந்த முனிவர் ஏமாற்றம் அடையக் கூடாது இப்படித் தன்மனத்திற்குள் எண்ணிப் பார்த்தபின் பெரிதும் மகிழ்ந்து, உதயணனிடம் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள் வாசவதத்தை. உதயணனும் மகிழ்ந்தான்.
உதயணன் மந்தரமுனிவரிடம் விரைந்துவந்து தன் உடன்பாட்டைத் தெரிவித்தான். முனிவரும் மகிழ்ந்தார். விரிசிகையை மணம் செய்துகொள்ள வாய்த்த பெரும் பேற்றை எண்ணிச் சில பல தானங்களைச் செய்தான் உதயணன். சில நாள்கள் அவனோடு கோசாம்பி நகரில் தங்கிவிட்டு, விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாண மலைச்சாரலுக்குப் புறப்பட்டார் மந்தர முனிவர். விரிசிகையையும் அவள் தாயையும் அழைத்துக் கொண்டு விரைவில் வருமாறு வேண்டிக்கொண்டு, உதயணன் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான். அப்போதுதான் ஒரு திருமணம் முடிந்து அந்தக் கோலாகலத்தின் சுவடு மறைந்திருந்தது கோசாம்பி நகரத்தில். உடனே விரிசிகையின் திருமணச் செய்தி பரவவே பழைய கோலாகலமே எங்கும் மீண்டும் குறைவின்றி நிறைந்தது. ‘விரிசிகை இலாவாண மலையிலிருந்து எப்போது வருவாள்? அவளைக் கண் நிறையக் காண்கின்ற நல்ல பாக்கியம் என்றைக்குக் கிட்டும்?’ என்ற ஆவல் நிறைந்த நினைவுகளோடு கோசாம்பி நகரம் முழுவதுமே அவளுடைய நல்வரவை நாள்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நகரத்தின் தலைவாயிலும் பெருவீதிகளும் நன்றாக அலங்கரிக்கப் பெற்று ஆரவாரத்தோடு விளங்கின. வீதிகளுக்குப் புதுமணல் பரப்பிப் பந்தலிட்டனர். வீடுகளிலும் மாடங்களிலும், மகிழ்ச்சியின் சின்னங்களாகிய அணிகளும் கொடிகளும் இலங்கின. நகரெங்கும் யார் யாரைச் சந்தித்தாலும் விரிசிகையைப் பற்றியும், விரிசிகையின் திருமணத்தைப் பற்றியும், அவள் என்றைக்கு வருகின்றாள் என்பதைப் பற்றியுமே பேசினர். வானுலகிலிருந்து வரும் தேவகன்னிகை ஒருத்தியை வரவேற்க முற்படுவோர்போலக் கோசாம்பி நகரத்து மக்கள், விரிசிகை என்னும் பேரழகியின் வரவை எதிர்பார்த்தனர் என்றே கூறலாம்.