வெளிநாட்டு விடுகதைகள்/எப்படித் தொகுத்தேன்

எப்படித் தொகுத்தேன் ?

ஒரு நாள் நூல் நிலையத்திலே ஒரு விடுகதைப் புத்தகத்தைப் பார்த்தேன். அது ஓர் ஆங்கிலப் புத்தகம். ‘பல நாட்டு விடுகதைகள்' (Riddies of Many Lands) என்று அதற்குப் பெயர், அதை ஆவலாக எடுத்தேன் ; புரட்டிப் பார்த்தேன். சுமார் 90 நாடுகளில் வழங்கிவருகின்ற 800 விடுகதைகள் அதில் இருந்தன. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

'நம் வீட்டுக் குழந்தைகள் அடிக்கடி நம்மிடம் விடுகதை போட்டு நம்மை விழிக்கவைக்கிறார்களே, அவர்களைச் சும்மா விடக்கூடாது. அவர்களை மடக்குவதற்கு இது சரியான புத்தகம்' என்று தீர்மானித்தேன். உடனே, நான் அந்தப் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி வந்தேன். வரும்போதே சில விடுகதைகளைத் தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளைச் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு, ஒவ்வொரு விடுகதையாகப் போட்டேன், சில விடுகதைகளை அவர்கள் எளிதிலே விடுவித்தார்கள். சில அவ்வளவு சுலபமாயில்லை. சில விடுகதைகளைக் கேட்டதும், “ப்பூ, இதுபோல் நம் நாட்டில் கூட இருக்கிறதே!" என்றார்கள். ஆனாலும், மொத்தத்தில் அந்த விடுகதைகளை அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

இப்படிச் சில நாட்கள் தினமும் மாலையில் நான் புதுப் புது விடுகதைகளை அந்தப் புத்தகத்திலிருந்து கூறிவந்தேன். ஆனாலும், அதில் இருந்த 800 விடுகதைகளில் 125 விடுகதைகளைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவற்றை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கவில்லை. கூடுமான வரையில் அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நம் தமிழ் நாட்டு விடுகதையைப் போலபே கூற முயன்றேன், நாம் விடுகதைகளைப் பாட்டுப் போலல்லவா கூறிவருகிறோம்? அப்படித்தான் நானும் கூறினேன்.

இந்த விடுகதைகளைக் கேட்டு எங்கள் வீட்டுக் குழந்தைகள் மட்டும்தானா மகிழ்ந்தார்கள் ? இல்லை ; அவர் பேரின் நாடார்களிடத்திழும் இந்த விடுகதைகள் பரவி, அவர்களும் மகிழ்ச்சி அடையத் தொடங்கினார்கள்.

அவர்களெல்லாம் கேட்டு மகிழ்ந்த விடுகதைகளைத் தமிழ் நாட்டுக் குழந்தைகள் அனைவருமே கேட்டும், போட்டும் மகிழவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அவ்வாறே அந்த 125 விடுகதைகளையும் தந்திருக்கிறேன்.

'125 என்கிறீர்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் 155 விடுகதைகள் இருக்கின்றனவே!' என்று தானே கேட்கிரீர்கள் ? ஆம், தேமுள்ள 30 விடுகதைகளை ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பர்மா, இலங்கை, மலேயா முதலிய நாடுகளில் உள்ள என் இனிய நண்பர்களுக்கு எழுதி நேராக வரவழைத்தேன்.

திரு. அலி அஸால் (Ali Assai, Assistant to the Director General of Publications, Tehran, Iran), திருமதி காதலீனா வெலாஸ்குலஸ் (Catelina Velasquez-Ty., Curriculam Division, Bureau of Public School, Manila, Philippines), திருமதி மேன்மஸ் ஷவாலி (Madame Maenmas Chavalit, Ministry of Education, Banghok, Thailand), யு ஸோ ஹ்லா {U Soe Hla, Editor, Sarpay Beikman Institute, Rangoon, Burma), டாக்டர் என். டி. விஜசேகரா (Dr. N. D. Wijesekera, Acting Commissioner, Official Language Department. Colombo, Ceylon), வெ. நா. வெள்ளையன் (V. N. Vellayan, Agent, Indian Bank Ltd., Malacca, Malaya} முதலியவர்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி அன்போடு விடுகதைகளை அனுப்பி உதவினர். அவர்களுக்கும், ‘Riddles of. Many Lands' என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து விடுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட எனக்கு அனுமதி தந்த பதிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சென்னை - 17 அழ. வள்ளியப்பா.

20-5-82