வேங்கடம் முதல் குமரி வரை 1/023-027

23. மாமல்லைத் தல சயனர்

துவாபர யுகத்திலே ஓர் அரசன். அரக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும், நல்ல இதயம் படைத்திருந்தான், மக்களையெல்லாம் நீதி தவறாது ஆண்டு வந்தான். ஆனால், மூன்றுலகையும் அடிமை கொண்டு, திரிலோகத்துக்குமே ஏக சக்ராதிபதியாக வாழ்ந்து வந்தான்.

ஆதலால் அவனை வீழ்த்த வேண்டினர், தேவர்கள் - நாராயணனிடம். நாராயணனிடத்து இந்த அரசனுக்கு அளவிடற்கரிய அன்பு. ஆதலால் நாராயணனும் அவனை ஆட்கொள்ள நாளும் கிழமையும் எதிர்நோக்கி இருந்தார்.

அரசன் ராஜசூய யாகம் ஒன்றைச் சிறப்பாக நடத்தினான். யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன் என்று கங்கணம் கொண்டு செய்யும் யாகம் அது. அந்த யாகசாலைக்கு ஒரு குள்ள வேதியன் வருகிறான். அரசனிடம் மூன்றடி மண் யாசித்துப் பெறுகிறான். அரசனின் குலகுருவாம் சுக்ராச்சாரியார் தானம் கொடுக்காதே என்று தடுக்கிறார். அதையும் மீறியே கேட்ட தானத்தைக் கொடுத்து விடுகிறான், அரசன்.

உடனே குள்ளனாக வந்த வேதியன் விசாவரூபம் எடுக்கிறான். விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து திரிவிக்கிரமனாக உயர்கிறான். ஒரு தாளால் வானம் முழுவதையும், மற்றொரு தாளால் இந்தப் பூவுலகம் முழுவதையுமே அளந்து விடுகிறான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டபோது பரமபக்தனான அரசன் தன் தலையையே தாழ்த்திக் கொடுக்கிறான்.

அவன் தலையில் கால் வைத்து, அவனைப் பாதாளத்துள் அமிழ்த்துகிறபோது, அவன் வேண்டிக் கொள்கிறான், அவன் இருந்து அரசாண்ட இடம் அன்று முதல் அவன் பெயராலேயே வழங்க வேண்டுமென்று. பக்தன் விருப்பத்தை நிறைவேற்றுகிறான், பரந்தாமனும். ஆதலால்தான் அந்த அரசனான மகாபலியின் பெயராலேயே இந்த ஊர் மகாபலிபுரம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு வியாக்கியானம் மகாபலிபுரத்துக்கு. இந்த வியாக்கியானம் சொல்பவர்கள் கால் ஆங்கிலமும் அரைக்கால் இந்தியும் அரைத் தமிழும் பேசும் அங்குள்ள வழிகாட்டிகள் (guides).

இதோடு விடுவார்களா? அங்குள்ள கல் ரதங்களைக் காட்டி, 'இங்கு பஞ்ச பாண்டவர்கள் பாரத யுத்தம் முடிந்த பின் ரதங்களில் வந்திருக்கிறார்கள். அவர்களது அஸ்தினாபுரத்திலே ரதங்களை யெல்லாம் நிறுத்த இடம் இல்லை என்று கண்டு, இங்கேயே நிறுத்திவிட்டுப் புஷ்பக விமானத்தில் ஏறி ஊர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நிறுத்திப் போன ரதங்கள்தான் இந்தப் பஞ்ச பாண்டவரதங்கள்!' என்பார்கள்.

மேலும், 'இது ஹஸ்பென்ட் எலிபன்ட், இது ஒய்ப் எலிபன்ட், இது சன் எலிபன்ட்?' என்றெல்லாம் விளக்கம் தருவார்கள். இவர்கள் சொல்லும் அத்தனையும் உண்மை அல்ல. சுத்த கப்ஸா என்று சரித்திரம் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஒரு பெரிய சித்திரக்காரப் புலி, சிற்பக் கலையில் அளவில்லாதகாதல் உடையவன். அவன் மகன் நரசிம்மவர்மனோ தந்தையையும் மிஞ்சிய ஆர்வம் உடையவன் - சிற்பிகளை ஆதரிப்பதிலே. மலைகளைக் குடைந்து குடைந்து, குடைவரைக் கோயில்களை உருவாக்கிக் கொண்டிருந்தான் மகேந்திரன் என்றால், மலைகளையே வெட்டிச் செதுக்கிக் கோயில்கள் விஹாரங்கள் ரதங்கள் எல்லாவற்றையும் நிர்மாணித்துக் கொண்டிருந்தான் நரசிம்மன்.

அவன் உருவாக்கி இருக்கிறான் - ஓர் அரிய சிற்பக் கலைக் கூடத்தை. சிற்பக்கலை விற்பன்னனான நரசிம்மன் நல்ல மல்லனும் கூட. பெரிய பெரிய மல்லர்களை யெல்லாம் யுத்தத்தில் வீழ்த்தியவன் ஆனதினாலே மாமல்லன் என்ற விருதுப் பெயரும் பெறுகிறான். இந்த மாமல்லன் ஆதரவில் உருவாகிய சிற்பக் கூடத்தையே, அன்று அதை உருவாக்கிய சிற்பிகள் மாமல்லபுரம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த மாமல்லபுரத்தையே திருமங்கை மன்னர் கடல் மல்லை என்று பாடியிருக்கிறார்.

மல்லபுரம் மல்லை ஆனது வியப்பில்லை. ஆனால் மகாபலிபுரம் ஆகிவிட்டதே, அதுதான் வியப்புக்குரியது. இதைவிட வியப்புக்குரியது, இத்தனை விவரமும் தெரிந்த இந்த நாளிலே லக்ஷக்கணக்கான பணத்தைச் செலவு செய்து, விருந்தினர் விடுதி கட்டும் சர்க்கார் கூட அந்த மகாபலியை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு, 'மகாபலிபுரம் விருந்தினர் விடுதி' என்று சமீபகாலம் வரை பெயர் வைத்திருந்ததுதான். போகட்டும். மகாபலியின் பெயராலேயாவது மகாமல்லனது புகழ் நின்று நிலவினால் சரிதான்.

இன்று இப்பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்துக்கே போகலாம். இங்குள்ள கற்பாறைகள் சொல்லும் கதைகளையும், அவை விவரிக்கும் கலைச் செல்வங்களையும் பற்றித் தெரிவதற்கு முன்பு, இங்குள்ள பிரதான கோயிலையும், அங்கு கோயில் கொண்டிருக்கும் தலசயனரையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

மகாவிஷ்ணு நிற்பார், இருப்பார், கிடப்பார் என்பதை அறிவோம். இதில் அவரது சயனத் திருக்கோலமே நிரம்பவும் வசீகரமானது. கிட்டத்தட்ட இருபத்து ஏழு தலங்களில் அவர் சயனித்திருக்கிறார். அந்தச் சயனத்தில்தான் எத்தனை எத்தனை வகை. இருபதுக்கு மேற்பட்ட இடங்களிலே அவர் சயனித்திருப்பது ஆதிசேஷன் பேரிலே தான். இதனையே புஜங்க சயனம் என்பர். மற்றவையெல்லாம் உத்தியோக சயனம், தர்ப்ப சயனம், போக சயனம், மாணிக்க சயனம், வட பத்ர சயனம், வீர சயனம் என்பனவாம்.

இதையெல்லாம் விட்டு விட்டு ஓரிடத்திலே தரையிலேயே படுத்துக் கொள்கிறார். அதனைத் தலசயனம் என்றே சொல்கிறார்கள். அப்படிப் படுக்கப் பாயோ, தலைக்கு அணையோ இல்லாமல், சும்மா தரையிலேயே கிடக்கிறவர்தான் தலசயனப் பெருமாள். அப்படிக் கிடக்கும் இடம்தான் மாமல்லபுரம். இவரையே திருமங்கை ஆழ்வார் கடல் மல்லைத் தலசயனர் என்று அழைக்கிறார்.

ஞானத்தின் உருவாகி
நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால்
மகிழ்ந்து ஏத்தி வலங்கொள்ளக்
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை
நினைவார் என்நாயகரே

என்று பாடியும் மகிழ்கின்றார்.

இங்கு எப்படி இவர் தரையிலேயே படுக்கும்படி நேர்ந்தது என்று தெரிய வேண்டாமா? அதற்குப் பிரும்மாண்ட புராணத்தையே ஒரு திருப்புத் திருப்ப வேணும்.

புண்டரீகர் என்று ஒரு மகரிஷி. அவர் மகா விஷ்ணுவிடம் அத்தியந்த பக்தி உடையவர். தினம் தாமரை மலர் கொண்டே அர்ச்சித்து வழிபடுபவர்.

அவர் தலம் தலமாகச் செல்லும் போது திருவிட வெந்தை வந்து, அங்குள்ள வராகப் பெருமாளை வணங்குகிறார். அங்குள்ள தடாகத்தில் ஆயிரம் இதழ்கள் உள்ள ஓர் அரிய தாமரை மலர் கிடைக்கிறது, அவருக்கு. அதனைப் பரந்த கடலில் உள்ள பரந்தர்மர் திருவடியில் சேர்க்க அவரது உள்ளுணர்வு கூறியது.

பாற்கடல் செல்வதற்கு முன், இடையே உள்ள கருங்கடலைக் கடக்க வேண்டியிருக்கிறது. இதனை எப்படிக் கடப்பது? அதற்காக அக்கடற்கரையிலே ஒரு கொண்டம் கட்டுகிறார். - அந்தக் கொண்டத்துக்கு அப்புறம் கடல் தண்ணீரை யெல்லாம் இறைத்துக் கொட்டிக் கடலை வற்ற அடித்து விட்டால், பாற்கடல் செல்வது எளிதாக இருக்குமே என நினைக்கிறார்.

இது முடிகிற காரியமா என்றுகூட எண்ணவில்லை. வேலையைத் துவக்கி விடுகிறார். மலர் வாடுவதற்குள் கடல் நீரை வற்ற வைக்க வேண்டுமே என்று துரிதமாகவே வேலை நடக்கிறது. இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்தைக் கண்டு, பரந்தாமனே ஒரு வயோதிகர் உருவில் வந்து, 'நானும் உமக்குத் துணை செய்யட்டுமா?' என்கிறார். அதற்குக் கூலியாகக் கொஞ்சம் உணவும் தண்ணீரும் கேட்கிறார். புண்டரீகர் அதற்கு ஒத்துக் கொண்டு, அவருக்கு உணவு கொண்டு வர, ஊருக்குள் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தால், வயோதிகர் சங்கு சக்ரதாரியாய்ப் புண்டரீகர் கட்டிய கொண்டத்திலேயே படுத்துக் கொண்டி ருக்கிறார். கடல் நீர் வற்றியிருக்கிறது. பாற்கடலுக்கு வழி நேரே திறந்திருக்கிறது.

புண்டரீகரை வழிமறித்துத் தரிசனம் கொடுக்கவே, பரந்தாமன் இந்தத் தல சயனனாக எழுந்தருளியிருக்கிறார். அன்று புண்டரீக மகரிஷி வேண்டிக் கொண்டபடி, என்றுமே தரையில் கிடக்கும் சயனனாகவே மக்களுக்குச் சேவை சாதிக்கிறார். இவர் வெறும் தல சயனன் மட்டும் அல்ல, ஜலசயனரும் கூடத்தான். தல சயனர் கோயில் கொண்டிருப்பது மாமல்லபுரம் ஊரில் உள்ள கோயிலில் என்றால், ஜலசயனர் கோயில் கொண்டிருப்பது கடற்கரைக் கோயிலிலே. இருவரையும் சேர்த்தே இருபத்தேழு பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கின்றார், மங்கை மன்னன்.

மாமல்லபுரத்திற்குச் சென்னையிலிருந்தும் செல்லலாம், செங்கற்பட்டிலிருந்தும் செல்லலாம். கார் வசதியில்லாதவர் பஸ்ஸில் ஏறித்தான் செல்ல வேண்டும். எப்படிச் சென்றாலும் செல்கின்றவர்களைத் தலசயனப் பெருமாளை வலம் வரச் செய்து, அவர் கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் காலி மனையில் இறக்கி விட்டு விடுவார்கள்.

கடற்கரைக் கோயில்

கொஞ்சம் பக்தி உடையவர்கள் என்றால், முதலில் தலசயன கோவிலுள் நுழைந்து, தலசயனரைத் தரிசித்து விட்டு, வெளியே வரலாம். இல்லை , நமக்கும் பக்திக்கும் வெகு தூரம், நமக்கும் கலைக்குமே நெருங்கிய தொடர்பு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள் எல்லாம் அப்படியே மேற்கு நோக்கி நடக்கவே புறப்பட்டு விடலாம்.

உண்மைதான். தலசயனர் கோயில் உள்ளே தலசயனரைத் தவிரப் பார்க்க வேண்டிய சிற்ப வடிவங்கள் அதிகம் இல்லை. இருக்கின்ற ஒரு சில ஆழ்வார்களின் வடிவங்கள் பேரில் இருக்கும் எண்ணெய்க் கசடு எல்லாம் எத்தனையோ வருஷ காலத்தவை. ஆதலால் எல்லாம் மொழு மொழு வென்றே இருக்கும். அதனால் விரைவாகவே கோயிலுக்கு வெளியே உள்ள கலைச் செல்வங்களைக் காண்பதிலேயே அக்கறை காட்டலாம்.

இப்படி நமது பிரயாணத்தைத் துவங்கும்போது, நாம் முதலில் காண்பது கிருஷ்ண மண்டபத்தையே. அங்குதான் கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் கோக்களையும் கோவலர்களையும் காத்துக் கொண்டு நிற்கிறான். அங்குள்ள கண்ணன் அப்படி ஒன்றும் சின்னப் பையன் இல்லை. எட்டடிக்கு மேலே வளர்ந்த ஆஜானுபாகு.

அவனையும் மற்றவர்களையும் பார்க்கிறபோதே, அங்கு பால் கறக்கும் கோபாலனையும் பார்க்கிறோம். அந்தக் கோபாலன் இன்றையக் காலத்தியவன். நாம் படம் பிடிக்கிறோம் என்று தெரிந்து நம்மைத் திரும்பிப் பார்த்து ஒரு நல்ல 'போஸ்' வேறே கொடுக்கிறான். பெரியதொரு பாறையிலே வெட்டிச் செதுக்கிய அற்புதச் சிற்பம். பின்னால் யாரோ மண்டபம் எல்லாம் கட்டி நாமெல்லாம் நின்று பார்க்க நல்ல வசதி பண்ணியிருக்கிறார்கள்.

இதற்குக் கொஞ்சம் மேற்கே நகர்ந்தால், பிரபலமான அர்ச்சுனன் தவம் என்னும் அர்த்த சித்திரப் பாறை முன் வந்து நிற்போம். நாம் நிற்கும் இடத்திலிருந்து பதினைந்து அடி தாழ்ந்தும், மேலே இருபதடி உயர்ந்தும், நீண்ட பெரிய இரண்டு பாறைகள் முழுவதையுமே அடைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிற்பங்கள் {இது அர்ச்சுனன் தவமா? இல்லை, பகீரதன் தவமா? என்பது இன்னும் விவாதத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஆனால் புதை பொருள் இலாகா டைரக்டர் திரு. டி. என். ராமச்சந்திரன் பேச்சை ஒரு தரம் கேட்டு விட்டால், அவர் காது கேட்க, இதைப் பகீரதன் தவம் என்று சொல்லத்துணியமாட்டோம்).

இந்தச் சிற்ப சித்திரம் கல்லிலே சமைத்த ஒரு கவிதை. எத்தனையோ விதமான வடிவங்கள்- பூனை முதல் யானைவரை, தேவர் முதல் தவசிவரை. அர்ச்சுனன் தாடி சடையுடன் தவம் செய்யும் கோலமும், அங்குச் சிவ பெருமான் எழுந்தருளிப் பாசுபதம் அளிக்கும் காட்சியும் தத்ரூபம்.

இடையே ஒரு கார்ட்டூன் சித்திரமும் கூட. உண்மைத் தவசிகளிடையே ஒரு போலித் தவசி போல ருத்திராக்ஷப் பூனை தவம் செய்யும் காட்சி ஒன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது. தவம் செய்யும் பூனையைச்சுற்றி எலிகள் அடிக்கும் கும்மாளம் எல்லாமே விவரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே, இன்னும் என்ன என்ன இல்லை என்பது எளிது. அங்கு 'இல்லாதன இல்லை!' என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்தானே,

இன்னும் சற்று மேற்கே நகர்ந்தால், பேன் பார்க்கும் குரங்குகள், கண்ணன் வெண்ணெய் உண்ணல் என்றெல்லாம் காட்சிகள். பின்னால் தெற்கே திரும்பி, மேட்டில் ஏறினால், அடுக்கடுக்காய் மண்டபங்கள். லஷ்மி மண்டபம், வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தனி மண்டபம் என்று பல மண்டபங்கள். எல்லாம் மலைகளைக் குடைந்து நிர்மாணிக்கப் பட்டவை.

ஒரு மண்டபத்திலே வராகருக்கு எதிரே உலகளந்தார். மற்றொரு மண்டபத்திலே மகிஷமர்த்தனிக்கு எதிரே புஜங்க சயனர். இப்படி அழகு அழகான சிற்ப வடிவங்களெல்லாம் Bas relief என்னும் அர்த்த சித்திரச் சிற்பங்கள், இவைகளையே பார்த்துக் கொண்டு, பல்லவர் காலத்துக் கலை வளத்தை வியந்து கொண்டே நிற்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.

இன்னும் இம் மாமல்லையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றனவே. மலை மேல் கட்டிய கோயில், அக் கோயிலை அடுத்துக் கட்டிய கலங்கரை விளக்கம், எல்லாவற்றையுமே ஏறிப் பார்க்கலாம் - நேரமும் காலில் வலுவும் இருந்தால்.

இதற்கெல்லாம் நேரமில்லை யென்றால், விறுவிறுவென்று கீழே இறங்கி, ஐந்து ரதங்கள் என்று கைகாட்டி காட்டும் திசையில் சென்றால், அந்தப் பஞ்ச பாண்டவ ரதங்களைப் பார்க்கலாம். பாண்டவர்களுக்கும் இந்த ரதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றாலும், ரதங்கள் எல்லாம் அழகானலை. பிரும்மாண்டமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியிலே நல்ல வேலைப்பாட்டுடன் செதுக்கப் பட்டவை. எத்தனை சிற்பிகள் எவ்வளவு காலம் வேலை செய்து இந்த அசையாத தேர்களை ஆக்கி முடித்தார்களோ?

இதோடு தீர்ந்து விடுகிறதா? இன்னும் கொஞ்சம் திரும்பி வந்து கிழக்கே பார்க்க நடந்து சவுக்கந் தோப்புகளையெல்லாம் கடந்தால் - அந்தக் கடற்கரைக் கோயிலுக்கே வரலாம். மற்றவையெல்லாம் கற்பாறைகளை வெட்டிச் செதுக்கியதாக இருக்க, இங்குள்ள கோயில்கள் இரண்டு மட்டும் கல்லால் கட்டிய கோயில்களாக இருக்கப் பார்ப்போம்.

ஒன்று சிவனுக்கு, ஒன்று விஷ்ணுவுக்கு என்று பங்கு. சிவனது லிங்கத் திருவுருவைவிட, ஜலசயனனாக இருக்கும் பெருமாள் மிகவும் காத்திரமான வடிவம். கையில் டார்ச் இருந்தால், இருட்டில் புதைந்து கிடக்கும் அவரை நன்றாகத் தரிசிக்கலாம். பூஜை புனஸ்காரத்தை எல்லாம் தலசயனருக்குக் கொடுத்து விட்டு, இந்த ஜலசயனர் ஒதுங்கியே வாழ்கிறார்.

இந்தக் கோயில்களை அடுத்த கடற்கரை அழகானது. எவ்வளவோ பகுதிகளைக் கடல் கொண்டு போய்விட்டது என்பர். இருக்கிற பகுதியைக் கூட விழுங்க வருவதுபோலவே கடல் அலை அலையாக வந்து மோதும். கொண்டு வந்திருக்கும் கட்டமுதை இங்கு அவிழ்க்க வேண்டியதுதான். அதைக் கொண்டு வர மறந்தவர்கள் அங்கு விற்கும் பட்டாணிக் கடலையை மெல்லுவதுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்.

தமிழ் நாட்டில் கலை வளர்த்த பேரரசர்களில் தலையாய மகாமல்லன் புகழ் எல்லாம் இந்தக் கடல் மல்லையிலே கற்பாறை காட்டும் கவின் உருவிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்று சொன்னால் வியப்பில்லை. தமிழ் நாட்டின் கலைச் செல்வம் என்று உலகோர் எல்லாம் வியந்து நிற்கும் கடல் மல்லையை மகாமல்லன் பேரால் மாமல்லபுரம் என்று அழைத்ததுதான் எவ்வளவு பொருத்தம்.

மாமல்லனது கனவெல்லாம் நனவான இடம் அது. நமக்கும் நம் நாட்டைப் பற்றி, நம் மொழியைப் பற்றி, நம் கலைகளைப் பற்றி, நம் இலக்கியங்களைப் பற்றி எத்தனையோ கனவுகள். அதெல்லாம் நனவாக வேண்டுமென்றால் மாமல்லபுரத்துக்கு ஒரு தடை விறுவிறு என்று போய்த் திரும்பிய உடனடியாகவே காரியத்தைத் துவங்கலாம். அப்போது நம் கனவம் நனவாகும் என்று நம்பலாம்.