வேங்கடம் முதல் குமரி வரை 1/027-027

27. மதுராந்தகத்துக் கருணாகரன்

விச்சக்கரவர்த்தி கம்பன் தமிழ்நாட்டில் பல தலங்களுக்குச் சென்றிருக்கிறான். தொண்டை நாட்டிலுள்ள அந்தப் பிரபலமான கச்சிக்கே சென்றிருக்கிறான். அங்குள்ள ஏகம்பனையே வணங்கியிருக்கிறான். கம்பன் ஏதோ கம்பங் கொல்லையைக் காத்ததினாலாவது, இல்லை! கம்பூன்றி நடந்ததினாலாவதுதான் கம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது அறியாமையே.

கோதண்டராமன் கோயில்

தேரழுந்தூரில் வழிவழியாகச் சைவப் பெருங்குடியில் வந்த கம்பனது முன்னோர்களுக்குக் கச்சி ஏகம்பனே வழிபடு தெய்வமாக இருந்திருக்கிறான். ஆனால் ஏகாம்பரன் பெயரையே அவன் தந்தை அவனுக்குச் சூட்டியிருக்கிறார். அதனால்தான் கம்பன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. தக்க புகழையுமே பெற்றிருக்கிறது.

இந்தக் கம்பன் தொண்டைநாடு சென்று, கச்சி ஏகம்பனைக் கண்டு தொழுதுவிட்டுத் தன் சொந்த ஊராகிய தேரழுந்தூருக்குத் திரும்பியிருக்கிறான். வருகிற வழியில் ஓர் ஊர். அந்த ஊரில் கோயில் கொண்டிருப்பவன் கோதண்டராமன் என்று அறிந்தபோது, கோயிலுள் சென்று தன்னை ஆட்கொண்ட பெருமானான ராமனை வணங்கித்துதிக்க நினைத்திருக்கிறான். அவசரமாக ஊர் திரும்புகின்ற பயணம். ஆதலால் கடைகளில் நுழைந்து ஆராதனைக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளவோ நேரமில்லை. ஆதலால் கையை வீசியே நடக்கிறான். கோயிலுள் நுழைகிறான். நேரே கர்ப்ப கிருகத்துக்கே வந்து விடுகிறான். அங்கு லகஷ்மணசமேதனாக நிற்கும் கோதண்டராமனை, அவன் ஆராதித்த கருணாகரனை எல்லாம் கண் குளிரக் காணுகின்றான். அந்த அல்லையாண்டு அமைந்த மேனி அழகனை, அந்த அழகனது அழகை எல்லாம் எத்தனையோ பாடல்களில் ராம கதை முழுவதும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவன் ஆயிற்றே.

என்றாலும் செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினொடும் சந்தார் தடந்தோளோடும் தாழ்தடக்கைகளோடும் வில்லேந்தி நிற்கும் அந்த ராமனைக் கண்ட பொழுது, தான் சொல்ல வேண்டுவது இன்னும் எவ்வளவோ இருக்கின்றன போல் தெரிகிறதே என்ற எண்ணம். இப்படித் தன் எண்ணங்களை அலை பாயவிட்டு அப்படியே மெய் மறந்து நின்றிருக்கிறான். மேலே கிடந்த உத்தரீயத்தை எடுத்துப் பவ்யமாக அரையில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. மூர்த்தியைக் கை கூப்பி வணங்க வேண்டுமென்றும் தோன்றவில்லை.

இந்த நிலையில் நிற்கும் கம்பனைப் பக்கத்திலே நின்று கொண்டிருந்த பரம பாகவதர் ஒருவர் பார்க்கிறார். அவருக்கோ இவன் பேரில் ஒரே கோபம். 'இப்படியும் இருக்குமா ஒரு பிரகிருதி? சந்நிதி முன் வந்தும் வணங்காமல் நிற்கிறானே. அப்படி இவன் என்ன வணங்காமுடியனா?’ என்றெல்லாம் எண்ணுகிறார். அவருக்கு இருந்த ஆத்திரத்தில் கம்பன் விலாவிலேயே ஒரு குத்துக் குத்தி, என்ன, ஐயா! ஆராதனைக்கு உரிய பொருள்தான் ஒன்றும் கொண்டு வரவில்லை என்றால், சந்நிதியில் மூர்த்தியைக் கை கூப்பித் தொழவுமா தெரியாது?’ என்று கேட்கிறார்.

அப்போதுதான் விழித்துக் கொண்ட கம்பன், அப்பரம பாகவதருக்குப் பதில் சொல்கிறான். கவிச் சக்கரவர்த்தி அல்லவா? பதில் பாட்டாகவே வருகிறது. பாட்டு இதுதான்:

'நாராயணாய நம' என்னும் நல்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன்
கார்ஆரும் மேனிக்கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே!

என்ற பாடலைப் பரம பாகவதருடன் சேர்ந்து நாமும் கேட்கிறோம்.

கோயிலை அறிந்தாலும் கும்பிடத் தெரியாத தன் அறியாமையை எவ்வளவு எளிமையோடு சொல்கிறான்! அதைவிட அவன் ஆராதனைக்குக் கொண்டு வந்த பொருள் தன் அறியாமையே என்று சொல்கிறபோது, எத்தகைய விளக்கம் பெறுகிறோம்! உண்மைதானே. இறைவனையும் பெரியவர்களையும் அணுகும்போது, நாம் கொண்டுபோக வேண்டுவது நம்மிடம் நிறைய இருப்பதும், அவர்களிடம் கொஞ்சமும் இல்லாததுமான பொருளைத்தானே கொண்டு போய்க் காணிக்கையாக வைத்து ஆராதிக்க வேண்டும்! நம்மிடம் நிறைய இருப்பது அறியாமை, இறைவனிடத்துக் கொஞ்சங்கூட இல்லாதிருப்பதும் அறியாமை. ஆதலால் நமது அறியாமையையே ஆராதனப் பொருளாகக் கொண்டு கொட்ட வேண்டியதுதானே.

அதைத்தானே செய்கிறான் கம்பன். நம்மையும் செய்யும்படி வற்பறுத்துகிறான். இப்படிக் கம்பன் ஆராதித்த கோதண்டராமனை, அந்த ராமன் ஆராதித்த கருணாகரனைக் காணக் கம்பன் சென்ற ஊருக்கே நாமும் செல்ல வேண்டாமா? அந்த ஊர்தான் மதுராந்தகம்.

மதுராந்தகம் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள தாலுக்காவின் தலைநகரம். நிரம்பச் சிறிய ஊரும் அல்ல. நிரம்பப் பெரிய ஊரும் அல்ல. சென்னைக்குத் தெற்கே ஐம்பது மைல் தூரத்திலே இருக்கிறது இந்த ஊர். ரயிலிலும் பஸ்ஸிலும், ஏன் நல்ல காரிலும் செல்லலாம். இந்த ஊருக்கு வடக்கே இருந்து வந்தாலும், தெற்கே இருந்து வந்தாலும், ஊருக்கு மேற்கே உயர்ந்த கரையோடு கூடிய பெரிய ஏரி நம் கண் முன் வரும்.

அந்த ஏரியின் மறுகாலே கல்லாறு என்ற பெயரோடு ஒரு பெரிய நதியாக ஓடுகிறது என்றால் கேட்டானேன். இந்த ஏரி தமிழ்நாட்டிலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. கரையின் நீளம் 12960 அடி. அதன் நீர்ப்படி பரப்பு பதின்மூன்று சதுர மைல். ஏரி நீர் நிறைந்தால் நூறு அடிக்கு மேல் ஆழம். ஏரிக்கு ஐந்து மதகுகள். அந்த மதகுகள் வழியாகப் பாய்ந்து பெருகும் தண்ணீர் வளர்பிறை அருங்குணம் முள்ளி முன்னத்திக்குப்பம் மதுராந்தகம் முதலிய ஊர்களிலுள்ள 2702 ஏக்கர் நன்செய் நிலங்களில் மூன்று போகம் நெல் விளைவுக்குப் பயன்படுகிறது.

இந்த ஏரியின் தண்ணீர் வழிந்தோட அமைந்திருக்கும் கலிங்கல் நூற்று ஐம்பதடி நீளம் என்றால் ஏரியைக் கொஞ்சம் கற்பனை பண்ணி மானசீகமாகவே பார்த்துக் கொள்ளலாம் தானே. இந்தத் தலத்தில் நாம் முதன் முதலில் காண வேண்டுவது கோதண்டராமன் கோயிலையல்ல, இந்தப் பெரிய ஏரியையும் அல்ல. இந்த ஏரியில் உள்ள இந்தக் கலிங்கலைத்தான். ஆம்! இந்தக் கலிங்கலில்தானே கோயிலினுள் சிலை உருவில் நிற்கும் ராமனும் லக்ஷ்மணனும் சோதி வடிவிலே காட்சி கொடுத்திருக்கிறார்கள் - வெள்ளைக்காரக் கலெக்டர் கர்னல் பிளேசுக்கு.

இந்த ராமன் காரியமே இப்படிதான். நாளும் ராம நாமத்தையே ஸ்மரணை செய்து கொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தரிசனம் தர மாட்டான். ஆனால் அவனைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைக்காதவர்களைத் தேடிப் பிடிக்க ஓடுவான். ராமதாஸின் சரித்திரம்தான் தெரியுமே! அல்லும் பகலும் அனவரதமும் துதித்து! பத்ராசலத்தில் கோயில் எடுப்பித்த அந்தக் கோபண்ணாவின் கனவில் கூடத் தோன்றாத அவன், ஹைதராபாத்தில் உள்ள பாதுஷாவான மன்னனை நோக்கி விரைந்திருக்கிறான். அவனுக்குத் தரிசனம் தந்திருக்கிறான். மோகாராக்களாகவே அவன் முன் கொட்டியிருக்கிறான் என்றால் கேட்பானேன், ஆனால் இந்தக் கலெக்டர் பிளேசுக்குத் தரிசனம் தந்தது மிக்க ரசமான கதை.

மதுராந்தகத்து ஏரி பெரிய ஏரிதான் என்றாலும், இந்த ஏரிக்கு ஒரு சாபமோ என்னவோ, வருஷா வருஷம் கரை உடைத்துக் கொள்வது தவறுவது இல்லை. பெரும் பொருள் செலவில் ஏரிக் கரையைப் பழுது பார்ப்பார்கள், இங்குள்ள மராமத்து இலாகா அதிகாரிகள்,

என்றாலும் நல்ல ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பெய்து ஏரி நிறைந்து விட்டால், ஒரே கவலைதான். எங்கேயோ ஓர் இடத்தில் பிய்த்துக் கொண்டு கரை உடையும். தண்ணீரெல்லாம் வெளியே ஓடும். வழியிலுள்ள பயிர்களை அழிக்கும். மாடு மனை மக்களையெல்லாம் வாரிக் கொண்டே போய் விடும். ஏரியில் உள்ள தண்ணீர் எல்லாம் இப்படி வந்து விட்டால் பயிர் விளைவதேது? நிலவரி வசூலாவது ஏது? இதனால் எல்லாம் சர்க்காருக்கு ஒரே நஷ்டம். கலெக்டர்களுக்கோ ஓயாத தலைவலி,

1795-1798 வருஷங்களில் செங்கல்பட்டு ஜாகீரில் கலெக்டராக இருந்தவர், கர்னல் லயனல் பிளேஸ் என்ற ஆங்கிலத் துரை. இவருக்கு இந்த மதுராந்தகம் பெரிய ஏரிக் கதை தெரியும். அவர் கலெக்டராக வந்த அந்த வருஷத்திலே (1795இல்) ஏரி உடைப்பு எடுத்து அதனால் மக்களுடன் சர்க்கார் அடைந்த நஷ்டங்களைப் பற்றி. விவரமான குறிப்புகளைப் படித்திருக்கிறார்.

ஆதலால் 1798இல் இந்த ஏரிக் கரையைப் பலப்படுத்த விசேஷ சிரத்தை எடுத்திருக்கிறார். மழை காலம் முழுதும் இங்கேயே மராமத்து இலாகா அதிகாரிகளுடன் முகாம் செய்வது என்று திட்டமிட்டுக் கொள்கிறார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முனைந்திருக்கிறார். அப்படி முகாம் பண்ணிய போது, ஏரியை நகரையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தவர், கோதண்டராமசாமி கோயில் வாயிலுக்கு வந்திருக்கிறார்.

கோதண்டராமன்

கோயில் கோபுரம் எல்லாவற்றையும் கண்டு அதிசயித்து நின்ற துரைமகனை அர்ச்சகர்களும் ஊர்ப் பிரமுகர்களும் கோயிலுக்குள் வந்து மற்ற அழகுகளையும் காண அழைத் திருக்கின்றனர். அவரும் காலில் உள்ள பாதரட்சைகளை யெல்லாம் கழற்றி வைத்து விட்டுக் கோயிலுக்குள் நுழைந்து வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு ஓரிடத்தில் கருங்கற்கள் பல குவித்து வைத்திருப்பதைப் பார்த்து, 'இவை ஏன் இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன?' என்று கேட்டிருக்கிறார். அங்குள்ளவர்கள், இங்கு கோயில் கொண்டிருப்பவர் சக்கரவர்த்தித் திருமகனான ராமன். அவருடைய தர்ம பத்தினி ஜானகிக்கு என்று ஒரு தனிக் கோயில் இல்லை. அந்தத் தாயாருக்கு ஒரு கோயில் கட்டலாம் என்றே கல் எல்லாம் சேகரித்தோம். ஆனால் கட்ட முடியவில்லை. வருஷா வருஷம் விளைச்சல் இல்லாத காரணத்தால், மக்களிடம் போதிய பணம் வசூலிக்க முடியவில்லை. கோயில் கஜானாவிலும் பலம் இல்லை, அதனால்தான் எடுத்த காரியம் தடைப்பட்டுக் கிடக்கிறது!' என்று சொல்கிறார்கள்.

இதை யெல்லாம் கேட்ட கலெக்டரோ, கொஞ்சம் ஏளனமாகவே, 'என்ன, ஐயா! உங்கள் சாமிக்கு இந்த ஏரி உடையாமல் பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை. இவருக்கு ஒரு கோயில், இவர் மனைவிக்கு ஒரு கோயில்! இது எல்லாம் வீண் பண விரையந்தானே?' என்று பேசியிருக்கிறார்.

இதைக் கேட்ட அர்ச்சகர்கள் துடிதுடித்து, 'துரைவாள்! இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. எங்கள் ராமன் இக்கலியுகத்தில் கண் கண்ட தெய்வம். அவனை உள்ளன்போடு ஆராதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை யெல்லாம் முட்டின்றி அருளுவான்!' என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஏரிக்கரை நினைவாகவே இருந்த கலெக்டர் இதைக் கேட்டு, 'சரி. உங்களுக்கும் உங்கள் ராமனுக்குமே ஒரு சவால். நான் உள்ளன்போடு உங்கள் ராமனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த வருஷத்து மழையில் இந்த ஏரிக்கரை உடையாமல் இருந்தால், நானே இந்த ராமன் மனைவி ஜானகிக்குக் கோயில் கட்டித் தருகிறேன். பார்ப்போம், இதை!' என்று சொல்லிவிட்டு, முஸாபரி பங்களாவுக்குத் திரும்பி விடுகிறார்.

அன்றிரவே நல்ல மழை. மறுநாள் காடுமேடு எல்லாம் நீர் வழிந்து ஓடுகிறது. ஏரியில் தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டே இருக்கிறது. கலெக்டர் கருணாகரமூர்த்தியை மட்டும் நம்பிச் சும்மா இருந்து விடவில்லை. மராமத்து இலாகா அதிகாரிகள் அத்தனை பேரையும் ஏரிக்கரையில் பல இடங்களில் காவல் போட்டுக் கரை எங்கே உடைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறதோ, அந்தப் பாகத்தை யெல்லாம் பலப்படுத்த முஸ்தீபுகள் செய்கிறார்.

பகல் முழுதும் மழை பெய்கிறது: இரவும் நிற்கக் காணோம். கலெக்டருக்கு ஒரே கவலை, இரண்டாம் நாளும் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் சோர்வு இல்லாமல் கரையைக் காவல் காப்பார்களா என்று. ஆதலால் அவர்களைச் சடுதி பார்க்க இரவு பத்து மணிக்குக் கலெக்டர் புறப்படுகிறார் - குடை ஒன்றை எடுத்துக் கொண்டு. தாசில்தார், டபேதார் மற்றும் ஊர்க்காரர் சிலரும் கலெக்டர் பின்னாலேயே வருகிறார்கள். எல்லோருமே ஏரிக்கரை மீது நடக்கிறார்கள் - கொட்டுகிற மழையிலே.

கலிங்கல் பக்கம் வந்ததும் துரை தம் கையிலுள்ள குடையையும் தொப்பியையும் எறிந்துவிட்டு, மண்டியிட்டுக் கூப்பிய கையராய்த் தொழுது கொண்டு இருக்கிறார். பக்கத்தில் உள்ளவர்கள் துரை வழுக்கி விழுந்து விட்டார் போலும் என்று எண்ணி, அவரைத் தூக்கி விட முனைகிறார்கள்.

அவரோ, 'அடே முட்டாள்களே! அதோ பாருங்கள். கலிங்கலின் இரு பக்கத்திலும் தேஜோமயமான இரண்டு வீரர்கள் அல்லவா நின்று காவல் புரிகிறார்கள். அவர்கள் வில்லேந்தி நிற்கின்ற அழகுதான் என்ன! முகத்தில்தான் எத்தனை மந்தஹாசம்!' என்று கூவவே ஆரம்பித்து விடுகிறார்.

பக்கத்தில் நிற்கும் பக்தர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கலெக்டருக்குக் கிடைத்த கோதண்டராம தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கலெக்டரும் மக்களும் ஊர் திரும்புகிறார்கள்.

அன்று ஏரிக்கரை உடையவில்லை. கலெக்டரும் தான் சொன்ன சொல்லை நிறைவேற்ற மறக்கவில்லை. ஜானகிக்கு ஒரு கோயிலைத் தம்முடைய மேற்பார்வையிலேயே கட்டி முடித்துக் கொடுத்து விட்டுத்தான் தம் தாய் நாட்டுக்குக் கப்பல் ஏறி இருக்கிறார். இந்தத் தருமம் கும்பினி ஜாகீர் கலைக்டர் கர்னல் லயனல் பிளேஸ் துரை அவர்களது என்று கோயில் மண்டபத்திலே கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் அங்கு செல்பவர்கள் காணலாம். கலெக்டர் வேண்டுகோளுக்கு இரங்கி ஏரிகாத்த இந்த ராமனையே ஏரிகாத்த பெருமாள் என்று இன்றும் அழைக்கிறார்கள் மக்கள்.

இத்தனை விஷயங்களும் தெரிந்த பின், இனி நாமும் கோயிலுள் செல்லலாம். கம்பன் கண்ட கோதண்டராமனை, ஏரி காத்த பெருமாளைக் கண்டு வணங்கலாம். கோயிலுக்கு முன்னாலே பெரிய திருக்குளம். குளக்கரையில் எல்லாம் நல்ல தென்னஞ் சோலைகள். இந்தச் சோலைகளுக்கும் ஏரிக்கரைக்கும் இடையிலே கோயில்.

இந்தக் கோயிலிலே மூலவர் கோதண்ட ராமன். உற்சவ மூர்த்தி இருவர், ஒருவன் கருணாகரன். மற்றொருவன் கோதண்டராமன். இவர்களிடையே ஒரு பெரிய வேற்றுமை. கோதண்டராமனோ ஏக பத்தினி விரதன். கருணாகரனோ இரண்டு பெண்டாட்டிக்காரன். ஸ்ரீதேவி பூதேவி சமேதனாக அவன் நிற்கிறான். ஆனால் இந்தக் கருணாகரன் ராமன் வணங்கிய நாராயணமூர்த்தி என்கிறார்கள்.

கோதண்டராமன் கோயிலுக்கு வலப்பக்கத்திலே ஜனகவல்லித் தாயாரின் கோயில், இதைத்தான் கலெக்டர் லயனல் பிளேஸ் கட்டியிருக்கிறார். இத்தலம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உயர்ந்த ஸ்தலம். அங்குதான் இராமானுஜருக்குப் பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரம் என்னும் வைஷ்ண தீக்ஷை செய்து வைத்திருக்கிறார். தீக்ஷை நடந்த இடம் மகிழ மரத்தடியில். அந்த மகிழ மரமும், ஸ்தலப் பெயரான வகுளாரண்யம் என்பதை நிலை நிறுத்த அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.

இந்த மகிழடியையே ஸ்ரீ வைகுண்ட வர்த்தனம் என்று அழைக்கிறார்கள். கம்பன் கண்ட கருணாகரனை, கோதண்ட ராமனை, இளைய பெருமாளுடன் நிற்பவனைத் தரிசித்துவிட்டு வருவதுடன் பெரிய நம்பி, இராமானுஜர், மகிழடி எல்லோரையும் சேவை செய்து திரும்பலாம்.

இந்த மதுராந்தகம் சோழ மண்டலத்தை ராஜராஜனுக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்னும் மதுராந்தகச் சோழனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக விடப்பட்டு, மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்று நிலை பெற்றிருக்கிறது.

மூலவர் கோயில் அப்போதே எழுந்திருக்க வேண்டும். பின்னர் வந்த சோழ மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் விரிவடைந்திருக்கிறது. இதை அர்ச்சகர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மதுரசம் பொருந்திய புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த நகரம் ஆதலால்தான் மதுராந்தகம் என்பார்கள். நாம் அவர்களோடு சண்டைக்குப் போக வேண்டாம்.