வேங்கடம் முதல் குமரி வரை 2/சொன்னவாறு அறிவார்
சொன்னவாறு அறிவார்
பாரதியார் பாடல்களிலே பாரதி அறுபத்தாறு என்று ஒரு பாடல். பல விஷயங்களைப்பற்றி அவரது சொந்த அபிப்பிராயங்கள் நிறைந்தது அது. அந்தப் பாடலில் காதலின் புகழைப் பாடுகிறார் கவிஞர்.காதலினால் மானுடர்க்குக்
கவிதை உண்டாம்;
கானம் உண்டாம்; சிற்பமுதல்
கலைகள் உண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர்
உலகத்தீரே!
என்று உலகோரைக் கூவியழைத்துக் கூறியிருக்கிறார். மேலும் காதலைப் பற்றிப் பேசும்போது,
நாடகத்தில் காவியத்தில்
காதல் என்றால்,
நாட்டினர்தாம்வியப்பு எய்தி
நன்று ஆம் என்பர்
வீடகத்தே, வீட்டில் உள்ளே
கிணற்று ஓரத்தே
ஊரினிலே காதல் என்றால்
உறுமுகின்றார்!
அவர் கட்டளை இட்டபடியே காவிரிக்கரையிலே பரதமுனிவர் இயற்றிய வேள்விக் குண்டத்திலே அம்மை பெண்மகளாக அவதரிக்கிறாள். வளர்கிறாள். வளர்ந்து பருவமங்கையானதும் காவிரிக்கரையிலேயே மணலால் லிங்கம் அமைத்துப் பூஜிக்கிறாள். குறித்தகாலம் வந்ததும், அம்மையின் பூஜையை மெச்சி, லிங்கவடிவிலிருந்து இறைவன் மானிட உருவில் எழுகிறார். தமக்கு உரியவள்தானே என்று கொஞ்சலாக, அவளது கரத்தைப் பற்றுகிறார். அம்மையோ நாணிக்கோணிக்கொண்டு 'இது என்ன? இப்படிக் கையைப் பிடித்து, கன்னத்தைக் கிள்ளியா காதல் பண்ணுவது? நாலுபேர் அறிய என் தந்தையிடம் வந்து பெண் பேசி அல்லவா என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அதையல்லவா நான் விரும்பினேன்' என்கிறாள். 'சரி, அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி மறு நாள் பரத முனிவரை அவரது குமாரியாம் நறுஞ்சாந்து இள முலையைப் பெண்கேட்டுச் சம்பிரமமாகத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் அன்னையும் அத்தனும் அந்தர்த்தியானம் ஆகிவிடுகின்றனர். அப்படி பூலோகத்துக்கு வந்து திரும்பவும் பார்வதியை மணம் முடித்துச்சென்றவரே 'சொன்னவாறு அறிவார்' என்ற பெயருடன் நிலைக்கிறார். நல்ல காதல் கதை. இறைவரது வாழ்விலும் அல்லவா இக்காதல் புகுந்திருக்கிறது. இந்தச் சொன்னவாறு அறிவார் கோயில் கெண்டிருக்கும் தலம் திருத்துருத்தி, அத்திருத் துருத்திக்கே செல்கிறோம் நாம் இன்று.
துருத்தி என்றாலும் திருத்துருத்தி என்றாலும் பூகோளப் படத்திலே ஊரைக்கண்டுபிடித்தல் இயலாது. தஞ்சை ஜில்லாவிலே உள்ள குத்தாலம் என்ற ஊரின் பெயரே அக்காலத்தில் துருத்தி என்று இருந்திருக்கிறது. துருத்தி என்றால் ஆற்றில் இடைக்குறை, அதாவது தீவு என்று அர்த்தம். காவிரி நதியிலே ஒரு சிறு தீவாக இத்தலம் இருந்திருக்க வேண்டும். பின்னரே காவிரி கோயிலுக்கு வடபக்கம் மாத்திரம் சென்றிருக்கவேண்டும். அந்தத் துருத்தி எப்படிக் குத்தாலம் ஆயிற்று? சொன்னவாறு அறிவார் வந்து நின்ற இடம், உத்தாலம் என்னும் ஒருவகை ஆத்தி மரத்தடியிலே. அந்த உத்தாலமே பின்னர் குத்தாலம் ஆகி, அதன்பின்னர் தென்பாண்டி நாட்டிலே தென்காசியை அடுத்து வட அருவியைக் கொண்ட திருக்குற்றாலத்துக்கு ஒரு போட்டிக் குற்றாலமாக விளங்குகின்றது இன்று. இந்தக் குத்தாலம், மாயூரம் தஞ்சை ரயில் பாதையில் மாயூரத்துக்குத் தென் மேற்கே ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. நல்ல ரயில், ரோடு வசதியெல்லாம் உடைய பெரிய ஊர்தான். எளிதாகவே சென்று சேரலாம். இந்தக் குத்தாலத்திலே மூன்று கோயில்கள். எல்லாமே சோழ மன்னர்கள் கட்டிய கற்றளிகள். சொன்னவாறு அறிவார் கோயில், கண்ட ராதித்த சோழதேவரது மனவிை சிவபக்த சிரோன்மணி, செம்பியன் மாதேவி எடுப்பித்தது. சோளேச்சுரர் கோயில் என்று அழைக்கப்படும் விக்கிரம சோழீச்சுரம் விக்கிரம சோழனால் எடுப்பிக்கப்பெற்றது. ஓங்காரேச்சுரம் என்னும் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஆளுடைய நாயகரான பிள்ளை செயதரப்பல்லவராயர் கட்டியது. மூன்று கோயில்களுக்கும் போக அவகாசமிருப்பவர்கள் போகட்டும். நாம் இத்தலத்தின் பிரதான கோயிலான சொன்னவாறு அறிவார் கோயிலுக்குச் செல்வதோடு திருப்தி அடையலாம். கோயில் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் எல்லாம் நடந்திருக்கிறது. கோயில், கோயில் பிரகாரங்கள் எல்லாம் வெகு நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கும். பார்த்த உடனேயே 'இது தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த கோயிலோ?' என்று கேட்கத் தோன்றும். அந்த ஆதீனக் கோயில்களில் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொள்வோம்.
இங்குள்ள கோயில் மேற்கே பார்த்த சந்நிதி. கோயில் ராஜகோபுரத்தைக் கடந்ததும் நம்முன் நிற்பது உத்தால மரமும் அதைச் சுற்றிக் கட்டிய பீடமும்தான். அந்த மரத்து அடியிலே இரண்டு திருவடிகள் (ஆம்! பாதரக்ஷைதான் ) இருக்கின்றன . இறைவியை மணக்க வந்த இறைவன் பாத ரக்ஷைகளைக் கழற்றி விட்டுத் திருமணம் செய்திருக்கிறார். திரும்ப அந்தர்த் தியானமாகும் போது பாத ரக்ஷையைக் காலில் மாட்டிக் கொள்ள மறந்திருக்கிறார். அவர் மணந்த அந்த நறுஞ்சாந்து இளமுளையாளும் அத்திருவடிநிலைக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறாள், பக்கத்திலேயே தெற்கு நோக்கியவளாக அத்தலத்து இறைவியான அரும்பன்ன வளமுலையாள் சந்நிதி. இன்னும் அந்த முற்றப் பெருவழியிலேயே தலத்துப்பிள்ளையார் துணைவந்த விநாயகர் இருக்கிறார். இவர்தான் அத்தன் அம்மையை மணக்க வந்தபோது உடன் வந்திருக்கிறார். (நல்லபிள்ளை, தகப்பனார் தாயாரைத் திருமணம் செய்து கொள்ள, ஆம். இரண்டாம் தடவையாகத் தான் வரும்போது தனயனான இவரும் அல்லவா உடன் வந்திருக்கிறார்.) இந்தத்தாயார், பிள்ளையையெல்லாம் வணங்கியபின் உட்கோயிலில் நுழையலாம். வாயிலில் இருக்கும் துவார பாலகர்கள் கம்பீரமானவர்கள்; நல்ல வண்ண வண்ண உடைகளை அணிந்தவர்கள். அவர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டே அர்த்த மண்டபம் சென்று லிங்கத் திருவுருவில் உள்ள சொன்னவாறு அறிவாரைத் தரிசிக்கலாம். இவர் நல்ல வரப்பிரசாதி என்பதையும் அறியலாம். 'தொட்டது துலங்காது; தீண்டிய பொருள்கள் யாவுமே தீய்ந்து சாம்பலாகும்' என்ற பழிநீங்க அக்கினி இத்தலத்தில் வழிபட்டுப் பழிபோக்கிக் கொண்டிருக்கிறார்.
விக்கிரம சோழனுடைய மனைவி கோவளைக்குக் குட்டம் நீங்கியிருக்கிறது இங்கே. வருணனது சலோதரம் என்ற பெரு வியாதி நீங்கியதும் இங்கேதான். இன்னும் சூரியனுக்கும் பரத முனிக்கும் மற்றும் பலருக்கும் இருமை இன்பத்தை அளித்தவர் இத்தலத்து இறைவனே என்று தலவரலாறு கூறும். இத்தலத்துக்கு, சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள்; பதிகங்கள் பாடி இருக்கிறார்கள்.
உன்னி எப்போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்துமின்னோ,
கன்னியை ஒருபால் வைத்து
கங்கையைச் சடையுள்வைத்து
பொன்னியின் நடுவதன்னுள்
பூம்புனல் பெழிந்து தேன்றும்
துன்னிய துருத்தியானைத்
தொண்டனேன் கண்டவாறே.
என்பது அப்பர் தேவாரம். சம்பந்தரும் அப்பரும் சும்மா தல யாத்திரையில்தான் இங்குவந்திருக்கிறார்கள். சுந்தரரோ, சங்கிலிக்குக் கொடுத்த சத்தியம் தவறி அதனால் கண்ணிழந்து, உடல் நலிந்து வந்திருக்கிறார். இழந்த கண்களைக் கச்சியிலும், திருவாரூரிலும் பெற்றிருக்கிறார். ஆனால் இத்துருத்தி வந்து இங்குள்ள பதும தீர்த்தத்தில் முழுகி எழுந்தே உடற்பிணி தீர்ந்திருக்கிறார்.
சொன்னவாறு அறிவார் துருத்தியார், :வேள்விக்குடியுளார் அடிகளைச்
செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு?
எம்பெருமானை என்னுடம்படும்
பிணியிடர் கெடுத்தானை!
என்றே பாடியிருக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் எல்லாம் இன்றையக் கொத்தர்களால் செய்த வையே. பழைய செப்புப் படிமங்கள் அதிகம் இல்லை. இருப்பவைகளில் மிக்க அழகு வாய்ந்தது கண்டீசரது வடிவமே.
இக்கோவிலில் மணக்கோலநாதர் வடிவைத் தேடினேன். கிடைக்கவில்லை. அவர்தான் உத்தால மரத்தடியிலேயே பாதரக்ஷையைக் கழற்றிவிட்டு அந்தர்த்தியானம் ஆகியிருக்கிறாரே, அத்துடன் இன்னொரு செய்தியுங்கூட. இத்தலத்தில் மணக்கோலநாதர் பகல் நேரத்தில் மாத்திரமே இருப்பாராம். இரவு நேரத்தில் பக்கத்தில் உள்ள வேள்விக் குடிக்குச் சென்று விடுவாராம். இப்படிப் பகலில் ஓரிடத்தும், இரவில் ஓர் இடத்தும் தங்குவதற்குக் காரணமும் என்னவோ? இவர்தான் ஏகபத்தினிவிரதர் ஆயிற்றே, மைத்துனன் விஷ்ணுவைப் பின்பாற்றாதவராயிற்றே. அப்படி இருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? எனக்குத் தோன்றுகிறது. உத்தால மரத்தடியில் தோன்றி நறுஞ்சாந்து இளமுலையை மணந்தவர் மறைந்தாரே ஒழிய, ஓடிவிட வில்லை. பக்கத்தில் உள்ள வேள்விக் குடியிலேயே பரிமள சுகந்த நாயகியுடன் கல்யாணக்கோலத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். அதனால்தானே, இத்தலத்துக்கு வந்த சம்பந்தர், இந்தத் துருத்தியாரையும் அந்த வேள்விக்குடியாரையும் சேர்த்தே பாடியிருக்கிறார் ஒரு பதிகத்தில்,
கரும்பன வரிசிலைப் பெருந்தகை
காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்
கொன்றை அம் சுடர்ச்சடையார்,
அரும்பனவனமுலை அரிவையோடு
ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பிடம் துருத்தியார், இரவு இடத்து
உறைவர் வேள்விக்குடியே.
வந்ததே வந்தோம், இந்த வேள்விக்குடி, அதை அடுத்து இருக்கும் திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி எல்லாம் சென்று அங்குள்ள மூர்த்திகளையும் வணங்கியபின் திரும்பலாமே, என்ன? கொஞ்சம் நடக்கலாம் தானே. இங்கெல்லாம் செல்வதற்கு கார் உதவாது, ஜீப் இருந்தால் நல்லது. இல்லை வண்டிகளில்தான் செல்லவேண்டும். காலில் வலுவுள்ளவர்கள் நடந்தே செல்லலாம். குத்தாலத்துக் கோயிலைவிட்டுப் புறப்பட்டு, அக்கோயிலுக்கு வடபால் உள்ள காவிரியையும் கடந்து வட கீழ் திசை நோக்கி மூன்று மைல் சென்றால் வேள்விக்குடி வந்து சேரலாம். கோயில் சிறிய கோயில்தான். கல்யாணக் கோலத்தில் இறைவன் இங்கு எழுந்தருளியதற்குக் காதல் கீதம் ஒன்றும் இடைபுகவில்லை . ஓர் அரசகுமாரன்; அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயிக்கின்றனர். திருமணம் நடக்குமுன்னமே அரசிளங்குமரனின் தாய் தந்தையர் இறந்து விடுகின்றனர். அதனால் பெண்ணின் சுற்றத்தார் பெண் கொடுக்கத் தயங்குகின்றனர். இறைவனோ அரச குமாரனின் காதல் தாபத்தை அறிவார். அவரே அந்த நோய் வாய்ப் பட்டவர் என்பதைத்தான் முன்னமே பார்த்திருக்கிறோமே. அவர் சும்மா இருப்பாரா? தமது பூதகணங்களை விட்டு இரவுக்கிரவே பெண்ணைத்தூக்கிவரச்செய்து வேள்வி நடத்தித் திருமணத்தையும் முடித்து வைக்கிறார். பின்னர் தாமும் துணைவியுமாகத் திருமணக் கோலத்திலேயே நின்றுவிடுகிறார். இந்தக் கோயிலில் நல்ல அருமையான செப்புச் சிலைகள் பல இருக்கின்றன.
எல்லாவற்றிலும் மிக்கச் சிறப்பு வாய்ந்தது கல்யாண சுந்தரர், பரிமள சுகந்த நாயகியார் சிலைகள்தாம். புது மணப் பெண்ணாம் அந்த அம்மையின் ஒவ்வொரு அங்கமுமே நாண உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஆம்! திருமணத்துக்கு முன்பு கைதொட்டதற்கே கோபித்துக் கொண்டவள் ஆயிற்றே அவள். மணம் முடித்துக் கைப் பிடித்து அழைத்துச் செல்லும் போது நாணம் வந்து புகுந்து கொள்ளாதா அவள் அங்கங்களில்? தமிழரின் சிற்பக் கலை உலகிலே ஓர் அற்புதப்படைப்பு இந்த வடிவம்.
இதைப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே அங்குள்ள அர்ச்சகர் சொல்வார் 'இன்னும் கொஞ்சம் நடந்தால் திருமணஞ்சேரிக்கும் போய் வந்துவிடலாம்' என்று. 'என்ன? ஒரே திருமண மயமாக இருக்கிறதே இந்த வட்டாரம்?' என்று எண்ணுவோம். சந்தர்ப்பத்தை விட்டு விடாமலே மேலே நடக்கலாம். திருமணஞ்சேரிக்கு இரண்டு வழி. வேள்விக் குடியிலிருந்து இரண்டு மைல் மேற்கு நோக்கி நடக்கவேணும். நடக்கத்தான் வேண்டும். வண்டிகூடப் போகாது அந்தப் பாதையில். இடையில் வரும் விக்ரமன் ஆற்றையும் கடக்க வேணும். நடக்கவே இயலாது என்பவர்கள், வேள்விக் குடியிலிருந்து குத்தாலம் வரும் வழியில் இரண்டு மைல் வந்து விக்ரமன் ஆற்றைக் கடந்து எதிர்கொள்பாடி வழியாக இரண்டு மைல் செல்லவேண்டும். இரண்டாவது வழியிலேயே போகலாம் நாம். வழியிலுள்ள மேலைத் திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடியில் உள்ள ஐராவதேசுவரர், மலர்க்குழல் மாது அம்மையையும் வணங்கிவிட்டே செல்லலாம். வேள்விக் குடியில் திருமணம் செய்து கொண்டுதன் நகர் திரும்பிய அரச குமாரனை, அவனுடைய மாமனார் உருவில் எதிர்கொண்டு உபசரித்திருக்கிறார் இத்தலத்து இறைவன். அதனால் இத்தலமே எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றிருக்கிறது. கோயிலிலே இப்போது திருப்பணி வேலை மும்முரமாக நடப்பதால் நம்மை எதிர்கொண்டு அழைக்க ஒருவருமே இருக்கமாட்டார்கள். நாமும் அதை எதிர்பாக்காமலேயே நடந்து கீழைத்திருமணஞ்சேரிக்கே சென்று சேரலாம். கோயில் பெரிய கோயில். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள் வள்ளல் நாயகரும், யாழின் மென்மொழி அம்மையும். இத்தலத்திலே மன்மதன் பூஜித்திருக்கிறான். ஒன்றுக்கு மூன்றாகத் திருமணம் நடந்திருக்கிறதே இந்த வட்டாரத்தில், மன்மதன் பூஜியாமல் இருப்பானா? இங்கும் இறைவன் மணக்கோலத்திலேயே இருக்கிறார்.
இத்தலத்தில் மணக் கோலம் கொண்டதற்குக் கதை இதுதான்: வைசிய குலத்திலே இரண்டு பெண்கள். ஒருத்தி மற்றொருத்திக்கு நாத்தி, இவர்கள் இருவரும் ஒருங்கே கருப்பமுறுகிறார்கள். அப்போது தமக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவருக் கொருவர் சம்பந்தம் செய்து கொள்வது என்று பேசிக்கொள்கிறார்கள். ஒருத்தி பெண்ணைப் பெறுகிறாள். மற்றொருத்தி யோ ஆமை போன்ற மகனைப் பெற்றெடுக்கிறாள். அதனால் பின்னர் பெண்பெற்றவள் ஆமைக்குமரனுக்குப் பெண் கொடுக்க மறுக்கிறாள். ஆமைக் குமரனோ பெருமானைப் பூஜிக்கிறான். ஆமை உரு நீங்கிக் குறித்த பெண்ணை மணக்கிறான். இந்த மணத்தையும் முடித்துவைத்த காரணத் தால் இங்குமே மணக்கோலத்தில் எழுந்தருளி விடுகிறார். இக்கோயிலிலுமே மணக்கோலநாதர் செப்புப்படிமம் அழகு வாய்ந்தது. இங்கு நல்ல செப்புச்சிலைகள் பல இருக்கின்றன. நடராஜர் இருக்கிறார். வீரசக்தி அம்மனும் இருக்கிறாள் தன் தோழியருடன். இந்தச் சொன்னவாறு அறிவார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதோடு, சொல்லாத சொல்லையும் அல்லவாகாப்பாற்றுகிறார். தான்தான் சொன்ன சொல்லைக் காப்பாற்ற நறுஞ்சாந்து இளமுலையைக் கல்யாணம் செய்து கொள்கிறார். அத்துடன் வேறு இரண்டு திருமணங்களையும் நடத்தி வைத்து மகிழ்கிறார். ஆதலால் திருமணம் விரும்பும் வாலிபர் - பெண்கள் எல்லாம் இத்தலங்களுக்குச் செல்லலாம். அதன்பயனாக விரைவிலேயே திருமணம் நடக்க அருள் பெறலாம். ஆம்! சொன்னவாறு அறிவார்தான் ஒரு 'மாட்ரிமோனியல் பீரோ' வே நடத்துகிறவர் ஆயிற்றே!