வேங்கடம் முதல் குமரி வரை 2

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



வேங்கடம் முதல் குமரி வரை

(இரண்டாம் பாகம்)

– பொன்னியின் மடியிலே –



கலைமாமணி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்
சென்னை - 600017



RS. 80.00

VENKATAM MUTHAL KUMARI VARAI (Part II)
by
Τho. Μu. ΒΑSΑΚΑRΑ ΤΟΝDΑΙΜΑΝ

First Edition : 1960
Second Edition : 1964
Third Edition : 2000
Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T. Nagar, Chennai - 600 017

Laser by
Guru Computers,
Chennai- 24.

Printed at
Sakthi Printers,
Chennai - 600 021.

முன்னுரை

வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் 'பொன்னியின் மடியிலே' என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு ரஸிக நண்பர்களே. 'கல்கி'யில் வெளிவரும் தொடர் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவற்றையெல்லாம் தொகுத்து புத்தக உருவில் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்று கடிதத்திற்குமேல் கடிதம் எழுதிய அன்பர்கள் பலர். முதல் புத்தகம் வெளிவந்த உடனே 'இந்த ஆண்டின் அருமையான புத்தகம் இது' என்று பாராட்டி அதற்கு ஆயிரம் ரூபாய் பரிசொன்றையும் தந்து ஊக்குவித்தவர் சென்னை அருணாசலம் படத்தயாரிப்பாளர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள். இவர்கள் எல்லாம் காட்டிய ஆர்வமும், தந்த ஊக்கமுமே பொன்னியின் மடியிலே இச்சிறு குழந்தையையும் தவழவிடும் பாக்கியத்தைத் தந்திருக்கிறது எனக்கு.

வேங்கடத்தில் ஆரம்பித்து மதுராந்தகம் வரை தொண்டை நாட்டில் நடத்திய தல யாத்திரையே பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்பில் வெளிவந்தது, அத்தலயாத்திரையின் இரண்டாவது சுற்று, நடு நாட்டில் உள்ள மயில மலையில் துவங்கி, தெய்வப் பொன்னி பாய்ந்து பெருகும் சோழநாட்டின் வடகீழ்ப் பகுதிகளையெல்லாம் கடந்து. கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் நிறைவுற்றிருக்கிறது. பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்தவள் தமிழ் அன்னை . நமது தலயாத்திரையும் பாலாற்றின் மருங்கிலே பிறந்து, பொன்னியின் மடியிலே தவழ்ந்து. காவிரிக் கரையிலே நடந்து, பொருநைத் துறையிலே கொலுவீற்றிருக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் இனிவர இருக்கும் இரண்டு புத்தகங்களும் காவிரிக் கரையிலே - பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளோடு வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படுகிற வரலாறு. விளக்கப்படுகிற கலைவிமர்சனம் எல்லாவற்றையும் பாராட்டுகிறவர்கள் பலர், இக்கட்டுரைகள் மூலம் எடுத்துக்கூறும் இலக்கிய வளத்தையும், பக்தி அனுபவத்தையும் அனுபவிப்பவர்களும் அநேகர். என்றாலும் சிலகுறைபாடுகளையும் காணுகின்றார்கள் ஒரு சிலர். அவற்றில் முக்கியமானது, ‘நாம் பக்தியோடு வணங்கும் தெய்வங்களை நையாண்டிக்கு உரிய பொருளாக்கி, அவர்களைக் கேலி பண்ணிப் பேசுவது பொருத்தமன்று. நகைச்சுவை வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் எழுதுவது தவறு என்பதுதான்.

இந்தக் குற்றச் சாட்டிற்கு நானே பதில் சொல்லவேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தை எனக்கு கொடுக்க விரும்பவில்லை இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கும் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர்கள். அவர்களிடமும் பலர் இப்படிக் குறைப்பட்டிருக்கிறார்கள் போலும். அது காரணமாக அவர்களே அந்த பக்தர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் அவர்களது முகவுரையிலே. அந்த 'ரஸிக' நண்பர்களது மனம் கோணாதபடி இவ்வளவு அழகாக என்னால் பதில் சொல்ல முடிந்திருக்காது என்பது எனக்கு இப்பொழுது தான் விளங்குகிறது. இந்தத் திருத்தொண்டைச்செய்ததற்காகவும் நல்ல முகவுரை ஒன்றையும் வழங்கியதற்காகவும் பேராசிரியருக்கு, 'செந்தமிழ்ச் செம்மலுக்கு' என் இதயம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'இத்தொடர் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் என்ன?' என்று எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் கேட்கிறார். அப்படி பெரிய நோக்கம் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை தலவரலாறுகளைப் படிப்பவர்கள் உள்ளத்தில் ‘நாம் இந்தக் கோயிலைப் போய்ப் பார்க்கவேண்டும்' என்ற ஆவலை இக்கட்டுரைகள் தூண்டுமானால், அது போதும் என்றே கருதுகிறேன் நான். மேலும் கோயில், குளம், மூர்த்தி, தீர்த்தம் இவைகளைக் காணச் செல்லும் அன்பர்கள் அங்குள்ள சிற்பச் செல்வங்களையும் கண்டு மகிழத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அதைவிட மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை, கட்டுரைகளைப் படிக்கிறவர்கள், பாராட்டுகிறவர்களில் பெரும்பாலோர் பெண்கள். எங்கள் தலைவர் ரஸிகமணி அவர்கள் சொல்கிறபடி பக்தி, பண்பாடு எல்லாம் அவர்களிடம்தானே இன்றும் நிலைத்து நிற்கிறது தமிழ் நாட்டில். இவர்கள் காட்டும் அன்பும் ஆதரவுமே தெம்புதருகிறது மேலும் மேலும் தொடர்ந்து எழுத. அவர்களுக்கு எல்லாம் என் நன்றியும் வணக்கமும்.

இந்த இரண்டாவது புத்தகத்திலே தருமபுரம் ஆதீனத்தார் கோயில்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. அக்கோயில் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறவர்கள் ஆதீன கர்த்தர் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகபராமாச்சார்ய சுவாமிகள், என்னிடம் மிக்க அன்புடையவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த 'கல்கி' ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

'சித்ரகூடம்'
திருநெல்வேலி-6
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
14.1.61

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இப்புத்தகம் வெளிவந்து மூன்று வருடங்களுக்குள் அச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் செலவாகிவிட்டன. இன்னும் புத்தகம் கேட்பவர்களுக்கு இல்லை என்னாதபடி இரண்டாம் பதிப்பையும் வெளியிடுகிறோம்.

பல யாத்திரீகர்கள் இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டே யாத்திரை துவங்குகிறார்கள். புத்தகத்தில் சொல்லியிருப்பன, கோவில்களை, அங்குள்ள வடிவங்களை, அத்தலத்தைப்பற்றிய வரலாறுகளை எல்லாம் நன்றாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்று எழுதுகிறார்கள். இப்படி எல்லாம் ஊக்குவிக்கும் அன்பர்களுக்கு என் நன்றி.

பலருக்கு புத்தகம் பயனுடையதாக இருத்தல் கண்டு மகிழ்கிறேன். இப்புத்தக வெளியீட்டை சிறப்பாக நடத்தி எனக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த தருமபுரம் மகாசன்னிதானம் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.

'சித்ரகூடம்'
திருநெல்வேலி-6
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
1.5.64

சமர்ப்பணம்


தருமபுரம் ஆதீனம்

குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக

ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்

அவர்களுக்கு

முகவுரை

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஓர் ஊமை ஆக நான்குபேர் வடவேங்கடமலை ஏறிய கதையை நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் சொல்லக் கேட்டிருப்பீர்கள். நான்கு பேரில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை, உடற் குறைதான்; ஆனால் வேங்கடவன் அருள் கிட்டியதும் உடற் குறைகள் நீங்கியது இதுவே கதை.

உடற்குறைகளைப் போக்க, உள்ளத்தில் இருந்த பக்தி உதவியது. ஆனால் உள்ளமே கூனாக, குருடாக, முடமாக, ஊமையாக இருந்து விட்டாலோ? அப்படித்தான் நம்மில் பலருக்கு இருக்கிறது. மற்றவர்களைச் சொல்வானேன்? எனக்கு அப்படி இருக்கிறது.

உடலில் குறையில்லை. கண்ணபுரத்திற்கோ, கடவூருக்கோ, தேரழுந்தூருக்கோ, திருப்புன்கூருக்கோ என்னால் போகமுடியும், போயும் இருக்கிறேன். போய் என்ன செய்ய? கோயில் வாசலில் நின்றால் போதுமா? கோயில் என்ற அற்புதம் விளக்குகின்ற உண்மை-உலகத்திற்கு, அந்த வான் முகட்டுக்கு என்னால் ஏறிவிட முடியுமா? முடியாது. ஏன் தெரியுமா? தினசரி வாழ்க்கைச் சிறுமைகளில் சிக்கி என் உள்ளம் கூனிக் குறுகிவிட்டது. அதுவே காரணம். கோபுரங்களையும், மண்டபங்களையும், சிலைகளையும், கல்வெட்டுக்களையும் நானுந்தான் பார்க்கிறேன். பார்த்து? அவற்றின் பொருளைக் காண வேண்டாமா? அதற்கு, வரலாறும், இலக்கியமும், சமயமும், தத்துவமும், எல்லாவற்றிற்கும் மேலாக அழகுணர்ச்சியும் நிறைந்த கலைக்கண் வேண்டியிருக்கிறது. அது இல்லாத உள்ளம் குருடுதானே! இது போலவே, காண்பதை எட்டிப் பிடித்துத் தன்னுடையதாக, அநுபூதியாக மாற்றிக் கொள்ள இயலாத உள்ளம் முடந்தானே! இப்படித் தவிக்கும் உள்ளம் என்னத்தைப் பேசிவிடப் போகிறது? பேசினால் ஊமையன் பேச்சுத்தான்.

இந்நிலையில்தான் நண்பர் தொண்டைமான் வருகிறார். மெல்ல நம்முடைய கையைப் பிடித்துக்கொண்டு கோயிலின் கோபுர வாசலுக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இது பெரிய காரியமில்லை. நமது உள்ளத்தைக் கோயிலின் அடித்தலமாக, அதன் பொருளாக, அதன் சோபையாக விளங்கும் சத்திய உலகத்தின் வாசலுக்கே, அதன் கருவறைக்கே அழைத்துப் போக முயல்கிறார். அங்கே, புராணமும், வரலாறும், சமயமும், கலையும், இலக்கியமும் ஒன்றாகக் கலந்து, ஒரு ஞானக் காட்சியை அமைக்கின்றன. அதைத் தொண்டைமான் காட்டுகிறார். இந்தக் காட்சியை அனுபவமாக மாற்றும் சித்து விளையாட்டும், தொண்டைமான் உதவியால் நமக்குக் கிடைக்கிறது. அப்போதுதான் நம்முடைய ஊமை உள்ளமும் பேசத் தலைப்படுகிறது. இதையெல்லாம் நமக்குக் கொஞ்சங்கூட சிரமமில்லாமல், ஆயாசமில்லாமல் இந்த மனிதர் செய்து விடுகிறார் என்றால், அதை ஒரு சாதனை என்று பாராட்டுவதிலே தவறென்ன? ஆம். நண்பர் தொண்டைமான் கையில், சமயம் வெறும் சித்தாந்தமாக இல்லாமல் சுவை பொருந்திய அனுபவம் ஆகிறது. தலைவலியைத் தவறாமல் தரக்கூடிய தத்துவ விசாரமும், வரலாற்று ஆராய்ச்சியும், தெளிந்து, எளிமையினும் எளிமையாகி, தேனாக ஓடுகின்றன. கல்வெட்டு கூடகதையாகிறது. அப்படியென்றால் இலக்கியத்தைப் பற்றிக் கேட்பானேன். அது மணங்கமழும் மெல்லிய பூங்காற்றாக நம் இதயத்தை வருடுகிறது.

“அதெல்லாம் சரிதான், ஐயா! இருந்தாலும் ஏதோ எளிமைக்காக, சுவைக்காக இப்படிக் கடவுளரை பற்றியெல்லாம் வேடிக்கை வேடிக்கையாகப் பேசி விடலாமா? பாருங்களேன் அவர் சொல்வதை: ‘மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு தேய்கிறது.' இது என்ன பேச்சு?“ இப்படி ஒரு நண்பர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். என்ன சொல்வது என்று நான் தீர்மானிப்பதற்குள் நண்பர் ஒரு போடு போட்டார்.

"திருப்பதி ஆசாமியைப் பற்றி வேண்டுமானால் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். எங்கள் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் தலையிலேயே உங்கள் தொண்டைமான் கைவைத்து விட்டாரே! என்ன சொல்கிறார் தெரியுமா, சொன்னவாறு அறிவார், அவர்தான் ஐயா! எங்கள் சிவபெருமான், ஒரு 'மாட்ரிமோனியல் பீரோ' நடத்து கிறாராம். கேட்டீர்களா கதையை“

இப்படி நண்பர் கசப்பைக் கக்கியதும், இத்தாலிய நாட்டுப் பாதிரி ஒருவர் சொன்னது எனக்கு நினைவு வந்தது. பாதிரியார் நமது நாட்டிற்குப் புதியவர், ஏதோ தற்செயலாய் ரயிலில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்னார். 'உங்கள் நாட்டுத் தத்துவஞானம் உலகப் புகழ் பெற்றது, உண்மைதான். ஆனால் இவ்வளவு தத்துவ உணர்வு பெற்ற நீங்கள் எப்படி ஆண்டுதோறும் உங்கள் கோயில்களில் திருக்கலியாண உற்சவம் கொண்டாடுகிறீர்கள்? மனவாக்குக் கடந்த அருவமாய் உள்ள இறைவனுக்கு மனைவி ஏது? கலியாணம் ஏது? இதுதான் எனக்குப் புரியவில்லை.'

எப்படி அவருக்குப் புரியும்? நம்முடைய நாட்டில் பிறந்து, நம்முடைய மரபிலே வளர்ந்த என் நண்பருக்கே புரியவில்லையே!

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பேச்சளவில் சொல்லுகிறோம். ஆனால் அவன், இங்கே நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம். இந்தத் தயக்கமே, புராணக்கதைகளை உள்ளவாறு அறிவதற்குத் தடையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் இப்படித் தயங்கவில்லை. இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தான்; பிரம்பால் அடிபட்டான், மாமனாக வந்து வழக்குரைத்தான் என்று பேசினார்கள். மீனாக, ஆமையாக, ஏன் ஆண்டாள் சொல்வதுபோல் 'மானமிலாப் பன்றி' யாகக்கூட இங்கே வந்தான்; 'அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் பிறந்து' வெண்ணெய் திருடி, கடை கயிற்றால் கட்டுண்டு, நந்த கோகுலத்தில் விளையாடினான் என்று நம்பினார்கள். கடவுள் எங்கேயோ நெடுந்தொலைவில் கைலாசத்திலோ, பரமபதத்திலோ, பரலோகராஜ்யத்தில் மட்டும் இருப்பதாக அவர்கள் எண்ணவில்லை. எல்லா இடங்களும், எல்லா நிலைகளும், அவனைக் காணத் துடிக்கும் இந்த மனித உள்ளமும், அவனுடைய இராஜ்யம் என்றே கருதினார்கள். அவர்களுக்குத் திருவையாறு கைலாயம் ஆயிற்று. திருக்கோவலூர் வீட்டு இடைகழி பரமபதமாக மாறியது. பல்வேறு காலங்களில், பல்வேறு தலைமுறைகளில், தமது வாழ்க்கையோடு பின்னிக்கிடக்கும் கடவுள் என்ற சத்தியத்தை, அந்த வாழ்க்கையை ஒளியாகக்கொண்டு, நமது முன்னோர்கள் தொட முயன்றார்கள். 'ஒரு நாமம், ஓருருவம், ஒன்றுமிலார்க்கு' ஆயிரம் ஆயிரம் பெயர் சூட்டித் தெள்ளேணம் கொட்ட முற்பட்டார்கள். எல்லா உறவுகளையும் கடந்த ஒன்றை அது இங்கும் உள்ளது என்ற உணர்வோடு, மனித உறவுகளைக் கொண்டு தேடிக் கண்டார்கள். அன்பெனும் வலையில் அகப்படும் இறைவனுடைய எளிமையை வியந்து பரவினார்கள். எத்தனை எத்தனையோ உருவகங்களால், மனித வாழ்க்கைச் செய்திகளால் அலகிலா அவனை அலகிட்டுச் சிக்கெனப் பிடித்தார்கள். இந்த முயற்சியின் விளைவுதான் புராணக்கதை.

நண்பர் தொண்டைமான் இதை நன்றாக அறிந்தவர். ஆகவேதான், இறைவனைத் தொட்டுத் தொட்டு விளையாடும் புராணக் கதைகளின் விதவிதமான உணர்ச்சிகளையெல்லாம், கனிவோடு, நகைச்சுவையோடு, அவரால் காண முடிகிறது. இதனால், ஏதோ இறைவனுக்குக் குறைவு வந்துவிடும் என்று அவர் எண்ணவில்லை.

'கண்ண புரமாலே கடவுளரின் நீ அதிகம்;
உன்னிலுமோயானதிகம்; ஒன்றுகேள்'

என்ற பாடல் நிந்தையில்லை. நிந்தாஸ்துதி என்பதை அவர் உணர்கிறார். இது போன்ற வேடிக்கையாகக் கடவுளைப் பற்றிப் பேசுவதெல்லாம், பக்தியின் முதிர்வினால் ஏற்படக் கூடும். அப்படித்தான் மனிதன் தன் முழு ஆற்றலையும், தன் வாழ்வு முழுவதையும் கடவுளை நோக்கித் திருப்பமுடியும் என்பதை அனுபவிக்கிறார், சொல்கிறார். உண்மையான பக்தியும் கவிதை உள்ளமும் படைத்தவர்களுக்கே இது கைகூடும்.

இவர்களில் ஒருவர் நண்பர் தொண்டைமான். அதோடு, தமது பேரறிவையும், தாம் பலகாலம் முயன்று சேர்த்த செய்திகளையும், கலை, தத்துவ, சமய நுணுக்கங்களையும், நம்மோடு நேருக்கு நேர் நின்று பேசுகின்ற பாவனையில் பழகு தமிழில் அமைத்து விளம்புகிறார். தொண்டைமான் படைக்கும் 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற கட்டுரைத் தொடர், கலை, இலக்கியம், வரலாறு, பக்தி என்ற எல்லாம் விளங்கும் சுவை விருந்து. இந்த விருந்தே, நமது உள்ளக் குறைகளைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது. இதனால்தாள், தமிழகம் திரண்டு, இதை வரவேற்று மகிழ்கிறது. தமிழனுக்குத் தெரியாதா, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, சிறந்த பண்பாட்டோடும் பக்தியோடும் வாழ்ந்து வந்திருக்கும் அவனுக்குத் தெரியாதா, எதை எப்படிப் பாராட்டவேண்டும் என்று ?

'பாரதி அகம்'
வ.உ.சி.கல்லூரி
தூத்துக்குடி.
அ. சீநிவாசராகவன்
14.5.61

பொருளடக்கம்


1. 15
2. 23
3. 31
4. 41
5. 50
6. 58
7. 66
8. 74
9. 83
10. 95
11. 104
12. 113
13. 123
14. 132
15. 142
16. 151
17. 159
18. 167
19. 176
20. 185
21. 194
22. 203
23. 211
24. 221
25. 231
26. 241
27. 251
28. 262
29. 271
30. 280