வேங்கடம் முதல் குமரி வரை 2/பழமலை நாதர்

8


பழமலை நாதர்

சைவ சமய குரவரில் ஒருவரான சுந்தரர் ஒரு தலத்துக்குப் போனார். அந்த ஊர்ப் பெயர் என்ன என்ற விசாரித்தார். விருத்தகிரி என்றார்கள். அங்கு கோயில் கொண்டிருப்பவர் யார் என்றார், விருத்தகிரி ஈசுவரர் என்றார்கள். 'அம்பிகை?' என்றார். 'ஆம். அவளும் விருத்தாம்பிகையே' என்றார்கள். 'என்ன இந்த ஊர், இந்த உரில் உள்ள இறைவன், இந்த இறைவனது துணைவி எவ்லோருமே கிழடு தட்டியவர்களாக இருக்கிறார்களே. இங்கு நமக்கு ஜோலியில்லை', என்று சொல்லி மேலும் நடையைக் கட்டினார். இப்படி ஓடிவிட்டால் விருத்தகிரி ஈசுவரர் விட்டு விடுவாரா? 'ஏனப்பா என்னைப் பாராதே, என்னைப் பாடாதே போகிறாய். என் மனைவி அப்படி ஒன்றும் கிழவியில்லை; வந்துதான் பாரேன்' என்று அழைக்கிறார். சுந்தரர் வருவதற்கு முன்னே, ஒரு பாலாம்பிகையைச் சிருஷ்டி பண்ணித் தம் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். இந்தப் பாலாம்பிகையைப் பார்த்த பின்னரே சுந்தரர் பாடத் துவங்கினார் விருத்தகிரியாரை. விருத்தாம்பிகை கோயில் வெளியில் இருக்க, பாலாம்பிகை சந்நிதி விருத்தகிரியார் கோயில் உள்ளேயே இருப்பதைப் பார்த்து இன்றும் மக்கள், 'பாருங்களேன் இந்தக் கிழவன் காரியத்தை, மனைவி கிழவியாகி விட்டாள் என்று தள்ளிவைத்து விட்டு, சின்னஞ்சிறு குமரியாம் மனைவியை மட்டும் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே!' என்றெல்லாம் பேச வாய்ப்பாகச் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன அந்தக் கோயிலில்,

ஆனால் இந்தக் கதையில் கொஞ்சமும் உண்மையே இல்லை. ஆதாரமுமே இல்லை. அப்படி என்றால் இந்தக் கதை எப்படி எழுந்தது? விருத்தாசலத்திலே விருத்தாம்பிகை என்னும் பெரியநாயகிக்குத் தனி சந்நிதி, தனியே ஒரு கோயில். ஆனால், சுவாமி கோயிலிலே வடகிழக்கு மூலையிலே ஒரு சிறு சந்நிதி, அந்தச் சந்நிதியில் நிற்பவள் பாலாம்பிகை. இந்தப் பாலாம்பிகை இங்கே உருவானதே பதினாறாம் நூற்றாண்டிலேதான். கதை இதுதான்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலே குரு நமச்சிவாயர் என்ற பெரியார் திருவண்ணாமலையில் இருந்திருக்கிறார். அங்கிருந்தவர் தில்லையை நோக்கிப் புறப்பட்டு வரும் வழியில், இந்த விருத்தாசலம் என்னும் திரு முதுகுன்றத்துக்கு வந்திருக்கிறார். இங்குள்ள விருத்தகிரியார் என்னும் பழமலை நாதரையும், பெரியநாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலில் ஒரு பக்கத்தில் படுத்திருக்கிறார். நடுநிசியில் பசி வருத்தியிருக்கிறது. அவரோ அன்னையின் கருணையை நன்கு உணர்ந்தவர். தாயிடம் சோறு கேட்டால் கொடுப்பாள் என்று நம்பி,

நன்றி புனையும் பெரிய
நாயகி எனும் கிழத்தி,
என்றும் சிவனார்
இடக்கிழத்தி-நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழு
நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா.

என்று பரிவோடே கேட்டிருக்கிறார். குரு தமச்சிவாயர் பெண் என்ற பொருளிலேயே கிழத்தி என்று விளித்திருக்கிறார் அன்னையை. ஆனால் அன்னைக்கு, தன்னை இவன் வேண்டுமென்றே கிழவி என்ற பொருளில் அழைத்திருக்கிறான் என்று தோன்றியிருக்கிறது. உடனே பெரியநாயகி முதியவள் வடிவில் வந்து, 'ஏனப்பா, என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடினாய். கிழவியால் எப்படிச் சோறு எடுத்து வர இயலும்?' என்று கேட்டிருக்கிறாள். ஒரு பாவமும் அறியாத குரு நமச்சிவாயர், 'இதுதானா கோபம்?' என்ற கேட்டுவிட்டுப் பாட்டை மாற்றி விடுகிறார்.

முத்த நதி சூழும்
முது குன்று உறைவாளே!
பத்தர் பணியும்
பதத்தாளே-அத்தன்
இடத்தாளே முற்றா .
இளமுலை மேல் ஆர
வடத்தாளே சோறுகொண்டுவா,

என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்டுப் பெரியநாயகி மகிழ்ச்சியுற்று இளமைநாயகி உருவில் வந்து குரு நமச்சிவாயருக்குச் சோறும் நீரும் கொடுத்து உதவி யிருக்கிறாள். அன்று முதல் இளமைநாயகிக்கு ஒரு சந்நிதி இந்தக் கோயில் உள்ளே என்பது தல வரலாறு. இது கூட எவ்வளவு உண்மையோ அறியேன். கன்னி, குமரி, அன்னை, கிழவி எல்லாம் ஒருத்தியேதான். 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னை என்றாலும், பின்னேயும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலாயிற்றே' அவள். இதையெல்லாம் உணர்ந்த அன்பர் ஒருவர் அம்பிகை பெயர் விருத்தாம்பிகை, பெரியநாயகி என்று மட்டும் இருப்பானேன், இளமை நாயகி, பாலாம்பிகை என்றும் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கிறார். இந்த நினைவின் ஞாபகமாகக் கோயிலுக்குள் ஒரு கோயிலை, இளமைநாயகிக்கு பின்னால் யாரோ எடுத்திருக்க வேண்டும். விருத்தாம்பிகையோடு பாலாம்பிகையும் நிலைத்துவிடுகிறார்கள் இக்கோயிலில். இதை வைத்து மக்கள் கயிறு திரிக்கவும் வகை செய்து விடுகிறார்கள்.

நாம் இன்று செல்வது, விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேதராகத் திரு முதுகுன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் பழமலை நாதரைக் காணவே. விழுப்புரம், திருச்சி கார்டு லைனில், விருத்தாசலம் சந்திப்பில் இறங்கிப் போகலாம். பாஸஞ்சர் வண்டி என்றால் விருத்தாசலம் டவுன் ஸ்டேஷனில் இறங்கியும் போகலாம். எங்கிருந்து போனாலும் ரயிலை விட்டு இறங்கியதுமே பெரிய கோபுரங்கள் தெரியும். கோயிலை அடுத்து ஓடும் மணிமுத்தாற்றைக் கடக்க நல்ல பாலம் ஒன்றும் உண்டு. பாலத்துக்கும் கிழக்கே நின்று கோபுர தரிசனம் செய்து விட்டு, கோயில் வாயிலுக்கு வரலாம். விருத்தாசலம், முதுகுன்றம், பழமலை என்றெல்லாம் சொல்கிறார்களே ஆதலால் கோயில் ஏதோ ஒரு மலை மீது இருக்கும் போலும் என்ற எண்ண வேண்டாம். கோயில் நல்ல கெட்டியான தரையிலேயே கட்டப்பட்டிருக்கிறது.

கோயில் மிகப் பெரிய கோயில். மூன்று மதில்கள் பிராகாரங்களுடன் கூடியது. புறச் சுற்று மதில் 660 அடி நீளமும் 392 அடி அகலமும் உடையது. உயரம் இருபத்தாறு அடி. கனம் நான்கு அடி என்றால் மதில் எவ்வளவு உறுதியானது என்று தெரிந்து கொள்ளலாம் தானே? நான்கு திசைகளுக்கும் நான்கு வாயில்கள்; வாயில்கள் ஒவ்வொன்றிலும் ஏழு நிலைகள் உள்ள பெரிய கோபுரங்கள் எல்லாம் கம்பீரமாக நிற்கின்றன. கீழைக் கோபுர வாயிலுக்கு முன்னால் வெளியே பதினாறு கால் மண்டபம் ஒன்று. கோபுர வாயிலின் இரு பக்கத்திலும் பரதநாட்டியப் பெண்மணிகள் 72 பேர், ஆம் கற்சிலைகளாகத் தான். இந்த வாயிலைக் கடந்து வந்தால் பரந்த வெளிச்சுற்று. இதனையே கைலாயப் பிராகாரம் என்பர். இங்கு பார்க்க வேண்டியவை விபசித்து முனிவர் மண்டபம், அக்கினி தீர்த்தம், ஆழத்துப் பிள்ளையார் கோவில், சக்கர தீர்த்தம், ஆகமக் கோயில்கள். இவற்றையெல்லாம் சுற்றிப் பார்க்கக்

காலில் நல்ல வலுவேண்டும். போதிய அவகாசமும் வேண்டும். அவை எல்லாம் இல்லாதவர்கள் பிள்ளையாரைத் தரிசித்து விட்டுக் கோயிலுள் நுழைந்து விடலாம். இவர் பூமியில் தன் தளத்துக்குப் பதினெட்டு அடி தாழ்ந்து ஆழத்தில் தனிக் கோயிலில் இருக்கிறார்.

இரண்டாவது சுற்று மதிலும், வெளிச் ஆழத்துப் பிள்ளையார் கோயில் சுற்று மதிலைப் போலவே கனமானது, உயர்ந்த கோபுரம் உடையது. இந்த மதில் சுவருக்குள்ளேயே வன்னியடிப் பிராகாரம் இருக்கிறது. இங்கு தலவிருக்ஷம் வன்னிமரம் ஆயிற்றே. வன்னி மரத்தடியிலே, விபசித்து முனிவர், உரோமச முனிவர், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை எல்லாரும் இருக்கிறார்கள். இப்பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் வல்லபைக் கணபதி இருக்கிறார். ஏதோ பிரம்மச்சாரி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர், வல்லபையைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டு உல்லாசமாய் இருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த வன்னியடிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தால் கொடி மண்டபத்துக்கும் மேற்கேயுள்ள இசை மண்டபத்துக்கு வந்து சேருவோம். அம்மண்டபத்தில்தான் பெரிய நாயகர் (பெரிய நாய்க்கர் இல்லை ) இருக்கிறார். இவரே இக்கோயிலில் உள்ள பெரிய உற்சவமூர்த்தி என்றாலும் ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகம் ஆறாம் நாள் மட்டுமே வெளியே உலாவ வருவார். மற்ற உற்சவங்களுக்கு ஒரு 'டெபுடி' நியமித்திருக்கிறார். அவர்தான் சின்னப் பழமலைநாதர். அவரைக் கோயிலுள் சென்று பார்க்கலாம். இந்த இசை மண்டபத்தின் வட பக்கத்தே நடராஜர், சிவகாமி அம்மையுடன் கொலு இருக்கிறார். அவர்களையும் வணங்கிவிட்டே உள்மதிலையுங் கடந்து பிரதான கோயிலுள் நுழையலாம். இங்குள்ள பிராகாரத்தை அறுபத்து மூவர் பிராகாரம் என்பர். அறுபத்து மூவரோடு எண்ணற்ற திருவுருவங்கள் இந்தப் பிராகாரத்திலே. அவர்களில் முக்கியமானவர்கள் யோகதக்ஷிணாமூர்த்தி, மாற்றுரைத்த பிள்யைார், பிந்து மாதவப் பெருமாள் முதலியோர், இங்கேயே சின்னப் பழமலை நாதரும் இருக்கிறார். நல்ல சோமாஸ் கந்த வடிவினர் அவர். இங்கு வடமேற்கு மூலையிலேதான் இளமைநாயகியார் கோயில்.

ஆம், விருத்தாம்பிகையை ஒதுக்கி வைத்துவிட்டு இளைய மனைவியை நெருக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் முதுகுன்றர் என்ற பரிகாசத்துக்கு எல்லாம் உள்ளானவள் அவள், இத்தனைச் சுற்றுச் சுற்றி இவ்வளவு தூரம் நடந்ததெல்லாம் பழமலை நாதரைக் காணவே. அவரையே காணலாம் கர்ப்பக் கிருஹத்தில். நல்ல அழகான லிங்கத் திருவுரு. அவரை வணங்கித் தொழுதுவிட்டு விறுவிறு என வெளியே வந்து, இரண்டாம் பிராகாரத்து வடக்கு வாயில் வழியாய் அன்னை பெரிய
பழமலை-வடக்குக் கோபுரம்

நாயகியின் கோயிலுக்கு வரலாம். இந்தக் கோயிலே ஒரு பெரிய கோயில், ஏழு நிலைக் கோபுரத்தோடு, இங்குள்ள அலங்கார மண்டபம், இடைவெளி மண்டபம் எல்லாம் கடந்து கர்ப்பக்கிருஹம் சென்று பெரியநாயகியையும் தொழலாம்.

இக்கோயிலில் உள்ள கோஷ்டங்களில் கஜ சம்ஹாரர், மகிஷமர்த்தினி, துர்க்கை , நரசிம்மி (அதாவது நரசிம்ம வடிவம், ஆனால் தனங்களுடன் கூடிய பெண்ணுரு) எல்லாம் உண்டு. இவைகளைப் பார்க்கும்போது விருத்தகிரி ஈசுவரர் கோயிலுக்கும் முந்திக் கட்டப்பட்ட கோயிலே என்று தோன்றும். அம்பிகை விருத்தாம்பிகை என்றே அன்னையை அழைத்தாலும் அவள் முகத்தில் தெய்வக் களி துலங்கு நகையைக் காணலாம். கண்டு நாமும் மகிழலாம். இவள் தம் கோயிலை விட்டு நாம் வெளியே வருவதைக் கோயில் கோபுரத்திலுள்ள ஒரு குகையிலிருந்து மயில் வாகனான குமரன் கவனித்துக் கொண்டிருப்பதையுமே பார்க்கலாம். இவனையே குகை முருகன் என்கிறார்கள். இங்கேயே நாதசர்மா, அநவர்த்தினி எல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, பெரிய நாயகியை வணங்கி, சாரூப பதவி பெற்றவர்கள் என்று தல வரலாறு கூறும்.

இக்கோயில் ஆதியில் விபசித்து முனிவரால் கட்டப்பட்டிருக்கிறது. ஆதனால்தான் இன்றுவரை விபத்துக்கள் ஒன்றுக்கும் ஆளாகாமலே நின்று கொண்டிருக்கிறது. இக்கோயிலின் பெரும் பகுதியைக் கற்றளியாகத் திருப்பணி செய்தவர். கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவியே. ராஜராஜ சோழனுக்கு முன் சோழ நாட்டைச் சிறிது காலமே ஆண்ட உத்தம சோழனின் உத்தமத் தாய். சிறந்த சிவபக்தை. ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் திருப்பணிகள் நடந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், ஏழிசை மோகன திருமண்டபம் கட்டினான் என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கச்சிராயன், வீரசேகரக் காடவராயன், நாயக்க மன்னர்கள், பெரம்பலூர் உடையார் முதலியோர் எல்லாம் கோயிலின் பல பகுதிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் விரிக்கில் பெருகும்.

இவர்கள் மாத்திரம் என்ன, வெள்ளைக்கார கலெக்டர்களும் இப்பழமலை நாதர் கோயில் திருப்பணியிலே பங்கு பெற்றிருக்கிறார்கள். மகம்மதியர்கள் காலத்திலே இக்கோயிலைப் பாதுகாப்புக்கு உரிய கோட்டையாக்கி யிருக்கிறார்கள், 1803-ல் கும்பினி ஜாகீர் கலெக்டராக இருந்த சார்ல்ஸ் ஹைட் என்பவர் கைலாசப் பிரகாரத்துக்குத் தளவரிசை போட்டிருக்கிறார். தேர் இழுக்க இரும்புச் சங்கிலி, கும்பஹாரத்துக்கு வெள்ளிக் குடம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார். நகரத்தார்களும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

இக்கட்டுரையைச் சுந்தரர் தலையிலே பழியைப் போட்டு ஆரம்பித்தோம். அந்த வரலாறு உண்மையல்ல என்றும் கண்டோம். ஆனால் இந்தச் சுந்தரர் இங்கு உண்மையிலேயே செய்த காரியம் ஒரு ரஸமான வரலாறு. சுந்தரருக்கு எப்போதுமே பணமுடை. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், எங்கெல்லாம் இறைவனைக் கண்டாலும் கையை நீட்டி விடுவார். அந்த இறைவனும் இல்லை என்னாது கொடுக்கத் தயங்குவதில்லை. பழமலை நாதர் மற்றவர்களுக்குச் சளைத்தவரா, என்ன?

உம்பரும் வானவரும்
உடன்நிற்கவே எனக்கு
செம்பொனைத்தந்து அருளி
திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
வம்பு அமரும் குழலாள்
பரவை இவள் வாடுகின்றாள்;
எம் பெருமான் அருளி
அடியேன் இத்தளம் கெடவே

என்று பாடினாரோ இல்லையோ, பொன்னை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இப்படி எளிதாகப் பொன்னைப் பெற்ற சுந்தரர் இன்னும் ஒன்றும் செய்திருக்கிறார். பொன்னை எப்படி அந்தத் தொலை தூரத்தில் உள்ள திருவாரூருக்குக் கொண்டு செல்வது? பொன்னைக் கட்டி மணிமுத்தாறு நதியில் போட்டிருக்கிறார், அதில் கொஞ்சம் மாற்றும் எடுத்துக் கொண்டு. அதற்கு மாற்றுரைத்த பிள்ளையாரை சாட்சி வைத்திருக்கிறார். இறைவனிடம் 'பழமலையானே! நீர் கொடுத்த பொன்னை இங்கே மணிமுத்தாற்றில் போட்டு விட்டேன், திருவாரூர் சென்று கமலாலயத்தில் கேட்பேன். அங்கு எடுத்துத் தரவேணும், என்ன சொல்கின்றீர்?' என்று கேட்டிருக்கிறார். 'சரி' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்? சொன்னது மாத்திரமா அப்படியே எடுத்தும் கொடுத்திருக்கிறார் கொஞ்சமும் மாற்றுக் குறையாமல். ஏதோ 'பாங்கு டிராப்ட்' ஒன்றும் வாங்காமலேயே பணத்தை ஓர் உரிலிருந்து மற்றோர் ஊருக்குக் கொண்டு போக, நல்ல வழி கண்டு பிடித்திருக்கிறார் சுந்தரர். இந்த சுந்தரர் மாத்திரமல்ல சம்பந்தர், நாவுக்கரசர் எல்லோருமே இந்தப் பழமலையானைப் பெரியநாயகியைப் பாடிப் பரவி யிருக்கிறார்கள். நாமும் பாடிப் பரவலாம், அங்கு சென்றால்.