வேங்கடம் முதல் குமரி வரை 2/மயிலமலை முருகன்

வேங்கடம் முதல் குமரி வரை
இரண்டாம் பாகம்
பொன்னியின் மடியிலே
1

மயிலமலை முருகன்

நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே
நீவந்த வாழ்வைக்கண்டு அதனாலே,
மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும்
மார் தங்கு தாரைத்தந்து அருள்வாயே.
வேல்கொண்டு வேலைப்பண்டு எறிவானே!
வீரங்கொள் சூரர்க்கும் குலகாலா!
நாலந்த வேதத்தின் பொருளோனே!

நானென்று மார்தட்டும் பெருமாளே! என்பது அருணகிரியார் பாடிய திருப்புகழ், முதல் நாலடிகளில், பழைய அகத்துறைப் பாடல்களின் மணம் சிறந்து வீசுகிறது. நீலமயில் வாகனனான முருகனைக் கண்டு காதலித்து மயக்கமுற்றுக் கிடக்கும் பேதைப் பெண்ணின் மயக்கம் தெளிவிக்க, அவன் மார்பிலே புரளும் மாலையையே வேண்டி நிற்கிறாள் தோழி. முருகனை நினைத்தால் மயிலை நினைக்கிறார்; மயிலை நினைத்தால் அவன் ஏந்திய வேலை நினைக்கிறார் கவிஞர். 'வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை' என்று தானே முருக பக்தர்கள் உள்ளத்தில் உரம் பெறுகிறார்கள். மயிலோடும் வேலோடும் முருகனைத் தொடர்பு படுத்தி முதன்முதல் அந்த அழகனைக் கற்பனை பண்ணியவன் சிறந்த கலைஞனாக இருந்திருத்தல் வேண்டும்.

இறைவன் படைத்த இயற்கை, மிக்க அழகுடையது ' என்பதை அறிவோம். விரிந்து பரந்து கிடக்கும் நீல வானம். அகன்று ஆழ்ந்து கிடக்கும் அக்கருங்கடல், அக்கடலின் அடி வானத்திலே உதயமாகும் இளஞ்சூரியன், அச் சூரியனிடமிருந்தே ஒளியைக் கடன் வாங்கி, அதை உலகுக்கு வழங்கும் குளிர் நிலா. அந்நிலாவோடு போட்டி போட்டு, மின்னி மினுக்கும் விண் மீன்கள் எல்லாம் நிரம்ப அழகு வாய்ந்தவையே.

இன்னும் இப்பூமியில் உள்ள மலை, மலையிலிருந்து விழும் அருவி, ஓடிப் பெருகும் ஆறு, ஆற்றங் கரையில் நின்று நிழல் தரும் மரங்கள், அம்மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள், கனிகள், பரந்த வயல்களிலே பச்சைக் கம்பளம் விரித்தால் போல இலங்கும் நெற்கதிர்கள், புல் பூண்டுகள், ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாம் இயற்கை அன்னையின் அழகு வடிவங்கள் தாமே. இவை தானே மனிதனால் ‘கைபுனைந்து இயற்றாக் கவின் பெறுவனப்பு'. இந்த வனப்பிலே உள்ளம் பறிகொடுத்து நின்ற கவிஞனே 'முற்றிய ஆழியிலே அலைவந்து மோதி எறிகையிலே கற்றைக் கதிர் எழும்' காட்சியைக் கண்டிருக்கிறான். 'உலகம் உவப்பப் பலர் புகழ் ஞாயிறு கடற்கண் எழும்' காட்சியிலே, அழகைக் கண்டிருக்கிறான்; இளமையைக் கண்டிருக் கிறான்; இறைமையைக் கண்டிருக்கிறான்.

விரிந்திருக்கும் நீலவானம் நீல நிறத் தோகையை விரித்தாடும் மயிலாகக் காட்சி அளித்திருக்கிறது. அந்த வானில் ஒளி வீசிக் கொண்டு தோன்றும் செஞ்சுடர்த் தேவனாம் இள ஞாயிறையே வேலேந்திய குமரனாகவும் கண்டிருக்கிறான். இன்னும் மேட்டு நிலங்களிலே தினைக் கதிர் விம்மி விளைந்து, அங்கு ஒரு காட்டு மயில் வந்து நின்றால் அங்கேயும் கலைஞன் உள்ளத்தில் காதல் விளைந்திருக்கிறது. இப்படித்தான் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே, ஆம். உலகம் தோன்றி, அதில் மனிதன் தோன்றித் தமிழ் பேசக் கற்றுக்கொண்ட அந்தக் காலத்திலேயே, அவன் கண்ட முதற் கடவுள் முருகனே. உருவமே இல்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பிக்க முனைந்த தமிழ்க்கலைஞன் கண்ட முதற்கடவுள், முருகனாக, இளைஞனாக, அழகனாக உருப் பெற்றிருக்கிறான்.

இதனால்தான் முருகனை நினைத்தால், அவன் ஏறி வரும் மயிலை நினைக்கிறோம். 'எட்டும் குலகிரி எட்டும் விட்டோட எட்டாத வெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தன்' என்று கவிஞர்கள் முருகனை அழைத்திருக்கிறார்கள். இப்படி விரித்த தோகையோடு கூடிய மயில்மேல் வருகிறான் அவன் என்று எண்ணினாலும், சிற்ப வடிவங்களிலே விரியாத தோகையோடு கூடிய மயிலையே வடித்திருக்கிறார்கள். இதனாலேயே எங்கேயாவது ஒரு சிறிய குன்று, ஒரு பக்கம் உயர்ந்தும், மறுபக்கம் தாழ்ந்தும் மயில் தோகையைப் போல் படிந்தும் கிடந்தால், அந்தக் குன்றின் பேரிலே முருகனைப் பிரதிஷ்டை செய்யத் தமிழர்கள் மறக்கவில்லை . இத்தகைய குன்றுகளில் இரண்டு பிரபலமானவை. ஒன்று காரைக்குடியை அடுத்த குன்றக்குடி. இரண்டாவது தென்ஆர்க்காட்டு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் இடையே உள்ள மயிலம். இரண்டிடத்தும் குன்றுகள் படிந்த தோகையை உடைய மயில் போலவே இருந்தாலும், பின்னுள்ள தலத்தையே மயிலம் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். முருகன் ஊர்ந்துவரும் மயிலோடு தொடர்புபடுத்தியுள்ள தலம் இது ஒன்றுதான் என்று அறிகிறோம். இந்த மயிலம் என்ற தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தொண்டை நாட்டின் வடகோடியிலுள்ள வேங்கடத்தில் துவக்கிய நமது பயணத்தில், தொண்டை நாட்டின் பல தலங்களையும் பார்த்துவிட்டு, நடுநாட்டுக்குள் நுழைகிறோம் இப்போது, அந்தப் பயணம் மயிலேறும் பெருமாளோடு துவங்குகிறது, மகிழ்ச்சிக்குரியதே.

இந்த மயிலத்தை அடைவது எளிது. சென்னை, திருச்சி ‘டிரங்க் ரோட்டில்' திண்டிவனத்துக்குத் தெற்கே எட்டாவது மைல்வரை வந்து பின்பு கிழக்கு நோக்கிப் பாண்டிச்சேரி செல்லும் வழியில் திரும்பினால், அந்த ரோட்டில் மூன்றாவது மைலில் நீண்டுயர்ந்த கோபுரத்தோடு கூடிய ஒரு சிறு குன்று தோன்றும். கோயிலை நோக்கிக் காரைத் திருப்பினால் முதன்முதல் நாம் காண்பது ஒரு தமிழ்க் கல்லூரி. இதை நிறுவியவர் சிவஞான பாலய சுவாமிகள். பொம்மையபுரம் மடாதிபதி இவர்கள். இவர்களது முன்னோர்களே மயிலத்து முருகன் கோயிலை உருவாக்கி யிருக்கிறார்கள். மலைமீதே காரைக்கொண்டு செல்ல ஒரு வழி அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே செல்லலாம் மலைமேலே. இல்லை, முருகன் ஊர்ந்து வரும் மயிலாம் மயில மலைமீது நாம் காரில் செல்லுவதாவது? என்று கருதினால் கல்லூரி வாயிலிலேயே காரை நிறுத்திவிட்டு, கற்களைப் பரப்பி அமைத்திருக்கும் பாதை வழியாகவே மலை ஏறலாம். இந்த மயிலமலை மிகச் சிறிய குன்றுதான். ஆதலால் ஏறுவது ஒன்றும் சிரமமாக இராது. இந்தப் பாதை வழியாகக் குன்றின்மீது வந்து சேர்ந்தால் கோயிலின் தெற்கு வாயிலுக்கு வந்து சேருவோம். கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கியிருந்தாலும் அந்த கோபுர வாயில் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டே இருக்கும். அதனால் தெற்கு வாயில் வழியாகவே கோயிலில் நுழைய வேணும்.

இந்த மயிலமலையும், இங்குள்ள கோயிலும் எப்படி உருவாயிற்று என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? முருகனோடு போர் செய்த சூரபதுமன் முருகன் எடுத்த பேர் உருவைக் கண்டு நல்லறிவு பெறுகிறான்.

கோலமா மஞ்ஞை தன்னில்
குலவிய குமரன் தன்னை
பாலன் என்றிருந்தேன் அந்நாள்,
பரிசு இவை உணர்ந்திலேன் யான்,
மால் அயன் தனக்கும் மேலை
வானவர் தனக்கும், யார்க்கும்
மூல காரணமாய் நின்ற
மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ!

என்று பாடிப் பரவுகிறான். இப்படிப் பாடியவன் அப்பெருமான் ஊர்ந்து வந்த மயிலுருவத்திலேயே, தான் அவருக்கு வாகனமாக இருக்க அருள் புரிய அவரை வேண்டுகிறான். அவ்ரும் தண்தமிழ்நாட்டிலே வராக நதிக்கு வடகரையிலே மயில் வடிவம் கொண்ட மலையாக நின்று தவம் செய்தால், அவன் விருப்பம் நிறைவேறும் என்கிறார். அப்படியே மயில் உருவத்தில் மலையாகி சூரபதுமன் தவம் செய்த இடமே மயிலம் என்னும் மயூராசலம்.

மயிலம் முருகன் கோயில்

இதே சமயத்தில் கணத் தலைவர் களில் ஒருவரான சங்கு கன்னர் செய்த ஒரு தவறுக்காக இறைவன் அவரைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார். சாப விமோசனம் வேண்டி நின்றபோது, 'நீ பூமியின்கண் அவதரித்து வேத சிவாகமங்களை விளக்கி, சைவம் நன்கு வளரச் செய்து, பல சித்தர்களுக்கு அருள் செய்வாய்; அப்போது முருகனோடயே போர் செய்யும் நிலை வாய்க்கும், அப்போது முத்தி அடைவாய்' என்கிறார்.

அந்தச் சங்கு கன்னராம் கணத் தலைவரே, மயிலை மலைக்கு கிழக்கேயுள்ள கடலிலே, பத்து வயதுடைய பால சித்தராக, சடைமுடி கவச குண்டலம், இட்டலிங்கம், உருத்திராக்கத்துடன் தோன்று கிறார். மயில மலைக்கே வந்து தவம் இயற்றுகிறார் முருகனைக் குறித்து. முருகனோ அவர் சிவ அபராதி எனச் சொல்லித் தரிசனம் தர மறுக்கிறார். பால சித்தருக்குப் பரிந்து பேசி வெற்றிபெறாத வள்ளி தெய்வானை இருவரும் கோபித்துக்கொண்டு, பால சித்தரது ஆசிரமத்துக்கே வந்து அவருக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள். இனியும் முருகப் பெருமானால் சும்மா இருக்க முடியுமா? தன் மனைவியரைத் தேடிக்கொண்டு மயிலமலைக்கே வருகிறார். பால சித்தரும் வந்திருக்கும் வேட்டுவன் யார் என்று அறியாது அவரோடு போர் புரிகிறார்; மல்யுத்தமே செய்கிறார். பின்னர் பால சித்தருக்கும் சூரபதுமனுக்கும் முருகன் தம் உருக் காட்டுகிறார். தம் இரு மனைவியருடனும், பால சித்தர் விருப்பப்படியே கல்யாண கோலத்திலேயே அம்மலைமீது கோயில் கொள்கிறார். இப்படித்தான் மயில மலை எழுந்திருக்கிறது இங்கே. அந்த மலைமேல் முருகனும் ஏறி நின்றிருக்கிறான். பால சித்தரது அருளால் அம்மனை அம்மையார் திருவயிற்றில் அவதரித்த சித்தரே, சிவஞான பாலய தேசிகர், பொம்மையபுரம் திருமடம் நிறுவியவர். இவருடைய பரம்பரையிலே பதினெட்டாவது பட்டத்தில் இருப்பவர்கள்தான் இன்றைய சிவஞான பாலய சுவாமிகள்.

இத்தனையும் தெரிந்தபின் கோயிலுள் நுழையலாம். முதலில் விநாயகரை வணங்கிவிட்டு மேலே நடக்கலாம். கோயிலின் தெற்குக் கட்டில் விசுவநாதரும் விசாலாக்ஷியும் இருக்கிறார்கள். பால சித்தரைத் தன்னோடு ஐக்கியப் படுத்திக்கொண்ட சிவலிங்கத் திருஉருவே விசுவநாதர். இந்த விசுவநாதரை வணங்கி விட்டு, அடுத்த வடக்கு வாயிலின் வழியாகச் சென்று மேற்கு வாயிலில் திரும்பினால், முருகனைக் கண்குளிரக் காணலாம், வள்ளி தெய்வானையுடன், கிழக்கு நோக்கியவராய்க் கல்யாண கோலத்திலேயே நிற்கிறார் மூலமூர்த்தி. மலையின் வடதலை உயர்ந்திருப்பதுபோல, இங்குள்ள மயிலும் வடக்கு நோக்கிய முகத்தோடேயே நிற்கிறது. முருகன் நல்ல அழகன், இளைஞன். இந்த மூர்த்தியைத் தரிசித்தபோது எனக்கு ஓர் ஐயம். இந்த அழகான குமரனையா 'குறிஞ்சிக் கிழவன் என்று ஓதுகிறது குவலயம்?' என்று. எப்படியும் இருக்கட்டும்; அந்தக் கிழவனாம் குமரனைத் தரிசித்து விட்டு, சென்ற வாயில் வழியே வெளியே வந்து பிராகாரத்தைச் சுற்றி, ஒன்றுக்கு மூன்றாக இருக்கும் உற்சவ மூர்த்திகளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். வெளியில் வந்ததும், தென்பக்கத்தில் உள்ள திருமடத்தில் இருக்கும் சிவஞான பாலய சுவாமிகளையும் கண்டு நம் வணக்கத்தைத் தெரிவிக்கலாம்.

இந்தத் தலத்தின் பெயருக்கு ஏற்ப இங்கு ஒரு நல்ல அழகான தங்க மயில்வாகனம் ஒன்றும் செய்து வைத்திருக்கிறார்கள். நிரம்பப் பெரிய வாகனம். இந்தத் தங்க மயிலின்மேல் ஆரோகணித்து முருகன் மலைமேலிருந்து இறங்கிவரும்போது கீழே இருந்து நோக்கினால், ஒரு பெரிய மயில் உண்மையிலேயே பறந்து வருவது போலவே மயிலின்மேல் ஆரோகணித்து முருகன் மலைமேலிருந்து இறங்கிவரும்போது கீழே இருந்து நோக்கினால், ஒரு பெரிய மயில் உண்மையிலேயே பறந்து வருவது போலவே நமக்குத் தோன்றும். இந்தத் தங்க மயில் வாகனக் காட்சி காண வேண்டுமானால் தைப்பூசத்தன்றாவது அல்லது பங்குனி மாதம் நடக்கும் பிரமோத்சவத்தில் ஐந்தாம் திரு நாளன்றாவது சென்று இரவு பத்துப் பதினோரு மணிவரை அம்மலையிலேயே காத்துக் கிடக்க வேண்டும். சும்மா கிடைக்குமா மயிலாசலன் பாதம்? இந்த மயில் மேல் வரும் முருகனைத் தரிசித்தால்,

எங்கும் தன் வடிவுஎன
விசுவரூபங் கொண்ட
சிறப்பொடு பிறப்பிலான்,
நம்பிறவி மாற்றவே
ஈசன் ஒரு மதலையானோன்,
அங்கை கொண்டு எட்டிப்
பிடிக்குமுன், முருகனுடன்
அம்புலி ஆடவாவே!
அயில்வேலன் மயிலம் வரும்
மயில் வாகனத்தன் உடன்
அம்புலி ஆடவாவே!

என்று சிதம்பர முனிவருடன் சேர்ந்தே நாமும் பாடலாம். பிள்ளைத்தமிழ் பாடிக்கொண்டே திரும்பலாம்.