வேங்கடம் முதல் குமரி வரை 2/மயூரத்து மயிலாடு துறையார்

18

மயூரத்து மயிலாடு துறையார்

ருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!

என்று இளங்கோவடிகள் காவேரியின் பெருமையைப் பாடுகிறார். இல்லை, காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள பெண்கள் பாடிப் பரவுகிறார்கள். குடகு நாட்டிலே தலைக் காவேரி என்னும் இடத்திலே பிறந்தவள் காவிரி, கல்லும் மலையும் கடந்து மைசூர் ராஜ்யத்தை வளம் படுத்திப் பின்னர் சோழ நாட்டிலே புகுந்து மெல்ல நடக்கிறாள். இந்தக் கன்னிப் பெண். அவளது எண்ணமெல்லாம் சமுத்திர ராஜனிடத்துச் சென்று சேர்த்து அவனோடு கலந்து உறவாடுவதில் அல்லவா ஈடுபட்டிருக்கிறது. அதற்காக ஆயிரங் கரங்களை நீட்டிக் கொண்டு மிக்க ஆவலோடே விரைகிறாள். இவள் நடக்கும் வழியெல்லாம் ஒரே பச்சைப் பசும் கம்பளங்கள். வண்ணமலர் சூட்டி மகிழும் கோதையருக்குத்தான் கணக்கு உண்டா? வழியெல்லாம் பூவார் சோலையில் மயில்கள் ஆடுகின்றன. புரிந்து குயில்கள் இசை பாடுகின்றன. இந்தப் பண்ணுக்கும் பரதத்துக்கும் ஏற்றவாறு நடமாடிக்கொண்டே நடக்கிறாள் கன்னியாம் பொன்னி. இவள் தம் பெருமையை இளங்கோ மட்டும் அல்ல, கவிச் சக்கரவர்த்தி கம்பனும் பாடிப் பாடி மகிழ்கிறான், 'கங்கை என்னும் கடவுள் திருநதி' என்று கங்கையைப் பாராட்டியவன், 'தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை' என்றுதான் பொன்னிக்கு ஏற்றம் கூறுகிறான். இத்துடன் நிறுத்தினானா? 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்றல்லவா முத்தாய்ப்பு வைக்கிறான். இது என்ன சொந்த நாட்டு அபிமானத்தால் எழுந்ததா? இல்லை. இதில் ஏதாவது உண்மை உண்டா ? அதைத் தெரிய வேண்டுமானால் துலாக் காவேரி மகாத்மியத்தையே புரட்ட வேண்டும்.

காவிரியில் குளிப்பதற்குக் காலம் இடம் எல்லாம் பார்க்க வேண்டியதில்லைதான். என்றாலும் குடகு நாட்டிலே தலைக் காவிரியிலே குளிப்பதைவிட, அரங்கத்து அரவணையான் கோயிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது விசேஷம். அதிலும் ஆடி பதினெட்டில் அவள் ஆண்டு நிறை பூப்ப மெல்ல நடக்கும்பொழுது அவளிடம் நீராடுவதை விட, ஐப்பசியாம் துலா மாதத்திலே மாயூரத்திலே ஸ்நானம் பண்ணுவது விசேஷம். மேலும் இந்தத் துலா மாதத்திலே மற்ற இருபத்தொன்பது நாட்கள் குளிக்கத் தவறினாலும், முப்பதாம் நாளாகிய கடைசி நாளன்று தவறாது குளிப்பது மிக மிக விசேஷம். அன்று நடக்கும் விழாதான் கடைமுக ஸ்நானம். இத்தனை விசேஷம் இந்தத் துலா ஸ்நானத்துக்கு வருவானேன்? அதையே தெரிந்து கொள்ளலாம் முதலில்.

கண்ணுவ மகரிஷி கங்கையில் நீராடும் விருப்பத்துடன் நடக்கிறார் வடக்கு நோக்கி. வழியிலே மூன்று சண்டாளக் கன்னிகைகளைச் சந்திக்கிறார். 'அவர்கள் யார்? ஏன் சண்டாளர்களாக இருக்கிறார்கள்?' என்று விசாரித்தால் அவர்களே கங்கை யமுனை சரஸ்வதி என்ற தெய்வ நதிகள் என்றும் அவர்களிடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தத்தம் பாவம் தீர முழுகிய காரணத்தால் அவர்களது பாவக்கறை யெல்லாம் இவர்களிடம் தோய்ந்து, இவர்களே சண்டாளர்களாக மாறிவிட்டார்களென்றும் அறிகிறார். சரிதான்; மற்றவர் பாவங்களையெல்லாம் கழுவிக்கழுவித் துடைத்தவர்களே பாபகாரிகளாக மாறிவிட்டால், இவர்கள் பாபங்களை யார் கழுவுவது? ஆம்! அப்படிக் கழுவும் ஆற்றல் பெற்றவள் ஒருத்தி இருக்கிறாள் என்று தெரிந்துதானே அவளைத் தேடித் தென்திசை நோக்கிச் சண்டாள உருவம் தாங்கிய இந்தத் தேவமாதர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரது பாவங்களையும் நீக்கி முக்தி அருளவல்ல புனிதையே மாயூரத்தில் ஓடும் காவிரி அன்னை.

இப்படி இவள் பெருமையுற்றிருப்பதனாலேதான் துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லஷ்மி, கௌரி இன்னும் பக்த மாதர்கள் எல்லாம் இங்கு வந்து நீராடுகிறார்கள். முப்பது நாளும் குளிக்க முடியாதவர்கள் மூன்று நாட்களாவது முழுக வேண்டும். அதுவும் இயலாதவர்கள் துலாமாதத்தின் கடைசி நாளான கடை முகத்தன்றாவது நீராடத் தவறுதல் கூடாது என்பது விதி. அப்படி நீராடியவர்கள் பாபமெல்லாம் அன்றே கழுவித் துடைக்கப்படும். (சரிதான்? வருஷம் முழுதும் செய்த பாவத்தை எல்லாம் ஒரே முழுக்கில் கழுவி விட்டு மறுபடியும் பாப காரியங்களே செய்யலாம். திரும்பவும் அடுத்த துலா ஸ்நானத்திலே; கழுவத்தான் அன்னை காவிரியிருக்கிறாளே என்று எண்ணி விடாதீர்கள், துலா மாதம் பிறப்பதற்கு முன்னமே காலன் நம்மை அணுகி விட்டால், அந்த வருஷப் பாவம் அத்தனையும் அப்படியே நின்றுவிடுமே என்ற எச்சரிக்கையும் ஞாபகமிருக்கட்டும்!)

இந்தக் கடைமுக ஸ்நானத்தை ஒட்டி இன்னும் ஒரு ரஸமான வரலாறு. எத்தனையோ கோடி வருஷங்களாக மக்கள் இத் துலா ஸ்நானம் செய்து வருகிறார்கள்; பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்கிறான் நெடுந் தொலைவிலுள்ள ஒருவன். அவனோ முடவன். அவனால் விரைவாக நடப்பதோ இயலாது. என்றாலும் முயற்சியை விட்டுவிடவில்லை. துலாமாதம் பிறந்ததுமே, ஊரை விட்டுப் புறப்பட்டு விடுகிறான். நடக்கிறான் பல நாட்களாக. ஆனால் அவன் மாயூரம் வந்து சேர்வதற்குள் துலாமாதம் கழிந்து விடுகிறது. அவன் காவிரிக் கரை வந்து சேர்கின்ற அன்று கார்த்திகை மாதம் பிறந்து விடுகிறது. 'ஐயனே என்ன செய்வேன்? ஒரு நாள் பிந்தி வந்துவிட்டதனால் அல்லவா என் பாவச் சுமையைக் கழுவ முடியாது போய்விடுகிறது' என்று பிரலாபிக்கிறான். முடவன் குரல் விழுகிறது இறைவன் திருச் செவியில், அவன் அளப்பரிய கருணை வாய்ந்தவன் ஆயிற்றே, 'சரி இந்தக் கடைமுக ஸ்நான கன்செஷனை” இன்னும் ஒருநாள் நீட்டித் தருகிறேன். கார்த்திகை மாதம் முதல் தேதியில் முழுகினாலும் பலன் உண்டு' என்று அறிவிக்கிறான்.

ஆதலால் இன்றும் துலா மாதத்தில் மாத்திரம் அல்ல, முடவன் முழுக்கு என்னும் கார்த்திகை முதல் தேதியிலும் காவிரியில் முங்கி முழுகிப்பாபங்களைக் கழுவலாம் என்பது நம்பிக்கை. நம்மில் பலருக்கு உடலில் முடம் இல்லா விட்டாலும், உள்ளத்தில் முடம் உண்டே . ஆதலால் கடைமுகத்திலோ அல்லது முடவன் முழுக்கன்றோ சென்று காவிரியில் முழுகி எழுந்துவிட வேண்டும். கார்த்திகை இரண்டாம் தேதிக்கு இந்த ‘கன்செஷன்' கிடையாது என்பது மட்டும் ஞாபமிருந்தால் போதும் இந்தக் கடைமுக ஸ்நானப் பெருமையுடைய மாயூரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

மாயூரம் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய ரயில் நிலையம். போஸ்டாபீஸ்காரர்கள் எல்லாம்கூட மாயூரம் என்ற பெயரையே உபயோகிக்க இந்திய ரயில்வேக்காரர்கள் மட்டும் 'மாயவரம்' என்ற பெயரை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? ஆனால் ஆங்கிலத்தில் அவர்கள் எழுதியிருப்பதை மாயவரம் என்று மாத்திரம் அல்ல, மாயாவரம் என்றும் படிக்கலாம். அதனால் நம் உளத்துக்கு ஒரு நிம்மதியும் தேடிக்கொண்டே அந்த ஜங்ஷனில் இறங்கலாம்.

இந்தத் தலத்தில் காணவேண்டிய கோயில்கள் மூன்று. துலாமாதம் நீங்கள் சென்றால், காவிரியில் ஒரு முழுக்குப் போட்டு விட்டுத் துலாக் கட்டமாகிய இடபதீர்த்தக் கரையின் வடபக்கத்திலே உள்ள வள்ளலார் கோயிலுக்கே முதலில் செல்ல வேண்டும். இந்தக் கோயிலுக்கு ஒரு சிறிய கோபுரமே உண்டு என்றாலும் பிரசித்திபெற்ற தீர்த்த மண்டபம் இங்கே இருக்கிறது. இங்குள்ள இறைவர் பெயர் வழிகாட்டும் வள்ளல். எவ்வளவு அழகான பெயர்! துன்பமே நிறைந்த இவ்வுலகில் உள்ள மக்கள் எல்லாம் உய்ய நல்ல வழி காட்டும் வள்ளலாக அல்லவா அவர் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள அம்மை ஞானாம்பிகை, நல்ல வழி காட்டியின் துணை நாடிச் சென்றால் ஞானம் பிறவாமல் இருக்குமா? இங்குள்ள வள்ளலாரையும், ஞானாம்பிகையையும் விடப் பிரசித்தி பெற்றவர் இக்கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்திதான். வழக்கம் போல் யோகாசனத்தில் ஞானமுத்திரைக் கையராகவே எழுந்தருளியிருக்கிறார். என்றாலும் மற்றத் தலங்களைப் போல் அல்லாமல் நந்தி பெருமான் மேலேயே ஏறி உட்கார்ந்திருப்பார் இந்த ஆலமர் செல்வர். இறைவனையே தாங்கும் பெருமை என்னிடம் தானே இருக்கிறது என்று தருக்கித் திரிந்த இடபதேவரின் செருக்கடக்கி, ஞானோபதேசம் பண்ணியவர் இந்தத் தக்ஷிணாமூர்த்தி. அதனால்தான், அவரை ஏற்றியிருக்கிறார்.

மலிதவப் பெருமை காட்டி
வயங்கிடு மற்றோர் கூற்றில்
பொலிதரு சேமேற் கொண்டு
தென்முகம் பொருந்த நோக்கி

மாயூரம் நடராஜர்

இருக்கும் இறைவனை வணங்கி, அங்குள்ள ஞானமிர்தசரஸ் என்னும் தீர்த்தமும் ஆடியபின் மேலும் நடக்கலாம் மயூரநாதர் கோயிலை நோக்கி.

மயூரதாதர் கோயில் மாயூர நகரின் தென்பகுதியிலே தரங்கம்பாடி ரோட்டையொட்டி இருக்கிறது. இங்கு கோயில் கொண்டிருப்பவரை மயிலாடு துறையார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அன்னையும் மயிலம்மை தான். அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்றும் அழைப்பர், இந்தத் தலம் மயூரம் என்றும் இங்குள்ள இறைவன் மயூரநாதர் என்றும் அழைக்கப்படுவதன் காரணம் தெரியவேண்டாமா? இறைவனை மதியாது தக்கன் வேள்வி செய்கிறான். தக்கன் மகளாகிய இறைவி தாக்ஷாயணி தந்தையிடம் வாதாடச் செல்கிறாள். அவளையுமே மதிக்கிறானில்லை தக்கன். அவன் செய்யும் சிவ நிந்தனையைக் கேட்டு உலகமே அஞ்சுகிறது. அப்போது பக்கத்திலிருந்த மயிலும் அஞ்சி அம்மையை வந்து அடைகிறது. அவளும் மயிலுக்கு அபயம் கொடுக்கிறாள்.

பின்னர் தாக்ஷாயணி தக்கனின் வேள்வித் தீயிலே வீழ்ந்து விடுகிறாள். இறைவன் சங்கார தாண்டவம் ஆடுகிறான். பின்னர் அம்மை விரும்பிக் காப்பாற்றிய மயிலுருவில் அவள் எழுக என அருள் புரிகிறான். அவளுடன் கலைமகளும் அலைமகளுமே மயிலுருப் பெற்று எல்லோரும் சேர்ந்து ஆடுகின்றனர் இக்காவிரிக் கரையிலே. அம்மை மயிலாய் ஆடிய துறைதான் மயிலாடுதுறை. அம்மை பூஜித்த இறைவனே மயூரநாதர். அம்மையும் மயூரநாதரும் கோயில் கொண்டிருக்கும் இடமே மயூரம். அஞ்சி வந்த மயிலுக்கு அபயம் கொடுத்த அன்னையே அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்றெல்லாம் தல வரலாறு கூறும். 'மதிநுதல் இமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட்டு ஏத்தும் இது துலாப் பொன்னித் தானம்' என்றே பரவுவார் திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதியார்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்; அப்பர் வந்திருக்கிறார். அப்பர் இம்மயிலாடுதுறைக்கு ஒரு தனிப் பதிகமே பாடியிருக்கிறார். அதைவிட அழகாக எந்த எந்தத் துறைகளில் எல்லாம் இறைவன் தங்கியிருக்கிறான் என்ற நீண்ட ஜாபிதாவையே கொடுக்கிறார் திருத்தாண்டகத்திலே.

கயிலாய மலை எடுத்தான்
கரங்களோடு சிரங்கள் உரம்
நெரியக்கால் விரலால் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை
தென்பாலைத்துறை, பண்டெழுவர்
தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்
குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை,
பூந்துறை, பெருந்துறையும்
குரங்காடு துறையினோடும்
மயிலாடுதுறை, கடம்பந்துறை,
ஆவடுதுறை, மற்றுந்துறை
அனைத்தும் வணங்குவோமே

அப்பருடன் சேர்ந்து இந்தத் துறைகளிலே நீராடி இறைவனை வணங்கிய பேற்றை நாமும் பெறலாம்தானே. இங்குள்ள கோயில் பெரிய கோயிலுமல்ல, சிறிய கோயிலும் அல்ல. கருவறையைச் சுற்றிய கோஷ்டத்தில், ஆனந்தத் தாண்டவர், கங்காதரர் எல்லாம் கற்சிலைகளாக உருவாகியிருக்கிறார்கள். திருத்தொண்டர் அறுபத்து மூவரும், கல்லிலும் செம்பிலும் கவினூற அமைந்திருக்கிறார்கள், செப்பு வடிவத்தில் இருப்பவை நல்ல அழகான படிமங்கள். இந்தக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தார் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்தக் கோயிலுக்குள் ஒரு சிறு கோயில் குமரனுக்கு. அதற்குக் குமரக் கட்டளை என்று பெயர். இந்தத் தேவஸ்தானம் தருமபுரம் ஆதீனத்தார் நிர்வாகத்தில் இருக்கிறது. அருணகிரியார் இத்தலத்தை ரத்தினச் சிகண்டியூர் என்று குறிப்பிடுகிறார்.

எழில் வளமிக்குத் தவழ்ந்து உலாவிய
பொனிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டியூர் உறை பெருமாளே!

என்பது அருணகிரியார் திருப்புகழ்.

இக்கோயிலில் பதினாறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. முதற் குலோத்துங்கன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் முதலிய சோழ மன்னரும், சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னனும் ஏற்படுத்திய நிபந்தங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன், தன்னைக் 'கோனேரின்மை கொண்டான் வீர ராஜேந்திரன் திரிபுவன வீரதேவன்' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். குமர கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்கள் இல்லை.

மாயூரத்திலே பார்க்கவேண்டிய கோயில் இன்னொன்றும் உண்டு. அதுதான் துலாக் கட்ட மண்டபத்துக்குத் தெற்கேயுள்ள விசுவநாதர் கோயில், இந்தக் காசி விசுவநாதரும் அவர் துணைவி விசாலாக்ஷியும் காசிக்கு வர இயலாத தமிழ் மக்களைத் தேடி, தமிழ் நாட்டுக்கு வந்து, இங்குள்ள எல்லாக் கோயில்களிலும் இடம்பிடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள்; தரிசனமும் கொடுக்கிறார்கள். கங்கையும் யமுனையும் சரஸ்வதியுமே இங்கு வந்து விட்டார்கள் என்று தெரிந்தபின், விசுவநாதரும் விசாலாக்ஷியும் இங்கு எழுந்தருளியதில் வியப்பில்லை. இவர்கள் வந்துவிட்டார்களே என்று காசித்துண்டி விநாயகர் பூதகணங்கள் எல்லோருமே புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள், இந்தக் காவிரிக்கரைக்கு. ஆகவே துலாக் காவேரி ஸ்நானத்துக்குப் போனால் மயிலாடு துறையார், வழி காட்டும் வள்ளலார், காசி விசுவநாதர் எல்லோரையும் கண்டு வணங்கித் திரும்பலாம்.

மாயூரம் வரை போய்விட்டு அடுத்துள்ள தருமபுரம் போகாமலும், அங்குள்ள ஆதீனத்தார் அவர்களைப் பாராமலும் திரும்ப முடியுமா? தருமை ஆதீனம் பழம் பெருமையுடையது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்த குரு ஞானசம்பந்தர் செந்தமிழ்ச் சொக்கரை ஆத்மார்த்தமாகப் பூஜைபண்ணி, கமலை ஞானப்பிரகாசரிடம் உபதேசம் பெற்று, தருமபுரம் வந்து மடம் நிறுவியர்கள். இம்மடம் நாளும் வளர்ந்து இன்று இருபத்தேழு கோயில்களின் பரம்பரைத் தர்மகர்த்தர்களாக இருந்து வருகிறார்கள். இப்போது மடாதிபதியாக இருந்து அருளாட்சி செய்பவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிய பரமாச்சாரிய சுவாமிகள். அவர்கள் செய்துவரும் அறப்பணிகள் அனந்தம். திருக்குறள் உரைவளம் வெளியிட்டதைத் தொடர்ந்து திருமுறைகளை யெல்லாம் அழகாக அச்சிட்டு வழங்குகிறார்கள். கல்வி கேள்விகளில் சிறந்த ரசிகர் அவர்கள். அவர்களைத் தரிசித்து, அவர்களோடு அளவளாவ, அவர்கள் அருள்பெற, எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகளே. அந்தப் பாக்கியம் நிறைய எனக்கு உண்டு.