வேங்கடம் முதல் குமரி வரை 3/014-033

14. செம்பியன்மாதேவிக் கயிலாயர்

சில வருஷங்களுக்கு முன் நான் ஒரு சித்திரம் பார்த்தேன். அந்தத் சித்திரத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விக்டோரியா மகாராணி கம்பீரமாக வீற்றிருந்தாள். ஆம் பதினெட்டு வயதிலேயே அரியாசனத்து அமர்ந்து எண்பது வயதுக்கு மேலும் இருந்து ஆட்சி புரிந்தவள் அல்லவா அவள், அவளது எண்பதாவது வயதில் எழுதிய சித்திரம் அது, அவளுடன் அவளது மகன் எட்வர்ட் இருந்தார். அவர்தானே அப்போது வேல்ஸ் இளவரசர். பின்னர் தானே ஏழாவது எட்வர்ட் ஆக அவர் முடிசூடினார். இன்னும் படத்தில் எட்வர்ட் மகன் ஜார்ஜ் இருந்தார். அவர் மகன் எட்வர்ட். இருந்தார் (இவர்கள் தாம் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ், எட்வர்ட் என்று சரித்திரத்தில் கணக்கிடப்பட்டவர்கள்). இந்தச் சித்திரத்துக்கு அடியில் 'நான்கு தலைமுறை' என்று எழுதியிருந்தது.

விக்டோரியா மகாராணியின் காலத்திலே அவளது பூட்டன் எட்வர்ட் பிறந்து வளர்த்து பருவம் எய்தியதால், நான்கு பேரையும் நிறுத்திப் படம் எழுதி நான்கு தலைமுறை கண்ட ராணி அவள் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ் மக்களாகிய நாமுமே இப்படிப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ராணியைக் குறித்து. அத்தகைய சோழப் பேரரசிதான் செம்பியன்மாதேவி. சேர மன்னர்களுள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னரான முதல் பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரான கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசியாக விளங்கியவர். கண்டராதித்தனுக்குப் பின், அவரது தம்பியாகிய அரிஞ்சயனும், இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரச் சோழனும் அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததைக் கண்டவர்.

பின்னும் தன் அருமை மகன் மதுராந்தகன் என்னும் உத்தமச் சோழனும், சுந்தர சோழன் மகன் அருள் மொழி வர்மன் என்னும் ராஜராஜனும் ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். ஆகவே எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மாதரசி ஆறு சோழ மன்னர்கள், சோழ மண்டலத்தை ஆள்வதைக் காணும் பேறு பெற்றவர். இப்படி ஆறு சோழ மன்னர்களுக்கு உகந்தவராக விளங்கினார் என்பதற்காக மட்டும் இவர் நமது பாராட்டுக்கு உரியவர் இல்லை . வாழ்நாள் முழுதும் சிவனடி மறவாச் சிந்தையராக வாழ்ந்து, செங்கல்லால் கட்டிய பழைய கோயில்களையெல்லாம் கற்றளிகளாக மாற்றி நல்ல சிவத்தொண்டு செய்து வாழ்ந்தவர், என்பதற்காகவே இவரை நாம் நினைக்கிறோம்; போற்றுகிறோம்.

மன்னரும் மக்களும் இப் பெருமகளை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதைச் சரித்திர ஏடுகள் சொல்கின்றன. ஏன்? இவர் பெயராலேயே ஓர் ஊரையும் உண்டாக்கி அங்கு ஒரு கோயிலையும் கட்டி, பாராட்டுவதொன்றே அவர் தம் பெருமைக்குச் சான்று பகர்வதாகும். அத்தகைய நிலைத்த புகழுடைய செம்பியன் மாதேவிக்கே செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட தலத்துக்கும், அங்குள்ள கயிலாயநாதர் கோவிலுக்குமே செல்கிறோம் நாம் இன்று.

செம்பியன்மாதேவி என்பது தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் தாலூக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமம். திருவாரூர் நாகப்பட்டினம் ரயில் பாதையில் கீழ் வேளூர் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு ஆறு மைல் தென்கிழக்காகச் சென்றால் இத் தலத்துக்கு வந்து சேரலாம். கீழ் வேளூருக்குத் தெற்கே இரண்டு மைலில் தேவூர் என்னும் தலம் இருக்கிறது. அங்கு இறங்கி, அங்குள்ள மதுரா பாஷிணி அம்மையோடு கோயில் கொண்டிருக்கும் தேவபுரி ஈசுவரரை வணங்கலாம். அத்துடன் அங்குள்ள செப்புச் சிலை வடிவில் இருக்கும் கல்யாண சுந்தரத்திருக்கோலத்தையும் காணலாம். கலை உலகில் காண வேண்டிய வடிவம் அது. இந்தத் தேவூருக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

ஓதி மண்டலத்து ஓர் முழுது
உய்ய வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய
மகிழ்ந்தவன் தூநீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர்
முகமலர் தேவூர் ஆதி சேவடி அடைந்தனம்,
அல்லல் ஒன்று இலமே

என்று பாடிவிட்டே நடந்திருக்கிறார். நாம் அந்தத் தேவூர் இறைவனின் ஆதிசேவடியை வணங்கிவிட்டு மேல் நடந்தால்தான் அல்லல் ஒன்றும் இல்லாமல் செம்பியன் மாதேவி போய்ச் சேரலாம். சில வருஷங்களுக்கு முன் இந்தத் தலம் செல்வதென்றால் மிகவும் கரடு முரடான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும். இப்போது பாதையெல்லாம் செம்மை செய்திருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் காரிலேயே போகலாம்.

இந்த ஊருக்கு வந்து இங்குள்ள கோயில் செல்லுமுன் அந்தச் செம்பியன்மாதேவியின் வரலாறு முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா? முன்னரே தெரிந்திருக்கிறோம், இவள் மழவர் மகள் என்று. முதல் பராந்தக சோழன் மகன் ராஜகேசரி கண்டராதித்தன். இவனுக்கு மனைவியர் இருவர்; முதல் மனைவி வீரநாரணி, இரண்டாவது மனைவியே செம்பியன்மாதேவி. கண்டராதித்தன் பட்டத்துக்கு. வருமுன்னரே வீரநாரணி இறந்திருக்கிறாள். ஆதலால் செம்பியன்மாதேவியே கண்டராதித்தனது பட்டத்து அரசியாக விளங்கியிருக்கிறார். கண்டராதித்தனோ ஏதோ அரியணையில் வீற்றிருந்திருக்கிறானே ஒழிய, அவன் எண்ணமெல்லாம் இறைவன் திருவடிகளிலேதான் இருந்திருக்கிறது.

சிவபக்தியும் செந்தமிழ்ப் புலமையும் நிரம்பிய சிவஞானச் செல்வனாகவே வாழ்ந்திருக்கிறான். சிவபக்தி நிரம்பிய அரசனைக் கணவனாக வாய்க்கப்பெற்ற இவரும் சிவபக்தையாகவே வாழ்ந்திருக்கிறார். கண்டராதித்தன் சோழ மன்னனாக இருந்து அரசு செய்தது எல்லாம் ஆறு ஏழு வருஷங்கள் தாம். அப்போது இந்த அம்மையாரது திரு வயிறு வாய்த்தவரே உத்தம சோழன். இந்த உத்தமனையும் அரசியல் பற்றே இல்லாமல் சிவபக்தியில் திளைப்பவனாக வளர்த்த பெருமையும் இந்த மாதேவியையே சாரும். இவரை மக்கள் எல்லாம் மாதேவடிகள் என்றே பாராட்டி வந்திருக்கின்றனர்.

தம் கணவர் அமரரான பின் இந்த அம்மை சிவத்தொண்டுகள் செய்வதிலேயே தம் வாழ்நாள் முழுவதும் செலவு செய்திருக்கிறார். இவர் செய்யும் பணிகளுக்கு எல்லாம் இவரது கொழுந்தன்டமாரான அரிஞ்சயரும் சுந்தரச் சோழரும் துணை நின்றிருக்கிறார்கள். திருமகன் உத்தம சோழனும், பேரன் ராஜராஜனும் இவரது பணியைச் சிறக்கச் செய்திருக்கிறார்கள் என்றால் வியப்பில்லை. இவர் தம் மாமனார் முதல் பராந்தக் சோழர் காலத்திலேயே அதாவது கி.பி. 941-ம் ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியை அடுத்த உய்யக் கொண்டான் மலை என்னும் திருக்கற்குடி மகாதேவருக்கு ஒரு நுந்தா விளங்கு எரிக்கத் தொண்ணூறு ஆடுகளை அளித்திருக்கிறார். இவர் சோழ நாடு முழுவதும்

சுற்றிப் பல தலங்களில் இறைவனை வணங்கியிருக்கிறார். பல கோயில்கள் செங்கற்களால் கட்டப்பட்டு நாளா வட்டத்தில் சிதைந்து போவதைக் கண்டு அவைகளைக் கற்கோயில்களாகக் கட்ட முனைந்திருக்கிறார். அப்படி இவர் கற்றளிகளாகப் புதுப்பித்தவை பத்து என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரு நல்லம் என்னும் கோனேரி ராஜபுரம், விருத்தாசலம், திருவாரூர் அறநெறி, திருமணஞ்சேரி , தென்குரங்காடு துறை, திருக்கோடிக்கா, ஆநாங்கூர், திருத்துருத்தி என்னும் குத்தாலம், திருவக்கரை என்னும் கோயில்கள் எல்லாம் கற்றளிகளாக மாறியது இவரது திருப்பணியினால்தான்.

இந்த ஒன்பது கோயில்களோடு பத்தாவது கோயிலாகத்தான் நாம் வந்திருக்கும் சிற்றூர் கயிலாயநாதர் கோயிலையும் கட்டியிருக்கிறார். அந்த நன்றி காரணமாகவே இந்த ஊரையே செம்பியன்மாதேவி என்று அழைத்திருக்கிறார்கள் மக்கள் (இதற்கு முன் அந்த ஊரின் பெயர் என்னவோ தெரியவில்லை .) இப்படிக் கோயில் திருப்பணி செய்வதோடு இவரது கைங்கர்யம் நிற்கவில்லை. இன்னும் பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்கும் திருவிழாக்களுக்கும் மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்குகளுக்கும் நந்தவனங்களுக்கும் பலப்பல நிவந்தங்கள் அளித்திருக்கிறார். பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பலவகைக் கலங்களும் வழங்கியிருக்கிறார். இத்தனை அறங்களை அடுத்தடுத்து இவர் செய்து வரும்போதும், சீலமிக்க தம் கணவனை மறவாமலேயே வாழ்ந்திருக்கிறார். திரு நல்லத்தில் உமாமகேசுவரர் கோயிலைக் கட்டும்போது அங்கு தம் கணவராம் கண்டராதித்தர் சிவபூசை செய்வதுபோல் ஒரு சிற்ப வடிவம் சமைக்க அவர் மறக்க வில்லை.

செம்பியன் மாதேவியைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் அங்குள்ள கைலாயமுடையார் கோயிலுள் நுழையலாம். கோயில் நாற்புறமும் நல்ல மதிலும், கோயில் வாயிலில் ஒரு திருக்குளமும் உடையதாக இருக்கிறது. கோயிலின் மதில் கிழ-மேல் 298 அடி நீளம். தென்-வடல் 267 அடி அகலம் உடையது. இது சிறிய கோயிலும் இல்லை ; பெரிய கோயிலுமில்லை. இரண்டு பிரகாரங்களோடும் திருச்சுற்று மாளிகையுடனும் அமைந்தது. கோயிலின் தோரண வாயிலின் பேரில் கட்ட முனைந்த கோபுரம் முற்றுப் பெறவில்லை. இடைநிலைக் கோபுரம் மூன்று நிலை கொண்டதாக இருக்கிறது. அதைக் கடந்து சென்றதும் செம்பியன்மாதேவியார். பெருமண்டபம் இருக்கிறது. இதில்தான் அன்றையக் கிராம சபையார் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இனிக் கோயிலுள் நுழைந்து கயிலாய முடைய மகாதேவரை வணங்கலாம்.

இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன்
செம்பியன் மாதேவி

அம்பிகையின் கோயில் இருக்கிறது. அம்பிகை பெரிய நாயகி என்ற பெயரோடு அருள் பாலிக்கிறாள், இந்தக் கோயிலுள் பல செப்புப் படிமங்கள் உண்டு. அவைகளில் சிறப்பாயிருப்பது பழைய பைரவர் வடிவம் ஒன்று. இக்கோயிலில் சிலாவடிவமாகச் செம்பியன் மாதேவியின் திருக்கோலம் ஒன்றும் இருக்கிறது. இந்தச்சிலை கலை, அழகு பொருந்தியதல்ல என்று சமீபத்தில் செப்புச் சிலை வடிவில் இச் சிவ பக்தையாம் செம்பியன் மாதேவியைச் செய்து வைத்திருக்கிறார்கள். அது அழகாக இருக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் சிறப்பாக நடக்கிறது. இது ஏழைக் கோயில் அல்ல. 280 ஏக்கர் நன்செயும் 115 ஏக்கர் புன் செயும், அவற்றின் மூலம், வருடம் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் வருமானமும் உடையது.

இக்கோயில் புராணப் பிரசித்தி உடைய கோயில் அல்ல; என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய கோயில், இந்தக் கோயிலில் இருபத்து மூன்று கல் வெட்டுக்கள் இருக்கின்றன. சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்று, அருள்மொழித் தேவவளநாடு, அதனுள் அடங்கியது அளநாடு. அந்த நாட்டிலே இந்தச் செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம் தோன்றியிருக்கிறது. நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குப் பிரமதேயமாக, செம்பியன் மாதேவியார் இந்த நாட்டை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீ கைலாயம் என்னும் இக்கோயிலையும் கட்டியிருக்கிறார். உத்தமசோழர் காலம் (கி.பி. 970) முதல் சடையவர்மர் வீரபாண்டியன் காலம் (கி.பி. 1268) வரை இக்கோயிலுக்கு ஏற்பட்ட நிபந்தங்கள் அனந்தம். மற்ற வரலாறுகளைப் பற்றிய தகவல்களுக்கும் குறைவில்லை சரித்திர ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இங்குள்ள கல்வெட்டுக்கள் மிக்க பயனுடையதாக இருக்கும். செம்பியன் மாதேவியார் செய்த திருப்பணிகளைப் பாராட்டி. அவருக்கு உரிய வணக்கத்தைச் செலுத்துவதற்காகவே இந்தக் கோயிலுக்குப் போகலாம்.

இக்கோயிலைச் சுற்றி அந்த வட்டாரத்திலே நிறையக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்குத் தெற்கே ஐந்து மைல் தொலைவில் குண்டையூரும் அதையடுத்து திருக்குவளை என்று வழங்கும் கோளிலியும் இருக்கின்றன. குண்டையூரில்தான் சுந்தரர் இறைவனிடம் நெல் பெற்றிருக்கிறார். அந்த நெல் குவையை அள்ளிக் கொண்டு போய்த் திருவாரூர் பரவையார் வீட்டில் சேர்க்க இறைவனிடமே ஆள் வேண்டியிருக்கிறார். அவரும் இந்தப் பணியை முகங்கோணாது செய்திருக்கிறார். கோளிலி சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. அவனிவிடங்கத் தியாகர் பிருங்க நடனம் ஆடியிருக்கிறார் இங்கே. இக் கோயிலுக்குப் பக்கத்திலே எட்டிக்குடி.. ஆம், எட்டிக் குடி வேலாண்டி இசை உலகில் பெயர் பெற்றவனாயிற்றே. இன்னும் இச் செம்பியன்மாதேவிக்குத் தென்மேற்கே ஆறு மைல் தொலைவில் வலிவலம் என்னும் தலம் இருக்கிறது. கரிக்குருவியான வலியன் பூஜித்த தலம் அது. கோயில் கட்டுமலை மேல் இருக்கிறது.

பிடியதன் உரு உமை
கொளமிகு கரியது
வடிகொடு தன அடி
வழிபடும் அவரிடம்
கடி கணபதி வர
அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி
வலம் உறை இறையே

என்ற சம்பந்தர் தேவாரம் நமக்கெல்லாம் மனப்பாடம் ஆன பாட்டாயிற்றே. இன்னும் செம்பியன்மாதேவிக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் திருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும் ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும் உண்டு. இத்துடன் கீழ் வேளூர், சிக்கல், நாகைக் காரோணம் எல்லாம் இத்தலத்தைச் சுற்றி அமைந்த கோயில்கள் தாமே. இத்தனை கோயில்களுக்கும் நடுநாயகமாகச் சரித்திரப் பிரசித்தியுடன் விளங்குவதுதான் செம்பியன்மாதேவி கயிலாயமுடையார் கோயில்.