வேங்கடம் முதல் குமரி வரை 3/021-033

21. மழபாடி மாணிக்கம்

லகத்தில் நமக்குக் கிடைக்கும் மணிகளில் எல்லாம் மிக்க உறுதியானது, மிக்க ஒளி உடையது வைரம் என்பதை அறிவோம். இது காரணமாகவே அதன் மதிப்புமே உயர்ந்திருக்கிறது. வைரக் கம்மல்கள் அணிந்த பெண்ணுக்கும் வைர மோதிரம் அணிந்த ஆணுக்கும் சமுதாயத்திலே ஒரு மதிப்பு இருக்கிறதே. இந்த வைரத்தையே வஜ்ரம் என்றும் கூறுவார்கள். இந்த வைரம் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பின் மேல் மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்திருக்கின்றன. பலவகையான இயற்கை மாற்றத்தால் இம்மரங்கள் நிலத்துக்குள் புதைந்திருக்கின்றன. கணக்கற்ற ஆண்டுகள் இப்படிப் புதைந்து கிடந்தமையால் அவை மிகச் செறிவு பெற்று நிலக்கரிப் பாறைகளாக உறைந்திருக்கின்றன.

மேலும் மேலும் மண்ணும் கல்லும் அந்தப் பாறைகளை அழுத்த உள்ளேயிருந்து வெப்பமும் தாக்க, இந்த அழுத்தம் காரணமாகக் கரிப்பாறைகள் வைரமணிப் பாறைகள் ஆகியிருக்கின்றன. இப்படிக் கரியானது அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் உள்ளாகும்போது தான் வைரமாகிறது என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இத்தனை அழுத்தம் காரணமாகப் பிறப்பதினால்தான் அத்தனை வலிவுடனும் வைரம் இருக்கிறது. உறுதியான உள்ளம் படைத்தவர்களை வைர நெஞ்சு உடையவர்கள் என்று கூறுகிறோம்; பாராட்டுகிறோம். பாரதி பாடினானே நம் நாட்டுப் பாப்பாக்களைப் பார்த்து :

உயிர்களிடத்து அன்புவேணும் - தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் -- இது
வாழும் முறைமையடி பாப்பா

என்று.

மனிதர்களில் வைரமுடைய நெஞ்சு படைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அஞ்சி அஞ்சிச் சாகும் மனிதர்கள் தானே இங்கு அதிகம். ஆனால் அந்த மனிதர்களையெல்லாம் காக்கும் இறைவன் நல்ல திடமான வைர நெஞ்சு படைத்தவனாக இருந்திருக்கிறான். எது வந்தாலும் அசையாது அஞ்சாது நிற்கும் இயல்புடையவனாக இருந்தால் தானே, அவன் உலகு, உயிர் அனைத்தையும் காத்தல் கூடும். அப்படி இருப்பவனையே வைரத்தூண் என்போம். அப்படியே அழைத்திருக்கிறார்கள். ஒரு தலத்தில் உள்ள இறைவனை. அந்தத் தலத்து இறைவன் பெயரே வஜ்ரஸ்தம்பேசுரர். அவரையே அருள் மிக அப்பர் அடிகள், ‘மறை நான்கும் ஓலமிட்டு வரம் ஏற்கும் மழபாடி வயிரத் தூணே' என்று மனமுருகிப் பாடுகிறார். இவர் எப்படி வைரத் தூண். ஆனார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரம்ம லோகத்திலிருந்து சிவலிங்கத்தைப் புருஷா மிருகம் எடுத்து வந்து கொள்ளிடக் கரையில் பிரதிஷ்டை செய்து விடுகிறது. பிரம்மாவோ தான்பூஜித்த லிங்கத்தை தேடி அங்கு அதைப் பெயர்த்து மீண்டும் தன் உலகத்துக்கு எடுத்துப் போக விரும்பியிருக்கிறார். இறைவனோ அசையாது ஆடாது வைரத்தூணாக, வஜ்ர ஸ்தம்பமாக நின்றிருக்கிறார். பிரமன் அவரை அப்படியே விட்டு விட்டே திரும்பியிருக்கிறான். லிங்க வடிவில் பிரம்ம லோகத்திலிருந்து வந்தவர் எப்படி வைரத்தூணாக மாறினார்? கற்ப கோடி காலங்களாகப் பக்தர்கள் அன்பென்னும் பூமியில் அல்லவா புதைந்திருக்கிறார். தேவர் ஒரு புறமும் மக்கள் ஒரு புறமும் இருந்து அழுத்த அழுத்த, அவர் வைரமாக - வைரத்தூணாக மாறியதில் வியப்பில்லை தானே. இந்த வஜ்ரஸ்தம்பேசுரர் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருமழபாடி. அந்த மழபாடிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமழபாடி, திருச்சி ஜில்லாவில் கொள்ளிடக்கரையில் உள்ள ஊர். இதற்குச் செல்வதற்குத் தலயாத்திரிகர்களை வழிகேட்டால், திருவையாற்றிலிருந்து ஒரு மைல் மேற்கே போய்த் தில்லைஸ்தானம் என்று இன்று வழங்கும் நெய்த்தானத்து நெய்யாடி அப்பரையும் பாலாம்பிகையும் தரிசித்துவிட்டு வடக்கே திரும்பி இரண்டு மைல் நடந்து கொள்ளிட நதியையும் கடந்தால் சென்று சேரலாம் என்பர். இது எல்லாம் நல்ல பங்குனி சித்திரை மாதம் கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத காலத்துக்குச் சரி. ஆற்றிலே தண்ணீர் இருந்தால் இந்த வழி எல்லாம் சரிப்பட்டு வராது. நேரே திருச்சி விருத்தாசலம் ரயில் பாதையில் புள்ளம்பாடி ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கு நோக்கிப் பன்னிரண்டு மைல் நடந்தோ வண்டியிலோ போகவேணும்.

இதைவிடச் சுளுவான வழி, திருச்சியிலேயே பஸ் ஏறி லால்குடி, பூவாளூர், புள்ளம் பாடி வழியாகக் கிட்டத்தட்ட முப்பது மைல் போக வேணும். சொந்தக் கார் உள்ள மகாராஜாக்கள் 'ஜம்' என்று காரிலேயே போய்ச் சேரலாம். கோயில் வாயிலிலே கொள்ளிட நதி ஓடும். அதுவும் அங்கு வடக்கு நோக்கியே ஓடும். 'ஓ! அப்படியானால் அது உத்தர வாஹினியாயிற்றே. அங்கு ஸ்நானம் செய்வது எவ்வளவோ புண்ணியத்தைத் தருமே' என்று நினைத்து முதலிலே நதியில் இறங்கி நன்றாக நீராடுங்கள். அங்கு எப்போதுமே குளிக்கும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்குமாம். இப்படிக் கொள்ளிடத்தில் நீராடி விட்டுக் கரையேறிக் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் வாயிலை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. ஆற்றிலே நீர் நிறைந்து போனால் கோயிலுக்குள்ளேயே தண்ணீர் வந்து விடும். அப்படித் தாழ்ந்தே இருக்கிறது வாயில். கோயிலுள் செல்லுமுன் இத்தலத்துக்கு எப்படி மழபாடி என்ற பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளலாம். சேரர் மரபில் ஒரு கிளையினர் மழவர், அந்த மழவர்கள் தங்கியிருந்த இடம் மழபாடி என்று ஆகியிருக்கிறது. நமக்குத்தான் அந்த மழவர் மகள் செம்பியன் மாதேவி முன்னமேயே நன்கு அறிமுகம் ஆனவள் ஆயிற்றே.

இது தவிர இத்தலத்தில் இறைவன் மழு ஏந்தி நர்த்தனம் செய்திருக்கிறார். அதனால் மழு ஆடி என்று பெயர் பெற்று மழபாடி ஆயிற்று என்றும் கூறுவர். இதற்கேற்ப மழு ஏந்தி இறைவன் திருத்தம் செய்யும் கற்சிலை ஒன்றும் கோயிலுள் இருப்பதைப் பார்க்கிறோம். கோயில் நல்ல பெரிய கோயில், பெரிய பிரகாரங்களையுடையது. வெளிப்பிரகாரத்தில் காணவேண்டியவை சிறப்பாக ஒன்றும் இல்லை. ஆதலால் இடை நிலைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து சென்றால் இறைவன் திருமுன்பு வந்து நிற்போம். வைரத்தூண் என்று பெயர் தாங்கியவர் ஆயிற்றே என்று அவர் மேனியில் வைர ஒளியை எதிர்பார்த்தல் கூடாது. வஜ்ரஸ்தம்பேசுரர் என்பதனால் பெரியஸ்தம்பம் போலும் இருக்கமாட்டார். நல்ல காத்திரமில்லாத வடிவில் லிங்கத் திருஉருவாக அவர் இருப்பார். இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள்.

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
அமுதாய் உண்டு அமரர்கள் தம்

தலைகாத்து ஐயர், செம்பொன்
சிலை எடுத்து மாநாக நெருப்புக்

கோத்து திரிபுரங்கள் தீயிட்ட

செல்வர் போலும்!

நிலை அடுத்த பகம் பொன்னால்

முத்தால் நீண்ட நிரை வயிரப்

பலகையால் குவையார்த்து உற்ற

மலை யடுத்த மழபாடி

வயிரத்தூணே! என்றென்றே

நான் அரற்றி நைகின்றேனே

என்பது அப்பர் தேவாரம். சுந்தரரோ, திருவையாறு வந்தவர், ஆலம்பொழில் வரை சென்று அங்கு இரவு தங்கியிருக்கிறார். அவருக்கு மழபாடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போது இருக்கவில்லை. மழபாடி இறைவனுக்கோ சுந்தரரை அப்படி எளிதாக விட்டுவிட விருப்பமில்லை. அவரிடம் பாடல் பெறும் வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று எண்ணியிருக்கிறார். ஆதனால் சுந்தரர் கனவில் தோன்றி, 'என்னை மறந்தனையோ?' என்று கேட்டிருக்கிறார். அதனால் சுந்தரர் கொள்ளிடத்தைக் - கடந்து இங்கு வந்திருக்கிறார். பாடிப் பரவியிருக்கிறார். அவருடைய,

பொன்னார் மேனியனே! புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே!
மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே உன்னை யல்லால்
இனி ஆரை நினைக்கேனே!

என்று தொடங்கும் பதிகம்தான் பிரபலமானதாயிற்றே. வயிரத்தூணாக இருந்த இறைவன் சுந்தரருக்குச் செக்கச் சிவந்த மாணிக்கமாக அல்லவா காட்சி கொடுத்திருக்கிறார். இன்னும் அந்தப் பொன்னார் மேனியன் பாட்டை நினைவு படுத்திக் கொண்டு, மழபாடி பக்கத்திலேயே பொன்னார் மேனி விளாகம் என்று ஒரு சிறு ஊரும் இருக்கிறதே.

இந்த மழபாடி மாணிக்கம் சிறந்த வரப்பிரசாதியாகவும் இருந்திருக்கிறார், வேத வியாசரது வாதநோய் இத்தலத்துக்கு அவர் வந்து வணங்கிய பின்தான் தீர்ந்திருக்கிறது. கோயில் பலி பீடத்தில் வைத்திருந்த உணவை ஒரு கழுகு வந்து சாப்பிட யத்தனிக்கையில் அதை ஒரு வேடன் அம்பெய்து வீழ்த்த அந்தக் கழுகுக்கு இரங்கி, அதற்கு மோக்ஷ பதவியையே அளித்திருக்கிறார். அந்தக் கழுகின் பரம்பரையில் வந்த கழுகு ஒன்று இன்றும் கோயில் கோபுரத்திலே வசித்து வருகிறது என்கிறார்கள். சந்திரனைப் பற்றியும் ஒரு கதை உண்டு.

அவனுக்கோ அசுவினி முதலிய இருபத்து ஏழு மனைவியர். இவர்களில் அவனுடைய காதலெல்லாம் ரோகிணியிடமே. இந்தப் பாரபக்ஷம் காட்டியதற்காக அவனது மாமனாரான தக்ஷன், அவன் கலை தேயச் சாபமிட்டிருக்கிறான். தேய்ந்த கலை வளர அருள் புரிந்தவர் இந்த மழபாடி மாணிக்கமே என்பது புராணக் கதை. அதனால் இவர் வைத்தியநாதர் என்ற பெயரையுமே ஏற்றிருக்கிறார். இத்தனை விவரங்களையும் இறைவன் சந்நிதிமுன் நின்றே தெரிந்து கொள்ளலாம். அதன்பின் திருவுண்ணாழிச் சுற்றைச் சுற்றப்புறப்பட்டால் அங்குதான் மழு ஏந்தி நடனம் செய்த இறைவனை ஒரு தாழ்ந்த மாடத்தில் பார்ப்போம். அதனை அடுத்தே செப்புச் சிலை வடிவில் சோமாஸ்கந்தரது வடிவம் ஒரு சிறு கோயிலுள் இருக்கும். கற்சிலையாகச் சோமாஸ்கந்தரை எல்லா இடத்தும் காணுதல் இயலாது.

இந்தத் தலத்தில் இவர் விசேஷமானவர், இந்த மூர்த்திகளையெல்லாம் வணங்கியபின் வெளியே வந்துதான் வடபக்கம் தனிக் கோயிலில் இருக்கும் அன்னை அழகம்மையைக் காணவேண்டும். அழகம்மையின் வடிவம் அழகானது என்பதைத் தவிர, சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இத்தலத்தின் சிறப்பான திருவிழா பங்குனி மாதத்தில் நடக்கும் நந்தியம் பெருமானின் திருமண விழாதான். நந்தி என்றால் கோயில் வாயிலில் இறைவனை நோக்கிப் படுத்துக் கிடக்கும் காளை என்றுதானே தெரியும் நமக்கு. அந்த நந்தி மனித வடிவம் தாங்கி இறைவனது அம்சமான திரிநேத்திரம், மழு, மான் ஏந்திய நான்கு கரங்களோடு சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவராய்ப் பதவி பெற்று, முதல் திருவாயிலிலேயே இருந்து காக்கும் உரிமையையும், சைவ ஆச்சாரியருள் முதல் குருவாக இருக்கும் தன்மையையும் பெற்று அதிகார நந்தி என்ற பெயரோடு விளங்குகிறார் என்பதை நம்மில் பலர் அறியமாட்டோம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து செபேசுரர் என்ற திருமநாமத்தோடு வாழ்ந்து, அரிய தவம் செய்து இறைவனது அருளைப் பூரணமாகப் பெற்று, பின்னர் வசிஷ்டரது பௌத்திரியும் வியாக்கிரபாதருடைய புத்திரியும், உபமன்யரது தங்கையுமான சுயம்பிரபையை மணந்திருக்கிறார்.

இவரே சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவரான அதிகார நந்திதேவர். இவரது திருமணம் சிறப்பாக நடந்தது. இந்த மழபாடியில்தான். இங்குதானே மணப்பெண்ணான சுயம்பிரபை பிறந்து வளர்ந்து இவருக்கெனக் காத்திருக்கிறாள். இந்தத் திருமணத்துக்கு மணமகனையும் அழைத்துக் கொண்டு ஐயாறப்பரும் அறம் வளர்த்தாளும் வந்திருக்கிறார்கள். இந்த மணமக்களை அழைத்துக் கொண்டே. ஐயாறப்பர் ஏழூர் காணப் புறப்பட்டிருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்தது இத் தலம். இக்கோயிலின் சரித்திர ஏடுகள் மிக மிக விரிவானவை. மொத்தம் முப்பது கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருக்கின்றன. மதுரை கொண்ட கோப்பர கேசரி வர்மன் என்னும் முதல் பராந்தக சோழன் காலம் முதல், மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், ஹொய்சல மன்னர்கள், விஜயநகர வேந்தர்கள் காலம்வரை இந்தக் கோயிலில் பல பகுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பல நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. திருவிசைப்பா பாடிய கண்டராதித்த சோழர், ராஜராஜன் முதலியோர் காலத்தில் இக்கோயில் பலவகையாலும் விரிவடைந்திருக்கிறது. மழபாடி பக்கத்திலேயே கண்டாரதித்த சதுர்வேதி மங்கலம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அதுவே இன்று கண்டராச்சியம் என வழங்குகிறது. கண்டராதித்தரது மனைவியின் திருப் பெயரால் செம்பியன் மாதேவிப் பேரேரி ஒன்றும் வெட்டப்பட்டிருக்கிறது. இந்த அம்மையின் மற்றொரு பெயரான குலமாணிக்கம் என்றே ஒரு வாய்க்காலுக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. சோழர் ஹொய்சலர் சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இந்தக் கோயில் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அனந்தம்.

நேரமும் வசதியும் உடையவர்கள் மழபாடியிலிருந்து வடக்கே பத்து மைல்கள் சென்றால் பழுவூர் செல்லலாம். பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமான பழுவேட்டரையது ஊர் அது. பரசுராமர், தாயாம் ரேணுகையைத் தந்தையின் கட்டளைப்படி கொன்றார் என்பதும், அந்தப் பழியை இங்குள்ள வடமூல நாதரை வணங்கித் தீர்த்துக்கொண்டார் என்பதும் புராண வரலாறு. நமது பழிகளும் நம்மை விட்டு நீங்க இப்பழுவூர் சென்று வடமூல நாதர் அருந்தவ நாயகி இருவரையும் வணங்கலாம். திருச்சிக்குத் திரும்பும்போது வழியில் உள்ள அன்பில் ஆலந் துறையார், சுந்தரராஜப் பெருமாள், லால்குடியிலுள்ள திருத்தவத் துறையார் முதலியவர்களையும் வணங்கி விட்டே திரும்பலாம். இதற்கெல்லாம் வசதி செய்துகொள்ள வேண்டுமானால் சொந்தக் காரிலே தான் தலயாத்திரை தொடங்க வேண்டும் என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.