வேங்கடம் முதல் குமரி வரை 3/020-033
20. ஐயாறப்பன்
இது ‘டெலிவிஷன்' காலம்.' மனிதனது அறிவு வளர்ச்சியின் காரணமாக மனிதனோடு மனிதன் எவ்வளவு தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு கொள்வதற்கு இன்றைய விஞ்ஞானம் சாதிக்கக் கொடுத்தவை எத்தனை எத்தனையோ? முதல் முதல் சங்கேத ஒலி மூலம் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்துக்குச் செய்தி அனுப்ப மனிதன் கற்றுக்கொண்டிருக்கிறான். அதன்பின் மனிதனுக்கு மனிதன் நேரில் பேசுவதுபோல் தொலை தூரத்தில் உள்ள இருவரும் பேசிக்கொள்ள வசதி செய்து கொண்டிருக்கிறான். பின்னர் ஓர் இடத்தில் எழுகின்ற ஒலியைப் பல இடத்தும் கேட்க ஏற்பாடுகள் செய்து அதன் மூலமெல்லாம் இன்னிசையை, தினசரிச் செய்திகளைப் பரப்பத் தெரிந்து கொண்டிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், ஓர் இடத்தில் நடக்கும் காட்சியையே தொலைவில் உள்ளவர்கள் உடனடியாகவே காணுமாறு மின்காந்த அலைகள் மூலம் அனுப்பக் கற்றுக்கொண்டிருக்கிறான். இதனையே இன்று 'டெலிவிஷன்' தொலைக்காட்சி 'காணுதல்' என்று சொல்கிறோம் நாம்.
இந்தத் தொலைக்காட்சி காண இன்றைய விஞ்ஞானிகள் நமக்குத் துணை புரிகிறார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான் நம்மிடையே, அவன் யார்? அவன் காட்டிய டெலிவிஷன் காட்சி என்ன என்று தெரியவேண்டாமா? அதற்குச் சமயக் குரவரில் ஒருவரான அப்பர் வரலாற்றைப் படிக்க வேணும். வரலாறு இது தான். நாவுக்கரசர் பல தலங்களுக்குச் சென்றுவிட்டுக் காளத்தி வந்து சேருகிறார். அவருக்கு ஓர் ஆசை, தென் கயிலையாம் காளத்தியிலிருந்து வட கயிலைக்குச் சென்று அங்கு இறைவனை நேருக்கு நேரே கண்டு வணங்க வேண்டும் என்று. அந்த எண்ணத்தோடேயே தளர்ந்த அந்த வயதில் தம் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். வாரணாசிவரை வந்திருக்கிறார். உடன் வந்த அடியார்களால் அதற்குமேல் தொடர முடியவில்லை. அவர்களையெல்லாம் அங்கே நிறுத்திவிட்டு மேலும் செல்கிறார்.
கைகால் தளர்ந்தாலும், மார்பினால் புரண்டு புரண்டாவது போய்விட வேண்டும் என்றே தொடர்ந்து செல்கிறார். இந்த நிலையில் இறைவன் ஒரு முனிவர் உருவில் வந்து, 'கயிலையை மானிடர் இந்த ஊனக்கண்ணால் காணுதல் இயலாது அப்பனே! ஆதலால் திரும்பிவிடு' என்கிறார். அப்பரோ, 'ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்கிறார். உடனே இறைவன் அவருக்கு இரங்கி, அங்குள்ள பொய்கை ஒன்றைக் காட்டி அதில் முழுகும்படி சொல்கிறார். அப்படியே முழுகியவர் பின் எழுந்தது திருவையாற்றிலுள்ள திருக்குளத்திலேதான். எழுந்தவர் கண்முன் எழுகிறது கயிலை. அங்கு அவர் கண்ட உயிர்கள் எல்லாம் சக்தி சிவமாகவே விளங்குகின்றன.மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளோடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்,
யாதும் கவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப் பிடியோடும்
களிறு வருவன கண்டேன்;
கண்டேன் அவன் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.
என்று அவர் கண்ட கயிலாய தரிசனத்தைத்தான் எவ்வளவு எக்களிப்போடு பாடுகிறார்? இப்படித் தூரா தொலைவில் உள்ள கயிலையை ஐயாற்றில் அப்பருக்குக் காட்டிய பெருமகன் ‘டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' அல்லவா? காட்சியைக் காட்டுவதோடு நிற்கவில்லை. காசிப் பக்கம் பொய்கையில் மூழ்கியவரைக் காவிரிக் கரையில் அல்லவா எழச் செய்திருக்கிறார். இந்த வித்தக விளையாட்டை என்ன என்று உரைப்பது? இப்படித்தான் சிந்தனைகள் எழும் திருவையாறு சென்று அங்கு அப்பர் எழுந்தருளிய திருக்குளத்தையும், அதன் கரையில் கட்டப்பட்டுள்ள தென் கயிலாயம் என்ற கோயிலையும் கண்டால், அந்தத் திருவையாற்றுக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருவையாறு தஞ்சைக்கு வடக்கே ஏழு மைல் தொலைவில் காவிரிக் கரையில் இருக்கிறது, நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் மைல் கற்களில் ‘திருவையார்' என்று எழுதி வழி காட்டுவார்கள் (அப்பர் கயிலைக் காட்சி கண்ட இடம் இவர்களுக்குத் திரு வைக்காத இடமாகக் காட்சி கொடுக்கிறது. என்ன செய்ய?). ஆங்கிலம் கற்ற தமிழர்களோ அவ்வூரைத் 'திருவாடி' என்று சொல்வதிலே பெருமைப்படுவார்கள். இத்தலம் திரு ஐயாறு என்று அழைக்கப் படுவானேன் என்று அத்தலத்து அன்பர்களைக் கேட்டால், "இது தெரியாதா? தஞ்சையிலிருந்து திருவையாறு வரும்போது வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுட்டி, காவேரி என்று ஐந்து நதிகளைக் கடக்கிறீர்களே அதனால்தான் ஐயாறு என்கிறோம் நாங்கள்” என்பார்கள். சரி, கும்பகோணத்திலிருந்து வரும்போது ஓர் ஆற்றையுமே கடக்கவில்லையே என்றால், அதற்கு அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது. உண்மையில் ஐயாறு என்றால், அழகிய ஆறாகிய காவிரி, அக்கரையில் உள்ள அழகிய ஊர் என்றுதான் பொருள்.
'செண்டாடு புனற் கன்னி, செழுமணிகள் வந்தலைக்கும் திருவையாறு' என்றுதானே ஞானசம்பந்தர் பாடி மகிழ்கிறார். இந்த ஐயாறை ஐந்து ஆறுகளாக்கி அங்குள்ள இறைவனையும் பஞ்சந்த ஈசுவரர் ஆக்கி அங்குள்ள தீர்த்தமும் ஐந்து என்று கணக்குக் காட்டி, மகிழ்கிறார்கள் மக்கள். இவர்களோடெல்லாம் நாம் விவாதிக்க வேண்டாம். நேரே கோயில் வாயிலிலே போய்ச் சேரலாம். கும்பகோணத்திலிருந்து காரிலோ பஸ்ஸிலோ வந்தால் கோயில் வாயிலிலே வந்து முட்டுவோம். இல்லை, தஞ்சை வழி வந்தால் காவிரியைக் கடந்து கிழக்கு நோக்கி நடந்து அதன் பின் வட பக்கம் திரும்பிக் கோயில் வாயில் வந்து சேரவேணும். காவிரிக் கரையில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் இந்தக் கோயில் ஒன்றையே காவிரிக் கோட்டம் என்று அழைத்திருக்கின்றனர் நமது முன்னோர்.
இங்கு ஐயாறப்பனுக்கும் அவன் துணைவி அறம்வளர்த்தாளுக்கும் கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. சுவாமி கோயில் பழைய நிலையிலேயே இருக்கிறது. இரண்டு கோயில் வாயிலையும் இரண்டு பெரிய கோபுரங்கள் அழகு செய்கின்றன. சுவாமி கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே வந்ததும் ஒரு பெரிய வெளிப்பிரகாரம். அந்தப் பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையிலேதான் சூரிய தீர்த்தம். அதற்கு மேல்புறம் அப்பர்அவர் கண்ட கயிலைக் காட்சியின் ஞாபகமாக ஒரு கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவே தக்ஷிண கயிலாயம். இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் மனைவியார் பஞ்சவன் மாதேவி. இதை அடுத்தே அப்பர் எழுந்த சமுத்திர தீர்த்தக் குளம் இருக்கிறது. தென் கயிலாயத்தை உருவாக்கியவர்கள் ஓர் உத்தர கயிலாயத்தையும் கட்டி முடிக்க மறக்கவில்லை; அக்கோயில் வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. அதனைக் கட்டியவர் ராஜராஜனது மனைவியார் லோகமாதேவி. அதனால் அதற்கு லோகமாதேவீச்சுரம் என்று பெயர். வெளிப்பிரகாரத்தைச் சுற்றி விட்டு உள்ளே போகுமுன் தெற்கு வாயிலில் உள்ள ஆட்கொண்டார். சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.
இந்த ஆட்கொண்டார் காலசம்ஹார அம்சத்தினர். வட நாட்டு அந்தணச் சிறுவனான சுசரிதன் குறைவான ஆயுளை உடையவன். ஆதலால் அவன் யமபயத்தைப் போக்கிக்கொள்ளத் திருவையாறு வந்து பஞ்சாக்கர ஜபம் செய்கிறான். சிவபெருமானே தன் துவாரபாலகர் ஒருவரை அவனுக்குக் காவல் புரியுமாறு கட்டளையிடுகிறார். யார் காவல் இருந்தால் என்ன? குறித்த காலத்தில் யமன் சுசரிதன் உயிரைக் கவர விரைகிறான், சிவபெருமான் எழுந்தருளி யமனை மிதித்து மாய்த்துச் சுசரிதனைக் காத்தருள்கிறான், அப்படி எழுந்தருளிய சிவவடிவமே ஆட்கொண்டார். அவர் காலடியிலே யமன் கிடக்கிறான். பின்னர் இறை அருளால் உயிர் பெற்று எழுந்தான் அவன் என்பது புராண வரலாறு, இந்த ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கும். நாமும் இவரை வணங்கி யமபயம் நீங்கியபின், பிரதானக் கோயிலுக்குள் நுழையலாம்.
'கோயிலில் உள்ள மண்டபங்களை யெல்லாம் கடந்து கருவறை சென்று ஐயாறப்பனை முதலில் தரிசிக்கலாம். இங்குள்ள லிங்கத் திருஉரு சுயம்பு மூர்த்தி. 'திருவையாறு அகலாத செம்பொற் சோதி' என்றே திருமுறைகளில் குறிக்கப்படுகிறார். புராணங்கள் இவரைக் கைலாச நாதர் பிரணதார்த்தி ஹரர் என்று போற்றுகின்றன. இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள்,
ஓதியாரும் அறிவார் இல்லை, ஓதி உலகெல்லாம்
சோதியாய் நிறைந்தான் கடர் சோதியுள் சோதியான்!
வேதி யாகி, விண்ணாகி மண்ணோடு எரிகாற்றுமாய்
ஆதி யாகி நின்றாளும் ஐயாறுடை ஐயனே!
என்பது சம்பந்தர் தேவாரம். சுந்தரர் தம் தோழர் சேரமான் பெருமாள் நாயனாரோடே இத்தலத்துக்கு வந்திருக்கிறார். காவிரியில் அப்போது பெரு வெள்ளம். காவிரியின் தென் கரையில் நின்று,
கங்கை சடைமேல் கரந்தானே!
கலைமான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரைக் காவிரிக் கோட்டத்து
ஐயாறுடைய அடிகளோ?
என்று கூவி அழைத்திருக்கிறார். இந்த ஓலத்துக்கு எதிர் ஓலம் கொடுத்திருக்கிறார், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர். இவரே, ஓலமிட்ட விநாயகர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். காவிரியும் வழி விட்டிருக்கிறது. அதன்பின் சுந்தரரும் சேரமானும் வந்து வணங்கித் திரும்பியிருக்கிறார்கள். நாமோ இன்று காவிரிப் பாலத்தைக் கடந்து ஓலமொன்றும் இடாமலேயே வந்து ஐயாறு அடிகளைக் கண்டு திரும்பும் வாய்ப்புப் பெறுகிறோம்.
இந்த ஐயாறப்பன் நல்ல சைவன், இவனையே மணிவாசகர், 'ஐயாறதனில் சைவனாயினன்' என்கிறார். சிவபெருமானே சைவனாவது வேடிக்கைதான். இதன் வரலாறு தெரியவேண்டாமா? இந்தக் கோயிலில் பூசைசெய்து வந்த இருபத்து நான்கு ஆதிசைவரில் ஒருவர் காசியாத்திரை செல்கிறார். நீண்ட நாட்களாக அவர் திரும்பாததால் அவருடைய உரிமை, காணி முதலியவற்றைத் தாயாதிகள் கவர்ந்து கொள்ளுகின்றனர். இந்த நிலையில் இறைவனே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தன் உரிமைகளை நிலை நாட்டுகிறான், இந்தச் சமயத்தில் காசி சென்ற ஆதி சைவரும் திரும்புகிறார். இந்த இருவரில் எவர் உண்மையான சைவர் என்று அறிய முடியவில்லை. வழக்கு நடக்கிறது. உண்மையான அந்தணரே வெற்றி பெறுகிறார். ஆதிசைவராக வந்த இறைவன் தம் உண்மை வடிவைக் காட்டி மறைகிறார்.
இந்த வரலாற்றை நினைந்தே ஐயாறதனில் இறைவன் சைவனாகிய பண்பைப் பாடிப்பரவுகிறார் மணிவாசகர், இத்தலத்தில் வழிபட்டு, அகத்தியர் தாம் விரும்பியபடி குறுகிய வடிவைப் பெற்றிருக்கிறார். இந்த ஐயாறப்பனை வணங்கி விட்டு முதல் திருச்சுற்று மாளிகையில் நடந்தால் அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு தொழலாம். இவர் கபாலமும் சூலமும் ஏந்திய கையராய் இருப்பார். இவர் திருவடிக் கீழ் ஆமை ஒன்றும் இருக்கும். ஒருமையுள் ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்கியே குருமூர்த்தமாக எழுந்தருளவேணும் என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்குகிறார் போலும். இந்தச் சுற்றில் இவரைத் தரிசித்து விட்டுச் சென்ற வழியே திரும்பிவிட வேண்டும். இவரைக் கடந்து செல்லலாகாது என்பது அங்குள்ள ஐதீகம். அடுத்த சுற்றிலேதான் மேலப்பிரகாரத்திலே தனுஷ் சுப்பிரமணியர் கருவறைக்கு நேர் மேற்கே, கிழக்கு நோக்கி நிற்பார். இதற்கு அடுத்த சுற்றிலேதான் சோமாஸ்கந்தருக்குத் தனிச் சந்நிதி.
இனி, இந்த ஐயாறப்பர் கோயிலை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்து, அறம் வளர்த்தாள் கோயிலுக்குச் செல்லலாம். இவளையே தர்ம சம்வர்த்தனி என்று நீட்டி முழக்கி அழைக்கிறார்கள். வடமொழிப் பெயரில் மோகம் கொண்டவர்கள். இந்த அம்பிகைக்கு ஒரு பரீக்ஷை வைத்திருக்கிறார் இறைவன், இறைவன் இரண்டு படி அரிசியை அளந்து கொடுத்து உலகில் உள்ள மக்கள் பசியை எல்லாம் போக்கச் சொல்லியிருக்கிறார். அம்மையுைம் அதைப் பெற்று முப்பத்திரண்டு தருமங்களைக் குறைவற முடித்திருக்கிறாள். இதனாலேயே அறம்வளர்த்தாள் என்ற பெயரும் பெற்றிருக்கிறாள். அம்பிகை அழகொழுகும் வடிவத்தில் நிற்கிறாள். அவளையுமே கண்டு தரிசித்து விட்டுத் திரும்பலாம்.
இத்தலத்தில் சிறப்பான திருவிழா-சப்தஸ்தானமே. சித்திரா பௌர்ணமி அன்று இந்தத் திருவிழா நடக்கும். ஐயாறப்பர், அறம் வளர்த்தாளுடனும், நந்தியம் பெருமான் சுயம்பிரகாச அம்மையுடனும் எழுந்தருளிய, பழனம், சோற்றுத்துறை, வேதிக்கூடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம் என்னும் ஆறு தலங்களிலும் உபசாரங்கள் பெற்று, மறுநாள் காலை திருவையாற்றுக்குத் திரும்புவர். இந்த ஏழூர் விழாவிலே மக்கள்கலந்து கொண்டு மூர்த்திகளின் பின்னாலேயே நடந்து செல்வர். வழியெல்லாம் தண்ணீர்ப் பந்தலாக இருக்கும். உண்பதற்கு உணவும், குடிப்பதற்கு இளநீரும் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும். இந்த சப்தஸ்தான க்ஷேத்திரங்கள் எல்லாமே பாடல் பெற்றவை. இவற்றில் கண்டியூர் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. பூந்துருத்தியில், அப்பர் மடம் கட்டிச் சில காலம் இருந்து வாழ்ந்திருக்கிறார்.
பூந்துருத்தி, பூந்துருத்தி என்பீராகில்
பொல்லாத புலால் துருத்திப் போக்கலாமே.
என்று நமக்குச் சொல்லி விட்டும் சென்றிருக்கிறார். இந்த ஏழூர் விழாவிலே கலந்து கொள்வதே ஒரு புதிய அனுபவம். ஐயாறப்பர் கோயில் ஆதியில் சூரிய வம்சத்து அரசன் பிரியவரதனால் கட்டப்பட்டது. பின்னர் கரிகால் பெருவளத்தான், வேங்கிநாட்டு விமலாதித்தன், விக்கிரம சோழன், இவர்களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர், மராத்திய மன்னன் சரபோஜி எல்லாம் திருப்பணி செய்திருக்கிறார்கள். இன்று இந்தக் கோயில் தருமபுர ஆதீனத்தார் ஆளுகையின் கீழ் இருக்கிறது. திருவாரூரிலே பிறந்த கர்நாடக சங்கீத பாஸ்கரர் தியாகையர், அவரது கடைசிக் காலத்தில் இத்தலத்தில் வந்து தங்கி இங்கேயே சமாதி கொண்டிருக்கிறார். அவரது சந்நிதியிலே தை மாதம் பகுள பஞ்சமியிலே தியாக ராஜ உத்சவம் நடப்பது உலகம் அறிந்ததாயிற்றே. ஆதலால் அவரது கோயிலுக்கும் சென்று வணக்கம் செலுத்திவிட்டே திரும்புங்கள் என்று நான் சொல்ல வேண்டுமா, என்ன?