வேங்கடம் முதல் குமரி வரை 3/030-033
30. தாரமங்கலத்துக் கயிலாயர்
இராமகாதை எல்லோரும் நன்கு அறிந்த ஒன்று. எல்லா நற்குணங்களும் நிறையப்பெற்றவனாக இருந்தவன் காப்பியத் தலைவன் சக்கரவர்த்தித் திருமகனான ராமன். அந்த ராமனுமே நிலை பிறழ்ந்து விடுகிறான். நீதியினின்றும் வழுவி விடுகிறான் என்பர், அக்கதையில் வரும் வாலி வதத்தைப் படிப்பவர்கள். வாலியும் சுக்ரீவனும் வானர வீரர்கள் ; அண்ணன் தம்பியர். இருவரும் வரம்பில் ஆற்றல் உடையவர்கள், இவர்களை எதிர்த்த அவுணன் ஒருவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றனர். அவுணனோ ஒரு பிலத்துக்குள் புகுந்து கொள்கிறான், வாலி தன் தம்பியைப் பிலத்துவாரத்தில் நிறுத்தி விட்டு, பிலத்தினுள் புகுந்து அவுணனுடன் போர் புரிகிறான். பிலத்தினுட் சென்ற வாலி பல நாட்களாகியும் வராதது கண்டு பிலவாயிலை அடைத்து விட்டுச் சுக்ரீவன் நாடு திரும்புகிறான். வாலி இறந்து விட்டான் என்று எண்ணிய கிட்கிந்தை வானரர்கள் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கின்றனர். பிலத்தினுள் பெரும் போர் செய்து அவுணன் உயிர் குடித்துத் திரும்பிய வாலி, முடிசூட்டிக் கொண்ட தம்பி சுக்ரீவன் பேரில் கோபம் கொண்டு அவனை நாட்டை விட்டே விரட்டி விடுகிறான். சுக்ரீவனும் கிஷ்கிந்தையை அடுத்த மலைச் சாரலிலே அனுமன் முதலிய வானர வீரர்களோடு மறைந்து வாழ்கிறான், பஞ்சவடியிலே இராவணன் சீதையை எடுத்துச் செல்ல, அவளைத் தேடிக் கொண்டு வந்த ராம லக்ஷ்மணர்களை அனுமன் கண்டு, தன் தலைவன் சுக்ரீவனிடம் அழைத்து வருகிறான். ராமனும் சுக்ரீவனது கதையைக் கேட்டு அவனுக்கு உதவி புரிய வாக்களிக்கிறான். ராமனது துணையுடன் போருக்குச் செல்கிறான் சுக்ரீவன், நடக்கும் போரிலே, 'யார் வாலி, யார் சுக்ரீவன்' என்று அறிய முடியவில்லை ராமனுக்கு.
முதல் நாள் போரில் சுக்ரீவன் தோற்று விடுகிறான். இரண்டாம் நாள் போரிலே, ராமன் விரும்பியபடி சுக்ரீவன், கொடிப் பூமாலை ஒன்றை அணிந்து செல்கிறான். அன்று நடந்த போரில் ராமன் மறைந்து நின்று பாணம் எய்து வாலியை வீழ்த்துகிறான். ராமன் சுக்ரீவனுக்குத் துணை வந்தது சரிதானா? அந்த அண்ணன் தம்பி போரில், மறைந்து நின்று அம்பெய்து வாலியை வீழ்த்தியது அறம் கடவாத செயலாகுமா? என்பதுதான் அன்று முதல் இன்றுவரையில் அறிஞர்களிடையே நடக்கும் வாதம்.
இருவர் போர் எதிரும் காலை
இருவரும் நல் உற்றாரே;
ஒருவர் மேல் கருணை தூண்டி
ஒருவர் மேல் ஒளிந்து நின்று.
வரிசிலை குழைய வாங்கி
வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிதொன்றாமோ?
என்று வாலி கேட்கும் கேள்விக்கு ராமனால் பதில் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. இது கிடக்கட்டும். இந்தப் போர்க்களத்தில் எப்படி ராமனால் வாலி அறியாது மறைந்து நிற்க முடிந்தது என்பது மற்றொரு கேள்வி. பரந்த வெளியிலே நடக்கும் போரிலே, வாலி காணாது மறைந்து நிற்க ராமனால் இயலுமா என்பது, ராம காதையில் நம்பிக்கையற்றவர்களது வாதம்.
இந்த இரண்டாவது கேள்விக்கு விடை காணவேண்டுமானால் தாரமங்கலத்துக்குப் போக வேண்டும். அங்குள்ள சிற்ப வடிவங்களில் வாலி-ராமன் சிலைகளைக் காண வேண்டும். இரண்டு வடிவங்களையும் இரண்டு தூண்களில் செதுக்கி வைத்திருக்கிறான் சிற்பி. என்றாலும் ராமனது வடிவம் இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால் வாலியின் வடிவம்நன்றாகத் தெரிகிறது. ஆனால் வாலி வடிவம் இருக்கும் தூண் பக்கம் நின்று ராமனைப் பார்த்தால் பார்க்க முடிவதில்லை. இந்த நிலையிலே தூண்களையும் அந்தத் தூண்களில் வடிவங்களையும் அமைக்கத் தெரிந்திருக்கிறான் அச்சிற்ப வடிவங்களை அமைத்த கலைஞன், இந்த வடிவங்களை மாத்திரம் அல்ல, இன்னும் எண்ணற்ற சிற்பச் செல்வங்களைக் காணும் ஆவல் உடையவர்களெல்லாம் செல்ல வேண்டிய கோயில்தான் தாரமங்கலத்திலுள்ள கைலாச நாதர் கோயில், அந்தக் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
தாரமங்கலம் சேலம் ஜில்லாவில் ஓமலூர் தாலூக்காவில் உள்ள சிறிய உர். சேலத்துக்கு நேர் மேற்கே பதினாறு மைல் தொலைவில் இருக்கிறது. சேலம் ஜங்ஷனில் இறங்கி, பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். இல்லை என்றால் சேலம் மேட்டூர் அணை ரயில் பாதையில் ஓமலூர் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு தென் மேற்காக ஆறு மைல் சென்றாலும் செல்லலாம். சேலம்-மேட்டூர் அணை ரயில் வழியாகப் போவதைவிடச் சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ்ஸில் போவதே வசதியானது, ஊர் வந்து சேர்ந்ததும் கோயிலுக்குச் செல்லலாம்.
கோயில் மேற்கே பார்த்த கோயில். ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் ஒரே காடாக இருந்திருக்கிறது. தண்டகாரண்யமே இப்பகுதிதான் என்பர் ஒரு சாரார். அந்த இடத்திலே பக்கத்திலுள்ள அமர குந்தியைத் தலைநகராகக் கொண்டு ஒரு சிற்றரசன் ஆண்டு வந்திருக்கிறான். அவனிடம் பெரிய ஆநிரை இருந்திருக்கிறது. அந்த ஆநிரையில் உள்ள பசுக்கள் எல்லாம் அங்கு உள்ள காடுகளில் சென்று மேய்ந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு பசு மட்டும் தன்னிடம் உள்ள பாலையெல்லாம் ஒரு புதரிலே சொரிந்து விட்டு வந்திருக்கிறது. இதை மாடு மேய்க்கும் சிறுவன் பார்த்து அரசனிடம் சொல்லியிருக்கிறான். அரசனும் உண்மையறியக் காட்டுக்குச் சென்று ஒரு மரத்தில் ஏறி இருந்து பார்த்திருக்கிறான். அன்றும் அந்தப் பசு தன் மடியில் உள்ள பாலையெல்லாம் அந்தப் புதரிலேயே சொரிவதைக் கண்டிருக்கிறான். அரசன் அந்தப் புதரை வெட்டியிருக்கிறான். அந்தப் புதருக்குள்ளே சுயம்பு லிங்கராக இறைவன் இருப்பதைக் கண்டிருக்கிறான். உடனே அவரையே அங்கு கைலாசநாதராகப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியிருக்கிறான்.
இது நடந்தது கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இந்தக் கதையை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவை, இந்தத் தலத்துக்குப் பக்கத்தில் உள்ள மாட்டையாம்பட்டி, இளங்கன்றுச்சாலை என்னும் சிற்றூர்கள், இக்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று, ஹொய்சால மன்னனான ராமநாத ராஜா 1286-ல் இக்கோயில் கட்ட முனைந்தான் என்று கூறும். இன்றைக்கு இருக்கும் கோயில், கோபுரம், சிற்ப வடிவங்கள் நிறைந்த தூண்களெல்லாம் பதினாறாம் நூற்றாண்டிலே கெட்டி முதலியார் வகையறா கட்டினார்கள் என்பதும் வரலாறு. அந்தப் பிரபலமான தல்லிக் கோட்டைச் சண்டைக்குப் பின் விஜயநகர சாம்ராஜ்யம் உலைந்திருக்கிறது. அதன்பின் இந்த வட்டாரத் தலைவனாக இருந்தவன் கெட்டி முதலி என்பவன். இக்கோயில் கட்டும் பணியில் இவனுக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் எல்லமன், நல்லுடையப்பர் முதலியோர். இவர்கள் கோயிலுக்கு எட்டு கிராமங்களையே எழுதி வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் இப்போதே ஏன் சொல்கிறேன் என்றால், கோயிலுள் நழைந்து அங்குள்ள சிற்பச் செல்வங்களைக் கண்டு களிக்க ஆரம்பித்து விட்டால், மற்றைய விஷயங்களிலெல்லாம் மனம் செல்லாது. அதற்காகவே கோயில் ஏற்பட்ட வரலாற்றை முதலிலேயே சொல்லிவிட முனைகிறேன்.
இனி இவ்வூருக்குத் தாரமங்கலம் என்று ஏன் பெயர் வந்தது என்று கேட்பீர்கள், தண்டகாரண்யம் என்றீரே, இதை அடுத்துத்தான் கிஷ்கிந்தை இருந்ததோ? அந்தக் கிஷ்கிந்தை மன்னன் வாலியின் மனைவி தாரையின் பெயரால் ஏற்பட்ட ஊரோ?' என்றுதானே சந்தேகிக்கிறீர்கள். அப்படி, வானர வீரன் வாலியின் மனைவி தாரைக்கும் இந்த ஊருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தாராகணங்களான நக்ஷத்திரங்கள் எல்லாம் வழிபட்ட தலம் ஆனதால் தாரமங்கலம் என்பர். இதுகூடச் சரியான வரலாறு அல்ல. கயிலையில் வாழ்ந்தாலும், இந்தப் பரமசிவனுக்கு உகந்த இடமாகத் தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது. அவர் தம் திருமணத்தை இந்தத் தமிழ் நாட்டிலே நடத்திக் கொள்ளத்தான் ஆசைப்பட்டிருக்கிறார். அப்படி இறைவன் விரும்பிய திருமணத்தை நடத்திக் கொடுத்தவர் மகாவிஷ்ணு. தன் தங்கையாகிய பார்வதியை முறைப்படி கயிலாயநாதருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துத் திருமணம் முடித்து வைத்த தலம் ஆனதால் தாரைமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கிறது. தாரைமங்கலமே தாரமங்கலம் என்று குறுகியிருக்கிறது பின்னர். இனிக் கோயிலுள் செல்லலாம்.
மேற்கு நோக்கிய கோயில் வாயிலை ஐந்து நிலைக்கோபுரம் ஒன்று அழகு செய்கிறது. தமிழ் நாட்டில்மதுரை போன்ற நகரங்களில் உள்ள கோபுரத்தின் காம்பீர்யத்தை இங்கே காண முடியாது. ஏதோ சட்டிபோல் அடியில் பெருத்து மேலே அளவுக்கும் அதிகமாகக் குவிந்தே காணப்படும். கோபுரத்தை விட, கோபுர வாயிலை அடைத்து நிற்கும் மரக் கதவு அழகானது. அந்தக் கதவில் 120 இரும்புக் குமிழ்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். கோபுரத்தை வெளியிலிருந்து பார்ப்பதைவிடக் கோயிலுள் நுழைந்து மேற்கே திரும்பிப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபுரம் ஒரு தேர் போலவும் அதை இரண்டு பக்கத்திலும் இரண்டு யானைகள் இழுத்துப் போவது போலவும் அமைத்திருக்கிறார்கள். கோயில் மதில் நீண்டு உயர்ந்தது. கோயிலின் வடமேற்கு மூலையில் சகஸ்ரலிங்கம் இருக்கிறது. இங்கேயே தல விநாயகரும், அவிநாசி அப்பரும்வேறே கோயில் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இந்த வெளிப் பிரகாரத்திலேயே மூன்று விநாயகர் சந்நிதிகள். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர்கள், கெட்டி முதலி, முடிகெட்டி முதலி, மும்முடிக் கெட்டி முதலி என்பர். எல்லோரும் ஒரு குடும்பத்தினர் என்றாலும் எல்லோருக்கும் விநாயகரிடத்திலே ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆகவே தனித் தனியாக விநாயகரைப் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
உட்கோயிலின் வாயிலில் வேட்டையாடும் குதிரை வீரர்கள், இவர்கள் நடத்தும் போர்கள். இவையெல்லாம் வேலூர் சலகண்டேகவரர் கோயில் கல்யாண மண்டபத்தின் முகப்புச் சிற்பங்களை நினைவூட்டும். எல்லாம் நிரம்பத் தத்ரூபமானவை; அழகானவை. இவற்றையெல்லாம் கண்ட பின்னரே உட்கோயிலில் நுழைய வேணும். கோயில் வாயிலில் வழக்கம்போல், மேலே பச்சை வண்ணனான விஷ்ணு தன் தங்கை பச்சை நாயகியைக் கைலாய நாதருக்கு மணம் முடித்துக்கொடுக்கும் காட்சி. மங்கையைக் கைப்பிடித்த மணவாளன் கயிலாயநாதன் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆனதால் மங்கை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் உள்ளே சென்றால் அழகான சிற்ப வேலைகள் நிறைந்த தூண்கள் தான் எங்கு பார்த்தாலும்; விதானம் எல்லாம் தாமரைகள், மலர் இதழ்களைக் கொத்திக் கொண்டு இருக்கும் கிளிகள்தாம். எல்லாம் கல்லிலே உருப்பெற்றிருக் கின்றன. கற்சங்கிலிகள், சிங்கங்களின் வாயில் கல் உருளைகள்,இன்னும் அஷ்டதிக்குப் பாலகர்கள் என்றெல்லாம் எண்ணற்ற சிற்பச் செல்வங்கள்.
கோயிலுள் கயிலாயநாதர் மேற்கு நோக்கிக் கருவறையில் இருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் 9, 10, 11 தேதிகளில் மாலை ஆறு மணி அளவில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் சூரிய ஒளி வாயில்களைக் கடந்து, சந்நிதியில் உள்ள நந்தியின்கொம்புகளின் இடைவழியாகச் சென்று இறைவனது லிங்கத் திருவுருவில் விழுகிறது. இதை நாம் மற்றும் பல தலங்களிலும் பார்த்திருக்கிறோம் என்றாலும் நந்தியம் பெருமானின் கொம்புகளின் இடைவழியாய் ஒளி வருவது இத்தலத்தில் மட்டுந்தான். இந்த இறைவனை வணங்கிய பின் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். அங்கு தானே தாரைமங்கலத்துக்குப் புகழ் பெற்ற சிற்ப வடிவங்கள் இருக்கின்றன? அதற்கும் முந்தி அம்பிகையாம் சிவகாமி அம்மையையும் தரிசித்து விடலாமே. அவளது கோயில் சுவாமி சந்நிதிக்கும் வடக்கே கிழக்கு நோக்கியிருக்கிறது. நல்ல அழகொழுகும் வடிவம். அந்தச் சந்நிதிக்கும் தெற்கேதான் ஆறுமுகனும் தனித்தொரு கோயிலில் இருக்கிறான். இவர்களையும் வலம் வந்து பின்னர், வடக்குப் பிரகாரத்துக்கு வரலாம். அங்குதான் இறைவன் பிக்ஷாடனக் கோலத்தில் வருவதையும் அவருக்குப் பிச்சையிட வந்த ரிஷிபத்தினிகள் எல்லாம் கலை இழந்து நிற்பதையும் காணலாம். இவர்களில் ஒருத்தி,
சொல்நலம் கடந்த காமச்சுவையை
ஓர் உருவமாக்கி
இன்நலம் தெரிய வல்லார்
எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீராள்
புனைந்தன எல்லாம் போக
தன்னையும் தாங்க லாதாள்
துகில் ஒன்றும் தாங்கிநின்றாள்.
என்று கம்பன் வர்ணிக்கும் மிதிலை நகர்ப் பெண் போலவே நிற்கிறாள். நழுவும் சேலையைப் பிடித்துக்கொண்டுஅவள் வரும் அழகையே வடித்திருக்கிறான் சிற்பி கல்லில். இன்னும் இந்த வடக்குப்பிரகாரத்திலே தான் காஞ்சி காமாட்சியும் ரிஷபவாகனாருடரான கயிலாயநாதரும் காட்சி கொடுப்பர். மகாவிஷ்ணு எடுத்த மோகினி அவதாரம், நடராஜர் ஆடிய ஊர்த்துவ தாண்டவம், பதஞ்சலி, வியாக்கிரபாதர், பிருங்கி ரிஷியுடன் கூடிய அர்த்தநாரி எல்லாம் நிற்பர். தெற்குப் பிரகாரத்தில்தான் இத்தலத்துக்குச் சிறப்பான ரதி, மன்மதன் சிலைகளும் மற்றச் சிலைகளும் இருக்கின்றன. ஆரம்பத்திலே சொன்ன வாலிவதக் காட்சி, ராமர் மறைந்திருந்து அம்பெய்தல் எல்லாம், சந்நிதி எதிரேயுள்ள தூண்களில் இருக்கின்றன.
இக்கோயிலில் பெரும் பகுதியைக் கட்டி இங்குள்ள சிற்பவடிவங்களை யெல்லாம் அமைத்தவர் கெட்டி முதலியாரே. அவர் சிறந்த சைவர். சொன்ன சொல் தவறாதவர், அவரைப் பற்றியும் ஒரு பாடல் வழங்குகிறது.செங்கதிர் பன்னிரண்டு ஈசர்
பதினொன்று திக்கும் பத்து,
கங்கையும் ஒன்பது, வெற்பு எட்டு
எழுகடல், கார்த்திகை ஆறு,
ஐங்கணை, நான்மறை முச்சுடர்,
சாதியவை இரண்டே என்னும்
மங்கை வரோதயன் கெட்டி
முதலியார் வார்த்தை ஒன்றே
மனத்தகத்தான், தலைமேலான்
வாக்கின் உள்ளான், வாயாரத்
தன் அடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான், இமையவர் தம்
சிரத்தின் மேலான், ஏழண்டத்து
அப்பாலான், இப்பால் செம்பொன்
புனத்தகத்தான், நறுங் கொன்றைப்
போதில் உள்ளான், பொருப்பிடையான்
நெருப்பிடையான், காற்றில் உள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து
உச்சி உள்ளான் காளத்தியான்
அவன் என்கண் உள்ளானே.
என்று அப்பர் பெருமான் பாடியது போல இவ்வூர்க் கயிலாயநாதனும் எல்லோருடைய கண்களிலும் நிறைந்து நிற்பான்.