வேங்கடம் முதல் குமரி வரை 3/031-033
31. பவானி சங்கமேஸ்வரர்
எனது நண்பர் ஒருவர் நல்ல தமிழ்ப் புலமை உடையவர். கவி பாடுவதில் சமர்த்தர். எந்தப் பொருளைப் பற்றி, எப்போது என்ன கவி பாடவேண்டும் என்றாலும் பாடக் கூடியவர் அவர். ஒரு நாள் அவரை அழைத்துக்கொண்டு ஒரு பிரபல அறிஞரைக் காணச் சென்றேன் நான். அறிஞரிடம் நண்பரை அறிமுகப்படுத்தி அவர் கவிபாடும் திறமையைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன். தம் புகழ் கேட்டு நண்பர் நாணிக் கோணித் தலை கவிழ்ந்தார். நான் சொன்னதையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் கடைசியில் கவிஞரைப் பார்த்து, “காகம் கா-கம்பி கம்பி-கம்” என்பதைக் கடை யடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடும் பார்ப்போம்" என்றார். நண்பர் 'பர, பர' வென்று விழித்தார் கொஞ்சம் நேரம்.
அவரது சங்கடத்தை உணர்ந்த நான் அவர் காதில் மெதுவாக, “பயப்படாதீர்கள். கடையடியைச் சொல்வதில் தான் அத்தனை படாடோபம். பிரித்துச்சொன்னால் 'காகம் காகம், பிகம் பிகம்' அவ்வளவுதான், பிகம் என்றால் வடமொழியில் குயில் என்று அர்த்தம்' என்று சொன்னேன். இதைச் சொன்னதும் கவிஞர் உத்சாகமாகப் பாட ஆரம்பித்தார். அவர் அன்று பாடிய பாட்டு இதுதான்,
காகம் குயில் இரண்டும்
கார்நிறத்தால் தம்முள் ஒப்பே
ஆகும் எனினும்
அணிவசந்தம் - போகம் செய்
வேகமுறும் காலத்து
வேறு வேறாம் அவைதாம்
காகம் காகம், பிகம் பிகம்
இந்தப் பாட்டைக் கேட்ட அறிஞர் ‘சபாஷ்' போட்டு நண்பரை மிகவும் பாராட்டினார். அறிஞர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் பாண்டித்தியம் உடையவர். தமிழ்ப் புலமை மாத்திரமே உடைய கவிஞர், அருமையான சமஸ்கிருத சுலோகத்தின் பொருளையே நல்ல கவிதையில் கூறியதைக் கேட்டு அதிசயித்து நின்றார், அறிஞர் சொன்னார் : ‘வடமொழியும் தென்மொழியும் இரண்டு ஜீவ நதிகள். இரண்டும் தனித்தனியாகப் பாய்ந்து பரவும்போது அதில் அதிக வேகமோ, சாந்நித்யமோ இருப்பதில்லை. இரண்டும் இணைந்து கலந்துவிட்டால், அப்படிக் கலக்கும் இடத்துக்குத்தான் பெருமை. தெரியாமலா சொல்லியிருக் கிறார்கள், கங்கயுைம் யமுனையும் கலக்கும் அந்தப் பிரயாகையில் சென்று முழுகினால் எவ்வளவோ புண்ணியம் உண்டு என்று. இரண்டு கலாசாரங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஏற்படும் மொழி வளர்ச்சி, பெருமைகளைத்தான் அவர் குறிப்பிட்டார்.
நான் சொன்னேன்:'என்ன? உதாரணத்துக்கு அத்தனை தொலைதூரம் சென்று வீட்டீர்கள். நம் தமிழ் நாட்டிலேயே ஒரு பிரயாகை இருக்கிறதே. தக்ஷிணப் பிரயாகை என்ற பெயரோடு. காவிரியும் பவானியும் கலக்கும் அந்தப் பவானி முக்கூடலில். அந்தச் சங்கமத்தில் சென்று முங்கி எழுந்தால் எவ்வளவு புண்ணியம்? கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்திலே சரஸ்வதி நதி அந்தர் வாகினியாகக் கலப்பது போலவே, இங்கே காவிரியும் பவானியும் கூடுதுறையிலே அமுத நதியும் அந்தர்வாகினியாகக் கலந்து இதனையும் ஒரு நல்ல திரிவேணி சங்கமம் ஆக்கிவிடுகிறது. அந்தக் கூடுதுறையில்தானே சங்கமேசுவரராம் இறைவன் வேறே கோயில் கொண்டிருக்கிறான்' என்று, இதையெல்லாம் கேட்ட அறிஞர் கவிஞரோடு சேர்த்து என்னையுமே பாராட்டினார். இந்தப் பாராட்டுதல்களுக்கு எல்லாம் காரணமாயிருந்த பவானி முக்கூடலுக்கே, அங்குள்ள சங்கமேசுவரர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
பவானி செல்வதற்கு, ரயிலில் செல்பவர்கள் ஈரோடு ஜங்ஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து பதினோரு மைல் நேர் வடக்கே பஸ்ஸிலோ காரிலோ, இல்லை, குதிரை பூட்டிய ஜட்கா வண்டியிலோ செல்லவேண்டும். சொந்தக் கார் வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்புபவர்கள் சேலம் - கோவைப் பெருஞ்சாலை வழியாகவும் வரலாம். சேலம் வழியாக வடக்கே இருந்து வந்தால் காவிரியைக் கடந்து ஊர் வந்து சேரவேணும். கோவையிலிருந்து வடக்கு நோக்கி வந்தால் பவானியாற்றைக் கடந்துதான் ஊர் வந்து சேரவேணும், ஆறுகளைக் கடப்பதற்கு நல்ல பாலங்கள் இருப்பதால் எளிதாகவே வந்து சேரலாம். இனிக் காவிரியும் பவானியும் கலக்கும் அந்த முக்கூடல் சங்கமத் துறைக்கே வரலாம்: அங்குதானே காவிரியின் மேல்கரையில் சங்கமேசுவரர் கோயில் இருக்கிறது? கோயிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய பிரதான வாயில் வழியாகவே நாம் உள்ளே செல்லலாம். அவ்வாயிலைக் கடந்ததுமே முன் முற்றத்தில் சிறிய கோபுரத்துடன் கூடிய ஒரு தனிக்கோயிலில் விநாயகர் இருப்பார். அவரை வணங்கிவிட்டு மேலே நடக்கலாம்.
கிழக்கு வாயிலுக்கு எதிரிலேதான் கொடிமரம். பலிபீடம் விளக்கேற்றும் கல் தூண் எல்லாம் இருக்கும். கோயிலுள் போவதன் முன் கிழக்கு வாயில் வழியாகக் கூடுதுறைக்குச் சென்று அங்கு முங்கி முழுகி நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாமே. அங்கெல்லாம் வசதியாக ஸ்நானம் செய்ய நல்ல படித்துறை கட்டி வைத்திருக்கிறார்கள். அதிலும் அமாவாசை கிரகண காலங்களில் அங்கு நீராடுவது சிறப்பு என்றும் தெரிகிறது.
காலில் அரவம் இரு கடரைப்
பற்றும் காலத்திலே,
மேலுலகம் பெறுவோர் புனல்
மூழ்க விரும்புவது
கோலம் மிகுந்த பவானியும்
பொன்னியும் கூடுதுறை
வாலிய காசி நண்ணாவூர்
பயில் கொங்கு மண்டலமே
என்பது தானே கொங்கு மண்டல சதகப் பாட்டு? இதைக் கேட்டவுடனே, இது என்ன இதை நண்ணாவூர் என்று வர்ணிக்கிறார்கள் என்றுகேட்கத் தோன்றும். ஆம்! பார்வதியம்மையின் திருப்பெயர்கள் பலவற்றுள் பவானி என்பது ஒன்று, அந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்திருக்கிறது. மேலும் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள முக்கூடலில் முழுகி எழுவோரை யாதொரு தீங்கும் நண்ணாது. ஆதலின் இதனை நண்ணாவூர் என்றும் அழைத்திருக்கின்றனர். இந்த நண்ணாவூரே, திரு நணா என்றும் குறுகி, ஞானசம்பந்தரால், ‘வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழியில் வண்டு பாடச் செந்தேன் தெளி ஒளிரத் தேமாங்கனி உதிர்க்கும் திருநணா' என்றும் பாடல் பெற்றிருக்கிறது. இன்னும் இந்தத் திரு நணா என்னும் பவானி, சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோடு), மங்கல கிரி, வேதகிரி, பத்மகிரி என்று ஐந்து சிறு மலைகளுக்கு இடையே இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் எனவும் வழங்குகிறது.
இந்தப் பவானி கூடுதுறையிலே காயத்திரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தக் கட்டம் இருக்கிறது. அதனைக் காயத்திரி மடு என்றும் கூறுகிறார்கள். இதன் கரையிலே காயத்திரி லிங்கமும் இருக்கிறது. அமுத லிங்கம் என்று ஒரு லிங்கத் திருவுருவம் வேறே இருக்கிறது. அன்று தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பங்கைப் பராசர முனிவர் மகா விஷ்ணுவிடம் பெற்றிருக்கிறார். இந்தப் பராசரர் கொண்டு வந்த அமுதத்தைத் தட்டிப் பறிக்க அசுரர்கள் அவரைத் தொடர்ந்திருக்கிறார்கள். அமுதம் அவர்கள் கண்ணில் படாமலிருக்க, அதனைப் பராசரர் இந்தக் கூடுதுறையிலே புதைத்து வைத்திருக்கிறார். ஆனால் அப்படிப் புதைக்கப்பட்ட பாண்டத்தோடு கூடிய அமுதமே அங்கு லிங்க உருவமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கத்தின் அடியில் இருந்துதான் அமுதவூற்று புறப்பட்டுக் காவிரியோடு கலக்கிறது என்கிறார்கள். இந்த அமுத லிங்கம், அதற்குரிய ஆவுடையாரின் பேரில் இருக்கிறது. எளிதாக எடுக்கவும், திரும்ப வைக்கவும் கூடிய நிலையில் இருக்கிறது. மகப்பேறு இல்லாதவர்கள் இந்த அமுத லிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு அக்கோயிலை வலம் வந்தால் மகப்பேறு அடைவர் என்பது நம்பிக்கை.
கூடுதுறையில் இத்தனையும் பார்த்தபின் இனிக் கோயிலுள் நுழையலாம். இந்தக் கோயிலைச் சுற்றி ஒரு கோட்டை இருந்திருக்கிறது அந்த நாளில். அந்தக் கோட்டைச் சுவரின் சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பெரும் பகுதி இடிந்து தகர்ந்து விட்டதுஎன்று தெரிகிறது. கோயில் பிரகாரத்தைச் சுற்றினால் அங்கு தல விருட்சமான இலந்தை மரத்தைப் பார்க்கலாம். அது காரணமாக இத்தலம் பதரி ஆசிரமம் என வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அறியலாம். கோயிலின் நிருத்த மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்தே கருவறையில் உள்ள சங்கமேசுவரரைத் தரிசிக்க வேணும். இது எல்லாம் சில வருஷங்களுக்கு முன். இப்போது சுவாமி கோயில் பழுதுற்றிருந்ததை இடித்துவிட்டுக் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பணி பூர்த்தியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். ஆதலால் சங்கமேசுவரர், அவருடன் இருந்த விநாயகர், தண்டபாணி, ராமநாதர், பர்வதவர்த்தினி, சண்டீசர், பைரவர், பஞ்ச லிங்கங்கள், நவக்கிரகங்கள் எல்லோருமே இடம் பெயர்ந்து திருமுறைக் கழகக் கட்டிடத்தில் இருக்கிறார்கள். அந்தப் பாலாலயம் (இளங்கோயில்), சென்றால் எல்லோரையும் ஒருமிக்க எளிதாகவே தரிசித்துவிடலாம்.
இப்போது திருப்பணி நடக்கும் கோயிலுக்கு வடபுறம் அம்மன் கோயில் இருக்கிறது; அம்மையின் பெயர் வேத நாயகி. அங்கும் நிருத்த மண்டபம், மகா மண்டபம் எல்லாம் இருக்கின்றன. இந்த நிருத்த மண்டபத்தைக் கட்டியவர் மும்முடிக் கெட்டி முதலியின் சகோதரி சின்னம்மாள் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அந்தக் கல்வெட்டில் அம்மையின் பெயர் பண்ணார் மொழியாள் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்மை கோயிலுக்கும் சுவாமி கோயிலுக்கும் இடையேதான் சுப்பிரமணியருக்கு ஒரு சிறுகோயில் இருக்கிறது. அம்மையை வணங்கிய பின் ஆறுமுகனையும் சென்று வணங்கி வெளி வரலாம்.
பின்னர் வெளி முற்றத்துக்கு வந்தால், இன்னுமொரு பெரிய கோயில் இருப்பதைப் பார்ப்போம். அது என்ன கோயில் என்று விசாரித்தால் அதுதான் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பார்கள். இது சிறப்புத்தானே. சைவ வைஷ்ணவ வேற்றுமைகளைக் களைந்தெறியவே, பெரியதோர் ஈசுவரன் கோயிலிலேயே பெருமாளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆம்! அன்று தில்லைச் சிற்றம்பலவன் கோயிலிலே திருச்சித்ரகூடத்துப் பெருமாளையும் தரிசித்து வணங்கியிருக்கிறோமே. இக்கோயிலில் ரங்க மண்டபம் விஸ்தாரமான மண்டபம். ஆதிகேசவப் பெருமாளது துணைவி சௌந்தரவல்லிக்கு ஒரு தனிக்கோயில். ரங்க மண்டபத்தின் வடபக்கத்திலே, தனித் தனிக் கோயிலில் ருக்மிணி சத்யபாமை சகிதமாக வேணுகோபாலன் வேறே இருக்கிறார். திருமால் சந்நிதிக்கும் தாயார் சந்நிதிக்கும் இடையில் நம்மாழ்வார், ராமானுஜர் எல்லாம். இன்னும் கோயில் கல்தூண்களில் பட்டாபிராமர், கோதண்டராமர், திருப்பணி செய்த பக்தர்களின் சிலைகள்.
இவர்களையெல்லாம் தரிசித்த பின் வெளியே வருவோம் என்றால், உடன் வருபவர்கள் கிழக்கு மதில் சுவர்ப்பக்கம் நம்மை அழைத்துச் செல்வார்கள். அம் மதில் சுவரில் அம்மை சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மூன்று சிறு துவாரங்களைக் காட்டுவார்கள். அந்தத் துவாரங்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு ஒரு ரசமான கதையையும் கூறுவார்கள். கும்பினியார் இந்தியாவை ஆண்டபொழுது இந்தப் பவானிதான் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. 1802-ம் வருஷத்தில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்றும் துரைமகனார். அவர் பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் இங்கு இருந்திருக்கிறார். அவர், இப்போது பிரயாணிகள் விடுதியாக இருக்கும் பங்களாவிலே தங்கி வாழ்ந்திருக்கிறார். தினசரி இந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவதையும் கூடுதுறையில் குளிப்பதையும் கண்டிருக்கிறார். அதோடு வருபவர்கள் வேதநாயகியின் அருளைப்பற்றி அடிக்கடி பேசுவதையும் கேட்டிருக்கிறார். அவருக்கு ஓர் ஆசை இந்த வேதநாயகியைத் தரிசிக்க வேண்டும் என்று. இவரோ பிற மதத்தினர். கோயிலுள் வர அனுமதிக்கப்பட்ட மாட்டார். இவரது ஆவலை அறிந்த அந்தத் தாலுகா தாசில்தார் அம்பிகையின் சந்நிதிக்கு நேரே மதிலில் மூன்று சிறு துவாரங்கள் செய்து அவை வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்பிகையைக் கலெக்டர் காண வகை செய்திருக்கிறார். அம்பிகையின் வடிவழகைக் கண்டு வழிபாடு செய்திருக்கிறார் கலெக்டர். இப்படியே தினசரி சிறு துளை வழியாக அம்மையைக் கண்டு தரிசித்து வந்திருக்கிறார் காரோ துரை. ஒரு நாள் இரவு, தம் பங்களாவில் உறங்கிக் கொண்டிருந்த போது வேதநாயகியைப் போல் அலங்காரம் செய்துகொண்ட பெண் ஒருத்தி தம்மை வெளியே போகும்படி சொன்னதாகக் கனவு கண்டிருக்கிறார். அப்படியே படுக்கையை விட்டு எழுந்து வெளியேயும் வந்திருக்கிறார். என்ன அதிசயம்! இவர் வெளி வந்த சில நிமிஷங்களில், பங்களாக் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது. அன்னையின் அருளை வியந்து வாழ்த்திய கலெக்டர், தந்தத்தாலேயே ஒரு கட்டில் செய்து அதனை அம்பிகைக்குத் தம் காணிக்கையாக வழங்கியிருக்கிறார். கட்டிலில் தம் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார். இக்கட்டில் காணிக்கையாக கொடுக்கப் பட்ட தேதி 11-7-1804 என்று கட்டிலில் இருந்து தெரிகிறது. 'தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்' என்றார் மாணிக்கவாசகர். அப்பாலும் அடிசார்ந்த திருக் கூட்டமும் அடியார் கூட்டத்துடன், சேர்ந்தவர்களே. இந்த முறைப்படி, பிற மதத்தினரையும் தம் அடியவர்களாகச் சேர்த்துக் கொள்ளும் சங்கமேசுவரர் வேதநாயகியின் பெருமைதான் என்னே? பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இந்தச் சம்பவத்தை முன்னரே அறிவிப்பார் போல் ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்பே ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார் :
வில்லார் வரையாக, மாநாகம்
நாணாக, வேடங் கொண்டு
புல்லார் புரம் மூன்றும் எரித்தார்க்கு
இடம்போலும் புலியும்மானும்
அல்லாத சாதிகளும் அங்கு அழல்
மேல் கைகூப்ப அடியார்கூடி
செல்லா அரு நெறிக்கே செல்ல
அருள் புரியும் திருநணாவே.
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா!
சிலை வேட சேவல் கொடியோனே
திருவானி கூடற் பெருமாளே?
பவானியே வானி என்று குறுகி நிற்கிறது. இதற்குச் சங்ககால இலக்கியத்திலேயே ஆதாரம் இருக்கிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் அனந்தம். மும்முடிக் கெட்டி முதலியார் பரம்பரையினரே கோயிலின் பெரும் பகுதியைக் கட்டியிருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் சிருஷ்ணராய உடையார் தளவாய் தேவராயன் ஒரு மண்டபத்தைக் கட்டியிருக்கிறான். பின்னும் திருப்பணி பல நாராயண கவுண்டர் என்பவர் செய்திருக்கிறார். இன்றும் திருப்பணி நடக்கிறது. திருப்பணியில் தமிழ் மக்கள் பங்கு பெற விரையவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.