வேங்கடம் முதல் குமரி வரை 4/006-032

6. திருக்கோட்டியூர் திருமால்

பல்லவ மன்னர்களில் நந்திவர்மன் என்பவன் ஒருவன் தெள்ளாற்றில் நடந்த போரில் வெற்றி பெற்றதன் காரணமாக தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று சரித்திரப் பிரசித்தி பெற்றவன் அதைவிட நந்திக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் மூலமாக இலக்கியப் பிரசித்தியும் உடையவன். நந்திக் கலம்பகம் எழுந்த வரலாறு மிகமிக ரஸமானது. இந்தப் பல்லவ மன்னன் நந்திக்கு ஒரு சகோதரன்; காடவர்கோன் என்று. இருவருக்கும் தீரா பகை, பகை முற்றிய பொழுது நந்தி தன் தம்பியை நாடு கடத்தி விடுகிறான். தம்பியோ கவிஞன். போரில் வெல்ல முடியாத அண்ணனை, அறம் வைத்துக் கலம்பகம் ஒன்று பாடி முடித்துவிடக் கருதுகிறான். அப்படியே பாடுகிறான். தான் பாடிய கலம்பகத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ஒரு கணிகையோடு தங்கிமறைந்து வாழ்கிறான். ஒரு நாள் வெளியே சென்ற நம்பி வர நேரம் ஆகிறது. கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த கணிகை தூங்கி விடுகிறாள். அகாலத்தில் வீட்டுக்கு வந்த கவிஞன், தூங்குகிற தன் காதலியை எழுப்ப, கொஞ்சம் சந்தனக் குழம்பை எடுத்து அவள் மீது தெளிக்கிறான். தெளிக்கும் போது கலம்பகப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. பாடிக்கொண்டே தெளிக்கிறான்.

செந்தழலின் சாற்றைப்
பிழிந்து செழுஞ்சீதச்
சந்தன மென்றாரோ
தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி
ஆகம் தழுவாமல்
வேகின்ற பாலியேன்
மீது

என்பது பாடல். இந்தப் பாடல் அச்சமயம் அங்கு மாறு வேடத்தில் நகரைச் சுற்றி வந்த காவலனான நந்தியின் காதில் விழுகிறது. பாட்டின் சுவையை அறிகிறான்; தம்பியின் குரலைத் தெரிகிறான். தம்பியைக் கண்டு தழுவித் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவள் கலம்பகம் பாடியிருக்கும் விவரம் அறிந்து அப்பாடல்களைக் கேட்க விரைகின்றான். தம்பியோ அண்ணனது அளப்பரிய அன்பினை நினைந்து, 'பாட்டில் அறம் இருக்கிறது. நீ கேட்டால் இறந்து போவாய்' என்று பாட மறுக்கிறான். அரசனோ விடவில்லை. 'இப்படி அருமையான பாடல் ஒன்றைக் கேட்பதற்கே உயிரை விடலாமே. நூறு பாடலா? இதற்கு உயிரை மட்டுமா கொடுக்கலாம்,' உடல் பொருள் எல்லாவற்றையுமே கொடுக்கலாமே என்று சொல்கிறான்.

ராஜ்யத்தைத் தம்பிக்கே கொடுத்து விட்டு அரண்மனையிலிருந்து சுடுகாடுவரை நூறு பந்தல்கள் அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் நின்று ஒவ்வொரு பாட்டாகக் கேட்டு கடைசியில் நூறாவது பாட்டையும் காஷ்டத்தில் ஏறிக்கொண்டே கேட்டு உயிர் துறக்கிறான். இது உண்மையான கதையோ என்னவோ? 'நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்று சிவஞான முனிவர் பாடி விட்டார் ஆனால் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழ்ப் பாடல்களைக் கேட்பதனால் உயிரைத் துறக்க நேரிடும். என்றாலும் அப்பாடல்களைக் கேட்க நந்தி தவறமாட்டான் என்பதே இந்தக் கவிதையின் உள்ளுறை பொருள். இவனைப் போலவே இன்னொருவர் குருலினிடம் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, 'இதை நீ பிறருக்குச் சொல்லக் கூடாது சொன்னால் உன் தலை வெடித்து விடும்' என்று எச்சரித்திருந்தபோதிலும், அந்த எச்சரிக்கைபையெல்லாம் மதியாமல் தான் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, ஊரில் உள்ளவர்களை அழைத்து வைத்து மதில் மேல் ஏறி நின்று உபதேசித்தார் என்றால் அது எவ்வளவு பாராட்டுக்கு உரியது.

தாம் இன்புறுவது
உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்

என்றார் வள்ளுவர். ஆனால் இவரோ உலகு இன்புறக் காணுவதில் தாம் துன்பமுற்றாலும் பரவாயில்லை என்று துணிந்திருக்கிறார். அப்படித் துணிந்து தான் பெற்ற உபதேசத்தை மக்களுக்கு எல்லாம் சொன்னவர்தான் வைஷ்ணவ பரமாசாரியாரான ராமாநுஜர். அப்படி அவர் மதில்மேல் ஏறி நின்று எல்லோரையும் வாருங்கள் என்று கூவி உபதேசித்த தலம்தான் திருக்கோட்டியூர். அந்தத் திருக்கோட்டியூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்கோட்டியூர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர், மானாமதுரை திருச்சி லயனில் கல்லல் ஸ்டேஷனில் இறங்கி வண்டி பிடித்துக்கொண்டு எட்டு மைல் மேற்கு நோக்கிப் போக வேணும் இந்த வழியில் வேறு வசதி கிடையாது. மதுரையிலிருந்து திருப்புத்தூர் வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பத்துப் பன்னிரண்டு மைல் பஸ்ஸிலோ காரிலோ வந்தால் திருக்கோட்டியூர் சென்று சேரலாம். இல்லையென்றால் ரயிலிலோ பஸ்ஸிலோ சிவகங்கை சென்று அங்கிருந்து பதினாறு மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் போய்ச் சேரலாம். சிவகங்கை வழியாகச் செல்வதுதான் எளிதான வழி.

சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டின் பேரிலேயே கோயில் இருக்கிறது. கோயிலுக்கும் ரோட்டுக்கும் கிழக்கே தெப்பக்குளம் இருக்கிறது. வாயிலைக் கடந்ததும் பெரிய விஸ்தாரமான வெளிப் பிராகாரம். அங்கேயே பொன் வேய்ந்த கருடக் கம்பம் இருக்கிறது. இனி கோயிலுள் நுழையுமுன் ஏன் இத்தலம் கோட்டியூர் என்று அழைக்கப்படுகிறது என்று தெரிய வேண்டாமா? இரணியன் மூவுலகையும் ஆட்சி செய்கிறான். அவன் ஆட்சியில் தேவர்களெல்லாம் நைகின்றனர். அவனை எப்படி ஒழிப்பது என்று தெரியவில்லை. கதம்ப முனிவரது சாபத்தால், துஷ்டர்கள் ஒருவரும் நெருங்கக் கூடாது என்று ஏற்பட்டிருந்த இத்தலத்தினையே தேவர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்தனர், தேவர்களோடு தேவர்க்கும் தேவராம் தேவர் மூவரும் கோஷ்டியாகச் சேர்ந்து ஆலோச்னா நடத்திய இடம் ஆனதால் இதனைக் கோஷ்டியூர் என்றனர். அது காரணமாகவே, இத்தலத்தில் பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்தே காட்சியளிக்கிறார்கள்.

இக்கோஷ்டியூரிலிருந்துதான் கதம்ப முனிவர் பிரும்மாவை நோக்கித் தவம் புரிகிறார். அவர் தவத்தை மெச்சிப் பிரும்மா அவர் முன் தோன்றுகிறார். கதம்ப முனிவரோ, பெருமாளைப் பாற்கடல் பள்ளி கொண்ட கோலத்திலும் தேவர்களைக் காக்க நின்ற

திருக்கோட்டியூர் கோயில்-குளம்

கோலத்திலும் இரணியனை வதம் செய்ய ஆலோசனை சபை கூடிய போது இருந்த கோலத் திலும், இன்னும் இரணிய னோடு போர்புரிந்த கோலத் திலும், அவன் உடல் கிழித்து உதிரம் குடித்த கோலத்திலுமே காண வேண்டும் என்கிறார் (ஒன்றே ஒன்று. இதற்குப் பிரும்மாவைநோக்கித் தவம் கிடப்பானேன்? பரந்தாமனையே நோக்கித் தவங்கிடந்திருக்கலாமே!). பிரும்மாவும் கதம்ப முனிவர் வேண்டியபடியே விச்வகர்மன் முதலிய தச்சர்களைக் கொண்டு இக்கோயிலை அமைக்கவும், சிறந்ததொரு விமானம் அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் மூன்று தள விமானம், மூன்று எழுத்துக்களுடன் கூடிய பிரனவம் போலவும் அமைத்துக் கட்ட முடிக்கிறார்கள்.

கோயிலின் அடித்தளத்தில்தான் பெருமாளின் சயனத் திருக்கோலம். உரகமெல்லணையான் என்ற பெயரோடு அறிதுயிலில்

ராமானுஜர் உபதேசம்

அமர்ந்திருக்கிறான். இவனையும் முந்திக் கொண்டு ஒரு சிறு கோயிலில் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். இவரை வலம் வந்தே நாம் கோயிலில் பிரதான மண்டபத்தில் நுழைகிறோம். அங்கு நம் கண்முன் நிற்பவர் நர்த்தன கிருஷ்ணன். காளிங்க நர்த்தனனாக நிற்கிறார். இனிகோயிலின் முதல் தளத்தில் ஏறி அங்கு துயில் கொள்ளும் உரகமெல் லணை யானைக் காணலாம். இப்பளளி கொன் டானின் தலை மாட்டிலே தான் கதம்ப மகரிஷி தவக்கோலத்தில் இருக்கிறார். மேலும் படியேறி இரண்டாவது தளம் சென்றால் அங்கே நின்ற கோலத்தில் சௌமிய நாராயணன் இருக்கிறார். அதற்கும் அடுத்த மூன்றாவது தளத்தில்தான் இருந்த கோலத்தில் ஸ்திதநாராயன வைகுண்ட நாதன் கோயில் கொண்டிருக்கிறான், எல்லோரும் சுதையாலான வடிவங்களே. கோயிலின் தென்புறத்திலே இரணியலோடு யுத்தஞ் செய்யும் மூர்த்தியும் வடபுறத்திலே இரணியனை வதம் புரியும் நரசிம்மரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இவர்களை தக்ஷிணேசுவரன், வடவேசுவரன் என்று அழைக்கிறார்கள்.

பிரதான கோயிலின் தென் பகுதியிலேதான் தாயார் சந்நிதி இருக்கிறது. தாயாரைத் திருமா மகள் என்கிறார்கள்.

நிலமகள் செவ்வி தோய வல்லான்
திமா மகளுக்கு இனியான்

என்றுதானே பெருமாளை அழைக்கிறான் மங்கை மன்னன். இன்னும் இங்குள்ள உத்சவமூர்த்தி கொள்ளியால் ஆனவன் என்பதையும் மங்கை மன்னனே,

வெள்ளியான் கரியான்
மணிநிற வண்னன்
வண்ணவர் தமக்கு இறை, எமக்கு
எள்ளியான் உயர்ந்தான்
உலகேழும் உண்டு உமிழ்ந்தான்.

என்றே பாடுகிறான்.

இக்கோயிலின் மூன்றாவது தளத்தில் ஏறியதும் இங்குள்ள விமானத்தையும் காணலாம். இதனை அஷ்டாங்க விமாணம் என்பர். அஷ்டாக்ஷர மந்திரத்தில் அறிகுறியாக விளங்குவதே இந்த விமானம் இந்த விமானத்தின் தென் பக்கத்து மதிலிலேதான் ராமானுஜரது சிலை வீதியை நோக்கிய வண்ணம் உபதேசக் கிரமத்தில் இருக்கிறது. இன்னும் தெற்காழ்வான சந்நிதிக்கு முன்னால் ராமானுஜரும், திருக்கோஷ்டி நம்பிகளும் குரு சிஷ்ய பாவத்தில் எதிர் எதிராக எழுந்தருளியிருக்கின்றனர். ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் உபதேசம் பெற பதினெட்டு தடவை இத்தலத்துக்கு வந்திருக்கிறார். நம்பியும் பதினேழு தடவைகள் தட்டிக் கழித்திருக்கிறார். கடைசியில் ராமானுஜர் பிடிவாதமாக இருக்கவே, நம்பி ஒரு நிபந்தனையுடன் திருமந்திர உபதேசம் செய்ய இசைசிறார். நிபந்தனை இதுதான்; அவர் கற்கும் மந்திரத்தை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதே. குருவின் நிபந்தனைக்கு உட்பட்டே உபதேசம் பெறுகிறார். ராமானுஜர். ஆனால் உபதேசம் பெற்ற உடனேயே அஷ்டாங்க விமானத்தில் ஏறி ஊராரையெல்லாம் 'வாருங்கள் வாருங்கள்' என்று கூவி அழைத்து, தாம் பெற்ற இன்பத்தை உலகிலுள்ளோரும் பெறட்டும் என்று மந்திர உபதேசம் செய்துவிடுகிறார். தான் ஒருவன் குருவின் கட்டளையை மீறியதால் நரகம் புகுவதானாலும், உலகம் உய்யட்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் இருந்ததையறிந்த நம்பிகளும் அவரை அன்று முதல் எம்பெருமானார் என்றே அழைக்கிறார்.

பெரியாழ்வாரது வாழ்வோடு இத்தலம் நெருங்கிய தொடர்பு உடையது. ஸ்ரீவில்லிப்புத்தூர் வாசியான பெரியாழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இங்கு ராஜ புரோகிதராகவும், பரம பாகவதராகவும் இருந்த செல்வநம்பியைக் கண்டு அளவளாலியிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்ரீஜயந்தி நாளிலே திருக்கோட்டியூர்த் திருமாலை வணங்க, அவரது எண்ணமெல்லாம் துவாபர யுகத்திலே சென்றடைந்திருக்கிறது. கோட்டியூர் நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள கோகுலம் ஆய்ப்பாடியாகவும், கோயிலில் உள்ள நர்த்தனமூர்த்தி கண்ணனாகவும் காட்சி கொடுத்திருக்கின்றனர். அப்படி அவர் பெற்ற அனுபவத்தில்தான்,

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அன்று ஆயிற்றே

என்று தொடங்கும் பாடல்களைப் பாடி மகிழ்ந்திருக்கிறார். இத்தலத்திலுள்ள பரம பாகவதர்களையும், நினைந்து நினைந்து,

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
புலன்கள் ஐந்து, பொறிகளால்

ஏதமொன்றும் இலா வண்கையினார்கள்
வாழ்திருக் கோட்டியூர்
நாதனை, நரசிங்கனை, நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாததூளி படுதலால் இவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.

என்றும் பாடியிருக்கிறார். இத்தலத்துப் பெருமானை, பெரியாழ்வாரையும் மங்கை மன்னனையும் தவிர பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மூவரும் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜராஜசோழனது கல்வெட்டில், இக் கோயிலிலுள்ள சிவனைத் திருமயான தேவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. முதல் குலோத்துங்கள் காலத்தியக் கல்வெட்டு ஒன்றும், கீழைத் திருதலையில் இருக்கும் உரகமெல்லணையான் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தமும் காணப்படுகின்றன. திருமயத்தில் உள்ள கல்வெட்டின் படி ஒன்றும் இங்கிருக்கிறது. அதன் படி நாராயண ஸ்ரீ குமாரபட்டர் என்பவர் இரண்டு கோவில்களுக்கும் உள்ள வழக்கை எப்படித் தீர்த்து வைத்தார் என்பதும் தெரிகிறது. இந்தப் பஞ்சாயத்துக்கு ஹொய்சல வீரசோமேசவரனின் பிரதிநிதி தலைமை வகித்தான் என்றும் அறிகிறோம். இந்தக் கல்வெட்டு சுந்தர பாண்டியனின் காலத்தியது. இதனாலெல்லாம் இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே பிரசித்தமாயிருந்திருக்கிறது என்பதையுமே உணர்கிறோம்.