வேங்கடம் முதல் குமரி வரை 4/029-032

29. திருக்குறுங்குடி அழகிய நம்பி

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமானாவதாரம் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினன் என்பது நமக்குத் தெரியும். இந்த வாமனனே பின்னர் திருவிக்கிரமனாக வளர்ந்தான் என்பதையும் அறிவோம், இந்த வாமனாவதாரத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான். நமக்குத் தெரிந்த கதைதானே. மண் உலகில் மகாபலி என்ற பெயரோடு மகா சக்தி வாய்ந்த அரசன் ஒருவன் ஆள்கிறான். நல்ல குணசீலன், ஆட்சியையும் திறம்படி நடத்துகிறான். அவனது சீலம் காரணமாகவே வானுலகம் பூவுலம் எல்லாம் அவன் ஆளுகைக்குள் வந்து விடுகிறது. இதன் பின் அவன் ஓர் அரிய யாகத்தையும் செய்ய முற்படுகிறான். இந்த யாகம் நிறைவேறினால் மகாபலிக்கு இன்னும் எவ்வளவோ சக்தி வந்துவிடுமே என்று தேவர்கள் அஞ்சுகிறார்கள். திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள் மகாபலிக்கு முக்தியை அருளவேண்டும் என்று அவருக்குமே ஆசை. அதற்காக அவர் காசிப முனிவருக்கு அவர் மனைவி அதிதி வயிற்றில் பிள்ளையாக அவதரிக்கிறார். பிறக்கும் போதே குள்ளமான வடிவத்தோடு பிறக்கிறார். அந்தக் குள்ள வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றன. எதுபோல என்றால், கம்பன் கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்கு விடை சொல்கிறான். கோடிகோடி வருஷங்களாக ஆலமரத்தில் உள்ள அற்புதத் தத்துவங்கள் எல்லாம் பரம்பரையை ஒட்டி, விடாமல் வந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கவும் போகின்றன. அற்புதத்தில் அற்புதம் என்னவென்றால் எவ்வளவோ விரிந்தும், ஆதி அந்தம் என்றெல்லாம் இல்லாத இந்த ஆலின் தத்துவம் எல்லாம், தெண்ணீர்க் கயத்தச் சிறு மீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பதுதான் குறள் வடிவமும் அப்படித்தானே. பேரண்டத்திலுள்ள தத்துவங்களையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது அந்த வாமன வடிவம். இத்தனையையும் சொல்கிறான் கம்பன்.

காலம் தனித்து உணர்
காசிபனுக்கும்
வால் அதிதிக்கும் ஓர்
மாமகவாகி
நீல நிறத்து
நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின்
அருங்குறள் ஆனான்

என்பது பாட்டு, இந்த வாமனன்-குறளன் தோன்றிய தலம்தான் குறுங்குடி, குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது. அக்குறுங்குடியிலே அழகிய நம்பி வந்து கோயில் கொள்கிறான், அந்தத் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊர். திருநெல்வேலி ஜங்ஷனுக்குத் தெற்கே பத்தொன்பது மைல் சென்றால் நாங்குநேரியைச் சேருவோம். நாங்குநேரி ஊருக்குள் போகாமல் ஊருக்கு வடபுறத்திலே மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பினால் கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டு பாதைகள் பிரியும். அவற்றில் தென்மேற்கு நோக்கிச் செல்லும் பாதையே குறுங்குடிக்குச் செல்லும். நாங்குநேரி வரை நல்ல ரோடுதான். அதன் பின் அவ்வளவு நல்ல ரோடு இருக்காது. திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பணகுடி செல்லும் பஸ் ஒன்றைக் குறுங்குடி வழியே திருப்பியிருக்கிறார்கள். ஆனதால் பஸ்ஸிலேயே செல்லலாம். வழியில் உள்ள ஏர்வாடி, நம்பித்தலைவன், பட்டயம் என்ற ஊர்களையும், இடைவரும் நம்பியாற்றையும் கடந்தே குறுங்குடி சென்று சேர வேணும்.

தென்புறமாகக் கோயிலைச் சுற்றிகொண்டு வந்தால் நீண்டு உயர்ந்த மதில் தெரியும். மதிலை ஒட்டி தல்ல தென்னை வைத்து வளர்த்திருக்கிறார்கள். மலையை அடுத்த பிரதேசமானதால் நல்ல குளிர் சோலைகளும் இவ்வூரில் நிரம்பியிருக்கும். காரில் போகிறவர்கள் வடக்கு மதிலில் உள்ள ஒரு பாதை வழியாக நுழைந்து கோபுர வாயிலுக்கே சென்று விடலாம். மற்றவர்கள் கீழமாட வீதி வந்து கோயிலுள் நுழையலாம். பிரதான வாசலில் கோபுரம் இல்லை. அந்த வாசல் வழி நுழைந்து மட்டை அடி மண்டபத்தையும் கடந்து வந்தால் ரதி மண்டபம் வந்து சேர்வோம். அந்த மண்டபமே திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் முகப்பு மண்டபமாக இருக்கிறது. அங்கு சிற்ப வடிவங்கள் உள்ளன. ரதி, அர்ச்சுனன், கர்ணன், தடாதகை முதலிய வடிவங்கள் எல்லாம் நல்ல காத்திரமானவை. இவைகள் எல்லாம் நமக்குக் கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்களை நினைவுபடுத்தும். இந்த மண்டபத்தை அடுத்து வீதியையும் கடந்தால் கோயிலின் பிரதான கோபுர வாயிலுக்கு வருவோம். கற்சுவர்களில் எல்லாம் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள். ஆதலால் இந்தக் கோபுரத்தையே சிற்ப கோபுரம் என்பார்கள். இந்தக் கோபுர வாயிலைக் கடந்தால் துவஜஸ்தம்ப மண்டபம் வந்து சேருவோம்.

இந்த மண்டபத்தின் வடபுறத்திலேதான் மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கிறது. அந்தச் சந்நிதிக்கு முன் அழகான மண்டபம் ஒன்று உண்டு. அங்குள்ள தூண்களில் எல்லாம் அழகு அழகான சிற்ப வடிவங்கள். நரசிம்மனது கோலம் இரண்டு. வழக்கமாக நாயக்கர் சிற்பத்தில் காணும் குறவன் குறத்தி வேறே. அனுமனது வடிவம் எல்லாம் இருக்கும். நல்ல காத்திரமான வடிவங்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிரம்பியவை. ஆனால் இந்த மண்டபத்தில் வௌவால்களும் துரிஞ்சல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு அசுத்தம் செய்து வைத்திருக்கும் என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.

துவஜஸ்தம்ப மண்டபத்தில் ஓர் அதிசயம். அங்குள்ள துவஜஸ்தம்பம். சந்நிதிக்கு எதிரே இராது. கொஞ்சம் வடபக்கமாக விலகி இருக்கும். இது என்ன திருப்புன்கூரில் நந்தி விலகிய மாதிரி இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும் நமக்கு. உடனே அர்ச்சகர் சொல்வார் 'ஆம், இங்கும் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காகத்தான் ஸ்தம்பம் விலகியிருக்கிறது' என்று. அது யார் நம்பாடுவான் என்று தெரிந்த கொண்டே மேலே நடக்கலாம். குறுங்குடியை அடுத்த மகேந்திரகிரியிலே பாணர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் யாழ் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்களில் ஒருவன் குறுங்குடி நம்பியைக் காண வருகிறான். கார்த்திகை மாதம் சுக்லபக்ஷத்து ஏகாதசியன்று. வழியிலே பசியோடிருந்த பிரமராக்ஷஸன் ஒருவன் இவனைப் பிடித்துக் கொள்கிறான். நம்பியைத் தரிசித்து விட்டு வந்து அவனுக்கு இரையாவதாகச் சொல்லி விடைபெற்றுக் கோயில் வாயிலில் நின்று நம்பியைத் தரிசிக்க முயல்கிறபோது கோயிலில் கொடிமரம் மறைக்கிறது. ஆயினும் பக்தி சிரத்தையோடு பாடுகிறான். நம்பியும் பாணனுக்கு மறைக்காமல் இருக்கக் கொடி மரத்தை நகரச் சொல்கிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து, நம்பியைப் பாணன் தரிசிக்க வகை செய்கிறது. இதனால் மெய் புளகித்த பாணனும்.

எங்ஙனயோ அன்னைமீர்காள்
என்னை முனிவதுநீர்?
நங்கள் கோலத்திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாயொன்றினோடும்
செல்கின்றதென் நெஞ்சமே.

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை கைசிகப் பண்ணில் அமைத்துப் பாடுகிறான். பாட்டை அவன் பாடப்பாட நம்பியும் மகிழ்ந்து அவனை ‘நம்பாடுவான்' என்றே அழைக்கிறான். தன்னைப் பாடிய நம்பியை 'நம்மைப் பாடியவன்' என்று நம்பி அழைத்ததில் வியப்பில்லைதானே! நம்பாடுவான் என்ற பாணன் பாட்டை விரைவாகப் பாடுவதைக் கேட்ட நம்பி, காரணம் வினவ, தான் பிரமராக்ஷஸனுக்குக் கொடுத்து வந்த வாக்கைச் சொல்கிறான். நம்பியின் அருளால் பிரமராக்ஷஸனது பசி நீங்கிவிடுகிறது. அவன் தன்னிடம் வந்த நம்பாடுவானைப் புசிக்க மறுக்கிறான், இடை வந்த நம்பி சமாதானம் செய்து, ஒரு பாட்டின் கான பலனைத் தத்தம் செய்யுமாறு நம்பாடுவானிடம் சொல்கிறார். இதனாலேயே இத்தலத்தில் கைசிக ஏகாதசி விசேஷச் சிறப்பாக நடக்கிறது என்பர். கொடி மரம் நகர்ந்ததற்கும், கைசிக ஏகாதசி ஏற்பட்டதற்கும் காரணம் தெரிந்துகொண்டு நேரே நம்பியைத் தரிசிக்கச் செல்லலாம். குலசேகரன் மண்டபத்துக்கு முந்திய பத்தியில் ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மணியிலே ஒரு பாடல் பொறித்திருக்கிறது.

செய்துங்க நாட்டுச் சிறைவாய்மன்
ஆதித்தன் தென்வஞ்சியான்
லியலொன்ற சில கலையாளன்
கன்னி விசாகம் வந்தோன்
நயமொன்று கொல்லம் அறுநூற்று
நாற்பத்து நாலில் அன்பால்
அயனும் பணிய மணியளித்தான்
நம்பிக்கு அன்புகொண்டே

என்பது பாட்டு, இதிலிருந்து திருவிதாங்கோட்டு மன்னன் ஒருவன் நம்பியின் பக்தனாய் விளங்கி, இம்மணியைக் கோயிலுக்கு அளித்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். குலசேகரன் மண்டபத்தில் நின்றே மூலவராய் நின்ற அழகிய நம்பியைத் தரிசிக்கலாம். நல்ல அழகான வடிவம். அவரது மேனி, உள்ளே சிலையும் வெளியே சுதையுமாக இருக்கிற கோலம். அதனால் தைலக் காப்புத்தான் நடக்கிறது. உபய நாச்சியார், மார்க்கண்டேயர், பிருகு, எல்லாம் உடன் எழுந்தருளியிருக்கிறார்கள். கருவறையை அடுத்த கட்டில்தான் வைஷ்ணவ நம்பி என்ற உத்சவர் இருக்கிறார். இவர் பக்கலில் உபயநாச்சியார், நீளாதேவி, குறுங்குடி வல்லித் தாயார் எல்லாம் இருக்கிறார்கள். இவரை வைஷ்ணவ நம்பி என்பானேன் என்றால் அதுதான் உடையவர் இட்ட தாஸ்ய நாமம் என்பார்கள். ஸ்ரீ பாஷ்ய காரராம் ராமனுஜர் இத்தலத் துக்கு வந்த போது இந்த நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அந்த
குறுங்குடி நரசிம்மன்
ராமானுஜர் இட்ட பெயரே வைஷ்ணவ நம்பி என்பதாகும்.

அழகிய நம்பி யையும் வைஷ்ணவ நம்பி யையும் தொழுது வெளிவந்து பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் தென்பக்கத்தில் லக்ஷிமிநரசிம்மனும், ஞானப்பிரானான லக்ஷிமிவராகனும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். குறுங்குடி வல்லித் தாயாருக்கும் ஒரு தனிக்கோயில் உண்டு. மேலப் பிராகாரத்தில் தசாவதாரப் பெருமாள், ஸ்ரீனிவாசன், ஆண்டாள் எல்லாம் காட்சி கொடுப்பர். இவர்களையெல்லாம் தரிசித்துக் கொண்டு வடக்குப் பிராகாரத்தில் நடந்து தெற்கே திரும்பினாால் அங்கு ஒரு கோயில், அக்கோயிலில் சிவபிரான் லிங்க உருவில் இருப்பார். இவரையே மகேந்திர கிரிநாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோயிலுள் நடராஜர், சிவகாமி, சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், எல்லாரும் செப்புச் சிலை வடிவில் குடும்பத்தோடு எழுந்தருளியிருக்கின்றனர். இவருக்குப் பக்கத்திலேயே கால பைரவருக்கும் தனிச் சந்நிதியிருக்கிறது. இதுவரை நமது க்ஷேத்திராடனத்தில் பெரிய பெரிய சிவன் கோயில்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைத்தான் கண்டிருக்கிறோம். இத்தலம் ஒன்றிலேயே பெரியதொரு பெருமாள் கோயிலில் சிவனும் பக்கம் நிற்கும் பிரானாக இருக்கிறார். சைவ வைஷ்ணவ பேதங்கள் எல்லாவற்றையும் அகற்ற, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் முயன்றிருக்கிறார்கள் என்பதை நாம் அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறதல்லவா? இந்தப் பக்கம் நிற்பவர் பக்கத்திலேயே வீற்றிருந்த நம்பியும், பள்ளி கொண்ட நம்பியும் தனித் தனிக் கோயிலில் இருக்கிறார்கள். இவர்கள் பக்கத்தில் பூமியில் அழுத்தப் பெற்ற மகாபலியும் இருக்கிறான், தலையைக் கொஞ்சம் பூமிக்கு வெளியில் நீட்டிக் கொண்டு. கோயிலுள் நின்ற நம்பி என்னும் அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பியை எல்லாம் பார்த்து விட்டோம். இன்னும் கம்பீரமான நம்பி ஒருவன் உண்டு, அவன் மலைமீது ஏறி நிற்கிறான். அவனை மலைமேல் நம்பி என்பர். அவன் கோயில் கொண்டுள்ள இடம் இக்கோயிலில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. இரண்டு மூன்று மைல் வரைதான் வண்டிகள் செல்லக் கூடும். அதன்பின் இரண்டு மைல் நடந்தே செல்ல வேணும். அங்கே ஏழு எட்டடி உயரத்தில் மலைமேல் நம்பி சிலை உருவில். கம்பீரமான கோலத்தோடு நிற்பான். வசதியும் காலில் சக்தியும் உள்ளவர்கள் இவனையும் தரிசித்துத் திரும்பலாம்.

இவ்வளவு சொல்லி விட்டீரே, அந்த வாமனனாய் குறுங்குடிக்கே பெயரளித்த குறுகிய வடிவினனது வடிவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது என் காதில் லிழுகிறது. அந்த வாமனர். கோயிலுக்குத் தெற்கே நாலு பர்லாங்கு தொலைவில் உள்ள சத்திரத்திலுள்ள சந்நிதியில் இருக்கிறார். ஏன் அவருக்குப் பிரதான கோயிலில் இடம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நாம் அவரையும் ஒதுக்காமல் அங்கும் சென்று வணங்கியே வீடு திரும்பலாம்.

குறுங்குடி நம்பியைப் பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் நால்வரும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். இந்நம்பியின் அனுக்கிரகத்தாலேயே நம்மாழ்வார் திரு அவதாரம் செய்தார் என்பது வரலாறு. திருவாலித் திருநகரியில் பிறந்து தலங்கள் சென்று பரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார். அவரது கோயில் வடகிழக்கே அரை மைல் தூரத்தில் இருக்கிறது.

கோயில் அமைப்பு, மண்டபம், சிற்பங்களை எல்லாம் பார்த்தால் விஜய நகர நாயக்க மன்னர்கள் காலத்தில் இக்கோயில் விரிவடைந்திருக்க வேணும் என்று தெரிகிறது. திருக் குறுங்குடி அழகிய நம்பி உலாவில் இருந்து உதயமார்த்தாண்டர் என்ற அரசர் தம் பெயரால் சமர்ப்பித்த பந்தலின் கீழாக, ராமதேவர் என்பவர் தம் பெயரால் அமைத்த தனிப் பீடத்திலே நம்பி எழுந்தருளியிருக்கிறார் என்று அறிகிறோம். உதய மார்த்தாண்டர் சேர மன்னனாக இருத்தல் வேண்டும். ஒரு தாமிர சாஸனம் மூலம் விஜயநகரத்து அரசர்களுள் வேங்கட தேவ மகாராஜர் என்பவரும் இக்கோயிலில் அரிய திருப்பணிகள் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இவற்றையெல்லாம் ஆராய்ச்சிகளுக்கு விட்டுவிடுவோம். நாம், நம்பாடுவான் பாடிய நம்பியைத் தரிசித்து அதனால் அடையும் இன்பப் பேறுகளைப் பெற்ற திருப்தியோடேயே திரும்பி விடுவோம்.