வேங்கடம் முதல் குமரி வரை 5/001-019

வேங்கடம் முதல் குமரி வரை
(ஐந்தாம் பாகம்)


1. ஸ்ரீமுஷ்ணத்து பூவராகன்

ஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கணக்கிடப்படுவது நாம் வசிக்கும் மண். இந்த மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் சக்திதான் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. மண்ணை வெட்டி, அதற்குள் சில விதைகளைப் போட்டுத் தண்ணீர் ஊற்றினால், மண்ணிலிருந்து செடியும், கொடியும், மரமும், மட்டையும், வெளி வருகிறது, உண்ணும் உணவு அளிக்க நெல் விளைகிறது. இன்னும் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, என்று எண்ணற்ற உணவு தானியங்கள் எல்லாம் வந்து குவிகின்றன. உடுக்க உடை உதவும் பஞ்சும் பருத்தியும் செடிகளில் காய்க்கிறது.

இவை மட்டுமா? பலப்பல வர்ணங்களில் மலர்கள், பலப்பல சுவையுடைய கனிகள் எல்லாம் இந்தச் செடியிலும், கொடியிலும், மரத்திலும் பூத்துக் காய்த்து விடுகின்றன. அத்துணை சக்தியை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலேயே மண்ணையும் தெய்வமாக்கி, பூமாதேவி என்றனர். காத்தற் கடவுளான விஷ்ணுவின் பட்ட மகிஷி என்றும் வணங்கினர் மக்கள்.

இந்த அருமையை எல்லாம் நன்கு உணர்ந்திருக்கிறான். கவிச் சக்ரவர்த்தி கம்பன். பூமாதேவி எனும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்க்கெல்லாம் அருள் புரிய விரைந்து வருகிறாள். அவளது அழகான மேனியிலிருந்தே பச்சைப் பசுங் கதிர்கள் எழுந்து பிரகாசிக்கின்றன. அவள் தன் உண்மை உருவை ஏதோ பூமிக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொண்டு வழிபடுபவர்களுக்கு மட்டும் தன் உண்மை உருவை காட்டுகின்றாள். அப்பூமாதேவியின் அம்சமான சீதா தேவியும் உழுகின்ற கொழுமுகத்தில் தானே உதிக்கிறாள்? யாகம் ஒன்று செய்ய ஜனக மகாராஜன் நிலத்தைப் பண்படுத்தி அதனை உழ, அங்கு சீதாதேவி தோன்றினாள் என்பது வரலாறு. இதைச் சொல்கிறான் கம்பன்.

உழுகின்ற கொழுமுகத்தின்
உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடந்தை
உருவெளிப் பட்டெனப் புணரி
எழுகின்ற தெள்ளமுதோடு
எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி
தொழுகின்ற நன்னலத்துப்
பெண்ணரசி தோன்றினாள்

என்பது பாட்டு. இப்படி அருமையினும் அருமையாகப் பாராட்டப்படுகின்ற பூமாதேவியை அழித்துச் சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத் தானே செய்கிறது. ஒரு கதிர் உதிக்கின்ற இடத்திலே இரண்டு கதிர் உதிக்கச் செய்கின்றவன் உலக வளர்ச்சிக்குத் துணை புரிகின்றவன் என்று பாராட்டுகிறோம்.

ஆனால் இந்த உலகத்தையே சிதைத்து விட அணுகுண்டு பரிசோதனைகளும், மற்ற அக்கிரமங்களும் செய்கின்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இப்படிப்பட்ட அரக்கர்கள் இன்றுதான் இருக்கிறார்கள் என்றில்லை. அன்றும் இருந்திருக்கிறார்கள்.

ஹிரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க பரந்தாமன் பன்றி உருவில் தோன்றிக் கடலுக்குள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். பூமிதேவியை சிறை மீட்டுக் கொண்டு வந்த மூர்த்தியையே பூவராக மூர்த்தி என்கிறோம். இந்த பூவராக மூர்த்தியின் அற்புத வடிவைக் காண நாம் அந்த ஸ்ரீ முஷ்ணத்திற்கே செல்ல வேணும். அத்தலத்திற்கே செல்கிறோம் இன்று.

ஸ்ரீமுஷ்ணம் தென் ஆர்க்காடு மாவட்டத்தின், சிதம்பரம் தாலுகாவில் ஒதுக்குப் புறமாக உள்ள ஊர்.

சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் வழியில், சேத்தியாத் தோப்பு என்ற ஊர்வரை சென்று அதன்பின் தென்மேற்காகச் சென்றால் ஊர்போய்ச் சேரலாம். ரயில் வசதியெல்லாம் கிடையாது. சிதம்பரத்திலிருந்து 26 மைல் தூரத்தில் உள்ளது. சொந்தகார். உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லாவிட்டால் இந்த ஊருக்கு நல்ல பஸ் வசதியும் இருக்கிற காரணத்தால் பஸ்ஸிலேயே சிரமம் இல்லாமல் போகலாம். ஊருக்கு வட புறத்தில் மேற்கே பார்த்த கோயிலில்தான் இந்த பூவராகர் இருக்கிறார்.

வைணவத் தலங்களுக்குள் இத்தலம் சிறப்பானது. சுயம்பு லிங்கம் என்பது போல, சிற்றுளி கொண்டு பொழியப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே இருக்கின்றன. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர்.

வடவேங்கடம் சென்றவர்கள் அறிவார்கள். அங்குள்ள புஷ்கரணியின் மேல் கூரையில் உள்ள ஆழ்வார்களை தரிசித்த பின்னரே வேங்கடவனை தரிசிக்க வேண்டும் என்பதை. அதுபோல இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம், ஆதலால் நாமும் படிகள் ஏறி வேங்கடவனைத் தரிசித்த பின்பே மேல் நடக்கலாம். ராஜகோபுரத்தைக் கடந்ததும் நாம் சேர்வது நூற்றுக்கால் மண்டபம்.

இம்மண்டபத்தின் அடிப்பாகம் நல்ல விரிந்து பரந்திருக்கிறது. இத்தனை அகலமாக கல்லாலேயே மண்டபம் அமைந்திருப்பது அழகாக இருப்பதுடன் ஆச்சர்யப் படத்தக்கதாகவும் இருக்கிறது. இந்நூற்றுக்கால் மண்டபத்திலே நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. ஞான முத்திரை தாங்கி நம்மாழ்வாரது செப்புச்சிலை சிறிதேயானாலும் அழகானது. அவரைத் தரிசித்த பின்னரே, இக்கோயிலின் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட பதினாறு கால் மண்டபம் வந்து சேருவோம். அதனையே புருஷசூக்த மண்டபம் என் கிறார்கள்.

நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயிலைக் கட்டிய நாயக்க மன்னர்கள், அவர்கள் துணைவியர் சிலை எல்லாம் கற்றூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மண்டபத்திற்கு வடபுறம் வேணுகோபாலன் சந்நிதி இருக்கிறது. அங்கு வேணு கோபாலன் ருக்மணி சத்யபாமா சகிதம் சிலை உருவில் நிற்கிறான். பக்கத்திலே நர்த்தன கோபாலனும் நடனம் ஆடிக்கொண்டே இருப்பான். பதினாறுகால் மண்டபத்தைக் கடந்தே பிரதான கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள மகா மண்டபத்தைக் கடந்து, அர்த்த மண்டபம் சென்று, அதன் பின் கருவறையில் உள்ள பூவராகனைத் தரிசிக்க வேணும். கருவறை யின் நடுவிலே பூவராகர் சிலை உருவில் நிற்கிறார்.

இந்த மூர்த்தி சுமார் மூன்றடி உயரமே உள்ளவர். சாளக் கிராமம் என்னும் உயர்ந்த சிலை வடிவினர். இரண்டே திருக்கரங்களுடன் கம்பீரமாக இடுப்பிலே கை வைத்துக் கொண்டு மிடுக்காகவே நிற்கிறார். அப்படி வைத்திருக்கும் கைகளிலே சங்கையும் சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார். உடல் முழுவதும் மேற்கு நோக்கி இருந்தாலும், தெற்கு நோக்கி நிமிர்ந்தே நிற்கிறார். அவர் காலடியிலே ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவிலேயே எழுந்தருளியிருக்கின்றனர்.

இங்கு ஒரு சௌகரியம், இங்குள்ள உற்சவ மூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் கருவறையில் இருந்து மூலவர் திருவடி தரிசனத்துக்கு இடையூறு செய்ய மாட்டார். பூவராக மூர்த்தியின் வடிவு முழுவதையும் கண்ணாரக் கண்டு மகிழலாம். இம்மூர்த்தியின் சிரஸில் ஒரு தங்கக் கீரிடம் இருக்கிறது. சேவார்த்திகள் விரும்பினால் அதனை எடுத்துக் காட்டுவர். அது, கீழே விழுந்து விடாத படி ஒரு தங்கச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் காணலாம்.

இக்கோயிலில் உள்ள உற்சவர் யக்ஞ வராகர். இவர் யக்ஞவராகர் என்று பெயர் பெற்றதற்கு ஒரு வரலாறு உண்டு. நெய்வேலிக்கு அடுத்த வளையமாதேவியில் - கார்த்தியாயன மகரிஷி என்று ஒருவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகள் அம்புஜவல்லி என்ற பெயரோடு. இவளை மணக்க பூவராகன் விரும்புகிறான். அப்போது மகரிஷி பூவராகனை அவரது சுயஉருவில் வந்து மணந்து கொள்ளும்படி வேண்டுகிறார். அந்த முனிவர் நடத்திய வக்ஞத்திலிருந்து தன் சுய உருவோடு எழுந்திருக்கிறார்.

அப்படிப் பரந்தாமன் பூதேவி ஸ்ரீதேவி சகிதனாக எழுந்தவரே யக்ஞ வராகன் என்ற திருதாமத்தோடு அங்கு கருவறையை அடுத்த அந்த ராளத்தில் இருக்கிறார். அணிகளும், பணிகளும் - பட்டாடையும் அணிந்து மேனியழகு முழுவதையும் காட்டாத கோலத்திலேயே தான் அவரைத் தரிசிக்க வேணும், அவர் பக்கலிலேயே சுமார் முக்கால் அடி உயரத்தில், செப்புச்சிலை வடிவத்தில், பூவராகன் வேறே எழுந்தருளியிருக்கிறார். அச் சிறு வடிவினுக்கும் கவசம் அணிவித்து வைத்திருப்பார்கள்.

இந்த யக்ஞவராகர் எனும் உற்சவரே உற்சவ காலங்களில் உலாப் புறப்படுவார். மாசி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேரோட்டம் முடிந்ததும் கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தமாடுவார். இந்த தீர்த்தோத்சவத்தை ஒரு மகம்மதியப் பெரியார் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூலதனத்தைக் கொண்டு, உப்பு வேங்கடராயர் என்ற ராயர் வம்சத்தவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் மகம்மதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார். இன்றும் இப்படி சர்வ சமய சமரச வாதியாக யக்ஞ வராகர் எழுந்தருளுவது மிக மிகச் சிறப்பானதல்லவா?

இந்த யக்ஞவராகர் ஒரு காலத்தில் திப்பு சுல்தானால் களவாடப்பட்டு மறைந்திருக்கிறார். அப்போது புதிதாகச் செய்யப்பட்ட மூர்த்தியே அபிஷேக ஆராதனை ஏற்றிருக்கிறார். யக்ஞ வராகர் திரும்பவும் தன் யதாஸ்தானத்துக்கு வந்த போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டவர் போக நாராயணன் என்ற பெயரோடு கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறார். இந்த போக நாராயணனே, சாதாரண நாட்களில் பஞ்ச பர்வ உற்சவங்களை ஏற்றுக் கொள்கிறார்.

பூவராகனை, யக்ஞவராகனை, போக நாராயணனை எல்லாம் தரிசித்து வெளியே வந்து, தென்பக்கம் கிழக்கே பார்த்த தனிக் கோயிலில் இருக்கும் தாயாரையும் வணங்கலாம். அவள் அருளையும் பெற்று, கோவில் பிராகாரத்தில் ஒரு சுற்று சுற்றினால் அங்கு வடபுறம் ஒரு சிறு சந்நிதி இருக்கும். அச்சந்நிதியில் சப்த மாதர்கள் புடை சூழ அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். அவளே அம்புஜவல்லியின் அம்சம். பிள்ளை இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு அருள் பாலிக்கிறாள். அவளையே குழந்தையம்மாள் என்று கூறுகிறார்கள். இவளுக்கு ஆராதனையெல்லாம் செங்குந்த முதலியார்கள் செய்கிறார்கள். அவளையும் வணங்கி விட்டே நாம் கோயிலுக்கு வரலாம்.

வெளியே வருகிறபோது கோயிலில் ராமர் சந்நிதியைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அப்படிக் கேட்டால் 'ஒ! இருக்கிறதே' என்று கோவிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நந்தவனத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் இருப்பார். பரதன் வெண்குடை கவிக்க, சத்ருக்னன் கவரி வீசக் காட்சி கொடுப்பார், அனுமார் அங்கே ராமாயண பாராயணமே செய்து கொண்டிருப்பார்.

இவர்கள் பக்கத்திலேயே தசாவதாரக் கோலங்களில் முதல் இரண்டு அவதாரங்களான மச்ச வடிவும் கூர்ம வடிவையும் காணலாம். கொஞ்சம் ராமர் சீதை திருவடியைக் கூர்ந்து நோக்கினால், இருவரும் அவரவர் வலது காலில் மட்டும் பாதரட்சை அணிந்திருப்பது தெரியும். இருவரது இடதுகால் பாதரட்சைகள் என்ன ஆயிற்று என்று கேட்போம். அர்ச்சகர்களுக்கு அதற்கு சமாதானம் சொல்லத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். சித்ரகூடத்தில் பரதன் வந்து ராமரது பாதரட்சைகளில் இரண்டை வாங்கிப் போனதாக ராமாயணம் கூறுகிறது அல்லவா? ஆனால் ராமர் அவனிடம் கொடுத்தது அவரது பாதரட்சைகள் தானா? அவர் அறிவார், சீதாதேவி தன்னுடைய பட்டமகிஷி, சஹதர்மிணி. ஆதலால் தன்னுடன் அரியாசனத்திலிருந்து ஆட்சி புரியும் பாத்தியதை பெற்றவள் என்று. ஆதலால் பரதனிடம் தன் பாதரட்சை ஒன்றும் தன் துணைவி சீதையின் பாதரட்சை ஒன்றையுமே கொடுத்திருக்கிறார்.

இதை வால்மீகி, கம்பர், துளசி எல்லோருக்கும் தெரியாமலேயே மறைத்தும் வைத்திருந்திருக்கிறார் என்றாலும் ஸ்ரீமுஷ்ணத்து பட்டாபிஷேக ராமரை உருவாக்கிய சிற்பியிடம் இதை மறைக்க முடியவில்லை இராமனுக்கு. அவன் எப்படியோ இந்த ரகசியத்தை அறிந்து அதை அம்பலப்படுத்தியிருக்கிறான். அவ்வளவு தான். இதை வைத்து ஒரு ‘பாதுகா பிரபாவமே' பாடலாம் போலிருக்கிறது! பாதுகா சஹஸ்ரம் எல்லாம் பாடத் தெரிந்தவர்கள்தானே, கவிஞர்கள், கலைஞர்கள்?

"~“எல்லாம் சரிதான்! - பூவராகன் என்றீர், யக்ஞ வராகன் என்றீர், போக நாராயணன் என்றீர், இத்தலம் ஸ்ரீமுஷ்ணம் என்று ஏன் பெயர் பெற்றது என்று கூறவில்லையே?" என்றுதானே கேட்கிறீர்கள்? அதையும் சொல்லி விடுகிறேன். ஹிரண்யாட்சன் கதையை முன்னமே கேட்டிருக்கிறோம். அவனுடைய செல்வம், ஆயுள், புகழ் எல்லாவற்றையும் அபகரித்து ஸ்ரீதேவியைக் காப்பாற்றியதால் ஸ்ரீமுஷ்ணம் எனப் பெயர் வந்தது என்கிறார்கள்.

இத்தலத்தில் இன்னொரு விசேஷம், இக்கோயிலை அடுத்த கீழ்புறத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது அங்குள்ள இறைவன் பெயர் நித்தீச்சுரர். பூவராகனும் நித்தீச்சுரரும் ஒருவரையொருவர் பாராது ஒருவர் முதுகுப் புறத்திலே ஒருவர் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். நமக்கு முன்னமேயே தெரியும் கம்பன் பிறந்த ஊராகிய தேரழுந்தூரிலே வேதபுரி ஈஸ்வரரும் ஆமருவி அப்பனும் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி சௌஜன்யமாக நிற்கிறார்கள் என்று. இங்கு ஏன் பிணங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்களோ தெரியவில்லை.

என்றாலும் இந்த நித்தீச்சுரர் சந்நிதி முன்பு ஒரு திருக் குளம் நித்ய புஷ்கரிணி என்ற பெயருடன் விளங்குகிறது.. ஹிரண்யாட்சனை சம்ஹரித்த காலத்தில் பூவராகன் மேனியில் இருந்து வடிந்த வேர்வைத்துளிகளே இப்படி புஷ்கரிணியாக மாறியது என்று புராணம் கூறுகிறது. இப்புஷ்கரிணியின் கரையிலே அக்கினிதிக்கிலே ஒரு அரசமரம் நிற்கிறது. நித்ய புஷ்கரிணியில் நீராடி இம்மரத்தை வலம் வருபவர்கள் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இந்த மரமும் பூஜைக்கு உரிய பொருளாகிறது.

இக் கோயில் யாரால், எப்போது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கட்டிடக் கலையைப் பார்த்தால் இது விஜயநகர நாய்க்க மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப அச்சுத நாய்க்கர், அனந்தப்ப நாய்க்கர், கொண்டப்ப நாய்க்கர், கோவிந்தப்ப நாய்க்கர் முதலியோர் சிலைகள் புருஷ சூக்த மண்டபம் என்னும் பதினாறுகால் மண்டபத்தில் நிற்கின்றன. இக்கோயில் பல வருஷங்களாக உடையார்பாளையம் ஜமீன்தார்கள் மேற்பார்வையில் இருந்து வந்திருக்கிறது. பல நிபந்தங்கள் அவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இதையெல்லாம் ஆராய நமக்கு நேரம் ஏது? பூவராகன் பக்ஞ வராகன், அம்புஜவல்லித் தாயார் முதலியோரை வணங்கி அவர்தம் அருள் பெற்றுத் திரும்புவதோடு திருப்தி அடையலாம்.