வேங்கடம் முதல் குமரி வரை 5

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



வேங்கடம் முதல்
குமரி வரை

(ஐந்தாம் பாகம்)



தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை - 600017

Rs. 35.00
VENKATAM MUTHAL KUMARI VARAI

by
Tho. mu. BASAKARA TONDAIMAN
First Edition : 1999


Published by
KALAIGNAN PATHIPAGAM
10 Kannadhaseo Salai
T Nagar, Chennai - 600 017

Typeset at
Skill Computers Cheansi - 600 018


Printed at
Sakthi Printers Chennai - 21

முன்னுரை

ரா. ஜகத்ரட்சகன்

கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே 'பாலாற்றின் மருங்கிலே', 'காவிரிக் கரையிலே', 'பொன்னியின் மடியிலே', 'பொருநைத் துறையிலே' ஆகும். இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே இக்கட்டுரைகள் பெற்ற பெரும் வரவேற்பைக் காட்டும். இந்நூலிலே இரு நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டுக் கோயில்களை, கலை வளங்களை நமக்குக் காட்டிய பாஸ்கரத் தொண்டைமான், 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற நூலிலே வட இந்தியாவின் பகுதிகளில் உள்ள கோயில்களைப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். இவற்றைப் படித்த பலருக்கு அக்கோயில்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவற்றையே கையேடுகளாகக் கொண்டு சென்ற 45 ஆண்டுகளாக தல யாத்திரை செய்து வருபவன் நான்.

பார்த்ததை பார்த்தபடியே விவரிக்கும் அவருடைய நடை சுவையானது. நேரில் பேசுவதைப் போன்ற அனுபவத்தை அது தோற்றுவிக்கும். அனைத்துத் தலங்களுக்கும் நேரிலே சென்று, கண்டு, ரசித்து, மகிழ்ந்து புகைப்படத்துடன் அக்கலைச் செல்வங்களை தன் சொற்களால் விவரித்த பாணி அனைவரையும் சுவர்ந்தது. கல்லாலும், உலோகத்தாலும் ஆன இறைவனின் திருமேனியை, அணிகலன்களையும் புஷ்பங்களையும் இட்டு மறைக்காமல், அவை இருக்கும் வண்ணத்திலேயே கண்டு ரசித்து அவர் புகைப்படம் எடுத்ததே ஒரு தனி வரலாறு. புகைப்படக் கலை இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில், டார்ச்லைட், சாக்பீஸ் பவுடர், தகரத்தகடுகள் (சூரிய ஒளியை சிலையின் மீது பாய்ச்ச ) போன்ற உபகரணங்களோடு அவர் புகைப்படம் எடுத்த பாங்கு சிற்பக்கலைபால் அவர் கொண்டிருந்த தணியாத தாகத்திற்கு சான்றாக அமையும். அவருடைய கட்டுரைகள் வெறும் தலபுராணம் அல்ல. அவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியச் சுவை மிகுந்தவை. பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வதைப் போல, திரு. தொண்டைமான் அவர்களால் எழுதப்பட்ட தலங்கள் என்றும் கூறலாம். 'வேங்கடம் முதல் குமரி வரை' ஐந்தாம் பாகமாக வெளிவரும் இந்நூலில் பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கேரளக் கோயில்களில் சில இதில் இடம் பெற்றுள்ளன. 'நவ தாண்டவம்' என்ற அவரது கட்டுரையில் தாண்டவங்களின் வகைகள், அவை காணப்படும் ஊர்கள் பற்றிய விவரங்கள் படித்து இன்புறத்தக்கவை. அது மட்டுமல்லாமல் நேரில் கண்டும் மகிழத் தக்கவை.

கோயில்களும், சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. அது போன்றே அவர் சொல்லால் அமைத்த காவியங்களும் காலத்தால் அழியாது. ரஸிகமணி டி. கே. சியை 'தாடியில்லாத தாகூர்' என்று கூறுவர். அதுபோன்றே தொண்டைமானை 'தமிழ்நாட்டின் ஆனந்தகுமாரசுவாமி' என்றால் மிகையாகாது.

இந்நூலை எனது ஊரைச் சார்ந்தவரும், பள்ளித் தோழருமான அருமை நண்பர் திரு. G. மாசிலாமணி அவர்களின் செல்வன் திரு. M. நந்தா அவர்கள் வெளியிடுவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி.

சென்னை

ரா. ஜகத்ரட்சகன்.

விளக்கமும் நன்றியும்

ங்கள் தந்தையார், திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைப் பற்றி, நான் வாசகர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ணாபுரம் என்ற முதல் கட்டுரையைத் தொடர்ந்து, கோயில்கள் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும், தொடராக எழுத முனைந்தது கல்கி பத்திரிகையில் தான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில், கல்கி ஆசிரியர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய கட்டுரைகள் கல்கியில் தொடர்ந்து வெளி வர ஆரம்பித்தன, காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியர் தொண்டைமானவர்களை அழைத்து வரச்சொல்லி, தமிழ் நாட்டிலுள்ள, முக்கியமான 108 கோயில்களைத் தேர்ந்தெடுத்து எழுதும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி முடித்த போதோ, எண்ணிக்கையில் அவை 200ஐத் தாண்டிவிட்டன. அப்போது பரமாச்சாரியார் அவர்களைப் போய்த் தரிசித்த தொண்டைமானவர்களை, பெரியவாள் பெரிதும் பாராட்டி, இந்தக் கோயில்களை யெல்லாம் எழுதாமல் விட முடியாதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, ஒரு வித்வத் சதஸைக் கூட்டி, பொன்னாடை போர்த்தி, 'கலைமணி' என்ற பட்டத்தையும் சூட்டி கௌரவித்திருக்கிறார். இதைத் தந்தையாரவர்கள் பெருமையுடன் கூறிப் பெருமிதம் அடைவார்கள். தமிழ் நாட்டுக் கோயில்களின் எண்ணிக்கை 214க்குள் அடங்கி விடுமா என்ன? எழுதப்படாமல் விடுபட்டுப் போன கோயில்கள் எண்ணிறந்தவை இருப்பது தெரியவந்தது. அந்தக் கோயில்களுக்கும் சென்று, அதற்கான கட்டுரைகளை அவ்வப்போது, தினமணி சுடர் போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது தேடினால் பெரும்பாலானவை கிட்டவேயில்லை. ஆகவே, கிடைத்த 19 கட்டுரைகளை மட்டும் தொகுத்து, வேங்கடம் முதல் குமரி வரை தொகுப்பின் ஐந்தாம் பாகமாக வெளியிட ஆசைப்பட்டேன், அன்பர்கள் பலரும் ஐந்தாம் பாகம் எப்போது வருகிறது? என்று கேட்டுக் கொண்டே இருக் கிறார்கள். அந்த ஐந்தாம் பாகத்தை வெளியிட இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது. குருவாயூரப்பன், கொடுங்கோளூர் பகவதி, அஞ்சைக்களத்து அப்பன் ஆகிய கோயில்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், தென்னகத்துக் கோயில்கள் தாமே? ஆகவே அந்தக் கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன - மலையாளக் கரையோரமுள்ள கோயில்கள் பற்றியும் ஆந்திரத்துக் கோயில்கள் பற்றியும் எழுத வேண்டு மென்று தந்தையார் எண்ணியிருந்தார்கள். ஆனால் அதற்குள் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான் அப்படி எழுதியிருந்தால் மேலும் இரண்டு சுவையான தொகுப்புக்கள், தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும். இப்போதைக்கு, 'வேங்கடம் முதல் குமரி வரை' - 'வேங்கடத்துக்கு அப்பால்' இவற்றோடு மன நிறைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

தொண்டைமானவர்களைப் பற்றி, அவர்களுடன் நெருங்கிப்பழகிய இருவருடைய உரைகள் இந்த நூலை அணி செய்கின்றன, திரு.ஜி.ஸி. பட்டாபிராம் அவர்கள் தந்தையாரின் உழுவல் அன்பர் - பெரிய தொழிலதிபராக இருந்த போதிலும், கோயில்கள், கலைகள் இவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தந்தையாருடன் சேர்ந்தும், தனித்தும் பல கோயில்களுக்குப் போய் வந்தவர். அதைப் பற்றி முடிந்த போதெல்லாம், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பட்டாபி என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த நல்ல நண்பர், "நண்பர் பாஸ்கரனை“ பற்றிய தம்முடைய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். முன்னுரை எழுதியுள்ள திரு. ஜகத்ரட்சகனை தொண்டைமானின் தொண்டர் என்றே சொல்லலாம். ரசிகர், சீடர் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும். தொண்டைமானவர்களுடைய நூல்களைக் கையேடாகக் கொண்டு, நண்பர் குழாத்துடன் கோயில் கோயிலாக ஏறி இறங்கியிருப்பவர். இந்தக் கட்டுரைகள் நூலாக வருவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். அவர் நல்லதொரு முன்னுரையை வழங்கியிருக்கிறார் - இவர்கள் இருவரைத் தவிர மற்றொரு முக்கியமான நபரும் இருக்கிறார். அவர்தாம், வித்வான் திரு ல. சண்முக சுந்தரம். ரசிகமணி டிகேசி அவர்களின் அன்புக்குப் பாத்திரமான சீடர். சிறந்த பேச்சாளர், தொண்டைமான் அவர்களுடைய வெளியிடப்படாத நூல்கள் வெளியிடப்படுவதற்கு, மிகுந்த அக்கறை காட்டி, கலைஞன் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு, நூல்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் செயல்படுகிறவர்.

இந்த நூலை, கலைஞன் பதிப்பக நூலாகக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர், பதிப்பகத்தின் நிர்வாகி, திரு. நந்தன் அவர்கள். இளைஞராக இருந்த போதிலும், உழைப்பும் உறுதியும் நிரம்பியவர். அவருடைய ஒத்துழைப்புடன், இந்த ஐந்தாம் பாகத்தை மிகுந்த அன்புடன் வழங்க முன்வந்திருக்கிறோம். முடிந்த வரை அந்தக் கட்டுரைகளுக்கான படங்களையும் தேடிப் பிடித்து இணைத்திருக்கிறோம் - மேற்கூறிய நால்வருக்கும் நாங்கள் நன்றி பாராட்டப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் - தொண்டைமானவர்களுடைய பிற நூல்களும் தொடர்ந்து கலைஞன் பதிப்பக வெளியீடாக உங்களை வந்தடையும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை வேண்டுமென்று, பேராசிரியர் டாக்டர் திரு. கு. அருணாசலக்கவுண்டர் அவர்களைக் கேட்டிருந்தேன் . அவர்களும் எழுதியனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்' - தொண்டைமானவர்களுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் உள்ளவர். தொண்டைமானவர்களின் மணிவிழாவை முன்னின்று நடத்தியவர் - உடல் நிலை காரணமாக, அணிந்துரையை உரிய காலத்தில் எழுதியனுப்ப முடியாது போய்விட்டது. தமது 97-வது அகவையில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினரால் அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு மாத காலத்துக்குள் இறைவனடி சேர்ந்து விட்டார். அந்தப் பேராசிரியருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதில் மன நிறைவு பெறுகிறோம்.

ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்

பாஸ்கர நிலையம்
7 வது குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர்
சென்னை - 20.

நண்பர் பாஸ்கரன்
(ஜி.ஸி. பட்டாபிராம்)

ண்பர் பாஸ்கரன் என்னுடைய நீண்ட நாளைய நண்பர், தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து போயிருக்கிறோம். நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறோம். தமிழ்நாட்டில் இவர் போகாத கோயிலே கிடையாது. காரில் போக முடியாவிட்டால் ஜீப்பில் போவார். அதிலும் போகமுடியாவிட்டால் நடந்தே செல்வார். கோனேரி ராஜபுரம் நடராஜரைப் பற்றியும், ஆக்கூர் ஆயிரத்திலொருவரைப் பற்றியும், அனந்த மங்கலம் விஸ்வரூப அனுமனைப் பற்றியும், பெரும்பள்ளம் வீணாதர பிக்ஷாடனரைப் பற்றியும் இதுவரை யாருக்குத் தெரியும்? இவர் கட்டுரைகளைப் படித்து, அவ்வூர்கள் எங்கிருக்கின்றன என்று விசாரித்து, அந்த அற்புதமான விக்ரகங்களைப் பார்த்து பரவசப்பட்டார்கள் கலா ரசிகர்கள். தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அழகிய கட்டுரைகளை கல்கியில் தொடர்ந்து எழுதினார். இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கோயிலின் மகிமை, அக்கோயில் சிற்பங்களின் அழகு, அந்த ஊரைப் பற்றிய சில சாஸனங்கள் எல்லாவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். அவற்றைத் தொகுத்து, நான்கு புத்தகங்களாக, வேங்கடம் முதல் குமரி வரை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவை ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்களால் பாடப்பட்ட கோயில்களைப் போல், பாஸ்கரனால் எழுதப்பட்ட கோயில்கள் என்று ஒரு தொகுப்பே ஏற்படலாம், நண்பர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தமாஷாக, தென்னாட்டுத் தெய்வங்களெல்லாம் இவரது இல்லமாகிய சித்ர கூடத்தில் 'க்யூ' வரிசையில் நின்று தங்கள் கோயில்களைப் பற்றி எழுதும்படி வேண்டி நிற்கிறது என்று அடிக்கடி சொல்வார். சுந்தரர் கனவில் தோன்றி, தன்னைப் பாடும்படி சொன்ன தெய்வங்கள், பாஸ்கரன் வீட்டில் காத்துக் கிடக்க நேரிட்டது என்றால் அது பெறற்கரிய பேறு தானே?

நண்பருடைய இந்தக் கலையார்வத்தினால் தஞ்சையில் அவர் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய போது, அங்கு காட்டிலும், மேட்டிலும், குளத்திலும், குளக் கரையிலும் கேட்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அவற்றையெல்லாம் எடுத்து வந்து குறைந்த செலவில் அழகுபட அமைத்து, தஞ்சைக் கலைக் கூடத்தை சிருஷ்டித்து அதற்கு பிர்மா ஆனார். எனது நண்டர், ஓய்வு பெற்ற, புதைபொருள் இலாகா முதல்வர் திரு ராமச்சந்திரன், இதன் மதிப்பை (அப்போதைய மதிப்பு,.. இப்போது?) மூன்று கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார். மதிப்பாரற்றுக் கிடந்த சிலைகளுக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரே. ஆனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள இதனைச் சிருஷ்டிக்க இவர் செலவு செய்ததெல்லாம் சில ஆயிரம் ரூபாய்களே. ஒரு வேளை வியாபாரியாக இருந்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதித்திருப்பார்! தமிழ் நாடு முழுவதுமே இந்தப் பணிக்காக இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது -

இப்படி, தமிழ் நாட்டில் இவர் செய்திருக்கிற தொண்டு ஏட்டில் அடங்காது. இவர் நல்ல தமிழ் அறிஞர். ஆனாலும் மற்ற தமிழ் அறிஞர்களைப் போல் அல்லாது இந்தியப் பண்பாடு ஒன்றே என்று நினைப்பவர், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தமிழர்களுக்கு விளக்குவதற்காகவே, தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இரு நண்பர்களுடன், இந்தியா முழுவதும் காரிலேயே சென்று இந்தியப் பண்பாட்டைக் கண்டார். வட நாட்டில், தில்லி, பம்பாய் முதலிய இடங்களில் வெகு அழகாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பல பேச்சுக்களில் விளக்கினார். வடநாட்டுக் கோயில்களையும், கலைகளையும் தமிழர்கள் எல்லோரும் அறிய வேண்டுமென்று, கல்கியில் "வேங்கடத்துக்கு அப்பால் என்ற கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார்.

நண்பர் பாஸ்கரன், ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சிஷ்யர், ஏன், இவரும் ஜட்ஜ் மகராஜனும் டிகேசியின் இரு வாரிசுகள் என்றே சொல்லலாம். அவர் செய்த தமிழ்ப்பணியை இருவருமே தொடர்ந்து செய்தார்கள். பாஸ்கரன் தனக்கென ஒரு பேசும் பாணியை உருவாக்கிக் கொண்டார். நடை வேறு, பாணி வேறு. ஆகையால் ரசிகமணியிடம் தொடர்பு கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இவரது பேச்சுக்களை ரசிக்க முடிகிறது. இவரது பேச்சுக்களில் புதுமையைக் காண முடிகிறது. - இவர் ரசிகமணியின் நிழலாகத் தென்படுவதில்லை.

கம்பரைப் பற்றியோ, ஆழ்வார்கள், நாயன்மார்களைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியோ அல்லது கலைகள், சிற்பங்கள் பற்றியோ இவர் பேசினால் பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள், இவரது நடை, பண்டிதர்கள் நடையைப் போல் கடினமானதல்ல. தான் பேசுவது எல்லோருக்கும் புரிய வேண்டுமென்று நினைத்து வெகு அழகாகப் பேசுவார். எது பேசவேண்டும் என்றும், எப்படிப் பேசவேண்டும் என்றும் சிந்தித்துப் பேசுவார். ஆகையால் இவர் பேச்சுக்கள் எல்லோர் மனதையும் கவர்கிறது.

மார்கழி மாதம், திருப்பாவையைப் பற்றியும், திருவெம்பாவையைப் பற்றியும் தினமும் இவரது சொற்பொழிவுகள் தமிழ் நாடு முழுவதும் இருக்கும். வானொலியில் எத்தனை தரம் பேசியிருக்கிறோம் என்பது இவருக்கே நினைவிருக்காது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையைப் பற்றியும், கலையைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும் பேசி இருக்கிறார். அந்த இருபத்தைந்து வருஷங்களில் இவர் போகாத கம்பர் விழாவே கிடையாது. பட்டி மண்டபம் நடக்கிறதென்றால் அதற்குத் தலைவர் இவர்தான். எங்கு தமிழ் விழா என்றாலும் இவரை முதலில் பார்க்கலாம். கலையைப் பற்றி தைரியமாக முதலில் தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி எழுதியவர் இவரே.

இவ்வளவு சொல்கிறீர்களே, இவர் கலெக்டராக இருந்து பணி செய்ததைப் பற்றி எழுதவில்லையே என்று நினைக்க வேண்டாம். நேர்மையும், திறமையும், சாமர்த்தியமும் இல்லாவிட்டால், கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, கலெக்டராக ஓய்வு பெற முடியாது. அப்பணியையும் செவ்வனே செய்து, ஆங்கில ஆட்சியில் இருந்த ஐ.ஏ.ஏஸ் கலெக்டர்களெல்லாம் மெச்சும்படி வேலை செய்திருக்கிறார். இவர் வேலூரில் கலெக்டராக இருந்த போது, தைரியமாக, 'அன்றும் இன்றும் என்று ஒரு நாடகத்தை எழுதி, அதை அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில் நடித்து, அரங்கேற்றிக் காட்டி முதல் வரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்?