வேங்கடம் முதல் குமரி வரை 5/011-019

11. அருக்கன் குளம் - காட்டுராமர் கோயில்

தாயுரை கொண்டு தாதை ஏவ கானாளப் புறப்படுகின்றான் கமலக்கண்ணனான ராமன். உடன் செல்கிறார்கள் தம்பி லக்ஷ்மணனும் மனைவி சீதையும். மூவரும் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது இலங்கை வேந்தனான ராவணன் வஞ்சத்தால் மூவரும் பிரிகிறார்கள், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன்.

அப்படிச் செல்லும் ராவணனை எதிர்த்துப் பறவைக்கரசனான சடாயு போரிடுகிறான். தன் இறகுகளை ராவணன் வெட்டி விட்டதால் கீழே விழுந்து கிடக்கிறான். சீதையைத் தேடிப் புறப்பட்ட ராமலக்ஷ்மணர்களைச் சந்தித்து, சீதையைச் சிறை எடுத்துச் சென்ற அரக்கன் போன வழியைச் சொல்லிவிட்டு, சடாயு உயிர் துறக்கிறான். சடாயுவைத் தன் தந்தையாகவே மதித்த ராமன், தன் தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன்களை எல்லாம் செய்கிறான். இதனை ஆதிகவி வான்மீகி சொல்கிறார். அவர் வழி நின்று அமரகாவியம் எழுதிய கவிச் சக்கரவர்த்தி கம்பனும் சொல்கிறான்.

ஏந்தினன் இருகை தாளினால்
ஏற்றினன் ஈமம் தன் மேல்
சாந்தொடு மலரும் நீரும்
சொரிந்தனன் தலையின் சரல்
கரந்து எரிகாலமூட்டி
கடன் மூறை கடவா வண்ணம்

நேர்ந்தனன் நிரம்பு நன்னூல்
மந்திர நெறியில் வல்லான்.

என்பது கம்பன் பாட்டு.

இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது? என்று ஒரு கேள்வி, சோழநாட்டிலே சீகாழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ளே சடாயு குண்டம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதில் கொஞ்சம் சாம்பலும் இருக்கிறது. அதுவே சடாயுவைத் தகனம் செய்த இடம் என்று கூறும் அத்தல வரலாறு. ஆனால் ராமன் ஈமக் கிரியை களைச் செய்தான் என்ற வரலாறு இல்லை.

திருநெல்வேலி ஜில்லாவிலே நாரணம்மாள் புரம், மணி மூர்த்தீஸ்வரம் என்னும் இரண்டு சிற்றூர்களுக்கு இடையே ஒரு சிறு கிராமம் அருக்கன் குளம் என்ற பெயரோடு தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது. அங்கும் ஒரு சடாயு குண்டம் இருக்கிறது சடாயு குண்டம் என்பது ஒரு நல்ல கிணறு போல் இருக்கிறது. எக்காலத்தும் அதில் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது: இக்குண்டத்தின் கரையிலே ஒரு சிறு கோயில். அதில் கோயில் கொண்டிருப்பார் அனந்த நாராயணன். வைகுந்த வாசனான அந்த நாராயணன், லட்சுமி சமேதனாக அங்கே சிலை உருவில் இருக்கிறான். பக்கத்திலே சடாயுவும் நின்று கொண் டிருக்கிறான்.

இந்த சடாயு குண்டத்திற்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தொலைவில் ஒரு பெரிய கற் கோவில் இருக்கிறது. அதனைக் காட்டு ராமர் கோயில் என்கின்றனர், உடை மரங்கள் நிறைந்த ஒரு காட்டிடையே, இரண்டரை ஏக்கர் விஸ்தீரணமுள்ள இடத்தில், இக்கோயில் கட்டப் பட்டிருக்கிறது. செப்பறைலிருந்து பாலாமடை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையை அடுத்து. இக்கோயில் இருக்கிறது.

தென் தமிழ் நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில், கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் விமானத்திற்குச் சிகரம் இல்லை. அதில் கலசமும் இல்லை. இதை எல்லாம் விட கருவறையில் ராமர், லக்ஷ்மணர், சீதை சிலைகளையே காணோம். அவைகளை யாரோ உடைத்து எறிந்திருக்கிறார்கள். உடைந்த துண்டுகள் மட்டும் கோயில் பிராகாரத்திலே கிடக்கின்றன.

இந்த இடத்தில்தான் சடாயுவுக்கு ராமன் ஈமக்கடன் செய்தானா என்று கேட்கத் தோன்றும். இக்கேள்விக்கு விடை பெற, ஊரை அடுத்துள்ள ராமலிங்கர் கோயில் பக்கம் போக வேணும். இக்கோயில் நல்ல நிலையில் இருக்கிறது.

அங்குதான் ராமர் பூஜித்த ராமலிங்கரும் பர்வத வர்த்தினியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இக் கோயிலுக்கு வடபுறம் ஒரு சிறு கோயில். அக்கோயிலிலே ராமாவதாரத்தின் மூலமூர்த்தியான ஸ்ரீநிவாசப் பெருமாள் நிற்கிறார். அவர் பிண்டம் போடுவது போல் வலதுகையை மடக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார்.

இந்த வடிவினைப் பார்த்த பின் நமது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விடும். இதுதான் உண்மையிலேயே சடாயுகுண்டம், சடாயுதீர்த்தம் எல்லாம். இந்தத் தாமிரபரணிக் கரையிலேதான் ராமன் தெய்வ மரணம் உற்ற சடாயுவுக்கு பிதுர்க்கடன்களை எல்லாம் செய்திருக்கிறான்.

பின்னர் பக்தர்கள் விருப்பப்படியே அங்கேயே எழுந்தருளியிருக்கிறான். பதிநான்கு வருஷம் காட்டிடையே வாழ்ந்த அந்த சக்கரவர்த்தி திருமகனான ராமனை காட்டு ராமன் என்றும் அவன் கோயிலைக் காட்டு ராமர் கோயில் என்றும் மக்கள் அழைப்பதும் பொருத்தம் தானே?

இப்படி பிரசித்தி பெற்ற கோயிலில் மூல விக்கிரகங்கள் இல்லாத குறையை நீக்க அன்பர் சிலர் மூன் வந்திருக்கின்றனர். ராமன், லக்ஷ்மணர், சீதை மூவரது வடிவினையும் நல்ல சிலை உருவில் அமைத்து வைத்திருக்கிறார்கள். அவற்றை விரைவில் கோயிலில் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த காட்டு ராமனுடைய திருப்பணியிலே பங்கு கொண்டால், நமது பெயரும் நிலைத்து நிற்குமல்லவா?