வேண்டும் விடுதலை/இந்தியா யார் அப்பன் விட்டுச் சொத்தும் இல்லை

இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை;
இங்குள்ள தேசிய இனங்களின் சொத்து!


நாம் முன்னரே கூறியிருக்கின்றோம். "தில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களாகிய நாம் முழு உரிமையுடன் வாழ முடியாது; இந்தியா ஒன்றாக இருந்தால்தான் தமிழர்கள் என்றென்றும் வடநாட்டு வணிகர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அடிமையாகவே இருக்க வேண்டி இருக்கும்" என்று!

இந்தியா ஒன்றாக இருப்பதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் தமிழர்களால் மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில் இந்தியாவில் உள்ள மற்ற தேசிய இனங்களைக் காட்டிலும், வடநாட்டுக்காரர்களாலும், பார்ப்பனர்களாலும், ஏற்பட்ட தாக்கங்கள் தமிழினத்திற்கே மிகுதி என்பது முதல் காரணம். தமிழினம் இந்தியத் தேசிய அனைத்தினங்களிலும் இந்தியாவையே ஆண்ட பேரினம் என்பது இரண்டாவது காரணம். இனி, மூன்றாவது காரணம், தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் இந்தியாவில் சமசுக்கிருதம் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மூத்த, மூலமான மொழியாக இருப்பதுடன், சமசுக்கிருதத் தொடர்பில்லாமல் வேறு தேசிய மொழிகள் இயங்காமல் இருக்கின்ற நிலையில், அதன் தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்து இயங்கும் வல்லமை பெற்றிருப்பதும், அனைத்துத் தேசிய மொழிகளினும் மிகப் பழைமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்களையும், கலை, பண்பாடுகளையும் நாகரிக முதிர்ச்சியையும் பெற்றிருப்பதும் ஆகும். எனவே, அனைத்து இந்தியத் தேசிய இனங்களை விட, இந்திய வடநாட்டுப் பார்ப்பனிய, வணிக வல்லாட்சியினின்று, முதன் முதலில் பிரிந்து போகும் முகாமைத் தேவையும், இன்றியமையாமையும், முதல் உரிமையும் பெற்று விளங்குவது தமிழ்த் தேசிய இனமே ! அதனால்தான் தமிழகம் முழு இறையாண்மை கொண்ட தனி முழு ஆட்சியுள்ள தனிநாடாக ஆகவேண்டும். அந்தக் கருத்துக்கு இங்குள்ள தமிழ் மக்களை இசைவுடையவர்களாக அணியப்படுத்த வேண்டும் என்பது நம் அழுத்தமான, என்றும் மாறாத கொள்கையாக இருப்பதுடன், அதற்கான முயற்சிகளில் இடையறாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது நம் நோக்கமாகவும் இருக்கிறது.

'இந்தியா பிரியக்கூடாது; இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு கலை, பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும், உடையவர்களாகவும், இருந்தாலும் பல்வேறு சாதிப் பிரிவுகளையும் மதப் பிரிவுகளையும் கொண்டவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் தங்களின் வேறுபாடுகளையும் பிரிவுகளையும் மறந்து(!) ஒற்றுமையுடையவர்களாகவும், ஒருமையுணர்வு பெற்றவர்களாகவும் இந்திய தேசியம் என்னும் ஒரு நாட்டுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று இக்கால், வரலாறும், வாழ்வியலும் அறியாத பலரும் கூறிக் கற்பனைக்கனா கண்டு வருகிறார்கள்.

இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை; அது இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான சொத்து ஆகும். இதை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட வெள்ளைக்காரர்களை ஏமாற்றி, அல்லது சமநிலைத் தரகு (பேரம்) பேசி, அவர்களிடமிருந்து எக்குத் தப்பாக - ஒற்றுக்குத்தலாகத் தங்கள் ஆளுமைக்கு ஏற்றுக் கொண்ட வடவாரியப் பார்ப்பனரும், வல்லரசுகளின் அடிநிலை முதலாளிகளும், இந்தியா பிரியக் கூடாது, பிரிக்க விட மாட்டோம் என்று ஏகடியமும் எகத்தாளமும் கொண்டு பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு, பிரிவினை கூடாது என்று கூறுவதற்குப் பிறர்க்கு எத்துணை உரிமை உண்டோ, அத்துணை உரிமை உண்டு, நாங்கள் பிரிவினை வேண்டும் என்பதற்கும்!

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்துதான்! என்றும் மாறாத, அல்லது மாற்ற முடியாத இயற்கை நெறியன்று. இவர்கள் கூறுவதுபோல் இந்தியா என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. வரலாற்றுக் கெட்டாத காலந் தொட்டு, இதில் பல்வேறு இன மக்கள், அவர்களின் சிறியதும் பெரியதுமான பல்வேறு மொழிகள், அவை தழுவிய கலை, பண்பாடுகள், நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள், கடவுள் கொள்கைகள், ஆட்சி முறைகள் - முதலியவை என்றுமே இந்தியாவை ஒன்றாக, ஒரே தன்மையாக இருக்க விட்டதில்லை. எனவே, இந்தியா ஒன்றாக, ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஒரு பொருளற்ற ஆட்சிப் பேராசை கொண்ட வெறுங் கருத்துதான், அதனை இயற்கையாக்கி விட வடநாட்டிலுள்ள அரசியல் வீணர்கள் சிலர் கற்பனைக்கனாக்கண்டு வருவதும், அக்கனவை நனவாக்க இங்குள்ள சில அடிவருடிகளும், பதவி மோப்ப நாய்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்காந்து திரிவதும் வேடிக்கையிலும் வேடிக்கையாகப் போய்விட்டது. மேலும் இயற்கையே காலப்போக்கில் பல்வேறு படிநிலை மாறுதல்கள் அடையும்போது, இப்பொருளற்ற புன்னிலைப் பொய்க் கருத்துகள் மாறுபாடு அடைவதற்கு என்ன தடையாக இருக்கமுடியும்? இவ்வகையில் இந்தியா ஒன்றாக இருப்பதைத் தங்கள் வாழ்க்கைக்கு ஊதியமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தந்நலக் கூட்டமே, பிரிவினை வேண்டாம், ஒற்றுமை வேண்டும், ஒருமைப்பாடு வேண்டும் என்று முரண்டு பிடிக்கின்றனர்.

அன்றிருந்தது கூட்டுக் குடும்ப நிலை. இக்காலத்தில் நிலவுவதோ தனிக் குடித்தன நிலை மனப்பாங்கு இவ்வாறு காலநிலையும் ஒட்டுமொத்த மாறுபாடடைந்து, மக்கள் மனநிலைக்கு உகந்தபடியாய் இருக்க, ஓர் ஐந்தாண்டுக் காலம் ஆட்சி செய்ய வந்தவர்கள் 'இந்தியாவைப் பிரிக்கவிட மாட்டோம்' என்று கூறுகின்ற அளவில் அதிக உரிமை கொண்டாடுவது வல்லதிகார மனப்பாங்கே தவிர வேறில்லை. வலிவும் பொலிவும் பெற்றிருந்து அவற்றைக் காலப் போக்கில் இழந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தை, சாதி, மத அரசியல் பொருளியலால் வல்லாண்மை பெற்று நிற்கும் ஓர் இனத்தவர்கள் தங்கள் ஆளுமைக்குக் கீழ்தான் அடங்கி ஒடுங்கி உரிமையிழந்து வாழ்விழந்து கிடக்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமையிருக்கிறது? தாக்குண்ட இனம் ஒட்டியிருக்க விரும்பினால் ஒட்ட வைத்துக் கொள்வதிலும் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பேசுவதிலும் தவறில்லை. ஆனால் விரும்பத் தகாத ஒட்டுறவினின்று விடுபட்டுப் பிரிந்து போய், முழு உரிமையுள்ள தனி நிலை ஆட்சி அமைத்துக் கொள்ள விரும்பும் ஓரினத்தைச் சட்ட திட்டங்களாலும், ஆளுமைத் தந்திர சூழ்ச்சிகளாலும் அடக்கு வன்முறைகளாலும், கிடுக்குப் பிடி போட்டு, ஒடுங்கியே கிட என்று சொல்வது எந்த வகையில் மாந்த நேயமும், மக்கள் ஞாயமும் ஆகும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமைக்கும் தாக்குதலுக்கும் உரிமையிழப்புக்கும் ஆளான மருமகள், தன் கணவனுடன் தனிக் குடித்தனம் நடத்த விரும்பினால், அதை அம் மாமியார் மாமனார் தடுப்பது எவ்வகையில் ஞாயம், அறம் ஆகும்! அதுபோன்றதுதான் தனிநாட்டு விடுதலைக் கோரிக்கையும் என்று நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு ஞாய வழியில் அறவழியில் கருதாமல் அம் மாமியாரும் மாமனாரும் தங்கள் ஆளுமை அதிகாரம் போய்விடக் கூடாதே என்பதற்காக, குடும்ப ஒற்றுமை குலைந்து போகும், வலிமை குறைந்து போகும் என்றெல்லாம் ஞாயம் பேசுவது, இயற்கை நெறிக்கும் உயிர்வாழ்க்கை முறைக்குமே எதிரானது, கேடானது என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

இவ் விழிநிலைக் கோட்பாடுகளால் இந்தியா பிளவுபடக் கூடாது என்பதற்கோ, தமிழ்நாட்டுப் பிரிவினை கூடாது என்பதற்கோ, அல்லது இங்குள்ள தேசிய இனங்கள் பிரிந்து போக ஒப்பமாட்டோம் என்பதற்கோ யாருக்குமே உரிமையில்லை என்று தெளிவாக உணர்ந்து கொள்க!

தேசிய இன விடுதலை இயற்கையானது; தேவையானது!

— தமிழ்நிலம், இதழ் எண். 133, திசம்பர், 1990