வேண்டும் விடுதலை/தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கம்

 
தமிழின எதிர்காலத்
தீர்மானிப்புக் கருத்தரங்கு!

(தமிழக முன்னேற்றத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் ஒரே தீர்மானம்)


உ.த.மு.க.வின் செயல் மேனிலைக் குழு, அண்மையில் தஞ்சையில் கூடி வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில், சென்னையில் "தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு" என்னும் பெயரில், மிகப் பெரிய அளவில் ஒரு கருத்தரங்கை நடத்துவதெனத் தீர்மானித்தது.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர், பேச்சாளர் என்னும் அளவில், எவரையுமே அழைக்காமல், தமிழின எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட அனைவருமே கூடி, அதன் எதிர்கால உறுதிப்பாட்டிற்கென ஒரு தீர்மானமாக இறுதி முடிவு ஒன்றை, உறுதி செய்வதென்றும், அதையே கழகம் எதிர்காலச் செயல் நடவடிக்கையாக மேற்கொள்வதென்றும், உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் செயல் மேனிலைக் குழு தீர்மானித்தது.

குறிப்பிடப் பெற்ற இரண்டு நாள்களிலும், சென்னை நடுவிடத்தில், வரலாற்றுச் சிறப்புடைய இக் கருத்தரங்கம் நடக்கும்.

இக் கருத்தரங்களில் அனைவரும் பங்குகொள்ளலாம். அனைவருமே முன்னிசைவு பெற்றுக்கொண்டு பேசலாம். இறுதியில் பார்வையாளர்கள் நடுவில், ஓர் 'ஒப்போலைப் பதிவு' நடைபெறும். அதன் முடிவு இரண்டாம் நாள் கருத்தரங்கின் முடிவில் கருத்தரங்கின் ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்பெறும்.

கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக்கூற விரும்புபவர்கள் முன்னமேயே, முதல்வர்க்கு எழுதித் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்......

— தமிழ்நிலம், இதழ் எண். 74, செபுதம்பர் 1986


தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு !

பேரன்புள்ள தமிழ் நெஞ்சங்களே!

வணக்கம்.

தமிழினம் இன்றைக்கு உள்ள நிலை மிகவும் கேடானதாகும். அரசியல் நிலையிலும், பொருளியல் நிலையிலும் மற்ற மொழி, கலை, பண்பாட்டு நிலைகளிலும் நாளுக்கு நாள் இது மிகவும் நலிந்துகொண்டும் வலுவிழந்து கொண்டும் வருகிறதை நாம் அனைவருமே உணர முடியும்.

நமக்கென்று உள்ள நம் அரசியல் கட்சித் தலைவர்களும், பிற சாதி, இனத் தலைவர்களும் அவரவர்களால் ஆன முன்னேற்ற முயற்சிகளைச் செய்துகொண்டு வந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமான வலுவை வருவித்துக் கொண்டு, அல்லது உருவாக்கிக் கொண்டு முயற்சி செய்வார்களேயானால், ஏதாவது ஒரு சிறு அளவிலாகிலும் நாளுக்கு நாள் நம் இனத்திற்கு ஒரு வகை முன்னேற்றம் ஏற்படும் என்று கருதலாம். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.

எனவே, இதைப் பற்றி நாம் அனைவரும் இக்கால் மிகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நம்மை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் இந்திய அரசின் முதலாளியப் பார்ப்பனிய ஆட்சியாளர்களும் சரி, நம் தமிழ்நாட்டுத் தில்லியரசின் அடிமைகளும் சரி, நாளுக்கு நாள் நமக்கு நலிவுகளையும் மெலிவுகளையுமே உருவாக்கி வருவதுடன், இவ்வினம் மேலும் மேலும் சிதைந்து வலுக்குறைந்து போக வேண்டும் என்னும்படியாகவே செயலாற்றி வருகிறார்கள். எனவேதான் நாம் முழுமூச்சுடன் இறங்கி, ஏதாவது உருப்படியாகச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இம் முயற்சியில் மற்றவர்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்னும் கதையாகவே முடிந்துவிடும் என்று கருதவும் அஞ்சவும் வேண்டி யிருக்கிறது.

எனவே, நம் தமிழினத்தைப் பற்றி நாம் எதிர்காலத்தில் என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டு சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும் என்பது பற்றி, நாம் அனைவரும் கூடிப் பேசித் தீர்மானிப்பது, என்று நம் உ.த.மு.க. மேனிலைச் செயற்குழு தீர்மானித்து 'தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு' என்னும் ஒரு கருத்தரங்கைக் கூட்டுவதற்கு முடிவெடுத்தது.

அக் கருத்தரங்கு வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில் சென்னையில் நடைபெறவிருக்கிறது என்பது முன்னமேயே தெரிவிக்கப்பெற்றுள்ளது. அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய கருத்தரங்கு ஆகும். அக் கருத்தரங்கிற்கு, மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், தொழில் முதல்வர்கள், பல கட்சித் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள ஆடவர் பெண்டிர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நல்லபடியான, உருப்படியான, உறுதியான ஒரு முடிவெடுக்க உதவும்படி நம் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இக் கருத்தரங்கை நடத்தி முடிக்க ஏராளமான பொருள் செலவு ஆகும் என்று கருதுகிறேன். இச் செலவுகளுக்காகும் பெருந்தொகையை ஆங்காங்கு அன்பர்களிடம் நாடு முழுமையும் திரட்டிக் கொண்டிருக்க நேரமும் முயற்சியும் இன்றைய நிலையில் நமக்குப் போதாது. ஆகையால், இவ்வறிக்கையையும், முன் தமிழ்நிலம் இதழ் எண். 74-இலும், தென்மொழி சுவடி : 22, ஓலை : 10-இலும் வெளிவந்துள்ள அறிக்கையையும் கண்ணுற்ற, கண்ணுறும் அன்பர்கள், ஆதரவாளர்கள், கொள்கையுணர்வு உள்ளவர்கள், செல்வர்கள், கொடையாளிகள் ஆகிய அனைவரும் கூர்ந்து தங்களால் பேரளவு முடிந்த தொகைகளை உடனடியாக என் பெயருக்குப் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நேரிலோ அனுப்பி, இவ்வரும் பெருஞ் செயலில் பங்கு கொண்டு வரலாற்றுச் சிறப்புப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பற்றுச் சீட்டுகள் அச்சிட்டு அனுப்பவும், அவற்றைக் கொண்டு தொகை தண்டிக் கொண்டிருக்கவும் நமக்கு நேர்மில்லை. ஆனால், அனுப்பப்பெறும் ஒரு காசுக்கும் தமிழ்நிலத்தில் பெயர்ப் பட்டியல் வெளியிடப் பெறும்.

மொத்தமாகத் தண்ட விரும்புபவர்கள் இந்த அறிக்கையையே பொதுமக்களிடம் காட்டி, ஆங்காங்கே தண்டி அனுப்பலாம். ஆனால் தண்டுபவர்களைப் பற்றி அவர்கள் நன்கு தெரிந்திருப்பது நல்லது. ஏமாறிப் போகிறவர்களை நாம் தடுக்க முடியாதாகையால் இவ்வகையில் அவரவரும் விழிப்புடன் இருக்க வேண்டுவது அவர்கள் பொறுப்பாகும்.

கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக் கூற விரும்புபவர்கள் அனைவர்க்கும் கூடியமட்டில் வாய்ப்பளிக்கப்படும்.

அனைத்துக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள். பிற விளக்கங்கள் பின்னர் வரும்!

— தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986